Wednesday, May 7, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கதற்கொலையில் தமிழகம் முன்னணி! ஜெயா அரசின் சாதனை!!

தற்கொலையில் தமிழகம் முன்னணி! ஜெயா அரசின் சாதனை!!

-

தற்கொலை

படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிபரம் ஒன்றை தேசிய குற்றப்பிரிவு அமைப்பு (என்சிஆர்பி) வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும், ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதுதான் முகத்தில் அறையும் நிஜம்.

குடும்பப் பிரச்னை காரணமாக 24.3, தீராத நோயால் 19.6, வறுமையால் 1.7, காதல் விவகாரத்தால் 3.4, போதை பழக்கவழக்கங்களால் 2.7, வரதட்சணையால் 2.4, கடன் தொல்லையால் 2.2… என்ற சதவிகிதத்தில் தங்கள் உயிரை மாய்த்துள்ளனர்.

மாநிலங்கள் அளவில் ஒப்பிடும்போது மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 16 ஆயிரத்து 492 பேரும், தமிழகத்தில் 15 ஆயிரத்து 963 பேரும், மகாராஷ்டிராவில் 15 ஆயிரத்து 947 பேரும், ஆந்திராவில் 15 ஆயிரத்து 77 பேரும், கர்நாடகாவில் 12 ஆயிரத்து 622 பேரும் கடந்த 2011ம் ஆண்டில் தற்கொலை செய்துள்ளனர். நாட்டின் மொத்த தற்கொலை எண்ணிக்கையில் இந்த ஐந்து மாநிலங்களின் சதவிகிதம் மட்டும் 56.2. இதர 43.8 சதவிகித தற்கொலைகள் மற்ற 23 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் நடந்துள்ளதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரை, தில்லியில் அதிகபட்சமாக ஆயிரத்து 716 பேரும், புதுச்சேரியில் 557 பேரும் உயிரிழந்துள்ளனர். 7 யூனியன் பிரதேசத்தின் மொத்த தற்கொலை, நாட்டின் மொத்த எண்ணிக்கையில் 1.7 சதவிகிதம்.

2001ல் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 500 ஆக இருந்த எண்ணிக்கை, 2011ல் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பதற்கு காரணம், மறுகாலனியாதிக்கத்தை தீவிரமாக அமல்படுத்தி வரும் மைய அரசின் நடவடிக்கைகள்தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. குடும்பப் பிரச்னை, தீராத நோய், வறுமை, கடன் தொல்லை, காதல், போதை பழக்கவழக்கங்களுக்கு அடிமையாதல், வரதட்சணை… ஆகியவை எல்லாம் தனித்தனியானவை அல்ல. அனைத்துமே ஒன்றுக்குள் ஒன்று கலந்த உலகமயமாக்கலின் விளைவுதான். நிதிமூலதன பெருக்கத்தின் விளைவாக பணக்காரர்கள் மேலும் மேலும் செல்வந்தர்களாக மாறுவதும், உழைக்கும் மக்கள் மேலும் மேலும் வறுமைக்கு பலியாவதும் தொடர்கதையாக இருப்பதைத்தான் இந்த புள்ளிவிப்ரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

தன்னார்வக் குழுக்கள் அரசின் உதவியுடன் அமைக்கும் கவுன்சிலிங் அமைப்புகள், ஒருபோதும் தற்கொலையை முடிவுக்கு கொண்டு வராது. வேலையின்மை, நுகர்வுக் கலாச்சாரம், கடன் தொல்லை, விலைவாசி உயர்வு… ஆகியவற்றுக்கெல்லாம் அடிப்படை காரணமாக விளங்கும் மறுகாலனியாதிக்க கொள்கைகளை என்று அடித்து நொறுக்குகிறோமோ அன்றுதான் தற்கொலை செய்துக் கொள்வதும் நிற்கும்.