privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

கடவுளை நொறுக்கிய துகள்!

-

கடவுள்-துகள்

“கடவுள் துகள்” என்ற பெயரில் ஹிக்ஸ் போசோன் அழைக்கப்படும் காரணத்திற்காகவே, “அறிவியலால் கடவுளை வரையறுக்க முடியுமா?” என்ற தலைப்பில் என்.டி.டி.வி ஆங்கிலத் தொலைக்காட்சி ஒரு விவாதத்தை ஒளிபரப்பியது. கடவுள் இருப்பது அங்கீகரிக்கப்பட்ட உண்மை போலவும், அதனை வரையறுக்கும் ஆற்றல் அறிவியலுக்கு இருக்கிறதா இல்லையா என்பது மட்டுமே பிரச்சினை போலவும் காட்டுகின்ற ஒரு பித்தலாட்டத் தலைப்பு!

ஜக்கி வாசுதேவ், டில்லி கத்தோலிக்க திருச்சபையின் டொமினிக் இமானுவேல், விவேகானந்தா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆத்ம பிரியானந்தா – இவர்கள் ஆன்மீகத்தரப்பு. புஷ் பார்கவ், மாலிகுலார் பயாலஜிஸ்ட் மற்றும் பேரா. ராஜாராமன், இயற்பியல் பேராசிரியர் இருவரும் அறிவியல் தரப்பு.

முகத்தில் முட்டாள் திமிரும், அசட்டுத் தற்பெருமையும் பளிச்சிட, மிகை நடிப்புத் தோரணையில், “அறிவியலும் தேடுகிறது, ஆன்மீகமும் தேடுகிறது” என்று கார்ப்பரேட் ஆன்மீக வியாபாரிகளுக்கே உரிய சொல்விளையாட்டை தொடங்கினார் ஜக்கி. “நீ தேடுவது வேறு அறிவியல் தேடுவது வேறு, அறிவியல் தேடுகின்ற முறையும் வேறு” என்று நாகரிகமான மொழியில் அதைக் கத்தரித்தார் பார்கவ்.

“பிரபஞ்சத்தின் 4% மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாக அறிவியலாளர்களே கூறியிருக்கிறார்கள். மிச்சமுள்ள 96 விழுக்காடு பிரபஞ்சம் பொருளால் ஆனது அல்ல, அதைத்தான் ஆன்மீகம் என்கிறோம்”

என்றார் ஜக்கி. “பட்டா இல்லாதவன் சொத்தெல்லாம் என் சொத்து. கண்டுபிடித்தது அறிவியலுக்கு, கண்டுபிடிக்காததெல்லாம் கடவுளுக்கு” என்று விளக்கும் இந்த தில்லுமுல்லு வாதத்தின் மீது ராஜாராம் காறி உமிழ்ந்த பிறகும் ஜக்கி சளைக்கவில்லை.

“அறிவியல் எல்லாவற்றையும் அறுத்து உண்மையைத் தேடுகிறது. அணுவைப் பிளந்து பார்க்கிறது. உங்களை அறுத்துப் பார்த்து நீங்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள முடியுமா?”

என்று பொளந்து கட்டவே, ‘முடியல‘ என்று சரிந்து விட்டனர் அறிவியலாளர்கள். “பிரபஞ்சம் மலை, சிற்றெறும்பாகிய நாம் மலையை எப்படி அறிய முடியும்?” என்றார் துணைவேந்தரான சாமியார். தன் முன் இருப்பது மலை என்பதை தெரிந்து கொள்ள முடிந்த எறும்பால், மலையின் இரகசியத்தை ஏன் தெரிந்து கொள்ள முடியாது என்று அந்த துணைவேந்தருக்கு உரைக்கவில்லை.

“அறிவியல் ஒரு துகளோடுதான் போராடிக் கொண்டிருக்கிறது. இன்னும் அது பொருளையே என்னவென்று அறியவில்லை. ஆன்மாவை ஆராய்ந்து பார்ப்பதற்கு அது இன்னும் வெகுதூரம் போகவேண்டும்”

என்று மீசையில் மண் ஒட்டாத தோரணையில் பேசினார் இமானுவேல்.

“அதிருக்கட்டும். பைபிள் கூறும் படைப்புக் கோட்பாடு இனியும் செல்லுபடியாகுமா?” என்று அவரைக் கேட்டதற்கு,

“ஆதி ஆகமத்தில் சொன்னபடி 6 நாளில் கடவுள் உலகத்தைப் படைத்திருக்க வேண்டும் என்றில்லை. இப்போது அறிவியல் சொல்வது போல பெருவெடிப்பாக இருக்கலாம். இதுவும் கடவுளின் படைப்புதான்”,

கோட்டையில்லே கொடியும் இல்லே, அப்பவும் நான் ராஜா என்றார் கூச்சமே இல்லாமல்.

புலன்களால் அறிய முடியாதது, கலையைப் போல ஒரு மாறுபட்ட அறிதல் முறை, காதல் போன்றதொரு உள்ளுணர்வு என்று கடவுளுக்கு பலவிதமாக முட்டுக்கொடுத்தார்கள் இந்த ஆன்மீக வல்லுநர்கள் – இது என்.டி.டி.வி விவாதம்.

இன்னொரு புறம் வாழும்கலை ஸ்ரீஸ்ரீரவிசங்கர்ஜி, அவரது வெள்ளைக்கார பக்தர்கள் மற்றும் ஜீன்ஸ் அணிந்த மாமிகளிடம், பெருவெடிப்பு பற்றி ரிக் வேதத்திலேயே எழுதப்பட்டிருக்கிறதாகவும்,  தற்போது ஹிக்ஸ் போசோன் பற்றி விஞ்ஞானிகள் விளக்கிய பின்னர்தான், ரிக் வேதத்தின் ஆழமான உட்பொருளை மேலும் தெளிவாகப் புரிந்து கொள்வதாகவும் அரைக்கண்ணை மூடியபடி, அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தார். அதாவது ரிக் வேதம் ஏற்கெனவே கண்டுபிடித்துக் கூறியிருப்பதைத்தான், செர்ன் ஆய்வுமையம் தற்போது கண்டுபிடித்திருக்கிறது என்ற உண்மையை, தான் இப்போதுதான் கண்டுபிடித்திருப்பதாக கூறிக்கொண்டிருந்தார் ரவிசங்கர்ஜி.

அதிகம் சொல்வானேன். மதம், ஆன்மீகம், தேடல் என்ற பெயர்களில் தமது வணிகத்தை நடத்திவரும் இந்த வல்லுநர்கள் அனைவர்க்குமான ஒரு பொதுத்தன்மை என்னவென்றால், முடிந்தவரை இவர்கள் அறிவியல் பார்வையை ஆதரிப்பவர்கள் போலப் பேசுகிறார்கள். இவர்களுடைய ஆன்மீகத்தை ஆய்வுக்கு உட்படுத்த முயன்றால், அறிவியலின் அளவுகோலால் எங்களை அளக்க முடியாது என்று சீறுகிறார்கள். அறிவியலின் வரம்பு பற்றி எச்சரிக்கிறார்கள். பிரபஞ்ச ரகசியத்தை கண்டுபிடித்துவிட முடியுமா என்று அச்சுறுத்துகிறார்கள்.

அறிவியலோ, இயற்கையின் ரகசியத்தை கண்டுபிடித்துவிட்டோம் என்று மார்தட்டுவதுமில்லை. பொருத்தமானதொரு விடை கிடைத்து விட்டதென்று, தனது ஆய்வினை நிறுத்துவதுமில்லை.

 ♠ ♠

பீட்டர்-ஹிக்ஸ்
பீட்டர் ஹிக்ஸ்

ஹிக்ஸ் போசோனுடன் கடவுளை இணைத்து முடிச்சு போடுவதற்கு ஆன்மீகவாதிகளின் கையில் அகப்பட்ட நூல், கடவுள் துகள் என்று பெயரிடப்பட்ட லேடர்மேனின் புத்தகம். ‘விடை இந்தப் பிரபஞ்சம் என்றால், கேள்வி என்ன?‘ என்று அட்டையிலேயே கேட்கிறார் லேடர்மேன். 1993 இல் இயற்கை விஞ்ஞானத்தில் அவர் எழுப்பிய இதே கேள்வியை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் தத்துவஞானத் துறையில் இந்தியாவில் எழுப்பினார்கள், நமது மரபின் ஆதி முதல் பொருள் முதல்வாதிகளான சாருவாகர்கள்.

“கடவுள்தான் இந்த உலகத்தைப் படைத்தான் என்போரே, வறுமையும் பசியும் பிணியும் நிறைந்த இந்த உலகத்தை கடவுள் எதற்காகப் படைத்தான்? எதற்காகப் பிறப்பு, எதற்காக இறப்பு? இவையெல்லாம் இறைவனின் லீலையென்போரே, உங்கள் இறைவன் எத்தனை வக்கிரமானவன்?”

என்று கேட்டார்கள் சாருவாகர்கள்.

அறிவியல் கண்ணோட்டத்தின் ஊற்று விடையல்ல, கேள்வி. ஒரு கேள்விக்கு விடையாக பல ஊகங்கள் முன்வைக்கப்படலாம். சோதனையில் எந்த ஊகம் நிரூபிக்கப்படுகிறதோ அது மட்டுமே விடையாகிறது. எல்லா ஊகங்களும் பொய்ப்பிக்கப்பட்டு புதியதோர் விடையும் சோதனையில் கிடைக்கலாம். ஒருவேளை செர்ன் ஆய்வகத்தில் நடைபெற்ற சோதனையில் ஹிக்ஸ் போசோன் என்ற துகள் கிடைத்திருக்கவில்லையானாலும், அதனை தோல்வி என்று அறிவியல் கருதுவதில்லை. பருப்பொருளின் தோற்றம் குறித்த தனது ஆய்வு முயற்சியையும் அறிவியல் கைவிடப்போவதில்லை.

அறிவியல் என்பது அறிவியலின் வரலாறாகவும் இருக்கிறது என்பார் வரலாற்றறிஞர் டி.டி.கோசாம்பி. கலீலியோ, நியூட்டன், ஐன்ஸ்டீன், போஸ், ஹிக்ஸ், அப்துல்சலாம் என்று வெவ்வேறு நாடுகளையும் கண்டங்களையும் சேர்ந்த அறிவியலாளர்களின் கண்டுபிடிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக ஒரு பொது இழையில் சேர்ந்து மனித குலத்தின் பொதுவான அறிவாக மாறுகின்றன. அவை தொழில்நுட்பங்களாக உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும்போது, பிரம்மாண்டமான சமூக ஆற்றலாகின்றன.

ஆன்மீகம் என்ற பெயரில் தத்துவஞானத் தளத்தில் ஒன்று சேர்ந்து கொள்ளும் மதவாதிகள், உலகம் தோன்றியதெப்படி என்று வேதங்களும், பைபிளும், குர் ஆனும் கூறுவதை நிரூபிப்பதற்கோ, ‘கடவுளுக்குப் பொதுவாக‘ தமக்குள் ஒரு முடிவுக்கு வருவதற்கோ என்றுமே முயன்றதில்லை. ஞாயிறுதோறும் பைபிளை ஜெபித்தாலும் அதிலிருந்து படைப்பின் கோட்பாட்டை யாரும் புரிந்து கொள்வதில்லை. அதே நேரத்தில் நியூட்டனின் மூல நூலைப் படிக்காத ஒரு பள்ளி மாணவனுக்குக் கூட புவி ஈர்ப்பு விசைக் கோட்பாடு புரியாமல் இருப்பதில்லை.

இயற்கையின் இயக்கம் குறித்த விஞ்ஞானிகளுடைய கண்டுபிடிப்புகள் அவர்களுடைய தனிநபர் அனுபவங்கள் அல்ல. அவை யார் வேண்டுமானாலும் சோதித்துப் பார்க்கத்தக்க பொது அனுபவங்கள் அல்லது முடிவுகள். இதன் காரணமாகத்தான் ஒரு விஞ்ஞானியின் அறிதல் சமூகத்தின் பொது அறிவாக மாற முடிகிறது. அறிவியலுக்குள் ஒரு வரலாற்று தொடர்ச்சி வந்துவிடுகிறது. நியூட்டனின் ஆப்பிள் நம்முடைய ஆப்பிளாகிவிடுகிறது.

தங்களுடைய அறிதல் முறை புலன்சாராத அறிதல் என்று கூறும், மதவாதிகள், ஜக்கி, நித்தி, ரவிசங்கர்ஜிக்களின் அறிதல்கள், கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் ரகத்தை சேர்ந்தவை. புலனறிவுக்கும், பகுத்தறிவுக்கும் மொழியின் சாத்தியத்துக்கும் அப்பாற்பட்டவையாக அவர்களால் சித்தரிக்கப்படுபவை. எனவே அவை நம்முடைய ஆப்பிளாக முடியாதவை.

சமஸ்கிருதத்தில் மர்மமான சொற்களில் முனிவர்கள் எழுதிச் சென்றவைகளுக்கு கவர்ச்சிகரமான ஆங்கிலத்தில் வியாக்கியானம் கூறி, மேற்குலகின் மீது இந்தியாவின் ஆன்மீக மேன்மையை நிலைநாட்டுவதும், காசு பார்ப்பதும் எளிது, என்று இந்தக் கும்பலைத் தோலுரிக்கிறார் கோசாம்பி.

இயற்கை விஞ்ஞானம் கடவுளை விண்ணுலகின் கோள்களிலிருந்து விரட்டி விரட்டி அகற்றி வருகிறது. ஆறு நாட்களில் கடவுள் உலகத்தைப் படைத்ததாகக் கூறும் ஆதியாகமத்தை மறுப்பதற்கு ஒருவன் அவிசுவாசியாக இருக்கத் தேவையில்லை. அந்த விடயத்தில் ஆர்ச் பிஷப்புகளே தேவனைக் கைவிட்டு விட்டார்கள். இருப்பினும் கடவுள் ஒழிந்து விடவில்லை.

  ♠ ♠

கேலக்சிகாரா பாலைவனத்தின் பெரு மணற்பரப்புதான் இந்தப் பிரபஞ்சமென்றால், அதில் ஒரு மணற்துகளே இப்பூமி என்று அறிவியல் அறுதியிட்டுக் கூறிவிட்டது. ஆயினும் என்ன? இந்த மணற்துகளில் பிறந்து வளரும் நுண்ணுயிர்கள் முதல் விலங்குகள் மனிதர்கள் வரையிலான அனைத்து உயிரினங்களின் ஆயுட்காலத்தையும், பெங்களூரு நீதிபதியுடைய பதவிக்காலத்தையும், சொத்துக்குவிப்பு வழக்கின் வாய்தா தேதிகளையும் முன் கூட்டியே தீர்மானித்து இயக்குகின்ற பேரறிவு ஒன்று இருப்பதாகவும், ஒரு ஐயரை வைத்து அந்தப் பேரறிவை சரிக்கட்டுவதன் மூலம் வாய்தா தேதியைத் தள்ளிப்போடமுடியும் என்றும் ஜெயலலிதா நம்புகிறார். அரசன் முதல் ஆண்டி வரை பலரும் பலவிதமாக நம்புகிறார்கள்.

கடவுள் தகர்க்கப்பட்டு விட்டார். நம்பிக்கையைத் தகர்க்க முடியவில்லை. எனவே நம்பிக்கைக்குள் ஒளிந்து கொள்கிறார் கடவுள். முதலாளித்துவ சமூகம் தோற்றுவிக்கின்ற அனுமானிக்க முடியாத நிச்சயமின்மையும், இச்சமூக உறவுகள் தோற்றுவிக்கும் சிக்கல்களும், கடவுள் என்ற அனுமானத்தை வாழ வைக்கின்றன. வானத்தில் கிடைக்காத இடுக்குகளை கடவுளுக்கு பூமியில் வழங்குகின்றன. இதே இடுக்குகளுக்குள் பாதுகாப்பாகப் பதுங்கியிருக்கும் பழைய புதிய மதவாதிகளும் அறிவியலுக்கு எதிராக ஆர்ப்பரிக்கிறார்கள்.

“நவீன அறிவியலால் வெளிக்கொணரப்படும் புதிர்களும், பிரபஞ்சத்தின் விதிகளும், கடவுளின் ஆளுமையைத்தான் காட்டுகின்றன”

என்கிறார் வாடிகனின் வானவியல் வல்லுநர் கய் கன்சால்மேக்னோ.

அவரது கருத்துப்படி கடவுள் எல்லாமறிந்த ஆளுமையாகவே இருக்கட்டும். குவான்டம் இயற்பியல், துகள் இயற்பியல், உயிர் வேதியல் உள்ளிட்ட பல்துறை அறிவு கடவுளுக்கு உண்டு என்பதை, அதாவது விவிலியம் அறிந்திராத தேவனின் மகிமைகளை, நவீன அறிவியல்தானே போப்பாண்டவருக்கு கண்டு பிடித்துச் சொல்ல வேண்டியிருக்கிறது! அறிவியலின் ‘ஆளுமை‘ எவ்வளவு அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்குத்தானே கடவுளின் ஆளுமை குறித்த திருச்சபையின் புரிதலும் அதிகரிக்கிறது!

‘காட் டெலூஷன்‘ (இறை மயக்கம்) நூலின் ஆசிரியரும் பிரிட்டனின் பிரபல இறை மறுப்பாளருமான பேரா. ரிச்சர்டு டாகின்ஸின் கூற்று, அறியாமையின் செருக்கு நிறைந்த அந்தப் பிதற்றலுக்குப் பொருத்தமான பதிலாக அமைகிறது.

“அறிவியல் நமக்கு அளிக்கின்ற பிரமிப்பூட்டும் ஆச்சரிய உணர்ச்சி என்பது, மனித மனம் எட்டிப் பிடிக்கக் கூடிய மிக உன்னதமான உணர்ச்சிகளில் ஒன்று. அற்புதமானதொரு இசையும் கவிதையும் அளிக்கின்ற ஆழ்ந்த அழகியல் உணர்ச்சிக்கு இணையானது அது. இந்த உலகமும், பிரபஞ்சமும் அழகானவை, அற்புதமானவை – அவற்றை எந்த அளவுக்கு நாம் புரிந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு! -… அறிவியல் என்பது எதார்த்தத்தின் கவிதை.”

அறிவியலையும் பகுத்தறிவையும், வெறுமனே அறுத்துப் பார்க்கும் ஆய்வு முறையாகவும், அழகியல் உணர்ச்சியற்றவையாகவும், இதயமற்றவையாகவும் காட்டும் ஆன்மீகப் பித்தலாட்டத்தின் மீது டாகின்ஸின் கூற்றில் உள்ள உண்மை ஒளிவெள்ளம் பாய்ச்சுகிறது.

“தன்னையே தான் அறிதல் என்று கூறிக்கொண்டு, இந்திய முனிவர்கள் மர்மமான மொழியில் சூக்குமமாக எதையோ எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். லூயி பாஸ்டர் போன்ற விஞ்ஞானிகளோ தம் உயிரையும் பணயம் வைத்து நுண்ணுயிர் குறித்த புரிதலையும் தடுப்பு மருந்துக் கோட்பாட்டையும் மருத்துவ உலகிற்கு அளித்திருக்கிறார்கள். இதுதான் தவம், இவர்கள்தான் நவீன உலகின் போதி சத்துவர்கள்” என்று அறிவியலின் இதயத்தையும் ஆன்மீகத்தின் இதயமின்மையையும் வேறு விதமாக எடுத்துச் சொல்கிறார் கோசாம்பி.

பிரம்மம், ஞானம், அவித்யை என்ற சில சொற்களையே சோழிகளாக உருட்டிப் போட்டு, அதைக்கண்டு வாய்பிளந்து நிற்கும் புளித்த ஏப்ப வர்க்கத்தினரின் மூளைகள் மீது கீழைத்தேயத்தின் ஆன்மீக மேன்மையை நிலைநாட்டி பணம் பண்ணிக் கொண்டிருக்கும் நித்தி, ஜக்கி, ரவிசங்கர்ஜி முதலான ஆன்மீக கழைக்கூத்தாடிகள், அறிவியலுக்கு அடக்கம் வேண்டுமென்று அறிவுரை சொல்கிறார்கள்.

அறிவியல் ஆணவம் கொண்டு ஆடுவதைப் போலவும், ஆன்மீகத்தை அடக்கத்தின் திருவுருவாகவும் சித்தரிக்கும் ஜக்கி வாசுதேவ், அறியாமையின் தீவிரத்தை உணரவேண்டுமென உபதேசிக்கிறார். அறிவைத் தேடுபவன் மட்டும்தான், தனது அறியாமையின் தீவிரத்தையோ, ஆழத்தையோ புரிந்து கொள்ள முடியும். அறியாமையையே வரப்பிரசாதமாக கருதி வழிபடும் ஆன்மீகம், அறியாமையின் தீவிரத்தை எந்தக்காலத்திலும் உணரமுடியாது.

பருப்பொருளின் தோற்றத்தைக் கண்டறியும் முயற்சியில் அறிவியல் ஈடுபட்டிருக்கும் இந்தக் காலத்தில், பெருவெடிப்பையே சிறிய அளவில் நிகழ்த்திப் பார்க்குமளவுக்கு அறிவியல் முன்னேறியிருக்கும் இக்காலத்தில்,அபத்தமானவையும் அருவெறுக்கத் தக்கவையுமான இத்தகைய கருத்துகளை ஆன்மீகம் என்ற பெயரில் எங்ஙனம் கடைவிரிக்க முடிகிறது? ஹிக்ஸூம் ரவிசங்கர்ஜியும் அக்கம்பக்கமாக நிலவுவது எப்படி சாத்தியமாகிறது?

   ♠ ♠

றுதியான தத்துவஞான அடித்தளத்தின் மீது நிற்காத வரை, முதலாளித்துவக் கருத்துகளின் தாக்கத்திலிருந்தும் முதலாளித்துவ உலக கண்ணோட்டத்தின் மீட்டுருவாக்கத்திலிருந்தும், இயற்கை விஞ்ஞானமோ, பொருள்முதல்வாதமோ தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியாது. தன்னுடைய போராட்டத்தில் சொந்தக் காலில் தாக்குப் பிடித்து நிற்பதற்கும், வெற்றியை சாதிப்பதற்கும், ஒரு இயற்கை விஞ்ஞானி”. இயங்கியல் பொருள்முதல்வாதியாக இருக்கவேண்டும்‘என்பார் லெனின். (தொகுதி-38, பக்கம் 146-47)

“இயற்கை விஞ்ஞானம் அதிவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதன் அனைத்து துறைகளும் தீவிரமான கொந்தளிப்பான மாற்றங்களுக்கு உள்ளாகி வரும் இந்தச் சூழலில் அது தத்துவஞான முடிபுகளைத் தவிர்த்து நிற்கமுடியாது.”  (லெனின், தொகுதி-33, பக்கம் 232-34)

லெனின்இயற்பியல் துறையில் பெரு முன்னேற்றம் கண்ட இருபதாம் நூற்றாண்டின் துவக்க காலத்தில்தான் பருப்பொருளின் மறைவு குறித்துப் பேசிய புறவய கருத்து முதல்வாதமான மாக்கிசம் எனும் கருத்துமுதல்வாத தத்துவப் போக்கு ஐரோப்பாவில் எழுந்தது. இதனை எதிர்த்து மார்க்சியமும் அனுபவ வாத விமரிசனமும் என்ற நூலை எழுதிய லெனின், இயற்பியலின் புதிய கண்டுபிடிப்புகள் பொருளுக்கும் இயக்கத்துக்கும் இடையிலான ஒற்றுமை குறித்த மார்க்சியக் கோட்பாட்டை உறுதி செய்வதை எடுத்துக் காட்டினார்.

இயற்கையின் இயக்கம் குறித்த விதிகளைக் கண்டறிகிறது நவீன அறிவியல். எனினும் அறிவியலின் இந்தக் கண்டுபிடிப்புகளுக்கும், பழைய வகையிலான சிந்தனை முறைகளுக்கும் இடையில் ஒரு முரண்பாடு இருக்கத்தான் செய்கிறது. முதலாளித்துவ சமூகத்தின் சிந்தனை மரபில் வேரோடியிருக்கும் கருத்துமுதல்வாதமும், இயக்க மறுப்பியல் கண்ணோட்டமும் அறிவியலாளனின் சிந்தனைக்கு உள்ளேயும் கூட ஆழமாக வேரோடியிருக்கிறது.

அதனால்தான், முதலாளித்துவ உலகில் அறிவியலின் முன்னேற்றம் என்பது உணர்வு பூர்வமானதாக இருப்பதில்லை என்றும், அது உண்மையை நோக்கி சரியான திசையில் முன்னேறும் சந்தர்ப்பங்களிலும் கூட உண்மைக்கு முதுகைக் காட்டியபடிதான் நகர்ந்து செல்கிறது என்றும் கூறுகிறார் லெனின். (தொகுதி-14, பக்கம்-313)

இன்று முதலாளித்துவம் பிரம்மாண்டமாக வளர்ந்து உலகு தழுவியதாக மாறியிருக்கிறது. அறிவியல் ஆய்வை ஒரு அறிவியலாளன் தனித்துச் செய்து பார்த்த காலம் மலையேறி விட்டது. கார்ப்பரேட் நிறுவனங்களின் பணபலமும், பிரம்மாண்டமான ஆய்வகங்களும், பல்துறை ஆய்வாளர்களின் ஒத்திசைவும் இல்லாமல் ஒரு அறிவியல் சோதனை என்பது இன்று சாத்தியமற்றது. 60 களிலேயே ஹிக்ஸ் தனது கண்டுபிடிப்பை காகிதத்தில் வெளியிட்டு விட்டார். செர்ன் ஆய்வு மையத்தைப் போன்றதொரு நிலத்தடி ஆய்வு மையத்தை அமைப்பதற்கான பணிகளையும் 90 களிலேயே தொடங்கியது அமெரிக்கா.

உலகத்தை தனது மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதற்காக ஆண்டுக்கு 600 பில்லியன் டாலர் ராணுவத்துக்கு செலவு செய்யும் அமெரிக்க அரசு, பிரபஞ்சம் தோன்றியது எப்படி என்று அறிந்து கொள்வதற்கு 10 பில்லியன் டாலர் செலவு செய்வதை வீண் என்று கருதி, தோண்டிய சுரங்கத்தை மூடியது. பின்னர் ஐரோப்பிய நாடுகளின் கூட்டு முயற்சியாகத்தான் செர்ன் ஆய்வு மையம் உருவாக்கப்பட்டது.

ஏகாதிபத்திய முதலாளித்துவம், மனிதனுக்கேயுரிய அறிவுத்தாகத்தால் உந்தப்பட்டோ, இயற்கையைப் பேணும் பொருட்டோ, அல்லது இயற்கை இடர்களிலிருந்து மனிதகுலத்தைக் காக்கும் பொருட்டோ அறிவியல் ஆய்வைத் தொடங்குவதில்லை. போர் அல்லது இலாபம் – இவைதான் முதலாளித்துவத்தின் கீழ் அறிவியலை உந்தித் தள்ளுகின்றன.

அந்த வகையில், கண்காணிப்பதற்கும், வேவு பார்ப்பதற்கும், அழிப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள்தான், நவீன மருத்துவக் கருவிகளைப் பிரசவித்திருக்கின்றன. இது போன்றவை முதுகைக் காட்டியபடி நடந்ததில் கிடைத்த முன்னேற்றங்கள்.

இயற்பியல், வேதியல், வானவியல் உள்ளிட்ட எந்த துறையின் ஆய்வும் தனித்து மேற்கொள்ளப்பட இயலாத அளவிற்கு இன்று அறிவியல் முன்னேறிவிட்டது. எந்த ஒரு ஆய்விலும் ஈடுபடுகின்ற தனித்துறைகளுக்கு இடையே ஒருங்கிணைவும் ஒத்திசைவும் தேவைப்படுகிறது. அந்த ஒத்திசைவு முதலாளித்துவ சமூக அமைப்புடனும், அதன் உலக கண்ணோட்டத்துடனும் நேரடியாக முரண்படுகின்றது. முதலாளித்துவத்திற்கு கடவுள் தேவைப்படுகிறார்.

‘ஆன்மீகத் தீர்வுகள்’ என்ற நூலின் ஆசிரியரும், அமெரிக்காவில் வாழும் மருத்துவருமான தீபக் சோப்ரா, அத்வைதத்தை ரீ மிக்ஸ் செய்து தருவதன் மூலம் பொருள்முதல்வாத தத்துவத்திலிருந்து முதலாளித்துவ உலகைக் காப்பாற்றுகிறார்:

“இந்தப் பிரபஞ்சம் ஏன் என்ற கேள்வி அறிவியலாளர்களால் மட்டுமே பதிலளிக்க முடிந்தது அல்ல. மாற்று விளக்கத்தின் படி இப்பிரபஞ்சமே உணர்வு (பிரக்ஞை) பூர்வமானது. நம்முடைய பிரக்ஞையின் மூலமும் அதுதான். நாம் வருகிறோம் என்பது இந்தப் பிரபஞ்சத்துக்குத் தெரியும். நாம் கடவுளுடைய பேரறிவின் ஒரு பகுதியே. எனில் கடவுள்தான் இப்போது கடவுள் துகளையும் கண்டுபிடித்திருக்கிறார்.”

இதற்கு நேர் எதிராக பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்குமான உறவை பொருள்முதல் வாத நோக்கில் விளக்குகிறார், பிரபல அமெரிக்க விண்வெளி விஞ்ஞானியும் நாத்திகருமான கார்ல் சாகனின் மாணாக்கரும், வானவியல் இயற்பியல் வல்லுநருமான நீல் டிகிராஸ் டைசன்:

‘நாம் ஒருவரோடு ஒருவர் உயிரியில் ரீதியாகப் பிணைக்கப்பட்டிருக்கிறோம், இப்பூமியுடன் வேதியல் ரீதியாகப் பிணைக்கப்பட்டிருக்கிறோம், பிரபஞ்சத்துடன் அணுவால் பிணைக்கப் பட்டிருக்கிறோம். இதை எண்ணும்போதே நான் முறுவலிக்கிறேன். அகண்டமானவனாக உணர்கிறேன். நாம் பிரபஞ்சத்தினும் மேலானவர்கள் அல்ல, அதன் அங்கமானவர்கள். நாம் பிரபஞ்சத்தில் இருக்கிறோம், பிரபஞ்சம் நம்முள் இருக்கிறது”

நவீன விஞ்ஞானம்பெரும் பாய்ச்சலில் முன்னேறத் தொடங்கியிருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு பற்றி எங்கெல்ஸ் இவ்வாறு எழுதினார்:

“இயற்கைக்குப் புறத்தில் நிற்கும் ஒருவனைப் போல இயற்கையின் மீது நாம் எவ்விதத்திலும் ஆளுகை புரியவில்லை என்பதும், அதற்குப் பதிலாக, நமது ரத்தம், சதை, மூளை இவற்றுடன் இயற்கையோடு சேர்ந்தவர்கள் நாம். அதன் நடுவில் நிலைவாழ்கிறோம் என்பதும், இயற்கையின் நியதிகளைக் கற்றுக் கொண்டு அவற்றைப் பொருந்தியவாறு கடைப்படிப்பதில் இதர எல்லாப் பிராணிகளைக் காட்டிலும் நமக்கு அனுகூலம் உள்ளது என்பதிலேயே அதன் மீது நமது ஆளுகை அடங்கியுள்ளது.”

