privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாதிவாலாகும் திருச்சபை! போப்பின் கவலை!!

திவாலாகும் திருச்சபை! போப்பின் கவலை!!

-

போப்பாண்டவர்மேலும் மேலும் மதச்சார்பற்றதாக மாறி வரும் உலகின் ஆன்மீக பாலைவனத்தை எதிர் கொண்டு கத்தோலிக்கர்களும், சர்ச்சுகளும் மீண்டும் எழுச்சி அடைய வேண்டும், நம்பிக்கையின் உண்மையையும் அழகையும் உணர்ந்து ஆன்மீக வீழ்ச்சியை தடுக்க வேண்டும்’ என அறைகூவல் விடுத்துள்ளார் போப்.

உலக ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் இரண்டாம் வாட்டிகன் கவுன்சில் துவங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டிய விழாவில் போப் பென்டிக்ட் பேசினார். வியாழக்கிழமை (அக்டோபர் 10) புனித பீட்டர் சதுக்கத்தில் நடந்த வழிபாட்டுக் கூட்டத்தில் பல்லாயிரக் கணக்கான மக்களும் உலகம் முழுவதிலும் உள்ள சர்ச்சுகளிலிருந்து வந்த நூற்றுக்கணக்கான் பாதிரியார்களும் குவிந்திருந்தனர்.

‘நம்பிக்கையின் ஆண்டு’ ஆரம்பத்தை குறிக்கும் இந்த நிகழ்வைத் தொடர்ந்து கிருத்துவ அமைப்புகள் மத நம்பிக்கைக்கு புத்துயிர் ஊட்டுவதற்கான நிகழ்வுகளை ஒரு ஆண்டு நடத்தவுள்ளன. “சமீபத்திய பத்தாண்டுகளில் ஆன்மீக பாலைவனம் வளர்ந்திருக்கிறது. நாம் தினமும் நம்மைச் சுற்றிலும் அதை உணர்கிறோம். வெறுமை பரவியிருக்கிறது” என்றார் போப்.

ஞாயிற்றுக் கிழமை பிஷப்புகளின் மூன்று வார மாநாட்டை போப் தொடங்கி வைத்தார். கத்தோலிக்க திருச்சபை சமீப காலம் வரை செல்வாக்கு செலுத்தி வந்த பகுதிகளில் கூட மத நம்பிக்கை குறைந்திருப்பதை எதிர் கொள்வதற்காக “புதிய சுவிசேஷத்தில்” அவர்கள் கவனம் செலுத்தவிருக்கிறார்கள்.

1962 முதல் 1965 வரை நடந்த இரண்டாம் வாட்டிகன் கவுன்சில் ஆரம்பித்து வைத்த மாற்றங்கள்தான் இன்றைய நெருக்கடிக்குக் காரணம் என்று போப் பெனடிக்ட் கருதுகிறார். அது நாள் வரை லத்தீனில் வழிபாடு நடத்துவதை மாற்றி மக்களுக்கு புரியும் அவர்கள் சொந்த மொழியில் படிக்க ஆரம்பித்தனர். யூதர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் ஏசுவை தண்டித்தனால் ஏற்பட்டதாக சொல்லப்படும் பகையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

“தனது மதத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து நவீன உலகத்துடனான கருத்துப் பரிமாற்றத்தை வாட்டிகன் ஆரம்பித்தது. ஆனால், மக்கள் பெரும்பான்மைப் போக்கை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொண்டு கத்தோலிக்க நம்பிக்கையின் அடிப்படையையே சந்தேகிக்கிறார்கள்” என்று போப் புலம்பியிருக்கிறார். ‘கத்தோலிக்கர்கள் காலத்தை மிஞ்சிய தாவலுக்கான ஆவலை தவிர்த்து அளவுக்கதிகமாக முன்னேறி போக முயற்சிப்பதை கை விட வேண்டும்’ என்று எச்சரித்திருக்கிறார்.

ஒரு காலத்தில் வாட்டிகன் திருச்சபை அழைப்பு விடுத்தால் ஐரோப்பிய மக்கள் அடிமைகளாக கட்டளைகளுக்கு அடி பணிந்தனர். வாட்டிகன் திருச்சபையின் அதிகாரமும், அதன் தலைமை குருவான போப்பின் கடவுள் மமதையும் கொள்ளை நோய்க்கடுத்து ஐரோப்பிய மக்களை கொல்லும் காரணமாக இருந்தது. சிலுவைப் போர், ரோஜா போர் போன்றவை ஐரோப்பிய நிலவுடமை சமூகம் சார்ந்த சர்ச்சின் அதிகாரத்தை நிலை நிறுத்த நடத்தப்பட்ட யுத்தங்கள். இதில் மாண்டவர்கள் எத்தனை ஆயிரம்! சூனியக் காரிகள் என்று எரிக்கப்பட்ட பெண்கள் எத்தனை பேர்!

விஞ்ஞானத்தை தங்கள் அதிகாரத்திற்குள் வைத்துக் கொள்ள முயற்சித்ததும்,  விஞ்ஞானிகளை துன்புறுத்தியதும் சர்ச்சின் பெருமைமிகு வரலாற்றில் அடங்கும். 18-ம் நூற்றாண்டில் திருச்சபை மேல் இடியென இறங்கிய பிரெஞ்சுப் புரட்சி நிலப்பிரபுத்துவ அரசர்களின் அதிகாரங்களை வீழ்த்தியதுடன், சர்ச்சுகளை சக்தி இழக்கச் செய்தது. ஐரோப்பாவெங்கும் முதலாளித்துவத்தின் வளர்ச்சி கத்தோலிக்க திருச்சபையை மேலும் ஓரம் கட்டியது.

பின்னர் ஜெர்மன் இங்கிலாந்து முதலாளிகள், ‘தங்களது வர்க்க நலன்களுக்கு மதம் வேண்டும்’ என முதலாளித்துவ சமூகத்துக்கு ஏற்ற புதிய திருச்சபைகளை ஏற்படுத்தி அவற்றுடன் புனிதக் கூட்டணி வைத்துக் கொண்டனர். அந்தக் கூட்டணி கடந்த 50 ஆண்டுகளில் புதிய நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது. உலகம் முழுவதிலும் சர்ச்சுகள் மீது வைக்கப்படும் நிதி மோசடி புகார்கள், பாதிரிகள் மேல் சுமத்தப்பட்டு வரும் செக்ஸ் குற்றச்சாட்டுக்கள் கத்தோலிக்க மதத்தை பலமாக பதம் பார்த்திருக்கின்றன.

லத்தின் அமெரிக்க நாடுகளில் பெண்கள் முதல், குழந்தைகள் வரை மத போதகர்களால் துன்புறுத்தப்பட்டுள்ளனர். ஓரினச் சேர்க்கை, விஞ்ஞான வளர்ச்சி போன்றவற்றில் முன்னுக்கு பின் முரணான கருத்துகள் கத்தோலிக்க மதத்தின் மீது மக்களை நம்பிக்கை இழக்கச் செய்திருக்கின்றன.

வாட்டிகனில் நடக்கும் சர்ச்சைகளையும், ஊழல்களையும் கேள்வி கேட்பவர்கள் வெளியே போய் உண்மையைச் சொல்லி விடாமல் தடுக்க வாட்டிகன் நகரில் பாதாளச் சிறைகளை ஏற்படுத்தி அடைத்து கொடுமைப்படுத்துகிறார்கள். வெளியே “யேசு உங்களை நேசிக்கிறார்” என்று எழுதி வைப்பது ஒரு வித குரூர நகைச்சுவை. வாட்டிகனில் இருந்த சமையல்காரர் அம்பலப்படுத்திய பல ரகசிய தகவல்கள் முதலில் பரபரப்பாக இருந்து பின் காணமல் போயின.

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையும் ஐரோப்பாவைச் சூழ்ந்துள்ள போராட்ட மனநிலையும் திருச்சபையையும் அதன் செல்வாக்கையும் நிலை குலையச் செய்துள்ளன. ‘தங்கள் சமூக பொருளாதார பிரச்சனைகளுக்கு கடவுளிடம் தீர்வில்லை’ என்று மக்கள் உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆனாலும், நுகர்வு கலச்சாரத்திற்கு மதம் தேவைப்படுகிறது. கிறிஸ்துமஸ் பருவம்தான் அமெரிக்க ஐரோப்பிய முதலாளிகளின் விற்பனை எகிறும் நாட்கள் (இந்தியாவில் தீபாவளி பொங்கல் பண்டிகை காலங்களைப் போல). சமீபத்தில் உலகின் மிக விலையுர்ந்த பைக்குகளை தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தங்கள் 110 வது ஆண்டு விழாவை ஒட்டி வாடிகனுக்கு பரிசுகள் கொடுத்து மகிழ்ந்தது. விஜய் மல்லையா கூட சுப்ரமணியர் கோவிலுக்கு தங்கக் கதவுகளை பரிசாக கொடுத்தது நினைவிருக்கலாம்.

மக்கள் மதத்தை மறுத்து விழிப்புணர்வு பெறுவது முதலாளிகளுக்கும் சர்ச்சுக்கும் ஆபத்து. மத நம்பிக்கை குறைந்தால் வாட்டிகன் எப்படி நடக்கும், நிதி எப்படி திரளும், உழைக்காமல் வாழும் சுகம் என்ன ஆகும்?

இதை எல்லாம் நினைத்து போப் கவலைப்படுகிறார். சர்ச்சுகளின் செல்வாக்கை மீட்கத் திட்டம் கேட்கிறார். பாதிரியார்களை கவுரவத்துடன் நடந்து கொள்ளச் சொல்கிறார்.

  • நம்பிக்கையற்று கிறிஸ்துவத்தை விட்டுச் சென்றவர்கள் தங்கள் தவறை உணர்ந்து,  வாழ்க்கையின் உண்மையான பயனை அறிய கிறிஸ்துவத்தின் பால் திரும்ப வேண்டும்.
  • குழந்தைகளுக்கு பைபிள் வகுப்புகள் எடுக்க வேண்டும். அவர்கள் ஆன்மீக கல்வி பயில வேண்டும். அதற்கு உள்ளூர்வாசிகள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்

என்பவைதான் திருச்சபையின் இப்போதைய அறைகூவல்.

உலக அளவில் வேலையில்லாமல் உழைக்கும் மக்கள் கஷ்டப்பட, பணக்காரர்களின் மனம் புண்படாமல் அவர்களின் சுரண்டலை எதிர்க்காமல் புத்திசாலித்தனமாக அவர்களுடன் கூட்டமைத்து மதத்தை வளர்க்க நினைக்கிறார் போப். பிழைக்கத் தெரிந்தவர்தான். ஆனால் யதார்த்த வாழ்க்கைதான் அந்தப் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடுகிறது. இதனால் திருச்சபை திவாலாகி வருகிறது.

 படிக்க: