Saturday, May 10, 2025
முகப்புசெய்திமஞ்சுநாத் குடும்பத்தோடு தற்கொலை! மல்லையா உல்லாச சுற்றுலா!!

மஞ்சுநாத் குடும்பத்தோடு தற்கொலை! மல்லையா உல்லாச சுற்றுலா!!

-

திங்களன்று இரவு பெங்களூருவைச் சேர்ந்த நெசவாளர் மஞ்சுநாத் (39) கடன் கொடுத்தவர்களது நெருக்கடி தாங்காமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். ஸ்ரீ சக்தி சங்கம் என்ற சுய உதவிக் குழுவிடம் பெற்ற ரூ.20,000 மற்றும் சில சில்லறைக் கடன்களையும் அடைக்க முடியாத மஞ்சுநாத் தனது பிள்ளைகள் ப்ரிதிவிராஜ் (12), ரிஷிகா (9) ஆகியோரைக் கொன்று விட்டு தனது மனைவியுடன் ஒரே கயிற்றில் தூக்கிலிட்டுக் கொண்டார்.

தனது தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில், கடன்சுமை தாங்காமல் உயிரை மாய்த்துக் கொள்வதாகவும், தங்களைப் போலவே எதுவுமில்லாமல் கடன்காரர்களால் தங்களது பிள்ளைகள் துன்பப்படக் கூடாது என்பதற்காக அவர்களையும் கொன்று விடுவதாகவும் கூறி இருக்கிறார். சமீபகாலமாக ப்ரிதிவிராஜ் சுகவீனமாக இருந்ததாகவும், அதற்கும் சேர்த்துதான் அவர் கடன் வாங்கியிருந்தார் என்றும் அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர்.

மரணத்திற்கு முன் குடும்பத்தினருக்கு இனிப்பு வாங்கித் தந்த அவர் திங்கள் இரவு தனது நண்பரும் கீழ் வீட்டில் இருப்பவருமான ராஜூவிடம் மனமுடைந்து போயிருப்பதாக சொல்லி இருக்கிறார். அமைதியாக தூங்கும் படி ராஜூ சொல்லியுள்ளார். மறுநாள் காலையில் தண்ணீர் பிடிப்பதற்காக அவர்களை கூப்பிடச் சென்றபோதுதான் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

கந்துவட்டிக் கொடுமையும், சுய உதவிக்குழு என்ற பெயரில் சுழல்நிதி வட்டியையும் தாங்க முடியாத தற்கொலைகள் நாடேங்கிலும் நடந்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் தற்கொலைகளில் 13% பெங்களூருவில் தான் நடைபெறுகிறது. பவர்லூம் நெசவாளியான மஞ்சுநாத் போன்றவர்கள் மின்வெட்டு, கோட்டா முறை ரத்து மற்றும் சிறுதொழிலில் மேம்படுத்தப்படாத தொழில்நுட்பங்கள் என பல பிரச்சினைகளால் அவதிப்பட்டனர். மின்வெட்டு ஏற்படும் சமயங்களில் அதுவரை செய்த வேலையே பயனற்றதாக பல தடவை ஏற்பட்டு விடும் என்கிறார்கள் நெசவாளிகள்.

நெசவில் ஏற்பட்ட கடனை சரிசெய்ய பேக்கரி தொழில் ஆரம்பிக்கவும் கடன் வாங்கினாராம் மஞ்சுநாத். அதுவும் சரியாகப் போகவில்லை. பிஸ்கட் தொழிலில் பல பகாசுரக் கம்பெனிகள் வந்தபிறகு இவரால் எப்படி தாக்குப்பிடிக்க முடியும்? கடன்தொல்லை அதிகரிக்கவே மனைவியை சுய உதவிக் குழுவில் பயிற்சி பெற்று தையல் வேலைக்கு அனுப்பி உள்ளார். அவரது மனைவியான சத்யவதியின் மாத வருமானமான 5000 ரூபாயில்தான் குழந்தைகளைப் படிக்கவைத்து ஒரு வாடகை வீட்டில் இருந்துள்ளனர். இவர்களுடன் தான் மஞ்சுநாத்தின் பெற்றோர்களும் இருந்துள்ளனர். அவர்கள் மற்றொரு சகோதரனின் வீட்டுக்கு சென்றிருந்தபோது இவர்கள் தங்களது கதையை முடித்துக் கொண்டனர்.

இதே பெங்களூருவில்தால் சாராய மல்லையாவும் இருக்கிறார். அரசுத்துறை வங்கிகளிடம் 7000 கோடியை கடனாகப் பெற்று திருப்பி அடைக்காமல் ஏமாற்றுவதோடு வெளிநாடுகளில் உல்லாச சுற்றுலா செல்லும் இந்தப் போக்கிரியின் ஊரில்தான் மஞ்சுநாத் போன்றவர்கள் சில ஆயிரம் கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

மஞ்சுநாத் தனது குடும்பத்தோடு கௌரவமாக வாழ்வதற்கு இந்த அரசியல் சமூக அமைப்பு அனுமதிக்கவில்லை. இதே அமைப்புதான் முதலாளிகளை நிலக்கரி ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழலில் திளைக்க திளைக்க கொள்ளையடிக்க அனுமதிக்கிறது. தற்கொலைக்கான சுருக்குக் கயிறுகள் கோபம் எனும் ஆயுதத்தை வரிக்கும் வரை மஞ்சுநாத்துக்களை காப்பாற்ற இயலாது. மல்லையாக்களை தண்டிக்கவும் இயலாது.

____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: