Saturday, July 20, 2024

ஆன்மீக வல்லரசு!

-

ஆன்மீக வல்லரசு

ண்மையில் இது ஒரு பொற்காலம்தான். சாயிபாபா உயிரோடு இருந்தபோது கக்கிய தங்க லிங்கங்களைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான தங்கத்தை பாபா இறந்தபின் அவருடைய தனியறையான யஜுர்வேத மந்திரம் கக்கிக் கொண்டே இருக்கிறது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் நிலவறையிலிருந்து இதுவரை எடுக்கப்பட்ட தங்கம், வைரங்களின் மதிப்பு ஒரு இலட்சம் கோடி ரூபாய் என்கிறார்கள். இல்லை, 5 இலட்சம் கோடி என்கிறார்கள். இன்னும் இரண்டு நிலவறைகள் திறக்கப்படக் காத்திருக்கின்றன.

இந்தியாவின் முதற்பெரும் கோடீசுவரனான முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அந்த இடத்தை ரத்தன் டாடா பிடித்து விட்டார் என்று சமீபத்தில்தான் செய்தி வெளிவந்தது. ஆன்மீக உலகிலும் அதிரடி மாற்றம்.  இந்தியாவிலேயே மிகப்பெரும் கோடீசுவரர் என்ற இடத்தை நெடுங்காலமாகக் கைப்பற்றி வைத்திருந்த திருப்பதி ஏழுமலையானை வீழ்த்தி அந்த இடத்தைப் பிடித்து விட்டார் பத்மமநாபசாமி. ஏழுமலையானின் சொத்து மதிப்பு 40,000 கோடிதானாம். பத்மநாபசாமியின் இன்றைய நிலவறைச் சொத்து மதிப்பு நிலவரமே ஒரு இலட்சம் கோடியைத் தாண்டி விட்டது. திருமாலைத் தோற்கடித்தவரும் திருமாலே என்பதனால் வைணவர்கள் ஆறுதல் கொள்ளலாம்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகை, உலகப் பணக்கார மனிதர்களின் பட்டியலோடு உலகப் பணக்காரக் கடவுளர்களின் பட்டியலையும் வெளியிடுமானால் ஆன்மீக உலகின் அசைக்க முடியாத வல்லரசு இந்தியாதான் என்ற உண்மையை உலகம் புரிந்து கொள்ளும். நிற்க. மீண்டும் நாம் பத்மநாபசாமி கோவிலுக்கே வருவோம்.

சீரங்கத்து அரங்கநாதனைப் போலவே, பாம்புப் படுக்கையின் மீதில் மீளா உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் பத்மநாபசாமியின் கோவிலுக்குக் கீழே, கல் அறைகள் என்று அழைக்கப்படும் ஆறு நிலவறைகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன. காற்றோட்டமில்லாத இந்தப் பொந்துகளின் உள்ளே பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷங்களை வெளியே எடுத்து, அவற்றைப் பட்டியலிட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இந்தப் புதையல் வேட்டை நடந்து வருகின்றது.

சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள மகாவிஷ்ணுவின் தங்கச்சிலை, தங்கத்தினால் செய்யப்பட்டு வைரக் கற்கள் பதிக்கப்பட்ட இரண்டு தேங்காய் மூடிகள், பத்தரை கிலோ எடையுள்ள 18 அடி நீள மார்புச் சங்கிலி, 36 கிலோ எடையுள்ள தங்கத் திரை, தங்க அங்கி, 500 கிலோ தங்கப் பாளங்கள், தங்கத்தில் வில் அம்பு, வைரம் பதிக்கப்பட்ட தங்கத் தட்டுகள், பல நூறு கிலோ எடையுள்ள தங்க மணிகள், நகைகள், கிழக்கிந்தியக் கம்பெனியின் தங்கக் காசுகள், நெப்போலியனின் தங்கக் காசுகள், ஐரோப்பாவின் புகழ்பெற்ற ஆன்ட்வெர்ப் நகரின் வைரங்கள் ..

தங்கம், வைரம் என்ற முறையில் இவற்றின் சந்தை மதிப்பு ஒரு இலட்சம் கோடி ரூபாய் வருவதாகவும், புராதனக் கலைப்பொருட்கள் என்ற வகையில் மதிப்பிட்டால், இவற்றின் மதிப்பு பத்து இலட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கலாம் என்றும் கூறுகின்றன பத்திரிகைகள். நிலவறைக்குள் தங்கம் இருக்கும் என்பது எல்லோரும் எதிர்பார்த்ததுதான். ஆனால் அதன் அளவுதான் யாரும் எதிர்பாராதது. இன்னும் இரண்டு நிலவறைகள் திறக்கப்பட வேண்டும். அவற்றைத் திறப்பதற்கு முன் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்கிறது போலீசு.

கோவிலைச் சுற்றிலும் நெருக்கமாக வீடுகள் இருப்பதுடன், பூமிக்கு அடியில் இரண்டரை அடி நீள அகலத்தில் பழங்காலத்து பாதாள சாக்கடை ஒன்று இருப்பதால், அந்த பாதாள சாக்கடை வழியாக யாரேனும் நிலவறைகளுக்குள் புகுந்து தங்கச் சுரங்கத்தைக் கொள்ளையடிக்க வாய்ப்பிருப்பதாக அஞ்சுகிறது போலீசு. எனவே, பத்மநாப சாமி கோவிலுக்கு அருகில் குடியிருக்க நேர்ந்த துர்ப்பாக்கியசாலிகள் அனைவரும் போலீசின் கண்காணிப்புக்கு உரியவர்கள் ஆகி விட்டார்கள்.

ஒரு இலட்சம் கோடிக்கும் மேல் மதிப்புள்ள இந்தத் தங்கப் புதையல் எப்படி வந்தது? மன்னர்களின் ஆடை ஆபரணங்கள், அரண்மனைகள், அந்தப்புரங்கள், அவர்களது சொத்துகள் ஆகிய அனைத்தும் மக்களின் ரத்தத்தை வரியாகப் பிழிந்து எடுக்கப்பட்டவைதான் என்பதற்கு விளக்கங்கள் தேவையில்லை. பார்ப்பனக் கொடுங்கோன்மையின் வரலாற்று உதாரணமாக இருந்த கேரளத்தில், விவசாயிகள் எவ்வளவு இரக்கமற்ற முறையில் சுரண்டப்பட்டனர் என்ற உண்மையைக் கடந்த நூற்றாண்டின் மாப்ளா விவசாயிகள் போராட்டம் வெளிக்கொணர்ந்தது. இன்று பத்மநாபசாமி கோவிலின் தங்கப்புதையலும், வைர நகைகளும் அந்தச் சுரண்டலின் ஆபாசமான நிரூபணமாக மின்னுகின்றன.

ஆன்மீக வல்லரசு

ஸ்விஸ் வங்கிகள், பாதுகாப்புப் பெட்டகங்கள் போன்றவை இல்லாத அந்தக் காலத்தில் கோவில்கள்தான் மன்னர்கள் தமது செல்வத்தைப் பதுக்கி வைப்பதற்கான பெட்டகங்களாக  இருந்திருக்கின்றன. அது மட்டுமல்ல, நிலப்பிரபுத்துவ சாதிய சமூகத்தின் அதிகாரமும், அரசு அதிகாரமும் கோவில் வழியாகவே செலுத்தப்பட்ட காரணத்தினால், கோவில்கள் அறிவிக்கப்படாத அரசு கஜானாக்களாகவே இருந்திருக்கின்றன. ஆகையினால்தான் இராசராச சோழன் முதல் கஜினி முகமது வரையிலான மன்னர்கள் அனைவரும் தாங்கள் ஆக்கிரமிக்கும் நாட்டில் உள்ள கோவில்களைக் குறிவைத்துக் கொள்ளையிட்டிருக்கிறார்கள். தங்கத்தைக் கோவிலுக்குப் பதிலாகச் சுடுகாட்டில் புதைத்து வைப்பது மரபாக இருந்திருந்தால், கஜினி முகமதுவும் சோமநாதபுரத்தின் கோவிலுக்குப் பதிலாக அந்த ஊரின் சுடுகாட்டைத்தான் சூறையாடியிருப்பான்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் இந்த அளவுக்குத் தங்கம் சேர்ந்ததற்குச் சில குறிப்பான காரணங்களும் உள்ளன. அன்று ஐரோப்பாவுடன் கடல் வணிகத்தில் ஈடுபட்டு வந்த செம்பகச்சேரி, கோட்டயம், கொச்சி ஆகிய நாடுகள் திருவிதாங்கூரைக் காட்டிலும் பன்மடங்கு செல்வ வளம் மிக்கவையாக இருந்தன. 18 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மன்னனாக இருந்த மார்த்தாண்ட வர்மா, இந்த நாடுகளின் மீது படையெடுத்து அந்நாடுகளின் செல்வத்தைக் கொள்ளையிட்டிருக்கிறான். இவையன்றி மன்னன் விதிக்கும் அபராதங்கள் அனைத்தும் கோவிலின் பெயரில் தங்கமாக வசூலிக்கப்பட்டதால் அவையும்,  வணிகர்களும் செல்வந்தர்களும் கோவிலுக்குச் செலுத்திய காணிக்கைகளும் தங்கமாகச் சேர்ந்திருக்கின்றன.

18 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் கட்டபொம்மன், மருது முதலானவர்களும், மைசூரில் திப்புவும் ஆங்கிலேயனை எதிர்த்து நின்றபோது, கேரளத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானமும், தமிழகத்தில் ஆற்காட்டு நவாபும் கும்பினியின் கைக்கூலிகளாக இருந்தனர். கும்பினியின் எடுபிடியாக இருந்த திருவிதாங்கூர் அரசுக்கு எதிராக திப்பு படையெடுத்த போது, கேரளத்தின் வடபகுதியில் இருந்த குறுநில மன்னர்கள் பலரும் தமது பொக்கிஷங்களைத் திருவிதாங்கூர் மன்னனிடம் கொடுத்துப் பதுக்கி வைத்திருக்கின்றனர். இதற்கு ஆவணச் சான்றுகள் உள்ளன என்று கூறும் கேரளத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியர்  கோபாலகிருஷ்ணன், இந்த நிலவறைகள் எல்லாம் அப்போதுதான் தோண்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அந்நியப் படையெடுப்புக்கு அஞ்சியது மட்டுமல்ல, அரச குடும்பங்களுக்குள் வழக்கமாக நடக்கும் அரண்மனைச் சதிகளும், உள்குத்துகளும் கூட இப்படி தங்கத்தைப் புதைத்து வைக்கக் காரணமாக இருந்திருக்கலாம்.

அவ்வாறின்றி, ஆன்மீக அடிப்பொடிகள் சித்தரிப்பதைப் போல இவையெல்லாம் கடவுளுக்கு வந்த காணிக்கைகள் அல்ல. ஒரு வாதத்துக்கு அப்படி வைத்துக் கொண்டாலும் அதற்குக் கணக்கும் இல்லை, யார் கொடுத்த காணிக்கை என்பதற்கான விவரமும் இல்லை. கோவிலில் மணி அடிப்பவனுக்கும், சமையற்காரனுக்கும், விளக்கு போடுபவனுக்கும் ஆண்டுக்கு எவ்வளவு கலம் நெல் அளிக்க வேண்டும் என்பதைக் கல்வெட்டில் செதுக்கி வைக்கும் அளவுக்கு ‘யோக்கியர்களான’ மன்னர் பரம்பரையினர், பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ‘காணிக்கைகளை’ புதைத்து வைத்திருப்பது பற்றி ஒரு துண்டுச் சீட்டில் கூட எழுதி வைக்காததற்கு வேறு என்ன காரணம்?

இந்தப் புதையல் அனைத்தையும் மக்கள் நலனுக்கும், வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கும் பயன்படுத்த வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர், கேரள பகுத்தறிவாளர் சங்கத்தை சேர்ந்த காலநாதன், வரலாற்றாய்வாளர் செரியன் போன்றோர் கூறியிருக்கின்றனர். இதைக் கேட்டவுடனே ஆத்திரம் கொண்ட ஆர்.எஸ்.எஸ் காலிகள்  நள்ளிரவில் காலநாதன் வீட்டைக் கல்லெறிந்து தாக்கியுள்ளனர்.

“தற்போது எடுக்கப்பட்டுள்ள நகைகள் எல்லாம் மன்னர் குடும்பத்துக்கே சொந்தம்” என்பது காஞ்சிபுரத்து யோக்கியர் ஜெயேந்திரனின் கருத்து. “அவை தொல்லியல் துறைக்குச் சொந்தம்” என்பது கே.என். பணிக்கர் போன்றோரின் கருத்து. “மாநில அரசுக்குச் சொந்தம்” என்பது வேறு சிலர் கருத்து. “அனைத்தும் பகவான் பத்மநாப ஸ்வாமிக்கே சொந்தம்” என்பது மாநில முதல்வர் உம்மன் சாண்டியின் கருத்து.

“பகவான் பத்மநாபஸ்வாமியும், அவருடைய கோவிலும், அதன் சொத்துக்களும் மன்னர் குடும்பத்துக்கே சொந்தம்” என்பது தற்போதைய திருவிதாங்கூர் மகாராஜா உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவின் கருத்து. அது வெறும் கருத்து அல்ல. இந்தக் கோவிலும், அதன் சொத்துக்களும் மக்களுக்குச் சொந்தமா அல்லது மன்னர் குடும்பத்துக்குச் சொந்தமா என்பது உச்சநீதி மன்றத்தில் தற்போது நிலுவையில் இருக்கும் வழக்கு. இந்த வழக்கின் அங்கமாகத்தான் தற்போதைய புதையல் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது என்பதால் மேற்கூறிய கேள்விக்கான விடையைப் புரிந்துகொள்வதற்கு இவ்வழக்கு பற்றித் தெரிந்து கொள்வதும் அவசியம்.

ஆன்மீக வல்லரசு

1947 இல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப்பதற்கு மன்னருடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில், கேரளத்தின் மற்ற கோவில்களெல்லாம் அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வரப்பட்டாலும், பத்மநாபசாமி கோயில் மட்டும் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை உத்திரவாதம் செய்து கொண்டார் திருவிதாங்கூர் மன்னர். பத்மநாபசுவாமியின் மீது மட்டும் மன்னர் கொண்டிருந்த அளவுகடந்த பக்திக்குக் காரணம் என்ன என்பது அப்போது புரியவில்லையெனினும் இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும்.

‘இந்துக் கோவில், இந்து மன்னர், இந்துப் புதையல்’ என்று சங்க பரிவாரத்தின் அமைப்புகள் தற்போது கூச்சல் எழுப்புகின்றனர். . கிறித்தவர்கள், முஸ்லிம்களிடத்திலிருந்தும் திருவிதாங்கூர் மன்னர் பிடுங்கிய வரிதான் தங்கப் பொக்கிஷமாக மின்னிக் கொண்டிருக்கிறது.  எனினும், இந்தப் பொக்கிஷத்தை என்ன செய்வது என்பது பற்றி கிறித்தவர்களோ முஸ்லிம்களோ கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்று மிரட்டுகின்றனர் இந்து வெறியர்கள். அவர்களது அபிமான திருவிதாங்கூர் மன்னரும், திவான் சர்.சி.பி. ராமசாமி ஐயரும் அகண்ட பாரதத்திலிருந்து திருவிதாங்கூரைத் துண்டாடவும், அதன் பின் பாகிஸ்தானுடன் கூட்டணி சேரவும் முயன்றார்கள் என்ற வரலாற்று உண்மை அரை டவுசர் அம்பிகள் பல பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

1947 இல் மேற்படி இந்து மன்னரும், அவருடைய திவான் சர்.சி.பி. ராமசாமி ஐயரும் திருவிதாங்கூரை (கேரளத்தை) தனிநாடாக அறிவித்து பிரிந்து போவதற்கே முயன்றனர். அணு ஆயுதத் தயாரிப்புக்குப் பயன்படும் மோனோசைட் எனும் தாது திருவிதாங்கூர் கடற்கரையில் நிறைந்திருந்ததால் திருவிதாங்கூரைத் தனிநாடாக்கி விட்டால், அதனைப் பிரிட்டன் மட்டும் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும் என்று பிரிட்டிஷ் அமைச்சர்களும், சி.பி. ராமசாமி ஐயரும் சேர்ந்து இரகசியத் திட்டம் தீட்டினர். பாகிஸ்தானும் திருவிதாங்கூரும் தனியே நட்புறவு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்று ஜூன், 1947 இல் ஜின்னாவுக்குக் கடிதம் எழுதினார் சி.பி. ராமசாமி ஐயர். ஜூலை 1947 இல் தனிநாடாகச் செல்லப்போவதாக மவுண்ட்பாட்டனிடம் ராமசாமி ஐயர் அறிவிக்கவும் செய்தார். ஆனால் கம்யூனிஸ்டுகள் தலைமையிலான புன்னப்புரா வயலார் விவசாயிகள் எழுச்சியும், சமஸ்தானம் முழுவதும் மன்னராட்சிக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டங்களும் மன்னருடைய தனிநாட்டுக் கனவில் மண் அள்ளிப் போட்டன. (ஆதாரம், தி இந்து, 25.5.2008)

இதுதான் ‘இந்துப் பொக்கிஷத்தை’ச் சுருட்டிக்கொண்டு போவதற்கு ‘இந்து மன்னன்’ செய்த சதியின் கதை. சமஸ்தான மன்னர்களுக்குப் பல்வேறு சலுகைகளை வழங்கி இந்திய யூனியனுன் இணைத்த இரும்பு மனிதர் சர்தார் படேல், திருவிதாங்கூரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில், பத்மநாபசாமி கோவில் திருவாங்கூர் மன்னர் சித்திரைத் திருநாள் பலராம வர்மாவின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இருக்கும் என்பதை ஏற்றுக் கொண்டிருந்தார்.

1991 இல் பலராம வர்மா இறந்தபின் அவரது தம்பியான உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா, அடுத்த வாரிசு என்ற முறையில் கோவிலின் மீது உரிமை கோரியதுடன், கோயிலில் உள்ள பொக்கிஷங்கள் அனைத்தும் அரச குடும்பத்தின் தனிச்சொத்துக்கள் என்றும் கூறினார். இதனை எதிர்த்து கோவிலின் சொத்துக்களையும், நிர்வாகத்தையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்ற வழக்குரைஞர் கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.

இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் (உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா -எதிர்- யூனியன் ஆஃப் இந்தியா) 31.1.2011 அன்று கேரள உயர்நீதி மன்ற பெஞ்சு (நீதிபதிகள்: ராமச்சந்திரன் நாயர், சுரேந்திர மோகன்) தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பின் சாரம் கீழ்வருமாறு:

“சித்திரைத் திருநாள் பலராம வர்மா 1991 இல் மரணமடைந்த பின் அவர் வகித்து வந்த கோவிலின் அறங்காவலர் பொறுப்பு, மாநில அரசுக்குத்தான் வரும். அரசியல் சட்டத்தின் 366(22) பிரிவின் படி இந்தியாவுக்குள் யாரும் எந்த விதத்திலும் மன்னர் என்ற தகுதியைக் கோர முடியாது. எனவே அரச வாரிசு என்ற முறையில் மார்த்தாண்ட வர்மா கோயிலின் மீது உரிமை கோர முடியாது.

பத்மநாபசாமி கோவில் என்பது மன்னர் குடும்பத்தின் தனிச்சொத்து அல்ல. அவ்வாறு தனிச்சொத்தாக இருந்திருப்பின் திருவிதாங்கூர்-இந்திய யூனியன் இணைப்பு ஒப்பந்தத்தில் இது குறித்த ஒரு ஷரத்தினைச் சேர்க்க வேண்டிய அவசியமே நேர்ந்திருக்காது.
கோவிலின் சொத்துக்கள், பொக்கிஷங்கள் குறித்து மறைந்த பலராம வர்மா தயாரித்த பட்டியலைச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் மார்த்தாண்ட வர்மா அவற்றைச் சமர்ப்பிக்கவில்லை. அவர் கொடுத்துள்ள விவரங்கள் முறையற்றவையாகவும், நம்பகத்தன்மையற்றவையாகவும் உள்ளன.

தற்போது மார்த்தாண்ட வர்மா என்ற தனிநபர் பத்மநாபசாமி கோவிலை நிர்வகித்து வருவதைச் சட்டப்படி சரியானது என்று மாநில அரசு கருதுகிறதா என்று இந்த நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு மாநில அரசு பதிலே சொல்லவில்லை. கோவில் நல்லபடியாக நிர்வகிக்கப் படுவதாகவும், அதில் தலையிட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்றும் மாநில அரசு பதிலளித்திருக்கிறது. கேரளத்தில் தனியார்களால் நிர்வகிக்கப்படும் கோவில்கள் குறித்த அரசின் நிலை பொதுமக்களின் நலனைப் பிரதிபலிப்பதாக இல்லை.

ஏராளமான தனியார் கோவில்கள் செல்வாக்குப் பெற்று வருகின்றன. அவர்களது சொத்துக்கள் எல்லாம் மக்களும், பக்தர்களும் செலுத்திய காணிக்கைகளே. மத நிறுவனங்கள் பொதுமக்களிடமிருந்து இவ்வாறு பணம் திரட்டும்போது, அவை மக்களுக்குக் கணக்கு கொடுத்தாக வேண்டும் என்பதை அரசு உத்திரவாதப்படுத்த வேண்டும். கடவுளின் பெயரால் மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டியது மிகவும் அவசரக் கடமையாகி விட்டது என்று கருதுகிறோம். கடவுள் அல்லது நம்பிக்கையின் பெயரால் திரட்டப்படும் பணத்தைத் தனிநபர்கள் அல்லது அறங்காவலர் குழுக்களின் தனிப்பட்ட நலனுக்குத் திருப்பி விடுவதை அனுமதிப்பது என்பது, மதம், நம்பிக்கை ஆகியவற்றை வைத்து வியாபாரம் செய்வதை அனுமதிப்பதாகும். இதனை அரசு அனுமதிக்கிறதா என்பதே கேள்வி. இவ்விசயத்தில் மாநில அரசின் அணுகுமுறை  பக்தர்களின் நலனையோ, மக்களின் நலனையோ பிரதிபலிப்பதாக இல்லை.

எனவே பத்மநாபசாமி கோவிலின் சொத்துக்களையும், அதன் நிர்வாகத்தையும் மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். அதனை நிர்வகிப்பதற்குரிய அறங்காவலர் குழு அல்லது சட்டப்பூர்வமான நிர்வாகத்தை நியமிக்க வேண்டும். இது 3 மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும்.

அவ்வாறு மாநில அரசால் நியமிக்கப்படுகின்ற கோவில் நிர்வாகியின் மேற்பார்வையில் கோவிலில் உள்ள சுரங்க அறைகள் திறக்கப்பட்டு, அதில் உள்ள பொக்கிஷங்கள் பட்டியலிடப்பட வேண்டும். இந்தப் பணியை நிறைவேற்றுவதற்குப் பொருத்தமான, நேர்மையான அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் கோவில் வளாகத்திலேயே ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, அங்கே அவையனைத்தும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.”

மேற்கூறிய தீர்ப்பில் கேரள உயர்நீதி மன்றம் மாநில அரசு என்று குறிப்பிட்டு விமரிசிப்பது மார்க்சிஸ்டு கட்சி அரசைத்தான். மே.வங்கத்தில் தரகு முதலாளி டாடாவுக்கு ஆதரவாக புத்ததேவ் பட்டாச்சார்யா. கேரளத்தில் திருவிதாங்கூர் மன்னனுக்கு ஆதரவாக அச்சுதானந்தன்! கோவிலும், அதன் சொத்துக்களும் மன்னரிடமே இருக்கட்டும் என்று கூறிய மார்க்சிஸ்டு கட்சி அரசு, அதனை மறுத்து உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும் அந்தத் தீர்ப்பை அமல்படுத்தவில்லை என்பதுதான் மிகவும் முக்கியமானது. மூன்று மாதங்களுக்குள் கோவிலை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனவரி 31, 2011 இல் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும் அச்சுதானந்தன் அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை.

விளைவு, மார்த்தாண்ட வர்மா உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, மேற்கூறிய உயர்நீதி மன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடையும் வாங்கி விட்டார். கோவிலை மாநில அரசு மேற்கொள்வதற்கு இடைக்காலத் தடை பெற்றதன் மூலம், கோவிலின் நிர்வாகத்தை மார்த்தாண்ட வர்மா தன்னுடைய கைகளில் வைத்திருக்கிறார். சுரங்க அறையிலிருந்து பொக்கிஷங்களை எடுத்துப் பட்டியலிடுவதற்கு மட்டும் உச்சநீதி மன்றம் ஒரு குழுவை நியமித்திருக்கின்றது.

பொக்கிஷங்கள் மக்களுக்குத்தான் சொந்தம் என்பதை நாம் அரசியல் ரீதியாகக் கூறுகிறோம். சட்டப்படி அது அரசுக்குத்தான் சொந்தம் என்று தனது தீர்ப்பில் விளக்கியிருக்கிறது கேரள உயர்நீதி மன்றம்.

ஆனால் பொக்கிஷங்களும், கோவிலும் தனக்குச் சொந்தம் என்பது மார்த்தாண்ட வர்மாவின் கருத்து. சங்கராச்சாரியின் கருத்தும் அதுதான். “பொக்கிஷம் கோவிலுக்குச் சொந்தம். அதில் அரசு தலையிடக் கூடாது” என்பது ஆர்.எஸ்.எஸ் கும்பலின் கருத்து. “பொக்கிஷம் கோவிலுக்குச் சொந்தம். கோவில் நிர்வாகம் மன்னனுக்குச் சொந்தம். அதில் அரசு தலையிடத் தேவையில்லை” என்பது மார்க்சிஸ்டுகளின் கருத்து. “பொக்கிஷம் பத்மநாபசுவாமிக்கு சொந்தம்” என்பது காங்கிரசு முதல்வர் உம்மன் சாண்டியின் கருத்து. இவர்கள் எல்லோரது கருத்தும் சாராம்சத்தில் ஒரே கருத்துதான்.

யார் கொடுத்தார்கள், எவ்வளவு கொடுத்தார்கள், எதற்காகக் கொடுத்தார்கள் என்று எந்தவித விவரத்தையும் காட்டாமல், ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட செல்வத்தை வைத்துக் கொண்டு, கேட்டால் பகவானுக்கு வந்த காணிக்கை என்கிறார்கள். காணிக்கைக்குக் கணக்கு எழுதி வைக்கக் கூடாது என்று பகவான் சொன்னாரா, அல்லது பக்தன் சொன்னானா? கணக்கில் வராத பணத்தைத்தானே கருப்புப் பணம் என்று அழைக்கிறார்கள்?

தங்க லிங்கம் எடுக்கும் சாயி பாபாதிருவிதாங்கூரின் பாதாள அறையிலிருந்து மட்டுமல்ல, புட்டபர்த்தியிலுள்ள பாபாவின் தனியறையான யஜுர்வேத மந்திரத்திலிருந்தும் தங்கமும் வைரமும், கட்டு கட்டாகப் பணமும், காசோலைகளும் வருகின்றன. தனியறையில் படுத்து ஆன்மீக ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்குப் பதிலாக காணிக்கைகளை ஆராயக் காரணம் என்ன? பெண்டாட்டி, பிள்ளை இல்லாத பாபா யாருக்காக காணிக்கைப் பணத்தை தனியறையில் ஒதுக்கி வைத்தார்? வந்த காணிக்கைகளை அறங்காவலர் குழுவிடம் கொடுத்து ரசீது போடாமல், கோடிக்கணக்கான ரூபாயை ஏன் தன்னுடைய தனியறையில் பதுக்கி வைத்துக் கொண்டார் என்ற கேள்விகளை அரசாங்கம் எழுப்பவில்லை. பத்திரிகைகளும் எழுப்பவில்லை. பக்தர்களுக்கும் அது உரைக்கவில்லை.

அலைக்கற்றை ஊழலில் ஈட்டிய கணக்கில் வராத காசை சோதனை போட்டுப் பிடிக்கும் வருமான வரித்துறையோ, சி.பி.ஐ யோ பாபாவின் அறையைச் சோதனை போடவில்லை. ஒருவேளை கலைஞர் டிவிக்கு பதிலாக ‘கலைஞர் கோவில்’ என்றொரு ஆன்மீகக் கம்பெனியைத் தொடங்கி, அக்கோவிலின் உண்டியலில் 200 கோடி ரூபாயை காணிக்கையாக வரவு வைத்திருந்தால், கணக்கே கொடுக்காமல் பணத்தையும் காப்பாற்றி, கனிமொழியையும் கூட காப்பாற்றியிருக்கலாமோ?

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் குவித்து வைத்திருக்கும் கருப்புப் பணத்தைக் கைப்பற்றி மக்களுக்குச் சொந்தமாக்குவதற்காக சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்திருக்கிறது உச்சநீதி மன்றம். கருப்புப் பணத்தைப் பதுக்குவதற்கு வெளிநாட்டுக்கு ஓடுவதும், கே மேன் ஐலாண்ட், மொரிஷியஸ் போன்ற தீவுகளைத் தேடுவதும் மேற்கத்திய சிந்தனை முறையில் உதித்த வழிமுறைகள். பாரம்பரிய மிக்க நமது பாரத மரபில் இதற்கான பல வழிமுறைகள் ஏற்கெனவே உருவாக்கப் பட்டிருக்கின்றன. அவற்றில் தொன்மையானது திருவிதாங்கூர் நிலவறை. நவீனமானது பாபாவின் யஜூர்வேத மந்திரம். இவை எந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் பிடிக்கும் சிக்காதவை.

ஏனென்றால் இவை ஆன்மீக உரிமைகள் என்ற இரும்புப் பெட்டகத்தினால் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படும் பௌதீகத் திருட்டுச் சொத்துகள். தற்போது தோண்டியெடுக்கப்பட்டுள்ளவை அனைத்தும் தொல்லியல் மதிப்பு மிக்க செல்வங்கள் அல்ல. அவற்றில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை அனைத்தும் தங்கத்தின் வடிவிலான பணம். அவ்வளவே. அவை இந்த நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே உரிமையான சொத்து. அவர்களுடைய முன்னோர்களிடமிருந்து பிடுங்கப்பட்ட செல்வம்; சுரண்டப்பட்ட உழைப்பு.

திருவிதாங்கூர் அரசாட்சி கீழ் விவசாயிகள் மீதும், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் மீதும் நம்பூதிரிகளும், நாயர்களும் இழைத்த கொடுமைகளையும், அவ்வரசாட்சியின் கீழ் மக்களுடைய அவலமான வாழ்நிலையையும், ஆங்கிலேயனுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு நம் நாட்டு மக்களுக்கு அந்த மன்னர் பரம்பரை இழைத்த துரோகத்தையும் காட்சிப்படுத்தி, இரத்தம் தோய்ந்த அந்த வரலாற்றின் பின்புலத்தில், கண்டெடுக்கப்பட்ட இந்த ஒரு இலட்சம் கோடிப் புதையலைப் பார்வைக்கு வைக்க வேண்டும்.

அப்போதுதான் இந்தப் புதையல் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற விவரத்தைக் காட்டிலும், யாரிடமிருந்து எடுக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையின் முக்கியத்துவம் நிலைநிறுத்தப்படும்.

_________________________________________________________________

-மருதையன், புதிய கலாச்சாரம் -ஜூலை, 2011
__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  • //ஆம் இந்தியா உலகின் ஆன்மீக வல்லரசு தான்…// அதுல மட்டுமா. மூட நம்பிக்கை , எய்ட்ஸ் , மனித உரிமை மீறல், சிறுபான்மை மக்களை அடக்கி ஆள்வது , ஆன்மிகம் என்ற பெயரில் கோடி கோடியாக கொள்ளை அடிப்பது ,(சாய்பாபா, நித்தேயானந்தா) இதுலேயும் நம்ம இந்தியா தான் முதல் இடம் ( மிக கேவலமான விஷயம் ) ரொம்ப பெருமையை இருக்குது IAM PROUD OF INDIYA

   • துலுக்க புரட்சி,

    நீங்கள் சொல்லும் அனைத்து குற்ற சாட்டுகளும் அனைத்து நாடுகளிலும் உள்ளன. கிறித்துவ மற்றும் இஸ்லானியர்களின் சொத்துக்களை கணக்கிடும் பொழுது ஹிந்து கோயில்களின் சொத்து மிக மிக குறைவு.

    உலக அளவில் ஹிந்து மதம் என்பது ஒரு சிறுபான்மை மதம் என்பதை அறியாமல் பேசுவது முட்டாள் தனம்.

    வினவு பொய் சொல்வதில் கை தேர்ந்தது என்பதை நான் அறிவேன்.

    பொய் 1: தலைப்பில் இடம் பெற்ற படம்

    எதை மாப்பிங் செய்வது என்ற ஒரு அளவே கிடையாதா? நீங்கள் படத்தில் காட்டிய துறவிகள் அகோரிகள் கிடையாது. ஆனால் இவர்கள் தனக்கு என்று எதையும் வைத்து கொள்ளாமல் ஒட்டு துணி கூட இல்லாமல் இருக்கும் சன்யாசிகள். அவர்களை ஒரு பணக் குவியல் முன்பு நிறுத்துவது போன்று காட்டுவது முதல் பொய். போலி கம்யூனிஸ்டுகள் போலி பங்கு தந்தைகள் போலி சுபிக்கள் வரிசையில் SILA போலி சன்யாசிகளும் உள்ளனர்.

    பொய் 2: சாய்பாபா தனியறையான யஜுர்வேத மந்திரம் கக்கிக் கொண்டே இருக்கிறது.

    அவருடைய அறக்கட்டளை மதிப்பை காணும் பொழுது கண்டேடுக்கப்பட்ட பணம் ஒன்றுமே கிடையாது.

    http://www.sathyasai.org/ashrams/centraltrust.htm

    பொய் 3: காற்றோட்டமில்லாத இந்தப் பொந்துகளின் உள்ளே பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷங்களை வெளியே எடுத்து

    இது ஒன்றும் பதிக்கி வைக்கப்படவில்லை. இதை பற்றி 1931 ஆம் ஆண்டே கணக்கிடப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.கீழே உள்ள புத்தகத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    http://www.thehindu.com/news/states/kerala/article2201786.ece

    • சோழரே,

     உங்க லின்க்கை எல்லாம் ஒரத்தில் வச்சிட்டு, கேட்ட கேள்விக்கு பதில் லொள்ளுங்க …
     இந்த சொத்து மக்கள் கிட்ட இருந்து சுரண்டி எடுக்கப்பட்டது. அது மக்களுக்கு சேர வேண்டும். இதுக்கு என்ன பதில் சொல்றீங்க ?..

     • பகத் சிங் அவர்களே, உங்களுக்கி தெரியாது நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இந்தியாவில் உள்ள பெரிய கோயில்கள் அனைத்தும் அரசாங்கத்திடம் தான் இருக்கிறது. கோயிலில் கொள்ளை அடித்து தான் அந்த காலத்தில் பொருள் சேர்த்தார்கள் என்று சொல்வது ஒரு கடைந்து எடுத்த பொய். இப்பொழுதும் பல கோயில்களில் மக்கள் காணிக்கை செழுத்துகிறார்கள். திருப்பதியில் அவ்வளவு பணம் வருகிறது என்றால் அது பணக்காரன் போடும் பணம் அல்ல. அது ஏழைகள் அர்ப்பணம் தந்த பணமும் உள்ளது. அந்த பணம் மீண்டும் அரசாங்கத்திற்கு தான் போய் சேருகிறது. அதை எந்த ஹிந்து அமைப்பும் எடுத்து கொள்ளவில்லையே.

      முதலில் கோயில் வரும் கோடிக்கனக்கான் பணத்தை அரசாங்கம் மக்களுக்கு ஒழுங்காக கொடுக்கட்டும் பிறகு இந்த கோயிலை பற்றியும் அதன் நகைகளை பற்றியும் பேசலாம்.

      அதுவும் தவிர இந்த கோயில் கட்டப்படும் காலத்தில் தங்கத்தின் விலை என்ன? இப்பொழுது அதன் விலை என்ன என்பது பகுத்தறிவு வாதிகளுக்கு தெரியாமல் போனது ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் இருந்த விலையுயர்ந்த கோயில் நகைகளுக்கு என்ன ஆனது என்று நான் சொல்ல
      வேண்டியது இல்லை.

      பூஜைக்கு தேவையான் பொருட்களை தவிர மீதி அனைத்து தங்க காசுகள் மற்றும் பாத்திரங்கள் பாரத பண்பாடு தொடர்பான கல்வி, ஆயுர்வேதம், கலைகள், வீர விளையாடுகள் கற்று தரும் விசயங்களை ஹிந்துக்களுக்கு கற்று தரும் விசயத்தில் முதலீடு செய்வதில் எனக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை.

      எனக்கு ஒரே ஒரு கேள்வி. மாவோயிஸ்டுகளுக்கு எங்கிறுந்து பணம் வருகிறது. ஆயுதங்கள் பொதுவாக மிகவும் விலைமிக்கவை. அதுவும் அரசாங்கத்திற்கு தெரியாமல் கள்ள முறையில் வாங்கப்படும் ஆயுதங்கள் விலையை எண்ணி பார்க்கக் கூட முடியவில்லை. ஒரு வேலை வினவு ஆசிரியரை தொடர்பு கொண்டால் தெளிவான பதில் கிடைக்கு என்று நினைக்கிறேன்.

    • //சாய்பாபா தனியறையான யஜுர்வேத மந்திரம் கக்கிக் கொண்டே இருக்கிறது. // இது ஒன்னும் சாய்பாபா சம்பாதித்த சொத்துகள் அல்ல இது மக்களை ஏமாற்றி (வாயில் லிங்கம் வர வைப்பது மோதிரம் வர வைப்பது இது போன்ற மோசடி வித்தைகள் மூலம் கொள்ளை அடித்தது )
     அதனால் அந்த சொத்துகள் எல்லாம் வருமைல் தவிக்கும் மக்களுக்கு செலவளிக்கப்பட வேண்டும்

     • முதலில் மக்கள் வரிபணத்தை எடுத்து முஸ்லீகளின் மத சடங்கான ஹட்ச்க்கு தேவை இல்லாமல் அரசாங்கம் செய்யும் செயலை தடுத்து நிறுத்துங்கள்.

      எங்கள் கோயிலில் இருந்து அரசாங்கம் கோடிக் கணக்கான் வருவாயை பெற்று கொண்டு தான் இருக்கிறது. இதில் 10% விகிதம் கூட எழை ஹிந்துக்களுக்கு வருவதில்லை. எல்லாம் எங்கள் நேரம். உங்களை சொல்லி தப்பில்லை.

      • \\முதலில் மக்கள் வரிபணத்தை எடுத்து முஸ்லீகளின் மத சடங்கான ஹட்ச்க்கு தேவை இல்லாமல் அரசாங்கம் செய்யும் செயலை தடுத்து நிறுத்துங்கள்.//

       முன்பே விடையளிக்கப்பட்ட பொருளற்ற குற்றச்சாட்டு.முந்தைய விவாதத்திற்கான சுட்டி.

       https://www.vinavu.com/2009/01/15/sabice/#comment-36098

    • பொய் 4: \\ ஐரோப்பாவுடன் கடல் வணிகத்தில் ஈடுபட்டு வந்த செம்பகச்சேரி, கோட்டயம், கொச்சி ஆகிய நாடுகள் திருவிதாங்கூரைக் காட்டிலும் பன்மடங்கு செல்வ வளம் மிக்கவையாக இருந்தன.\\

     \\18 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் கட்டபொம்மன், மருது முதலானவர்களும், மைசூரில் திப்புவும் ஆங்கிலேயனை எதிர்த்து நின்றபோது, \\

     அது எந்த நாடுகள் என்று வினவு சொல்லாமல் இருந்ததன் காரணம் என்னவோ 🙂

     சேர மண்ணன் காலத்திலேயே அந்த கோயில் தலை சிறந்து இருந்ததற்கான காரணம் கீழ் கண்ட லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

     http://devapriyaji.wordpress.com/2011/07/11/padmawaapa/

     அது சரி, தற்பொழுதும் திருப்பதியில் கோடிக்கணக்கில பணம் உண்டியலில் சேர்கிறது. அதை யார் கொள்ளை அடித்து சேர்கிறார்கள். மக்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை கோயிலுக்கு வழங்குகிறார்கள். மீண்டும் அது மக்களுக்கு தான் கொடுக்கப்பட்டது. பழனியிலும் திருப்பதியிலும் கொடுக்கப்படும் பணம் மீண்டும் அரசாங்கத்திற்கு தானே போகிறது. அது என்ன RSS க்காக போகிறது.

     மதிலகம் ஆவணங்கள் எனப்படும் அரச ஆணைக்குறிப்புகளின்படி 1789 ல் திப்புசுல்தான் திருவிதாங்கூர் மேல் படையெடுத்து வந்தபோது அவரிடமிருந்து ஆலயச் சொத்துக்களையும் திருவிதாங்கூர் அரசாங்க கஜானாவையும் காப்பாற்றிக்கொள்ளும்பொருட்டு இவை கட்டப்பட்டன.

     தர்மராஜா என்றழைக்கப்பட்ட கார்த்திகைத்திருநாள் ராமவர்மா. அவரது அமைச்சராக இருந்தவர் நவீன திருவிதாங்கூரின் சிற்பிகளில் ஒருவரான ராஜா கேசவதாஸ். இவர் பேரில் இன்றும் கேசவதாஸ புரம், கேசவன் புத்தந்துறை போல பல ஊர்கள் குமரிமாவட்டத்தில் உள்ளன. இவரது திட்டமே இந்தப் பாதுகாப்பறைகள். 1789ல் நெடுங்கோட்டை போரில் ராஜா கேசவதாஸ் தலைமையில் திருவிதாங்கூர் படைகள் திப்புசுல்தானை வென்றன. சுல்தானுக்குக் காயம்பட்டது. ஆகவே திருவிதாங்கூருக்குள் அவரது படையெடுப்பு நிகழவில்லை.

     தர்மராஜா காலகட்டத்தில் திப்புசுல்தானை மீண்டும் தாக்குவான் என்று பயந்து பிரிட்டிஷாருடன் திருவிதாங்கூர் ஓர் ஒப்பந்தம்போட்டுக்கொண்டது. அந்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி அவிட்டம் திருநாள் ராமவர்மா காலகட்டத்தில் பிரிட்டிஷார் திருவிதாங்கூரை தங்களுக்கு கப்பம்கட்டும் அரசாக ஆக்கி ஒட்டச்சுரண்ட ஆரம்பித்தார்கள். கர்னல் வெல்லெஸ்லி தலைமையில் ஒரு நிரந்த பிரிட்டிஷ் ராணுவம் திருவிதாங்கூரில் நிலைகொண்டு ஓர் இணையான அரசாங்கத்தை நடத்தியது. மூவர்குழு கிட்டத்தட்ட நாட்டை பிரிட்டிஷாரின் காலடியில் வைத்தனர். பிரிட்டிஷார் வரிவசூலை ஏற்றிக்கொண்டே செல்ல ஒரு கட்டத்தில் திருவிதாங்கூரே போண்டியாகியது. அந்நிலையில்தான் மக்கள் வேலுத்தம்பி தளவாயின் தலைமையில் கொந்தளித்து எழுந்தார்கள். மூவர்குழு அழிக்கப்பட்டது.

     ஆனால் மீண்டும் பிரிட்டிஷாரின் வரிவசூல் கொள்ளை உச்சத்தை அடைய அரசரின் சொத்துக்களை விற்று வரிகளைக் கட்டவேண்டிய நிலை வந்தது. மீண்டும் வேலுத்தம்பி தளவாய் கலகம் செய்தார். அவரது சுதேசிப்பிரகடனம் குண்டற என்ற இடத்தில் வெளியிடப்பட்டமையால் குண்டற விளம்பரம் என்றபேரில் புகழ்பெற்றுள்ளது. வேலுத்தம்பி தளவா கேரளத்தின் ஒரு சரித்திர நாயகன். அவரது கலகத்தை அடக்கி அவரை பிரிட்டிஷார் கொன்றார்கள். திருவிதாங்கூரின் ராணுவபலம் முழுமையாக அழிக்கப்பட்டது.

     17 ஆன் நூற்றாண்டில் தன் நாட்டை கொள்ளை அடிக்க படை எடுத்த திப்பு சுல்தானுடன் இணைந்து 18 ஆன் நூற்றாண்டில் படையே இல்லாத திருவாங்கூர் சனஸ்தானம் எப்படி கிறித்துவர்களுக்கு எதிராக எப்படி போர் தொடுக்க முடியும். அப்படி நடந்து இருந்தால் எப்படி இருக்கும் தெரியுமா, BJP யும் communist கட்சியும் கூட்டணி வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்து இருக்கும்.

     • பொய் 5: \\கோவிலில் மணி அடிப்பவனுக்கும், சமையற்காரனுக்கும், விளக்கு போடுபவனுக்கும் ஆண்டுக்கு எவ்வளவு கலம் நெல் அளிக்க வேண்டும் என்பதைக் கல்வெட்டில் செதுக்கி வைக்கும் அளவுக்கு ‘யோக்கியர்களான’ மன்னர் பரம்பரையினர், பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ‘காணிக்கைகளை’ புதைத்து வைத்திருப்பது பற்றி ஒரு துண்டுச் சீட்டில் கூட எழுதி வைக்காததற்கு வேறு என்ன காரணம்\\

      வினவு மீண்டும் தனது அறிவிலி தனத்தை இந்த பதிவில் காட்டு உள்ளது. எத்தனை கோயில்களில் இது போன்ற கல்வெட்டுகளில் பொரிக்கப்பட்டு உள்ளது. இப்பொழுது தான் அந்த நடைகளின் மதிப்பு பல கோடியே தவிர பல நூறு வருடங்களுக்கு முன்பு அதன் மதிப்பு என்ன என்பதை சிந்திக்கும் திறன் வினவிற்கு போய் விட்டதா என்ன? அதுவும் தவிர கல்வெட்டுகள் நமது நாட்டில் எவ்வாறு பாதுகாக்கப் படுகின்றன எனபதை வரலாறு வலை தளத்தில் சென்றாலே தெரியும்…

      இதை பற்றி கீழ் கண்ட பதிவில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளன.

      http://www.jeyamohan.in/?p=17058

      பொய் 6: \\\\“பகவான் பத்மநாபஸ்வாமியும், அவருடைய கோவிலும், அதன் சொத்துக்களும் மன்னர் குடும்பத்துக்கே சொந்தம்” என்பது தற்போதைய திருவிதாங்கூர் மகாராஜா உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவின் கருத்து\\

      இந்த சொத்து யாருக்கும் சொந்தமல்ல, கண்டிப்பாக எங்களுக்கு சொந்தம் அல்ல. அது பத்மனாப சுவாமிக்கே சொந்தம் என்று தெளிவாக குறுப்பிட்டு உள்ளார்.

      http://expressbuzz.com/cities/thiruvananthapuram/they-belong-to-god/295511.html

      மன்னரின் நேரடி பேட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

      http://www.thehindu.com/opinion/interview/article2277295.ece?homepage=true

      • பொய் 7:// “பொக்கிஷம் கோவிலுக்குச் சொந்தம். கோவில் நிர்வாகம் மன்னனுக்குச் சொந்தம். அதில் அரசு தலையிடத் தேவையில்லை” என்பது மார்க்சிஸ்டுகளின் கருத்து//

       கோயிலை நிர்வாகிக்க தான் மன்னனுக்கு உரிமை உண்டே தவிர அதை அவர்கள் உபயோகப்படுத்த முடியாது. ஒரு வேளை நிர்வாகம் என்று சொன்னவுடம் கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகம் என்று அர்த்தம் கொண்டு, மன்னர் கொள்ளை அடிக்கப் பார்க்கிறார் என்று நினைக்கிறீர்களோ.

       கொல்லை அடிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தால் அவர் என்றைக்கோ யாருக்கும் தெரியாமல் கொள்ளை அடித்து இருக்க முடியும். இது என்ன பெரிய அதிசியம்.

 1. இந்தப்பாதாள அறைகளைத் திறக்கவேண்டும் என்று கோர்ட்டில் வழக்குப் போட்டு இந்த அதிசியத்தை உலகறியச்செய்தவர் ஒரு தமிழர்…

  • அவர் ஹார்ட் அட்டாக்கில் போய்ச்சேர்ந்துவிட்டதாக செய்தி வந்திருக்கிறது. இவ்வுலகில் அவர் பிறந்ததற்கான கடமை முடிந்துவிட்டது என பள்ளிகொண்டபெருமாள் தன்னுடன் சேர்த்துக்கொண்டாரோ!!

   • இல்லை ரிஷி,

    அவ்ரின் பேட்டியை நான் கண்டேன், அவர் மிகவும் வயதானவர் சுமாராக 75, அந்தப்புடையெலை கண்ட குழுவில் அவரும் ஒருவர், அந்தப் பாதாள அறையில் ஆக்ஸிஜன் மிகவும் குறைவு, அஙுகு போய் வந்ததில் இற்ந்து அவருக்கு சுவாச பிரச்சனைகள் வந்துள்ளன..அதை அவரே சன் டிவி பேட்டியில் சொன்னார்…அட்சர சுத்தமாக தமிழில் பேசினார், ஆம் திருவனந்தபுரத்தில் பத்பனாபஸ்வாமி கோவிலைச் சுற்றி சுமார் 200 தமிழ் பிராமணக்குடும்பங்கள் வசிக்க்ன்றனர்..

 2. //வந்த காணிக்கைகளை அறங்காவலர் குழுவிடம் கொடுத்து ரசீது போடாமல், கோடிக்கணக்கான ரூபாயை ஏன் தன்னுடைய தனியறையில் பதுக்கி வைத்துக் கொண்டார் என்ற கேள்விகளை அரசாங்கம் எழுப்பவில்லை. பத்திரிகைகளும் எழுப்பவில்லை. பக்தர்களுக்கும் அது உரைக்கவில்லை.// எவ்வளவுதான் உரக்க கூவினாலும் போலி இந்தியர்களின் காதில் விழப்போவதில்லை.

  • விழ போவது இல்லை, ஏன் என்றால் .ஆன்மிகம் என்ற பெயரில் மக்களை மயக்கி வைத்து இருகிறார்கள் ( காவி சாமியார்கள்,செக்ஸ் சாமியார்கள் ) இவர்களை இதில் இருந்து விடுவிக்க இன்னொரு தந்தை பெரியார் ,அம்பத்கர் , போன்றோர் வர வேண்டும் வருவார்களா.

 3. //தங்கத்தைக் கோவிலுக்குப் பதிலாகச் சுடுகாட்டில் புதைத்து வைப்பது மரபாக இருந்திருந்தால், கஜினி முகமதுவும் சோமநாதபுரத்தின் கோவிலுக்குப் பதிலாக அந்த ஊரின் சுடுகாட்டைத்தான் சூறையாடியிருப்பான்.// chance aae illa

  • you must visit Humpi to understand the intention of muslims.

   By the way, Do you have any idea about bamiyan afgan cave? I would also request you to demplition of Hindu temples. If you want to know more… you can also visit mathura and Kasi…

   by the way… Are you a arab money ?

 4. முடி சாயும் ஆனால் கொடி சாயாது
  01.08.05 அன்று சவூதி மன்னர் ஃபஹத் மரணம் அடைந்தார். அவர் இறந்ததும் உலகச் சந்தையில் எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. இப்படி உலகச் சந்தையை உலுக்கி எடுத்த அந்த சவூதி மன்னரின் மரணத்தை மக்கள் உன்னிப்பாகக் கவனித்தனர்.
  உலகெங்கிலும் உள்ள நாட்டுத் தலைவர்கள் இறந்ததும் அரசாங்க விடுமுறை, அரைக் கம்பத்தில் கொடியைப் பறக்க விடுதல், அரசு மரியாதையுடன் கூடிய அடக்கம் போன்ற வழமைகள் எதுவுமின்றி சாதாரணமாக பொது மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றதைப் பார்த்து உலக மக்கள் ஆச்சரியத்திலும் அதிசயத்திலும் உறைந்து போயினர். அவர்களுக்கு இந்த மரணம் ஏதோ ஒரு செய்தியை உரைத்தது, உணர்த்தியது.

  தொடர்ந்து வாசிக்க

  http://kadayanallur.org/2011/07/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE/

 5. //பெண்டாட்டி, பிள்ளை இல்லாத பாபா யாருக்காக காணிக்கைப் பணத்தை தனியறையில் ஒதுக்கி வைத்தார்? வந்த காணிக்கைகளை அறங்காவலர் குழுவிடம் கொடுத்து ரசீது போடாமல், கோடிக்கணக்கான ரூபாயை ஏன் தன்னுடைய தனியறையில் பதுக்கி வைத்துக் கொண்டார் என்ற கேள்விகளை அரசாங்கம் எழுப்பவில்லை. பத்திரிகைகளும் எழுப்பவில்லை. பக்தர்களுக்கும் அது உரைக்கவில்லை.//

  🙂

 6. சிறப்பான கட்டுரை. கடந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களின் வீரியத்தினை அனைவரும் உணரவேண்டும். இதனை ஏழை எளியோரின் வாழ்க்கைத்தரம் உயர்த்த பயன்படுத்தவேண்டும். ஆனால் கோவில் கஜானாவில் இருந்து அரசு கஜானாவுக்கு மாறிவிட்டாலே ஒரு குண்டுமணி கூட விடாமல் அரசு, அதிகார வர்க்கத்தின் வீட்டு கஜானாக்களுக்கு தஞ்சம் புகுந்துவிடுமே!!

 7. சமச்சீர் கல்வி தொடர வேண்டும் : சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு..

  • பையா,
   சுப்ரீம் கோர்ட்டிற்கு ஜெயா போகிறாராம்.
   சுப்ரீம் கோர்ட் இத்தீர்ப்பை உறுதி செய்து வரலாற்றில் தனிச்சிறப்பு பெறுமா?

 8. Excellent post. I learned a lot of informations about those scoundrel rajas, their combines and deals to seperate kerala from india, deals with pakistan and england. Thanx and go on.

 9. கோவில்களில் என்ன நடக்கிறது??

  பார்ப்பனர்கள் ஏன் கோவில்களை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள், மற்றவர்களை

  ஏன் அண்டவிடுவதில்லை என்று இப்பொழுது அனைவருக்கும் புரிந்திருக்கும்.

  • ஆகா என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு..

   இந்தப்பாதாள அறையை வழக்குப்ப்போட்டு திறக்கச்செய்தவரும் ஒரு பிராமணர் தான் (பார்ப்பனர் உஙகள் பாஸையில்)

   • பார்ப்பனர்கள் ஏன் கோவில்களை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்

    PudiNila, if brahmins are ‘intentional’ to grap this property, they could have done much earlier. Still they can see 100’s of brahmin familes around this temple with very marginal income.

    Mr. sundarrajan has done a blunder to file this case knowing our politicians. Very soon, major part of this will go to SIWSS bank…!!

