privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்பிளேடு பக்கிரி முதலாளிகளுக்கு இந்திய அரசு சலுகை!

பிளேடு பக்கிரி முதலாளிகளுக்கு இந்திய அரசு சலுகை!

-

டந்த 3-ம் தேதி நிதித்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழுவின் முன் அறிக்கை ஒன்றை நிதி அமைச்சகம் தாக்கல் செய்துள்ளது. மேற்படி அறிக்கையில் மொத்த வருமான வரி நிலுவைத் தொகை  2.48 லட்சம் கோடிகள் என்றும், இதில் சுமார் 1,95,511 கோடியை வசூலிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.33 லட்சம் கோடி அளவுக்கான வரியை ‘வசூலிப்பதற்கு அப்பாற்பட்டது’ என்றும் மீதம் 61,846 கோடியை ‘வசூலிக்க கடினமானது’ என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மொத்த நிலுவையான 2.48 லட்சம் கோடி நிலுவையில் வெறும் 7,348 கோடிகள் மட்டுமே வசூலிக்க முடியும் என்றும் மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் வசூலிப்பதற்கு அப்பாற்பட்டது (beyond recovery) என்று குறிப்பிடப்பட்டுள்ள 1.33 லட்சம் கோடிகள் பங்குச் சந்தை மோசடிகளாலும் கறுப்புப் பண பரிவர்த்தனையின் விளைவாகவும் ஏற்பட்ட இழப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. வசூலிக்க கடினமானது என்று வகைப்படுத்தப்பட்டுள்ள 61,846 கோடிகளின் மேல் பல்வேறு நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வரி நிலுவையில் ஹசன் அலியின் குழுமத்திடமிருந்து மட்டும் சுமார் 91 ஆயிரம் கோடி அரசுக்கு வரவேண்டியுள்ளது. ஹர்சத் மேத்தா குழுமத்திடமிருந்து சுமார் 20 ஆயிரம் கோடிகளும், கேதன் பரேக் குழுமத்திடமிருந்து சுமார் 4 ஆயிரம் கோடிகளும், தலால் குழுமத்திடமிருந்து சுமார் 14 ஆயிரம் கோடிகளும் நிலுவையில் உள்ளன.

tax_evasion

அரசின் வருமானம் குறைந்து விட்டது, நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது என்கிற மொக்கையான காரணங்களை முன்வைத்து தான் டீசல் விலை உயர்வு, பொதுத் துறைகளின் பங்குகளை விற்பது, சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு என்கிற பொருளாதாரத் தாக்குதல்களை மக்களின் மேல் கட்டவிழ்த்து விட்டது மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு.

தனியார்மயத்தை ஆதரிக்கும் நடுத்தர வர்க்க ‘அறிவுஜீவிகளும்’ ஆளும் வர்க்க ஊடகங்களும், மத்திய அரசின் நிதிச் சுமையைத் தவிர்க்க வேண்டுமென்றால், மக்களுக்கு அளிக்கப்படும் பல்வேறு நலத்திட்டங்களை வெட்ட வேண்டுமென்றும் சலுகைகளைக் குறைக்க வேண்டுமென்றும் ஆலோசனைகளை அள்ளித் தெளிப்பது அனைவருமே அறிந்த ஒன்று தான். ஒரு அரசு என்றால் அது சேவை செய்து கொண்டிருக்க கூடாது என்றும், மக்களுக்கு இலவசங்களை வழங்கி சோம்பேறிகளாக்கி விடக்கூடாது என்பதும் இவர்கள் வாதம்.

இதனடிப்படையில் தான் பல்வேறு நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டு பொதுத்துறைகள் ஒவ்வொன்றாகத் தனியார் முதலாளிகளிடம் தாரை வார்க்கப்படுகின்றன.  ஒரு அரசின் கடமை என்பது மக்களைத் திறமையாக ஆட்சி செய்வதும், சட்டம், நீதி, வரி வசூல், பாதுகாப்பு போன்ற அரசின் அலகுகளை திறமையாக நிர்வாகம் செய்வதும் ( good governance) தான் என்பது இவர்கள் முன்வைக்கும் வாதம்.

ஆனால் எதார்த்த உண்மையோ மக்களைக் கசக்கிப் பிழிந்து வரி பிடுங்குவதும், மறுத்தால் கதவைப் பிடுங்குவதுமாக சட்டாம்பிள்ளையாக நடந்து கொள்ளும் அதே அரசு தான், முதலாளிகள் என்றால் பம்மிப் பதுங்குகிறது. வருமான வரித்துறை வெளியிடும் விளம்பரங்களில் சொல்லப்படும் நேர்மை பற்றிய போதனைகளெல்லாம் சாதாரண மக்களுக்குத் தான் – முதலாளிகளுக்கும் கிரிமினல்களுக்கும் அல்ல என்பது தான் நிதி அமைச்சகம் தாக்கல் செய்துள்ள அறிக்கை தெரிவிக்கும் உண்மை.

வசூலிக்க முடியாது என்று அரசு கைகழுவி விட்ட வரி நிலுவைத் தொகை என்பது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளால் ஏற்பட வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படும் வருவாய் இழப்பைக் காட்டிலும் அதிகமானது. அலைக்கற்றைகளை முறையாக ஒதுக்கியிருக்க வேண்டும் என்கிற முதலாளிகளின் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி ஊழலுக்கு எதிராக சண்டமாருதம் செய்த ஊடகங்கள், இந்த பகற்கொள்ளையை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளன.

போலவே, மக்களுக்கான நலத்திட்டங்களை வெட்டி அரசின் நிதிச் சுமையை குறைக்கச் சொல்கின்றனர் ஊடகங்களும் மத்தியதர வர்க்கத்தினரும். ஆனால் கடந்த 2005-2006 லிருந்து 2010-2011 வரையிலான ஐந்தாண்டுகளில் கார்ப்பரேட் வரி, சுங்க வரி, கலால் வரி உள்ளிட்ட வகையினங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட மொத்த வரி விலக்கு 21 லட்சம் கோடி.  இவர்கள் யாரும் இதைப் பற்றி வாயே திறப்பதில்லை.

சந்தை என்பது தன்னைத் தானே கவனித்துக் கொள்ளும் என்று ஞாயம் பேசும் முதலாளித்துவ அறிஞர்களோ, பெரும் கார்ப்பரேட்டுகள் அரசின் கஜானாவை நக்கிப் பிழைப்பதைக் கண்டு கொள்வதில்லை. சாதாரண விவசாயிக்கு அளிக்கப்படும் மானிய விலை மின்சாரத்தை வெட்ட வேண்டும் என்று கூப்பாடு போட்ட எவரும் முதலாளிகளுக்கு அளிக்கப்படும் இந்தச் சலுகைகளை வெட்ட வேண்டும் என்று முனகக் கூட இல்லை.

‘ஜனநாயகப்பூர்வமாக’ தேர்ந்தெடுக்கப்பட்டதாக பீற்றிக்கொள்ளப்படும் அரசாங்கம் என்பது யாருக்கானதாக இருக்கிறது என்பதை இந்த செய்திகளில் இருந்து வாசகர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

படிக்க: