privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.க"மின்வெட்டு குறித்து பேசாதே, இது போலீஸ் ஆட்சி!"

“மின்வெட்டு குறித்து பேசாதே, இது போலீஸ் ஆட்சி!”

-

வரை (அதிகாரத்தை) கையிலெடுப்போம் பவரை (மின்சாரத்தை) வரவைப்போம்” இந்த தலைப்பில் 23/11/2012 வெள்ளி மாலை இராஜபாளையம் ஜவகர் திடலில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இராஜபாளையத்தில் ஆர்ப்பாட்டம் என்றாலே பழைய பேருந்து நிலையத்தின் அருகிலிருக்கும் காந்தி சிலைக்கு பக்கத்தில் நடத்துவது தான் அனைத்து ஓட்டுக் கட்சிகளின், இயக்கங்களின் வழக்கம். பொதுக்கூட்டங்கள், கலை நிகச்சிகள் தான் ஜவகர் திடலில் நடக்கும். அந்த அடிப்படையில் காந்தி சிலையில் ஆர்ப்பாட்டம் நடத்த தோழர்கள் முறைப்படி அனுமதி கோரினர். ஆனால் காந்தி சிலையில் அனுமதிக்க முடியாது, வேண்டுமானால் ஜவகர் திடலில் நடத்திக் கொள்ளுங்கள் என்றது காவல் துறை. சரிதான், உழைக்கும் மக்கள் அதிகம் கூடும் ஜவகர் திடலை பொருத்தமாகத் தான் தேர்வு செய்து கொடுத்திருக்கிறது என்று எண்ணிக் கொண்டு அங்கேயே ஆர்ப்பாட்டம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன.

ஆர்ப்பாட்டம் தொடங்கவிருந்த நேரத்தில் மழை குறுக்கிட்டதால் திட்டமிட்டிருந்ததை விட ஒரு மணி நேரம் தாமதமாகவே ஆர்ப்பாட்டம் தொடங்கியது. “தமிழக அரசே சமச்சீர் மின்வெட்டை உடனே அமல்படுத்து, முடக்கி வைத்திருக்கும் அரசு மின் நிலையங்களை உடனே இயக்கு, தனியார் மின் உற்பத்தி நிலையங்களை அரசுடமை ஆக்கு” என்று விண்ணதிர முழங்கிக் கொண்டிருந்த போதே மீண்டும் மழை குறுக்கிட்டது. மழையையும் பொருட்படுத்தாது நனைந்து கொண்டே எழுப்பிய முழக்கங்கள் அந்தப் பகுதி மக்களிடம் வரவேற்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. இப்போதைக்கு முழக்கங்கள் அடங்காது என எண்ணிய மழை தன்னை அடக்கிக் கொண்டது.

கம்பம் வி.வி.மு தோழர் மோகன் மின்வெட்டின் காரணங்கள், மிகைமின் மாநிலமாக இருந்த தமிழகத்தில் மின் பற்றாக்குறை எதனால் எவ்வாறு ஏற்பட்டது என்பதையும் மின்சார விசயத்தில் ஓட்டுக்கட்சிகள் மக்களுக்கு செய்யும் துரோகங்களையும் விளக்கி பேசிக் கொண்டிருந்தார். சமூக விரோதிகளோடும், சாராய ரௌடிகளோடும் கூடிக்குலவும் போலிசு மக்கள் பிரச்சனைக்காக போராடும் மக்களை, தோழர்களை சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைப் போல வீடியோ எடுத்து பயங்காட்ட முயன்று கொண்டிருந்தது.

திடீரென காவல்துறை ஆய்வாளர், ஆய்வாளர் உட்பட போலிசு உயரதிகாரிகள் இரு சக்கர, நான்கு சக்கர
வாகனங்களில் வந்திறங்கினர். உங்களுக்கு கொடுத்த ஒரு மணி நேர அனுமதி முடிந்து விட்டது, ஆர்ப்பாட்டத்தை முடித்து விட்டு கலைந்து செல்லுங்கள் என்று தடாலடியாக உத்தரவிட்டார்கள். உடனே தோழர்கள் மாலை நான்கு மணியிலிருந்து எட்டு மணி வரை என்று தான் அனுமதி படிவத்தில் எழுதிக் கொடுத்திருக்கிறோம். அப்போது சம்மதித்துவிட்டு இப்போது திடீரென ஒரு மணி நேரம் மட்டும் தான் என்பதை ஏற்க முடியாது என்றனர். அதெல்லாம் முடியாது உடனே கலைந்து செல்லுங்கள் என்று அதிகார தோரணையில் மிரட்டிப் பார்த்தனர்.

அதை மறுத்து தோழர்கள், “ஏற்கனவே நிகழ்சியை தாமதமாக தொடங்கியிருக்கிறோம் என்றாலும் அனுமதி பெற்றபடி எட்டுமணிக்கு முன்னதாக நிகழ்சியை முடிக்க முடியாது. நீங்கள் விரும்பியதை செய்து கொள்ளுங்கள்” என்று கறாராக எதிர்த்துப் பேசினர். தோழர்களிடம் பருப்பு வேகாது என்று முடிவெடுத்த காவல்துறை அசிங்கமாய் கொல்லைப்புற வழியில் மைக் செட் உரிமையாளர்களை “செட்டுகளை அள்ளிக் கொண்டு ஸ்டேசனுக்கு வா, என்றும் நாளை நீ தொழில் நடத்த வேண்டுமா? வேண்டாமா?” என்றும் பேட்டை ரௌடியைப் போல் மிரட்டியது. பயந்து போன மைக் செட் காரர் தோழர்களிடம் வந்து முடித்துக் கொள்ளுமாறு கோரினார்.

பயப்பட வேண்டாம் என்று அவருக்கு தோழர்கள் தைரியம் கூறினர். அதற்கு அவர் போலிசை மீறி எங்களால் ஒன்றும் செய்ய முடியாது, நீங்கள் முடிக்காவிட்டால் நானே துண்டித்துக் கொள்கிறேன். நீங்கள் காசே தராவிட்டாலும் பரவாயில்லை என்று அழாத குறையாக மன்றாடினார். வேறு வழியில்லாமல் ஆர்ப்பாட்டம் பாதியிலேயே முடித்துக் கொள்ளப்பட்டது.

தினமும் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் மட்டுமே கிடைக்கும் மின்சாரத்தால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வியர்வையிலும், கொசுக்கடியிலும் அவதிப்படுக் கொண்டிருக்கும் மக்களிடம் அவர்களின் இந்த நிலைக்கு யார் காரணம்? அதை தீர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை விளக்கி நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் போலீசுக்கு என்ன வேலை? சுதந்திர நாடு என்று கூறிக் கொண்டு கருத்துரிமைக்கு எதிராக போலீசு தொடுத்திருக்கும் தாக்குதல் இது.

ஏற்கனவே, முகநூலில் லைக் போட்டதற்கெல்லாம் கைது செய்திருக்கிறது போலீசு. இந்த அரசுகள் கட்டிப்பிடித்துக் கொண்டு உறவாடும் தனியார்மய தாராளமய கொள்கைகளுக்கு எதிராக மக்கள் எழுந்து போராடப் போராட போலீசு தன் முகமூடியை கிழித்துக் கொண்டு தன் கோர முகத்தை வெளிகாட்டி வருகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு தான் இந்தச் சம்பவம். ஆர்ப்பாட்டத்துக்கு வந்திருந்த உழைக்கும் மக்களும், அந்தப் பகுதியிலிருக்கும் கடைக்காரர்களும், தோழரின் பேச்சை ஆர்வமாய் கேட்டுக் கொண்டிருந்த பொதுமக்களும் அதிர்ச்சியும் எரிச்சலும் கலந்த உணர்ச்சியை வெளிப்படுத்தினர்.

சித்தாந்தரீதியில் அரசு என்பதையும் அதன் உறுப்புகளையும் உணர்ந்த எங்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை என்பதை தோழர்கள் அவர்களுக்கு புரியும்படி விளக்கினார்கள். தடைக்கல்லையே படிக்கல்லாக மாற்றுவது தோழர்களுக்கு புதியதா என்ன? போராட்டங்கள் தொடரும்.