privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்சங்கரசுப்பு மகன் படுகொலை: கொலைகாரர்களை பாதுகாக்கும் போலீசு, சி.பி.ஐ!

சங்கரசுப்பு மகன் படுகொலை: கொலைகாரர்களை பாதுகாக்கும் போலீசு, சி.பி.ஐ!

-

சதீஷ் குமார்

சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்  சங்கரசுப்புவின் மகன் சதீஷ்குமார்  படுகொலை வழக்கினை உயர்நீமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்திரவிட்டு 3 மாதங்கள் கடந்துவிட்டன. சிபிஐ இவ்விசாரணையில் காட்டும் அலட்சியத்தை உயர்நீதிமன்றத்தில் ஒவ்வொரு விசாரணையின் போதும் வழக்குரைஞர் சங்கரசுப்பு சுட்டிக்காட்டியும், வாய்தா வாங்குவதில்தான் சிபிஐ தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது. காவல்துறை ஆய்வாளர் சுரேஷ்பாபு இக்கொலையை தற்கொலையென திரிக்க முயன்றதற்கான ஆதாரங்கள் இருந்தும், அவரை சிபிஐ கைது செய்து விசாரிக்காமல் இருப்பதும், தமிழக அரசு அவரை பணிநீக்கம் செய்யாமல் இருப்பதும், சதீஷ்குமார் படுகொலையின் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் போகும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

கடந்த 2011, ஜுன் 7 அன்று காணாமல் போன சதீஷ்குமாரை கண்டுபிடித்து தர மறுநாளே சங்கரசுப்பு புகார் அளித்தார். சதீஷ்குமார் காணாமல் போய் 2 நாட்களுக்குப் பின் அவருடைய பைக் மற்றும் செல்போன் ஐசிஎப் குளம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட பிறகும் காவல்துறை அலட்சியமாக விசாரிப்பதை உணர்ந்த வழக்குரைஞர் சங்கரசுப்பு உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு நீதிப்பேராணை மனு தாக்கல் செய்தார். நீதிமன்றம் சதீஷ்குமார் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஐசிஎப் குளத்தில் தேட உத்தரவிட்டது. போலீசோ ஒப்புக்குத்தான் குளத்தில் தேடியது.

மக்கள் தொலைக்காட்சி நிருபர்தான் சதீஷ்குமாரின் உடலை அக்குளத்தில் இருந்து கண்டுபிடித்துக் கூறினார். உடலைப் பார்த்த உடனேயே அவர் கொடூரமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்டிருக்கிறார் என்பது தெரிய வந்தது. விரல் நகங்கள் பிடுங்கப்பட்டும், சுண்டுவிரல் துண்டிக்கப்பட்டும், கூரான ஆயுதங்களால் உடலெங்கும் கொடூரமாக தாக்கப்பட்ட காயங்களுடன் உடல் கிடைத்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்து அறுக்கப்பட்டு சதீஷ்குமார் கொலை செய்யப்பட்டார் என்பது நிரூபணமானது. பிரேத பரிசோதனை அறிக்கையை மறு ஆய்வு செய்து இது கொலை என்பதை சிபிஐயும் உறுதிப்படுத்தியது.

திருமங்கலம் காவல் ஆய்வாளர் (சட்டம்-ஒழுங்கு) நஸீர் 28.5.2011 அன்று அஜ்மீர்  தர்காவிற்கு செல்வதாக 2 வாரம் விடுப்பில் சென்றதும், அந்த பொறுப்பை கூடுதலாக கவனித்துக் கொள்ள குற்றப் பின்னணி கொண்ட சுரேஷ்பாபுவை நியமித்ததும் சதீஷ்குமாரின் கொலையை திட்டமிட்டு நடத்திவிட்டார்களோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. காவல்துறை அணுகுமுறையின் மூலம் குற்றவாளிகளை தொடர்ந்து காப்பதற்கு அவர்கள் செயல்பட்டது அம்பலமாகி இருக்கிறது.

கொலையை தற்கொலையாக்க காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு மற்றும் காவல் துறையின் முயற்சிகள்:

  • சதீஷ்குமார்  செல்போன் அணைக்கப்படாமல் இருந்தும், அது எங்கிருக்கிறது என கண்டுபிடிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  • சதீஷ்குமாரின் பைக் மற்றும் செல்போன் ஐசிஎப் குளம் அருகில் கிடைத்த பின்பும் அங்கு முழுமையாக தேடாமல் தவிர்த்துள்ளனர். போலீசு மோப்ப நாய் மூலம் புலன் விசாரணை செய்வதையும் வேண்டுமென்றே தவிர்த்துள்ளனர்.
  • உடல் பலர் முன்னிலையில் கண்டெடுக்கப்பட்டு பரிசோதித்த போது கிடைக்காத பிளேடு துண்டுகளை சதீஷ்குமாரின் சட்டைப்பையில் இருந்து எடுத்ததாக முன்தேதியிட்ட பிரேத விசாரணை அறிக்கை காவல்துறை ஆய்வாளர் சுரேஷ்பாபுவால் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • உடல் கிடைத்த இடத்திலேயே பிரேத விசாரணை அறிக்கை எழுத வலியுறுத்தியும் தவிர்த்துவிட்டு, அதிகாலை 4 மணிவரை இரு வழக்குரைஞர்களை காவல்நிலையத்தில் காத்திருக்க வைத்தும் தயாரிக்காமல், காலை 10 மணியளவில் வருமாறு கூறி அவர்களை அனுப்பிவிட்டு, அவர்கள் வருவதற்கு முன்பாகவே வேறு இருவரிடம் சாட்சி கையொப்பம் பெற்று அறிக்கையை முன்தேதியிட்டு தயாரித்துள்ளார் சுரேஷ்பாபு.
  • பிளேடுகளை எப்போது சட்டைப் பையில் இருந்து எடுத்தீர்கள் என வினவியபோது பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் ஒருவர் கொடுத்தார் என முதலில் கூறிய சுரேசு பாபு, அம்மருத்துவர் அதனை மறுத்தபோது யாரோ ஒரு வழக்குரைஞர் கொடுத்தார் என முன்னுக்கு பின் முரணாக கூறியிருக்கிறார்.
  • சதீஷ்குமார் தற்கொலை மனோபாவம் உடையவர் என மருத்துவரிடம் சான்றிதழ் பெற சுரேஷ்பாபு முயற்சித்துள்ளார்.
  • சிபிஐக்கு வழக்கினை மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் முன்தேதியிட்ட பிரேத விசாரணை அறிக்கையை எழும்பூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் சுரேஷ்பாபு தாக்கல் செய்துள்ளார்.
  •   உடலில் வெளிக்காயங்கள் இல்லையென காவல்துறை துணை ஆணையாளர் தாமரைக்கண்ணன் கூறியதாக நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

மேற்கூறியவைகளை பிரமாண வாக்குமூலமாகவும், விசாரணையின் போது வாதங்கள் மூலமாகவும் வழக்குரைஞர் சங்கரசுப்பு சுட்டிக்காட்டி சுரேசுபாபுவை கைது செய்து விசாரிக்க உத்தரவிடக் கோரிய பிறகும், உயர்நீதிமன்றம் சந்தேகப்படுபவர்களை கைதுசெய்து விசாரிக்க உத்தரவிட்ட பின்பும் சிபிஐ இதுவரை சுரேஷ்பாபுவை கைது செய்ய நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

சிபிஐ-யின் பொறுப்பற்ற அலட்சியம்:

உயர்நீதிமன்றத்தில் ஒவ்வொரு முறையும் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்னால் சிபிஐ ஏதாவது ஒரு செய்தியை ஊடகங்களில் கசிய விடுவதிலும், விசாரணையின் போது கால அவகாசம் பெறுவதிலும் திறம்பட செயல்படுகின்றது. “கொலை என உறுதி செய்துவிட்டோம், துப்பு கொடுப்பவருக்கு பரிசுத் தொகை அறிவித்துள்ளோம், சிபிஐ அதிகாரிகள் பலர் விசாரணை செய்கிறோம், போலீசு அதிகாரிகள் உட்பட பலரை விசாரித்து உள்ளோம், பலரை சந்தேகப்படுகிறோம்” என தனது ‘மாபெரும் நடவடிக்கைகளை’ முன்வைத்தபோது “இதில் இருந்து என்ன முடிவுக்கு வந்துள்ளீர்கள்” என நீதிபதிகள் வினவினால் “விசாரித்து வருகிறோம், கால அவகாசம் தாருங்கள்” என தலையை சொறிகின்றது சிபிஐ. கொலையை தற்கொலையாக்க முயன்ற சுரேஷ் பாபுவை காவலில் எடுத்து சரிவர நான்கு கேள்விகளைக் கேட்டாலே கொலைக்கான பின்னணியை அறிந்துவிட முடியும் என்ற நிலை இருந்தும், அதனை செய்யாமல் சிபிஐ தவிர்ப்பது யாரை பாதுகாக்க? சுரேஷ்பாபுவையா அல்லது பின்னால் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளையா? சதீஷ்குமார்  படுகொலையின் சூத்திரதாரியாக சுரேஷ்பாபு இருந்தாரா அல்லது படுகொலையை தற்கொலையாக்கி கொலையாளிகளை பாதுகாத்தாரா? என்பதுதான் கண்டறியப்படவேண்டிய விசயம். இப்படிப்பட்ட குற்றவாளியை கைது செய்து விசாரிக்காமல் சிபிஐ இழுத்தடிப்பது ஏன்?

