Monday, May 5, 2025
முகப்புசெய்திதிருப்பதி மலையில் ஒரு 'போராட்டம்' !

திருப்பதி மலையில் ஒரு ‘போராட்டம்’ !

-

திருப்பதி-லட்டுமுதலாளித்துவ அமைப்பிற்கெதிராக உலகம் முழுவதும் உழைக்கும் மக்கள் போர்க்குணம் மிக்க கலகங்களை நடத்தி வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகளில் மக்களால் மக்களுக்காக அமைக்கப்பட்டதாக கூறப்படும் நாடாளுமன்றங்களை மக்களே முற்றுகையிடுகின்றனர். உழைக்காமல் உண்ணும் முதலாளிகளுக்கு தமது உழைப்பிலிருந்து வாரி வழங்கும் இந்த அநீதியான சமூக அமைப்பை வேரோடு பிடுங்கி எறியும் கலகத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்தியாவிலும் மறுகாலனியாக்கத்திற்கெதிராக நாளும் பல போராட்டங்கள் நடந்து வருகிறது. அணு உலைக்கு எதிராக கூடங்குளம் மக்களும், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து வணிகர்களும் போராடுகின்றனர்,  தமிழகம் முழுவதும் மின்வெட்டை கண்டித்து ஊர் ஊராக போராடிக் கொண்டிருகின்றனர், ஹூண்டாய் தொழிலாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ‘வரிசை’யில் திருப்பதிக்கு சென்ற பக்தர்களும் ஒரு போராட்டத்தை நடத்தி இணைந்து கொண்டுள்ளனர் !

திருப்பதி திருமலையின் உச்சியில் ஆக்ரோஷமாக முழக்கமிட்டபடி பக்தர்கள் நடத்திய போராட்டத்தால் பதட்டமடைந்த தேவஸ்தான நிர்வாகிகள் உடனடியாக போராட்ட களத்திற்கு வந்து என்ன பிரச்சினை என்று கேட்டறிந்து பக்தர்களை சமாதானம் செய்தனர். பக்தர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு அவை விரைவில் சரி செய்யப்படும் என்று சாந்தப்படுத்திய பிறகு தான் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும் செய்தி திருமலை முழுவதும் தீ போல பரவி விட்டது.

உடனே களத்திற்கு வந்த பத்திரிகையாளர்கள் தேவஸ்தான அதிகாரிகளை சுற்றி வளைத்துக்கொண்டு ஏதோ பெரிய பொருளாதார நெருக்கடி நிலையை கேட்டறிவதை போல ‘நிலைமை எப்போது சீரடையும்’ என்று மைக்குகளை நீட்டிக்கொண்டு நின்றனர். நிர்வாகிகளும், பக்தர்கள் கூட்டம் குறைந்ததும் நிலைமை சீரடைந்து விடும் என்று பதிலளித்தனர்.

ஏழுமலையானின் இருப்பிடத்திலேயே போராட்டமா ?  எதற்காக யாரை எதிர்த்து இந்த போராட்டம் ?

மன்மோகன் சிங், மான்டேக் சிங், ப.சிதம்பரம் கும்பல் மொத்த நாட்டையும் மொட்டை அடிக்க கொலைவெறியோடு அலையும் ஏகாதிபத்தியங்களிடம் ”கண்ணா லட்டு திங்க ஆசையா” என்று நாட்டையே துண்டு துண்டாக்கி லட்டு பிடித்து கொடுத்துக்கொண்டிருக்கும் போது திருப்பதியில் லட்டு தட்டுப்பாடாம் !

பக்தர்கள் கூட்டம் தற்போது மிக அதிகமாக இருப்பதால் “வழக்கமா குடுக்கிற லட்டுல ரெண்டை கட் பன்னிட்டாங்களாம் ! இதனால் கொதித்தெழுந்த பக்தர்கள் நாலு லட்டு பெறுவது எங்களுடைய பிறப்புரிமை நாலு லட்டுகளையும் உடனே வழங்கு” என்று போராட்டத்தில் குதித்து விட்டனர். உலகிலேயே லட்டுக்காக போராடிய ஒரே நாடு பாரதத்திரு நாடு தான் என்கிற செய்தி நிச்சயமாக வரலாற்றில் இடம்பெறும். அதற்காக ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

உலகெங்கும் மக்கள் வாழ்வுரிமைக்காக போராடும் போது திருப்பதியில் மட்டும் லட்டுக்காக போராட்டம் என்றால் இந்து ஞானமரபின் பெருமைதான் எத்தகையது?