Tuesday, May 6, 2025
முகப்புசெய்திநம்பிக்கையற்ற இந்தியர்கள்! ஒரு சர்வே!!

நம்பிக்கையற்ற இந்தியர்கள்! ஒரு சர்வே!!

-

38 சதவிகித இந்தியர்கள் மட்டுமே பொருளாதாரத்தின் மீது நம்பிக்கையுடன் உள்ளனர் என்று பியூ என்னும் அமெரிக்க தன்னார்வக் குழு சமீபத்தில் நடத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளது.  இது சென்ற ஆண்டு சர்வேயை விட 13 புள்ளிகள்  குறைவாகும். நமக்கு இந்த சர்வே குறித்த முழு நம்பகத்தன்மையும் ஏற்படவில்லை என்றாலும் வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். இதில் இருக்கும் சில விவரங்களின் வழி யதார்த்தத்தை நாம் கண்டுபிடிக்கலாம்.

படிக்க

சர்வேசீனாவிலும் பிரேசிலிலும் பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் 82 சதவீதமாகவும் 53 சதவீதமாகவும் உள்ளனர்.  அமெரிக்காவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் சுமார் 30 சதவீத மக்களே நாட்டு பொருளாதாரம் போகும் போக்கில் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கிராமப் புறங்களில் விவசாயம் அழிக்கப்படுதல், சில்லறை வணிகத்தில் கார்ப்பொரேட் நிறுவனங்களின் நுழைவு என்று உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  இவற்றின் விளைவாக சென்னை, மும்பை, குர்கோன் போன்ற பெரு நகரங்கள் வளர, கிராமப் புறங்களும், சிறு நகரங்களும் தேக்க நிலையில் உள்ளன. வட மாநிலங்களில் இருந்து பெரு நகரங்களை நோக்கி உணவு விடுதிகளிலும், கட்டிடத் தொழிலிலும் பல லட்சம் இளைஞர்கள் குறைந்த கூலிக்கு வேலை செய்ய படையெடுக்கிறார்கள்.

இந்த நிலையில் அடுத்த 12 மாதங்களில் பொருளாதார நிலைமை மேம்படும் என்று நம்புவர்களின் எண்ணிக்கை 45 சதவீதமாக உள்ளது. 2011-ல் இந்த எண்ணிக்கை 60 சதவீதமாக இருந்தது.

64% இந்தியர்கள் தமது சொந்த வாழ்க்கை திருப்திகரமாக இருப்பதாகச் சொன்னாலும், 66 சதவீதம் பேர் தமது குழந்தைகள் தங்களை விட சிறந்த வேலையில் அமர்வதற்கும், தம்மை விட சிறப்பாக வாழ்வதற்கும் கடுமையாக போராட வேண்டியிருக்கும் என்று நினைக்கிறார்கள்.

பணக்கார இந்தியர்கள் ஏழை இந்தியர்களை விட தற்போதைய பொருளாதார நிலைமையை குறித்தும், எதிர்கால வாய்ப்புகள் குறித்தும் அதிக நம்பிக்கையுடன் இருக்கின்றனர். பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே வளர்ந்து வரும் ஏற்றத் தாழ்வை மிகப்பெரிய பிரச்சனை என்று 72% இந்தியர்கள் கருதுகிறார்கள்.

பணக்காரர்களில் 71 சதவீதம் பேர் சந்தை பொருளாதாரத்தை ஆதரிக்க, ஏழைகளில் 50 சதவீதம் பேர் சந்தை பொருளாதாரம் தங்களுக்கு நல்ல வாழ்க்கையை தரவில்லை என்று சொல்கின்றனர். அதே போல பணக்காரர்களை விட ஏழைகளில் அதிக சதவீதத்தினர் அரசாங்கம் அனைவருக்குமான சேவைகளை வழங்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

  • வேலை இல்லாத் திண்டாட்டம் (80%)
  • விலைவாசி உயர்வு (79%)
  • ஏழை பணக்கார இடைவெளி (72%)
  • குற்றங்கள் (71%)
  • அதிகாரிகளின் ஊழல் (70%)
  • தொழில் துறையினரின் ஊழல் (65%)

ஆகியவை சர்வேயில் பங்கெடுத்தவர்களின் முதல் 5 கவலைகளாக வெளிப்பட்டன.

ஐடி துறையில் வருடத்திற்கு 5,000 வேலை வாய்ப்பு இருக்கிறதென்றால் ஐந்து லட்சம் பேர் பொறியியல் பட்டம் பெற்று வருகிறார்கள். இதனால் வேலை இல்லாமை, குறைந்த சம்பளத்தில் வேலை என்று படித்த இளைஞர்கள் சிரமப்படுகின்றனர். மின்சாரப் பற்றாக்குறை நாட்டு மக்களின் இன்னொரு முக்கிய பிரச்சனையாக இருக்கிறது.

இந்த சர்வே மார்ச் 19 முதல் ஏப்ரல் 19 வரை இந்தி, வங்காளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, ஒரியா மொழிகளில் 4018 பேரிடம் நேரடியாகவும் நடத்தப்பட்டிருக்கிறது.  சர்வேயில் கலந்து கொண்ட நகர்ப்புற மக்களின் சதவீதம் ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்தாலும் முடிவுகள் கிராம/நகர்ப்புற மக்கள் தொகை சதவீதத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன.