எட்டு மணி நேரம் என் உடலைத் தனக்குள் வைத்து சவைத்துக் கசக்கித் துப்பியது அதி விரைவுப் பேருந்து. மணி மூன்று முப்பது. சேலத்தின் அதிகாலை ஒரு சொர்க்கம். உடன் படித்த நண்பன் ஒருவனின் திருமணத்தை முன்னிட்டு தான் இந்த பயணம். அப்படியே வீட்டில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்து பழைய நட்புகளைப் பார்த்துச் செல்வதாக திட்டம்.
நீண்ட நேர பயணத்தில் முதுகுத் தண்டு விறைத்துப் போயிருந்தது. இடமும் வலமுமாக உடலைச் சுழற்றினேன். ‘கட்டட்ர்ர்ராராக்க்க்’ என்று சப்தமாக நெட்டி முறிந்தது. ஆழமாக மூச்சை இழுத்துப் பிடித்து ‘ஷ்ஷ்ஷா’ என்கிற ஒலியோடு வெளியேற்றினேன். சூடான தேனீர் ஒன்று பாலைவனமாய் வரண்டு கிடந்த தொண்டைக் குழியை ஈரமாக்கியது.
அடுத்த அரைமணி நேர ஆட்டோ குலுக்கல் எங்கள் வீட்டு முன் என்னை நிறுத்தியது. சேலம் பெங்களூரு சாலையில் இருக்கும் குரங்குச்சாவடியின் சந்து பொந்துகளில் புகுந்து புறப்பட்ட ஆட்டோவின் அதிரல்களில் தூக்கம் கலைந்து எழுந்த தெருநாய்கள் என்னைக் கொலைவெறியோடு பார்த்துக் கொண்டே, ‘உடனே குரைக்கலாமா; இல்லை கூட்டாளிகளைச் சேர்த்துக் கொண்டு குரைக்கலாமா’ என்று குழம்பிக் கொண்டிருந்த இடைவெளியில் ஆட்டோகாரரை அனுப்பிவிட்டு முன்புற கேட்டைத் திறந்து நுழைந்தேன். குரைப்புச் சத்தம் இப்போது கேட்டது.
வீட்டு முகப்பில் இருந்த போகென்வில்லா மாரங்களில் பல வண்ணச் சரவிளக்குகள் தொங்கிக் கொண்டிருந்தன. முற்றத்தின் சிமென்டு தரையெங்கும் சாக்பீஸ் கிறுக்கல்கள். சின்னச் சின்னதாக வாத்துப் படங்கள். யார் இந்த வேலையைப் பார்த்தது என்று யோசித்துக் கொண்டே அழைப்பு மணியை அழுத்தினேன். அம்மாவை எதிர்பார்த்தேன். கதவைத் திறந்தது அக்கா. ‘ஓ.. சரி தான். வாத்துகள் ஜெனியின் வேலையாய் இருக்கும்’ என்று நினைத்துக் கொண்டேன். ஜெனி அக்காவின் மகள். இது கோடை விடுமுறை சமயம் என்பது அப்போது தான் உறைத்தது. அக்கா குழந்தைகளோடு வந்திருக்கிறாள்.
“வாடா” நான்கு மணிக்கே எழுந்து பளிச்சென்று தெரிந்தாள். அவளிடம் ஒரு பரபரப்பு தென்பட்டது. “டீ வேணுமா” என்றாள்.
“இல்ல.. வேணாம். பஸ்டான்ட்ல குடிச்சேன்.ஆமா என்ன விசேஷம்? ஒரே சீரியல் லைட்டா மின்னுது?”
“ஓஹ்.. அதுவா. இன்னிக்கு ஜெஸியோட பர்த்டே பார்ட்டி”
“என்னாது… ஜெஸிக்கு பிறந்த நாளா? ஏய்.. இது உனக்கே கொஞ்சம் ஓவராத் தெரியல?” என்றேன் சிரிப்பை அடக்கிக் கொண்டே.
“டேய் அடக்கி வாசிடா. ஜெனி காதில விழுந்திடப் போகுது.. என்றவாறே உள்ளறையை ஒரு முறை எட்டிப் பார்த்துக் கொண்டாள்”
“ஓ.. இவ்ளோ சீக்கிரத்திலேயே ஆள் எழும்பியாச்சா?” பயணப் பையைத் திறந்து இனிப்புப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டு உள் அறைக்குள் நுழைந்தேன். உள்ளே ஜெனி ஏஞ்சல் போன்ற ஒரு உடையை அணிந்திருந்தாள். என் அம்மா முன் கைகளைக் குவித்து நின்றிருந்தாள். பாடல் ஒன்றைப் பாடி பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தாள்.
” திருக்கரத்தால் தாங்கியென்னை திருச்சித்தம் போல் நடத்திடுவீர் குயவன் கையில் களி மண்ணாய் அனுதினமும் நீர் வணைந்திடுவீர்”
ஜெனியின் கீச்சுக் குரலில் அந்த மொக்கைப் பாடல் கூட அழகாய்த் தான் ஒலித்தது.
“ஹேய் ஜெனீய்..”
“ஹை.. மாமா. இப்போ தான் வர்றீங்களா? மாமா இன்னிக்கு ஜெஸியோட பர்த் டே. நீங்க கண்டிப்பா கலந்துக்கணும். ஜெஸிக்கு என்ன கிப்ட் வாங்கித் தரப் போறீங்க?”
“மாமாவுக்கு இன்னிக்கு வெளியே நிறைய வேலையிருக்கே ஜெனி”
அவள் எனது பதிலை எதிர்பார்க்கவில்லை. கேள்வியை வீசி விட்டு பாட்டுப் பயிற்சியில் தீவிரமானாள். ஜெஸியின் மேல் ஜெனி ஒரு மாதிரி பைத்தியம் போல் தான் இருந்தாள். அது எனக்கு முன்பே தெரியும். ஆனால், அது இப்படி பிறந்த நாள் கொண்டாடும் அளவுக்குப் போகும் என்பதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அக்காவுக்கும் அத்தானுக்கும் ஜெனி என்றால் செல்லம். மண்ணில் கால் படக்கூட விட மாட்டார்கள். வேறு பிள்ளைகளோடு தெருவில் விளையாடுவது அவளுக்குத் தடுக்கப்பட்டிருந்தது. விலை உயர்ந்த பொம்மைகளும் வீடியோ கேம்ஸ்களுமே அவளது உலகமானது.
எந்த பொருளாக இருந்தாலும் அது வேண்டும் என்று மனதுக்குள் நினைத்தாலே போதும்; அதை வாங்கித் தந்து விடுவார் ஜெனியின் அப்பா. சில சமயம் நான் ஊருக்குப் போகும் சமயங்களில் அவளை வெளியே அழைத்துச் செல்வதுண்டு. அப்போதெல்லாம் தெருவில் விளையாடும் சின்னப் பிள்ளைகளை ஆசையோடும் ஏக்கத்தோடும் பார்ப்பாள். ஒரு சமயம், அப்படி அவள் பார்த்த போது வண்டியை நிறுத்தி அவளையும் விளையாடி விட்டு வாயேன் என்று கேட்டுப் பார்த்தேன். “நோ அங்கிள்.. டர்ட்டி பீப்புள்ஸோட விளையாடினது தெரிஞ்சா டாடி கோச்சுப்பாரு” என்று மறுத்து விட்டாள்.
எப்போதும் தொழில் வளர்ச்சியைத் துரத்திக் கொண்டு ஓடும் அப்பா, காலையில் வேலைக்குச் சென்றால் மாலை சோர்ந்து போய்த் திரும்பும் அம்மா, அசுவாரசியமாய் கொட்டாவி விடும் வயதான ஆயா இவர்கள் தான் ஜெனியின் உலகத்து மனிதர்கள். தெருப் பிள்ளைகளை அழுக்கு மனிதர்கள் என்று அவளுக்குக் கற்பிக்கப்பட்டிருந்தது. தெருவில் விளையாடினால் ‘ஜெர்ம்ஸ் அட்டாக் பண்ணும்’ என்று கிளிப்பிள்ளை போல் அவள் ஒப்பிக்க பழக்கப்படுத்தப்பட்டிருந்தாள். அவளின் பள்ளிக் கூடத்தி லேசான முணுமுணுப்போ, சப்தமோ இல்லாமல் மயான அமைதியை நிலைநாட்டியிருந்தார்கள். பள்ளிக் கூடத்துக்கு உள்ளே சென்றதும் குழந்தைகள் ஊமைகளாகி விடுவார்கள். ஸ்விட்சு போட்டால் பேசும் ரோபோட்களைப் போல் கேள்வி கேட்கும் போது மட்டும் “யெஸ் மிஸ்” “நோ மிஸ்” சொல்லப் பழக்கியிருந்தார்கள்.
ஜெனியின் தனிமையை ஜெஸியால் மட்டும் தான் தீர்க்க முடிந்தது. இவளது சிறு வயது துணி மணிகளை ஜெஸிக்கு அணிவித்து அழகு பார்ப்பாள். விலை உயர்ந்த சென்ட் பாட்டில்களை ஜெஸியின் மேல் பீய்ச்சி அடிப்பாள். ஜெஸியோடு பேசிக் கொண்டிருப்பாள்; கதை சொல்வாள்; பாடிக் காட்டுவாள்; சில சமயம் ஆடிக் கூட காட்டுவாள். உறங்கும் போது எப்போதும் கைகளுக்குள் ஜெஸி இருக்க வேண்டும். ரவி அத்தான் இதையெல்லாம் பார்த்து ரசிப்பார். “பாத்தீங்களா தம்பி… ஜெனிக்கு எத்தனை அறிவுன்னு” “பாத்தீங்களா அவளுக்கு எத்தனை அன்புன்னு” என்று பெருமிதமாகச் சொல்லிக் கொள்வார்.
நான் சாப்பிட்டு விட்டு வெளியே கிளம்பினேன். அண்ணனின் பைக் சாவியைப் பார்த்தேன்; ஆணியில் தொங்கும் – இப்போது தொங்கவில்லை.
“டேய் எபின், இங்கே வாடா. உங்கப்பாவோட வண்டி சாவி எங்கேடா?” எபின் அண்ணன் மகன். பத்தாவது படிக்கிறான். அண்ணனுக்கு ஆத்தூரில் வேலை என்பதால் பஸ்ஸில் தான் போகிறான். அவன் தெரு முக்கைத் தாண்டியதும் பெரியவன் எபினும், பொடியன் ரோவனும் அண்ணனின் பைக்கை கள்ளத்தனமாக ரவுண்டு அடிக்க எடுத்துச் சென்று விடுவார்கள். ஊர் சுற்றக் கிளம்பும் முன் மீட்டர் வயரை பிடுங்கி விட்டு திரும்பக் கொண்டு வந்து நிறுத்தும் போது இருந்தது இருந்தபடி மாட்டி வைத்து விடுவதில் பயல் கில்லாடி.
“சித்தப்பா.. டிவி மேல பாருங்க”. திரும்பிப் பார்க்காமல் சொன்னவன் டேபிள் மேல் தலையைக் கவிழ்த்தியிருந்தான். எதையோ தீவிரமாக நோண்டிக் கொண்டிருந்தான்.
“காலங்காத்தாலே என்னத்தடா நோண்டிகிட்டு இருக்கே” அருகில் சென்றேன். சில அட்டைகள்.. கலர் கலராக ஸ்கெட்சு பேணாக்கள், ஜிகினா தூள்கள், பசை என்று மேசை முழுக்க இரைந்து கிடந்தது.
“இன்னிக்கு சாயந்திரம் ஜெஸியோட பர்த்டே பார்ட்டி இருக்கில்லே… அதான், இன்விடேஷன் கார்ட் தயாரிக்கறேன்”
“டேய்.. நீயுமாடா…”
“நான் மட்டுமில்ல சித்தப்பூ… இன்னிக்கு பர்த்டேக்கு ஜெபம் பண்ணப் போறது உன்னோட மம்மி. பர்த்டே மெஸேஜ் தரப்போறது என்னோட மம்மி. பர்த்டே ஸ்பெஷல் பாட்டு ஜெனி பாடப் போறா.. சாய்ந்திரம் அப்பா வரும் போது ஸ்பெஷல் பர்த்டே கேக் வாங்கிட்டு வருவாங்க.. ரோவன் தான் வீட்டை டெக்கரேட் பண்ணப் போறான்” ரோவன் எபினின் தம்பி. ஆறாம் வகுப்புப் படிக்கிறான்.
“வெளங்கிடும்டா… ஆமா நீங்கெல்லாம் சேர்ந்து ஜெஸிக்கு பிறந்தநாள் கொண்டாடப் போறீங்களே இந்த விஷயம் அதுக்கு முதல்ல தெரியுமா?” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே கூடத்தில் அம்மா நுழைந்து கொண்டிருந்தாள், “இந்த ஒருநாள் கூத்துக்கு எவ்ளோமா செலவுமா பண்ணப் போறீங்க..?” என்றேன்.
“அது.. உங்கத்தான் காசு குடுதிருக்காறாம்.. எப்படியும் ஒரு மூவாயிரம் ஆயிடும்” என்றாள்.
“நீ தான் பிறந்தநாள் ஜெபமா?”
