Tuesday, May 6, 2025
முகப்புகட்சிகள்காங்கிரஸ்சோனியா-மன்மோகன்-சிதம்பரம்-மாண்டேக்சிங் அமெரிக்காவின் கூலிப்படை!

சோனியா-மன்மோகன்-சிதம்பரம்-மாண்டேக்சிங் அமெரிக்காவின் கூலிப்படை!

-

walmart-indiaக்க மருந்து கொடுக்கப்பட்ட பந்தயக் குதிரைக்கு வெறி வந்ததைப் போல, உலக மூலதனத்தின் இலாபவெறிக்கு ஊழியஞ் செய்வதில் இறங்கிவிட்டது சோனியா-மன்மோகன்-மாண்டேக்சிங்-சிதம்பரம் கும்பல். மாயாவதி, முலயம் சிங், கருணாநிதி, சரத்பவார் போன்ற சில்லறை அரசியல்வாதிகளின் ஆதரவில் ஒரு தொங்குநிலை சிறுபான்மை ஆதரவில்தான் ஆட்சியில் நீடிக்க முடியும், மக்களின் கடும் எதிர்ப்புக் கிளம்பும் என்று அறிந்திருந்தும் நாட்டையே நாசமாக்கும் மறுகாலனியாக்கச் சீர்திருத்தங்களை முன்தள்ளுவது என்று அக்கும்பல் முடிவு செய்துவிட்டது. இது ஏகாதிபத்திய அடிமையான காங்கிரசு கும்பலின் அரசியல் சாதுர்யம், சாமர்த்தியம், துணிவு என்று கூற முடியாது. உலகையே தன் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துவிட்ட பன்னாட்டு நிதி மூலதனம் என்ன தகிடுதத்தம் செய்தும், எவ்வளவு கோடி டாலர்களை அள்ளி வீசியும் தன்னைப் பிணையில் எடுத்துக் காப்பாற்றிவிடும்; சட்டமும், நீதியும்கூட எதையும் செய்து விட முடியாது என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில் அக்கும்பல் உள்ளது.

2007-ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெடித்த பொருளாதார நெருக்கடி தொடர்வதோடு,  ஐரோப்பிய மண்டலப் பொருளாதார நெருக்கடி நீண்டதாக நீடிப்பதும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையால் புகுத்தப்பட்ட புதிய தாராளமயக் கொள்கையின் படுதோல்வியைப் பறைசாற்றுவதாக அமைந்தன. இதனால் உலக நாடுகள், குறிப்பாக உலகமயமாக்கத்துக்கு பெரும் வாய்ப்புக்களை வழங்கக்கூடிய வளரும் நாடுகள் பன்னாட்டு நிதிமூலதனத்தின் விரிவாக்கத்திற்கான கதவுகளை அடைத்து விடலாம்; அல்லது உலகமயமாக்கலும், புதிய தாராளமயமும் மந்தப்படுத்தப்படலாம் என்று ஏகாதிபத்தியங்கள் அஞ்சுகின்றன. எனவே, தொடரும் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வாக, தமது நிதி மூலதனத்துக்கான முதலீட்டுச் சந்தையை மேலும் விரிவுபடுத்துவதற்கான வேலைகளை விரைவுபடுத்துவதற்காக, வளரும் நாடுகள் மீதான நெருக்குதல்களைத் தீவிரப்படுத்துகின்றன.

மேலும், உலகப் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான நிதிக் கழகங்களுக்கே பல பில்லியன் டாலர்கள் மீட்புப் பொதியாக ஏகாதிபத்திய நாடுகளின் அரசுகளாலும், அதோடு டாலர் பொருளாதாரத்துடன் பிணைக்கப்பட்ட வளரும் நாடுகளின் அரசுகளாலும் கொட்டப்படுகின்றன. மீட்புப் பொதிகளைப் பெறும் நிதிக்கழகங்களும், அவற்றின் மூலம் பன்னாட்டு நிதி மூலதனமும் தமது கொள்ளையை விரிவுபடுத்திக் கொண்டே போகின்றன. இதனால் மீட்புப் பொதிகளை வழங்கிய அரசுகள் திவாலாகின்றன; அலைஅலையாகப் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டு அவற்றின் சுமை வளரும் நாடுகள் மற்றும் மக்கள் மீது திருப்பிவிடப்படுகின்றன.

இந்திய ஆளும் கும்பல் புளுகித் தள்ளியவாறு தாராளமயமும் சீர்திருத்தங்களும் நாட்டின் பொருளாதாரத்திலும் மக்கள் வாழ்நிலையிலும் மாய வித்தைகளை ஏற்படுத்திவிடவில்லை. அந்நிய முதலீடும், உலக நிதி மூலதனமும் தொழில்நுட்பத்தை முன்னேற்றுவதாகவும், பொருளுற்பத்தியையும் அதன் மூலம் வேலைவாய்ப்பைப் பெருக்குவதாகவும் இல்லை. அவை இலாபம் கொழிக்கும் பங்கு மற்றும் ஊகச்சந்தை மூலமும் இயுற்கை வளங்களைச் சூறையாடுவதன் மூலமும், அவற்றிலும் வரிஏய்ப்பு-மோசடி , இலஞ்ச -ஊழல்கள் மூலம் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதிலும்தான் கவனம் செலுத்துகின்றன. இவற்றால்தான், கடந்த சில ஆண்டுகளாகக் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி வேகமும் தொழிலுற்பத்தியும் வீழ்ச்சி அடைந்து தேக்க-வீக்கநிலை நிரந்தரமாகிப் போனது.

ஆனால், அந்நிய மூலதனத்தின் வில்லத்தனமான நம்பிக்கையைப் பெறுவதும் தக்கவைத்துக் கொள்வதும்தான் நாட்டு நலனுக்கும் முன்னேற்றத்திற்கும் அவசியமானது என்று ஒப்பாரி வைக்கின்றது, ஆளும் கும்பல். அந்நிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும், அவர்களின் வருகையும் எங்கே குலைந்து போகுமோ என்ற பயத்தில் நாட்டையே மூழ்கடிக்கிறது. அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதுதான் தனது ஒரே கடமையாகக் கருதுகிறது.

உலக நிதி மூலதனக் கொள்ளையின் விளைவுகள்தாம் இவை என்ற போதிலும், அந்த உண்மை அப்பட்டமாக வெளிப்பட்ட போதும், புதிய தாராளமயப் பொருளாதாரத்தை விரைவுபடுத்தும்படி பலவகையிலும் ஏகாதிபத்தியங்கள் நிர்பந்திக்கின்றன. அந்நிய மூலதனக் கொள்ளையின் மீது வரிமோசடியைத் தடுக்கும் நடவடிக்கைகளை நிறுத்தும்படியும், அதற்கு மாறாக, அதன் கொள்ளைக்கு அகலக் கதவு திறந்து விடும்படியும் உலக நிதிமூலதனமும் ஏகாதிபத்தியங்களும் நேரடியாகவே நெருக்குதல்கள் தருகின்றன.

சமீபத்தில் பெங்களூருவில் நடந்த உலக முதலீட்டாளர்களின் 2012 மாநாட்டில் தாராளமயமாக்கம் தொடர வேண்டியதன் அவசியத்தை நியாயப்படுத்தி, பொருளாதாரச் சீர்திருத்தம் மந்தமாவதால் அந்நிய முதலீட்டாளர்களின் ஆர்வம் குறைகிறது என்று பன்னாட்டு நிதி முதலாளிகளும் உள்நாட்டு தரகு முதலாளிகளும் வாதிட்டிருக்கிறார்கள்.

மன்மோகன் சிங் இலக்கை எட்டுவதில் தோல்வி கண்டுவருவதாக அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளின் ஊதுகுழலாகிய டைம்ஸ் ஏடு, அட்டைப்படச் சிறப்புக் கட்டுரை வெளியிட்டு விமர்சிக்கிறது. அவற்றின் பொருளாதார மதிப்பீடு நிறுவனமான ஸ்டாண்டர்டு அண்டு புவர் வளரும் நாடுகளிலேயே இந்தியப் பொருளாதாரம்தான் அந்நிய முதலீடு குறைவதால் வீழ்ச்சியுறும் என்று ஆரூடம் கூறுகிறது. மற்றொரு மதிப்பீடு நிறுவனமான ஃபிட்ச் இந்தியப் பொருளாதாரம் உறுதிப்பாட்டிலிருந்து எதிர்மறைத் தன்மைக்கு மாறிப் போய்விட்டதாகக் கணிக்கிறது.

அமெரிக்க அதிபர் ஒபாமா, தன் பாணியில் இந்திய ஆளும் கும்பலுக்கு எச்சரிக்கையும் உத்திரவும் விடுத்திருக்கிறார். இந்தியாவின் முதலீட்டுச் சூழல் மோசமாகி வருகிறதென்று அமெரிக்க முதலீட்டாளர்கள் தன்னிடம் பெரிதும் கவலை வெளியிட்டார்களென்றும்,  பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கட்டவிழ்த்து விடுவதற்கு இதுதான் தருணம் என்ற கருத்து இந்தியாவில் வளர்ந்து வருவதாகவும் ஒரு கொக்கியைப் போட்டு, சீர்திருத்தங்களை இந்தியா உடனடியாக அமல்படுத்தத் தொடங்க வேண்டும்; பிரச்சினைக்குரிய சீர்திருத்தங்களை இந்தியா அமல்படுத்தத் தொடங்குமானால், அமெரிக்கா இந்தியாவுக்குத் துணை நிற்கும்” என்றார். அதற்கு ஒத்து வராதவர்கள் இருந்தால், அவர்களை த்தான் சரிகட்டுவதாக மறைமுகமாக வாக்குறுதியும் கொடுத்தார்.

அதனால்தான், தன் எஜமானன் ஒன்று சொன்னால் பத்தாகச் சீர்திருத்தங்களை – உலக நிதிமூலதனச் சேவையை முன்தள்ளுகிறது மன்மோகன் சிங் கும்பல்.  இதுதான் உண்மை. அதற்கு மாறாக, காங்கிரசு-மமதா, பா.ஜ.க. ஆகியோர் நடத்தும் அரசியல் கூத்துக்கள் பெரிதாக்கிக் காட்டப்படுகின்றன.

____________________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2012
__________________________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க