Wednesday, October 9, 2024
முகப்புவாழ்க்கைஅனுபவம்மறக்கவொண்ணா மாஸ்கோ நூல்கள் !

மறக்கவொண்ணா மாஸ்கோ நூல்கள் !

-

மறக்கவொண்ணா மாஸ்கோ நூல்கள் !கண், இது நாள் காண விரும்பிய காட்சி இதுவோ!’ எனுமாறு அந்த நூற்குவியலைப் பார்க்கப் பார்க்க விழிகள் வியப்பிலும், மலைப்பிலும், விருப்பிலும் மலர்ந்து போனது. அத்தனையும் சோவியத் ரசியாவில் அச்சிடப்பட்ட நூல்கள். மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்தாரால் தயாரிக்கப்பட்ட நூல்கள். நான் பார்த்தபோது ஏறக்குறைய இருநூறுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் தமிழும் ஆங்கிலமுமாக புத்தகங்கள் குவிந்துக் கிடந்தன. ஒரு நாலு புத்தக அட்டை தயாரிக்கவே என்னவாறு வடிவமைக்கலாம் என்று நாம் திணறிப் போகிறோம். ஆனால், அங்கு குவிந்திருந்த ஒவ்வொரு புத்தக அட்டையும் மனித முகங்களைப் போல வெவ்வேறு அழகாய் விளங்கின. முக்கியமாக அவைகளில் அழகின் மிரட்சியின்றி தொழில்நுட்பத்தின் தேர்ச்சியோடு மனித அழகியலின் உணர்ச்சியும், ஈர்ப்பும் வண்ணங்களாக நெருக்கம் காட்டின.

குறிப்பாக, வெளிர்பச்சை, இலைப்பச்சை, ஒருவித மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் அன்று நான் பார்த்த ‘தாய்’ நாவலின் அழகும் கட்டமைப்பும் வடிவமைப்பும் அடுத்தடுத்த அதன் மறுபதிப்புகளில் பார்க்க முடியாத ஒன்று. குழந்தைகள் கையில் புத்தகம் கிடைத்தால் எப்படி சுவைத்துப் பார்த்து, தீண்டிப் பார்த்து, விரித்துப் பார்க்குமோ அப்படியொரு மனநிலையில் நூல்களைத் தழுவி அலசிப் பார்த்தேன் நான். நம் நாட்டு அனுபவத்தில் ஆங்கில நூல் உசத்தியாகவும், தமிழ் நூல் தரம் குறைந்தும் தயாரிக்கப்படுமோ என்ற எண்ணத்தோடு ஒரு ஆங்கில நூலையும் ஒரு தமிழ் நூலையும் எடுத்து எனது முட்டாள்தனத்தை முகர்ந்து பார்த்தேன். இரண்டு தாள்களிலும் ஒரே வாசம்தான். இரண்டைக் கிள்ளினாலும் அதே உணர்ச்சிதான். ‘பார்ப்பானுக்குப் பூணூல், உழைப்பவருக்கு அரைஞாண் கயிறு’ என்று பழக்கப்பட்ட நாட்டில், சோவியத் தயாரித்த எல்லா நூல்களும் ஒரே நூலாக அதாவது ஒரே தரமாக இருந்ததே எனக்கு மகிழ்ச்சியும் வியப்பையும் கொடுத்தது.

மறக்கவொண்ணா மாஸ்கோ நூல்கள் !நூல்களின் தலைப்பையும் பொருளடக்கத்தையும் பார்த்து வியந்துபோன கூட வந்த நண்பர், ”அப்பா, பிரம்மாண்ட உழைப்புங்க… இவ்வளவு விசயம் வெளிய தெரியாம கெடக்கு பாருங்க…” என்று நெகிழ்ந்து போனார். ஆம், உண்மைதான். உலகெங்கும் மனித அழிவுக்கு ஆயுதம் கொடுக்கும் அமெரிக்காவைப் பீற்றித் திரியும் அறிவாளிகள் உலகத்தில், மனித அழகுக்கு உலகெங்கும் அறிவைக் கொடுத்த சோவியத் ரசியாவின் உன்னத பங்களிப்பைப் பற்றிப் பேசுவது கிடையாது. அனைவருக்கும் கல்வியறிவு மறுக்கப்பட்ட கேடுகெட்ட பார்ப்பன இந்து மதம் கோலோச்சும் நம் நாட்டில், அனைவருக்கும் சமூக அறிவையும், அரசியல் அறிவையும் வாரி வழங்கிய மாஸ்கோ நூல்கள் உலக முதலாளித்துவத்தால் இறுக்கிக் கட்டப்பட்ட நம் விழிகளின் திரைகளை அவிழ்த்து விட்டன என்பது எவ்வளவு நன்றியோடு நினைக்கப்பட வேண்டிய விசயம்…

அன்றைய காலகட்டத்தில் தமிழகமெங்கும் நடமாடும் புத்தகக் காட்சி வடிவில் இதனைக் கொண்டு சென்ற நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தாரும் நினைக்கப்பட வேண்டியவர்கள். ‘சோவியத் ரசியா என்றால் வெறும் கம்யூனிசத்தைப் பிரச்சாரம் செய்யும் நூல்கள்தான்’ என்று சில குருட்டுப்பூனைகள் கூறுவது எவ்வளவு அபத்தம் என்பதை அங்கு எண்ணிறந்த தலைப்புகளில் இறைந்து கிடந்த பல்துறை நூல்களைப் பார்த்து புரிந்து கொள்ள முடிந்தது. முக்கியமாக, ‘அனைவருக்குமான’ என்ற தலைப்பில் உடல் இயங்கியல், வேதியியல், விலங்கியல், கணிதவியல்… என்ற வரிசையிலான நூல்கள் கம்யூனிசத்துக்கு தொடர்பில்லாதவர்களின் பொது அறிவையும் சமூக அறிவையும் வளர்ப்பதில் பெரும்பங்காற்றும் அரிய நூல்களாகும்.

மறக்கவொண்ணா மாஸ்கோ நூல்கள் !சங்கம் வைத்து ஆண்ட மன்னர்களாயிருக்கட்டும், சட்டசபை வைத்து ஆளும் தமிழாய்ந்த தமிழர்களாயிருக்கட்டும்… இல்லை மாவட்டத்துக்கு மாவட்டம் அறிவைப் புதைக்கும் சுடுகாடாய் விளங்கும் இத்தனைப் பல்கலைக்கழகங்களாய் இருக்கட்டும், இவற்றில் தண்ட சம்பளம் வாங்கிக் கொண்டு ஆறுகால் நாற்காலிகளாய் அலையும் ஆராய்ச்சியாளர்களாக இருக்கட்டும்… இவர்களால் தமிழில் தரமுடியாத பல்வேறு இயற்கை மற்றும் உலகக் கண்ணோட்டமுள்ள பல நூல்களை மாஸ்கோ பதிப்பகம் அழகுத் தமிழில் அச்சிட்டுக் கொடுத்திருந்தது.

‘மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவனானான்’, ‘நான் ஏன் தந்தையைப் போல இருக்கிறேன்’, ‘பூமி எனும் கோள்’, ‘பொழுதுபோக்கு பௌதிகம்’ என்று பல நூல்களைப் பார்க்கையில், இப்படிப்பட்ட நூல்களை எழுதித் தயாரிக்கவில்லையென்றாலும் இங்குள்ள பாடநூல் குழுவினர் இவைகளையெல்லாம் பாடநூல்களாக வைப்பதற்கு என்ன கேடு வந்தது! வைத்தால் நம் அருமைப் பிள்ளைகளின் அறிவு வளர்ச்சிக்கு அதுவும் தாய்மொழியில் எவ்வளவு பயனுள்ளதாய் இருக்கும் என்று இங்குள்ள எருமைகளின் மீது ஆத்திரம்தான் வருகிறது. அறிவியல் நூல்கள் மட்டுமல்ல, உலகக் கண்ணோட்டமுள்ள இலக்கிய விமர்சனங்கள், நாவல்கள், கார்க்கி, லியோ டால்ஸ்டாய், ஆண்டன் செகவ், மிகைல் சோலகேவ் போன்றோரின் குறிப்பிடத்தகுந்த கதைகள் மட்டுமல்ல ஓஸ்த்ரோவ்ஸ்க்கி, பரிஸ் வசிலியெவ், ஜான் ரீட் போன்ற செயற்களத்தின் போராளிகளையும் படைப்பாளிகளாக உலகுக்குக் காட்டி உத்வேகமளித்தவை மாஸ்கோ நூல்கள்.

இன்று அக்கிரகாரத்து கழுதையாகவும், அமெரிக்க கைடாகவும் விளங்கும் ஜெயகாந்தன் கூட ருஷ்யப் புரட்சி சித்திரக்கதையின் மொழிபெயர்ப்பில் அசத்தியிருப்பார். ‘போயசு தோட்டமே நல்ல ஆள்’ என்று போய்க் கிடக்கும் தா.பாண்டியன்தான் ‘நிலம் என்னும் நல்லாள்’ நூலின் மொழியாக்கம் என்றால் உங்களால் நம்ப முடியுமா? இப்படி தமிழகத்தில் பலரிடமும் உள்ள படைப்பாற்றலையும், மனிதக் கூறையும் வெளிக்கொணர்ந்தவை மாஸ்கோ நூல்கள். ரா.கிருஷ்ணையா போன்ற எண்ணிறந்த மொழியாக்கப் படைப்பாளிகளை அடையாளம் காட்டியவையும் மாஸ்கோ நூல்கள்தான்.

மறக்கவொண்ணா மாஸ்கோ நூல்கள் !சொல்ல பல இருந்தும் சுருக்கமாக இவைகளை நினைவு கூறும்படி சமீபத்தில் மீண்டும் நியூ செஞ்சுரி குடோனுக்கு சென்று மாஸ்கோ நூல்களை காணும்படி நேர்ந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு நான் பார்த்த காட்சி இப்போது இல்லை. விசாலமான இடத்திலிருந்து மெல்ல மெல்ல கழிக்கப்பட்ட மாஸ்கோ நூல்களின் மிச்ச சொச்சம் அந்த வளாகத்தின் கடைசி தட்டுமுட்டு சாமான்கள் போடப்படும் ஒரு தரமற்ற அறைக்குள் மூச்சு திணறும்படி கொட்டிக் கிடந்ததைப் பார்த்து நெஞ்சம் புழுங்கியது. ஏறத்தாழ கவனிப்பாரின்றி கைவிடப்பட்டு குப்பை மேடாக அந்த நூல்கள் கொட்டிக் கிடந்தும் அதன் கெட்டி அட்டைகள், தாள்களை இறுகப் பிடித்துக் கிடந்தது. சும்மா இல்லை, சோவியத் பாட்டாளி வர்க்கத்தின் உறுதியான சோசலிச உழைப்பின் அடையாளம் அது.

வெறும் தொழிலுக்காக இந்த வேலையில் ஈடுபடுபவர்களால் இப்படி ஒரு பொறுப்புணர்ச்சியுடன் கூடிய நூல் தயாரிப்பை செய்ய முடியாது. ஒரு நூல், அது 1974ல் அச்சிடப்பட்டிருக்கிறது. 37 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த நூலின் முதுகில் இருக்கும் கம்பி துருவேறாமல், திசை விலகாமல் ‘கூலியுழைப்பும் மூலதனமும்’ என்ற மார்க்சின் படைப்பை மதிப்புடன் பாதுகாத்து வைத்திருக்கிறது. திசை விலகிய நிறுவனமும் இதன் மதிப்பறியாமல் குப்பையாக கொட்டியிருக்கிறது. இத்தனை அலட்சியங்களுக்குப் பிறகும் மாஸ்கோ நூல்களின் வண்ணங்களோ, தாள்களின் தன்மையோ சீர்குலையாமல் இருப்பதைப் பார்க்கையில் எத்தனைப் பாட்டாளி வர்க்கக் கரங்களின் விருப்பார்வத்துடனும், முன்முயற்சியுடனும் இந்த நூல்கள் உலகுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என்ற உணர்ச்சி நெஞ்சில் நிறைகிறது.

நான் புத்தகங்களைத் தேடிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் அங்கே காவலாளியாய் குடியிருக்கும் நேபாளி ஒருவரின் நான்கு வயது குழந்தை லெனினின் ‘சர்வாதிகாரப் பிரச்சினையின் வரலாற்றைப் பற்றி’ என்ற நூலை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு, பறிப்பவர்களிடம் தரமாட்டேன் என்று பிடிவாதமாக நூலை இழுத்து தனது வெற்றுடலின் நெஞ்சோடு அனைத்துக் கொண்டான். புரியாத மனங்களுக்கு குழந்தையின் குறிப்பு அது.

_________________________________________________

– புதிய கலாச்சாரம், நவம்பர் – 2011

________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. Dear Vinavu
    good article. in fact i was drawn to the politics only by the Progress publishers books which I purchased ot for just 3 rs. great people. also credits can go to the Peking press. they have also done a good job.
    regards
    GV

  2. ‘பொழுதுபோக்குப் பௌதிகம்.’ என் நண்பன் வீட்டுப் பரணையிலிருந்து தற்செயலாகக் கிடைத்தது. ஒவ்வொரு பக்கமும் மிக்க மதிப்புடையது. படிக்கப் படிக்கப் புதுப்புது அறிவியற் செய்திகள். புதுப்புது உதாரணங்கள். புதிய விளக்கங்கள். கோடுகளாலேயே (line art) வரையப்பட்ட அழகிய படங்கள்.ஒரு தந்தை மகனுக்குச் சொல்வதுபோல எடுத்துச் சொல்லிக்கொண்டேபோகும். இந்தப் புத்தகம் எனக்கு என் பள்ளிப் பருவத்திலேயே கிடைத்துவிட்டதால், நான் அதிர்ஷ்டத்தை நம்பவேண்டியிருக்கிறது!

    • நல்லது தோழர், எனக்கும் கிடைத்த முதல் நூல் பொழுதுபோக்கு பெளதிகமே, அதுவே எனக்கு முன்னேற்ற பதிப்பகத்தை அறிமுகப்படுத்தியது. ருஷ்யா என்றால் என்னவென்றே தெரியாத வயதில் கிடைத்த அந்நூலே இன்று ஒரு உயர்ந்த நோக்கத்திற்கு கொண்டுவந்திருக்கிறது. நன்றி.இன்று அந்நூல்களை மீண்டும் அடையும் வழி இருக்கிறதா?தயவு செய்து சொல்லவும்….

    • தற்போது ‘பொழுதுபோக்குப் பௌதிகம்.’ என் சி பி எச் யில் கிடைக்கிறது. விருப்பம் இருந்தால் வாங்கி படிக்கலாம்.

      என்.சி.பி.எச் சை குறை செல்வது எந்த விதத்திலும் நியமில்லை, சோவியத்திலிருந்து எந்தனை ஆண்டுகளுக்கு முன இந்நூல்கள் வந்தது என்பதை நினைத்து பார்க்க வேண்டும், இவ்வளவு ஆண்டுகளாக அதை பாதுகாத்து விற்றுவந்ததை கொச்சைப்படுத்துவது நியாயமே இல்லை. மீதமுள் நூல்கள் முலையில் குவிந்து கிடக்கின்றன என்றால் அது மீதமான நூல்கள் தான் அதான் அதந்த நிலைமை. இந்தியாவில் என்.சி.பி.எச் மட்டும் சோவிய்த் நூலை விற்றுவரவில்லை. மற்ற மாநிலங்களில் அந்நூல்களுக்கு ஏற்பட்ட கதி என்ன என்பதை தெரியாமலேயே பேசி வருகின்றீர்கள், மாஸ்கோ நூல்கள் இத்துபோகுமளவிற்கு இருபபில் குறைந்து போன நிலையிலும் தான் அந்நூல்கள் இன்று இவ்வாறு முலையில் கிடக்கிறது, அந்த மீத முள்ளவையும் விரும்பியவர்கள் இன்றும் வாங்க முடியும் என்பதையும் நினைத்துக கொள்ளுங்கள்.
      ‘பொழுதுபோக்குப் பௌதிகம்.’தைப் படிக்க முடிந்தவரால் மாற்ற அரசியல் நூல்களை படிக்க முடியவில்லை என்பது மொழியாக்க சிக்கல் அல்ல அந்த துறைசார்ந்த அறிவின் குறைபாடேயாகும். மொழியாக்க நூல்கள் வந்து சுமார்50 ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்டன. மொழியாக்கத்தை தரப்படுத்துதல் செய்ய வில்லை என்பதை என்.சி.பி.எச் யை மட்டும் குறை கூறி பயனேதும் இல்லை. நாம் அனைவரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
      பின்வரும நமது சந்ததியருக்கு இதே பதிலைக் கொடுத்து நமது வேலையினை தட்டிக் கழிப்பது பயனுள்ள நடவடிக்கையாகாது.

      “மதம் பற்றி” என்ற மார்க்ஸ் எங்கெல்ஸ் நூல் தோழர் ரகுநாதன் அவர்களால் 50 ஆண்டுகளுக்கு முன மொழியாக்கம் செய்யப்பட்டது, அதில் இருந்து மூன்று எங்கெல்சின் கட்டுரைகள் எடுத்து தனியாக முகம் பதிப்பகம் அண்மையில் “வரலாற்றில் கிறிஸ்தவம்” என்ற பெயரில் தோழர் க.காமராசன் அவர்கள் இன்றைய தமிழில் மொழியாக்கம் செய்து வெளிவந்துள்ளது, http://abouttamilbooks.blogspot.in/2012_02_01_archive.html இதனை அறிந்து படிக்க வேண்டியது நமது கடமை பழங்கதையை பேசிவிட்டு இன்றைக்கு செய்ய வேண்டியதை செய்யாமல் மீண்டும் இருபது ஆண்டுகள் கடத்திவிட்டு புலம்பி பயனேதுமில்லை. என்னிடம் மாஸ்கோ அரசியல் நூல்கள் இருக்கிறது, மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் எழுதிய தமிழ் நூல்கள் கிட்டத்தட்ட அனைத்தும் என்னிடம் இருக்கிறது.

      லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும” “அரசும் புரட்சியும்” என்ற மொழியாக்க நூல்களை படித்த பின் தான் தமிழ் மொழியில் அனைத்து துறைகளில் எழுதி முடியும் என்ற நம்பிக்கை எனது சின்ன வயதிலேயே தோன்றியது. ஆனால் மொழியாக்க குறைபாட்டை மட்டும் சொல்பவர்கள் குறிப்பிட்டு மொழியாக்க சிக்கலை கூறாமல் பொதுவாக மொழியாக்க அனைத்தையும் குறிப்பிடுவது மக்களை தவறான கருத்திற்கே இட்டுச் செல்லும, இன்றைய தமிழில் மொழியாக்கம் செய்து வருவதை படித்தும் அதற்கான முயற்சியை எடுப்பவருக்கு உதவுவதுமே இன்றைய நமது தேவை.

  3. தோழர்
    மிக முக்கியமான ஒரு விஷயத்தை ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.
    வாழ்த்துக்கள்

  4. நியு செஞ்சுரி புக் கவுசில்… மிச்ச மீதி இருக்கும் புத்தங்கள் கிடைக்கலாம்… அவைகள் பழையதாக இருக்கும்… கிடைப்பது அரிதே…

  5. //அனைவருக்கும் கல்வியறிவு மறுக்கப்பட்ட கேடுகெட்ட பார்ப்பன இந்து மதம் கோலோச்சும் நம் நாட்டில்//

    வள்ளுவர், அவ்வையார் மாணிக்க வாசகம் …யார் பார்பனர் ? ஆக பார்பனர்களால் வளர்க்கப்பட்டதா தமிழ் மொழி ?
    பார்பனர் அல்லாதோர் யாரும் கல்வி கற்க கூடாது என்று ஆணை இட்ட தமிழ் மன்னன் யார் என்று தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளேன்.
    ஆதி த்ரிராவிடர்கள் மட்டுமே கல்வி , தொழில் மட்டும் நில உரிமை அனைத்தும் மறுக்க பட்டவர்கள்.

    // சங்கம் வைத்து ஆண்ட மன்னர்களாயிருக்கட்டு//
    அவர்கள் பார்பனரை மட்டும் வைத்து சங்கம் நடத்தினார்களா ?

    புத்தகம் என்றைக்கும் செல்வம் தான். அதனால் தான் சரஸ்வதி என்னும் கல்வி கடவுளை கொண்டுள்ளது பார்பன மதம்.
    சரஸ்வதி பூஜைக்கு வைக்க என்றாவது புத்தகம் வாங்கட்டும் என்று சாங்கியம் வைத்தது பார்பன மதம்.

    //சர்வாதிகாரப் பிரச்சினையின் வரலாற்றைப் பற்றி’ என்ற நூலை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு, பறிப்பவர்களிடம் தரமாட்டேன் என்று பிடிவாதமாக நூலை இழுத்து தனது வெற்றுடலின் நெஞ்சோடு அனைத்துக் கொண்டான். புரியாத மனங்களுக்கு குழந்தையின் குறிப்பு அது.//

    கிம் ஜாங் இன் ப்ரோபகன்டாவை விட மோசமாக உள்ளது.

    • //வள்ளுவர், அவ்வையார் மாணிக்க வாசகம் …யார் பார்பனர் ? ஆக பார்பனர்களால் வளர்க்கப்பட்டதா தமிழ் மொழி ?
      பார்பனர் அல்லாதோர் யாரும் கல்வி கற்க கூடாது என்று ஆணை இட்ட தமிழ் மன்னன் யார் என்று தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளேன்.
      ஆதி த்ரிராவிடர்கள் மட்டுமே கல்வி , தொழில் மட்டும் நில உரிமை அனைத்தும் மறுக்க பட்டவர்கள். //

      சமூகத்தின் ஒரு பகுதி மக்களுக்கு கல்வி மறுக்கப்படவே இல்லையா இந்தியாவில் அப்படி மறுக்கப்பட்டதென்றால் ஏன் மறுக்கப்பட்டது அதுக்கு பதில் சொல்லுங்க

      • ஆதி த்ரிராவிடர்கள் மட்டுமே கல்வி , தொழில் மட்டும் நில உரிமை அனைத்தும் மறுக்க பட்டவர்கள்.

        Only dalits suffered. Only they are denied education,land and business.

        It is not that only paarpaans denied the education for them.
        Land owners and business owners also wanted to keep them uneducated so that they can leverage cheap labor.

        Why only blame Paarpaans for everthing? Because they are minority.
        Vinavu does not have spine to criticize other community

        • /Why only blame Paarpaans for everthing? Because they are minority.
          Vinavu does not have spine to criticize other community//

          பார்பனியம் என்பது இன்றைய முக்கிய முதல் முரண்பாடில்லை ஏனெனில் உற்பத்தி சக்திகள் வளர்ந்து முதலாளித்துவ உற்பத்தி தொடங்கியதும் சாதிய கட்டுகளை உடைத்து கொண்டு சமூகம் முன்னேறி வருகிறது .

          மக்களை வர்க்க ரீதியாக அணிதிரட்டாமல் சாதிய ரீதியான வாதங்களை பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை

          ஆனால் பார்பனர்களால் கல்வி மறுக்கப்பட்டது உண்மையே ஆனால் இன்று உற்பத்தி சக்திகளை கையில் கொண்டவர்களாகவோ அல்லது தீர்மானிக்கும் சக்தியாகவோ பார்பனர்கள் இல்லை என்பதே நிதர்சணம்

          இப்போதும் பார்பனர்களின் மேல் தாக்குதல் நடத்துவது பெரியாரிசம்

          பெரியாருக்கும் கம்யூனிசத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லை

          • //ஆனால் பார்பனர்களால் கல்வி மறுக்கப்பட்டது உண்மையே //
            Paarpaans denied the education
            Business owners denied the right for business
            Land owners denied the right for land.

            Half truth is a lie.

            Why only blame Paarpaans?

            By the way If paarpaans are invaders, why should they teach our mother tongue tamil to us? And how is that possible?

            இப்போதும் பார்பனர்களின் மேல் தாக்குதல் நடத்துவது பெரியாரிசம்
            I think this site belongs to Kim jong comrades.

            • //By the way If paarpaans are invaders, why should they teach our mother tongue tamil to us? And how is that possible?//

              பார்பனர்கள் நிலவுடமை சமூகத்தின் கருத்துகோள்களை உருவாக்கும் வேலையை செய்து வந்தவர்கள் அந்த காலத்தின் அறிவிஜீவிகள்னு வச்சிகங்க .

              தமிழ் நாட்டில் பார்பனர்கள் வந்தது எந்த காலத்தில்னு ஆராய்ந்தீர்கள் என்றால் அவர்களின் மற்ற செயல்பாடுகளுக்கும் காரணம் கிடைக்கும்

              மற்றபடி பார்பனிய கருத்தியல் என்பது நிலவுடமை சமூகத்தின் மேற்கட்டுமானம்

              இப்போ பார்பனியத்தை திரும்ப கொண்டு வந்துடலாம்னெல்லாம் சொல்வது மடமை

              • ////By the way If paarpaans are invaders, why should they teach our mother tongue tamil to us? And how is that possible?////

                மிக நல்ல கேள்வி பார்பனியம் கல்வியை மறுத்தது என எழுதிய வினவு இதற்கு பதில் சொல்லவில்லையே ஏன்னு தெரியலை

  6. பல நூறு மொழிகள் பேசும் உலக மக்கள் அனைவருக்குமே அறிவமுது ஊட்டிய சோவியத் ருசியா நன்றிக்குரியதாக என்றென்றும் மக்கள் மனதில் தங்கியிருக்கும்.

    நான் பள்ளிச்சிறுவனாக இருந்தபோது எங்கள் ஊர் கிளை நூலகத்தில் அந்த புத்தகங்கள் புதுவரவாக வந்திறங்கிய சமயத்தில் அவை பெரும் வரவேற்பை பெற்றன.அவற்றை படிக்க மாணவர்களிடையே போட்டா போட்டியே இருக்கும்.

    அந்த புத்தகங்கள் ஒன்றில் படித்த வினா விடை வடிவிலான கதை ஒன்று.நீண்ட காலம் கடந்து விட்டதால் முழுமையாக,கோர்வையாக சொல்லும் அளவுக்கு நினைவில்லை. முடிந்த அளவுக்கு.

    ஆசிரியர்;உலகின் மிக வலிமையான உயிரினம் எது.

    மாணவன்;திமிங்கலம்.

    ஆசிரியர்;அது கடலிலும் சேர்த்து.நிலத்தில் மட்டும் என்றால்.

    மாணவன்;யானை.

    ஆசிரியர்;அந்த யானையை ஓரிடம் விட்டு ஓரிடம் எப்படி கொண்டு செல்கிறார்கள்.

    மாணவன்;ரயிலில் கொண்டு செல்கிறார்கள்.

    ஆசிரியர்;அந்த ரயிலை இழுத்துச் செல்வது யார்.

    மாணவன்;எஞ்சின்

    ஆசிரியர்;அந்த எஞ்சினை ஓட்டிச் செல்வது யார்.

    மாணவன்;மனிதன்.

    ஆசிரியர்;அப்படியானால் உலகின் வலிமையான உயிரினம் ”மனிதன்தான்”

  7. பொழுதுபோக்கு பௌதீகம் உட்பட தோழர்கள் கையிலிருக்கும் நூல்களை வலையேற்றலாமே? வருங்காலத் தலைமுறைக்குச் செய்யும் பெருந்தொண்டாக இருக்குமல்லவா? என்னால் ஆன உதவிகளைச் செய்யச் சித்தமாயிருக்கிறேன்.

  8. நம்ம தளம் பக்கம் வந்துட்டுப் போங்க. 1,000-ம் மேற்பட்ட தமிழ் படைப்புகள் முற்றிலும் இலவசமாக பெறலாம்.

    http://www.openreadingroom.com

    பி. கு: அதிகமாக இறக்கம் செய்யப்படும் நூல்களில் மாக்சிம் கார்க்கியின் தாய், மற்றும் டால்ஸ்டாய் கதைகள் இடம்பெறுகின்றன.

  9. ஆம். பள்ளி நாட்களில் பல அருமையான, மிக மலிவான, மிர் மற்றும் ப்ரோக்ரெஸ் பதிப்பக நூல்கள் மூலம் பெரும் மகிழ்ச்சியை அடைந்திருக்கிறேன். அவை இன்று இல்லாமல் இருப்பது வருத்தமே. முக்கியமாக என்றும் மறக்க முடியாது ‘குழந்தைகளும் குட்டிகளும்’ : வளர்ப்பு பிராணிகள் மற்றும் அதை வளர்ந்த சிறுவர், சிறுமிகள் பற்றி. வாஸ்கா என்ற புலி மற்றும் நரி, மான்கள் பற்றிய அருமையான சித்திரங்கள். என்றும் மறக்க முடியாதவை.

    மற்றபடி, சில நூல்களின் மொழியாக்கம் படிக்க லகுவாக இல்லை. அடிப்படை விஞ்ஞானம் பற்றி அன்று எளிமையாக, மிக மிக மலிவாக சோவியத் நூல்கள் தான் கிடைத்தன.

    • ஆமாம். இந்தக் கருத்தில் நண்பர் அதியமானோடு 100 சதவிகிதம் ஒத்துப்போகிறேன். ஏதோ போனால் போகிறதென்று மொழிபெயற்தாற்போலிருக்கிறது. ஒருமுறைக்கு மூன்றுமுறை படித்தால்தான் புரியும். அவை இயல்பான மொழிபெயற்பிலில்லை. அவ்வாறு இயல்பான மொழிபெயற்பில் புத்தகம் அச்சேற்றப்பட்டிருந்தால், ‘அனேகம்பேருக்கு’ மார்க்சியம் சுலபமாய்ப் புரிந்துபோயிருக்கலாம்.

      எனினும்,’பொழுதுபோக்கு பௌதிகத்தை’ என்னால் விட்டுக்கொடுக்க முடியாது. ஒருக்கால் அந்தப் புத்தகத்தை ‘புரிந்து படித்தேயாகவேண்டும்’ என்கிற சூழ்நிலையில் நான் அதைப் படித்திருக்கலாம்..

  10. படிக்க ஆவல் இருந்த நேரத்தில் எனக்கு இப்படியான புத்தகங்கள் வாங்க இயவில்லை. புத்தகம் வாங்க இயலும்போது புத்தகமும“ கிடைப்பதில்லை. படிக்கவும் முடிவதில்லை.

  11. எளிமையாக அறிவியல் சொல்லிகொடுத்த எந்த NCBH நூலும் புரியாமல் இருந்தது இல்லை ஆனால் கம்யுனிசம் ideaism materialism மற்றும் ரஷ்ய சமூக அறிவியல் பற்றிய நூல்கள் இன்று போல் போதுமான கலைச்சொற்கள் இல்லாமல் கடினமாய் இருந்தது அறிவியல் நூல்கள் மற்றும் சிறுவர் இலக்கியங்கள் தரமும் உள்ளடக்கமும் அவ்வளவு அற்புதம் விலையோ மிகமிக மலிவு.

    • //கம்யுனிசம் ideaism materialism மற்றும் ரஷ்ய சமூக அறிவியல் பற்றிய நூல்கள் இன்று போல் போதுமான கலைச்சொற்கள் இல்லாமல் கடினமாய் இருந்தது /மொழி பெயர்ப்பில் பெரும் குறை இருந்தது உண்மையே

  12. என்.சி.பி.எச்.இப்போது பெரிய வர்த்தக நிறுவனமாகிவிட்டது.மலினமான சந்தை எழுத்தாளார்களின் குப்பைகளுக்கு மத்தியில் சில நல்ல நல்ல நூல்கள் தலைகட்டுகின்றன.கம்யூனிச நூல்கள் கிடங்கில் கொட்டப்பட்டுள்ளன.போலி கம்யூனிஸ்டு தலைவர்களிடமாவது அந்த நூல்கள் இருக்குமா?இருக்காது,தேவையுமில்லை.பழைய நூல்களை கம்யூனிஸப் புரட்சியை நம்புகிறவர்கள் மட்டுமே வைத்திருப்பார்கள்.அவை பாட்டாளி மக்களின் உழைப்பில் உருவான பொக்கிசங்கள்.உண்மையான ஆதங்கம் கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ரகு என்பவர் தேவையில்லாமல் திசைதிருப்புகிறார்.கட்டுரையின் நோக்கம் எதுவோ அதைப் பற்றி பேச வேண்டும்.

  13. // நம் நாட்டு அனுபவத்தில் ஆங்கில நூல் உசத்தியாகவும், தமிழ் நூல் தரம் குறைந்தும் தயாரிக்கப்படுமோ என்ற எண்ணத்தோடு ஒரு ஆங்கில நூலையும் ஒரு தமிழ் நூலையும் எடுத்து எனது முட்டாள்தனத்தை முகர்ந்து பார்த்தேன். இரண்டு தாள்களிலும் ஒரே வாசம்தான். இரண்டைக் கிள்ளினாலும் அதே உணர்ச்சிதான். ‘பார்ப்பானுக்குப் பூணூல், உழைப்பவருக்கு அரைஞாண் கயிறு’ என்று பழக்கப்பட்ட நாட்டில், சோவியத் தயாரித்த எல்லா நூல்களும் ஒரே நூலாக அதாவது ஒரே தரமாக இருந்ததே எனக்கு மகிழ்ச்சியும் வியப்பையும் கொடுத்தது. //

    ஜட்டி வருவதற்கு முன் அண்ணாக்கயிறு இல்லாமல் கோமணம் கட்டமுடியாது என்பதால் உழைப்பவர்கள் மட்டுமல்லாமல் எல்லாரும் அண்ணாக்கயிறு கட்டியே தீரவேண்டிய கட்டாயம். இப்போது அண்ணாக்கயிறு மெதுவாக விடை பெற்றுக்கொண்டிருக்கிறது என்பது கொஞ்சம் வருத்தமாகத்தானிருக்கிறது. பரிகாரமாக எல்லோரும் பூணூல் தரித்தவாறே வலம் வருவார்களாக. ஒண்ணுக்குப் போகும்போது மட்டும் பூணூலை காதில் சுற்றிக் கொள்ள மறக்கவேகூடாது.

    // சங்கம் வைத்து ஆண்ட மன்னர்களாயிருக்கட்டும், சட்டசபை வைத்து ஆளும் தமிழாய்ந்த தமிழர்களாயிருக்கட்டும்… இல்லை மாவட்டத்துக்கு மாவட்டம் அறிவைப் புதைக்கும் சுடுகாடாய் விளங்கும் இத்தனைப் பல்கலைக்கழகங்களாய் இருக்கட்டும், இவற்றில் தண்ட சம்பளம் வாங்கிக் கொண்டு ஆறுகால் நாற்காலிகளாய் அலையும் ஆராய்ச்சியாளர்களாக இருக்கட்டும்… இவர்களால் தமிழில் தரமுடியாத பல்வேறு இயற்கை மற்றும் உலகக் கண்ணோட்டமுள்ள பல நூல்களை மாஸ்கோ பதிப்பகம் அழகுத் தமிழில் அச்சிட்டுக் கொடுத்திருந்தது. //

    உலகப் பொதுமறையான திருக்குறளை தமிழ்ச் சங்கம்தான் கொடுத்தது.

    மற்றபடிக்கு, NCBH இனிமையான இளம்பருவ நினைவுகளை கொண்டுவருகிறது. மொட்டைத்தலை ஆட்டுத்தாடி கொண்ட குட்டை மனிதர் ஒருவர் செய்த சாதனைகளைப் படிக்கச் சொல்லி ஆசிரியர்களும் நண்பர்களும் கொடுத்த பெரும்பாலான புத்தகங்கள் NCBH உடையவை. டால்ஸ்டாயையும், கார்க்கியையும், செகாவையும் தமிழர்களுக்கு பெருமளவில் அறிமுகப்படுத்தியதே NCBH தான்.

  14. மதுரை என்.சி.பி.எச். இல் அரசியல் புத்தகங்கள் மட்டும் ஒரு மூலையில் தரையில் கொட்டி வைக்கப்பட்டுள்ளன (அடுக்கி அல்ல!). வாங்குவார் இன்றிக் காலில் மிதி படுகின்றன. மற்றபடி, அன்று நாம் ரசித்த குறும்பன், நீச்சல் பயிற்சி, விளையாட்டுப் பிள்ளைகள் போன்ற நூல்களை என்.சி.பி.எச். தனது சொந்த மறு பிரசுரங்களாகக் கொண்டு வந்துள்ளது. அறிவியல் நூல்களை (காப்பிரைட் கிடையாது) ஒருநாள் ‘கிழக்கு பதிப்பகம்’ மாதிரி யாராவது மறுபிரசுரம் செய்வார்கள்! அடித்துக்கொண்டு போகும்!

  15. அறிவைப் புதைக்கும் சுடுகாடு, பாடப்புத்தகங்களாக வைப்பதற்கு என்ன கேடு. தமிழை இப்படி ஆவேசமாகவும் நயமாகவும் யாரும் பயன்படுத்தியதில்லை. சோவியத் போல மீண்டும் தோன்றுமா? இல்லை விண்வெளி அதிசயம் போல் பலநூற்றாண்டு பிடிக்குமா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க