privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஓசூர்: ஹெச் ஆரை (HR) வீழ்த்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள்!

ஓசூர்: ஹெச் ஆரை (HR) வீழ்த்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள்!

-

ஓசூர் கமாஸ் வெக்ட்ரா ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஆட்குறைப்புக்கு எதிரான போராட்டம் வெற்றி!

ங்குத் திரும்பினாலும் கான்ட்ராக்ட், CL என்ற பெயரில் தினம்தோறும் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. தொழிற்சங்கம் அமைத்தாலே வேலை இல்லை. போனஸ், பிஎஃப், இ.எஸ்.ஐ போன்ற சட்ட உரிமைகளை இந்த நாட்டில் முதலாளிகள் தங்களின் மயிரளவிற்கு கூட மதிப்பதில்லை. இது போன்ற எண்ணற்ற முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கு இந்த நாட்டின் நீதிமன்றம், போலிசு,ஓட்டுக்கட்சிகள், அதிகாரவர்க்கம் ஆகிய அனைவரும் துணை நிற்கிறார்கள்.இதனை எதிர்த்து  தன்னெழுச்சியாக தொழிலாளர்கள் போராடும் போதெல்லாம் ஊடகங்களும் தன் பங்குக்கு அதனைக் கண்டு கொள்வதேயில்லை, அல்லது திரித்து செய்திகளை முதலாளிகளுக்கு சார்பாக வெளியிட்டு, போராடும் தொழிலாளர்களின் முதுகில் குத்தி வருகின்றன.

இந்நிலையில்தான் துவண்டு போகும் தொழிலாளர்களுக்கு தலைமையேற்று வழிநடத்தி  வருகின்றன புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி –யின் தலைமையிலான புரட்சிகர தொழிற்சங்கங்கள்.

அந்த வகையில் ஒசூர் கமாஸ் வெக்ட்ரா மோட்டார்ஸ் லிட் எனும் பன்னாட்டு நிறுவனத்தில்  பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களின் வேலைநீக்கத்திற்கு எதிராக  உறுதியுடன் போராடி வெற்றிப்பெற்ற அனுபவத்தை இங்கே தருகிறோம்.

சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்களை  உற்பத்தி செய்துவரும் கமாஸ் வெக்ட்ரா மோட்டார்ஸ் (லிட்) எனும் ஆலை ஓசூர் சிப்காட்-1 பகுதியில் இயங்கி வருகிறது. சுமார் 15- ஏக்கர் பரப்பளவு கொண்ட இவ்வாலையில் அவுஸ்கீப்பிங், கார்டன், பாண்டரி போன்ற இடங்களை  பராமரிக்க 6- பெண்கள் உள்ளிட்ட  மொத்தம் 20- ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்து பராமரித்து  வருகின்றனர். இவர்கள் கடந்த 13 – ஆண்டுகளாக இங்கே அற்ப கூலிக்கு வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர்’2010 முதல் போராடி தங்களின் உரிமைகளைப் பெற உறுதிப்பூண்டு தங்களை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி-யில் சங்கமாக இணைத்துக்கொண்டார்கள். ஒப்பந்தத்  தொழிலாளர்களுக்கு  சட்டப்படி நியாயமாக வழங்கவேண்டிய போனஸ், காலணி, உள்ளிட்ட உரிமைகளை கேட்டனர். 12- ஆண்டுகளாக கூலி உயர்வு போனஸ், காலணி கொடுக்காமல் ஒப்பந்தத் தொழிலாளர்களின் உழைப்பை திருடித் தின்று கொழுத்த நிர்வாகமும், ஒப்பந்ததாரரும் தொழிலாளர்கள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இணைந்துப் போராடியதால் வேறுவழியின்றி போனஸ் மற்றும் கூலி உயர்வை அளித்தனர்.

கல்லியறிவற்ற,பின்தங்கிய வறிய ஏழைகளான இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் இவ்வாலையில் மலக்குழியை கழுவுகின்றனர். அதிகாரிகள் மென்று துப்பும் சுவிங்கம் –குப்பைகளை மூச்சைப் பிடித்துக்கொண்டு அகற்றும் வேலைகளை செய்கின்றனர். கேண்டீனில் உணவு கிடையாது. புல்வெளியில் அவ்வப்போது படமெடுக்கும் பாம்பு,தேள் போன்ற விஷ ஜந்துகளிடமிருந்து தப்பித்தாலும் கான்ட்ராக்ட் சூப்பர்வைசர் ரவுடி முனீரிடமிருந்து தப்பிக்கவே முடியாது. மலக்குழியின் துர்நாற்றத்தையே சகித்துக் கொள்ளும் தொழிலாளர்கள், வாயைத் தொறந்தாலே கெட்டவார்த்தைகளில் பேசும் ரவுடி முனீரை சகித்துக் கொள்ள முடியாது அன்றாடம் தவித்துக் கொண்டிருப்பார்கள்.

வேறு தொழில் ஏதும் தெரியாத இந்த அப்பாவித் தொழிலாளர்களை ஒழித்துக்கட்ட கடந்த ஜுன் மாதம் ஒப்பந்ததாரரை மாற்றிவிட்டு ரூ 50-ஐ மட்டும் கூலி உயர்வாக அறிவித்துவிட்டு ஆகஸ்ட் – 1-ம் தேதி முதல் 5- பேருக்கு வேலை இல்லை என திடீரென்று திமிராக அறிவித்துவிட்டான் நயவஞ்சகன் விக்டர் பிரசாத்.

யார் இந்த விக்டர் பிரசாத் ?

கொடிய விசமுள்ள நச்சுப்பாம்பை நல்லப்பாம்பு என்று சொல்வதைப்போல ‘மனித வள மேம்பாட்டு அதிகாரி’ என்ற போர்வையில் இவ்வாலையில் புகுந்தான் விக்டர்  பிரசாத். தொழிலாளர்களையும்,தொழிற்சங்கத்தையும் ஒழித்துக்கட்ட எண்ணற்ற தாக்குதல்களை தொடுத்து வருகிறான்.

அப்பாவி மக்களை குண்டுவைத்துக் கொல்வதும், துப்பாக்கியால் சுடுவதும் பயங்கரவாதம் என நாம் அறிவோம். அதுபோல் உழைத்து பிழைப்பதைத் தவிர வேறு எதையும் அறியாத இந்த ஒப்பந்த தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்து வயிற்றிலடிக்கும் இவனை முதலாளித்துவ பயங்கரவாதி என்றழைப்பதுதான் பொருத்தம். அந்தளவிற்கு  மிகவும் கொடியவன்தான்  இந்த விக்டர்பிரசாத்.

ஒப்பந்தத் தொழிலாளர்களின் வயிற்றிலடித்த இந்தக் கொடூரனுக்கு முதலாளித்துவப் பயங்கரவாதிக்கு மாதச்சம்பளம் ரூ1,50,000. ஆலையில் தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டுவது, தொழிலாளர் ஒற்றுமையைப் பிளக்க கருங்காலிகளை ஆசைக்காட்டி உருவாக்குவது,  இது போன்ற வேலைகளை செய்வதுதான் இந்த மனிதவள மேம்பாட்டுப் பிரிவின் (HR) முக்கியமான வேலையாகும். அப்படிப்பட்ட வேலைகளை செய்துவரும்  மனிதவள மேம்பாட்டு பிரிவு அதிகாரி விக்டர் பிரசாத் தூண்டுதலின் பேரில்தான கான்ட்ராக்ட்காரன் 5- பேரை வேலை  நீக்கம் என்று அறிவித்தான்.

ஆட்குறைப்பு நடவடிக்கையை ஏற்க மறுத்த பு.ஜ.தொ.மு ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்தரத் தொழிலாளர்களையும்  அணிதிரட்டி உடனடியாக ஆலைவாயில் முன்பு 10.08.2011 அன்று எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டத்தை திரளான உள்ளுர் மக்கள் ஆதரவுடன் நடத்தின. இதனைக் கண்டு அரண்டுப்போன நிர்வாகம் உடனே பேச்சுவார்த்தைக்கு  முன்வந்தது.

அதன்பேரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்  வேலை நீக்கத்திற்குப் பதிலாக சுழற்சி முறையில் ஒவ்வொரு தொழிலாளருக்கும் 4- நாட்கள் மட்டும் வேலையிழப்பு என்று தொழிலாளர்கள் ஒப்புதலுடன் பேசிமுடிக்கப்பட்டது. தொழிலாளர்கள் வேலையைவிட்டு  நீக்கப்படுவதை தொழிலாளர்கள் தங்கள் வர்க்க ஒற்றுமையைப் பேணி, பு.ஜ.தொ.மு-ன் வழிக்காட்டுதலின்படி உறுதியாக நின்றுப் போராடி முறியடித்தனர். இழப்பை எல்லோரும் பகிர்ந்துக் கொண்டனர். இதனால், ஆப்பறைந்த குரங்குப்போல திகைத்து நின்றான் விக்டர் பிரசாத்.

இந்நிலையில் ஒப்புக்கொண்ட விசயங்கள், பேச்சுவார்த்தை மரபுகள் அனைத்தையும் மீறி திடீரென்று தடாலடியாக விக்டர் பிரசாத்தும், கான்ட்ராக்ட்காரனும் இணைந்துக் கொண்டு சங்க முன்னணியாளர்கள் 4-பேரையாவது  கட்டாயமாக வேலையை விட்டு நீக்கியே  ஆக வேண்டும் என்று முடிவெடுத்து செப்டம்பர் 12 –தேதி அதன்படியே அறிவித்தனர். இதனை கண்டு அதிர்ச்சியும் கோபமும் அடைந்த தொழிலாளர்கள் ஆலையினுள்ளே உள்ளிருப்புப் போராட்டத்தை அறிவித்து நடத்தினர்.

அதனடிப்படையில் 14.09.2011 அன்று மாலை 5-மணிக்கு வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. பிறகு மறுநாள் 15.09.2011 அன்று காலை 10-மணிக்கு இறுதி சுற்றுப் பேச்சுவார்த்தை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது. அப்போது, ஆட்குறைப்புக்கான  நியாயமான காரணங்கள் எதுவும் நிர்வாகத் தரப்பில் முன்வைக்கப்படவில்லை. மாறாக, சங்கம் சேர்ந்ததற்குதான் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை என்பது வெட்டவெளிச்சமாக அம்பலமானது. ஆதாரம் இல்லாததால் கான்ட்ராக்ட்காரன் பேச்சுவார்த்தையின் இடையிலே எழுந்து ஓடிவிட்டான். அதனால் விழிப்பிதுங்கி நின்ற நிர்வாகம் இறுதியில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் போர்க்குணமிக்கப் போராட்டத்திற்கு பணிந்தது.

தொழிலாளர்களின் ஒற்றுமையைப் பேணிப் பராமரித்து, தொடர்ந்து போராட்டத்தில் ஊன்றி நின்று வெற்றியை சாதித்துக் கொடுத்தது புரட்சிகரத் தொழிற்சங்கமான பதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் தலைமை. இது ஓசூர் வரலாற்றிலே அதுவும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலைநீக்கத்திற்கு எதிரான, உரிமைக்கானப் போராட்டத்தில் பெற்ற வெற்றி என்பது இதுவரை யாரும் சாதித்திராத முன்னுதாரணமிக்கப் போராட்ட அனுபவமாகும். மேலும், இந்த அனுபவம் பிற ஆலையில் கொத்தடிமைகளாக உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களின் உரிமைக்கானப் போராட்டத்திற்கு ஒளிவிளக்காகவும் திகழ்கிறது என்பதே எதார்த்தமாக உள்ளது.

__________________________________________________

    – புதிய ஜனநாயம் செய்தியாளர், ஓசூர்.
__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்