Saturday, May 10, 2025
முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள்- 02/10/2012

ஒரு வரிச் செய்திகள்- 02/10/2012

-

செய்தி: சபாநாயகர் ஜெயக்குமார் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து இதற்கான தேர்தல் நடத்த சட்டசபை அவசரமாக கூடுகிறது. புதிய சபாநாயகருக்கான தேர்தலில் தற்போதைய துணை சபாநாயகர் தனபால் நிறுத்தப்படுவார் என்று கட்சியின் பொதுச்செயலரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

நீதி: அடிமைகள் மாறலாம். அர்ச்சனை மாறாது!

________

செய்தி: “அடுத்த பொதுத் தேர்தலுக்குள், மாநில கட்சிகளை உள்ளடக்கிய, புதிய கூட்டணியை உருவாக்க தீர்மானித்துள்ளேன். அத்துடன், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில், மத்திய அரசுக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவேன்,” என, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

நீதி: வாய்தா ராணிக்கு மட்டுமல்ல, வங்கத்து ராணிக்கும் பிரதமர் கனவு!

_________

செய்தி: மத்திய அரசுடன் சில பிரச்னைகளில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பிற்போக்குத்தனமான மதச்சார்பு அரசு வந்துவிடக்கூடாது என்பதால் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு திமுக தொடர்ந்து ஆதரவு அளிக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

நீதி: வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க கூட்டணி அரசில் தி.மு.க பங்கேற்றதே என்று கேட்டால், ” பதவிக்காகத்தான் கொள்கையே அன்றி கொள்கைக்காக பதவி இல்லை” என்பாரோ?

__________

செய்தி: தளி அருகே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், மாஜி மாவட்டச் செயலரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற வழக்கில், தளி, எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், அவர் அண்ணன் வரதராஜன், மாமனார் லகுமையாவை, நேற்று போலீசார் கைது செய்தனர்.

நீதி: ஆனாலும் ‘புரோக்கர்’ தா.பாண்டியன் ‘ரவுடி’ தளி ராமச்சந்திரனை கைவிடவில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்

_________

செய்தி: கிங் பிஷர் விமான நிறுவன விமானிகளின் போராட்டத்தால், அந்நிறுவன விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

நீதி: மல்லையாவின் கம்பெனிக்கு கொடுத்த கடனால் பொதுத்துறை வங்கிகள் பாதிக்கப்பட்டுள்ளது. கேட்பார் யாருமில்லை!

_________

செய்தி: காஷ்மீரில், பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள், ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

நீதி: இந்திய இராணுவம் 5 அப்பாவி காஷ்மீரிகளை கொன்றதாக செய்தி நாளையே மாறலாம்.

__________

செய்தி: “அரவிந்த் கெஜ்ரிவால் மோசமானவர் என்று ஒருபோதும் நான் கூறியது கிடையாது. அவருக்கு எதிராக எந்த குற்றச்சாட்டையும் இதுவரை நான் சொன்னதில்லை. அவர் சமூகத்துக்காக போராடுகிறார். மத்திய மந்திரி கபில்சிபலை எதிர்த்து கெஜ்ரிவால் போட்டியிட்டால், அவருக்கு ஆதரவாக நிச்சயம் பிரசாரம் செய்வேன்.” – அண்ணா ஹசாரே

நீதி: ‘லோக்பால் மசோதா ‘ தேய்ந்து ‘சாதா தோசா’ வுக்கான போராட்டமாகியுள்ளது. சுபம்.

_________

செய்தி: குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள கட்டோதரா என்னுமிடத்தில் இரு பெண் குழந்தையுடன் வாழ்ந்த ஒரு ஜோடி துணி வியபாரம் செய்து வந்துள்ளது. கடன் தொல்லையால் அவதிப்பட்ட அவர்கள் தற்கொலை செய்வதென்று முடிவெடுத்து, தனது குழந்தைகளை தூக்கிலிட்டு கொன்றுள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் தூக்கிலிட்டுக் கொண்டுள்ளனர்.

நீதி: மோடியின் ஆட்சியில் குஜராத் மிளிர்கிறது!

________

செய்தி: மணிப்பூரில் கடந்த 30 ஆண்டுகளாக இராணுவமும், போலீசும் 1528 அப்பாவிகளை போலி மோதலில் கொன்றிருக்கிறது.

நீதி:  இந்த செய்தியை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இன்னும் இந்திய அரசு பயங்கரவாதத்தால் இன்னுமொரு ஒரு உயிர் போயிருக்கும்

_________

செய்தி:  1984 ஆபரேஷன் புளூ ஸ்டார் (பொற்கோவில் சீக்கிய தீவிரவாதிகளை அழித்த) நடவடிக்கைக்காக தன்னை இலண்டனில் நான்கு பேர் கொலை செய்ய முயன்றதாக லெப்டினண்ட் ஜெனரல் கே.எஸ்.பிரார் கூறியுள்ளார்.

நீதி: இது கொலை முயற்சி,  பொற்கோவிலில் நடந்தது டின்னர் பார்ட்டி அப்படித்தானே?  தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் அது தக்காளி ஜூசு!

_________

செய்தி: ஒவ்வொரு மாநிலத்திலும் இரண்டு ஸ்மார்ட் நகரங்களை கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் நவீன போக்குவரத்தும், கார்பன் புகை அற்ற நிலையும் இருக்கும்.

நீதி: முதலாளிகளுடன் கூட்டணி அமைத்து தான் செய்த பத்து லட்சம் கோடி நிலக்கரி ஊழல் ரெக்கார்ட்டை இந்த ஸ்மார்ட் ஊழல் மிஞ்சிவிடுமோ என மன்மோகன் பீதி

_________

செய்தி: எடியூரப்பாவை கட்சியின் மாநிலத் தலைவராக்க வேண்டும், இல்லையேல் கட்சியை விட்டு நீங்குவார் எனும் அவரது கோரிக்கையை பா.ஜ.க தலைவர்கள் அருண் ஜேட்லியும், தர்மேந்திர பிரதானும் கட்சி பிரமுகர்களுடன் பெங்களூருவில் ஆலோசனை நடத்துகிறார்கள்.

நீதி: கட்டுப்பாடான காவிக் கட்சிக்குள் கமுக்கமான சதியாலோசனை!