
கிரானைட் கொள்ளையன் பி.ஆர். பழனிச்சாமி மீது கறாராக நடவடிக்கை எடுப்பதைப் போல காட்டிக்கொண்ட அரசின் ‘பிடி’ தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தளர்வடையத்துவங்கியுள்ளது. பி.ஆர்.பி வீசி எறிந்த எலும்புத்துண்டுகளின் ருசியை மறக்க முடியுமா என்ன ?
தமிழக அரசு மற்றும் தமிழகத்திலுள்ள அனைத்து ஓட்டுக்கட்சிகளின் ஆதரவோடும் தமிழகத்திலுள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், வரலாற்றுச் சின்னங்கள் என்று அனைத்து இயற்கைச் செல்வங்களையும் கிரானைட் கொள்ளை கும்பல் விழுங்கி ஏப்பம் விட்டு வந்தது நீங்கள் அறிந்ததே. இந்த கொள்ளையர்களில் பெரிய தலையான பி.ஆர்.பி யிடம் கை நீட்டி காசு வாங்காத கட்சி என்று தமிழகத்தில் எதுவும் இல்லை.
இந்த கொள்ளை கும்பலுக்கு எதிராக மதுரை மாவட்டத்திலுள்ள நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளும் மனித உரிமை பாதுகாப்பு மையமும் தொடர்ச்சியாக போராடி வருகின்றன. கிரானைட் கொள்ளையர்களுக்கெதிரான இந்த போராட்டத்தில் கிரானைட் கொள்ளையையும் அதில் அரசு எந்திரத்தின் துணையையும் அம்பலப்படுத்தி ம.க.இ.க, வி.வி.மு, பு.ஜ.தொ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் “கிரானைட் மெகா கூட்டணி – மகா கொள்ளை” என்றொரு ஆவணப்படத்தையும் தயாரித்துள்ளன.
மதுரையில் கடந்த சனிக்கிழமை மாலை இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. ஹோட்டல் பேர்ள்லில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு உசிலம்பட்டி வட்டார வி.வி.மு செயலர் தோழர் குருசாமி தலைமை தாங்கினார். தோழர் தனது தலைமை உரையில் இந்த மாபெரும் கொள்ளையின் பரிமாணத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது அதை காட்சிகளால் உணர்த்துவதற்க்காகத்தான் இந்த ஆவணப்படத்தை எடுத்துள்ளோம் என்றார்.
தலைமை உரைக்கு பின்னர் பேசிய மதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞரும் கிரானைட் கொள்ளையன் பி.ஆர்.பி க்கு எதிராக பல்வேறு வழக்குகளில் விவசாயிகள் சார்பாக வழக்காடுபவருமான வழக்குரைஞர் திரு.லஜபதிராய் கிரானைட் கும்பல் அடித்த கொள்ளையால் நமது வரலாற்று அடையாளம், இயற்கை வளம், விவசாயம் அனைத்தும் அழிந்து விட்டது. நில உச்சவரம்பு சட்டம் என்பதெல்லாம் எப்படி பி.ஆர்.பி. போன்ற மாஃபியாக்களுக்கு முன்னால் செயலற்று கிடக்கிறது என்பதையும் விரிவாக அம்பலப்படுத்தி பேசினார்.
அவருடைய உரைக்கு பிறகு ஆவணப்படம் வெளியிடப்பட்டது. படத்தை திரு.லஜபதிராய் அவர்கள் வெளியிட கீழவளவை
சேர்ந்தவரும் பி.ஆர்.பி க்கு எதிராக பல்வேறு வழக்குகளை தொடுத்து தொடர்ந்து போராடி வருபவருமான திரு. வி.ஆர்.தங்கராஜ் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். இரண்டாம் பிரதியை மையம் வீதி நாடக குழுவின் இயக்குனர் திரு.சத்யமாணிக்கம் பெற்றுக் கொண்டார்.

அதன் பிறகு இந்த ஆவணப்படத்தை தயாரித்த போது அதற்காக பல வ்கைகளிலும் உதவியவர்களை பற்றியும், அதில் பங்கெடுத்துக்கொண்டு உழைத்தவர்களை பற்றியும் தோழர் குருசாமி மயில்வாகனன் பேசினார்.
அடுத்ததாக ம.க.இ.க வின் மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் சிறப்புரையாற்றினார். கிரானைட் கொள்ளைக்கு காரணம் அரசின் உலகமயக் கொள்கை தான் என்பதை விரிவாக விளக்கினார். இது ஒரு மாபெரும் கொள்ளை, அதாவது இது ஒரு ஊழல் என்பதை விளக்கியவர் தனியார்மயம் ,தாராளமயத்தை ஒழிக்காமல் இது போன்ற ஊழல்களை எந்த நாளும் ஒழிக்க முடியாது என்பதை விரிவாகவும் அழமாகவும் விளக்கினார்.
நிகழ்ச்சியின் இடையிடையே ஆவணப்படத்திலிருந்து சில முக்கியமான காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கிரானைட் கொள்ளையர்களுக்கு எதிராக நாம் எந்த திசைவழியில் செயல்பட வேண்டும் என்கிற பாதையையும் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஊட்டுவதாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது.
ஆவணப்படம்: கிரானைட் மெகா கூட்டணி – மகா கொள்ளை
டி.வி.டி விலை: ரூபாய் – 40
ஓடும் நேரம்: ஒரு மணி நேரம்
கிடைக்குமிடம்:
சென்னை
கீழைக்காற்று, 10, அவுலியா சாகிபு தெரு, எல்லீஸ் சாலை, சென்னை 2.
தொ.பே 044-28412367
மதுரை
ப.ராமலிங்கம், 34, மகாலிங்கம் சாலை, வில்லாபுரம், மதுரை.
தொலைபேசி எண் – 97916 53200