privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சினிமாமங்காத்தா: அண்ணா ஹசாரேவை 'என்கவுண்டர்' செய்த தல!

மங்காத்தா: அண்ணா ஹசாரேவை ‘என்கவுண்டர்’ செய்த தல!

-

மங்காத்தா வினவு

“மனதினை மாற்றடா ஒகே
மகிழ்ச்சியை ஏற்றடா ஒகே
குறைகளை நீக்கடா ஹேஹே
தடைகளை தூக்கிப்போட்டு போடா
உடலுக்குள் நெருப்படா ஹொஹொ
உணர்வுகள் கொதிப்படா ஹஹ
புதுவிதி எழுதடா ஹேஹே
புரட்சியை செய்து காட்ட வாடா…”

– மங்காத்தா பாடல் வரிகள்….

கண்ணில் தெரியும் காட்சிகளை எல்லாம் தனித்தனியாக இரசிப்பதே நமக்குச் சொல்லித் தரப்பட்டிருக்கும் பழக்கம். அந்தக் காட்சிகளினிடையே ஊடாடியும், ஊடுறுவியும், வேர்விட்டும் நிற்கும் அந்த மாய இழையை கண்டுபிடிக்கும் போது மட்டுமே, தனித்தனிக் காட்சிகள் இணைந்து எழுப்பும் விரிந்த அந்த பிரம்மாண்டமான ஓவியத்தின் முப்பரிமாணத்தை தொட்டுணர்ந்து உள்ளிழுக்க முடியும். ‘ஆன்மீக’ மொழியில் வருணித்தால் அதுதான் தன்னையே பரப்பிரம்மமென உணரும் தெவிட்டாத பரவச தருணம். எங்கள் மொழியில் சொன்னால் அதுதான்……………? அது என்ன என்று சொல்லிவிட்டால் ஒரு ஆக்சன் த்ரில்லர் பட விமரிசனத்திற்கு செய்யப்படும் அநீதியாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தின்படி இது ஒன்றும் அநீதியல்ல. ஆனாலும்……

நாத்திகத் தமிழினவாதிகள் கோபித்துக் கொண்டாலும் கூட எந்த கட்டுரையும், விசயமும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பதுதான் தமிழ் மரபு. இந்து மரபும் கூட. ஆகவே…………

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், விநாயகர் சதுர்த்தி – ஸ்பெசல் டின் பாக்ஸ், நெய் அப்பம், இனிப்பு கொழுக்கட்டை, கார கொழுக்கட்டை, திரட்டி பால், முள்ளு முறுக்கு, கடலை உருண்டை, லட்டு, மனோகரம், தேன் குழல்……. விலை ரூ.279 மட்டுமே. அன்புப் பரிசாக விநாயகர் சிலை, விநாயகர் சி.டி இலவசம்.

ரம்ஜான் தினத்தன்று தினமலரில் வந்த விளம்பரம். அப்துல் காதரும் அம்மாவாசையும் போல் மங்காத்தாவுக்கும் கொழுக்கட்டைக்கும் என்ன தொடர்பு?

ஒரு தேசத்தின் ஊடக விளம்பரங்களை காட்டுங்கள், அந்த தேசத்தின் சமூகத் தரத்தைக் கூறுகிறோம்.…எனும் பொன்மொழிக்கேற்ப….

கவனியுங்கள், கொழுக்கட்டையின் விலை ரூ.279, கொழுக்கட்டையுடன் கூட விநாயகர் சிலை இலவசம். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை பிடிக்கும். அதனால் அவரது நைவேத்தியத்தில் தொந்தி, தும்பிக்கையருகே தரையில் இருக்கும் கொழுக்கட்டை பிரதானம். ஆனால் கிருஷ்ணா ஸ்வீட்சைப் பொறுத்தவரை கொழுக்கட்டை கடவுளாகவும், கடவுள் இனாமாகவும் மாறிய விந்தையின் பொருள் என்ன? நைவேத்தியத்திற்கு விலை, அந்த நைவேத்தியம் படைக்கப்படும் ஆண்டவன் இலவசம் என்றால் உண்மையான ஆண்டவன் யார்?

தின்று செரித்து மலமாகப் போகும் ஒரு கொழுக்கட்டையின் மதிப்பு கூட அதை விரும்பி முழுங்கும் இறைவனுக்கு இல்லை எனில்? ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்சின் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பாக்சை விலை கொடுத்து வாங்கிச் செல்லும் பார்ப்பன மேட்டுக்குடி பக்தர்களின் தரம் இதுதான் என்றால்?

இங்கே பக்தி ஒரு முகாந்திரம் மட்டுமே. அந்த பக்தியின் பின்னிருந்து இயக்கி முக்தியளிக்கும் கடவுள் பணம், பணம் மட்டுமே. இதைத்தான் மங்காத்தா படத்தில் விநாயக் என்ற பெயரில் வரும் அஜித் ஆங்காங்கே உணர்ச்சிப் பாவத்துடன் கூவுகிறார். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஸ்பான்சராக நடத்தும் காலச்சுவடு கூட்டமாகட்டும், கர்நாடக கச்சேரியாகட்டும்……எல்லாம் அந்த நிறுவனத்தின் இனிப்பு கார வகைகளை காசு கொடுத்து வாங்கிச் செல்லும் பக்தர்களின் ‘பண்பாட்டு’ தூண்டில். பெப்சி அருந்திக் கொண்டே டோனி அடிக்கும் சிக்சரை சோனி எல்.சிடியில் பார்ப்பதும், கிருஷ்ணா ஸ்வீட்சின் கொழுக்கட்டையை விழுங்கியவாறே விநாயகனை துதிப்பதும் வேறு வேறா என்ன?

மதமோ, விளையாட்டோ எதுவும் வர்த்தகக் கடவுளின் தயவினால் மட்டும் நடக்கும் சமாச்சாரங்கள். சற்று குறிப்பாக பாருங்கள், பெப்சி விற்பதற்காக கிரிக்கெட்டில் தேவைப்படும் சிக்சர், கொழுக்கட்டை விற்பதற்காக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி. பெப்சி அருந்தினால் மட்டுமே சிக்சரின் மதிப்பு புரியும். கொழுக்கட்டையை வாங்கினால் மட்டுமே பக்தியின் மதிப்பு அளவிடப்படும்.

விநாயகர் சதுர்த்தி நாளில், விநாயக் என்ற பெயரில் அஜித் நடிக்க, விநாயகர் ஊர்வலங்களுக்கு பிரபலமான மும்பையில் நடக்கும் மங்காத்தாவின் கதை என்ன? பணம், பணம், பணம். காதல், நட்பு, பாசம், குடும்பம் எல்லாவற்றையும் விட பணம். எந்த வழியிலாவது, என்ன செய்தாவது, எப்படியாவது பணம். ஏன்?

ஆனால் மங்காத்தாவின் பலம் அது மட்டுமல்ல. அது சமகாலத்தின் பணம் குறித்த உணர்ச்சியை, உண்மையை, அரசியலை, பண்பாட்டை, புனிதங்களை வெள்ளேந்தியாக விறுவிறுப்பான காட்சிகளால் உணர வைக்கிறது. அல்லது போட்டுடைக்கிறது. எனினும் நுனிச்சீட்டில் இழுக்கும் வலுவான திரைக்கதை அளிக்கும் பேரின்ப வெள்ளத்தில் திளைக்கும் ரசிக பக்தர்கள் அதை உணர முடியாது என்பது ஒரு யதார்த்தம். ஆனால் பழகிப்போன சமரசங்களும், மரத்துப்போன நீதிகளும், இற்றுப்போன மதிப்பீடுகளும் கொண்ட சூழலை விரும்பி ஏற்றுக் கொள்ளும் ஒரு இரசிகன் அதை தனித்துப் பிரித்து உணர வேண்டிய அவசியமில்லையே?

கால ஓட்டத்தில் நமது விருப்பம், தெரிவு, இரசனை, கொள்கை அனைத்தும் மாறித்தான் போகிறது. ஆனால் அந்த கால ஓட்டத்தை நெறிப்படுத்துவது எது?

மூவர் தூக்கிற்காக தமிழகம் துடித்தெழுந்த போது இந்தியாவில் அதன் மாநகரங்களில் படித்த நடுத்தர, மேட்டுக்குடி வர்க்கம் அண்ணா ஹசாரேவின் தலைமையில் ஊழலை எதிர்த்து முழங்கிக் கொண்டிருந்தது. இங்கும் நமது தமிழக நகரங்களில், தலை நகராம் சென்னையில் மேன்மக்கள் கொதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஐ.டி துறையினர், பன்னாட்டு நிறுவனங்களில் பசையான சம்பளத்தை வாங்குவோர், செலிபிரிட்டிகள், திரைத்துறையினர் என்று பலரும் உண்டு.

இந்த மெழுகுவர்த்தி கனவான்களின் அடுத்த சென்சேஷன் எது? ஐ.டி துறை நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது அது மங்காத்தா என்றார்கள். அதிலும் பல நிறுவனங்களில் உள்ள H.R.களே ஏற்பாடு செய்து அலுவகம் அலுவலகமாக கூட்டம் கூட்டமாக மங்காத்தா முதல் காட்சிக்கு சென்றிருக்கிறார்கள் என்பதைக் கேட்ட உடன் ஆவல் பிறந்தது.  படம் பார்த்த நண்பர்களிடம் கதை கேட்டால், “எல்லாம் பணம்” என்றார்கள். ஊழல் ஒழிப்பிற்கு மெழுகுவர்த்தி ஏந்திய கையோடு எல்லாம் பணம்தான் என்றால் எங்கோ இடிக்கிறதே?

_______________________________________

” இன்னும் எத்தனை நாள் நான் நல்லவனாக நடிப்பது “
– மங்காத்தாவில் வினாயக்

நல்லவனாக இருப்பது ஒரு நோக்கம் மட்டுமே. நிறைவேற்றவோ, அதை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்கவோ முடியாத போது நடிக்க மட்டும்தான் முடியும். ஆனாலும் நடிப்பது சிரமமில்லையா? நல்லவனாக இருப்பது வேடிக்கையான கேலிப்பொருளான நிலையில் அஜித்தின் வசனத்திற்கு திரையரங்கு ஆர்ப்பரிக்கிறது. அது இயல்பாக தன்னையே கேலி செய்யும் சுய எள்ளல் என்பதை உறுதி செய்ய நீங்கள் மங்காத்தாவை பார்த்திருக்க வேண்டும். இந்த விமரிசனத்திற்கு மங்காத்தாவின் கதை தெரிந்திருப்பது அவசியமா?

எனினும் உங்களுக்காக கதைச் சுருக்கம்……

இந்தியாவின் கிரிக்கெட் சூதாட்டத்தில் கட்டப்படும் பணமெல்லாம் மும்பைக்கு டாலராக 500 கோடி ரூபாய் மதிப்பில் வருகிறது. சூதாடிகள் அந்த சூதாட்டப் பணத்தை ஐ.பி.எல் பைனலுக்கு பின்னர் முறையாக பிரிப்பதற்கு முன் அதை ஒரு செட்டியாரிடம் பாதுகாக்குமாறு அனுப்புகிறார்கள். கிளப் சூதாட்டத்தை தொழிலாக நடத்தும் செட்டியார் அதன் பொருட்டு ஒரு திரையரங்கையும் நடத்துகிறார். இடையில் செட்டியாரிடம் வேலை செய்யும் ஒருவனோடு இன்னும் மூவர் சேர்ந்து அந்த சூதாட்டப் பணம் 500 கோடியை திருட  திட்டமிடுகிறார்கள்.

தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரியான அஜித் அந்த நால்வர் கும்பலின் முயற்சியை கண்டறிந்து தானும் சேர்ந்து கொள்கிறார். அவரது திறமையால் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. ஆனாலும் பின்னர் அந்த நால்வர் கும்பலுக்குள் ஏற்படும் துரோகம் காரணமாக சண்டை. இடையில் குடியரசுத்தலைவருக்கு மட்டும் பதில் சொல்லும் அதிகாரம் படைத்த ஒரு போலீசு குழு அர்ஜூன் தலைமையில் இந்தியாவெங்கும் கிரிக்கெட் சூதாட்டப் பணத்தை கைப்பற்றி, சூதாடிகளை கைது செய்கிறது. அவர்களும் இந்த 500 கோடி கொள்ளையை துரத்துகிறார்கள்.

இறுதியில் அர்ஜூனும், அஜித்தும் சந்திக்கிறார்கள். சண்டையில் அஜித் சாவது போல தோன்றினாலும் பின்னர் அவர் கொள்ளைப் பணத்தோடு தாய்லாந்தில் வாழ்வது தெரிகிறது. மேலும் அவரோடு அர்ஜூனும் சேர்ந்து இந்தக் கொள்ளையில் ஈடுபட்டிருப்பதும் தெரிகிறது. அஜித் கொள்ளையர்களோடும், அர்ஜூன் போலீசோடு இணைந்தும் பணிபுரிகிறார்கள். பணத்தை பங்கு போடும் போட்டியில் அந்த நால்வர் அணியினர் கொல்லப்படுகிறார்கள். சூதாட்ட மையமான செட்டியாரை நெருங்குவதற்குகாவே அஜித் அவரது மகள் த்ரிஷாவை காதலிக்கிறார். காரியம் கை கூடியவுடன் காதலை தூக்கி எறிகிறார். கதை போதுமா?

____________________________________________

” இது அம்பானி பரம்பரை, அஞ்சாறு தலைமுறை, ஆனந்தம் வளர்பிறை….
ஆடாம ஜெயிச்சோமடா, ஓடாம ரன்னெடுத்தோம், சும்மா உக்காந்து வின்னெடுத்தோம்….

– மங்காத்தா பாடல் ஒன்றிலிருந்து….

மங்காத்தா குறித்த பதிவுலக விமரிசனங்கள் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. விறுவிறுப்பான படம், முன்பாதி கொஞ்சம் நீளம், பின்பாதி நறுக், ஐம்பாதாவது படம் வெற்றிப்படமாக அமைவது பலருக்கு நடக்கவில்லை, தல ஜெயித்திருக்கிறார், இளந்தொந்தி, நரை முடி, நாற்பது வயதை பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்,…………இவைதான் அவற்றின் சாரம். இமேஜைப் பற்றி கவலைப்படாமல் நடித்திருக்கும் அஜித்திற்கு பாராட்டு மழைகள் குவிகின்றன. இதில் இமேஜை தியாகம் புரிந்திருப்பது எங்கே வருகிறது?

திரைக்குள்ளே பிடரியில் வழியும் முடி, பீடி, பன்ச் டயலாக் என புகழடைந்த ரஜினி திரைக்கு வெளியே வழுக்கை, நரை, தாடியுடன்தான் நடமாடுகிறார். 60 வயது பிறந்த நாட்களை கொண்டாடியபடிதான் இன்றும் சினிமாவில் நடிக்கிறார். இவையெல்லாம் ரஜினியின் மாகமித்யங்கள் என்று சொல்லுவதை விட ஆண்மையின் அடையாளம் என்று சொல்லுவதே பொருத்தம். ஆனால் இத்தகைய வாய்ப்புகள் ஒரு நடிகைக்கு இல்லவே இல்லை. அஜித்தின் ஜோடி த்ரிஷா இது போல தனக்கு 35 வயது என்று ஒரு பேச்சுக்கு அறிவிப்பதாக வைத்துக் கொள்வோம். என்ன நடக்கும்?

நடிகைகள் திருமணம் புரிந்தாலே அவர்களது சந்தையும், நடிப்பும் ஒரு முடிவுக்கு வந்துவிடும். ஆனால் நடிகர்களோ அவர்கள் திருமணம் புரிந்தாலும், பிள்ளைகள் பெற்றுக் கொண்டாலும், நடுத்தர வயதில் டீன் வயது நாயகிகளோடு டூயட் பாடுவதும், கல்லூரிக்கு போவதும் சாதாரணம். வேறு வார்த்தையில் சொன்னால் ஒரு ஆண் எந்த வயதிலும் பெண்டாளுவதற்கு தயாராக இருக்கிறான். அப்படி இருப்பதுதான் அவனது அடையாளம் எனும் ஆணாதிக்க சமூக மனோபாவத்தில்தான் அஜித்தின் நாற்பது வயது பிரகடனம் மாபெரும் தியாகமாக போற்றப்படுகிறது. சரி, அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் 2வது சுதந்திரப் போராட்டமாக போற்றப்படும் போது அஜித்தின் தியாகத்தையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்?

50 படங்களை முடித்திருக்கும் அஜித் மங்காத்தாவைத் தவிர மீதி படங்களில் வழமையான நீதி பேசும் நாயகனாகவே நடித்திருக்கிறார். வாலி, பில்லா போன்ற படங்களில் அவர் இரட்டை வேடங்களில் ஒன்றில் மட்டும் வில்லனாக நடித்திருந்தாலும் அவைகளின் தீமையை நன்மை வேட அஜித் விஞ்சி விடுகிறார். ஆனால் மங்காத்தாவில் ஒரு முற்றிலும் வில்லத்தனமான பாத்திரத்தில் அவர் நடிக்கத் துணிந்திருப்பது முதலில் ஒரு பாரிய மாற்றம் என்று தோன்றினாலும்…..

சில விதிவிலக்குகளைத் தவிர தமிழ் ஹீரோக்கள் அனைவரும் தீமையினை வென்று நன்மையை நிலை நாட்டும் வீரர்களாகவே நடித்திருக்கிறார்கள். அப்படித்தான் இரசிகர்களும் போற்றுகிறார்கள். எம்.ஜி.ஆர், ரஜினி ஃபார்முலாவின் இலக்கணமே அப்படித்தான். ஆனால் மங்காத்தாவில் இந்த இலக்கணம் சுக்கு நூறாக உடைத்தெறியப்படுகிறது. இது நடிகர், இயக்குநரின் புரட்சி என்பதை விட வில்லத்தனமே இனி வாழ்வின் கொண்டாட்டங்களுக்கு அடிப்படை என்று தெளியும் நடுத்தர வர்க்கத்தின் சமூக உணர்ச்சிக்கு பொருத்தமான கதை என்று சொல்லலாமா? இந்த பண்பு மாற்றத்தினை விமரிசனம் எழுதிய பதிவர்கள் யாரும் கவனிக்கவில்லை என்பதை விட அப்படி கவனித்து பார்க்குமளவு இது ஒன்றும் அந்நியமானதல்ல என்றும் சொல்லலாமல்லவா?

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் தாய்க்குலம் மீதான செண்டிமெண்ட்தான் தமிழ் சினிமாவை காலந்தோறும் தாங்கி வந்த அஸ்திவாரம். அதை காதல், பாசம், நட்பு, தேசபக்தி என்று கிளை விரித்துப் பார்த்தாலும் எல்லாவற்றிலும் தாய்க்குலத்தின் மேன்மை போற்றப்பட்டிருக்கும். திரையங்குகளில் தாய்மார்களின் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதைப் பொறுத்து ஒரு படத்தின் வெற்றி தீர்மானிக்கப்படும் நிலை.

பார்க்காமலேயே காதல் என்று காதலுக்கு புதிய பரிமாணம் படைத்த காதல் கோட்டை, மிரட்டி காதலிக்க வைத்த அமர்க்களம் என்று பல்வேறு காதல் படங்களில் நடித்துப் புகழடைந்த அஜித் இங்கே காதலை இரசிகர்களின் பேராதரவுடன் கதறக் கதறக் ‘கற்பழிக்கிறார்’.

லட்சுமிராயுடன் படுத்துவிட்டு அவரை தந்திரமாக வெளியேற்றிவிட்டு, காதலி த்ரிஷாவை அப்பாவி போல வரவேற்கிறார். கண்மூடி முத்தமிடுகிற இடைவேளையில் த்ரிஷாவுக்குத் தெரியாமல் லட்சுமிராயின் பர்சை வெளியே நிற்கும் அவரிடம் கொடுத்து விட்டு “என்னாச்சு” என்று கேட்கும் த்ரிஷாவிடம் பல் விளக்கிவிட்டு வரவா என்று இந்தப்பூனையும் பால் குடிக்குமா என்பது போல் சொல்லும்போது இரசிகர்களின் நகைப்பு ஆரவாரத்துடன் மயிர் கூச்செரிகிறது. பணம் கொள்ளையடிக்கப்பட்டவுடன் இனி காதலுக்கு வேலையில்லை என்றவுடன் த்ரிஷாவின் முன்னே அவரது தந்தை செட்டியாரை ஓடும் காரிலிருந்து தள்ளிவிடுகிறார். அப்போது காட்டும் அஜித்தின் முகபாவம் ” போங்கடி நீங்களும் உங்கள் காதல் மசுரும்” என்பது போல அபிநயிக்கிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது?

சேர முடியாமல் தவிக்கும் காதல் உணர்ச்சிப் படங்களுக்கு அடிமையாயிருந்த இரசிகர்கள் இங்கே படத்தின் துவக்கத்திலேயே காதலை செருப்பில் போட்டு மிதிக்கும் காட்சிகளில் மனதை பறி கொடுத்த மர்மம் என்ன? ஆம் நண்பர்களே அந்த தலைமுறை மாறிவிட்டது என்ற உண்மையினை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். அதனால்தான் சின்னத்தம்பியின் அந்த பாடிகார்டு காதல் சென்டிமெண்டை வைத்து பி.வாசு அரைத்திருக்கும் புலி வேஷம், புளித்துப் போய் தவளை வேடமாய் இரசிகர்களால் புறக்கணிக்கப்படும்போது மங்காத்தா சீறும் சிறுத்தை போல பட்டயைக் கிளப்புகிறது. இது பெரிய பட்ஜெட், சிறிய பட்ஜெட் என்ற வேறுபாட்டால் நடக்கவில்லை. எந்தக் கதை சமூகத்தின் உணர்ச்சியோடு பொருந்திப் போகிறது என்பதோடு தொடர்புடையது. எனில் அந்த உணர்ச்சி எது?

படத்தில் பல ஆண் நண்பர்களோடு பழக்கமுடைய காமக்கிழத்தியாக வரும் லட்சுமி ராய்தான் இரசிகர்களின் மனதை அள்ளுகிறார். அடக்க ஒடுக்கமாகவும், ஒரு பிறந்தநாள் பார்ட்டியில் கொஞ்சம் மதுவருந்தும் அல்ட்ரா மாடர்ன் காதலியாக த்ரிஷா இருந்தாலும், ராயின் இருப்பே இரசிகர்களுக்கு விருப்பமானதாக இருக்கிறது. இதை லக்கிலுக் போன்ற ஃபார்முலா விமரிசன பதிவர்கள் கவர்ச்சியின் அளவுகோலால் வரையறுக்கிறார்கள். ஆனால் உடல் தோற்றம் தரும் கவர்ச்சியை விட மனம் விரும்பி ஒட்டும் கருத்து உணர்ச்சிதான் இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளவதற்கான அளவுகோல். அந்த நவீன உணர்ச்சிதான் என்ன?

காலம் முழுவதும், வாழ்க்கை முழுவதும் ஒரு பெண்ணை மட்டும் நினைத்து இராமன் போல ஏகபத்தினி விரதனாக இருப்பது ஒரு இலட்சியம் என்ற அளவில் கூட இன்று மதிப்பற்றது. முன்பு கூட அப்படி ஒரு யதார்த்தம் நிறைவேறக் கடினமானது என்றாலும் மதிப்பீடு என்ற அளவிலாவது அது நினைக்கப்பட்டு வந்தது. அதனால்தான் அத்தகைய காதல் படங்கள் கட்டற்று ஓடி திரையுலகை ஆக்கிரமித்து வந்தன. இனியும் கூட அத்தகைய படங்கள் வரும் என்றாலும் அது முந்தைய காதல் போன்று புனிதக் காதலாக இருக்க வாய்ப்பில்லை. சமூக வாழ்க்கை மாறுவதற்கேற்ப காதலும் கூட மாறித்தானே ஆக வேண்டும்?

செட்டியாரிடம் வேலை செய்து பின்னர் அவரது பணத்தை கொள்ளையடிக்க முனையும் வைபவ் தனது காதல் மனைவி அஞ்சலியுடன் அன்பாக அன்னியோன்யமாக வாழ்கிறார். அர்ஜூனும் தனது மனைவியை காதல் பாசத்துடன் பராமரிக்கிறார். ஆனால் கதையின் திருப்பங்களுக்குத் தேவை என்ற அளவில் வரும் இந்தக் காதல் காட்சியின் உணர்ச்சிகளை இரசிகர்கள் பொருட்படுத்தவில்லை. பின்னர் தனது மனைவியைக் காப்பாற்றுவதற்காக வைபவ் மற்றவர்களை காட்டிக் கொடுக்கத் துணியும் போது கூட அவர் மேல் இரசிகர்கள் அனுதாபம் கொள்ளவில்லை. அவரை ஒரு வில்லனாகவே பார்க்கிறார்கள். இந்த உலகின் நம்பர் ஒன் காதலியாக பணம் இருக்கும் போது இந்த மனிதப்பிண்டமான ஒருவருக்கு ஒருவர் எனும் காதல் தனது புனிதத்தை முன்வைப்பது பொருத்தமாக இல்லை என்பது வேறு விசயம். “பணம் இருந்தால் நமக்கு ஆயிரம் பெண்கள் கிடைப்பார்கள்” என்று அஜித் பேசும்போது இரசிகர்கள் கைதட்டி வரவேற்பதின் பொருள் அதுதானோ?

வேறு வழியின்றி ஒரு மனைவி, ஒரு காதலி, ஒரு கேர்ள் பிரண்டுடன் வாழ்பவர்களும் கூட தொட்டறியத்தக்க தவறுகளை செய்யாதவர்களாகவே இருந்தாலும், அவர்கள் மனது அப்படி வாய்ப்பிருக்கும்போது பலரை அனுபவிக்கவே நினைக்கிறது. வாழ்வின் இன்பச் சிகரங்களை எட்டுவதற்கு பணம்தான் ஏணி எனும் போது ஏற ஏற துய்க்க வேண்டிய இன்பங்களின் எண்ணிக்கை கூடி விடுகின்றன. காதலும் இல்லையில்லை காதல்களும் அதில் அடக்கம்தானே?

மேலதிக ஐந்திலக்கச் சம்பளத்தில் வாழப் பழகிவிட்ட இன்றைய படித்த தலைமுறையினர் காதலுக்காக முன்பு போல போராடுவதில்லை. “ஜாலிக்காக காதல், செட்டிலாவதற்காக திருமணம்” என்பதே அவர்களது சமூக முழக்கமாக இருக்கும் போது லட்சுமிராய் மட்டும் கிளுகிளுப்புடன் இரசிக்கப்படுவதில் வியப்பில்லை. ஆனால் பணத்தை எடுத்துக் கொண்டு நால்வர் கும்பலில் இருவர் மட்டும் போகும் போது லட்சுமிராயும் இணைந்து கொள்கிறார். அதில் ஒருவனை அவர் சுட்டுக் கொல்ல பணத்தின் பங்கு இருவருக்கு மட்டும் என்றாகிறது. அந்த நேரத்தில் அஜித் வரும்போது அவருடன் சேர்ந்து கொள்வதாக கூறி அவரைக் கொல்ல முனைகிறார். ஆனால் அஜித் அதை முன்னறிந்து லட்சுமி ராயை கொல்கிறார். கொல்லும் போது “தேவடியா முண்டை” என்று திட்டுவது சென்சாரில் மியூட் செய்யப்பட்டாலும் தெளிவாக புரிகிறது. இரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள், அந்த வசனத்திற்கு. அனுபவித்து விட்டு மட்டும் போக வேண்டிய ஒரு காமக்கிழத்தி வாழ்க்கையை அதாவது பணத்தை பங்கு கேட்டால்?

_________________________________________________________

“தி இஸ் மை Fucking மணி, தி இஸ் மை Fucking கேம்”
மங்காத்தாவில் வினாயக்கின் பஞ்ச் டயலாக்.

பஞ்ச் டயலாக் என்றால் எதுகை, மோனை, சந்தத்துடன் மட்டும் வருவது அல்ல. கல்லூரி மாணவர்கள் தலைமுறை தலைமுறையாக தங்களது கலாட்டாக்களுக்கேற்ற பழமொழிகளை புதுப்பிக்கிறார்கள். அவை அந்தந்த கால இளையோரது மன ஓட்டத்தை பிரதிபலிக்கிறது. பணம் குறித்த அஜித்தின் கர்ஜனை முழக்கம் வாக்கியமென்ற வகையில் சாதாரணமாக இருந்தாலும் வாழ்க்கை என்ற வகையில் முக்கியமான ஒன்று.

ஹாலிவுட்டில் கொள்ளை, திருட்டு குறித்து ஏராளமான படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் சில மங்காத்தா எனும் மசாலாவை விட காத்திரமான முறையில் அழுத்தமாக வந்திருக்கின்றன. தமிழ் இயக்குநர்கள் சுட்டுப் படமெடுப்பது தினசரி குடிக்கும் சரக்கு போல சாதாரணம் என்றாலும் இயக்குநர் வெங்கட் காலத்துக்கேற்ற கதைக்களத்தினையும், உணர்ச்சியையும் மீட்டிருக்கிறார் என்பதே முக்கியமானது. அந்தக் காலம் எது?

அண்ணா ஹசாரே திகார் சிறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது டைம்ஸ் நௌ தனது பிரச்சாரத்தினை சூடு பறக்க ஆரம்பித்திருந்த நேரம். அப்போது டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்படித்த செய்தி ஒன்று. ஹாங்காங்கில் இருக்கும் மார்கன் ஸ்டான்லி எனும் நிதி மூலதன ஆலோசனை நிறுவனத்தின் உயர் பதவியில் இருக்கும் சேட்டு அம்பி ஒருவன் இந்த இரண்டாவது சுதந்திரப் போராட்டத்திற்காக விடுமுறை எடுத்துக் கொண்டு மும்பை வந்து சேர்கிறான். இந்தியாவில் இருக்கும் போது வருமானவரியை ஏமாற்றியதையெல்லாம் ஹாங்காங்கில் தன்னால் நினைத்துப் பார்க்க முடியாது என்று கூறுபவன் அது போன்று இந்தியாவிலும் வரவேண்டுமென்று இந்த போராட்டத்தில் பங்கேற்பதாக கூறுகிறான்.

மார்கன் ஸ்டான்லி எனும் நிதி மூலதன ஆலோசனை நிறுவனம் பங்குச் சந்தை சூதாட்டங்களையே தொழிலாக கொண்டு நடத்தப்படும் நிறுவனம். தனியார் மயத்திற்காக பொதுத்துறைகளை விற்க வேண்டுமென்பதையே தொழில் முறை ஆலோசனைகளாக அமல்படுத்தும் நிறுவனம். இப்படி சூதாட்டத்தையே தொழிலாகக் கொண்டு வாழும் அந்த சேட்டுப்பையன் இங்கே ஊழலை எதிர்க்கிறான் என்பதை என்னவென்று சொல்வீர்கள்? இதுதான் இந்தக் காலத்தின் உணர்ச்சி என்றால் ஏற்பீர்களா?

ஹாலிவுட்டின் கொள்ளையடிக்கும் படங்கள் ராபின் ஹூட்டில் துவங்கி ஒரு நீண்ட மரபினைக் கொண்டிருக்கிறது. திருட்டின் மீது மக்களுக்கு ஒரு கவர்ச்சி இருக்கக் காரணம் சொத்துடமையின் ஏற்றத்தாழ்வான சமூக யதார்த்தம்தான். நேர்மையாக வாழ்ந்து அரை வயிற்றுக் கஞ்சி குடிக்கும் எளியோரும் தாம் அதிகம் பணம் சம்பாதிப்பதை ஒரு கனவாகவோ, இல்லை சினிமாவாகவோ நினைத்துப் பார்த்து மகிழ்வதை நாம் புரிந்து கொள்வது கடினமல்ல. அநீதியான இந்த சமூக அமைப்பு தான் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு ஆயிரம் தடைகள் ஏற்படுத்தியிருக்கும் போது அந்த தடைகளை ஒரு கொள்ளையன் தகர்த்தெறிவதை மக்கள் விரும்பாமலில்லை.

ஆனால் இந்த விருப்பம், கனவு வர்க்க ரீதியாக மேலே செல்லச் செல்ல வேறு பரிமாணத்தை எடுக்கிறது. பசையான சம்பளத்துடன் வாழும் படித்த நடுத்தர வர்க்கம் இந்தக் கனவினை நனவாக்க பங்குச் சந்தை, சிட் பண்ட், தங்க முதலீடு, ரியல் எஸ்டேட் என்று தன்முன் விரிந்திருக்கும் ராஜபாட்டையில் வேகமாக ஒடுவதற்கு விரும்புகிறது. சொந்த வீடு, சில பல இலட்சங்களில் வாரிசுகளுக்கு இன்ஜினியர், மருத்தவர் சீட், தொடர்ந்து விலையேறும் நிலம் எல்லாம் அவர்களுக்கு இருந்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தங்கள். தனது அலுவலகத்திற்கு வாங்க வேண்டிய ஸ்டேசனரி பொருட்களுக்காக கமிஷன் வாங்கும் தனியார் நிறுவன அதிகாரியோ, தனியார் நிறுவனங்களை கவனிப்பதற்காக லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரியோ இப்படித்தான் ஓடுகிறார்கள். ஊழலின் ஊற்று மூலம் முதலாளித்துவம் என்றாலும் ஊழலின் சமூக அடிப்படை இவர்களைக் கொண்டே தன்னை நியாயப்படுத்திக் கொள்கிறது. கூடவே இவர்கள்தான் ஊழல் ஒழிப்பிற்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். எனில் இது என்ன வகை முரண்?

படத்தில் அஜித்து புகை பிடிப்பதிலும், குடிப்பதிலும் அப்படியே கிழக்கு மகாபலிபுரம் சாலையின் வார இறுதிக் கொண்டாட்டத்தினை நினைவுபடுத்துகிறார். மகாபலிபுரம் செல்ல முடியாதவர்கள் டாஸ்மாக்கை மொய்க்கிறார்கள். அன்றாடம் அளவாகவோ, அளவு கடந்தோ, வார இறுதியில் அசுரத்தனமாகவோ குடிக்க வேண்டுமென்றால் வாழ்க்கையை இன்பமென பருகி நுகர பல்வேறு பொருட்களும், வசதிகளும், ஆடம்பரங்களும், சேவைகளும் வேண்டும். அவற்றை அடைய குறுக்கு வழியில் பணம். பணத்தை அடைந்தால் கொண்டாட மது.

மங்காத்தா படத்தை இரசிப்பவர்களெல்லாம் உடனே திருடி சம்பாதித்து கொண்டாடப் போகிறவர்கள் அல்லதான். ஆனால் அப்படி திருடாவிட்டாலும் ஏதாகிலும் குறுக்கு வழியில் பணம் வரவேண்டும் என்ற விருப்பமுடையவர்கள். இப்படி பொங்கி வழியும் நுகர்வுக் கலாச்சார மதத்தின் ஒரே கடவுளான பணத்தை அதை சம்பாதிப்பதை அல்லது கொள்ளையடிப்பதை ஒரு தேர்ந்த ரசனையுடன், திறமையுடன், வெறியுடன் செய்யும் அஜித்தின் காட்சிகளில் இரசிகர்களின் மனம் அவர்களையறியாமலேயே ஒன்றுகிறது. அந்த மாபெரும் பணம் என்ற உணர்ச்சிதான் காதலை கத்திரிக்காய் போல தூக்கி எறிவதை ஏற்றுக் கொள்கிறது. படித்த நடுத்தர வர்க்கத்தின் சமூக உணர்ச்சி இந்தப் பணத்தோடு தொடர்புடையது என்பதை யார் மறுக்க முடியும்? பணத்திற்காக வெறி கொண்டவனாக அஜித் கத்தும் முகபாவனைகளும், வீடியோ கேமில் வென்றே ஆக வேண்டுமென்று ஒரு மேட்டுக்குடி சிறுவன் காட்டும் வன்முறை முகபாவனைகளும் வேறு வேறு அல்ல.

அண்ணா ஹசாரேவுக்காக சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்திய படங்கள் வெளியாகியிருந்தன. படத்தில் ஐ.ஐ.டி கோல்டு மெடலிஸ்ட்டாக வரும் பிரேம்ஜி கொள்ளையடிப்பதற்கான சாப்ட்வேர் வேலைகளை திறமையுடன் செய்கிறார். 65.000 ரூபாய் சம்பளத்தில் பெங்களூரு போக வேண்டியவர் இங்கே நூறு கோடி சம்பாதிப்பதற்கு வாய்ப்பிருப்பதை ஒரு கேரியர் முன்னேற்றமாக எடுத்துக் கொள்கிறார், பேசுகிறார். நிஜத்தில் இந்தியாவில் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்மில் படித்துவிட்டு நாசாவில் உலகநாடுகளை ஒழிப்பதற்கு வேலை செய்பவர்களும், கோல்டு மேன் சாசில் கள்ளக்கணக்கு எழுதுபவர்களும் சொல்லும் சலித்துப்போன விசயம் என்ன? “இந்தியாவில் தகுதி, திறமைகளுக்கு வாய்ப்பில்லை, எங்கள் திறமைகளுக்கு மதிப்பளிப்பது அமெரிக்காதான்”. ஆனால் இந்த பச்சையான தேச துரோகிகள் அமெரிக்காவிலும் அண்ணா ஹசாரேவுக்காக போராடாமல் இல்லை. இது முரணா, இல்லை முரணை மறைக்கும் மயக்கமா ?

ஐ.ஐ.டி மாணவர்களை இயக்குநர் வெங்கட் பிரபு இழிவுபடுத்தி விட்டதாக அவர்கள் யாரும் சண்டைக்கு வரப்போவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை இப்படி ‘சாகசங்கள்’ செய்து பணம் அள்ளுவது ஒரு தவறல்ல. ஆனால் ஒரு தலித் மாணவன் அங்கே நுழைந்தால் கோட்டா என்று கேலிசெய்வதும், இந்தியாவில் மெரிட்டுக்கு மதிப்பில்லை என்று போராடவும் செய்வார்கள். இவர்கள்தான் அண்ணா ஹசாரேவின் போர்ப்படைத் தளபதிகள் எனில் இந்தப் போர் யாரை எதிர்த்து?

அஜித், அர்ஜூன் இருவரும் ஆந்திர கேடரைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரிகள். 500 கோடியைக் கொள்ளையடிக்க ஒருவர் போலீசு துறையின் உள்ளேயும், ஒருவர் வெளியேயும் வேலை செய்கிறார்கள். அதிலும் அர்ஜூன் குடியரசுத் தலைவரின் நேரடி அதிகாரம் பெற்ற சூப்பர் போலீசு. இதுவரை அர்ஜூன் எத்தனை தேசபக்திப்படங்களில் சூப்பர் காப்பாக நடித்திருக்கிறார், எத்தனை பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை கொன்றிருப்பார், தீவிரவாதிகளின் அபாயத்திலிருந்து எத்தனை முறை தேசத்தையும், பிரதமரையும் காப்பாற்றியிருப்பார்? அத்தகைய டிரிபிள் எக்ஸ்-எல் தேசபக்தி எக்ஸ்பர்ட் இங்கே ஒரு அல்ட்ரா மாடர்ன் கொள்ளையின் சூத்திரதாரி என்றால்?

எனில் அர்ஜூனும் தனது இமேஜைத் துறந்து விட்டார் என்று பொருளா? இல்லை. ஒருவேளை இந்தப்படத்தில் அவரை ஐ.எஸ்.ஐ உளவாளியாக நடிக்க கேட்டிருந்தால் நிச்சயம் மறுத்திருப்பார். ஏனெனில் பாக்கிஸ்தானை ஆதரிப்பதுதான் தேச துரோகமே அன்றி பணத்தை குறுக்கு வழியில் சம்பாதிப்பது அல்ல. இப்போது யாரும் திகார் சிறையில் ஊழல் வழக்களுக்காக சிறை வைக்கப்பட்டிருக்கும் அரசியல் வாதிகள், அதிகாரிகளை அப்படி கசாப் போன்று தேசவிரோதிகளாக கருதவில்லையே?

போலீசு அதிகாரிகளின் கடமை, நேர்மைகளைப் பற்றி விடாது பேசி பொளந்து கட்டும் நம்ம ஆக்ஷன் கிங்கை இப்படி பீரோ புல்லிங கொள்ளையன் போல இல்லாமல் கொஞ்சம் மாடர்னாக காட்டியிருந்தாலும் இதற்காகவே இயக்குநருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் சி.பி.ஐ டயரிக் குறிப்பு துவங்கி, விஐயகாந்த் வரை இவர்கள் போலீசுக்கு போற்றிப் பாடிய தூபங்களையெல்லாம் மங்காத்தா அடித்துக் காலி செய்திருக்கிறது. எனினும் XXXL  தேசபக்தி அர்ஜூன் இமேஜ் ஆத்மா சாந்தியடையும் வண்ணம் செட்டியாரின் அடியாளாக முசுலீம் அடையாளத்துடன் வரும் நடிகர் பின்னர் நால்வர் கும்பலைச் சேர்ந்த திருட்டு போலீஸ் இன்ஸ்பெக்டரால்  கொல்லப்படுவது படத்தில் இருக்கிறது.

ஆனாலும் பணத்தை காலம் அளிக்கும் தருணத்தில் கைப்பற்றும் வாய்ப்பை யாரும் இழக்கக் கூடாது என்பது ஒரு சமூக உணர்ச்சியாக கோலேச்சும் காலத்தில் இந்த நல்ல அதிகாரி இமேஜ் மாறியிருப்பது குறித்து இரசிகர்கள் அவ்வளவாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. திருட்டு வேறு, தீவிரவாதம் வேறு என்ற லாஜிக்படியும் அது அப்படித்தான் இருக்கிறது.

வார நாட்களில் கடுமையாக ‘உழைத்து, சிந்தித்து’ பணத்தை திருடி விட்டு வார இறுதியில் குடியும் கூத்துமாக கொண்டாடலாம் என்பதே மங்காத்தா நமக்குச் சொல்லும் நீதி. ஒரு மசாலா படத்துக்கு இவ்வளவு வலிந்து கட்டி விமரிசனமா என்று பலர் ஐயுறலாம். ஆனால் மங்காத்தாவின் கதை தற்செயலாக எடுக்கப்பட்டிருப்பினும் அது ஜஸ்ட் லைக் தட் கடந்து செல்லும் கதையாக இருப்பினும், அது ஆங்காங்கே இயல்பாக தெரிவிக்கும் வாழ்க்கை குறித்த யதார்த்தங்கள் நமக்கு முக்கியமானவை. அதை முற்றும் உணர வேண்டுமென்றால் சமகால இந்தியாவின் அரசியல், பொருளாதார, சமூக யதார்த்தத்தினை புரிந்திருக்க வேண்டும்.

மங்காத்தா படத்தை அழகிரி மகன் தயாரித்திருந்தாலும் சில ‘பிரச்சினைகள்’ காரணமாக சில சுற்றுக்களுக்குப் பின்னர் சன்.டி.வியால் வெளியிடப்பட்டிருக்கிறது. மங்காத்தா படம் ஏன் இப்படி ஓடுகிறது என்ற காரணம் தெரியாத இயக்குநர் வெங்கட் பிரபு திருப்பதி சென்று மொட்டை அடித்திருக்கிறார். கருப்புப் பணத்தை காணிக்கையாக அள்ளும் கடவுளுக்கு அவர் பக்தராக இருப்பதும் பொருத்தமானதுதான். ஆனால் தான் ஒரு மொக்கை, தன் படமும் ஒரு மொக்கை என்பதில் அவருக்கு கருத்து வேறுபாடு இருக்காது. இருப்பினும் வரலாற்றின் சில காட்சிகளில் மொக்கைகள் கூட அறிந்தோ அறியாமலோ இப்படி ஒரு படத்தை தரலாம். இது அவர்களது அறிவு குறித்த பிரச்சினை அல்ல, அவர்களின் சமூக உணர்வு அல்லது ட்ரெண்ட் குறித்த எச்சரிக்கை உணர்வு என்றும் சொல்லலாம்.

படத்தில் கிரிக்கெட் சூதாடிகளை அர்ஜூன் குழுவினர் பிடிக்கும் செய்திகள் காட்டப்படும் போது அருகில் அண்ணா ஹசாரேவின் போராட்டச் செய்திகளும் காட்டப்படுகின்றன. ராமலீலா போராட்டத்திற்கு முன்னரேயே மங்காத்தா படம் எடுக்கப்பட்டிருப்பினும், போஸ்ட் புரடக்ஷனில் சென்சேஷன் கருதி படக்குழுவினர் இதை சேர்த்திருக்கிறார்கள். எனினும் இரண்டும் ஒன்றுதான் என்று இயக்குநர் காட்ட முனைந்திருப்பார் போலும். உண்மைதான். நாமும் அதைத்தான் சொல்கிறோம்.

அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் மெழுகுவர்த்தி பிடித்த கையோடு அடுத்த நாள் மங்காத்தாவை முதல் காட்சிக்கு சென்று இரசிக்க முடியுமென்றால் இரண்டில் எது உண்மை? முன்னது ஒரு தர்ம சேவை வீக் எண்ட் என்றால் பின்னது பொழுது போக்கு வீக் எண்ட் என்றும் சொல்லாம். முன்னது அவர்களின் அரசியல் பார்வை என்றால் பின்னது அவர்களின் கலைப்பார்வை என்றும் சொல்லலாம். அதனால்தான் அண்ணா ஹசாரேவின் அரசியலுக்கு பொருத்தமான கலை உணர்ச்சி மங்காத்தாவில்தான் வெளிப்படுகிறது என்பதை நாம் உறுதியாகச் சொல்கிறோம். ஊழல் எதிர்ப்பும் ஒரு ஃபேஷன், பணம் சம்பாதிப்பதும் ஒரு பேஷன். முன்னது நாட்டுக்காக, பின்னது தனக்காக.

இதற்கு மேலும் புரியாதவர்களுக்குத்தான் இந்தத் தலைப்பு:

அண்ணா ஹசாரேவை என்கவுண்டர் செய்த ‘தல’ யின் மங்காத்தா!

அல்லது

IF I AM ANNA, I AM MANKATHA TOO !

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்