சுரேசுபாபுவை தமிழக அரசு பாதுகாப்பதன் பின்னணி:

மதுரையில் குற்ற கும்பல்களுக்கு இடையிலான மோதலில் தனது அண்ணன் எதிர்க்குழுவால் கொலை செய்யப்பட்டார் என்பதற்காக பழிக்கு பழியாக ஆட்களை ஏவி கொலை செய்ததில் குற்றவாளிகளில் ஒருவராக சேர்க்கப்பட்டு, சந்தேகத்தின் பலனில் சிறையில் இருந்து வெளியே வந்தவர் தான் இந்த சுரேஷ்பாபு. இவ்வழக்கில் போலியாக சிலரை வழக்கில் சேர்த்து தப்பிக்க முயற்சித்து, பின்னர் மாட்டியிருக்கிறார். சிறையில் இருந்தபோது குற்றவாளிகளோடு மேலும் நெருக்கமாகி குற்றவாளிகளின் வலைப்பின்னல் உள்ளவர். சதீஷ்குமார் வழக்கில் சிபிஐ சந்தேகப்பட்டு காவலில் எடுக்க உள்ளதாக ஊடகங்களில் வெளிவந்த கட்டை ராஜா எனும் கூலிப்படை கொலையாளி சுரேஷ்பாபுவோடு அதே சிறையில் இருந்ததாக கூறப்படுகின்றது. சுந்தேகத்தின் பலன் காரணமாக கொலை வழக்கில் இருந்து தப்பித்த ஒருவர் காவல் ஆய்வாளராக பணிபுரிய முடிகிறது என்றால் அவர் எவ்வளவு தூரம் உயரதிகாரிகளிடம் செல்வாக்கு உள்ளவராக இருக்க வேண்டும்!

மேலும் வழக்குரைஞர் சங்கரசுப்பு தனது மகன் கொலையில் காவல் ஆய்வாளர்கள் கண்ணன் மற்றும் ரியாசுதீனை சந்தேகப்படுவதாகவும் அவர்களால் சட்டவிரோதமான காவலில் வைத்து பணம் பறிக்கப்ட்ட ஒருவருக்காக தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி அவர்கள் இருவர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு பெற்றதால் அவர்களை சந்தேகிப்பதாகவும் அவர்களை விசாரிக்க வேண்டுமென்றும் புகார் கொடுத்திருந்தார். அதேபோல வழக்குரைஞர் சங்கரசுப்பு தனது கட்சிகாரார் நிலத்தகராறு தொடர்பான பிரச்சினைக்காக, டிஐஜி ஜாங்கிட்டின் சொத்துக்கள் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தில் தகவல் பெறுவதற்காக வழக்கு தொடர்ந்துள்ளார். பொதுவாகவே வழக்குரைஞர் சங்கரசுப்பு காவல்துறையின் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக பல வழக்குகளில் வழக்காடியிருக்கிறார். அரசு அடக்குமுறை வழக்குளில் புரட்சிகர, தமிழ்தேசிய, ஒடுக்கப்பட்டோர் அமைப்புகளுக்காக சமரசமின்றி நீதிமன்றத்திலும், களத்திலும் போராடக்கூடியவர்.

சதீஷ்குமார் படுகொலையில் காவல்துறையின் பங்கு வெளிவந்துவிடக்கூடாது என்பது மட்டுமல்ல தமிழக அரசின் பிரச்சினை. சுரேஷ்பாபு போன்ற கிரிமினல் அதிகாரிகளை உருவாக்குவதும், அவர்களை பாதுகாப்பதும் அரசின் தேவையாக உள்ளது. பிப்ரவரி 19, 2009 உயர்நீதிமன்றத் தாக்குதல், பரமக்குடி துப்பாக்கிக்சூடு… என இன்னும் பல நிகழ்வுகளில் ஆட்சிகள் மாறினாலும் காவல்துறை அதிகாரிகளை பாதுகாப்பதில் அரசின் நிலையோ மாறுவதில்லை.

