Wednesday, May 14, 2025
முகப்புசெய்திகார்ப்பரேட் மன அழுத்தம்!

கார்ப்பரேட் மன அழுத்தம்!

-

மன அழுத்தம்-ஸ்ட்ரெஸ்-டிப்ரஷன்கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் மன அழுத்தம் பெருமளவு அதிகரித்திருப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவின் வெள்ளைச் சட்டை உழைப்பாளிகளில் 66 சதவீதம் பேர் தனிமையாக உணர்கின்றனர், 77 சதவீதம் பேர் தமது மகிழ்ச்சிகளையும் வருத்தங்களையும் யாருடனாவது பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர் (ஆனால் அப்படி பகிர்ந்து கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை). கடுமையான போட்டிச் சூழலின் காரணமாக தங்கள் விருப்பத்துக்கு மாறாக அதிகம் உழைப்பதாக 63 சதவீதம் பேர் சொல்கின்றனர்.

மும்பை, புது தில்லி, அகமதாபாத், புனே போன்ற நகரங்களில் 25 முதல் 35 வயதுக்குட்பட்ட 2100 ஊழியர்களிடம் காட்பரீஸ் நிறுவனம் இந்த சர்வேயை நடத்தியது.

மன அழுத்தம், தீவிரமான உடற் சோர்வு, குடும்பத்திலிருந்து அந்நியப்படுதல் போன்ற காரணங்களால் 33 வயதான விவேக் குப்தா மும்பையைச் சேர்ந்த மிகப்பெரிய முதலீட்டு வங்கி ஒன்றின் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

“வாரத்துக்கு 80 முதல் 100 மணி நேரம் (அதாவது சராசரியாக ஒரு நாளுக்கு 15 மணி நேரம்) வேலை செய்வது வழக்கமாக இருந்தது. உடல் வலி, தலை சுற்றல் போன்ற அறிகுறிகள் அதிகமாகவே நான் வேலையை விட்டேன்” என்கிறார் அவர்.

39 வயதான துஷார் சேகல் அதே காரணத்துக்காக இரண்டு முறை வேலையை விட்டிருக்கிறார். நிறுவனம் தீபாவளி அன்று வேலைக்கு வரச் சொன்ன போது இரண்டாவது முறையாக வேலையை விட்டார். சிறு விளம்பர நிறுவனத்தில் பணி புரிந்த அவர் ஒரே நேரத்தில் பல பொறுப்புகளை நிர்வகிக்கும் அழுத்தத்தில் இருந்தார். நிறுவனம் எப்படியாவது வளர்ந்தாக வேண்டும் என்ற கண்மூடித்தனமான ஓட்டத்தில் கடும் நிர்ப்பந்தங்களுக்கு ஆளானார். ‘அத்தகைய வாழ்க்கைக்கு ஒரு போதும் திரும்பப் போவதில்லை’ என்று சொல்கிறார்.

வேலையை விட்டு விடும் அளவுக்கு பணம் சேர்த்துக் கொண்டவர்கள் இதயமற்று கசக்கிப் பிழியும் கார்ப்பரேட் உலகத்திலிருந்து வெளியில் வந்திருக்கின்றனர். ஆனால் பெரும்பாலானோர் தமக்குத் தாமே சுமத்திக் கொண்ட வாழ்க்கை முறைக்கான செலவுகளையும், கடன்களுக்கான மாதாந்திரத் தவணைகளையும் சமாளிக்க வாழ்நாள் முழுவதுக்குமான அடிமைகளாக மனதை மரத்துப் போகச் செய்யும் அலுவலகச் சூழலில் உழன்று கொண்டிருக்கின்றனர்.

‘பணியிடம் தொடர்பான மனக் குழப்பங்களுக்காக சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டை விட இரண்டு மடங்காகி இருப்பதாக’ சொல்கிறார் போர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் மனநலப் பிரிவின் தலைவர் டாக்டர் புனீத் திவிவேதி.

பிரைஸ்வாட்டர் கூப்பர்ஸ் நிறுவனம் வேலை-வாழ்க்கை சமநிலை பற்றிய ஆய்வு ஒன்றை நடத்தியிருக்கிறது. அதில் 72 சதவீத இந்திய ஊழியர்கள் வழக்கத்தை விட அதிக நேரம் வேலை செய்வதாகவும், 92 சதவீதம் பேர் வீட்டிற்கும் வேலையை எடுத்துச் செல்வதாகவும் தெரிய வந்திருக்கிறது. ’95 சதவீதம் பேர் காலையில் கண் விழித்ததும் தமது ஸ்மார்ட் தொலைபேசியை உரசிப் பார்க்கும் நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்கிறது அந்த ஆய்வு.

ஊழியர்களை தமது லாபம் சம்பாதிக்கும் எந்திரத்தில் சக்கையாகப் பிழிந்து துப்பும் முதலாளித்துவ அமைப்புகள், அதற்குப் பரிகாரமாக (compensation) சிறிய அல்லது பெரிய அளவில் சம்பளத்தைக் கொடுக்கின்றன. மாலை வேளைகளிலும், வார இறுதிகளிலும் செயற்கையான கொண்டாட்டங்களைத் தேடிப் போவது, மன நல/உடல் நல மருத்துவர்களை நாடிப் போவது, போலி ஆன்மீக குருக்களிடம் நேரத்தை செலவழிப்பது என்று வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருப்பது தான் படித்த நடுத்தர வர்க்கத்துக்கு முதலாளித்துவம் கொடுக்கும் வாழ்க்கை.

வேலை என்பது ஊக்கமளிப்பதாக, புத்துணர்ச்சி ஊட்டுவதாக இல்லாமல், வெறுமையாக, காய்ந்ததாக, பொருளற்றதாக மாற்றப்பட்டிருக்கிறது.

வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் பங்குச் சந்தைப் புள்ளிகளைத் துரத்தி ஊக்கத் தொகை சம்பாதிக்க நாள் முழுவதும் பரபரக்க வேண்டும்.
அல்லது போலியான மகிழ்ச்சியைப் பிரதிபலிக்கும் விளம்பரப் படங்களை உருவாக்குவதில் தமது படைப்புத் திறனைப் பாழாக்க வேண்டும்

என்று வாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்ட உழைப்புதான் பெரும்பான்மையினருக்கு வாய்க்கிறது.

தமது திறமைகளையும், உழைப்பையும், வாழ்க்கையையும் எரித்து முதலாளிகளின் வங்கி இருப்புகளைப் பெருக்குவதுதான் கார்ப்பரேட் ஊழியர்களின் கடமையாக மிஞ்சியிருக்கிறது.

பின் குறிப்பு :

மேலே சொன்ன சர்வேயில் கிடைத்த தகவல்களை தனது அடுத்த விற்பனை விளம்பர வடிவமைப்புக்கு பயன்படுத்தவிருக்கிறது காட்பரீஸ்.

படிக்க: