privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்அரியானா: ஆதிக்கச் சாதிவெறியின் வக்கிர முகம்!

அரியானா: ஆதிக்கச் சாதிவெறியின் வக்கிர முகம்!

-

புதிய தாராளவாதக் கொள்கைகளின் கீழ் பொருளாதார வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைந்த போதிலும், இக்கொள்கைகளால் ஆதாயம் பெற்ற ஆதிக்கசாதிக் கொழுந்துகள் தலித் மக்களுக்கு எதிராக இழைக்கும் குற்றங்களின் விகிதம் கூடிக்கொண்டேதான் செல்கிறது. நிலப்பிரபுத்துவக் கொடுங்கோல் நிறுவனமான காப் பஞ்சாயத்து, பெண் சிசுக்கொலை, ஜாட் திமிர், பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைச் சுரண்டல் மீது கட்டப்பட்ட தொழில்துறை வளர்ச்சி – போன்ற பலவற்றுக்கும் இழிபுகழ் பெற்றது அரியானா மாநிலம். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை 455 பெண்கள் அங்கே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். அதாவது தினமும் இரண்டு பெண்கள் என்ற கணக்கில் இந்தக் கொடுமை அரங்கேறி வருகிறது. இது காவல் நிலையத்தில் பதிவாகியுள்ள கணக்கு மட்டுமே. உண்மை நிலவரம் இன்னும் பயங்கரமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

டாப்ரா எனும் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது தலித் பெண்ணை செப்டம்பர் 9ஆம் தேதியன்று 12 பேர் அடங்கிய கும்பல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. இந்தக் கொடிய குற்றத்தைத் தமது செல்பேசியிலும் இவர்கள் பதிவு செய்திருக்கின்றனர். அப்பெண்ணின் தந்தை மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். வன்புணர்ச்சி செய்த கும்பலில் பெரும்பான்மையினர் ஜாட் சாதி, பிறர் யாதவா உள்ளிட்ட பிற ஆதிக்க சாதியினர். இறந்தவரின் உடலை வைத்துக் கொண்டு தலித் மக்கள் விடாப்பிடியாகப் போராடியதால், 5 நாட்களுக்குப் பின் குற்றவாளிகளில் ஒருவனை மட்டும் போலீசு கைது செய்திருக்கிறது.

எட்டு மாதங்களுக்கு முன் நர்வானா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு தலித் பெண்ணை ஜாட் சாதிவெறியர்கள் கும்பல் வல்லுறவுக்கு இலக்காக்கியது. போலீசிடம் புகார் செய்தும் பயனில்லாததால் ஆத்திரம் கொண்ட தலித் இளைஞர்கள், இக்குற்றத்தில் ஈடுபட்ட ஜாட் வெறியர்கள் சிலரைத் தேடிக் கொன்றொழித்தனர். இந்த தலித் இளைஞர்களை மட்டும் உடனே கைது செய்த போலீசு, அவர்களை கொடிய சித்திரவதைகளுக்கு ஆளாக்கியிருக்கிறது.

சில நாட்களுக்கு முன் நர்வானா கிராமத்துக்கு அருகில் உள்ள சச்சா கேரா என்ற கிராமத்தில் வல்லுறவுக்கு இலக்காக்கப்பட்ட 16 வயதுப் பெண் தீக்குளித்து இறந்திருக்கிறாள். அந்தப் பெண்ணின் தாய்க்கு நேரில் சென்று ‘ஆறுதல்‘ கூறியிருக்கிறார் சோனியா. டாப்ரா, நவ்ரானா போன்ற சம்பவங்களுக்கு வராமல், சோனியா இந்த இடத்தை தெரிவு செய்து வந்திருப்பதற்கு காரணம், இங்கே குற்றமிழைத்தவர்களும் தலித் இளைஞர்கள் என்பதுதான். தலித் பெண்களுக்கு எதிராக நாள்தோறும் அங்கு நடைபெற்றுவரும் வன்கொடுமையை இருட்டடிப்பு செய்து, இதனைப் பெண்களுக்கு எதிரான கொடுமையாக மட்டும் சித்தரிப்பதற்கான வாய்ப்பு இதில் இருப்பதுதான், சோனியா விஜயத்தின் ரகசியம்.

ஆறுதல் நாடகம் முடிந்த மறுகணமே, “வல்லுறவுக் குற்றம் என்பது நாடு முழுவதும் நடப்பதுதான்” என்று கூறியதன் மூலம் அரியானாவை குற்றத்திலிருந்து விடுவித்தார் சோனியா. “பெண்களுக்கு எதிரான குற்றம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது” என்று கூறி இந்தியாவை விடுவித்தார் காங்கிரசு செய்தித் தொடர்பாளர் ரேணுகா சவுத்திரி. சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு வல்லுறவுக் குற்றங்கள் குறைந்திருக்கின்றன என்று பேட்டியளித்தார் அம்மாநிலத்தின் டி.ஜி.பி, தலால். வல்லுறவுக் குற்றத்தில் ஈடுபட்ட சாதிவெறியர்களில் பலர் திருமணமானவர்கள் என்ற உண்மையை மறைத்துக் கொண்டு, “இளைஞர்களுக்கு 16 வயதிலேயே திருமணம் செய்து விட்டால் அவர்கள் அலைவதைத் தடுக்க முடியும்” என்ற காப் பஞ்சாயத்தின் யோசனையை வழிமொழிந்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா.

சோனியாவும், ரேணுகாவும், தலாலும், சவுதாலாவும் பேசியிருப்பதைக் கேட்ட பின்னரும் இந்த நாட்டில் நீதி கிடைக்குமென்று யாரேனும் நம்ப முடியுமா? சாதிவெறிக் கிரிமினல்களைத் தேடிப்பிடித்து வெட்டிக் கொன்றிருக்கிறார்களே, நர்வானா கிராமத்தின் தலித் இளைஞர்கள், அதைக்காட்டிலும் காரிய சாத்தியமான வழியொன்று இருக்கிறதா, நீதி பெறுவதற்கு?

____________________________________________

– புதிய கலாச்சாரம், அக்டோபர் – 2012

__________________________________________________