privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

மயிருக்குச் சமம்!

-

மயிறுநக்கீரனில் ஒரு செய்தி படித்தேன். ஆந்திர எல்லையிலிருக்கும் திருவள்ளூர் மாவட்டக் கிராமங்களில் வாழும் ஏழைப்பெண்கள் அதிலும் தலித் பெண்கள், சிலர் வறுமை காரணமாக தம் முடியை விற்று வருகின்றனராம். ஒரு அடி கூந்தலின் விலை 100 ரூபாய். பெண்களிடம் முடி கொள்முதல் செய்து சென்னைக்கு அனுப்பும் தரகர்கள் கிராமங்களில் அலைகிறார்களாம். சென்னையில் இம்முடிகளுக்கு சாயம் தீட்டி வெளிநாடுகளுக்கு அழகான சவரிகளாக ஏற்றுமதி செய்கிறார்களாம். அடர்த்தியான ஒரு கிலோ கூந்தலின் விலை 5000 ரூபாயாம்.

சங்க இலக்கியம் முதல் இன்றைய இலக்கியம் வரை கூந்தலைப் பற்றித்தான் எத்தனைக் கவிதைகள்! பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா இல்லையா என்ற பிரச்சினையை நக்கீரனும், இறையனாரும் இன்றைக்கும் ஒலிபெருக்கி வைத்து விவாதித்துக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். தம் கூந்தல் மீது பிற ஆடவரின் கை படுவதைக்கூட கற்புள்ள பெண்கள் ஒப்புவதில்லை என்கிறது பழந்தமிழ் இலக்கியம். அந்த அளவுக்கு கூந்தலின் மகிமை இங்கே வேர் பிடித்துள்ளது.

துரியோதனன் வீழ்த்தப்பட்ட பின்புதான் அவிழ்த்த கூந்தலை அள்ளி முடிப்பேன் என்ற பாஞ்சாலி சபதம் மகாபாரதப் போரின் துவக்கம். மலரின் வாசமும், கள்ளின் போதையும் கொண்ட சீதையின் கூந்தலில் இராவணன் மயங்கினான், மடிந்தான் என்று தன் ஒப்பாரியில் மண்டோதரி புலம்புவதாய் கம்பராமாயணம் பாடுகிறது. இப்படி இதிகாச நாயகிகளின் கதைகளும் கூந்தலைத் தழுவியே செல்கிறது.

சிங்கத்துக்கு பிடரி, மயிலுக்குத் தோகை, சேவலுக்கு கொண்டை, யானைக்கு தந்தம் என எல்லா ஜீவராசிகளிடையேயும் ஆண் உயிரினங்கள் மட்டும் “அழகாய்’ வலம் வர, மனித இனத்தில் மட்டும் பெண் “அழகான’ கூந்தலோடு வலம் வருவதாய் சிலாகிக்கிறார் ஒரு சமகாலக் கவிஞர்.

இப்படிக் கற்புக்கும், அழகுக்கும், கதைப்பாடலுக்கும் அடையாளமாய், அடிநாதமாய் அறியப்பட்ட கூந்தல்தான், ஒரு பெண் விதவையானதும் அவளிடமிருந்து இரக்கமின்றிப் பறிக்கப்பட்டது. மேல் சாதி விதவைப் பெண்களுக்கு மொட்டையடிக்கும் பழக்கம் நேற்றுவரை நமது சமூகத்தில் இருக்கத்தானே செய்தது? இந்தக் கூந்தல் பறிப்பின் நோக்கம் அவளை யாரும் விரும்பக்கூடாது, அழகு அவளை அண்டக்கூடாது என்பதுதான். அழகு அசிங்கம் என்ற இரு துருவங்களை நோக்கியும் பெண்ணைத் தள்ளுவதற்கு ஆணின் கையில் சிக்கிய ஆயுதம் கூந்தல்.

இப்படி புராண காலத்தில் பிடித்த முடியை ஆணாதிக்கம் இன்னமும் விடவில்லை. பன்னாட்டு நிறுவனங்களின் அழகு சாதனப் பொருட்களுக்கான விளம்பரங்கள் அடைமழை போலப் பெய்யும் காலமிது. அழகு நிலையங்கள் பெண்களின் அழகு குறித்த கவலையை அன்றாடப் பிரச்சினையாக்கிவிட்டன. அழகின்மையின் ஆபத்துக்களை அச்சுறுத்தும் விதத்தில் உணரவைத்து அழகை விற்று வருகிறார்கள்.

அதில் கூந்தலுக்கான விதவிதமான எண்ணெய்களும், பசைகளும், தைலங்களும் நூற்றுக்கணக்கில் சந்தையில் இருக்கின்றன. காத்திருக்க முடியாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடனே முடியை நட்டுத்தரும் ஆடம்பர அறுவைச் சிகிச்சைகளையும் “அறிவியல்’ வளர்த்திருக்கிறது. ஆக, பெண்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு தமது நேரத்தையும், பணத்தையும், கவலையையும் கூந்தலுக்காகச் செலவழிக்கின்றனர். அன்றும் இன்றும் கூந்தல் கவலையிலிருந்த தப்பிப் பிழைத்த பெண்கள் அநேகமாக இல்லை.

இதனால்தான் திருவள்ளூர் மாவட்டப் பெண்கள் கூந்தலை விற்கும் செய்தியை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஆயினும் உலகமயம் என்ற நாணயத்தின் மறுபக்கம் இப்படித்தான் இருக்க முடியும் போலும்! வழக்கமான உணவு வகைகளை ருசித்துச் சலித்து உலக ருசிகளுக்காக அலைபாயும் நாக்குகள் பெருகிக் கொண்டிருக்கும் காலத்தில்தான் “இரண்டு ரூபாய் அரிசி’ வாக்குகளை அள்ளித் தருகிறது. குளோனிங் முறையில் மனிதனையும் அவனுடைய உறுப்புகளையும் பிரதி எடுத்துவிட முடியும் என்று அறிவியல் முழங்கும் காலத்தில்தான் கருப்புச் சந்தையில் சிறுநீரகம் விற்பனையாகிறது.

தேசிய வளர்ச்சி விகிதம் பத்து சதவீதம் என்று ப.சிதம்பரம் கொட்டி முழங்கிக் கொண்டிருக்கும் அதேகாலத்தில்தான் மளிகைக்கடன் அடைப்பதற்காகப் பெண்களின் கூந்தல் கொய்யப்படுகிறது. நாட்டை முன்னேற்றுவதற்காக “மக்களை மொட்டையடிப்பது’ என்ற உவமானம் அதன் நேர்ப்பொருளிலேயே இப்போது உண்மையாகி விட்டது.

மூன்றடிக் கூந்தலை முன்னூறு ரூபாய்க்கு விற்ற பெண்களின் வாழ்க்கை கூறும் செய்தி என்ன? வறுமையின் முன் கூந்தல் தன் மரபுவழி மகிமையை உதிர்த்து விட்டது என்பதா? அல்லது தேசிய வளர்ச்சி வீதம் என்பது ஏழைப் பெண்களின் மயிருக்குச் சமம் என்று புரிந்து கொள்வதா?

________________________________________

புதிய கலாச்சாரம், ஜூன் 2007
________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்: