privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாகுப்பைத் தொட்டியில் உணவைத் தேடும் ஸ்பெயின்..!

குப்பைத் தொட்டியில் உணவைத் தேடும் ஸ்பெயின்..!

-

ஸ்பெயின்ல்ல உடை உடுத்திய அந்த இளம் பெண் காய் மற்றும் பழக் கடை மூடப்பட்ட பிறகு வெளியில் வைத்திருந்த கூடைகளை கிளறிக் கொண்டிருந்தார். கடையில் வேலை பார்ப்பவரோ என்று பார்த்தால், இல்லையாம். அன்றைய குப்பைகளிலிருந்து அடுத்த வேளை உணவுக்கு ஏதாவது கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறார்.

சாப்பிட லாயக்கானவை என்று அவருக்கு தோன்றிய நாள்பட்ட உருளைக்கிழங்குகள் சிலவற்றை பொறுக்கி அருகில் இருக்கும் வண்டியில் வைத்திருக்கிறார். தன் பெயரை சொல்ல மறுத்து விட்ட அவர் “தேவையான அளவு பணம் இல்லை என்றால் இப்படித்தான் பிழைக்க முடியும்” என்கிறார்.

33 வயதான அந்த பெண் அஞ்சல் துறையில் வேலை பார்த்தாராம். வேலை இழந்த பிறகு சிறிது காலத்துக்குப் பிறகு வேலையில்லாதவர்களுக்கான நிவாரணமும் நின்று போனது. இப்போது மாதம் 400 யூரோவில் வாழ்க்கை நடத்துகிறாராம். மின்இணைப்பும் தண்ணீர் வசதியும் துண்டிக்கப்படாத ஒரு கட்டிடத்தில் சில நண்பர்களோடு தங்கிக் கொண்டு, கடைகள் மூடப்பட்ட பிறகு குப்பைக் கூடைகளிலிருந்து கிடைப்பவற்றை தேட வருகிறார்.

50 சதவீதத்துக்கும் மேல் இளைஞர்கள் வேலை இல்லாமல் திண்டாடும் ஸ்பெயினில் பலர் இப்படித்தான் உயிர் வாழ்கின்றனர்.

உலகளாவிய பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து செலவுகளை குறைக்கும் முயற்சியில் அரசு பலரை வேலை நீக்கம் செய்துள்ளது, சம்பளங்களையும் ஓய்வூதியங்களையும் குறைத்து விட்டது, மக்கள் நலத் திட்டங்களை ரத்து செய்திருக்கிறது.

சமீபத்தில் பல பொருட்களுக்கு 3 சதவீத புள்ளிகளும் உணவு பொருட்களுக்கு மீது 2 சதவீத புள்ளிகளும் மதிப்பு கூடுதல் வரியை அரசு உயர்த்தியது. மாநில அரசுகள் பள்ளிகளில் ஏழைகளுக்கான இலவச மதிய உணவுத் திட்டத்தை ரத்து செய்துள்ளன. பலர் குப்பைத் தொட்டிகளில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் மூலம் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.

காரிடாஸ் என்ற தொண்டு நிறுவனத்தின் அறிக்கையின் படி ஸ்பெயினில் 22 சதவீதம் குடும்பத்தினர் வறுமையில் வாழ்கின்றனர். சுமார் 6 ல்டசம் குடும்பங்களுக்கு எந்தவிதமான வருமானமும் இல்லை.

சமீபத்தில் மேட்ரிட் நகரில் ஒரு சூப்பர் மார்க்கெட் மூடும் நேரத்தில் குப்பைக் கூடைகளின் மீது பாய்வதற்காக ஒரு சிறு கூட்டம் கூடியிருந்தது. அதை பார்ப்பதற்கு வந்திருந்த பத்திரிகையாளர்களை பலர் கோபத்துடன் திட்டினர். குப்பைக் கூடைகளை லாரிகள் உடனடியாக எடுத்துச் சென்று விட்டதால் யாருக்கும் எதுவும் கிடைக்கவில்லை.

நகரத்துக்கு வெளியில் இருக்கும் மிகப்பெரிய காய்கறி மற்றும் பழங்களுக்கான மொத்த விற்பனை அங்காடியில், பெட்டிகள் லாரிகளில் ஏற்றப்படும் போது கீழே விழுந்து சாக்கடைக்குள் உருண்டு போகின்றவற்றை திரட்டுவதற்கு ஆண்களும் பெண்களும் காத்திருக்கின்றனர்.

அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் பல்வேறு வயதான ஆண்களும் பெண்களும் கைகளில் பொருட்கள் நிரம்பிய பைகளுடன் நின்று கொண்டிருந்தனர். அந்த மொத்த விற்பனை சந்தையில் தனிநபர்களுக்கு சில்லறை விற்பனை கிடையாது என்றாலும் சிலர் அந்த பொருட்களை வாங்கியதாக சொன்னார்கள்.

மற்றவர்கள் குப்பையிலிருந்து பொறுக்கியதை ஒத்துக் கொண்டனர். 67 வயதான விக்டர் விக்டோரியா என்ற பெரு நாட்டைச் சேர்ந்தவர் குப்பையில் போடப்படும் காய்கறிகளையும், பழங்களையும் தேடுவதற்கு வழக்கமாக வருவதாக சொன்னார். கட்டிடத் தொழிலில் வேலை பார்த்து வந்த திரு விக்டோரியோ 2008-ல் வேலை இழந்தார். தனது மகளுடன் வசிக்கும் அவர் தினமும் இதைப் போல கிடைப்பவற்றை வீட்டுக்கு தனது பங்காக கொண்டு போகிறார்.

இங்கு தொழில் செய்யும் மொத்த விற்பனையாளர்களுக்கு குப்பையில் பொறுக்குபவர்களை பார்ப்பது கஷ்டமாக இருக்கிறது. “இவர்களுக்கு நிகழ்வதை பார்க்க வருத்தமாக இருக்கிறது, இப்படி இருக்கக் கூடாது” என்கிறார் மனு காலகோ என்ற வணிகர்.

“தன் குழந்தைகளுடன் வந்த ஒரு அம்மா சுற்றுமுற்றும் பார்த்து விட்டு குப்பைக் கூடைகளுக்குள் தேட ஆரம்பித்த அவமானமான காட்சியை” பார்த்த பிறகு ஜிரோனா நகர அதிகாரி எட்வர்டோ பெர்லோசோ சூப்பர் மார்க்கெட் குப்பைக் கூடைகளுக்கு பூட்டு போடும் ஏற்பாட்டை செய்தார்.  “இப்படி உணவை தேடுவது அவர்களின் கௌரவத்துக்கு குறைச்சல்“ என்கிறார் அவர்.

தெற்கு ஸ்பெயினில் நகர மேயர்களும் தொழிற்சங்க உறுப்பினர்களும் சேர்ந்து இரண்டு சூப்பர் மார்க்கெட்டுகளை ராபின் ஹூட் பாணியில் கொள்ளை அடித்து ஏழைகளுக்கு வினியோகித்தனர். அதற்காக 12க்கும் மேற்பட்டவர்கள் மீது திருட்டு வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் அதற்காக வருத்தப்படவில்லை, அவர்களுக்கு பெருமளவு ஆதரவு இருக்கிறது. “கஷ்டப்படும் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை எடுத்துக் கொடுப்பது குற்றம் என்றால் நான் குற்றவாளிதான்” என்கிறார் விவசாய சங்கத்தைச் சேர்ந்த பிரான்சிஸ்கோ மோலேரோ.

‘வேலை இழந்த பலர் இது மாதிரி நிலைமை தங்களுக்கு ஏற்படும் என்று எதிர்பார்த்திராதவர்கள்” என்கிறார் ஜிரோனாவின் சோஷலிஸ்ட் நகரசபை உறுப்பினர் பியா போஷ்.

ஜிரோனாவில் காரிட்டாஸின் திட்டங்களை நிர்வகிக்கும் ராமோன் பார்னேரா, தரும மையங்களில் உணவு கேட்க வருவதை பலர் அவமானமாக நினைக்கிறார்கள் என்றார். “உதவி பெறுபவர்களை கேவலப்படுத்தாத முறை வேண்டும், இப்படி தருமம் பெறுவது அவர்களுக்கு எளிதாக இல்லை” என்றார் அவர்.

வினியோக மையத்தில் உணவு வாங்க வந்திருக்கும் 29 வயதான யுவான் என்ற பெயின்டர் இருந்து இரண்டு ஆண்டுகள் வேலை இல்லாமல் இருக்கிறார். “எனக்கு வேலை வேண்டும், இந்த தருமம் தேவை இல்லை” என்றார் அவர்.

36 வயதான டோனி லோபேஸ் தனது நண்பர் மோனிகா வர்காஸூடன் இலவச உணவு வாங்க காத்திருக்கிறார். இரண்டு மாத வாடகை பாக்கி ஆனதால் குடியிருந்த வீட்டிலிருந்து சமீபத்தில் அவர்கள் வெளியேறினர்.  “வாழ்நாள் முழுவதும் கௌரவமாக உழைத்தவர்கள் நாங்கள். வீட்டுக்காரர் கதவைத் தட்டி வாடகை கேட்கிறார், கொடுக்க முடியாததால் அவரிடம் சாவியை ஒப்படைத்து விட்டு வெளியில் வந்து விட்டோம்” என்றார்.

வளர்ந்த நாடுகளில் கூட உலக முதலாளித்துவம் மக்களுக்கு அளித்திருக்கும் வாழ்க்கை இத்தகையதுதான்.

படிக்க