 10. அருமையான் பதிவு,
  இன்னும் மன்னர் ,ஆண்ட பரம்பரை என்று பேசி வருபவன் இருக்கிறான் என்பதே இவர்கள் எந்த மாதிரி ஆண்டிருப்பார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.மன்னர் பரம்பரை,உயர்ந்த சாதி என்று பேசுபவன் எல்லாம் மனிதனே அல்ல!!!!.இவர்களுக்கு இதில் 10 பைசா கூட போகக்கூடாது.

  மக்களின் காணிக்கை பணம் என்றாலும் மக்களுக்கு சேர வேண்டும். கொள்ளையடித்த்து என்றாலும் மக்களுக்கே சேர வேண்டும்.இந்த புதையலில் எவ்வள‌வு காணாமல் போனது,பிரிட்டிஷ்காரன் கொண்டு போனது என்பது எல்லாம் பரம் இரகசியம்.இத்னை வெளிவர பாடுபட்ட மறைந்த திரு சுந்தரராஜன் அய்யா அவர்களுக்கு நம்து அஞ்சலி.

 11. ஆணித்தரமான பதிவு.நன்றாக மக்கள் சிந்திக்கட்டும்.புரட்டுவாதிகள் புரிந்து கொள்ளட்டும்.

 12. //தங்கத்தைக் கோவிலுக்குப் பதிலாகச் சுடுகாட்டில் புதைத்து வைப்பது மரபாக இருந்திருந்தால், கஜினி முகமதுவும் சோமநாதபுரத்தின் கோவிலுக்குப் பதிலாக அந்த ஊரின் சுடுகாட்டைத்தான் சூறையாடியிருப்பான்.// அப்படியாச்சும் செய்திருந்தால் பொணத்தை கோவிலிலே புதைத்து இருக்கலாம். மேல்ஜாதிகாரங்கெல்லாம் கருவரைல பொதைங்கப்பா!
  கீழ்சாதிககாரங்கெல்லாம் மற்ற இடங்களில் புதைத்து இருக்கலாம்.கெடுத்து புட்டாங்களே?

 13. +++ ஆகா என்ன ஒரு அருமையான கண்டுபிடிப்பு..

  இந்தப்பாதாள அறையை வழக்குப்ப்போட்டு திறக்கச்செய்தவரும் ஒரு பிராமணர் தான் (பார்ப்பனர் உஙகள் பாஸையில்) +++

  அடங்கொய்யால. கட்டுரையில் இடம் பெற்ற க்ருஷ்ணய்யர் பார்ப்பனர் இல்லையா?

 14. puratchi pathi pesum sila arivaligal puratchi na ennanu 1st purinchikonga…. ellarum othukira oru matter ku opposite ah pesurathu puratchi illa,,, athu sariya thappanu therinji than pesanum…. ipdi thana makkal nala valvu, puratchi athu ithunu soli inthiyavin koilgala govt kita kuduthinga…. ipa ethana koil athoda purathanatha ellanthitu nikuthunu theriuma????? pathmanaba koil mannar kaila irunthathunala than ivalavo nal agium 1latcham kodium safe ah irunthathu.. ithuve govt kita kudunga apuram antha oru latcham kodium swiss bank poidum….. puratchi pathi pesiya punniyavangalukku oru kelvi…. nenga ethana per ithu varaikum lanjam kudukama unga velaiya muduchirukinga???????? ethana peru unga variya sariya kattirukinga??? ethana peru ealai makkaluku sevai senchirukinga??? ellam social networkla ukanthu time waste pannitu irupinga???

 15. ennoda opinion antha nilavarai materials ellathaium list out pannitu atha pathugagkum poruppa mannar vamsathkitaye kuduthidanum… govt kita pochuna… ithu varaikum pona 72 latchgam kodiyoda ithuvum senthidum….

 16. Pulla kutty ellatha sai baba vukke evalavu sotthu na…….. Yella erukkuravanukku yevallovu erukum…. athukku yeduthu kaata thaan kalainar kudumbam…. Yeppothu thaan ennda surandalukku mudivu erukkumoooo….Nalla Pathivukal-nandri tholare. vanakam

 17. உண்மையாக ஆன்மீக வல்லரசு தான் . இந்து கோயில்களால் மட்டும் அல்ல. இதை படியுங்கள்.

  http://ibnlive.in.com/news/debate-rages-on-over-catholic-church-properties/98453-3.html
  “Some Catholics feel the bishops are not the right people to handle properties worth several lakh crores. But so far, the government has kept quite on the row.”

  இந்த சொத்தெல்லாம் முக்கால் வாசி வெள்ளைக்காரன் நாட்டை ஆண்ட போது எழுதி வைத்ததா இருக்கும். இப்படி ஒவ்வொரு மத சொத்தையும் கணக்கிட்டா நிச்சயம் இந்திய பெரிய ஆன்மீக வல்லரசு தான் . 🙂

 18. ஒருவேளை கலைஞர் டிவிக்கு பதிலாக ‘கலைஞர் கோவில்’ என்றொரு ஆன்மீகக் கம்பெனியைத் தொடங்கி, அக்கோவிலின் உண்டியலில் 200 கோடி ரூபாயை காணிக்கையாக வரவு வைத்திருந்தால், கணக்கே கொடுக்காமல் பணத்தையும் காப்பாற்றி, கனிமொழியையும் கூட காப்பாற்றியிருக்கலாமோ?

  சூப்பர்!

 19. நிலப் பகிர்மான சட்டம் கொண்டு வந்தது போல பணப் பகிர்மான சட்டம் இயற்றி. அதிகம் இருக்கும் இடங்களிலிருந்து இல்லாதவர்களுக்கு அள்ளித் தருகின்ற காலம் வரவேண்டும்.

 20. சோழன் //தர்மராஜா காலகட்டத்தில் திப்புசுல்தானை மீண்டும் தாக்குவான் என்று பயந்து பிரிட்டிஷாருடன் திருவிதாங்கூர் ஓர் ஒப்பந்தம்போட்டுக்கொண்டது. //
  என்ன சோழன் உளறீங்க !!! http://www.keralahistory.ac.in/tsm_2.htm என்ற திருவிதாங்கூர் அரசுப் பற்றிய ஆவணத்தில், நவாப் மற்றும் பாளையக்காரர்களை அடக்க பிரிட்டிஷ்க்கு உதவிதயதால் தான், பிரிட்டிஷ் – திருவிதாங்கூர் ஒப்பந்தம் ஏற்பட்டது என்று சொல்லப்பட்டு உள்ளது. அதனால்தான் ஐதரும், திப்புவும் திருவிதாங்கூரைத் தாக்கினர்.

  The part played by Travancore under Maharaja Rama Varma Karthika Thirunal in settling the political map of South India and helping to promote Pax Britanica is also explained in considerable detail. The suppression of the “irrepressible” Poligars of Tinnevelly and the buttressing of the authority of the Nawab of the Carnatic were achieved by the East India Company with the active help of the Maharaja who sent large armies to fight the enemy at Vasudevanallur, Nellithankavila and many another places. However, the Maharaja was obliged to recognise the formal precedence of the Nawab through the persuasion of the Company’’ officers. The participation of Travancore in the war between the East India Company and Mysore is described in the older books. But the magnitude of her services and her sacrifices, and the value of the assistance which she rendered to the English in the consolidation of their power in South India have not hitherto been adequately treated or clearly explained. An attempt to fill up the gap is made in this Volume.//

  மேலும், திருவிதாங்கூர் உள்ளிட்ட மற்ற பரம்பரை அரசர்கள் விஸ்தரிப்பில் ஈடுப்பட்ட மாதிரியே சாமானியக் குடும்ப மன்னரான ஐதர் அலி ஈடுபட்டாலும், இந்த நாட்டின் எதிரிகளுக்கு உதவுவதாக ஒருபோது போராடியதில்லை. மாறாக அவர்களை அழிக்க வேண்டும் என்றே போராடினார். அதனால்தான் திப்புவைப் பற்றிய குறிப்பில் காரன்வாலிஸ் “திப்புவைப் போல மற்ற மன்னர்கள் இல்லாதது தனது அதிர்ஷடம் என்று” குறிப்பு எழுதினார்.

  —– மிக லேட்டான பின்னூட்டம் என்றாலும் மதிப்பான பின்னூட்டம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க