இயற்கையின் இயக்கத்தை அறிவியல் பூர்வமாகப் புரிந்து கொள்வது மட்டுமல்ல, தானே உருவாக்கிக் கொண்ட சமூகத்தின் இயக்கத்தையும் அறிவியல் பூர்வமாகப் புரிந்து கொண்டு வினையாற்றும்போதுதான், மனிதன் தானே உருவாக்கிய கடவுளையும் அகற்ற முடியும். அந்த சோதனையில் மோதவிடுவதற்கு புரோட்டான்களோ, ஹாட்ரான் கொலைடரோ தேவையில்லை.

_______________________________________________

புதிய கலாச்சாரம், ஆகஸ்டு – 2012
_____________________________________________________

  1. நான் வினவுவின் பொருளாதாரப் பார்வையையும், ஆயுதப் புரட்சியையும் நிராகரிப்பவன். ஆனால் அறிவியல் – ஆன்மிகம் பற்றிய உங்கள் பார்வையோடு முழுக்க உடன்படுகிறேன். ஜக்கி, ஸ்ரீஸ்ரீ வகையறாவின் முகமூடிகள் கிழிக்கப்படவேண்டும்.

  2. மக்கள் தத்துவத்தையும் விஞ்ஞானத்தையும் போட்டு குழப்பிக்கொள்கிறார்கள் / குழப்படிக்கப்படுகிறார்கள்…

    மதம் / ஆன்மிகம் வைத்து வியாதிகளுக்கு மருந்தோ / சிகிச்சையோ செய்ய முடியாது…
    நம் கலாசாரத்திலும் முன்பு விஞ்ஞானம், மருத்துவம் போன்றவை சரியான முறைப்படி செய்யப்பட்டு வந்த்தது (உதா: சித்த மருத்துவம், ஆயுர்வேதம்)…
    ஆனால் இன்று பல போலிகள் சாமியார் அங்கி அனிந்து தத்துவம், மாருத்துவம் என்று எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் ஏமாற்றி காசு பார்க்கிறார்கள்…
    உதா: ஸ்ரீஸ்ரீ தத்துவம், யோகப்பயிற்ச்சி, ஆயுர்வேத மருந்தகம், கல்விநிலையம் என்று கலக்குகிறார் (வயிற்றை?)

  3. //“அதிருக்கட்டும். பைபிள் கூறும் படைப்புக் கோட்பாடு இனியும் செல்லுபடியாகுமா?” என்று அவரைக் கேட்டதற்கு,

    “ஆதி ஆகமத்தில் சொன்னபடி 6 நாளில் கடவுள் உலகத்தைப் படைத்திருக்க வேண்டும் என்றில்லை. இப்போது அறிவியல் சொல்வது போல பெருவெடிப்பாக இருக்கலாம். இதுவும் கடவுளின் படைப்புதான்”,//

    மதவதிகளுக்கு ஒரு கேள்வி:

    சமூக விஞ்ஞானி டார்வினின் பரிணாம வளர்ச்சி கொள்கை படியும் பண்டைய இந்தியாவின் நாத்திகர்களான சாருவாகர்களின் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் பார்த்தால் பஞ்ச பூதங்கள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் ஒன்று சேரும்போது ஒரு உயிரி உருவக கூடும்.
    அப்படி உலகிலேயே முதன்முதலில் ஒருசெல் உயிரி அமீபா உருவனது.பல்வேரு கலநிலைகளின் மாறுபட்டினால் பல நூறூ ஆண்டுகளுக்கு பிறகு செல் பிரிதல் மூலம் ஒரு செல்லில் இருந்து இரு செல்,பல செல் என ஊர்வன,பறப்பன,நடப்பன என்று உருவகி, எழுந்துநடக்க ஆரம்பித்த நியாண்டர்தாஸ் என்னும் குரங்கில் இருந்து மனித இனம் வளர்ச்சிப்பெற்றது என்பதை அறிவியல் நிறுவியதன் மூலம் இப்போது செயற்க்கை கருவூட்டல்தொடங்கி,உறுப்பு மாற்றம் ,கலப்பினமாற்றம் என்று அறிவியல் வளர்ந்து முன்னோக்கி பரந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு செல் உயிரி அமீபாக்கு முன்பு உண்டான பஞ்ச பூதங்களுக்கு முன்பு அதுவும் பெருவெடிப்பிற்கு முன் உருவானதாக சொல்லும் கடவுளுக்கு எத்தனை செல்கள்?
    இத்தகைய கேள்வியை கேட்க வைத்ததே கடவுள்தான் என்று பதிலை சொல்லிவிடாதீர்கள்.

    • MANICKAVASAR SAID ABOUT ”THIRUVASAGAM”pullai,pudaai,puzuvai,maraamaghi,pallvirugaamaghi,paravaayaai,pambaghi,kallai,manitharai,peyyai,kanagalaghi,vallasuraraghi,munivaraai,thevarai ella pirapum piranthuthilaythene it-h thavara sangamathul”it’s equal to charles darwin ”evolutionary theory his book of ‘on the origin of species’publised on 1859.but manickavasagar this theory said about may be 8th century{A.D}.MORE THEN 1000 YEARS AGO.THAT’S CALLED INNER SCIENCE OR YOGIC SCIENCE.THIS IS TRUE.READ ABOUT THIRUVASAGAM.AN ATHEIST GOWTHAMA BUBBHA SAID ABOUT MORE THEN 2500 YEARS AGO I WAS FIRST BIRTH OR BORN ‘AMOEBA’.BUT,SCIENCE SAID ABOUT EVOLUTIONARY THEORY 18th CENTURY.DIFFRENCE BETWEEN MORE THEN 2300 YEARS AGO.THAT’S YOGIC SCIENCE OR MEDITATION SCIENCE.BHEEMA RAO AMBEDKAR FOLLWED BY BUDDHA’S NAVAYANA BUDDHAM.BUDDHA QUOTE – PIRAPPAL(BORN) ORUVAN UYYARNTHAVAN ALLA,OLUKATTHALL (DISCIPLINE)MATTUMAE.ONE OF MY FAVOURITE QUOTE.

  4. மதவாதிகலுக்கு எப்படி தன் மததில் நம்பிக்கை இருகிரதோ அதுபோல் நாத்திக வாதிகலுக்கும் தன் வாதத்திலும் நம்பிக்கை சார்ந்த பதிலே உள்ளது தவ்கித் ஜமாத பெருவெடிப்பை பட்றி நாத்திக வாதிகலிடம் விவாதம் நடத்தி அவர்கள் பதில் சொல்ல முடியாமல் தோல்வி அடைந்தார்கள் தவ்கித் ஜமாத்தர்களே பகுத்தரிவாதிகள் என்று நிருபித்தார்கள்

  5. அன்புள்ள வினவு,

    ஓராண்டுக்கு முன்பாக மகர ஜோதி கட்டுரை யை படித்ததன் மூலம் உங்களுடன் அறிமுகமானேன்.

    எனது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றியது கண்டிப்பாக வினவு தான்.

    இது ஒரு நல்ல தரமான கட்டுரை . இதிலும் , இதற்கு முந்தைய போசோன் துகள் பற்றிய கட்டுரையிலும் உள்ள அறிவியல் கூற்றுக்களை முழுவதுமாக புரிந்து கொள்ள முடியவில்லை. எனினும் இதன் உள்ளடக்கம் விளங்குகிறது.

    நான் மிகவும் உணர்ந்து படித்த வரிகள் இவைதான்.

    *இயற்கையின் இயக்கம் குறித்த விஞ்ஞானிகளுடைய கண்டுபிடிப்புகள் அவர்களுடைய தனிநபர் அனுபவங்கள் அல்ல. அவை யார் வேண்டுமானாலும் சோதித்துப் பார்க்கத்தக்க பொது அனுபவங்கள் அல்லது முடிவுகள். இதன் காரணமாகத்தான் ஒரு விஞ்ஞானியின் அறிதல் சமூகத்தின் பொது அறிவாக மாற முடிகிறது. அறிவியலுக்குள் ஒரு வரலாற்று தொடர்ச்சி வந்துவிடுகிறது. நியூட்டனின் ஆப்பிள் நம்முடைய ஆப்பிளாகிவிடுகிறது.

    *தங்களுடைய அறிதல் முறை புலன்சாராத அறிதல் என்று கூறும், மதவாதிகள், ஜக்கி, நித்தி, ரவிசங்கர்ஜிக்களின் அறிதல்கள், கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் ரகத்தை சேர்ந்தவை. புலனறிவுக்கும், பகுத்தறிவுக்கும் மொழியின் சாத்தியத்துக்கும் அப்பாற்பட்டவையாக அவர்களால் சித்தரிக்கப்படுபவை. எனவே அவை நம்முடைய ஆப்பிளாக முடியாதவை.

    *கடவுள் தகர்க்கப்பட்டு விட்டார். நம்பிக்கையைத் தகர்க்க முடியவில்லை. எனவே நம்பிக்கைக்குள் ஒளிந்து கொள்கிறார் கடவுள். முதலாளித்துவ சமூகம் தோற்றுவிக்கின்ற அனுமானிக்க முடியாத நிச்சயமின்மையும், இச்சமூக உறவுகள் தோற்றுவிக்கும் சிக்கல்களும், கடவுள் என்ற அனுமானத்தை வாழ வைக்கின்றன. வானத்தில் கிடைக்காத இடுக்குகளை கடவுளுக்கு பூமியில் வழங்குகின்றன.

    —————————————— கடைசியாக இந்த முறையும் கடவுளின் நிலைமை தண்ணி லாரியில் அடிபட்ட தெருநாயின் நிலை தான்.

    கடவுளின் உயிரை கூட extend பண்ணியது நம்முடைய அறிவியல் தான்
    ( சாய் பாபா – பேஸ் மேக்கர் ).

    நன்றி.

  6. // கடவுள் தகர்க்கப்பட்டு விட்டார். நம்பிக்கையைத் தகர்க்க முடியவில்லை. எனவே நம்பிக்கைக்குள் ஒளிந்து கொள்கிறார் கடவுள். முதலாளித்துவ சமூகம் தோற்றுவிக்கின்ற அனுமானிக்க முடியாத நிச்சயமின்மையும், இச்சமூக உறவுகள் தோற்றுவிக்கும் சிக்கல்களும், கடவுள் என்ற அனுமானத்தை வாழ வைக்கின்றன //

    100/100 உண்மை.

  7. பொருள்முதல்வாதத்தில் முழுமையாக எனக்கு உடன்பாடில்லை என்றாலும் கட்டுரை அருமையாக இருப்பதை மறுக்கமுடியவில்லை..

    ஒரு சில கேள்விகள்.. :

    // எந்த ஒரு ஆய்விலும் ஈடுபடுகின்ற தனித்துறைகளுக்கு இடையே ஒருங்கிணைவும் ஒத்திசைவும் தேவைப்படுகிறது. அந்த ஒத்திசைவு முதலாளித்துவ சமூக அமைப்புடனும், அதன் உலக கண்ணோட்டத்துடனும் நேரடியாக முரண்படுகின்றது. முதலாளித்துவத்திற்கு கடவுள் தேவைப்படுகிறார். //

    இந்த வரிகளை புரிந்து கொள்ள இயலவில்லை.. மேற்படி நேரடி முரண்பாடு இருந்தால் ஏன் அமெரிக்காவும், மேற்கு அய்ரோப்பிய நாடுகளும் பல்துறை விஞ்ஞானிகளையும் ஒருங்கிணைத்து அறிவியல் ஆராய்ச்சிகளை (பாதுகாப்பு நோக்கிலோ, வணிகப்படுத்தும் நோக்கிலோ, வல்லாதிக்க நோக்கிலோ) பெரும் பொருட்செலவில் நடத்துகின்றன என்று விளக்கமுடியுமா..?

  8. சடமும் சக்தியும் ஒன்றென்று கணித முறைப்படி நிறுவித்தருமாறு நிகலெஸ் டெஸ்லாவிடம் சுவாமி விவேகானந்தர் கேட்ட கேள்விக்கு விடை தருவதற்கு அன்று தயாராக இருக்காத விஞ்ஞானம் இன்று ரிக் வேதங்கள் தங்களுக்காகவே
    அர்த்தப்படுத்தப் படுகின்றன என்று கூறுவது மிக வேடிக்கையான விடயம் தான்.


    ”மற்றெந்த அறிவுப்புலங்களையும் போல அறிவின் கண்டடைதல்களால் மதம் தன் இருப்பை நியாயப்படுத்திக் கொள்ளவேண்டுமா கூடாதா? அறிவியலுக்கும் புற அறிதலுக்கும் நாம் பயன்படுத்தும் அதே வழி முறைகள் சமயம் என்னும் அறிவுத்துறைக்கும் பொருந்துமா? என் கருத்து அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதே.
    எவ்வளவு விரைவாக அறிவியல் கண்ணோட்டத்தில் மதம் மதிப்பிடப்படுகிறதோ அத்தனைக்கத்தனை அது நல்லது என்பதே என் எண்ணம். அத்தகைய சோதித்தலால் ஒரு மதம் அழிந்துவிடும் எனில் அது எப்போதுமே உபயோகமற்ற, மதிக்கப்படக்கூடாத மூடநம்பிக்கையாகத்தான் விளங்கியிருக்கிறது. அத்தகைய மதம் எவ்வளவு விரைவாக அழிய முடியுமோ அத்தனை விரைவாக அழிய வேண்டும். அத்தகைய மதம் அழிவதே மானுட குலத்துக்கு நடக்கக்கூடிய மிகச்சிறந்த விஷயமென நான் கருதுவேன். அத்தகைய விதத்தில் மதம் பரிசோதிக்கப்பட்டால் மதத்தின் அனைத்து தேவையற்ற மோசமான விஷயங்களும் அழிந்து சமயத்தின் சாராம்சமான கரு வெற்றிகரமாக அந்த பரிசோதனையிலிருந்து வெளிவரும் என்றே நான் கருதுகிறேன்.”-
    -சுவாமி விவேகானந்தர், Complete Works Vol.1: p.367-

    பொருள் முதல் வாதத்தினை நிலை நிறுத்துவதற்கு நீங்கள் மதங்களை விமர்சிப்பது என்பது ஒரு தந்திரமாக இருக்கலாம். அதில் தோலுரிக்கப்பட வேண்டிய நிறைய விடய‌ங்களை நீங்கள் அப்பட்டமாக செய்வது நிச்சயமாகத் தேவையான ஒன்றும் வரவேற்கத் தக்கதுமாகும். எனினும் இராமகிருஷ்ண மிஷன் இவைகளைக் கடந்த ஒன்று என்பதை இங்கு கூறுவதற்கு நான் கடமையுடையவனாவேன்.

  9. அன்புள்ள`வினவு!கடவுள்`துகளால`பெருசா`என்ன`கண்டு`புடிச்சாங்க`?புதுசா`உல்கதை`உண்டாக்கி`அதுல`வேயில்`காலம்,`மழை`காலம்`போன்றவற்றை`உண்டாக்கி.அந்த`உலகத்துல`மனுஷ்னை`உண்டாக்கிட்டாங்களா?
    டார்வின்`தியரிப்படி`பரிமாணம்`ஒரு`த்டவைதான்`வேலை`செய்யுமா?`யேன்னா,மனுஷனா`மாறுன`ஒரு`குரங்குக்கு`அடுத்தடுத்து`வருசையாககுரங்காக`மாறினவைகள்`மனுஷராக`மாறி`இருக்கணுமில்லையா?

    • Human not a direct evolution from apes ,We homo heractus type monkey we got extra one chromosome compare to ape this is the major different from monkey and us and one more thing still we are (HUMAN’s) evolution like our life period extension ,hum ens systems,brain function like that

  10. // கடவுள் தகர்க்கப்பட்டு விட்டார். நம்பிக்கையைத் தகர்க்க முடியவில்லை. எனவே நம்பிக்கைக்குள் ஒளிந்து கொள்கிறார் கடவுள். //

    ஹிக்ஸ் துகளின் இருப்பு நிருபிக்கப்பட்டிருப்பதால் – போட்டான் என்னும் ஒளித்துகளைத் தவிர பிற அணுத்துகள்களுக்கு நிறையை அளிப்பது ஹிக்ஸ் புலத்துடனான அவற்றின் உறவாடல் என்னும் கோட்பாட்டுக்கு வலு சேர்க்கும் என்ற அளவில்தான் முன்னேறியிருக்கிறோமே தவிர – கடவுள் தகர்க்கப்பட்டு விட்டார் என்று அறிவியலால் கூறமுடியாது..

    காரணம் அறிவியலுக்கு கடவுளை கணக்கில் எடுத்துக் கொள்ளும் அடிப்படை, அவசியம் இல்லை.. ஆனால் கடவுள் நம்பிக்கையை தகர்க்க ஹிக்ஸ் புலத்தையும் தாண்டி மேலும் மேலும் செல்லவேண்டிய கட்டாயம்/சாத்தியம் அறிவியலுக்கு அதிகரித்திருக்கிறது..

    அதாவது ‘கடவுள் நம்பிக்கைக்குள் மட்டுமே ஒளிந்து கொள்ள’ வேண்டிய அவசியம் இல்லை.. ஏனெனில் தேடிப்பார்த்து காணவில்லை என்று உறுதியாகக் கூறவேண்டுமென்றால் ஒரு பெரிய கடலே அறிவியலின் எதிரில் தேடுதலுக்கு விரிகிறது.. ஆனால் அறிவியல் ஆராய்ச்சிகளின் நோக்கம், கடவுளைத் தேடுவதைவிட, தொடரும் ஆராய்ச்சிகளின் பலன்களை அறுவடை செய்வதாகத்தான் இருக்கும் என்பதைக் கணிக்கலாம்.. கடவுளை, அறிவியல் இல்லையென்றோ, இருக்கிறார் என்றோ நிறுவப்போவதில்லை..

    ஆனால் மதங்களால் வரையறுக்கப்படும் கடவுளை அந்தந்த மதத்தவர்களே மேலும் சரியாகப் புரிந்து கொண்டு, மதரீதியாக ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதை நிறுத்த அறிவியல் ஆத்திகர்களுக்கு உதவி செய்து கொண்டே இருக்கும்.. நாத்திகர்களுக்கும் கூட கடவுளைப் பற்றிய ‘புரிதல்’ அதிகமாகலாம்..

Leave a Reply to harikumar பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க