privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்ஸ்பெக்ட்ரம் "சாதனையை" முறியடித்த 10 இலட்சம் கோடி நிலக்கரி ஊழல்!

ஸ்பெக்ட்ரம் “சாதனையை” முறியடித்த 10 இலட்சம் கோடி நிலக்கரி ஊழல்!

-

நிலக்கரி-ஊழல்

சமீபகாலமாக ஒரு ஊழல் விவகாரம் அம்பலமாகி வெடித்தெழும் போது அது முந்தைய ஊழல் சாதனையை விஞ்சுவதாக இருக்கிறது. உலகமயமாக்க புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்ட1992-ம் ஆண்டிலிருந்து 2009 நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டுமே சுமார் 73 லட்சம் கோடி மதிப்புக்கு ஊழல்கள் நடந்திருப்பதாக அவுட்லுக் இதழ் ஒரு கணக்கைச் சொல்கிறது. அதன் பின் தான் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த 1.67 லட்சம் கோடி ஊழல் அம்பலமானது.

இந்த இருபதாண்டுகளில் நடந்த அத்தனை ஊழல்களையும் தூக்கிச் சாப்பிடும் வகையிலான ஊழல் ஒன்றை பற்றி ஊடகங்களில் கசிந்த மத்திய கணக்குத் தணிக்கைத் துறையின் (CAG) வரைவறிக்கை சமீபத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறது. இதை ஊழல்களின் மகாராணி என்றே ஊடகங்கள் பிரமிப்புடன் குறிப்பிடுகின்றன. சுமார் பத்து லட்சம் கோடி அளவுக்கான இதன் பிரம்மாண்டம் நம்மை ஒரு கணம் மலைக்கச் செய்கிறது.

2004 – 2009 கால கட்டத்தில் மத்திய அரசு 100 தனியார் நிறுவனங்களுக்கும் ஒருசில அரசுத்துறை நிறுவனங்களுக்கும் நிலக்கரித் தொகுதியை (Coal Blocks) ஒதுக்கீடு செய்ததில் தான் 10.7 லட்சம் கோடி அளவு நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய கணக்குத் தணிக்கைத் துறையின் வரைவறிக்கை அறிவிக்கிறது. இதைப் பற்றிய ஒரு சுருக்கமான பின்னணியைப் பார்ப்பதற்கு முன், மத்திய நிலக்கரித் துறையின் அமைச்சராக இந்த காலகட்டத்தில் இருந்த நல்லவர் வேறு யாருமல்ல ஊடகங்களாலும், எதிர்கட்சிகளாலும்,  – ஏன் அண்ணாஹசாரேவாலுமே – யோக்கியர் என்று வருணிக்கப்படும் பிரதமர் மன்மோகன் சிங் தான் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்வோம்.

இந்தியாவில் நிலக்கரி தனியாருக்குத் திறந்து விடப்பட்டது!

இந்தியாவில், பீகார், ஜார்கண்ட், ஒரிசா, மத்திய பிரதேசம், மேற்குவங்கம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் தான் கணிசமான அளவுக்கு நிலக்கரி இருப்பு உள்ளது. உருக்காலைகளுக்கும் சிமெண்டு தொழிற்சாலைகளும் மூலப்பொருளாகப் பயன்படும் நிலக்கரியைத் தான் அனல் மின்சார உற்பத்திக்காகவும் இந்தியா பிரதானமாக சார்ந்துள்ளது. இந்தியாவில் முறைப்படுத்தப்பட்ட நிலக்கரிச் சுரங்கங்களை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி 1770களில் நிறுவியது.

1900 ஆண்டுவாக்கில் சுமார் 18 மில்லியன் டன்களாக இருந்த நிலக்கரி உற்பத்தி, பின்னர் 1946 காலகட்டத்தில் 30 மில்லியன் டன்களாக உயர்ந்தது.  2011-2012 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த நிலக்கரித் தேவை சுமார் 731.10 மில்லியன் டன்களாக இருக்கும் என்று மத்திய திட்டக் கமிஷன் கணித்துள்ளது. இது வரை கண்டறியப்பட்டுள்ள நிலக்கரி இருப்பு சுமார் 33 பில்லியன் டன்களாகும். அடுத்த இருபதாண்டுகளில் சுமார் 50 பில்லியன் டன் நிலக்கரியைக் கண்டறிய மத்தியரசு இலக்கு வைத்துள்ளது.

1947 அதிகார மாற்றத்திற்கும் பின் நிலகரிச் சுரங்கங்கள் பெரும்பாலும் தனியாரிடமே இருந்தன. 70களில் இஸ்ரேல் நடத்திய யோக் கிப்பூர் யுத்தத்தைத் தொடர்ந்து எண்ணைச் சந்தை பெருமளவில் வீழ்ச்சி காண்கிறது. பல்வேறு உலக நாடுகளின் பங்குச் சந்தை வீழ்ச்சியடைகிறது. ஏறக்குறைய இதே காலகட்டத்தில் துவங்கிய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க அமெரிக்கா ப்ரெட்டன் வுட்ஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகுகிறது. அதன் படி, தங்கத்துடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருந்த டாலரின் மதிப்பு சுயேச்சையாக மதிப்பிடப்பட்டது. அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனும் ஸ்டெர்லிங்கை கட்டுப்பாடுகளற்று அச்சடிக்கத் துவங்குகிறது. இதன் காரணமாக சர்வதேச அளவில் நாணயமதிப்பு சரிந்து பணவீக்கம் உருவாகிறது. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்யுமளவிலான மூலதன பலத்தை தனியார் மூலதனம் இழந்திருந்தது.

இந்தப் பின்னணியிலும், இந்தியாவில் அப்போது ஆளும் வர்க்கத்தை எதிர்த்த புரட்சிகர அமைப்புகளின் எழுச்சியை சமாளிக்கவும், இந்திராவின் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் சார்பு நிலையின் காரணமாகவும் வங்கி, விமானப் போக்குவரத்து, சுரங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு தனியார் துறைகளை அரசுடமையாக்குகிறது.  இந்தப் பின்னணியில் தான் நிலக்கரிச் சுரங்கங்கள் 1972-ல் துவங்கி 75ம் வருடத்துக்குள் படிப்படியாக அரசுடமையானது.

மீண்டும் தொண்ணூறுகளின் துவக்கத்தில் சோவியத் முகாம் வீழ்ச்சியடைந்திருந்த காலத்தில் சர்வதேச அளவில் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த தேசங்கடந்த தொழிற்கழகங்களும் பன்னாட்டுக் கம்பெனிகளும் ஒரு வளர்ச்சி நிலையில் இருந்தனர். பல்வேறு நாடுகளில் தங்களது மூலதனம் தடையற நுழைவதற்கு ஏதுவாக புதிய பொருளாதாரக் கொள்கைகளைத் திணித்தனர். இந்தியாவில் தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளின் துவக்கம் எண்பதுகளின் மத்தியில் இந்திராவின் காலத்திலேயே துவங்கி விட்டாலும், தொண்ணூறுகளின் துவக்கத்தில் தான் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்கள்.

உலகளாவிய வலைப்பின்னலை ஏற்படுத்தியிருந்த தேசங்கடந்த தொழிற்கழகங்களின் உற்பத்தி வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் மூன்றாம் உலகநாடுகளில் இருந்து இயற்கை வளங்கள் ஏராளமான அளவு ஏற்றுமதி செய்ய வேண்டிய தேவை எழுகிறது. அதற்கு வழி செய்யும் வகையிலேயே புதிய பொருளாதாரக் கொள்கைகளான தனியார்மயம் தாராளமயம் உலகமயம் போன்றவற்றை வலியுறுத்திய காட் ஒப்பந்தத்தின் ஷரத்துகள் அமைந்திருந்தன. இவ்வொப்பந்தத்தின் அடிப்படையில் அதுவரை அரசுடமையாக்கப்பட்டிருந்த பல்வேறு பொதுத்துறைகளின் விதிகள் தளர்த்தப்பட்டு தனியார் மூலதனம் நுழைவதற்கு வழியேற்படுத்தப்பட்டது.

நிலக்கரிச் சுரங்க தேசியமயமாக்கல் சட்டம் 1972-73-ம் ஆண்டுகளில் நிறைவேற்றப்படுகிறது. அதன் பின் சுமார் இருபதாண்டுகளுக்கு அச்சட்டத்தில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை. ஜூலை 1992-ம் ஆண்டு நிலக்கரி அமைச்சகத்தின் சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்படுகிறது. இக்கமிட்டியின் வேலை என்னவென்றால், தனியார்களுக்கு நிலக்கரிச் சுரங்க உரிமையை தாரைவார்ப்பது எப்படி என்று அரசுக்கு வழிகாட்டுவது தான். இக்கமிட்டி, 143 நிலக்கரித் தொகுப்புகளை (coal blocks) இதற்காக அடையாளம் கண்டது.

அதைத் தொடர்ந்து தேசிய நிலக்கரி தேசியமயமாக்கல் சட்டத்தில் ஜூன் மாதம் 1993-ம் ஆண்டு ஒரு திருத்தம் கொண்டு வரப்படுகிறது. அதன்படி, சக்தி உற்பத்தி ( மின்சாரம்) மற்றும் நிலக்கரியை மூலப்பொருளாகக் கொண்ட பிற தொழில்களில் ஈடுபடும் தனியார் கம்பெனிகள் நிலக்கரியை வெட்டியெடுக்கலாம் என்பது சேர்க்கப்படுகிறது. பின்னர் 1996-ம் ஆண்டு மீண்டும் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டு சிமெண்டு கம்பெனிகளும் நிலக்கரியை வெட்டியெடுத்துக் கொள்ள வகைசெய்யப்படுகிறது. இப்படி படிப்படியான சட்ட திருத்தங்கள் மூலம் நாட்டின் அரியவகை இயற்கை வளமான நிலக்கரி தனியார்களுக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டது.

93-ல் துவங்கி 2010 காலகட்டம் வரை சுமார் ஐந்து முறை சுரங்கச் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 2006-ம் ஆண்டு நிலக்கரிச் சுரங்கத்தில் நூறு சதவீதம் அந்நிய மூலதனத்தை அனுமதிக்க வகை செய்யும் சட்ட திருத்தமும் நிறைவேற்றப்பட்டு விட்டது.

நிலக்கரி ஒதுக்கீடு செய்யப்படும் முறை

1993-க்கு முன் நிலக்கரித் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதற்கு தெளிவான கொள்கை ஏதும் அரசிடம் இல்லை. மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் உள்ள இரண்டு பொதுத்துறை நிறுவனங்களான இந்திய நிலக்கரி நிறுவனமும் (Coal India Limited – CIL ) மற்றும் சிங்கரேனி நிலக்கரிச் சுரங்க நிறுனமும் (Singareni Collieries Company Limited – SCCL) நிலக்கரி ஒதுக்கீட்டை செய்து வந்தன. பொதுவாக அனல் மின் நிலையங்கள் போன்ற அரசுத் துறை நிறுவனங்களுக்கு மாநில அரசின் பரிந்துரைக் கடித்தத்தின் அடிப்படையிலும், உற்பத்தித் தேவையின் அடிப்படையிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீட்டை நிலக்கரி அமைச்சகச் செயலாளரைத் தலைவராகவும் வேறு தொடர்புடைய அமைச்சகங்களை உறுப்பினர்களாகவும் கொண்ட நிலக்கரி ஒதுக்கீட்டுக் கண்காணிப்புக் கமிட்டி ஒன்றே கட்டுப்படுத்தியது.

மாறிவரும் பொருளாதாரச் சூழலில் பல்வேறு தனியார் நிறுவனங்களும் நிலக்கரி ஒதுக்கிட்டுக்காக விண்ணப்பிக்கத் துவங்கிய பின், நிலக்கரி ஒதுக்கீட்டை முறைப்படுத்த வேண்டும்  என்பதை 2004-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி நிலக்கரித் துறைச் செயலாளர் முன் நடந்த கூட்டம் ஒன்றில் தீர்மானிக்கப்படுகிறது. அதனடிப்படையில், நிலக்கரித் துறை அமைச்சருக்கு ஜூலை 16-ம் தேதி ஒரு குறிப்பு அனுப்பப்படுகிறது. அதில், இந்திய நிலக்கரி நிறுவனம் சப்ளை செய்யும் நிலக்கரியின் விலைக்கும் நிலக்கரித் தொகுப்புகளுக்கான உரிமத்தை எடுத்த நிறுவனங்கள் சப்ளை செய்யும் நிலக்கரியின் விலைக்கும் பெரும் வேறுபாடுகள் இருப்பதாகவும், இதன் காரணமாக உரிமங்கள் எடுத்த நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2004-ம் வருடம் ஜூன் மாதம் நடந்த கூட்டத்திலேயே நிலக்கரித் தொகுப்புகளை ஒதுக்கீடு செய்ய போட்டி ஏல முறையைப் (Competitive bidding) பின்பற்ற வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பழைய கண்காணிப்புக் கமிட்டியின் மூலம் ஒதுக்கீடு செய்யும் முறையையே மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சகம் இன்று வரை பின்பற்றி வந்துள்ளது. இதற்கு பிரதமர் அலுவகத்திலிருந்தும் ஒப்புதல் கடிதம் கிடைத்திருக்கிறது.

போட்டி ஏல முறை பின்பற்றப்பட வேண்டும் என்று தீர்மானம் செய்யப்பட்ட நாள்  (28/06/2006) வரை சுமார் 39 தொகுப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அதே 2006-லிருந்து 2009 வரை சுமார் 145 நிலக்கரித் தொகுதிகள் அதே பழைய முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

தற்போது இந்த விவகாரம் வெடித்திருப்பதைத் தொடர்ந்து விளக்கமளித்துள்ள பிரதமர் அலுவலகம், மக்களுக்கு குறைவான விலையில் நிலக்கரியைக் கொண்டு, உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் (இரும்பு, சிமென்ட், மின்சாரம், etc) கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நிலக்கரியை அடிமாட்டு விலைக்கு விற்றுள்ளோம் என்று சொல்லியிருக்கிறது. இந்த வாதத்தில் அடிப்படையிலேயே தவறு இருக்கிறது என்பதைப் பார்க்கும் முன், இதே வாதத்தைத் தான் ஆ.ராசா வார்த்தை தப்பாமல் சொன்னார் என்பதை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

93-ம் ஆண்டுக்கு முன், நிலக்கரியைப் பயன்படுத்தி பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மட்டும் தான் சுரங்க உரிமை வழங்கப்பட்டது – ஆனால், அதன் பின்னர் செய்யப்பட்ட பல்வேறு சட்டதிருத்தங்களைத் தொடர்ந்து தற்போது வெறும் சுரங்கத் தொழில் மட்டுமே செய்யும் நிறுவனங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிமெண்டு, இரும்பு மற்றும் மின்சார உற்பத்தியில் எந்த சம்பந்தமும் இல்லாத வெறும் சுரங்க நிறுவனங்களுக்குக் கூட உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பொருள் என்ன? அதாவது, அரசாங்கத்திடமிருந்து நிலக்கரித் தொகுப்புகளை அடிமாட்டு விலைக்கு வாங்கும் தனியார் நிறுவனங்கள், வெட்டியெடுக்கப் பட்ட நிலக்கரியை வெளிச்சந்தையில் மிக அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபமடிக்கின்றன என்பதே.

இன்னொரு புறம், அடிமாட்டு விலைக்கு வாங்கப்படும் சுரங்கத் தொகுப்பிலிருந்து வெட்டியெடுக்கப்படும் நிலக்கரியைக் கொண்டு மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களும் குறைந்த விலைக்கு மின்சாரத்தை விற்பதில்லை. யூனிட் ஒன்றுக்கு சுமார் 17 ரூபாய்கள் வரை அரசிடமிருந்தும் மக்களிடமிருந்தும் கறந்து விடுகிறார்கள்.

மேலும் தனது விளக்கத்தில், அரசாங்கம் நிலக்கரியை லாபமீட்டும் வகையினமாகக் கருதவில்லை என்பதால், அதிலிருந்து லாபம் சம்பாதிப்பது என்கிற கேள்வியே எழவில்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மீண்டும் அதே ஆ.ராசாவின் குரல் ஒலிக்கிறதல்லவா? இந்த வார்த்தைகளின் பொருள்  என்னவென்றால், இந்த நாட்டின் இயற்கை வளங்களையும்  கனிம வளங்களையும் பன்னாட்டு முதலாளிகளுக்கும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் கூறுகட்டிப் படையல் வைப்பது மட்டும் தான் எங்கள் வேலை, இதில் லாப நட்டக் கணக்குப் பார்ப்பது எங்கள் வேலையில்லை என்பது தான்.

போட்டி ஏல ஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்துவதில் உண்டான தாமதம் பற்றி குறிப்பிடும் பிரதமர் அலுவலகம், இதற்கான சட்ட திருத்தத்தை இறுதி செய்வதற்கான வேலைகள் நடந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. தனியார் மூலதனத்தை உள்ளே நுழைக்க வேண்டிய தேவை இருந்த போது மட்டும் அறக்கப் பறக்க சட்ட திருத்தம் கொண்டு வந்த அரசு, அதை ஒரு முறைப்படுத்த வேண்டும் எனும் போது அதற்கான சட்ட திருத்தத்தைக் கொண்டு வர ஏழாண்டுகளாக இழுத்தடிக்கிறது.

இது ஒருபுறமிருக்க, போட்டி ஏல முறையை அறிமுகப்படுத்த புதிதாக எந்த சட்ட திருத்தமும் தேவையில்லையென்றும், நிலக்கரி ஒதுக்கீடு என்பது நிர்வாக சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், ஒரு நிர்வாக ரீதியிலான வழிகாட்டுதல் விதிமுறையே கூட போதுமானது என்றும் சட்டத் துறை 2004 – 2006 காலகட்டத்தில் நிலக்கரி அமைச்சகத்தோடு நடந்த பல்வேறு கடிதப் போக்குவரத்துகளில் தெளிவுபடுத்தியிருக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், பிரதமர் வழிகாட்டிய பழைய கண்காணிப்புக் கமிட்டி வழிமுறையிலான ஒதுக்கீடு என்பது அப்பட்டமான ஊழல் என்பது தான்.

இந்த வகையில் அரசுக்கு  ஏற்பட்டுள்ள  இழப்பு 10.67 லட்சம் கோடிகள். இதில், டாடா பவர், ரிலையன்ஸ், ஜின்டால் ஸ்டீல் & பவர், பூஷன் ஸ்டீல் & பவர், அனில் அகர்வால் குழுமம், பிர்லா குழுமம் உள்ளிட்ட 100 தனியார் நிறுவனங்கள் தேட்டை போட்டது மட்டும் சுமார் 4.79 லட்சம் கோடிகள்.

கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை ஊடகங்களில் கசிந்ததைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதாக் கட்சி, இந்தத் திருட்டுத்தனத்தில் அக்கட்சித் தலைவர் நிதின் கட்காரியின் மகனுக்கும் தொடர்பு உண்டு என்கிற ரகசியத்தை பிரதமர் அலுவலகம் வெளியிட்ட பின் இப்போது அடக்கி வாசிக்கிறது. சத்தீஸ்கர் மாநில பாரதிய ஜனதா அரசு செய்த நிலக்கரி ஒதுக்கீட்டில் கட்காரியின் மகனும் பெருமளவுக்கு ஆதாயம் அடைந்துள்ளார் என்பதால், 1.67 லட்சம் கோடி 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் எழுப்பிய சவுண்டை விட 10 லட்சம் கோடி நிலக்கரி ஊழலுக்கு குறைவான அளவில் தான் பா.ஜ.க சவுண்டு விடுகிறது.

2ஜி ஊழலுக்கு பாராளுமன்றத்தை முடக்கும் அளவுக்கு கூச்சலிட்ட போலி கம்யூனிஸ்டு கட்சிகளும், இவ்விவகாரத்தைப் பற்றி பம்மிய குரலிலேயே பேசி வருகின்றன. ஆங்கில ஊடகங்களில் நடந்த விவாதங்களில் தலைகாட்டிய அண்ணா குழுவைச் சேர்ந்த கோமாளிகளோ, “என்னயிருந்தாலும் பிரதமர் யோக்கியமானவரு தான்; அவரு ஊழல் செய்ய மாட்டாரு தான்; லஞ்சம் வாங்க மாட்டாரு தான்… ஆனாலும் ஏதோ தப்பு நடந்து போச்சே” என்கிற ரீதியில் தான் கருத்துத் தெரிவிக்கின்றனர். மேலும் வலுவான சட்டங்களின் மூலம் இது போன்ற ஊழல்களைக் கட்டுப்படுத்தி விட முடியும் என்றும் சொல்கிறார்கள் – ஏறக்குறைய முதலாளித்துவ ஊடகங்களின் கருத்தும் கூட இது தான்.

ஆனால், இங்கே தனியாருக்கு கனிம வளங்களைத் திறந்து விட்டதும், இதுவரை அவர்கள் கொள்ளையிட்டதும் தெளிவாக சட்டப்பூர்வமாகத் தான் நடந்திருக்கிறது. 2ஜி விவகாரத்தை ஆ.ராசா செய்ததை போல் இந்தக் கொள்ளையைத் திட்டமிட்டதில் பிரதமர் நிர்வாகத் தவறுகள் ஏதும் விடவில்லை என்பது தான் இவர்கள் பம்முவதற்குக் காரணம். அனைத்தும் சட்டப்பூர்வமாகவே நடந்திருக்கிறது. சுரங்கங்களைத் தனியாருக்கு விட்டதும் சட்டப்பூர்வமாகத் தான், விலைகளை நிர்ணயித்ததும் சட்டப்பூர்வமாகத்தான், உரிமம் எடுத்தவர்கள் வெளியே நிலக்கரியை விற்றதும் சட்டப்பூர்வமாகத்தான். CAG சொல்வதெல்லாம், வாங்கியதிலும் விற்றதிலும் இருக்கும் மலையளவிலான விலை வேறுபாடுகளையும், அதனடிப்படையில் அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதியிழப்பையும் தான்.

CAG அறிக்கையின் படி இழப்பு இருக்கிறது – சரி – ஆனால், எங்கே ஊழல் இருக்கிறது?

முதலில் ஒரு நாட்டின் புவிப்பரப்பின் கீழ் இருக்கும் இயற்கை வளங்கள் என்பது அந்த நாட்டு மக்களுக்குச் சொந்தமானது. இந்த இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில் – அல்லது அதன் மூலம் பயனடைவதில்  – மக்களுக்கே முன்னுரிமை இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் நிலக்கரியை வெட்டியெடுப்பதிலும், அதைக் கொண்டு செய்யப்படும் பொருளுற்பத்தியும் லாபத்தைப் பிரதான நோக்கமாகக் கொள்ளாமல் சேவையைப் பிரதான நோக்கமாகக் கொண்ட பொதுத்துறை நிறுவனங்களிடம் விட்டிருந்தால் இடைத்தரகர்கள் பயனடைவது என்கிற கேள்வியே எழுந்திருக்காது.

ஆக, ஊழலின் அடிப்படையென்பது, பொதுச் சொத்தை விரல்விட்டு எண்ணக் கூடிய சில தனியார் முதலாளிகளுக்குத் கேள்விமுறையின்றித் திறந்து விட்டதில் தான் துவங்குகிறது. ஊழல் ஒழிப்பு என்பதைப் பற்றிப் பேசும் போது இதைப் புறக்கணித்து விட்டு வெறும் சட்டங்களையும் விதிமுறைகளையும் ஒழுங்குமுறைகளையும் பற்றி மட்டுமே பேசுவதில் அர்த்தமில்லை. ஆனால், இதைத் தான் அண்ணா ஹசாரே துவங்கி ஆளும் வர்க்க ஊடகங்கள் வரை செய்கிறார்கள். இந்தக் கோமாளிக் கூத்துகளின் நேயர்களான அப்பாவி நடுத்தர வர்க்கத்தினரும் இதற்குத் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஊழல் ஒழிப்புப் போராட்டங்கள் என்பது எப்படியிருக்க வேண்டுமென்பதற்கான துலக்கமான உதாரண புருஷர்களாய் தண்டாகாரன்யப் பழங்குடிகள் நம் கண்முன்னே சாட்சிகளாய் நிற்கிறார்கள். வளங்களைத் திருடித் தின்ன வரும் ஏகாதிபத்திய மூலதனத்தையும் உள்நாட்டுத் தரகு மூலதனத்தையும் உள்ளே நுழைய விடாது தலையால் தண்ணீர் குடிக்க வைக்கிறார்கள். மறுகாலனியாக்கத்தை எதிர்க்கும் இது போன்ற போர்குணமிக்கப் போராட்டங்களின் மூலம் தான் ஊழலையும் தேசத்தின் வளங்கள் கொள்ளை போவதையும் தடுக்க முடியும்.

________________________________________________________________

– தமிழரசன்
_________________________________________________________________

  1. இத போல ஓட்டுபொறுக்கிங்க எவ்வளவோ செஞ்சானுங்க, இன்னும் செய்வானுங்க,நாம் தான் முடிவு பன்னனும், இப்பவே ஒழிச்சுக்கட்டறதா இல்ல இன்னும் வேடிக்கை பாக்கறதான்னு.

  2. aaseriyaar kuluku oru veadukoal maakal eapothum oramathiri irupathilai avargal oothu podamamal purachi chei endru sonal kuda keakapovathilai en endal oru bayam athanal naam theirthallil kalathukoondal nichamaga naam ninaipathu nadathi mudikamudium namaku lachakanakana maakal enaivarigal , ean naam namai makkalkaga mathirikola kudathu chirithu yosiugal

  3. // இந்த நாட்டின் இயற்கை வளங்களையும் கனிம வளங்களையும் பன்னாட்டு முதலாளிகளுக்கும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் கூறுகட்டிப் படையல் வைப்பது மட்டும் தான் எங்கள் வேலை, இதில் லாப நட்டக் கணக்குப் பார்ப்பது எங்கள் வேலையில்லை என்பது தான். //

    மனசாட்சியே இல்லாத மனித உருவம்தான் மன்மோகன்சிங்..

  4. //இந்த வகையில் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 10.67 லட்சம் கோடிகள். இதில், டாடா பவர், ரிலையன்ஸ், ஜின்டால் ஸ்டீல் & பவர், பூஷன் ஸ்டீல் & பவர், அனில் அகர்வால் குழுமம், பிர்லா குழுமம் உள்ளிட்ட 100 தனியார் நிறுவனங்கள் தேட்டை போட்டது மட்டும் சுமார் 4.79 லட்சம் கோடிகள்.///

    மிச்சம் உள்ள சுமார் 5.88 லச்சம் கோடிகள் அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அளிக்கபட்ட (அல்லது தாரை வார்க்கப்பட்ட) நிலக்கரி பிளாக்குகளை குறிக்கிறது.

    ஊழல் நடந்திருக்கலாம் என்பது வேறு விசியம். ஆனால் அரசின் பொதுதுறை நிறுவனங்களான SAIL போன்றவைகளுக்கும் இவை இதே விலையில் அளிக்கப்பட்டுள்ள விசியத்தை சொல்லாம் விட்டு விட்டீர்களே.

    சரி, இதை பற்றி ஒரு மாற்று பார்வைக்கு :

    http://swaminomics.org/?p=2152
    Coalgate: what about losses caused by Left Front?

    • // இது ஒருபுறமிருக்க, போட்டி ஏல முறையை அறிமுகப்படுத்த புதிதாக எந்த சட்ட திருத்தமும் தேவையில்லையென்றும், நிலக்கரி ஒதுக்கீடு என்பது நிர்வாக சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், ஒரு நிர்வாக ரீதியிலான வழிகாட்டுதல் விதிமுறையே கூட போதுமானது என்றும் சட்டத் துறை 2004 – 2006 காலகட்டத்தில் நிலக்கரி அமைச்சகத்தோடு நடந்த பல்வேறு கடிதப் போக்குவரத்துகளில் தெளிவுபடுத்தியிருக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், பிரதமர் வழிகாட்டிய பழைய கண்காணிப்புக் கமிட்டி வழிமுறையிலான ஒதுக்கீடு என்பது அப்பட்டமான ஊழல் என்பது தான். //

      சுவாமினாமிக்ஸ் கட்டுரையில் இடது முன்னணி சட்ட திருத்தத்தை எதிர்த்தது என்று கூறுவது UPA-1 ன் சாக்கு போக்குகளில் ஒன்று. சட்டத் துறை 2004-06 காலகட்டத்தில் போட்டி ஏல முறையை கொண்டுவர சட்டதிருத்தம் தேவையில்லை, நிர்வாக கைட்லைன் போதும் என்று தெளிவாக்கிய பின்னரும் “2006-லிருந்து 2009 வரை சுமார் 145 நிலக்கரித் தொகுதிகள் அதே பழைய முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது” என்று இந்தப் பதிவு குறிப்பிட்டு ”பிரதமர் வழிகாட்டிய பழைய கண்காணிப்புக் கமிட்டி வழிமுறையிலான ஒதுக்கீடு என்பது அப்பட்டமான ஊழல் என்பது தான்” என்று தெளிவாக்கியிருக்கிறதே..

    • “ஊழல் நடந்திருக்கலாம் என்பது வேறு விசியம்”

      பல லட்சம் கோடிகள் உழல் நடந்து கொண்டிருக்கும் போதும் கூட நீங்கள் இந்த சமுகத்திற்கு விடிவு கிடைக்கும் என்று முதலாளித்துவத்தின் மீது தொடர்ந்து நம்பிக்கை வைதுக்கொண்டிருகிறீர்கள்…

      வாழ்த்துக்கள் உங்கள் அக்கறைக்கு……..

  5. இதற்க்கு ஒரு விசாரண கமிசன் வைங்கடா… நாடு வெளங்கிடும்…

    இந்தியாவின் உண்மையான குடிமக்கள்…
    டாட்டா
    அம்பானி சகோதரர்கள்
    விஜய் மல்லையா
    மற்றும் corporate முதலாளிகள்…..

    எனக்கு போர்க்கும் போது ஒரு சாய்ஸ் கொடுத்துருந்த கண்டிப்பா இந்தியாவ செலக்ட் பண்ணி இருக்க மாட்டேன்…

  6. /// வங்கி, விமானப் போக்குவரத்து, சுரங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு தனியார் துறைகளை அரசுடமையாக்குகிறது. ///

    அதான் இன்னும் ஏழை நாடா இருக்கோம்!

  7. சாதாரண மக்கள் வரிக்கட்டவில்லை, கடன் கட்டவில்லை, திருடிவிட்டான், வழிப்பறி, உடன் தண்டனை. இவர்களுக்கு விசாரனைக்கமிஷன், வழக்கு. மாதங்கள், வருடங்கள் என தள்ளிப் போட்டுக்கொண்டே, இழுத்தடிக்கலாம், கடைசியில் பிசு பிசுத்துப் போகும். பதவிக்க் காலமும் முடிந்துவிடும்.இவர்கள் நிரபராதியாவார்கள். இறுதியில் காலமாற்றத்தில், கருப்பு, வெள்ளையாகும். வாழ்க பாரதம். நினத்துக் கொள்வோம் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தியாகிகளை.

  8. 60 களின் கடைசியில் இந்த துறைகள் அரசுடமையாக்கப்பட்டதால் ஏழை நாடாகவே இருக்கிறோம் என்றால் கடந்த 20 ஆண்டுகளாக அனைத்து துறைகளும் தனியாருக்கு திறந்து விட்ட பின் என்ன வாழுகிறதாம்.

  9. ஸ்பெக்ட்ரம் சாதனை ஊழல்நு படிக்காதவன் மாதிரி, பாப்பான் மாதிரி சொல்லாதிங்க!!! அதான் தமிழ் நாட்டுல எலேச்டின் முடிஞ்சி திமுக வ வீட்டுக்கு அனுபிட்டு.. இன்னும் சொத்து குவிப்பு வழக்குல வாய்தாவாங்கரவள சிம் ஆகிடிங்களே…. இன்னுமா ஊலன்னு சொல்லணும்!!! ஸ்பெக்ட்ரம் இழப்பு சொல்லுங்க சார் !!!

Leave a Reply to K.R.Athiyaman பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க