privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கசமச்சீர் கல்வி கருத்தரங்கம் - நிகழ்ச்சிப்பதிவு, படங்கள்!

சமச்சீர் கல்வி கருத்தரங்கம் – நிகழ்ச்சிப்பதிவு, படங்கள்!

-

க்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை உடனடியாக அமுல் படுத்தக் கோரி கடந்த இருமாதங்களாக மக்கள் மன்றத்தில் போராடி வருகின்றனர். சென்னையில் டிபிஐ முற்றுகை மற்றும் ஜெயா கொடுப்பாவி எரிப்பு, உயர்நீதிமன்ற முற்றுகை மற்றும் தனியார் கல்வி முதலாளிகளின் அறிக்கை எரிப்பு, எனப் பல போர்க்குண மிக்க போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த திங்கட்க் கிழமை (18-07.11) சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை 22-ம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி மற்றும் புரட்சிகர அமைப்புகள் போராடி உயர்நீதி மன்றத்தின் வாயிலிருந்து பிடுங்கிய தீர்ப்பு என்றால் அது மிகையல்ல.

களத்திலே நின்று போராடிய  பு.மா.இ.மு, ம.க.இ.க. அமைப்புகள் கருத்துக்களை, உரிமைகளை மக்களிடத்திலே கொண்டு செல்லும் விதமாக அரங்கக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த அரும்பாக்கம் புதிய புபு மஹாலில் காலை 9 மணிக்கு தரைத்தளத்தில் ஓவியக் கண்காட்சி தொடங்கியது. தோழர் முகிலன் ஓவியங்கள் வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கெதிரான போர் வாளாய் சுழன்றன. ஜெயா குரங்கு கையில் கிடைத்த பூமாலை, கல்வியை பறிக்கும் தனியார் பள்ளி முதலாளிகள், தனியார் பள்ளிகளை காக்கும் போயசு பள்ளி கல்வித்துறை, அரசு போன்ற ஓவியங்கள் பார்வையயாளர்களை ஈர்த்தன.

காலை பத்து மணிக்கு நிகழ்ச்சி முறைப்படி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி ஆரம்பிக்கப்பட்டது. தலைமையுரையாற்றிய புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் தோழர் த.கணேசன் “தாழ்த்தப்பட்ட -பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வியை மறுத்த மனு நீதி திரும்புகிறது. காசில்லையேல் கல்வி இல்லை, யார் அதிகம் நன்கொடை தருகிறார்களோ அவர்களை மட்டும் பள்ளிகள் சேர்த்துக்கொள்கின்றன. வியாபாரமாக கல்வி மாறிவிட்ட நிலையில் சமச்சீர் பொதுபாடத்திட்டத்தினை அமுல்படுத்து என்ற சீர்திருத்த நடவடிக்கைக்களுக்கே கூட புரட்சிகர அமைப்புகள் போராட வேண்டியிருக்கிறது. ஜனநாயகம் உள்ளதாக கூறப்படும் இந்நாட்டில் ஜனநாயகம் இருக்கின்றதா?இது ஒட்டுமொத்தக் கல்வியும் வியாபாரமான பிரச்சினை என்றும் அதற்கெதிராக போராட வேண்டும்” என கூறினார்.

பின்னர் சமச்சீர் பொதுப்பாடத்திட்டத்தை அமுல்படுத்தக் கோரி சிறை சென்ற பு.மா.இ.மு தோழர்களுக்கு பாராட்டுக்களும் பரிசுகளும்(நூல்கள்) வழங்கப்பட்டன.

அடுத்ததாக”ஏன் சமச்சீர் கல்வி வேண்டும்” என்ற தலைப்பில் தமிழகத்தின் மூத்தகல்வியாளர் திரு. எஸ்.எஸ்.ராஜகோபாலன் அவர்கள் உரையாற்றினார். அதில் “1.2 கோடி மாணவர்களின் மீது தமிழக அரசுக்கு உள்ள அலட்சியமே மேல் முறையீடு செய்யவுள்ள ஜெயா அரசின் செயல் நிரூபிக்கிறது. கடந்த 1.5 மாதமாக எந்த வகுப்பிலும் பாடங்கள் நடக்கவில்லை. அதை நீங்கள் தான் மாற்ற வேண்டும். உலகில் ஏற்பட்ட சமூக மாற்றங்களே கல்வி முறையை மாற்றியிருக்கின்றன. ஆக சமூகத்தைப் பற்றிய கல்வி கொடுக்கப்பட வேண்டும். சாதிமுறை ஒழிக்கப்படவில்லை அது  நீடிக்கிறது.  அதுதான் சமூகத்தில் பரவிக்கிடக்கிறது. அதை அகற்ற வேண்டுமெனில் பகுத்தறிவு கல்வி கொடுக்க வேண்டும். அந்தக் கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கையாக இருக்க வேண்டும். சுயசிந்தனையை, பகுத்தறிவை வளர்த்து சமூக மாற்றத்தில் பங்குகொள்ள சமச்சீர் கல்வி அவசியம்” என்றார்.

அடுத்ததாக, கல்வி கார்ப்பரேடமயம் என்பது உலகமயம் உருவாக்கும் புதிய பார்ப்பனீயம் என்ற தலைப்பில் ம.க.இ.க மாநில பொதுச் செயலர் தோழர் மருதையன் உரையாற்றினார். “சமச்சீர் பாடத்திட்டத்திற்காக எந்த ஓட்டுக்கட்சியும்  போராடவில்லை மாறாக பு.மா.இ.மு போராடியதன் விளைவாகவே நேற்றையத் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அடிபட்ட மிருகம் போல அரசு தனது வெறியாட்டத்தை தொடங்கினாலும் நாம் உறுதியாக போராடவேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழல் 1.2 லட்சம் கோடி எனில் கல்வியை தனியார் ஆக்குவதால் ஆண்டுக்கு 2.5 லட்சம் கோடி முதலாளிகளின் லாபவேட்டையாக அமைகிறது.”

“காட்ஸ் ஒப்பந்தம் மூலம் தண்ணீர், உணவு, மருத்துவம், கல்வி என அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டன. ஆதலால் காசில்லாதவனுக்கு கல்வி மறுக்கப்படுகின்றது. அதையே தமிழக அரசு வழக்கறிஞர் “பணம் கொடுத்துப் படிப்பது உரிமை”என்றும்,அமைச்சர் ” உலகமயமாக்கலை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு ஏற்ற கல்வி” என்றும்  கூறுகிறார்கள். ஆனால் 97.5 கட்டாஃப் மார்க் வாங்கிய ஏழைத்தொழிலாளியின் மகள் மேற்கொண்டு படிக்க முடியாமலிருப்பதும், 50 லட்சம் தரமுடிந்ததால் மட்டும் டாக்டராகும் மாணவனையும் உள்ளடக்கிய இக்கல்வி முறை அதாவது காசிருந்தால் கல்வி என்ற இம்முறை ஒழிக்கப்படவேண்டும். கல்விக்கு, அதை அளிப்பதில் சமூக நோக்கம் இல்லையேல் ஏற்றத்தாழ்வுகள் நீங்காது. ஆனால் இப்போது கல்வி கையிலிருக்கும் பணத்தை பொருத்து வழங்கப்படுகின்றது.”

“19-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தகுதிக்கேற்ற கல்வி வழங்கிய அம்முறையை இப்போது உலகமயம் நமக்கு வழங்குகிறது. அமெரிக்காவில் ஒவ்வொரு மாணவனையும் 50 லட்சம் முதல் 1 கோடி வரை கடன் காரர்களாக்கி வெளியில் தள்ளுகிறது அக்கல்வி முறை. இது கல்வி வியாபாரமானதின் விளைவு. உற்பத்தி தேவைக்கானதுதான் கல்வி என்ற சமூக நோக்கத்தை அழித்து வணிகமயமாக, உழைக்கின்ற மிருகமாக மனிதனை மாற்றுவதுதான் ஜெயா அரசின் திட்டம். இதை முறியடிக்க மக்களைத்திரட்டி போராட வேண்டும்” என்று கூறினார்.

இறுதியாக கட்டாய-இலவசக் கல்வி தருவது அரசின் கடமை, கல்வி தனியார்மயம் என்பது ஏழைகள் மீதான வன்கொடுமை என்ற தலைப்பில் உரையாற்றிய ம.உ.பா.மை-ன் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் சி.ராஜூ “கல்வி தனியார்மயத்தால்,கட்டணக்கொள்ளளையால் அனைத்து மக்களும் ஏன் காவல்துறையினர் உட்பட அனைவரும் பாதித்துள்ளனர்”  என்றும் கடலூர் மாவட்டத்தில் ம.உ.பா.மை மற்றும் பொற்றோர் சங்கம் போராடிய போராட்ட அனுபவங்களை கூறினார்.

“மேலும் கள்ளச்சாராய விற்பனை போல் அங்கீகாரம் வாங்கி, வாங்காமல் பள்ளிகள் புற்றீசல் போல பெருகி மக்களை கொள்ளையடித்து வருகின்றன. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை, உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தக் கோரி போராடியதற்காக பு.மா.இ.மு கடலூர் தோழா;கள் கைது செய்யப்பட்டதையும் அதில் 16 வயது தோழர் 20 நாட்கள் சிறையில் இருக்க வைக்கப்பட்டதையும் கூறினார். தனியார் பள்ளிகளுக்கெதிரான போராட்டம் ஏனைய தனியார்மய கொள்ளைகளுக்கெதிரான போராட்டம் அதில் நாம் போராடி வெற்றி பெறுவோம் என்றும் சமச்சீர் பாடத்திட்ட போராட்டத் தீயை அணையாமல் காத்து நிற்கும் பெருமை ம.உ.பா.மை மற்றும் பு.மா.இ.மு வையே சாரும்” என்றார்.

இந்நிகழ்சியில் சுமார் 1000த்திற்க்கும் மேற்பட்டோர் கலந்த கொண்ட நிகழ்ச்சியில் அரங்கம் நிரம்பி வழிந்தது. மாணவர்களும், பொற்றோர்களும் மற்றும் பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, ம.க.இ.க, பெ.வி.மு தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியின் இடையிடையே புரட்சிகர பாடல்கள் இசைக்கப்பட்டன.   இறுதியாக முறைப்படி சர்வதேசியகீதம் இசைக்கப்பட்டபின் நிகழ்ச்சி நிறைவுற்றது.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

_________________________________________________________________

– தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, சென்னை
_________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்