“ஆமாம்” பெருமிதமாய்ச் சொன்னாள்.
“சரியாப்போச்சு.. நாட்ல அவனவன் சோறு கிடைக்காம அல்லாடிட்டு இருக்கான் இங்கே ஒரு கோமாளிக் கூத்துக்கு மூவாயிரம் செலவு, பாட்டு, கூத்து, கேக்கு, ஜெபம். அந்தக் கர்த்தர் மட்டும் ஒருவேளை உண்மையாவே இருந்து இதெல்லாம் பார்த்தாருன்னு வைச்சுக்க.. டென்சன்ல தாடிய பிச்சிக்கிட்டு அலைவாரு”
“டேய்.. உன் தலைல சாத்தான் இறங்கியிருக்கான். ஆண்டவரைப் பத்தி தப்பா பேசாதே”
“கர்த்தரே எங்கவீட்டு பாவிகளுக்கு மனமிரங்கும்.. போதுமாம்மா? சரி நான் வர்றேன்” என்றவாறே கிளம்பினேன்.
பைக்கை உதைக்கும் போது தங்கம்மாள் உள்ளே வந்தார்கள். இடுப்பில் ஒரு குட்டிப் பைய்யன் ஒருவன் ஒட்டிக் கொண்டிருந்தான். தங்கம்மாவுக்கு பக்கத்து வீடு. அவர் தான் எங்களையெல்லாம் சின்ன வயதிலிருந்து தோளில் போட்டு வளர்த்தவர்கள். கலியாணம் முடிந்து ஆறாண்டுகளிலேயே கணவனை இழந்தவர். சத்துணவுக் கூடத்தில் ஆயாவாக வேலை பார்த்தே இரண்டு பிள்ளைகளையும் தனியாளாக நின்று ஆளாக்கினார்.
அம்மாவுக்கு சின்ன வயதிலேயே குறைந்த ரத்த அழுத்தம் இருந்தது. நான்கு படி ஏறுவதற்குள் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்குவாள். எங்கள் வீட்டுப் பிள்ளைகள் எல்லோரையும் பார்த்துக் கொண்டதாகட்டும், அக்கா பிரசவத்துக்கு வந்த போது கவனித்துக் கொண்டதாகட்டும் தங்கம்மா இல்லாவிட்டால் அம்மாவால் சமாளித்திருக்க முடியாது. இப்போதும் வயதான காலத்தில், அப்பா இறந்த பிறகு அம்மாவுக்குத் தங்கம்மா தான் பேச்சுத்துணை.
“தம்பி மெட்ராஸ்லேர்ந்து எப்போ வந்தீங்க” தங்கம்மாவின் முகமெல்லாம் சிரிப்பு. தங்கம்மாவின் இடுப்பிலிருந்த பொடியன் என்னை அந்நியமாய்ப் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
“காலைல வந்தம்மா.. இது யாரு பேரனா?”
“ஆமா தம்பி. ரெண்டாவது பேரன். மதியம் சாப்பிட வருவீங்களா?”
“இல்லம்மா.. இன்னிக்கு கலியாணச் சாப்பாடு. சாயந்திரமா வருவேன்” அந்தப் பைய்யன் கையில் மரத்தால் செய்யப்பட்ட ஒரு தஞ்சாவூர் தலையாட்டிச் செட்டியார் பொம்மை இருந்தது. அதை வாய்க்குள் முழுவதுமாகத் திணித்து விட முயன்று கொண்டிருந்தான்.
“டேய்… பேரு என்ன சொல்லு…” ஒரு மைக்ரோ செக்கண்ட் திரும்பி என்னைப் பார்த்தவன் மீண்டும் வெடுக்கென்று திரும்பிக் கொண்டான்.
“ரவி” தங்கம்மா தான் சொன்னார்.
“டேய் ரவி… மாமாவுக்கு டாடா சொல்லு பாக்கலாம்..” ம்ம்ஹும் அவன் திரும்புவதாயில்லை. “சரிம்மா அப்புறம் பார்க்கலாம்” சொல்லி விட்டுக் கிளம்பினேன்.
மாலை தெரு முக்கில் வண்டியைத் திருப்பும் போதே வீட்டு முன் ஒரு பரபரப்பு தென்பட்டது. அம்மா, வேகமாக வெளியே வந்தவள் அதே வேகத்துடன் உள்ளே நுழைந்தாள். தங்கம்மா வேறு எதையோ தேடும் பாவனையில் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு நின்றார். வீட்டு முகப்பில் வண்டியை ஸ்டான்ட் போட்டு நிறுத்தினேன். ஜெனி கண்கள் வீங்கி அமர்ந்திருந்தாள். அவள் முன்னே பிறந்த நாள் கேக் பெட்டி பிரித்து வைக்கப்பட்டிருந்தது. பக்கத்திலேயே அண்ணன் உட்கார்ந்திருந்தான். முகத்தில் ஒரு குறும்புச் சிரிப்பு உறைந்து போயிருந்தது. தங்கம்மாவின் பேரன் என்ன ஏதென்று புரியாமல் மலங்க மலங்க பார்த்துக் கொண்டு ஜெனிக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தான். பக்கத்தில் அக்கா கையைப் பிசைந்து கொண்டு நின்றாள். எபினையும் ரோவனையும் காணோம். அங்கே ஒரு சங்கடமான அமைதி நிலவியது.
“என்னாச்சுக்கா..”
“ஜெஸிய காணோம்டா” சொல்லும் போதே கண்கள் அங்கும் இங்கும் அலைந்தது.
” சரி அதுக்கேன் இத்தனை ஆர்பாட்டம்?” என்றேன்… கொலைவெறியுடன் எல்லோரின் பார்வையும் என்னை நோக்கித் திரும்பியது. தங்கம்மாள் தான் காப்பாற்ற முன்வந்தார்கள்..
“சரி விடுங்க… கடைல போய் வேற பொம்மை வாங்கிட்டாப் போச்சு..” பொம்மை என்கிற வார்த்தை ஜெனிக்குள் ஒரு பிரளயத்தையே உண்டாக்கி இருக்க வேண்டும். “ங்ஙே…” என்று அழுகையை ஆரம்பித்து விட்டாள்.
“தங்கம்.. நீ கொஞ்சம் சும்மா இருக்கியா…” அம்மா சீறினாள். நான் இடையில் புகுந்தேன்.
“அம்மா.. நீ முதல்ல சும்மா இரு… இதெல்லாம் என்ன கோமாளித்தனம்? ஒரு பொம்மைக்கு இந்தளவுக்கு சீராட்டு தேவையா? வேற வாங்கிட்டா போச்சு. அதென்ன கிடைக்காத சரக்கா என்ன?” என்றேன்.
“டேய் நீயும் பொம்மைன்னு சொல்லாதடா…. பாப்பா அதை அவளோட தங்கச்சின்னே நினைச்சிட்டு இருக்கா. நேத்திலேர்ந்து எத்தன ஆசையா எல்லா வேலையும் பார்த்தா தெரியுமா? பாரு வாங்கிட்டு வந்த கேக்கு பாவமா கிடக்கு. வீடெல்லாம் எப்படி அலங்காரம் பண்ணிருக்கு பாரு.. இவ்ளோ ஆசை வச்சிருக்கால்லே? பாவம்டா..”
“இப்படியே கொஞ்சிக் கொஞ்சி செல்லக் கிறுக்கு ஆக்கி வச்சிருக்கீங்க அந்தப் பிள்ளய. ஜெனி நீ அழதாம்மா.. நாம் வேற பொம்மை வாங்கிக்கலாம்”
“ஹாங்… இல்ல.. எனக்கு ஜெஸி தான் வேணும். யாரே ஜெஸிய திருடிட்டாங்க.. வேணும்னே திருடிட்டுப் போய்ட்டாங்க..எனக்கு ஜெஸி தான் வேணும்..” இப்படியாக ஜெனியின் விசும்பல்களின் ஊடாக காணாமல் போனது திருடப்பட்டதானது.
“யாரும்மா திருடினது” அக்கா ஜெனியின் புலம்பலை முக்கியமாக எடுத்துக் கொண்டு விசாரித்தாள்.
“ரவி தான் ஜெஸியோட கடசியா வெளையாண்டான்” ஜெனி எந்த முக்கியத்துவமும் இல்லாமல் சாதாரணமாக சொல்லப் போய் இப்போது எல்லோரின் பார்வையும் ரவியின் மேல் திரும்பியது. தங்கம்மா சங்கடத்தில் கையைப் பிசைந்து கொண்டார். எல்லாரும் தன்னையே உருத்துப் பார்த்துக் கொண்டிருப்பது ஏன் என்பது தெரியாமல் ரவி விழித்தான். அவனுக்கு அது வேடிக்கையாய் இருந்திருக்க வேண்டும். கடகடவென சிரிக்க ஆரம்பித்தான். கையிலிருந்த தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை சுழற்றி விட்டான். அது விருக் விருக்கென்று சுழல ஆரம்பித்தது. இன்னும் சப்தமாகச் சிரித்தான். அம்மா மெல்ல அவனைக் கையிலெடுத்துக் கொண்டாள்.
“டேய் ரவிக் குட்டி.. பொம்மைய எங்கடா வச்சிருக்கே..” ரவி அம்மாவின் தலையிலிருந்து தனியே தொங்கிக் கொண்டிருந்த வெள்ளை முடிக் கற்றையை ஆர்வமாகப் பற்றிக் கொண்டான்.
“அவங்கிட்டே தான் வேற பொம்மை இருக்கே அக்கா” தங்கம்மாள் வாயெடுக்கவும்..
“அதில்ல தங்கம்.. தெரியாம எங்காவது எடுத்துப் போட்ருப்பானோ?” ரவியின் கையிலிருந்து முடியை விடுவித்துக் கொண்டாள்
“இல்ல இவன் தான் எடுத்தான் எனக்குத் தெரியும்..” ஜெனியின் குரலில் இப்போது திட்டவட்டமான குற்றச்சாட்டு இருந்தது. தொடர்ந்து அழுததில் முகம் சிவந்து விட்டது. வார்த்தைகள் கேவல்களாக திக்கித் திக்கி வெளியானது. அக்கா பொறுமையிழந்தாள்..
“டேய்… பொம்மைய எங்கடா வச்சிருக்கே” அக்காவின் குரல் உயர்ந்தது. அம்மாவின் கையிலிருந்து ரவியை வாங்கிக் கொண்டாள்.
“ஙே.. ஞ்ஞூ..” குழரலாக ஏதோ சொன்னான். பேசக் கூடத் தெரியாதவனிடம் நோண்டி நோண்டிக் கேட்டுக் கொண்டிருந்தது கொஞ்சம் அதிகப்படியாய்த் தெரிந்தது.
“அக்கா.. அவனுக்கென்னக்கா தெரியும் சின்னப்பையன். அவனை எதுக்கு மிரட்டிகிட்டிருக்கே?”
“நீ சும்மா இருடா.. இப்பல்லாம் சின்ன வயசுலயே எல்லாத்துக்கு ரொம்ப வெவரம் வந்திடுதாக்கும். நம்ம வூட்டு கழுதைங்க தான் வெளுத்ததெல்லாம் பாலுன்னு தங்கிட்ட இருக்கற அத்தினி பொருளையும் எடுத்து தானம் பண்ணுதுங்க” அக்கா வேறெங்கோ பார்த்துக் கொண்டே சொன்னாள். தங்கம்மாவின் முகம் இருண்டது.
“சரிம்மா.. ரவியே திருடிட்டான்னு வச்சிக்கோ.. நாங்க வேணும்னா காசு கொடுத்துடறோம். வேற வாங்கிக்கிடுங்க. குழந்தைய குடு முதல்ல” தங்கம்மா முகத்தில் உயிரே இல்லை. தானே எடுத்து வளர்த்த பிள்ளை தன் சொந்த பேரணுக்குத் திருட்டுப் பட்டம் கட்டியதை தங்கம்மாவால் தாங்க முடியவில்லை. கண்களில் இருந்து எந்த நேரமும் வழிந்து செல்ல கண்ணீர் காத்துக் கொண்டிருந்தது. அக்கா விடுவதாக இல்லை.
“டேய், சொல்லுடா எங்கே வச்சிருக்கே?”
“ஙீய்ய்ய்ய்…” ரவி வித்தியாசமாக ஒலியெழுப்பிக் கொண்டே அழ ஆரம்பித்தான். தங்கம்மாவின் கண்களில் இத்தனை நேரமாகக் காத்து நின்ற கண்ணீர் கீழே இறங்கியது.
“அக்கா.. கொஞ்சமாவது மனசாட்சியோட நடந்துக்கோ. ஒன்னரை வயசுக் குழந்தைக்கு என்னக்கா தெரியும். எது யாரோட பொருள்னு கூடத் தெரியாது. வலிச்சா கூட சொல்லத் தெரியாது. அவன் கிட்ட போய் அரட்டிகிட்டு இருக்கியே.. போயும் போயும் ஒரு பொம்மைக்காகவா இந்த ஆர்பாட்டம்? முதல்ல அவனை இங்க குடு” ரவியை அக்காவிடம் இருந்து விடுவித்து தங்கம்மாவிடம் கொடுத்தேன்.
“டேய் உனக்கு என்னடா தெரியும்? ஜெனி அதை பொம்மையாவே நினைக்கலை தெரியுமா? தன்னோட தங்கச்சின்னு மனசுல நினைச்சிக்கிட்டு இருக்கா? ஜெனி அழுதது மட்டும் உங்க அத்தானுக்குத் தெரிஞ்சா என்னாகும் தெரியுமில்ல? இப்ப ஜெனியை நீயா சமாதானப்படுத்த போறே? அவ அப்பாவை நீயா சமாளிக்கப் போறே? வீட்டுக்குள்ளே யாரையெல்லாம் விடறதுன்னு உங்களுக்குத் தெரியாதான்னு கேப்பாங்க. நீயே அவர்ட்ட பதில் சொல்லிக்க”
அக்கா சாடைமாடையாக தங்கம்மாவைக் குறிப்பிட்டது சரியான இலக்கைத் தாக்கியது. தங்கம்மா ஏதும் பேசாமல் வெளியே போகத் திரும்பினார். உணர்ச்சிகளற்ற முகத்தில் என்ன சிந்தனை ஓடியது என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எங்களையெல்லாம் அம்மா பெற்றிருந்தாலும் வளர்ப்பைப் பொறுத்தவரை தங்கம்மா தான் அம்மாவின் ஸ்தானத்தில் இருந்து பார்த்துக் கொண்டது. ஜெனி சிசேரியன் செய்து தான் பிறந்தாள். அக்காவால் ஒரு மாதம் வரையில் அசையக்கூட முடியாமல் படுத்த படுக்கையாய் இருந்தாள். அந்த நேரத்தில் அவளுக்குப் பீ மூத்திரம் வரை வழித்து சேவை செய்தது தங்கம்மா தான். வேற்று வீட்டுப் பிள்ளைகளாக எங்களை அவர் எப்போதும் கருதியதில்லை. தனது மகளே இப்படிச் சொல்லி விட்டாளே என்று தங்கம்மா திகைத்துப் போயிருந்தார்.
அம்மா நடக்கும் அனைத்தையும் பார்த்துக் கொண்டே நின்றாள்; தள்ளாடித் தள்ளாடி நடந்து போய் கூடத்தின் ஒரு மூலையில் மாட்டப்பட்டிருந்த இயேசு படத்தின் முன் மண்டியிட்டாள். “யேசப்பா… எப்படியாவது ஜெஸிய எங்க கிட்ட குடுத்திரும் அப்பா… இசுரவேலின் தேவனே….” அவளது ஜெபம் தொடர்ந்தது. எனது பொறுமை மொத்தமாகக் கரைந்தது.
“அடச்சீ… எழும்பி வா இங்க. மனுசங்களுக்கு இல்லாத மரியாதைய ஒரு உயிரில்லாத ஜடத்துக்கு தாரீயே? கேவலம் ஒரு பொம்மைக்குப் போய் ஜெபம் பண்றியே இத்தனை நாள் நம்ம குடும்பத்துல ஒருத்தரா இருந்த தங்கம்மாவை அக்கா இப்படி கேவலப்படுத்திட்டு இருக்கா அதைப் பத்தி ஒரு வார்த்தை கூட கேட்கணும்னு தெரியலையா?” இத்தனை நேரமாகப் பொறுமையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அண்ணன் முதல் முறையாகக் குறுக்கிட்டான்
“ஏம்மா.. இந்த கோமாளித்தனத்துக்கெல்லாம் ஒரு முடிவு வேணாமா? அது இன்னிக்குன்னு இருக்கட்டுமே? ஜெனியும் வளர்ந்த பிள்ளையாகிட்டாளே.. இனியும் இப்படி பொம்மைகளே உலகம்னு எத்தனை நாளுக்குத் தான் இருந்துடப் போறா? இத்தனை நாளா மனுஷங்களோட உலகம்னா என்னான்னு காட்டாமே வச்சிருந்தது தப்பு தானே? இனியும் அது அப்படியே இருக்கணுமா? பொம்மை அன்பையும் பொம்மைப் பாசத்தையும் தாண்டி அவளுக்கு உண்மையா மனுசங்களோட உணர்ச்சிகளைப் புரியவைக்க வேணாமா? அழுதா அழட்டும். கொஞ்சம் நேரம் அழுத பின்னே சரியாய்டுவா. இப்படி அவ கொஞ்சம் சிணுங்கின உடனே எல்லாரும் பதறியடிச்சு நிக்கறது தான் அவளுக்கு ரொம்ப தொக்கா போச்சு. கொஞ்ச நேரம் அப்படியே விடுங்க. தானே சரியாய்டும்” அண்ணன் சொல்லி முடிக்கவும், தங்கம்மாள் வெளியே செல்லத் திரும்பவும் எபின் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
எபினைப் பார்த்ததும் அங்கே ஒரு நிமிடம் எல்லோருக்கும் தூக்கி வாரிப் போட்டது. அதற்கு அவன் காரணமல்ல. அவன் கையிலிருந்த பொம்மை தான் காரணம். அது ஜெஸி.
“எங்கேடா போயிருந்தே?” அண்ணன் தான் சமாளித்துக் கொண்டு கேட்டான்.
“அது வந்து.. ஜெஸியோட கம்மல் பழசாயிடிச்சின்னு ஜெனி நேத்திக்கே சொல்லிச்சா.. அதான் சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னு அவளுக்குத் தெரியாம எடுத்துப் போய் வேற புது ஸ்டட் வாங்கிப் போட்டுக் கொண்டாறேன். ஆமா.. ஏன் எல்லாரும் இப்படி நிக்கறீங்க?” ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். யாரும் பதில் சொல்ல முன்வரவில்லை. தங்கம்மாள் ஒரு முறை எல்லோரின் முகத்தையும் வெறித்துப் பார்த்தார். முப்பது வருட நட்பு மெல்ல நடந்து வெளியேறியது.
பொம்மை கிடைத்து விட்டது. ஒரு அற்புதமான மனுஷியை அன்றோடு இழந்து விட்டோம். தங்கம்மாவின் முகத்தில் ஓடிய உணர்ச்சிகள் ஒரு கருக்கறிவாளாய் இதயத்தை அறுத்தது. இந்த குடும்பத்திற்காக இத்தனை வருடங்களில் எத்தனையெத்தனை உதவிகள் செய்திருப்பார். அதெல்லாம் ஒரு கணத்தில் என் நினைவுகளில் கடந்து சென்றது. அக்கா, ஜெஸியைக் கையில் பிடித்திருந்தாள். ஜெனியின் முகத்தில் ஒரு சந்தோஷம் பரவியிருந்தது. அக்காவின் முகத்தில் ஒரு நிம்மதி தெரிந்தது. அண்ணன், நம்பிக்கையில்லாத ஒரு முக பாவனையைக் காட்டி விட்டு தன் அறைக்குத் திரும்பி நடந்தான்.
அம்மா மீண்டும் தள்ளாடித் தள்ளாடிச் சென்று இயேசு படத்தின் முன் மண்டியிட்டாள். நன்றி சொன்னாளா மன்னிப்புக் கேட்டாளா என்று தெரியவில்லை. ஆனால், அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து சென்றதை மட்டும் பார்க்க முடிந்தது.
________________________________________________
– கார்க்கி, புதிய கலாச்சாரம், நவம்பர் – 2011
______________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]
தொடர்புடைய பதிவுகள்
பொருட்களுக்காக, நல்ல மனிதர்களை காயப்படுத்துகிற கதை. பல நாட்களுக்கு பிறகு, படித்த நல்ல சிறுகதை. வாழ்த்துக்கள் கார்க்கி. தொடர்ந்து, புதிய கலாச்சாரத்தில் எழுத வேண்டும் நீங்கள்.
மிக சிறந்த கதை. வாழ்த்துக்கள்.
http://krpsenthil.blogspot.com/2011/12/blog-post.html
ஏழைகள் நல்லவர்கள், பணக்காரர்கள் கெட்டவர்கள் என்கிற ஃபார்முலாவை முதலில் விட்டு வெளியில் வாருங்கள். ஃபார்முலாக்களைவிட்ட பிறகுதான் நல்ல சிறுகதை எழுதுவது என்பதைப்பற்றி நினைத்துப் பார்க்கவே முடியும்.
Anony,
முதலில் நீங்கள் உங்கள் கருதுகோளை சற்று மாற்றவும் .
இங்கு ஏழைகள் பணக்காரர்கள் என்று கூறவில்லையே மாறாக அன்றாட நிகழ்வுகளாக மிக சாதாரண விடயத்துக்காக மனிதம் தோற்று போவதை மிக அழகாக கூறியிருக்கிறார் மற்றும் முதலில் நீங்கள் ஏன் ஏழைகள் பணக்காரர்கள் என்ற மாயையில் இருந்து வெளியில் வரகூடாது .
மிகவும் அருமையான கதை.