privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காகடாஃபி கொலையோடு தீராது அமெரிக்க வெறி!

கடாஃபி கொலையோடு தீராது அமெரிக்க வெறி!

-

அவை மிகக் கலங்கலான வீடியோக் காட்சிகள். கடந்த வாரம் வெளியான அந்தக் காட்சிகளைக் கண்டு உலகெங்கும் மனிதாபிமானம் கொண்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். முதல் வீடியோவில் அந்த வயதான மனிதர் காரிலிருந்து தரதரவென்று இழுத்துச் செல்லப் படுகிறார். அவரது உடலெங்கும் இரத்தக்கறை படிந்துள்ளது. தலை கலைந்துள்ளது. அங்குமிங்கும் அலைபாயும் கண்களில் இன்னதென்று விளக்கவியலாத ஒரு உணர்ச்சி உறைந்து போயிருக்கிறது. வாயிலிருந்து ஏதோ புரியாத வார்த்தைகள் வெளிப்படுகிறது. அந்த மனிதரைக் கீழே தள்ளும் வெறி பிடித்த கூட்டம் கண்மண் தெரியாமல் அடித்துத் துவைக்கிறது. தொடர்ந்து சில துப்பாக்கி முழக்கங்கள் கேட்கிறது. வேதனை அலறலும் மரண ஓலமும் வெறிக்கூச்சலும் எழுகிறது. இந்தக் காட்சிகளைப் படம் பிடித்துக் கொண்டிருக்கும் கைபேசிக் காமெரா அங்குமிங்குமாய் அலைபாய்கிறது. சிறுது நேரத்திலேயே அனைத்தும் ஒரு முடிவுக்கு வருகிறது. தொடரும் காட்சிகளில் உயிரற்ற அந்த மனிதரின் பிணம் தரையோடு தேய்த்து இழுத்துச் செல்லப்படுவதைக் காட்டுகிறார்கள். சுற்றி நிற்கும் துப்பாக்கியேந்திய ‘வீரர்கள்’ வெற்றி முழக்கமிடுகிறார்கள்.

———————————————————

இது இரண்டாவது வீடியோக் காட்சி. ஒரு அடைசலான அறை. அதன் ஒரு மூலையில் இரத்தம் தோய்ந்த உள்ளாடைகளோடு இளைஞனொருவன் சுவரில் சாய்ந்து அமர்ந்துள்ளான். உறுதியான பார்வை. தன் உடலில் உண்டாயிருக்கும் காயங்களை அசிரத்தையாகப் பார்வையிடுகிறான்.  ‘உன் காயங்களுக்கு நாங்கள் மருந்து போடுவோம்’ என்று துப்பாக்கியேந்திய ‘வீரன்’ ஒருவன் உறுதியளிக்கிறான். ‘இது காயங்களல்ல. என் மார்பில் பதிக்கப்பட்ட பதக்கங்கள்’ என்கிறான் அந்த இளைஞன். மெல்லிய ஆனால் உறுதியான குரல். அவன் பார்வையில் அச்சமில்லை. தண்ணீர் குடிக்கிறான். தனது கடைசி சிகரெட்டை இரசித்துப் புகைக்கிறான். சில நொடிகளிலேயே சுட்டுக் கொல்லப்படுகிறான். அந்த முடிவு அவன் எதிர்பாராத ஒன்றல்ல.

அந்த வயதான மனிதர் முவாம்மர் அல் கடாஃபி. அந்த இளைஞன் கடாஃபின் மகன் முட்டெஸிம் அல் கடாஃபி. கடந்த 20-ம் தேதி லிபியாவின் முன்னாள் அதிபர் கடாஃபியும் அவரது மகன் முட்டெஸிம் அல் கடாஃபியும் சிர்ட்டே நகரக்கு வெளியே நேட்டோ கூலிப்படையினரால் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகளோடு நேட்டோ படைகளின் ‘மனிதாபிமானம்’ ஒரு தற்காலிக முடிவுக்கு வந்துள்ளது. சிர்ட்டே தான் கடாஃபியின் பூர்வீகம். இதே மண்ணில் தான் எழுபதாண்டுகளுக்கு முன் கடாஃபி பிறந்திருந்தார்.

கடாஃபி கொலையோடு தீராது அமெரிக்க வெறி! -
கடாஃபி - மூட்டெஸிம்

அரபுலகில் நடந்த ‘வண்ணப் புரட்சிகளைத்’ தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் மேற்கத்திய நாடுகளின் ஆசீர்வாதத்துடன் லிபியாவின் பெங்காஸி பகுதியை நேட்டோ ஆதரவு பெற்ற கூலிப்படை ஒன்று கைபற்றுகிறது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நேட்டோ நாடுகளுக்கும், கத்தார் போன்ற கைக்கூலி நாடுகளுக்கும் லிபிய மக்களின் மேல் திடீர் ‘பாசம்’ பொத்துக் கொண்டது. இதனடிப்படையில், கடந்த மார்ச் மாதம் தொடங்கி நேட்டோ படைகள் தரைவழியே முன்னேறி வந்த கூலிப்படைக்கு ஆதரவாக வான்வழித் தாக்குதல் தொடுத்து வந்தது.

இந்த விமானத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான டன்கள் வெடி பொருட்களை லிபியர்கள் மேல் வீசியிருக்கிறார்கள். லிபியாவின் மேலான கூட்டுப்படைகளின் தாக்குதல்கள் பிப்ரவரி 17-ம் தேதி ஆரம்பித்தது. தாக்குதல் துவங்கிய இருபத்து நான்கு மணி நேரத்துக்குள்ளாக B-52 ரக போர் விமானம் மூலம் 45 டன் வெடி குண்டுகளை வீசியுள்ளனர். மத்தியத் தரைக்கடலில் மிதந்த நாசகாரிக் கப்பல்களில் இருந்து சிறிய ரக அணு ஏவுகணைகளை (Uranium Depleted missiles) வீசியுள்ளனர்.

ஆயிரக்கணக்கான அப்பாவி லிபியர்களின் பிணத்தின் மேல் நேட்டோ நடத்திய ‘மனிதாபிமான’ வெற்றிப் பேரணியின் விளைவாய் ஆகஸ்ட் 23-ம் தேதி லிபிய தலைநகர் திரிபோலி கூலிப்பட்டாளத்தின் கையில் விழுகிறது. அதைத் தொடர்ந்து தனது ஆதரவுப் படைகளோடு திரிபோலியிலிருந்து பின்வாங்கும் கடாஃபி, தனது சொந்த ஊரான சிர்டே பகுதிக்குத் தப்பிச் செல்கிறார். இதற்கிடையே கடந்த ஒரு மாத காலமாக சிர்டே நகரத்தை தரை மார்க்கமாக சுற்றி வளைக்கும் கூலிப்படை, அதைக் கைப்பற்றவும் கடாஃபியைத் தீர்த்துக் கட்டவும் கடும் பிரயத்தனங்கள் செய்து வந்தது. இதற்கு ஆதரவாக நேட்டோ படைகள் வான் மார்க்கமாக தாக்குதல் தொடுத்து வந்தது. பல்லாயிரம் அப்பாவி மக்கள் இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்தனர்.

கடாஃபி கொல்லப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருந்தது. கடந்த 18-ம் தேதி த்ரிபோலிக்கு ஒரு இரகசிய பயணம் மேற்கொண்ட ஹிலாரி கிளிண்டன், அங்கே கூலிப்படையின் ஆதரவாளர்கள் மத்தியில் ‘கூடிய விரையில் கடாஃபி கொல்லப்படுவார்’ என்று உறுதியளித்துள்ளார். கடாஃபியைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென்பது அவர்கள் நோக்கமாக இல்லை. ஒருவேளை அப்படி நடந்திருந்தால், அமெரிக்காவோடு கடந்த பத்தாண்டுகளாக கடாஃபி கொண்டிருந்த நெருக்கமும், லிபிய மண்ணில் அமெரிக்கா நடத்தி வந்த இரகசிய சித்திரவதை மைய்யங்கள், கடாஃபியோடு போட்டுக் கொண்டி இரகசிய இராணுவ ஒப்பந்தங்கள் போன்றவை பற்றி அவர் வாய் திறக்கும் சாத்தியம் இருந்தது. அப்படியொன்று நடந்து, தனது மனிதாபிமான இமேஜுக்கு இழுக்கு நேர்வதை அமெரிக்கா விரும்பவில்லை.

இந்நிலையில், கடந்த இருபதாம் தேதி கடாஃபி தனது நெருக்கமான ஆதரவாளர்களோடு சிர்ட்டே நகரை விட்டு தப்பிச் செல்வதை அறிந்த நேட்டோ, தனது போர் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி அவர் நகர முடியாமல் செய்கிறது. இந்தத் தகவலை தரையிலிருந்து இயங்கும் கூலிப்படைக்குத் தெரிவித்து, கடாஃபியும் அவரது மகனும் கொல்லப்படுவதை உறுதி செய்து கொள்கிறது.

மரணம் நெருங்கி வந்த அந்த இறுதி நிமிடங்களில் கடாஃபியின் கண்களில் தெரிந்த அந்த உணர்ச்சியின் பொருளென்ன? சகல சௌபாக்கியங்களுடனும் வசதிகளுடனும் சுகித்திருந்த அந்த இளைஞனை எள் அளவும் மரணபயமின்றி அவ்வாறு பேச வைத்த உணர்ச்சி என்னவாக இருக்கும்? அது என்னவாயிருக்குமென்று இவர்களின் மரணச் செய்தி கேட்டதும் ‘வாவ்’ என்று குதூகலித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடிய ஹிலாரி கிளிண்டனுக்குத் தெரியாதிருக்கலாம். ஆனால், அவரது சொந்த நாட்டில் ஒவ்வொரு நகரமாய் ஆக்கிரமித்துச் சூழ்ந்து வரும் 99% அமெரிக்கர்களுக்கு அது சர்வ நிச்சயமாய்த் தெரிந்திருக்கும்.

ஒபாமாவுடன் கடாஃபி
ஒபாமாவுடன் கடாஃபி

முவாம்மர் அல் கடாஃபி ஒரு முழுமையான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி என்று சொல்லி விட முடியாது. அறுபதுகளின் இறுதியில் உலகெங்கும் உண்டான ஏகாதிபத்திய எதிர்ப்பு அலையின் லிபிய பிரதிநிதி தான் முவாம்மர் அல் கடாஃபி. 1969-ல் திடீர் புரட்சி மூலம் இத்ரீஸின் மன்னராட்சிக்கு முடிவுகட்டி அதிகாரத்திற்கு வரும் கடாஃபி, அதற்கு முன் லிபிய மண்ணில் மேற்கத்திய நாடுகள் நிறுவியிருந்த எண்ணை நிறுவனங்களை அரசுடமையாக்கினார். அமெரிக்காவுக்கு லிபியாவில் இருந்த வீலஸ் விமான தளத்தை இழுத்து மூடினார். அது தான் அன்றைய தேதியில் ஆப்ரிக்க கண்டத்திலேயே அமெரிக்காவுக்கு இருந்த மிகப் பெரிய இராணுவ செயல்தளம். ஆனால், சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப் பின் கடாஃபி இதற்கெல்லாம் நேரெதிரான நிலையை எடுக்கிறார்.

தொண்ணூறுகளின் துவக்கத்தில் புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்தியதாகட்டும், இந்த நூற்றாண்டின் துவக்க பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் ‘தீவிரவாதத்திற்கு எதிரான போருக்கு’ வால் பிடித்ததாகட்டும், ஐரோப்பிய அமெரிக்க எண்ணை நிறுவனங்களுடன் எண்ணை ஒப்பந்தங்கள், இராணுவ ஒப்பந்தங்களை போட்டதாகட்டும் – அவர் ஏகாதிபத்தியங்கள் மனங்கோணாதவாறு நடந்து கொள்வதில் எச்சரிக்கையாகவே இருந்தார். இப்படி ஒருபக்கத்தில் மக்கள் விரோத பொருளாதார நடவடிக்கைகள் எடுத்தும், தனது குடும்ப சர்வாதிகார ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியும் மிருக பலத்துடன் லிபிய மக்களை அடக்கியாண்ட அதே காடாஃபி தான் தனது மக்களுக்களின் வாழ்க்கைத் தரத்தை குறைந்தபட்ச அளவுக்காவது உறுதிப் படுத்தியிருந்தார்.

லிபியாவை ஆப்ரிக்காவின் ஸ்விட்சர்லாந்து என்பார்கள். இந்தப் புதிய நூற்றாண்டுக்குள் லிபியா நுழைந்த போது அது ஒப்பீட்டளவில் பிற ஆப்ரிக்க நாடுகளை விட சிறப்பான மனித வளக் குறியீடுகளைக் கொண்டிருந்ததை மேற்கத்திய நாடுகளே மறுப்பதில்லை. எண்ணை வர்த்தகத்தை கடாஃபி குடும்பம் நேரிடையாகக் கட்டுப்படுத்தி அடித்த கொள்ளையில் ஊதாரித்தனமான சுகபோகத்தில் திளைத்திருந்த போதிலும் அதன் லாபத்தில் ஒரு பகுதியை மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தினார். மேற்கத்திய நாடுகளின் கார்ப்பொரேட் கம்பெனிகளோடு எண்ணை துரப்பண ஒப்பந்தங்களைப் போட்டிருந்தாலும், எண்ணை வர்த்தகத்தை பன்னாட்டுக் கம்பெனிகளிடம் முழுமையாக ஒப்படைக்காமலே வைத்திருந்தார்.

________________________________________________________

இப்போது லிபியா ‘விடுவிக்கப்பட்டிருக்கும்’ நிலையில், அதன் எண்ணை வளங்களும் தங்கம், யுரேனியம் உள்ளிட்ட அள்ள அள்ளக் குறையாத இயற்கை வளங்களும் முழுமையாக பன்னாட்டுக் கம்பெனிகளின் கரங்களில் வந்து விழுந்துள்ளது. ஈராக்கில் விட்டதை லிபியாவில் பிடிக்க அமெரிக்காவுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. மேலும், லிபிய அரசாங்கத்தோடு எண்ணை வர்த்தக ஒப்பந்தங்கள் செய்திருந்த சீனா, ரசியா, பிரேஸில் போன்ற நாடுகளையும் போட்டியிலிருந்து விலக்கியாகி விட்டது. கலகக்காரர்கள் பெங்காஸி பகுதியைக் கட்டுப்படுத்தியிருந்த ஆரம்ப காலத்திலேயே அவர்களின் அதிகாரத்தை அங்கீகரிக்கும் மேற்குலக நாடுகள், அவர்களோடு எண்ணை வர்த்தகம் பற்றிய பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்து விட்டனர். மேலும், சீனாவோடும் ரசியாவோடும் முந்தைய லிபிய அரசாங்கம் போட்டிருக்கும் ஒப்பந்தங்களை மறு பரிசீலனை செய்யப் போவதாகவும் அறிவித்திருந்தனர்.

ஆப்ரிக்க கண்டம் முழுவதையும் தனது சுரண்டலுக்கான பின்னிலமாக வைத்திருப்பது, இதில் போட்டிக்கு வரும் சீனா ரசியா போன்ற நாடுகளை ஓரங்கட்டுவது போன்ற ஏகாதிபத்திய நலனில் இருந்து பிறந்தது தான் அமெரிக்காவின் ‘மனிதாபிமான’த்திற்கும்’ ஜனநாயகத்தை நிலை நாட்ட அவர்களுக்கு புதிதாய் பிறந்திருக்கும் இந்த அக்கறைக்கும் அடிப்படையான காரணம். ஏற்கனவே அரபுலக மன்னர்களெல்லாம் அமெரிக்கப் பாத நக்கிகளாக இருக்கும் நிலையில், எண்ணை வளத்தைப் பொறுத்தவரையில் அந்தப் பிராந்தியத்தில் இரண்டாம் இடத்திலிருக்கும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளையும் வளைத்துக் கொண்டால், உலக எண்ணை ரிசர்வில் 60 சதவீத அளவுக்கு அமெரிக்காவின் பிடியில் சிக்கும்.

தற்போது ஏகாதியபத்திய உலக ஒழுங்கைக் கவ்விப் பிடித்திருக்கும் பொருளாதாரப் பெருமந்தத்திற்கான தீர்வை மூன்றாம் உலக நாடுகளின் வளங்களை மேலும் மேலும் ஒட்டச் சுரண்டுவது, இதற்கான தடைகளைப் போர்களின் மூலம் அகற்றுவது என்கிற பாதையில் மேற்குலகம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், ஏற்கனவே புழுத்து நாறும் கட்டமைப்புச் சீர்கேடுகள் இந்த மீள முடியாத போர்களால் ஒரு முடிவுக்கு வந்து விடப் போவதில்லை என்பதையே அமெரிக்கா தொடங்கி மேற்கு ஐரோப்பிய நாடுகள் வரையில் பற்றிப் பரவும் ‘ஆக்கிரமிப்புப்’ போராட்டங்கள் காட்டுகின்றன.

உலகை ஆக்கிரமிக்கக் கிளம்பியிருக்கும் அமெரிக்காவின் காலடியிலேயே அதன் ஆன்மாவை ஆக்கிரமிக்கும் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே வருகிறது. அமெரிக்கத் தெருக்களில் திரண்டிருக்கும் 99 சதவீத மக்களின் முழக்கங்களில் அடங்கியிருக்கிறது லிபிய மக்களின் ஒப்பாரிச் சத்தம். உலகை மேலாதிக்கம் செய்யது துடிக்கும் அமெரிக்காவின் கனவுகளின் பொருளாதார அடித்தளத்தின் மீது அதன் சொந்த மக்களே தொடுத்திருக்கும் இந்தப் போர் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போர்களின் வெற்றியை கொண்டாட முடியாதபடி வைத்திருக்கிறது. தற்போது வலுவிழந்து மரணக் குழியின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய கட்டமைப்பை குழியில் தள்ளி மண்ணை மூடி நிரப்ப வேண்டிய கடமை உலக மக்கள் அனைவருக்கும் உள்ளது. வாழ்க்கையிழந்த அமெரிக்கர்கள் ஏகாதிபத்திய அழிவின் அறிமுக உரையை எழுதத் துவங்கி விட்டனர் – இதன் முடிவுரையை எழுதும் கடமை நமக்கிருக்கிறது.

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்