Wednesday, May 14, 2025
முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்நவம்பர் புரட்சி நாள் விழாவில் பங்கேற்க அனைவரும் வருக!

நவம்பர் புரட்சி நாள் விழாவில் பங்கேற்க அனைவரும் வருக!

-

அன்பார்ந்த உழைக்கும் மக்களே !

நவம்பர் 7,  1917 உழைப்பது மட்டுமல்ல நமது வேலை, நாட்டை ஆளவும் முடியும் என்பதை நிரூபித்த நாள். சுரண்டும் வர்க்கத்தை வீழ்த்தி உழைப்பவர்களுக்கான புதிய அரசியல் அதிகாரத்தை படைத்த நாள். இந்த பூவுலகில் சோசலிசம் என்கிற சொர்க்கத்தை உழைக்கும் மக்களுக்கு அறுமுகப்படுத்திய நாள். அது தான் ரசியப் புரட்சி நாள். உழைக்கும் மக்களின் உண்மையான கொண்டாட்ட நாளும் இதே தான் என்பதை நாம் நினைவில் நிறுத்துவோம்!

பாட்டாளி வர்க்கத்தின் தலைவரான தோழர் லெனின் தலைமையில், ரசிய  கம்யூனிஸ்ட் கட்சியால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் சோசலிச அரசு, தமது குடிமக்கள் அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம், குடிநீர், சுகாதாரம் என அனைத்து அத்தியாவசியத் தேவைகளையும் உடானடியாகத் தீர்த்து வைத்ததோடு, அனைவருக்கும் கல்வியையும் வேலையையும் உத்திரவாதப்படுத்தி சாதனை படைத்தது.

ஆனால் நமது நாட்டின் நிலை ?

விலைவாசி விசம் போல் ஏறி வருகிறது. தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வீதிகளில் வீசப்படுகிறார்கள். விவசாயம் அழிந்து தற்கொலைகள், பட்டினிச்சாவுகள் என விவசாயிகள் லட்சக்கணக்கில் மடிந்து வருகிறார்கள். கல்வி வியாபாரமயமாக்கப்பட்டு விட்டதால் ஏழை மாணவர்கள் தற்குறிகளாக்கப்படுகிறார்கள்.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்கிற பெயரில் இந்த நாடே பன்னாட்டு கம்பெனிகளின் லாப வெறிக்காக கூறுபோட்டு விற்கப்படுகிறது. அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்ததன் மூலம் கோடிக்கணக்கான சிறு வணிகர்களின் வயிற்றில் அடித்துள்ளது. வால்மார்ட் போன்ற பன்னாடு நிறுவனங்கள் கொழுக்கவும் வழிவகுத்துள்ளது. மேலும் காப்பீட்டுத்துறை, ஓய்வூதியத்துறையிலும் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்து மக்களின் சேமிப்பை பன்னாட்டு கம்பெனிகள், மற்றும் உள்நாட்டு தரகு முதலாளிகள் சூறையாடவும் பட்டுக் கம்பளம் விரித்துள்ளது மன்மோகன் கும்பல்.

மானிய வெட்டு என்கிற பெயரில் கேஸ் சிலிண்டருக்கு கட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் போன்ற இதர பொருட்களின் விலையை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கிறது. அதே நேரத்தில் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் பல லட்சக்கணக்கான, கோடி ரூபாய்களை வரிச்சலுகைகளாக வாரி வழங்குகின்றன மத்திய மாநில அரசுகள். இக்கொடுமைகளை எதிர்த்துப் போராடும் மக்கள் மீதோ இராணுவம், போலீசை ஏவி அடக்குமுறைகளை  கட்டவிழ்த்து விட்டு ஒரு உள்நாட்டுப் போரையே நடத்தி வருகிறது மன்மோகன்-சோனியா-சிதம்பரம் கும்பலின் காங்கிரசு அரசு.

இதற்கெல்லாம் என்ன காரணம் ?

இந்த அரசு மனமுவந்து ஏற்று நடைமுறைப்படுத்தி வரும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்னும் மறுகாலனியாக்கக் கொள்கை தான் காரணம். இது தான் இன்று உலக மக்களை மரணக்குழியில் தள்ளி வருவதோடு நாட்டையும் அடிமையாக்கி வருகிறது.

இதெற்கெல்லாம் என்ன காரணம் ? உலகம் முழுவதும் உள்ள ஏழை நாடுகள் மீது உலக முதலாளித்துவம் திணித்து வரும் சுரண்டல் கொள்கையான மறுகாலனியாக்க கொள்கை தான் காரணம். இதை ஒழிப்பதே உலக உழைக்கும் மக்களின் இன்றைய உடனடி கடமை, இக்கடமையை நிறைவேற்ற ஏழை நாட்டு உழைக்கும் மக்களோடு ஒன்றிணைவோம். உலக முதலாளித்துவ சுரண்டலை, மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிப்போம். தெற்காசிய மக்களுக்கு ஒரு விடிவெள்ளியாகத் திகழ்வோம்.

மறுகாலனியாக்கத்தை முறியடிக்க முதலில் நமது நாட்டில் ஒரு விடுதலைப் போரை நக்சல்பாரிகள் தலைமையில் கட்டியமைப்போம். பன்னாட்டு முதலாளிகள் மற்றும் தரகு முதலாளிகளுக்கு மரண அடி கொடுப்போம். புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி சமூக விடுதலையையும் சாதிப்போம். அதற்காக இன்றைய நவம்பர் புரட்சி நாளில் உறுதியேற்போம்.

 நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம் !

______________________________________________________

சென்னையில் நவம்பர் புரட்சி நாள் நிகழ்ச்சிகள்.

நிகழ்ச்சி நிரல்

நாள்  : 7.11.2012
நேரம் : பிற்பகல் 2 மணி.

தலைமை : தோழர் த. நெடுஞ்செழியன்
இணைச் செயலாளர்,  புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி. சென்னைக் கிளை.

நவம்பர் தின உரை :  தோழர் வெற்றிவேல் செழியன்
மாநில அமைப்புச் செயலாளர்,புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. தமிழ்நாடு.

நாடகம்,  உரைவீச்சு,  விவாத மேடை. கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இளம் தோழர்களின் புரட்சிகர பாடல்கள்.

உழைக்கும் மக்களின் பண்பாட்டை உயர்த்திப்பிடிக்கும் நவம்பர் புரட்சி நாள் விழாவில் பங்கேற்க அனைவரும் வருக !

தொடர்புக்கு
வினவு -97100 82506
புதிய கலாச்சாரம்  -99411 75876

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி