privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கமலைமுழுங்கி மகாதேவனும் அரசின் ஆமை வேக கண்துடைப்பும்!

மலைமுழுங்கி மகாதேவனும் அரசின் ஆமை வேக கண்துடைப்பும்!

-

பல லட்சம் கோடி கிரானைட் ஊழல் !
மலைகளை விழுங்கிய மகாதேவர்களுக்கு 50 ஆயிரம் ஏக்கர் சொத்துக்கள் !
ஆமை வேகத்தில் நகரும் அரசின் கண் துடைப்பு நடவடிக்கை !

ந்தாண்டு மே மாதத்தில் சந்தி சிரிக்கத் தொடங்கிய கிரானைட் ஊழல் கடந்த 5 மாதங்களாக ஊடகங்களுக்குத் தீனியாகவும், வாசகர்களுக்குப் பசியாற்றிக் கொண்டும் ஓடிக் கொண்டிருக்கிறது. ராணித் தேனீயைப் பிடித்துக் கொண்டு போய் கூண்டில் அடைத்து தேன் கூடு கட்டுவது போல் மலை விழுங்கி மகாதேவன் பி.ஆர்.பி.ஐப் பிடித்து உள்ளே வைத்துக் கொண்டு, சிலரைப் பட்டியிலடைத்து விட்டுப் பலரைத் தேடிக் கொண்டிருக்கிறது அரசு.

20 ஆண்டுகளுக்கும் மேலாக இதைக் கண்டு கொள்ளாத அரசுகள், அதிகாரிகள் இப்போது அவர்களாகவே அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டே கிரானைட் காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஊடகங்களை அரசு-காவல்துறை-மாவட்ட நிர்வாகம் அடங்கிய கூட்டணி தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தாங்கள் விரும்புகிற அளவுக்குச் செய்திகளைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். தங்களுக்கு வேண்டிய செய்தியாளர்களுக்கு புள்ளி விப‌ரங்களைக் கொடுத்து விலாவாரியாக வெளியிடச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கிரானைட் கொள்ளை அம்பலமான பின் மத்திய அரசின் நிலக்கரி ஊழல் வெளிவந்து 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி என்று பழைய ஊழல்களையெல்லாம் பீட் அடித்தது. பிரதமர் பொறுப்பிலுள்ள துறையென்பதால் மன்மோகன் பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க தலைமையில் எதிர்க்கட்சிகள் வழக்கம் போல் சப்பாணி பாராளுமன்றத்தை மேலும் முடக்கி அல்லோக‌லப்படுத்தின. சந்தடிச்சாக்கில் டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயுக்கு கட்டுப்பாடு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு; அதையெதிர்த்து மம்தா விலகல், தமிழ்நாட்டில் கூடங்குளம் போராட்டம், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – ஆகிய எல்லா பரபரப்புக்கும் மத்தியில் கிரானைட் ஊழல் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு, ஒரு ஓரமாக தமிழ்நாட்டுச் செய்தித்தாள்களில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

கிரானைட் ஊழல் தொடர்பான எல்லாச் செய்திகளையும் திரட்டி வைத்துக் கொண்டு, பாதிக்கப்பட்டவர்களை அதிகாரிகளே அணுகிச் சென்று, புகார்களைப் பெற்று வழக்குப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். இது ஏதோ மக்கள் திரண்டெழுந்து போய் புகார்களைக் கொடுப்பதைப் போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அது போலவே செய்தி ஊடகங்களிலும் அன்றாடம் பி.ஆர்.பி. அன் கோ மீது நடவடிக்கை பாய்வது போல் வழக்குகளைத் தொடுத்து விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அதிகாரிகளும், அரசும். கே.என்.நேரு, பொன்முடி, துரை தயாநிதி போன்ற திமுக புள்ளிகள் முன் ஜாமீன் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

கிரானைட் முறைகேடு தொடர்பாக இது வரை 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 30 வழக்குகள் பி.ஆர்.பி. மீது. ஆனால் இந்த வழக்குகள் வலுவான பிரிவுகளின் கீழ் தொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை என்று சட்ட வல்லுந‌ர்கள் கூறுகின்றனர். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது தேசத் துரோகம், அரசைக் கவிழ்க்க சதி செய்தது போன்ற 300 வழக்குகளுக்கு மேல் அரசு போட்டு வைத்திருக்கிறது. வழக்குகளின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே போவதைப் பார்க்கிற மக்கள் இந்த மலைக்கள்ளர்கள் மீது கடும் நடவடிக்கை இருக்கும் என்று நம்பத் தயாராக இல்லை.

மேலும் இந்தக் கொள்ளையின் பண மதிப்பீடு எவ்வளவு என்பதை இது வரை அரசு அறிவிக்கவில்லை. முந்தைய மதுரை மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் சுமார் ரூ.16,500 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்திருந்தார். அண்மையில் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள தொகை சில கோடிகள் மட்டுமே. நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, காவல்துறைக் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோருடன் அரசுத்துறை அதிகாரிகளின் எல்லாத் தரப்பும் ஒத்துழைக்க மறுப்பதாகச் செய்திகள் கசிகின்றன. மேலும் இழப்பை மதிப்பீடு செய்வதற்கான பெரும்பாலான தடயங்கள் அழிக்கப்பட்டு விட்டதால், எளிதாக மதிப்பீடு செய்ய முடியாது என்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் ஊழல் செய்த அதே அரசு இயந்திரத்தை வைத்துக் கொண்டு அதே ஊழலைக் கண்டுபிடிப்பது இருட்டுக்குள் கருப்புப் பூனையைத் தேடுவதைப் போன்றதே.

இந்தக் கொள்ளைக் கூட்டணி மெகா கூட்டணி மட்டும் அல்ல. பலம் வாய்ந்த கூட்டணியும் கூட. எனவே இதைத் தாண்டி உண்மைகள் வெளி வருவது கடினம். ஜெயலலிதாவுக்கும் பி.ஆர்.பி அன் கோ வுக்கும் இடையே ரகசிய பேரம் தொடங்கி விட்டதாகவும், பேரம் இது வரை படியவில்லை – படிய வேண்டியது மட்டுமே பாக்கி என்றும் சொல்லப்படுகிறது. இந்தப் பிரச்சினையை ஆணி வேர் வரை தோண்டினால் தோண்டுகிறவர்களுக்கே அதிர்ச்சி ஏற்படும் என்பது மக்கள் அறிந்தது தான். கிரானைட் கொள்ளை தொடர்பாக இது வரை ஊடகங்களில் வெளியிடப்படாத செய்திகளும் நிறையவே உள்ளன.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

மேலூரிலிருந்து மதுரை செல்லும் வழியிலுள்ள தெற்குத் தெரு எனும் ஊரில் மிகப்பிரம்மாண்டமாக அமைந்துள்ளது பி.ஆர்.பி எக்ஸ்போர்ட்ஸ் எனும் கிரானைட் தொழிற்சாலை. இங்கு தான் குவாரியிலிருந்து வெட்டியெடுத்துக் கொண்டு வரப்படுகின்ற கற்களை விற்பனைக்கேற்றது போல வடிவமைத்து ஏற்றுமதிக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இந்த ஆலையானது மூன்று கண்மாய்கள் மற்றும் அதனைச் சார்ந்த விளை நிலங்களின் மீது ஆயிரக்கணக்கான டன் மணலைக் கொண்டு வந்து கொட்டி, மூடி நிரவி அதன் மீது கட்டப்பட்டுள்ளது. இந்த மணல் மருதூர் கண்மாயிலிருந்து ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் அரசு அனுமதி எதுவுமின்றி அள்ளப்பட்டுள்ளது. ஆலை ஆக்கிரமித்துள்ள விளை நிலங்களின் மொத்தப் பரப்பளவு 400 ஏக்கர் என்று சொல்லப்படுகின்றது.

ஆலையின் கிழக்குச் சுவர் அருகில் சுமார் பத்தடி தூரத்தில் செல்கின்ற பெரியாற்றுப் பாசனத்தின் 10ஆம் எண் வாய்க்காலின் 17ஆவது மடைத் தண்ணீர் முழுவதுமாக கிரானைட் தொழிற்சாலைக்குள் செல்கிறது. இந்த ஆலையின் நச்சுத்தன்மை வாய்ந்த கழிவு நீர் ஆலையின் பின்புறமுள்ள கண்மாயில் நேரடியாகவே வடிக்கப்படுகிறது.

சுமார் 2000 நபர்கள் வேலை செய்கின்ற இந்தத் தொழிற்சாலையில் உள்ளுர்க்காரர்கள் யாருக்கும் வேலை வழங்கப்படவில்லை. உசிலம்பட்டி, ஆண்டிபட்டியில் பி.ஆர்.பி. வேலை வாய்ப்பு அலுவலகம் தொடங்கப்பட்டு, பிரமலைக் கள்ளர் சாதியினைச் சேர்ந்தவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, உள்ளூர் சாதித் தலைவர்களது சிபாரிசுக் கடிதத்தை வைத்து வேலை கொடுத்துள்ளனர். ஆனால் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே இங்கு தொழில்நுட்பப் பணிகளுக்கு அமர்த்தியுள்ளனர். பி.ஆர்.பி க்கு நிலம் கொடுத்த குடும்பங்களைச் சேர்ந்த சில பெண்களுக்கு மட்டும் கழிவறை சுத்திகரிப்பு மற்றும் எடுபிடி வேலை கொடுக்கப்பட்டுள்ளது.

கீழவளவைச் சேர்ந்தவர் முத்தழகு (த/பெ நல்லு). இவர் நாவிதர் சமுகத்தைச் சேர்ந்தவர். விவசாயியான இவர் சலூன் ஒன்றையும் கீழவளவில் நடத்தி வருகிறார். இவருக்குச் சொந்தமாக சின்ன இலங்குளம் கண்மாய்ப் பாசனத்தின் கீழ் சுமார் 2.50 ஏக்கர் நன்செய் நிலம் உள்ளது. இவரது நிலத்தைச் சுற்றிலும் உள்ள நிலங்களை பி.ஆர்.பி கும்பல் வாங்கி விட்டது. இவரது நிலத்தையும் தரச் சொல்லி மிரட்டி வந்தது. ஆனால் இவரும், கருப்பாயி எனும் தலித் சமுகத்தவரும், ராமகிருஷ்ணன், வீரணன் போன்றவர்களும் அதற்கு மறுத்து விட்டபடியால், இவர்களது நிலங்களைச் சுற்றி மூன்று பக்கமும் 20 அடி உயரத்திற்கு கோட்டைச் சுவர் போல கற்களை அடுக்கி, உழுவதற்கு டிராக்டரைப் போக விடாமல் செய்துள்ளனர். இந்நிலங்களுக்கு வருகின்ற கண்மாய் நீர்வரத்து வாய்க்காலை ஜேசிபி ஐக் கொண்டு நிரவி விட்டுள்ளனர். மேலும் இந்நிலங்களிலிருந்து நீர் வடிய முடியாதவாறு ஒரு பக்கத்தில் சாலை போட்டும் அடைத்து விட்டனர்.

கீழவளவு, மலம்பட்டி, திருவாதவூர், இடையபட்டி ஆகிய ஊர்களில் சுமார் 200 ஏக்கர்களுக்கும் மேற்பட்ட பஞ்சமி நிலங்களையும் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

மலம்பட்டிக்கு அருகில் உள்ள நிலங்களில் கிரானைட் கற்களை அடுக்கி வைப்பதற்கு வசதியாக, மின்வாரியத்தினர் கிராமத்தின் வெளியில் நிறுத்தப்பட்டிருந்த மின்கம்பங்களைப் பிடுங்கி ஊருக்கு நடுவில் கொண்டு வந்து நட்டு வைத்துள்ளனர்.

அடிக்கடி குவாரிகளில் விபத்து ஏற்பட்டு பலரும் பலவிதமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவையெல்லாம் சாலை விபத்து வழக்குகளாகப் பதிவு செய்யப்பட்டு, உயிரிழந்தவர்களை அநாதைப் பிணங்கள் பட்டியலில் வைத்து வழக்கை மூடியிருக்கிறார்கள் காவல்துறையின் உதவியுடன்.

அம்மன் கோவில்பட்டியில் 48 வயதான வாழமலை என்பவர் குவாரியில் வேலை செய்யும் போது உரிய பாதுகாப்புப் பிடிமானக் கருவிகள் இல்லாததால் பள்ளத்தில் விழுந்து இறந்து போகிறார். அதற்காக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. உரிய நஷ்ட ஈடும் தரப்படவில்லை.

மெயின் பீட்டைச் சேர்ந்த ராஜா என்னும் 21 வயது இளைஞன் குவாரியில் வேலை செய்யும் போது இறந்து போயிருக்கிறான். இதற்கும் உரிய வழக்கு பதிவு செய்யப்படவில்லை. உரிய நஷ்ட ஈடும் தரப்படவில்லை.

கீழவளவைச் சேர்ந்த பழனி என்பவரின் 17 வயது மகன் பாலமுருகன் குவாரிப் பள்ளத்தில் தவறி விழுந்து, இறந்து விடுகிறான். அவனது உடலை பள்ளத்தில் இருந்து எடுக்க முடியவில்லை. உடனே மக்கள் சாலை மறியல் செய்கிறார்கள். எஸ்.பி.யும், மாவட்ட ஆட்சியரும் வருகிறார்கள். ஜெனரேட்டர் வைத்து தண்ணீரை இறைத்து, பின்னர் உடலைத் மீட்கிறார்கள். ஆனால் சட்டப்படி வழக்கும் பதிவு செய்யப்படவில்லை; முறையான நஷ்ட ஈடும் வழங்கப்படவில்லை.

இ.மலம்பட்டி எனும் கிராமத்தில் அன்னக்கொடி என்னும் 72 வயது மூதாட்டி காணாமல் போய் விடுகிறார். அவரது மகள் எல்லா இடங்களிலும் தேடிப் பார்க்கிறார். செய்தித் தாளில் விளம்பரம் செய்கிறார். எங்கு தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. போலீசில் புகார் கொடுக்கிறார். எந்தப் பயனும் இல்லை. சரியாக இரண்டே கால் ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஊரில் ஆடு மேய்க்கும் சிறுமி அங்குள்ள சலவைத் தொழிலாளர் வீட்டுக்கருகில் சாலையின் இருமருங்கிலும் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கற்கோட்டைச் சுவரின் இடுக்கில் ஒரு சேலை கிடப்பதாகச் சொல்கிறாள். ஊர் மக்கள் போய்ப் பார்க்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அன்னக்கொடி கட்டியிருந்த சேலை, சட்டை, அவர் கொண்டு சென்ற மஞ்சள் துணிப்பை, அவர் போட்டிருந்த சேலைக்கரைத் துணியால் பின்புறமாகக் கட்டப்பட்டிருக்கும் மூக்குக் கண்ணாடி ஆகியவையும், மண்டையோடும் எலும்புகளும் கிடந்துள்ளன.  போலீசுக்குத் தகவல் போகிறது. போலீசும் வந்தது. பி.ஆர்.பி குவாரி டிப்பர் வண்டிகளில் ஏதோ ஒன்று மோதி அதனால் இறந்து போன அன்னக்கொடியின் உடலைத் தூக்கிக் கற்களின் இடையில் போட்டு விட்டுப் போயிருக்கிறார்கள் என்கிற ஊர் மக்களின் சந்தேகத்தை போலீசும் உறுதிப்படுத்தியிருக்கிறது. கிராம மக்கள் வழக்குப் பதிவு செய்யச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், “பி.ஆர்.பியை எதிர்க்க முடியுமா?“ எனப் பதில் சொல்லி விட்டுப் போயிருக்கிறது போலீசு.

மேலுர்-திருப்பத்தூர் சாலை ரெங்கசாமிபுரம் என்னும் கிராமத்தை இர‌ண்டாகப் பிரிக்கிறது. சாலையின் தென்புறமானது பி.ஆர்.பி.யின் ஆக்கிரமிப்பிற்குள் வருகிறது. மக்கள் போராடுகிறார்கள். வருவாய்த் துறையின் கணக்குகளிலிருந்து அந்தக் கிராமத்தையே எடுத்து விடுகிறார்கள். அவர்களுக்கான குடும்ப அட்டையை கீழையூர் எனும் கிராமத்திற்கு மாற்றி விடுகிறார்கள். டாமினின் மேலாளர் ஊரைக் காலி செய்யச் சொல்கிறார். மக்கள் மறுக்கிறார்கள். வீடுகளின் அருகில் பி.கே.எஸ் கிரானைட்ஸ் குவாரியைத் தோண்டுகிறது. வெடிகளால் தகர்க்கப்பட்ட கற்கள் வீடுகளின் கூரைகளில் விழுந்து ஓடுகளை நொறுக்குகிறது. புகார் செய்தும் பலனில்லை. அவர்களின் கோவில் தகர்க்கப்பட்டது. 5 பேரைக் குண்டர் சட்டத்தில் போட்டது போலீசு. இன்று அவர்கள் ஊரை விட்டு வெளியேறி ஆங்காங்கே தற்காலிகமாகத் தங்கியுள்ளனர்.

சின்னமலம்பட்டியினருகில் மயிமுத்தாங்குளம் தெற்குப்பக்கத்தில் வலையர் சமூகத்தைச் சேர்ந்த 23 நபர்களுக்கு அரசால் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் அனைவரையும் மிரட்டி அந்த இடங்களை வாங்கியது பி.ஆர்.பி கும்பல். இப்போது அவர்கள் அனைவரும் பொங்கம்பட்டி பஞ்சாயத்தைச் சேர்ந்த வெளுத்துக்கரைப்பட்டியில் வசிக்கிறார்கள்.

திருவாதவூர் புதுத்தாமரைப்பட்டி அருகே உள்ள ஊர் ஒத்தவீடு எனப்படும் குண்டாங்கல். 45 தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் உட்பட 100 வீடுகள் கொண்ட சிறிய கிராமம். அனைவரும் கூலி விவசாயிகள். அருகில் உள்ள விளைநிலங்களை அதிக விலை கொடுத்து வாங்குகிறார் பி.ஆர்.பி. குண்டாங்கல் மக்களையும் ஊரைக் காலி செய்து விட்டு வெளியேறும்படி நிர்ப்பந்திக்கிறது பி.ஆர்.பி கும்பல். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வரை சென்று புகார் அளிக்கிறார்கள் மக்கள். ஓட்டு வாங்கிய மக்கள் பிரதிநிதிகளை அணுகியும் முறையிடுகிறார்கள். அவர்கள் எல்லோரும் ஒரே குரலில் ஊரைக் காலி செய்து விட்டு ஓடுங்கள், இல்லா விட்டால் உள்ளதும் பறிபோய் நடுத்தெருவில் நிற்க வேண்டியது வரும் என்று ‘ஆலோசனை’ வழங்குகின்றனர். இருந்தபோதிலும் அங்கன்வாடி, மேல்நிலை நீர்த்தொட்டி, பேருந்து நிறுத்தம், தொலைக்காட்சி அறை மற்றும் அருகாமை பள்ளிக்கூடம் ஆகிய வசதிகள் நிறைந்த கிராமத்தை விட்டுப் போக மக்கள் விரும்பவில்லை. அதிகார வர்க்கமும், மக்கள் பிரதிநிதிகளும் ஒதுங்கிக்கொள்ள, பி.ஆர்.பி தன்னுடைய அடியாள் படையை குண்டாங்கலுக்குள் அனுப்புகிறார். நள்ளிரவு நேரங்களில், நிலை கொள்ளாத போதையில் வீடுகளுக்குள் நுழையும் அந்தப் பொறுக்கி நாய்கள் பெண்களின் அருகே சென்று படுத்துக்கொண்டு காலைச் சுரண்டுகின்ற வேலையைச் செய்திருக்கின்றனர். மக்கள் விழித்துக் கொண்டு விரட்டிய போது, குவாரிக்குள் போய் பதுங்கிக் கொண்டுள்ளனர். வீடு புகுந்த பி.ஆர்.பி அடியாட்களைப் பிடித்த கிராம மக்களை கட்டைப் பஞ்சாயத்துக் கும்பல் மிரட்டி, அவர்களை பி.ஆர்.பி. இடம் மன்னிப்புக் கேட்கச் செய்த கொடுமையும் நடந்திருக்கிறது. வேறு வழியில்லாமல் குண்டாங்கல் கிராமம் காலியாகிறது. புதுத்தாமரைப்பட்டி ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக நிலம் வாங்கி அங்கே குடியேறியுள்ளனர். எந்த வசதியும் இல்லாத அந்தப் பகுதியில் குடியிருந்து வரும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீண்டும் குண்டாங்கல்லுக்கே போக விரும்புகின்றனர். அதற்காக மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுக்க அந்த மக்கள் செய்யும் முயற்சியை பி.ஆர்.பி. ஆட்கள் மிரட்டித் தடுத்து வருகின்றனர். இப்போது மனித‌ உரிமைப் பாதுகாப்பு மையம் இந்தப் பிரச்சினையைக் கையிலெடுத்துள்ளது.

முண்டநாயகம் எனும் விவசாயத்தில் தன்னிறைவு பெற்றிருந்த ஊர் பி.ஆர்.பி., பி.ஆர்., பி.கே.எஸ் போன்ற மலை விழுங்கிகளின் குவாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டு, விளைநிலங்களில் கிரானைட் பாறாங்கற்கள் பரப்பப்பட்டு, விவசாயம் என்ற அடிச்சுவடே தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளது. 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்ற இந்த ஊரின் நிலத்தடி நீர் நஞ்சாகி விட்டது. தண்ணீர் உடம்பில் பட்டால் தோலில் அரிப்பு ஏற்படுகிறது. சமைக்கவும், குடிக்கவும் கூட பயன்பட்டு வந்த நீரை இப்போது தொடுவதற்கே மக்கள் அஞ்சுகின்றனர். அந்த ஊரில் உள்ள ஆண்கள் எல்லோரும் மதுரைக்கு வந்து கட்டுமானக் கூலி வேலை செய்து பிழைக்கின்றனர். பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டிய உள்ளாட்சி நிர்வாகம் இதுவரை எதையும் நிறைவேற்றவில்லை.

பி.ஆர்.பி. தனக்கு நிலம் கொடுத்த கிராமத்து மக்களுக்கு எத்தனையோ கொடுமைகளைக் கைமாறாகச் செய்துள்ளார். அவற்றில் எல்லாம் மிகப்பெரிய கொடுமை தெற்குத் தெரு தொழிற்சாலை அருகில் ஓடுகின்ற வைகை ஆற்றுக் கால்வாயில் தன்னுடைய தொழிற்சாலை கக்கூஸ் கழிவுகளைத் திறந்து விட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு ஆகாதவாறு செய்த கொடுமைதான் மிகப்பெரிய கொடுமை என்று அந்தப் பகுதி மக்கள் மனம் வருந்திச் சொல்கின்றனர். இதுபற்றி வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் முறையிட்டபோது, அவர்கள் அதற்கெதிராக ஒரு துரும்பைக் கூட அசைக்க மறுத்து விட்டனர். “அது தான் கேன் தண்ணீர் கிடைக்குதில்ல; காசு குடுத்து வாங்கிக் குடியுங்க” என்று அலட்சியமாக அதிகாரிகள் சொல்லி விட்டனர்.

திருவாதவூர் பாண்டவர் மலை குவாரியிலிருந்து விலையுயர்ந்த சிவ‌ப்பு கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு வந்து தெற்குத் தெரு தொழிற்சாலையில் இறக்குவதற்கான லாரி வாடகை ஒரு நடைக்கு ரூ.25,000. இது அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவிக் கொண்டு வந்து சேர்ப்பதற்கான வாடகை. பிடிபட்டால் அதற்கு ஆகின்ற செலவு முழுவதும் லாரி உரிமையாளரைச் சார்ந்தது என்பது நிபந்தனை. இது லாரி ஓட்டுநர் ஒருவர் சொன்ன தகவல்.

பி.ஆர்.பி இன்றைக்கு பாளையங்கோட்டை சிறையில் பாதுகாப்பாக உறங்கிக் கொண்டிருக்கின்றார். 25,000 ஏக்கர் விவசாயம் பாழடிக்கப்பட்டு விட்டது. பல்லாயிரம் விவசாயிகள் வாழ்விழந்து தவிக்கின்றனர். இனி எப்போதும் திரும்பி வராத சுற்றுச்சூழல், இயற்கை வளம் ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் பி.ஆர்.பி.யும் இதர மலை விழுங்கிகளும் சுமார் 50,000 ஏக்கர் நிலங்களை வாங்கி, குறுநில மன்னர்களைப் போல அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு நகமும் தசையுமாக இருந்து உதவி செய்த ஊழல் அரசு அதிகாரிகளும் ஏராளமாகச் சம்பாதித்திருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் சட்டத்தால் என்ன தண்டனை வழங்க முடியும். அரசு சொத்துக்களை மோசடி செய்து அல்லது திருடி அல்லது நாசம் செய்தவர்களுக்கு இழப்பைப் போல் இருபது மடங்கு அபராதம் விதிக்கலாம் என்று சட்டம் சொல்லுகின்றது. அபராதம் அவர்களுக்கு கெண்டைக்கால் மயிருக்குச் சமம்.

________________________________________________________________

தகவல்மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை.

________________________________________________________________

  1. கிரானைட் ஊழல், கட்டுரை- படங்கள், கற்பனைக்கெட்டா பேரழிவை கண்முன் நிறுத்தியது.அடுத்த, சில மணித்துளிகள் கணிப்பொறியில் கண் நிலைக்குத்தி, கல்லாகிப் போனேன். கீழ் வெண்மணி விவசாய கூலிகளை உயிரோடு கொளுத்திய பாலகிருஷ்ணநாயுடுவை அழித்தொழித்த… அதே வழியில்…… அப்பள்ளங்களை நிரப்ப சபதமேற்போம். அது ஒன்றே நம் மண்ணை மீட்கும் வழியாகும்.

  2. முதல் வேலையாக பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பாக திரள வேண்டும் இதுதான் முன் நிபந்தனை இது நிறைவேறினால்தான் அடுத்த கட்டம் நகர முடியும். இல்லையென்றால் பத்தோடு பதிணொன்றாக முடியும்.

  3. மேலூர் பேக்டரி இடம் வங்கியில் அடமானம் இருக்கிறது. அது செய்திதாளிலும் வந்தது. இப்போ அரசாங்கம் எடுத்துக் கொள்ளுமா? வங்கி விற்று விடுமா?

  4. என்ன பண்ணுனாலும் ஊழல் செய்ய பட்ட பணம் திரும்ப கிடைக்க போவதில்லை,

Leave a Reply to எஸ்.எம். பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க