Friday, May 2, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கசாமி சரணம் ஐயப்பா! விலைவாசி பாடலை கேளப்பா! - ரீமிக்ஸ்!

சாமி சரணம் ஐயப்பா! விலைவாசி பாடலை கேளப்பா! – ரீமிக்ஸ்!

-

இரு முடி சாமான்கள் விலையேற்றத்தாலும் பொதுவான விலைவாசி உயர்வாலும் மனம் புழுங்கி புலம்பும் கன்னிச்சாமிகளுக்கு இப்பாடல்கள் காணிக்கை.

_______________________________________________

பாடல் 1        இருமுடி  தாங்கி

(பல்லவி)

இரு  முடி  தாங்கி  ஒரு  மன தாகி

கடனுடனே  வந்தோம்

தெருவினில்  துரத்தும்   பார்வையை  வெல்லும்

திருவடியைக்  காண  வந்தோம்!

(அனுபல்லவி)

பஸ் டிக்கட்டு ஏறிப் போச்சு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சாமியே  ஐயப்போ
கடங்காரன்  வர்றான்  போ!

(சரணம்)

நெய் அபிஷேகம்  ஸ்வாமிக்கே
நெம்புறான்  சேட்டு  நேத்திக்கே
ஐயப்ப  மார்களும்   கூடிக்கொண்டு
ஐந்து  வட்டிக்கு  வாங்கிடுவார்
சபரி  மலைக்கு   சென்றிடுவார்
(.. சாமியே ஐயப்போ
கடன்காரன் வர்றான் பா..)

கார்த்திகை மாதம் மாலை அணிந்து
நேர்த்தியாகவே  பட்டினி  கிடந்து
பார்த்த சாரதியின் மைந்தனே- நான்
பால் விலைக் கேட்டு நொந்தனே!

இருமுடி சாமான் சந்தனம் வாங்க
ஒருவழியாகி  ’பாட்டில்’ தள்ளி
அடகு  கடைக்கார  நண்பரைத் தொழுது
அய்யனின்  அருள்மலை ஏறிடுவார்

(..சாமியே ஐயப்போ
கடன்காரன் வர்றான் பா..)

அரிசி  விலைதான்  ஏறும்  போது
அரிகரன் மகனைத்  துதித்துச்  செல்வார்
வட்டிக்  காரனும்  வந்திடுவார் – ஐயன்
வன்புலி  ஏறி  வந்திடுவார்!
கற்பூர  விலையும்  கடினம்  கடினம்
கைமாத்து  வாங்கவும்  துணை வருவார்
எரிமலை இறக்கம்  வந்த உடனே
கூடவே  பைனான்சுகாரனைக்  கண்டிடுவார்..

(..சாமியே ஐயப்போ
கடன்காரன் வர்றான் பா..)

தேக  பலம்  தா – பாத பலம் தா
தேங்கா  மூடி  யை –  திருப்பி  த்தா
தேங்கா  பழத்தை  தா  என்றால்  அவரும்
தோலையே  தூக்கி  எறிந்திடுவார்!
பாத  பலம்  தா  என்றால் – அவரும்
பாதத்தில்  அடித்திடுவார் – போலீசு

லாடத்தையே கட்டிடுவார்

(..சாமியே ஐயப்போ
கடன்காரன் வர்றான் பா..)

சபரி  பீடமே  வந்திடுவார்
அவரவர்  மடிதனை  பிடித்திடுவார்
நெய்த்  தேங்காவின்  விலையை நினைத்ததும்
கை  கால் நடுங்கி  கத்திடுவார்!

ஏத்தி விடப்பா… தூக்கி  விடப்பா
ஜெயலலிதாவ  தாங்க  முடியல
ஏத்தி  விடப்பா.. தூக்கி  விடப்பா

(..சாமியே ஐயப்போ
கடன்காரன் வர்றான் பா..)

_____________________________________

பாடல் 2    என்ன மணக்குது  எங்கே மணக்குது

என்ன மணக்குது  எங்கே மணக்குது
கல்லா மணக்குது ஐயப்பன் மலையிலே

அல்லி மலர்  மணமும் எங்கே மணக்குது
அஞ்சு  வட்டிக்  காரனின் மேலே  மணக்குது

ஒல்லித்தேங்கா  வியர்வ  நாத்தம் எங்கே மணக்குது
நம்ப  தரக்கடமூர்த்தியின் மேலே  மணக்குது

சம்பங்கி  ரோஜாவும்  எங்கே  மணக்குது
லஞ்சமஹா  பாலகனின்  மேலே  மணக்குது

பிச்சலும், புடுங்கலும்  எங்கே  மணக்குது
பிரியமுள்ள  ஆட்டோக்காரர்  மேலே  மணக்குது

குங்குமப்பூ  ஜவ்வாது  எங்கே  மணக்குது
கொலுசுக்  கடக்காரன்  மேலே  மணக்குது

மட்ட சாம்பிராணி  எங்கே  மணக்குது
மட்டப்பலகை  பாலகனின்  மேலே  மணக்குது

பன்னீரும்  சந்தனமும்  எங்கே  மணக்குது
வட்டச்  செயலாளர்  மேலே மணக்குது

கற்பூரம்  அணைஞ்சணைஞ்சு  எங்கே  மணக்குது
காய்கறி ஏவாரி  கை மேல  மணக்குது

பாங்கான  நெய்  மணமும் எங்கே  மணக்குது
பேங்கு  ஆபிசரு  பேண்ட்டுல மணக்குது

பழைய சோறு  வெங்காயம்  எங்கே  மணக்குது
கூலிக்காரர்  வாயிலதான்  குப்புனு  மணக்குது .

என்ன  மணக்குது  எங்கே  மணக்குது
கல்லா  மணக்குது  ஐயப்பன்  மலையிலே

_______________________________________________

பாடல்  3    பதினெட்டுப் படி பாட்டு

ஒன்றாம்  திருப்படி  உப்பு  பொன்  ஐயப்பா
உப்பு   ரொம்ப   விலையப்பா, என்  ஐயனே  வாங்க  உய்யப்பா!

இரண்டாம் திருப்படி  பூண்டு  பொன்  ஐயப்பா
பூண்டோடு  போகும் முன்னே  ஐயப்பா,  ஐயனே  வாங்க  உய்யப்பா !

மூன்றாம்  திருப்படி  மிளகாய்  பொன்  ஐயப்பா
வாங்கவே  வழி  இல்லப்பா,  என்  ஐயனே  வாங்க  உய்யப்பா!

நான்காம்   திருப்படி  புளி  பொன்  ஐயப்பா
வாங்க   நாக்கு   தள்ளுதப்பா, ஐயனே  என்னை  உய்யப்பா!

ஐந்தாம்  திருப்படி  எண்ணைய்  பொன்  ஐயப்பா

விலையோ  ஐயோ அப்பா,  ஐயனே  வாங்க  உய்யப்பா!

ஆறாம்  திருப்படி  முட்டை பொன்  ஐயப்பா
வீட்டுல  கோழி  இல்லயப்பா,  ஐயனே  ரெண்டு  உய்யப்பா!

ஏழாம்  திருப்படி  பாலு  பொன் ஐயப்பா
வெல ஏறிப் போச்சு ஐயப்பா,  அய்யனே பச்சத் தண்ணியில் உய்யப்பா!

எட்டாம்  திருப்படி  பஸ் டிக்கெட்  பொன்  ஐயப்பா
ஏத்திட்டாளே  ஐயப்பா,  எதுத்து புலிய விட்டு பாரப்பா!

ஒன்பதாம் திருப்படி  கரண்ட்டு  பொன்  ஐயப்பா
கட்டணம் ஷாக்கடிக்குதுப்பா, அய்யனே கரண்ட்டு பில்ல கட்டப்பா!

பத்தாம்  திருப்படி  பள்ளிக்கூடம்  பொன் ஐயப்பா
படிக்க சொத்து இல்லப்பா, அய்யனே கான்வெண்ட்டு பல்லத்தானே பிடுங்கப்பா!

பதினோறாம் திருப்படி கூலி வேலை பொன் ஐயப்பா
கொல்லுறான்  முதலாளியப்பா, அய்யனே உன் பாயும் புலி எங்கப்பா!

பன்னிரெண்டாம்  திருப்படி துக்ளக் சோ  பொன் ஐயப்பா
புடுங்கல் தாங்கல அய்யப்பா,  அய்யனே காட்டுக்கு புடிச்சுட்டு போயிடப்பா!

பதிமூனாம்  திருப்படி  ராகுல்காந்தி  பொன்  ஐயப்பா

பதினான்காம்  திருப்படி ப.சிதம்பரம்  பொன்  ஐயப்பா

பதினைந்தாம்  திருப்படி மோடி  பொன்  ஐயப்பா

பதினாறாம்  திருப்படி   டாடா  பொன்  ஐயப்பா

பதினேழாம்  திருப்படி  அம்பானி  பொன்  ஐயப்பா

மொத்தமும்  சதிவலையப்பா, தப்பிச்சு  நீயாவது  உய்யப்பா!

பதினெட்டாம்  திருப்படி  அமெரிக்கா  பொன்  ஐயப்பா
மன்மோகன்  அவன்  கையப்பா,  ஐயனே  ஒரு  அம்ப விட்டு உய்யப்பா!

(அறிந்தும், அறியாமலும், தெரிந்தும், தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொருத்து காத்து இரட்சிக்க வேண்டும். ஓம் சத்தியமான பொன் பதினெட்டாம் படிமேல் வாழும், வில்லாளி வீரன், வீரமணிகண்டன், காசி, இராமேசுவரம், பாண்டி, மலையாளம் அடக்கியாளும், ஓம் ஹரிஹர சுதன், ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சாமியே சரணம் ஐயப்பா!)

குறிப்பு;  எந்தக் குற்றமும் செய்யாதவர்களுக்கு மேற்கண்ட பாராயணம் உசிதமில்லை.

_______________________________________________

–              துரை.சண்முகம்

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்