சதீஷ்குமார்  படுகொலைக்கு உடனே நீதிபெறப் போராடுவோம்!

சதீஷ்குமார் படுகொலை விசாரணையில் இக்கட்டத்தில் உள்ள ஒரே துருப்பு சீட்டு சுரேசுபாபுதான். சுரேசுபாபு கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால்தான் கொலைக்கான பின்னணி தெரியவரும். இதனை சிபிஐ தானாக செய்யும் என நாம் காத்திருப்பது மடத்தனம். தனது மகனின் கோரமான படுகொலைக்கு நீதிபெற வழக்குரைஞர் சங்கரசுப்புவும் அவரது குடும்பத்தினரும் போராடி வருகின்றனர். சுரேசுபாபுவை கைது செய்து விசாரிப்பதற்கான ஆதாரங்களை சுயமாகத் திரட்டி சிபிஐக்கு தந்துள்ளார் வழக்குரைஞார் சங்ரசுப்பு. ஆனால் காக்கி உடை குற்றவாளி சுரேசுபாபுவோ தமிழக அரசின் பாதுகாப்பில், உயரதிகாரிகளின் அரவணைப்பில் கும்பகோணம் அருகில் உள்ள திருப்பனந்தாளில் காவல் ஆய்வாளராக சுதந்திரமாக உலவி வருகிறார். கோரமான படுகொலையில் தனது மகனை இழந்த வழக்குரைஞர் சங்கரசுப்புவிற்கு தேவை நம் அனுதாபம் அல்ல. அவரது நீதிக்கான போராட்டத்திற்கு நாம் உறுதுணையாக இருப்பதும், போராடுவதுமே தேவை. இல்லையேல் மக்கள் நலனுக்காக உறுதியுடனும், இழப்புக்களுடனும் போராடும் இத்தகைய வழக்கறிஞர்கள் இல்லாமல் போய்விடுவார்கள். அவர்களை பாதுகாப்பது நம் கடமை. ஆதரவு தாருங்கள்!

___________________________________________________________

மனித உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னைக் கிளை.

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

வழக்குரைஞர் சங்கரசுப்பு மகன் கொலை: போலீசு கொடூரம்!

  1. மிகக் கொடூரமான படுகொலை.கொலையாளிகள் கட்டாயமாக தண்டிக்கப் படவேண்டும்

  2. காவல்துறையில் உள்ள குற்றவாளிகளை அரசு பாதுகாக்கிறது! நமக்காக போராடுபவர்களை நாம் தாம் பாதுக்காக்கவேண்டும். மக்கள் மன்றங்களில் தொடர்ச்சியாக அரசையும், காவல்துறையும் தொடர்ச்சியாக அம்பலபடுத்தவேண்டும். போராட்டங்களை எடுக்க வேண்டும்.

    இந்த வழக்கில் சி.பி.ஐ. சிரிப்பு போலீசு என குறைத்து மதிப்பிட்டமுடியாது. அவர்களும் குற்றவாளிக்கு உடந்தையாக இருக்கிறார்கள்.

  3. ஆளுவதோ,அதிகார வர்க்கமும் போலீசும்தான்என்பது ஒவ்வொரு சம்பவத்திலும் நிருபனமாகிக் கொண்டு வருகிறது.நாம் இப்போது போராடாவிட்டால் எப்போதும் என்ன
    செய்தாலும் போராடா முடியாது போலிருக்கே! என்ன செய்வது நல்லவர்கள் கொஞசப்பேர்
    கள்தான் அவர்களை காப்பது நம்கடமை. மனிதனின் கடமை.

  4. காவல்துறையின் சட்டம்-ஒழுங்குப் பிரிவு அரசின் கட்டுப்பாட்டில் இருந்து உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும்.

  5. நேற்று உயர் நீதிமன்றம், CBI காட்டும் ”நிதானத்தை” கண்டித்து CBI இயக்குனரையே கோர்ட்டில் ஆஜராகச் சொல்லியிருக்கிறது.

Leave a Reply to BARATHI பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க