privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்இருக்கிறவனுக்கு முதலாளித்துவம், இல்லாதவனுக்கு கம்யூனிசமா?

இருக்கிறவனுக்கு முதலாளித்துவம், இல்லாதவனுக்கு கம்யூனிசமா?

-

நூல் அறிமுகம்: “நிலம் என்னும் நல்லாள்”

“இல்லாதவர்கள் ஏதாவது கிடைக்கும் என்ற நப்பாசையில் பொதுவுடைமை பேசுகிறார்கள், இருப்பவர்கள் இழக்க நேரிடுமே என்று முதலாளித்துவம் பேசுகிறார்கள்”, என்றார் நண்பரொருவர். அவர் சொல்வது உண்மையாக இருந்தால் இல்லாதவர்கள் அனைவரும்  ஒன்றுபட்டு இந்நேரம் புரட்சி வெடித்து சோசலிசமல்லவா மலர்ந்திருக்கவேண்டும்?

ஒரு போதும் செல்வந்தர்களாகிவிட முடியாதென்று தெரிந்தாலும்  செல்வம் சேர்த்துவிடலாமமென கற்பனை செய்துக்கொண்டாவது வாழ்க்கையை தள்ளுகிறவர்களை  எல்லோருக்கும் எல்லாம் என்ற சோசலிசத்தை நோக்கி வருவதற்கு எது தடுக்கிறது?

கம்யூனிசம் என்றால் இப்போது இருக்கும் நிலையியிலிருந்து கீழேதான் வாழ வேண்டியிருக்கும் என்று  பலரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். எல்லாருக்கும் எல்லாம் என்றால் தமக்கு எதுவும் கிடைக்காதென அவநம்பிக்கை கொள்கிறார்கள். (எனில், மற்றவர்களிடமிருந்து சுரண்டப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுதான் அது தன்னிடம் வருகிறது என்பதை மறைமுகமாக ஏற்றுக்கொள்கிறார்கள் எனபது ஒரு பக்கம்.) தமது வசதி வாய்ப்புகள் பறி போய்விடும், தற்போதைய சுகமான வாழ்க்கை கிடைக்காது என்று எண்ணிக்கொள்கிறார்கள்.

இதில், முதலாளித்துவத்தின் வதந்திகள் – “தமது பெண்களும் பொதுச் சொத்தாகி விடுவார்கள் அல்லது உனக்கென்று எந்த சொத்தும் இருக்காது, உன் வருங்கால சந்ததிக்கு எதுவும் சேர்த்து வைக்க முடியாது, இன்ஷ்யூரன்ஸ் எடுக்க முடியாது, கம்யூனிசமென்றால் எல்லோரும் சோம்பேறிகளாகி விடுவார்கள், யாருக்கும் பொறுப்பு இருக்காது அல்லது  கடினமாக உழைப்பவருக்கும் படுத்துறங்கி நாளைக் கழிப்பவருக்கும் வித்தியாசமில்லையா” முதலான அவதூறுகள் காரல் மார்க்ஸ் காலத்திலிருந்து இன்றளவும் பரப்பப்பட்டு உயிருடன் அலைந்து கொண்டிருக்கின்றன.

அதோடு, இல்லாதவர்களுக்கு கிடைக்க வேண்டியவற்றை கிடைக்க வழி செய்வதுதானே, அவர்களை மேலே முன்னேற வைப்பதுதானே என்று தமக்கிருப்பதை இழக்காமல் வாழ்வதையே சமத்துவமாகக் கருதிக்கொள்கிறார்கள்.

உண்மையில் கம்யூனிசம் மக்களுக்கு இதைத்தான் வழங்குகிறதா? புதிய சமுதாயத்தை, வர்க்க பேதமற்ற சமத்துவ சமுதாயத்திற்கு உறுதி அளிக்கும் கம்யூனிசம்,மக்களிடமிருந்து இருக்கும் கொஞ்ச நஞ்சத்தையும் பறித்துக்கொண்டு முன்பு வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கையைவிட கீழே தள்ளிவிடப் பார்க்கிறதா?

சோவியத் ரஷ்யாவில் கம்யூனிசம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு மனிதகுலம் காணாத சாதனைகளை குறுகிய காலத்தில் அம்மக்கள் நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள்.

எனில், அது அவ்வளவு எளிதாகவா இருந்தது? முதலாளித்துவ நாடுகளில் சுரண்டல்களுக்கிடையிலே வாழும் நமக்கே இவ்வளவு சந்தேகங்கள் இருக்கும்போது குதிரைகள்,மாடுகள், கோழிகள், கொஞ்சம் நிலம் என்று விவசாயம் செய்த அம்மக்கள் எந்த பிரச்சினையுமின்றி சோசலிசத்தை ஏற்றுக்கொண்டனரா?

நிச்சயமாக இல்லை.  சொத்துரிமைக்காக உடன்பிறந்தவராக இருந்தாலும்  ஜென்மப்பகை பாராட்டுவதை பைபிள் காலத்திலிருந்தே காணலாம். ஒரு சதுர அடி நிலம் உடன்பிறந்தவனுக்கு அதிகப்படியாகப் போய்விட்டது என்ற காரணத்துக்காக ரத்தம் சிந்தி ஜெயிலுக்கு செல்வதை நாம் கண்கூடாகவே கண்டிருப்போம். கையளவு நிலமாக இருந்தாலும் கூட அவ்வளவு எளிதில் யாரும் விட்டுக்கொடுத்து விடுவதில்லை. இணையத்தில் கூட யாரிடமாவது ஏதாவது பிரச்சினையென்றால் “அவருக்கும் எனக்கும் வாய்க்கா வரப்புத் தகராறா” என்ற கமெண்டை சர்வசாதாரணமாகக் காணலாம். எனில்,நிலத்தின் மீது மக்களுக்கிருக்கும் பிணைப்பை புரிந்து கொள்வது அவ்வளவு கடினமாக இருக்காது.

அப்படியிருக்கும்போது, நிலத்தை அனைவருக்கும் பொதுவாக்கிவிட்டு விவசாயம் செய்ய வேண்டுமென்பதை மக்கள் எப்படி ஏற்றுக்கொண்டனர்? எல்லாம் ஒரு சொடுக்கில் வழுக்கும் வெண்ணெய் போல நடந்து விட்டதா? முதலாளித்துவம் பரப்பிவருவது போல உண்மையில் சர்வாதிகாரமாகத்தான் சோவியத் ஆட்சி நடைபெற்றதா? கூட்டுப்பண்ணைக்காக ருஷ்ய மக்கள் தங்களது சொத்துரிமையை இழந்தனரா?

இந்த கேள்விகளுக்கு மட்டுமல்ல,  கூட்டுப்பண்ணைக்காக, சோசலிசத்துக்காக தங்களை தயார்படுத்திக் கொண்ட க்ராமியாச்சி கிராம மக்களின் வாழ்க்கையை, அவர்களுக்குள் நடக்கும் உணர்ச்சிப் போராட்டங்களை, கலகங்களை, சந்தேகங்களை, துரோகங்களை நம் கண்முன் விரிக்கிறது  – மைக்கேல் ஷோலோக்கோவ் எழுதிய ”நிலம் என்னும் நல்லாள்” நாவல்.

_____________________________________________

க்ராமயாச்சி கிராமத்தில் கூட்டுப்பண்ணையை உருவாக்குவதற்காக மாவட்ட கமிட்டியால் அனுப்பப்படுகிறார் டாவிடேவ். அவர் வரும் போதே கிராமத்தில் நடுத்தர விவசாயிகளை, வழி தவறிச் செல்பவர்களையும் பற்றி அறிவுறுத்தப்பட்டே அனுப்பப்படுகிறார்.

கிராம சோவியத்துக்குச் சென்று செயலாளரையும், தலைவரையும் சந்திக்கிறார். அவர்கள் ஒரு கூட்டுச்சங்கம் இருப்பதாகவும் , டிராக்டர் இல்லாததால் மாடுகளை வைத்து உற்பத்தியை பெருக்குவதும், வாங்கிய கடன்களை அடைக்கமுடியததாலும் அது செத்ததாகவும் ஆகிவிட்டதாகவும் சொல்கிறார்கள்,செயலாளர் நாகுல்நாவும், தலைவரான ரஷ்மியட்நாவும்.

மேலும் கூட்டுச்சங்கத்தின் தலைவர் வியாபாரியாக மாறிவிட்டதாலும் சரியானபடி இல்லையென்று சொல்கிறார்கள். டாவிடேவ் ஏழை கொசாக்கியர்களையும் விவசாயிகளையும் அடுத்த நாளே கூட்டுப்பண்ணை சங்கம் தொடர்பாக சந்திக்கவும் கூட்டம் கூடவும் வேண்டுமென்கிறார்.

இதற்கிடையில் பழைய தளகர்த்தர்கள் போலீஸ்டீவும், யாக்கோவ் லூக்கீச்சும் இரவு முழுக்க கூடிப்பேசுகிறார்கள். அதில் போலீஸ்டீவ் கார்ல் மார்க்ஸின் கம்யூனிச அறிக்கையை வாசித்திருப்பதாகவும், கூட்டுப்பண்ணை அவர்களது சொத்துகளை முழுக்க அபகரித்துவிடுமென்று அறிந்திருப்பதாகவும் கூறுகிறான்.”கூட்டுப்பண்ணையில் ஆரம்பித்து கம்யூனில் கொண்டுபோய் கடைசியில் சொத்துரிமையையே அது ஒழித்துவிடும். மாடுகள், காளைகள் மட்டுமல்ல,குழந்தைகளைக் கூட அரசாங்கமே எடுத்துக்கொள்ளும், வாத்து சூப்பும், கோதுமைக் கஞ்சியும் சாப்பிட நமக்கு பிரியமாக இருந்தாலும் புளித்த பீரைத்தான் கொடுப்பார்கள், கொத்தடிமையாக கடைசிவரை நிலத்தோடு கட்டுண்டு கிடக்க வேண்டியதுதான்” என்று பேசி இருவரும் தங்களது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரையிலும் கம்யூனிஸ்டுகளுக்கும் போல்ஷிவிக்குகளுக்கும் எதிராக போரிடுவதாக கையொப்பம் இடுகிறார்கள்.

அடுத்தநாள் தீவிர தொழிலாளிகளும், கொசாக்கியருமாக 32 பேர் ஆண்களும் பெண்களுமாக கூடியிருக்க, டேவிடாப் கூட்டுப்பண்ணையை பற்றியும் அதன அவசியத்தைப் பற்றியும் பேசுகிறான். ரத்தத்தை உறிஞ்சும் நிலச்சுவான்தார்களை ஒழித்து ஆடுகள், மாடுகள், கருவிகளை சமூகச் சொத்தாக்கினால் மட்டுமே அனைவரும் நீடித்து வாழ முடியும். நிலச்சுவான்தார்களிடம் தானியம் இருந்தாலும் அவர்கள் கொடுக்க மனமில்லாமல் கீழே கொட்டுவதால்தான் வறுமையில் வாடுகிறீர்கள், உங்களிடம் கொடுக்க மனமிருந்தாலும் தானியங்கள் இல்லை. கூட்டுப்பண்ணை ஒன்றினால்தான் விவசாயி வறுமையிலிருந்து விடுதலை பெறமுடியும். இல்லையென்றால் இரக்கமற்ற நிலச்சுவான்தார்கள் இரத்தத்தை உறிஞ்சிவிடுவார்கள் என்று தோழர் லெனின் இறக்கும் போது கூட கூறியதாகவும் சொல்கிறான்.

கூட்டத்தில் சலசலப்பு ஏற்படுகிறது. உடனடியாக சேர பலர் முன்வருகிறார்கள். அவர்களது வர்க்க உணரச்சியை பாராட்டும் டாவிடேவ், இவர்களே சோவியத் ரஷ்யாவின் ஜீவநாடி என்றும் கூட்டுப்பண்ணையில் சேர தயங்கிக்கொண்டிருக்கும் நடுத்தர விவசாயிகளையும் அழைத்துவரவேண்டும் என்று கூறுகிறான்.

இதன் நடுவில் நாகுல்நாவ் உணர்ச்சி மேலிட்டவனாய், சொத்துரிமையால் தங்கள் குடும்பத்துக்கும் அண்டை வீட்டார் குடும்பத்தாருக்கும் ஏற்பட்ட சிறுபகை எப்படி அண்டைவீட்டுக்காரரின் மகனை காவு கொண்டது என்றும் அதற்காக தான் பல ஆண்டுகள் தன் குடும்பத்தை விட்டு விலகியதையும் கூறுகிறான். நகரத்தில் தொழிலாளியாக இருந்து தற்போது போல்ஷிவிக்காக திரும்பி வந்திருப்பதாகவும் நடப்பவற்றை பார்க்கும்போது புத்துணர்ச்சி ஏற்படுவதாகவும் உலகபுரட்சி அண்மையில் நம்மை நாடி வந்துக்கொண்டிருப்பதாகவும் கூறுகிறான்.

அடுத்ததாக, நிலச்சுவான்தார்களின் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கு குழுக்கள் பிரிக்கப்படுகின்றன. தானியங்கள், கால்நடைகள், கருவிகள் அனைத்தும் பதிவேடுகளில் குறிக்கப்பட்டு பொதுச் சொத்தாக்கபடுகிறது. இதை ஏற்கெனவே ஊகித்த சில நிலச்சுவான்தார்கள் தங்களது செல்வத்தை,கால்நடைகளை விற்று தங்கமும் காசுகளுமாக்கி புதைத்து வைக்கின்றனர். அல்லது தெரிந்த நண்பர்களிடம் கொடுத்தனுப்பி விடுகின்றனர்.

நிலச்சுவான்தார்களின் வீட்டை நோக்கி போகும் குழுக்கள் அவர்களின் வீடுகளில் பெண்களையும் குழந்தைகளையுமே காண்கின்றனர். அவர்களும் பயத்தில் உறைந்து ஒளிந்து கொண்டிருக்கின்றனர். தட்டுமுட்டு சாமான்களை சாக்குகளில் கட்டியபடி இருக்கின்றனர். அல்லது காவல்நாய்களை அவிழ்த்துவிட்டு  கூட்டுச்சங்கத்தாரை கடிக்கவிடுகின்றனர்.

குழுக்கள், வீடுகளிலிருந்து ஆடைகளை, புது பூட்சுகளை, தங்கம் போன்ற தானியங்களை, தேனை  களஞ்சியத்துக்கு கொண்டு வருகின்றனர். கந்தல் துணிகளை தைத்து தைத்து வரிகள் விழுந்த ஆடைகளைக் கொண்டவர்களுக்கு புது ஆடைகள் வழங்கப்படுகிறது. ஒரே ஆடையை துவைத்து நிர்வாணமாக நின்று கணப்பு அடுப்பருகே உலர்த்திவிட்டு அதே ஆடையை அணிந்து கொள்ளும் மக்கள் அடுத்த குளிர்காலம் வரை இது வரும் என்ற மகிழ்ச்சியை புதிய ஆடைகள் தருகிறது.

குழுவில் ஒருபகுதியினர் நிலச்சுவான்தார்கள் ஓட்டிச் சென்ற குதிரை,கால்நடைகளை தேடி நிலச்சுவான்தார்களிடம் துப்பாக்கி இருந்தாலும் உயிருக்கு பயப்படாமல் பின் தொடர்ந்து சென்று அவர்களை திரும்ப அழைத்து வருகின்றனர். இதற்கு நடுவில் அக்குழுவில் ஒருவனான ஆன்றி தன்னால் நிலச்சுவான்தார்களிடமிருந்து பொருளை கைப்பற்ற முடியாதென்றும் தான் அதற்காக பயிற்றுவிக்கப்பட்டவன் அல்லவென்றும் நிலச்சுவான்தார்களை ஒழிப்பது பாவமென்றும் குழந்தைகள் மற்றும் பெண்கள்  மரண பயத்தில் மூழ்கி கிடக்கிறார்களென்று இரக்கமேற்படுவதாகவும் கூறி பின்வாங்குகிறான்.

ஆன்றியிடம், “நம் குழ்ந்தைகள் வடித்த கண்ணீருக்காக நம் விரோதிகள் என்றாவது அழுததுண்டா அல்லது தாங்கள் கொன்ற குழந்தைகளுக்காக கலங்கியது உண்டா?வேலை நிறுத்தம் நடந்தபோது எனது தாய்க்கு வேலை போய்விட்டது, நாலு பிள்ளைகள், அவள் எங்களுக்கு உணவு வழங்குவதற்காக நாள் முழுவதும் சுற்றி விருந்தினருடன் வருவாள். திரைக்கு அந்தப்புறம் நாங்கள் இருப்போம். சிறுபிள்ளைகள். சமயத்தில் குடிகாரர்கள் வருவார்கள். என் தங்கைகள் அழுதுவிடக்கூடாதென்று அவர்கள் வாயை பொத்துவேன். அப்படி சம்பாதித்த காசுதான் எங்களுக்கு ரொட்டி வாங்க பயன்பட்டது . இப்படிபட்டவர்கள் மீதா இரக்கப்படுகிறாய்  இத்தகைய குறைபாடுகள் அற்ற சமுதாயத்தைதான் உருவாக்க முயல்கிறோம். வருங்காலத்தில் மீண்டும் அது நிகழக்கூடாது. மிராசுதாரரின் பிள்ளை மிராசுதாரராக முடியாது அப்படி நினைத்தால் தொழிலாளி வர்க்கம் அவர்களுக்கு பாடம் கற்பிக்கும்” என்று சொல்லி ஆன்றியை சிந்திக்க வைக்கிறான்.

க்ராமயாச்சி கிராமத்தில் திரும்பவும் கூட்டுப்பண்ணை தொடர்பாக கூட்டம் நடக்கிறது. கிராமத்தினர் அனைவருக்கும் பல சந்தேகங்கள். கேள்விகள். கோழி முட்டையொத்த நிலத்தைக் கொண்டிருந்தாலும் அவர்களால் விரிந்த முறையில் கூட்டுப்பண்ணையை பார்க்க முடியவில்லை. இரு குடும்பங்கள் இருந்தால், அதில் முதலில் பெண்களுக்கிடையில் சண்டை வரும் அதனால் ஆண்கள் பேசிக்கொள்ளமாட்டார்கள். விரிசல் பெரிதாகி தனித்தனியாகிவிட வேண்டியதுதான். குடும்பங்களுக்கே இப்படி என்றால் கூட்டுப்பண்ணைகள் வெற்றி பெறுவது எப்படி என்றெல்லாம் சந்தேகங்களும் கேள்விகளும் வருகின்றன.

யாவுமே சமூகச் சொத்தாக்கப்படுமா?

வீடுகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

சொந்த நிலங்களைப் வைத்து வேலை செய்வோரின் நிலை என்னவாகும்?

அவர்களிடமிருந்து நிலம் எடுத்துக்கொள்ளப்படுமா?

எல்லாரும் ஒன்றாக சாப்பிடுவதா?

எல்லா கேள்விகளுக்கும் நிதானமாக பதிலளிக்கிறான் டேவிடாவ். தற்போது இருப்பதை விட நிலைமை மோசமாகிவிடாதென்றும், கம்யூனிசம் அவர்களை  புதிய சமுதாயத்தில் உந்தித் தள்ளுகிறது என்றும் பாலைக் குடிக்காவிட்டால் கன்றுக்குத்தான் நஷ்டமென்றும் உணர்ந்து கொண்ட விவசாயிகள் கூட்டுப்பண்ணையில் சேர விண்ணப்பிக்கின்றனர்.

இருநூற்று பதினேழு குடும்பங்களில் அறுபத்தி ஏழு பேர் மட்டும் சேர கையை உயர்த்தினர். ஆனால், யாரும் எதிர்க்கவில்லை. இத்தனை நாள்கள் எங்கள் பாட்டன் முப்பாட்டன் வாழவில்லையா என்று  நடுத்தர விவசாயிகள் பலரும் தயக்கத்துடன் இருக்கின்ற்னர்.

அடுத்தநாளே ஒரு கூட்டமாக குதிரைகளும்,ஆடுமாடுகளும் கிராம சோவியத்தின் முன்பு நின்றது. மக்கள் மனுக்களை கொடுத்து கூட்டுப்பண்ணையில் சேர்ந்தனர். கூட்டுப்பண்ணைக்கு “ஸ்டாலின்” என்று பெயர் வைத்தனர். நாகுல்நாவும் தச்சர்களும் சேர்ந்து மாட்டுக்கான கொழுவை அடித்தனர். க்ராமியாச் கிராமத்தில் சமூகத்துக்காக பொதுவாக செய்யப்பட்ட முதல்காரியமாக அது இருந்தது.

தங்களது சொத்துகள் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்த நிலச்சுவான்தார்கள் கொசாக்கியரை வஞ்சம் தீர்க்க  ஒன்றாக கூடி திட்டம் தீட்டுகிறார்கள். இதற்கு நடுவில் நிலச்சுவான்தார்களால் ஒரு கொசாக்கிய விவசாய தம்பதியினர் கொலையுண்டு போகிறார்கள். இதுவும் நிலச்சுவான்தார்களின் வேலை.

கூட்டுப்பண்ணையில் சேர்ந்த யாக்கோவ் லூக்கிச் இரட்டை வாழ்க்கை வாழத் துவங்கினான். பகலில் கூட்டுப்பண்ணையில் உடம்பு நோக வேலை செய்வான். இரவில், தன் வீட்டில் மறைத்து வைத்திருந்த நிலச்சுவான்தார் போலஸ்டீவுக்கு உதவிக் கொண்டிருப்பான்.

பனி பெய்யும் பிப்ரவரி மாதம். சூரியன் உதயமாகி பனியை உருகியோடச்செய்யும். பனி உருகியதும் நிலம் காய்ந்து வெடிக்கும். யாக்கோவ் லூக்கிச் தனது ஆடுகளை வெட்ட ஆரம்பிக்கின்றான், லூக்கிச் புரட்சி ஏற்படு முன்னரே செல்வம் சேர்க்க ஆரம்பித்துவிட்டான். மகனை கர்னலுக்கு படிக்க வைக்க வேண்டும். சீமாட்டியை திருமணம் செய்விக்க வேண்டும். ஒரு ஆலையை கட்ட வேண்டும். தங்க சங்கிலியில் கடிகாரம் சேர்த்து அணிந்து கொள்ள வேண்டும். தனது மகனையும் சீமாட்டியை வரவேற்க ரயில்வே ஸ்டேஷனுக்கு காரில் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டிருந்தான். ஆனால், புரட்சி அத்தனையிலும் மண்ணள்ளி போட்டுவிட்டது.

தனது சொத்தில் ஒன்று கூட செஞ்சேனைக்கு சென்று விடக்கூடாதென்று திட்டமிட்டிருந்தான். அதன்படி ஆடுகளை அடித்து களஞ்சியத்தில் தொங்கவிட்டார்கள். லூக்கிச்சின் தூண்டுதலின் பேரில் கிராமத்தில் இரவு தோறும் கால்நடைகள் வெட்டப்பட்டன. அனைவரும் தின்ன முடியாமல் கறியை வயிறு முட்ட தின்றனர். வயிற்றுவலியால் அங்குகிங்கு நகரவும் முடியாமல் அவதிப்பட்டனர்.

இப்படி கால்நடைகள் சம்காரம் செய்யப்படுவதை கேள்விப்பட்ட டேவிடாவ் கூட்டுச்சங்கத்தை கூட்டினான். கால்நடைகளை வெட்டுவோர் கூட்டுப்பண்ணையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  ஆனால், அப்படி வெளியேற்றினால் கூட்டுப்பண்ணையில் ஒருவர் கூட மிஞ்ச முடியாது. கூட்டம் முடியும் போது கிராமத்தார்கள் ஒருவரோடொருவர் பேசியபடி கலைந்து சென்றனர் – “அவள்தான் வெட்டு வெட்டு என்று என்னை தூண்டிவிட்டாள், வீட்டுக்குப் போய் கவனித்துக்கொள்கிறேன், அவளை நன்றாக”.

குதிரைகளுக்கு கொட்டகை கட்டப்பட்டது. எல்லா குதிரைகளும் கொண்டு வந்து விடப்பட்டன. குதிரைக்குச் சொந்தக்காரர்கள் தங்களது குதிரைக்கு அதிகம் வைக்கோல் போடுமாறு கவனித்துக்கொள்பவனை கேட்டுக்கொண்டனர். இரவுகளில் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு சென்றனர். அவர்களில் யாருக்கும் அவ்வளவு எளிதில் சொத்துமீது ஆசை போகவில்லை.  ஆனால் கூட்டுப்பண்ணை ஆரம்பமானதில் இருந்து கிராமத்தில் ஒரு புதுவித பரபரப்பு தோன்றியிருந்தது. கால்நடைகளைக் கொல்வதும் நின்றது.

அடுத்துக்கூடிய கட்சி கூட்டத்தில், ஸ்டாலின் கூட்டுப்பண்ணையின் அங்கத்தினர்களின் கால்நடைகளை மட்டுமில்லாமல், கோழி-வாத்து போன்றவற்றையும் சமூகமயமாக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.  இதற்கு பெண்களிடமிருந்து மிகுந்த எதிர்ப்பு இருந்தது. மழைக்காலத்துக்குள்ளாக குஞ்சு பொரிக்கும் இயந்திரம் வாங்கிவிடலாமென்றும் அவை நூற்றுக்கணக்கில் பொரிக்க உதவுமென்றும் பிடிவாதமாக இருக்க வேண்டாமென்றும் வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.  பெண்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள், வருத்தப்பட்டார்கள், சிரித்தார்கள், பறவைகளையும் கோழிகளையும் பொதுக்கூண்டுக்குள் அடைத்தார்கள். கோழிகள் முட்டையிட்டன. அவையெல்லாம் பொதுவாக சேமிக்கப்பட்டன.

நடுவில், புது வதந்தி கிராமத்தை சுற்றியபடி இருந்தது. அதாவது, கூட்டுப்பண்ணையில் நீராவி இயந்திரம் இல்லாத காரணத்தால் முட்டை பொரிக்க வைக்க அறுபது வயதுக் கிழவிகளை அடைக்காக்க சொல்லப் போவதாக வந்த வதந்திதான் அது. இதைக்கேட்டு கிழவிகள் கோபமடைந்துவிட்டார்கள், சிறு சிறு நாற்காலிகள் செய்து அதனடியில் வைக்கோலைப் பரப்பி முட்டையை வைத்து கிழவிகளை அடைகாக்க சொல்ல்ப்போகிறார்கள், முடியாதென்று சொல்லும் கிழவிகளை நாற்காலியோடு கட்டுப்போட்டு விடுவார்கள் என்ற வதந்தியை ஒரு கன்னியாஸ்திரி மூலமாக பண்ணையார்கள் பரப்பிவிட்டார்கள் நல்லவேளையாக அந்த கன்னியாஸ்தீரி கூட்டுப்பண்ணையின் அங்கத்தினர்களிடம் அகப்படவில்லை.

டேவிடாவுக்கும், கூட்டுப்பண்ணையின் அங்கத்தினர்களுக்கும் ஒரு விவாதம் வந்தது. அதாவது, இந்த பறவைகள் விஷயம் சிறிதானதுதான். உண்மையில், செய்திருக்க வேண்டியது நூற்றுக்கு நூறு அங்கத்தினர்களை சேர்த்துவிட்டு விதைப்பில் இறங்கியிருக்க வேண்டும். ஆனால், கூட்டுப்பண்ணையை கம்யூனாக்கிக்கொண்டிருக்கிறோம். இது இடதுசாரி வழுக்கல். ஒரு போல்ஷிவிக்குரிய  வீரத்தோடு குற்றத்தை ஒப்புக்கொண்டு கோழிக்குஞ்சுகளை உரியவர்களுக்கு திருப்பிக்கொடுத்துவிடலாமென்று முடிவுக்கு வருகிறார்கள்.

இடையில், இரட்டை வேடமிட்ட லூக்கிச் போலீஸ்டீவின் வார்த்தையைக் கேட்டுக்கொண்டு கூட்டுப்பண்ணையை உள்ளிருந்தே சிதைக்கும் வேலையை தொடங்கியிருந்தான். குதிரைகள், மாடுகள் இரவில் படுக்குமிடத்தில் வைக்கோலுக்கு பதிலாக மணலை கொட்டுவது, அதனால் கால்நடைகளின் தோல் பனியில் சிக்கி சீரழிவது என்று நடந்து கொண்டிருந்தது.

அதோடு, விதைப்புக்கும் பயிரிடப்பட வேண்டிய ஹெக்டேர்களும், தானியங்களும் தீர்மானிக்கப்பட்டது. விதை தானிய வசூல், உற்பத்தி, கருவிகளை செப்பனிடுவது, வேலைப்பிரிவினை, விஞ்ஞான  முறையில் பயிடுவது  போன்றவை விவாதிக்கப்பட்டன. கூட்டுப்பண்ணையைச் சேர்ந்தவர்கள் தானியவசூலை ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் கூட்டுப்பண்ணை விவசாயிகளும், தனி விவசாயிகளும் தானிய வசூலை எதிர்த்தனர்.

ஏனெனில், தானியம் வசூலிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. அடுத்த விதைப்பே இருக்காது. எந்த நேரத்தில் போர் வரலாம் போன்ற காரணங்கள்தான்.

இந்த வதந்தி காட்டுத்தீ போல கிராமமெங்கு பரவியது. ஆனாலும் தானிய வசூல் வெற்றியடையவே இல்லை. கொசாக்கியர்கள் ஏதாவது காரணம் சொல்லி வீட்டை விட்டு வெளியேறிவிடுவர்.

இவை நடுவில்,  நிலச்சுவான்தார்கள் போல்ஷ்விக்குகளை தாக்க ஒரு படையை திரட்டியிருந்தனர். காலியாக இருந்த நிலச்சுவான்தாரின் வீட்டை தலைமையலுவலகமாக மாற்றியிருந்தனர். அவர்களது நடவடிக்கைகள் யாருமற்ற இரவு வேளைகளில் மிகவும் ரகசியமாக நடைபெற்றது. குதிரைகளை லாயத்திலிருந்து திருடிக்கொண்டு படைகளை  அழைக்க சென்றனர். லூக்கிச்சும் அவர்களுடன் சென்றிருந்தான். கொசாக்கியர்களைப் பார்த்து கோலாஸ்டீவ் தாக்குதலுக்கு தயாராகும்படிச் சொல்லிக் கொண்டிருக்கையில் கூட்டத்திலிருந்த பெரியவர் எழுந்தார்.

“நீங்கள் வருவதற்கு சற்று முன்னர்தான் அந்த பத்திரிக்கையை படித்தோம். ஸ்டாலின் எழுதிய கடிதம். அதைப்படித்தபின் நீங்களும் நாங்களும் வேறு என்று புலனாகிவிட்டது. நாங்கள் ஊழலை மட்டும்தான் எதிர்க்கிறோம், எங்கள் சோவியத்தை அல்ல. நாங்கள் கையெழுத்திட்ட மகஜர்களை திருப்பிக்கொடுத்துவிடுங்கள். எங்கள் கிராமத் தலைவர்கள் செய்த முட்டாள்தனம்தான். உங்களுடன் சேர்ந்தால் வெளிநாட்டுப்படைகள் வரும். கம்யூனிஸ்டுகள் யார், நமது சகோதர்கள்தானே?” என்று அவர்களை துரத்தி விட்டார்கள்.

போலாஸ்டீவும், லூக்கிச்சிடம் முடிந்தவரை கூட்டுப்பண்ணைக்கு தீங்கு செய்துக்கொண்டிருக்கும்படி சொல்லிவிட்டு குதிரைகளை விட்டு ஓடிவிட்டான். லூக்கிச்சுக்கு அவன் கிளம்பினதும்தான் மனமகிழ்வும் நிம்மதியும் ஏற்பட்டது. எதிர்புரட்சிக்காரர்கள் கிராமத்தை விட்டோடினர். ஸ்டாலினின் அந்தக்கட்டுரை வெள்ளப்பெருக்கினால் மூன்று வாரங்கள் தாமதமாக பல கிராமங்களை சென்றடைந்தது.

இந்த நாவலில், கட்சி அங்கத்தினர்களான டேவிடாவ்,நாகுல்நாவ், ரஷ்மியட்நாவ், போலீஸ்டீவ், லூக்கிச் கதாபாத்திரங்கள் உண்மையானவையே. சம்பவங்களும், கிராம மக்களது உணர்ச்சிகளும் உண்மையானவற்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவையே.  இப்போது நாம் நாவலை வாசித்தாலும்  கூட்டுப்பண்ணையின் காலத்துக்கே சென்று வந்தது போலிருக்கிறது.

மக்களுக்கும் சொத்துக்குமான உறவைப் பற்றி சொல்வதில் ஷோலோக்கோவ் வெற்றி பெறுகிறார். சுயநலம், ஏமாற்றி பிழைத்தல்,மூடநம்பிக்கைகள், வதந்திகள் என்று பலவும் மக்களிடம் நிலவி வந்திருக்கிறது, இன்று போலவே. இழக்க ஒன்றுமில்லாதவர்கள், உழைக்கத் தயங்காதவர்கள் கூட்டுப்பண்ணையின் அவசியத்தை உணர்ந்து இணைய முன்வந்தாலும் நடுத்தர விவசாயிகளிடம் ஊசலாட்டம் இருந்திருக்கிறது.  மாலையில் தோன்றி மறையும் மின்மினி பூச்சிகளின் வாழ்க்கையையொத்த நடுத்தர வர்க்கத்தினரின் இக்குணத்தை எந்த போராட்டத்திலும் நாம் காணலாம்.

மிக சொற்பமான சொத்துகளே இருந்தாலும் எண்ணத்தில் செல்வந்தராகவும், அன்றாட வாழ்க்கையில் வறியோராகவும்  இருந்தாலும் என்றாவது சொத்து சேர்த்து செல்வந்தாராகிவிடலாம் என்று மனக்கோட்டை கட்டுகிறார்கள். உழைக்கும் மக்களைபோல தம்மீதான சுரண்டலை அவர்கள் உணர்வதில்லை. ஆனால், இவர்களும் வர்க்க உணர்வு பெற்றால் சுரண்டலற்ற, சமத்துவமான,  ஒளிமிக்க எதிர்காலமான உலக புரட்சிக்கான நாள் வெகுதொலைவில் இல்லை.

இந்த நாவல் இரத்தமும் சதையுமான சோவியத் நாட்டின் கூட்டுப்பண்ணைகள் குறித்த அழுத்தமான அனுபவத்தை நமக்குக் கற்றுத் தருகிறது. சொத்துடமையின் வரலாற்று ரீதியான பண்பாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஊறியிருக்கும் மக்களை மாற்றுவது என்பது எவ்வளவு சிரமம் நிறைந்த ஒன்று என்பதை இந்நாவல் பாத்திரங்களினூடாக நாம் உணர முடியும். ஆனாலும் இத்தகைய தடைகளை தகர்த்தெறிந்து அதற்கான பொறுமையையும், போராட்டத்தையும் கைவிடாத அந்த எளிய தோழர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

கம்யூனிசம் என்பது எல்லா வசதிகளையும் செய்து தரும் சொர்க்க மல்ல. அது மக்களே தமது வாழ்க்கையை உழைத்து உருவாக்கும் ஒரு போராட்டம். அந்த போராட்டத் தருணங்களை நுகர விரும்புவர்கள் உடன் இந்த நாவலை படியுங்கள். கம்யூனிசம் குறித்து அறிய விரும்புவர்களுக்கு இந்த நாவல் கூட ஒரு நல்ல அறிமுகமாக இருக்கும்.

நாவல்: நிலம் என்னும் நல்லாள் (Virgin soil Upturned)

பக்கங்கள்: 490, விலை ரூ. 200.00

ஆசிரியர்: மைக்கேல் ஷோலோக்கோவ்

தமிழாக்கம்: தா.பாண்டியன்

வெளியீட்டாளர்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

நூல் கிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம்,10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002. தொலைபேசி: 044-2841 2367

_________________________________________________

வேல்விழி

____________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்