privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்ஆவுரித்துத் தின்னும் புலையரும் உரிக்காமல் விழுங்கிய புனிதரும்!

ஆவுரித்துத் தின்னும் புலையரும் உரிக்காமல் விழுங்கிய புனிதரும்!

-

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 9

”பசுவை கோமாதா என்றும், காமதேனு என்றும் வணங்குகிற புண்ணிய பாரத பூமியில் – அரசின் புள்ளி விவரப்படி ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடியே பதினேழு லட்சம் பசுக்கள் கொல்லப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் 29,500 பசுக்கள், எருதுகள் மற்றும் கன்றுக்குட்டிகள் படுகொலை செய்யப்படுகின்றன. ஒரு நிமிடத்திற்கு 20 கொலைகள் நடக்கின்றன. இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களாகவும், இந்த மண்ணின் மைந்தர்களாகவும் உள்ள இந்துக்களுக்கு இது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. நமது நாடு சுதந்திரம் அடைந்து 42 ஆண்டுகள் ஆகியும் இந்தப் படுகொலை நீடித்து வருவது ஏன்? பசுக்கொலை செய்பவர்களில் பெரும்பாலோர் முசுலீம்களாயிற்றே, பசுக்கொலையை நிறுத்தினால் அவர்கள் வாக்களிக்காமல் போய் விடுவார்களோ என்ற  அச்சத்தில் இந்த அட்டூழியத்தை அனுமதித்து வருகிறார்கள்.”

– ‘பசு வதைத் தடைச் சட்டம் ஏன்‘,  இந்து முன்னணி வெளியீடு பக்கம்1.

‘பசுவைக் கொல்வதென்பது நம்மால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத விசயம். ஆனால், துரதிருஷ்டவசமாக தமிழ்நாடு பாழாகிவருகிறது. தள்ளுவண்டியில் வைத்து பசுமாமிச பிரியாணி, பசுமாமிச பக்கோடா, பசுமாமிச சூப் என்று விற்கிறார்கள். யார் விற்கிறார்கள் என்று சொல்லத் தேவையில்லை. ஆனால், யார் வாங்கிச் சாப்பிடுகிறார்கள் – நமது இந்து இளைஞர்களே வாங்கிச் சாப்பிடுகிறார்கள். காரணம் அவர்களுக்குப் பசுவைச் சாப்பிடுவதும் தாயை வெட்டிச்சாப்பிடுவதும் ஒன்றுதான் என்பது தெரியவில்லை.

– ”இந்துக்களுக்கு உரிமை கிடையாதா?” – இந்து முன்னணி வெளியீடு. பக்கம்8

”பசுவைக்காப்போம்! பாரதம்காப்போம். கோயிலுக்குத் தானமாக வரும் பசுக்களைக் கசாப்புகடைகளுக்கு விற்பதைத் தடை செய்யக் கோரியும், பசுக்காப்பகம் அமைத்து பசுக்களைப் பராமரிக்க தமிழக அரசை வற்புறுத்தியும் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்.”

கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது  இந்து முன்னணியின் சுவரெழுத்து விளம்பரம்

 எதற்கும் உதவாத மாடுகள்தான் தற்போது இறைச்சிக்காகக் கொல்லப்படுகின்றன. கோவிலுக்குத் தானமாக வரும் மாடுகள் கசாப்புக் கடைக்குப் போகிறது என்பதின் பொருள் என்ன? அவை விவசாய வேலைக்குப் பயன்படாத, மடி வற்றிய, எலும்பும் தோலுமாக உள்ள மாடுகள் என்றுதானே பொருள்? பக்தர்களின் இத்தகைய மோசடிக்கு அரசாங்கம் என்ன செய்யும்?

இருப்பினும் பா.ஜ.க. கூட்டணியின் தமிழகத் தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஆரம்பித்த உழவர் சந்தைக்குப் பக்கத்திலேயே ஒரு பசு காப்பகம் வைத்திருக்கலாம். மேலும் ‘வயது’ காரணமாக சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறிவரும் கருணாநிதி இதையும் அனுதாபத்தோடு பரிசீலித்து நிறைவேற்றியிருக்கலாம். அதாவது கருப்புத்துண்டு அரசியலை மஞ்சள் துண்டு அரசியலாக மாற்றிய கலைஞரின் ‘முதிர்ச்சியை’ யாரும் புரிந்துகொள்ள முடியும். இனி ‘பசுக் கொலை’யைப் பரிசீலிப்போம்.

கவனியுங்கள், இந்து மதவெறியர்கள் பசுவைப் பற்றி மட்டும் கவலைப்படுகிறார்கள் என்றால் காளை மாடுகளைக் கொல்லலாமா? தமிழ் சினிமாவின் தாய்க்குல சென்டிமெண்டைப்போல, மாட்டிலும் பசுவை வைத்து அனுதாப அலை உருவாக்கும் தந்திரம் இது என்பது ஒருபுறமிருக்கட்டும். பசுவைக் கொல்பவருக்கு என்ன தண்டனை? எது கொடுப்பதாக இருந்தாலும் முதலில் இந்துமத வெறியர்களைத்தான் தண்டிக்க வேண்டும். வேத, இதிகாச, புராண உபநிடதங்கள், மனுஸ்மிருதி மற்றும் புத்த – சமண மத இலக்கியங்கள் அனைத்தும் பண்டைய ‘இந்துக்கள்’ மாட்டுக்கறி தின்னும் உலகளாவிய பழக்கத்தைக் கொண்டவர்களே என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன.

ரிக் வேத தெய்வமான இந்திரன் டன் கணக்கில் ‘பசு மாமிசம்’ விழுங்கியதாக பல சுலோகங்கள் தெரிவிக்கின்றன. இராமாயணம் எழுதிய வால்மீகி தனது ஆசிரம விருந்தினர்களுக்கு மாட்டுக்கறி விருந்தளிப்பது வழக்கம் என இராமாயணம் தெரிவிக்கின்றது. ‘கோமேத’ யாகத்தில் கொல்லப்படும் மாட்டின் பாகங்கள் பார்ப்பனப் பண்டாரங்களின் சமூக அந்தஸ்திற்கேற்பப் பங்கிடப்பட்டதாக நான்கு வேதங்களும் குறிப்பிடுகின்றன.

பிரம்மா பசுவைப் படைத்ததே வேள்வியில் கொல்லத்தான் என்று கூறும் மனுஸ்மிருதி, ‘உலக நன்மைக்காக வேள்வியில் கொல்லப்படும் பசுவை பிராமணன் உண்ணலாம்’ என்றும் தெரிவிக்கின்றது. அதிலும் யாக்ஞவல்கியர் எனும் உபநிடத முனிவர், கன்றுக்குட்டி இறைச்சியைப் பற்றி ஆனந்த விகடனின் சாப்பாட்டு ராமன்களைப் போல ரசனையுடன் விவரிக்கிறார். எனவே பசுவதையைத் தடை செய்யுமுன் அதைப் பிரச்சாரம் செய்யும் வேதம், புராணம், மனுஸ்மிருதி அனைத்தையும் தடை செய்ய வேண்டும்.

வேதகாலந்தொட்டு பாரப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்ட கோதானம், நடத்தப்பட்ட மாட்டுக்கறி வேள்விகளால் விவசாயமே சீர்குலையும் நிலை தோன்றியது. மக்களின் வாழ்வைப் பிணியாய் அரித்துத் தின்ற பார்ப்பனியத்தின் சடங்கு – வேள்விகளை எதிர்த்து அப்போது புத்த – சமண மதங்கள் எழுந்தன.

இம்மதங்களின் பார்ப்பன எதிர்ப்பும் – புலால் எதிர்ப்பும் மக்கள் ஆதரவு பெற்றதன் அடிப்படையும் அதுதான். பின்னர் இம்மதங்களைச் செரித்துக்கொண்ட பார்ப்பனியம் அவர்களது புலால் மறுப்புக் கொள்கையையும் திருடிக்கொண்டது. இருந்தாலும் இந்தியா முழுவதும் பார்ப்பன – மேல்சாதியினரிடையே ஒரே மாதிரியான சைவ உணவுப் பழக்கம் இன்றும் கிடையாது. காசுமீரப் பண்டிதர்கள், வங்கத்துப் பார்ப்பனர்கள், தக்காணப் பார்ப்பனர்கள் போன்றோர் புலால் உணவுப் பழக்கத்தைக் கொண்டவர்கள்தான். புத்தர், மகாவீரரின் முயற்சியால் பார்ப்பனர்களிடமிருந்து மாடுகள் காப்பாற்றப்பட்ட பின்பே பார்ப்பனிய இலக்கியங்கள் புலால் மறுப்பை ஏற்றுக்கொண்டு கறியின் மேல் துவேசத்தையும் பிரச்சாரம் செய்தன. அதற்கும் காரணம் உண்டு.

சாதிப் படிநிலைக்கு வெளியேயும், ஊருக்குப் புறத்தேயும் இருந்த பஞ்சமர்கள், செத்த மாட்டைத் தின்பதற்கும், புதைப்பதற்கும் பார்ப்பனியத்தால் பணிக்கப்பட்டனர். இதை வைத்தே தாழ்த்தப்பட்ட மக்கள் பிறப்பிலும் தொழிலிலும் இழிவானவர்கள் என்பதை பார்ப்பனியம் இன்றுவரை பிரச்சாரம் செய்து வருகிறது. ”ஆவுரித்துத் தின்னும் புலையர்” என்று தாழ்த்தப்பட்டோரை இழிவுபடுத்துகிறது தேவாரம்.

இப்படி தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான அடக்குமுறைக்குப் பயன்பட்ட மாடு தற்போது முசுலீம் எதிர்ப்புக்கும் பயன்படுகிறது. இந்நூற்றாண்டின் ஆரம்பத்தல் இந்து மத தேசியத்தை உருவாக்க முனைந்த மதவாதிகள்தான் பசுவுக்கு ஒளிவட்டம் போட்டு பசுவதையைத் தடைசெய்ய வேண்டும் எனப் பேச ஆரம்பித்தார்கள். வெள்ளையர்களிடம் அதிகாரமிழந்த மராத்திய சித்பவனப் பார்ப்பனர்களே இதைத் துவக்கினர்.

முசுலீம்கள் மீதான துவேசத்துடன் இந்து மதத்தையும், ஆங்கிலேய எதிர்ப்பையும் உருவாக்க முனைந்த திலகர்தான் மாட்டுப் பிரச்சினைக்கும் பிள்ளையார் சுழி போட்டார். சிவாஜி வழிபாடு, விநாயகர் ஊர்வலம் போன்றவையும் திலகரின் கைங்கரியங்கள்தான் என்பதை வாசகர்கள் அறிந்திருக்கலாம். அயோத்தி தொடங்கி பசுவதை வரை இந்து முசுலீம் பிரிவினையை வரவேற்ற வெள்ளையர்களும் இத்தகைய போக்குகளை ஊக்குவித்தார்கள். அதன்பின் வட இந்திய நகரங்களில் ‘இந்துக்களின் புனிதச் சின்னமான பசுவை முசுலீம்கள் கொன்று கோவிலில் வீசினார்கள்’ என்ற வதந்தியினால் மட்டும் பல கலவரங்கள் நடந்திருக்கின்றன. பிரிவினைக்குப் பின் 60-களில் சங்கபரிவார வானரங்கள் நடத்திய பசுவதை எதிர்ப்பு இயக்கத்தின் போதும் ஏராளமான கலவரங்கள் நடந்தன.

மாட்டுத் தலையை வைத்து ஆர்.எஸ்.எஸ். கொன்ற மனிதத் தலைகள்தான் இந்நாட்டின் மாபெரும் அவமானம். கேவலம் மாட்டிற்காக முதலைக்கண்ணீர் வடிக்கும் இந்து மத வெறியர்கள்தான், ஆயிரக்கணக்காக முசுலீம்களின் உதிரத்தைக் குடித்தவர்கள் என்பது வரலாறு.

ஆர்.எஸ்.எஸ்-இன் கலவரப்பட்டியலில் மட்டுமல்ல, அரசியல் சட்டத்தின் வழிகாட்டும் கோட்பாட்டிலும் பசுவதையைத் தடை செய்ய வேண்டுமெனக் கூறியிருக்கிறார்கள். எனவே அவர்களின் முசுலீம் எதிர்ப்புக் கலவரத்தில் பசுவதைப் பிரச்சினையின் பங்கைப் புரிந்துகொள்ள வேண்டும். எந்தப் பிரச்சினையும் இல்லாதபோது இதைக் கையிலெடுப்பார்கள். கோமாதா, புனிதம், மதம் என்ற போர்வையில் பெரும்பான்மை சமூகத்தினை ஊடுருவும் பசுவதையை அதன் யதார்த்த நிலையிலிருந்து இனிப் பரிசீலிப்போம்.

குரங்கிலிருந்து மாறிய மனிதனின் கை, கால்கள் நேர்த்தியடைந்து, முதுகுத் தண்டு நிமிர்ந்து, மூளை வளர்ச்சியடைவதற்கும் இறைச்சி பெரும் பங்காற்றியது. ஆரம்பகால மனிதனது கடும் உழைப்பிற்கும், போராட்டத்திற்கும் மூளை வளர்ச்சிக்கும் தேவையான புரதத்தை அளித்தது இறைச்சிதான்.

இன்றைக்கு பார்ப்பன – மேல்சாதியினரைத் தவிர உலகமே மாட்டுக்கறியைத் தின்கிறது. மாடு மட்டுமல்ல. ஆடு, குதிரை, ஒட்டகம், நாய், முயல், பலவித பறவைகள் என்று எதெல்லாம் கிடைக்கிறதோ அதெல்லாம் உட்கொள்ளப்படுகின்றன. கால்நடை உற்பத்தி, விவசாய உற்பத்தியில் கால்நடைகளின் பங்கு, காலநிலை, உணவுப்பழக்கம் இவற்றுக்கேற்ப சில வேறுபாடுகள் இருக்கலாம். நாட்டுக்கு நாடு இறைச்சியின் பெயர்தான் மாறுபடுகிறதே தவிர ஒன்று உயர்ந்தது, மற்றொன்று தாழ்ந்தது என்றெல்லாம் கிடையாது.

கணிப்பொறி வேலைக்காக நம்மூர் அம்பிகள் ஈக்களாய் ஒட்டிக் கொள்ளும் அமெரிக்காவில்தான் சிகாகோ நகரம் உள்ளது. இறைச்சிக்காக நவீன ஆலைகளில் தினமும் பல்லாயிரம் மாடுகள் கொல்லப்படும் இந்நகரம் ‘உலகின் கொலைக்களம்’ என்றழைக்கப்படுகிறது. ஆதலால் கோமாதாவைக் கொலை செய்யும் அமெரிக்காவிற்கு இந்துக்கள் போகக் கூடாது என இந்து முன்னணி தடை போடுமா?

பார்ப்பனியத்தின் தீண்டாமைக் கருத்துக்கு அப்பாற்பட்டு, விவசாயத்திற்கு உதவும் மாடுகளைக் கொன்று உண்பது நமது விவசாயிகளிடமும் பொதுவில் இல்லை. அதேசமயம் விவசாயத்திற்கு உதவாத மாடுகளை வீணே பராமரிக்கத் தேவையில்லாத விவசாயிகள் அதை விற்கிறார்கள். அவையே கறிக்காக வெட்டப்பட்டு நாடெங்கும் விற்கப்படுகின்றன. நகர்ப்புறங்களில் மாட்டுக்கறி என்பது ஒரு சாதாரண உணவுதான். ஆடு, கோழி இறைச்சியின் விலை மிகவும் உயர்ந்துவிட்ட நிலையில் மலிவான மாட்டுக்கறிதான் நமது உழைக்கும் மக்களின் புரதத் தேவையை ஈடு செய்கிறது. எனவே கறிக்காக பிராய்லர் கோழி வளர்ப்பது போல, இறைச்சிக்கென்றே மாடுகள் வளர்ப்பது, ஆலைகள் நிறுவுவதற்கு அரசை நாம் வலியுறுத்த வேண்டும்.

பசு புனிதமென்றால், மீன் விஷ்ணுவின் மச்சாவதாரம், கோழி முருகனின் அவதாரம், ஆடு கிருஷ்ணன் மேய்த்தது என அனைத்தையும் தடை செய்யலாமா? மாட்டுக்கறி தின்னக்கூடாது என்பவர்கள் கோமாதாவைக் கொன்று தோலை உரித்துச் செருப்பு போட்டு மிதிக்கலாமா? கடவுளே பிள்ளைக் கறியை ஏற்கும்போது, பக்தன் மட்டும் மாட்டுக்கறியைத் தின்னக் கூடாதா? எனவே மாட்டுக்கறி பிரச்சினையில் முசுலீம் எதிர்ப்பும் தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான துவேசமும் இருப்பதால், சாதியை மறுக்கவும், இந்து மத வெறியர்களின் அவதூறை ஒழிக்கவும் மாட்டுக் கறியைத் தின்னாதவர்களும் தின்று பழகுக!

பசுவைக் கோமாதா என்றும் அதன் உடலில் 33 கோடித் தேவர்கள் குடியிருக்கிறார்கள் என்றும் கூறுபவர்கள், அது செத்தால் மட்டும் தூக்கிச் செல்வதற்குப் பறையர்களையும், சக்கிலியர்களையும் அழைப்பது ஏன்? பூதேவர்களான பார்ப்பனரும், உயர் சாதியினரும், கோமாதா பஜனை பாடும் சங்கராச்சாரியும், இராம.கோபாலனும் – செத்த கோமாதாவைத் தூக்கி அடக்கம் செய்து தமது ‘இந்து’ உணர்வை நிரூபிக்கட்டும்.

நாம் பசுவதைத் தடைச் சட்டம் நீக்கப் போராடுவோம்!

– தொடரும்

_________________________இதுவரை …………………………………………..

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்