privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்வாலைச் சுருட்டிக்கொண்ட வன்னியரசு!

வாலைச் சுருட்டிக்கொண்ட வன்னியரசு!

-

வன்னியரசு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு கடந்த மாதம் “பா.ம.க.- வின் சாதி வெறியும் புரட்சிகரக் குழுக்களின் பிழைப்புவாதமும்” என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவதூறுகளால் நிரம்பிய அக்கட்டுரையை “பெரியார் தளம்” என்கிற பெரியார் தி.க. இணையதளமும், “கீற்று” என்கிற தளமும் பெருமகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ளன.

வன்னியரசு தனது கட்டுரையில், “‘ புரட்சி’ செய்யப் புறப்பட்ட நக்சல்பாரிகள், அந்தப் பாதையிலிருந்து விலகி, சாதி அரசியல் கட்சிகளிலும், கட்டப்பஞ்சாயத்து நடத்தியும் பிழைக்கப் போய் விட்டார்கள். புரட்சிகரக் குழுக்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக தலித் மக்கள் இந்தத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். நாய்க்கன்கொட்டாய் முகப்பில் இன்று அப்பு, பாலன் சிலைகள் மட்டுமே பாதுகாப்பாக இருக்கின்றன. சிலை வைத்த மக்களோ வீடின்றி வாசலின்றித் தவிக்கின்றனர். பா.ம.க. வன்னியர்கள் மட்டுமல்ல, தி.மு.க., அ.தி.மு.க., ம.க.இ.க., என்று கட்சி பேதம் இன்றி அனைத்து வன்னியர்களும் முதலில் சாதி, அப்புறம்தான் கட்சி என்று ஒன்று சேர்ந்து கொண்டு தாக்கினர்” என்று எழுதியிருந்தார்.

“அறிவு நாணயம் இருந்தால், தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டும் ம.க.இ.க. காரர்கள் யார் யார் என்பதைச் சொல்லட்டும். அல்லது அவரது கட்டுரையைப் பிரசுரித்திருக்கும் கீற்று, பெரியார் தளம் வலைத்தளங்களுக்கு கொஞ்சமாவது நேர்மை இருக்குமானால், வன்னி அரசுவை விளக்கமளிக்குமாறு கோரட்டும்” என்று வினவு தளத்தில் நம் தோழர்கள் எழுதியிருந்தனர்.

அதற்கு கீற்று தளத்தில் பதில் எழுதிய வன்னியரசு. “இத்தாக்குதலுக்கு பின்னிருந்து அனைத்து வேலைகளையும் செய்தவர் தோழர் கிருஷ்ணன். இவர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த வன்னியர், ம.க.இ.க. தோழர்” என்று குறிப்பிட்டிருந்தார். “அந்த கிருஷ்ணன் யார் என்பதை நேரில் வந்து காட்டுங்கள் நானும் வருகிறேன்” என்று கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வி.வி.மு. தோழர் ஆம்பள்ளி முனிராஜ் வினவு தளத்தின் மூலம் சவால்விட்டதும் வன்னியரசு வாலைச் சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டார்.

தருமபுரி தாக்குதலைப் பற்றி முதலாளித்துவப் பத்திரிகைகளிலிருந்து தாக்குதலுக்குள்ளான தாழ்த்தப்பட்ட மக்கள் வரை அனைவரும் ஒன்றைக் கூறுகிறார்கள்: “நக்சல்பாரி இயக்கம் இருந்தவரை சாதி ஒடுக்குமுறை இல்லை. இயக்கம் பின்னடைவுக்குள்ளானதால்தான் சாதிவெறியர்கள் தலை தூக்கியிருக்கிறார்கள்” என்கின்றனர்.

நக்சல்பாரி அரசியலால் ஈர்க்கப்பட்ட ஆதிக்கசாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் ஒன்றிணைந்த காரணத்தினால்தான் அங்கே சாதிவெறியர்களை நேருக்குநேர் எதிர் கொள்ள முடிந்தது.

தருமபுரியில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் சாதிவெறியர்களை எதிர்த்து அந்தந்த சாதிகளைச் சேர்ந்தவர்களையும், பிற ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த ஜனநாயக சக்திகளையும் முன்நிறுத்தி தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை நிலை நாட்டியதும் சாதி ஆதிக்கத்தை அசைத்துப் பார்த்ததும் கம்யூனிஸ்ட் இயக்கமே அன்றி, தலித் அமைப்புகள் அல்ல. இதை தாழ்த்தப்பட்ட மக்களும் நன்கு அறிவார்கள். இந்த உண்மை தான் ம.க.இ.க. வுக்கு எதிராக வன்னியரசைப் புளுக வைத்திருக்கிறது.

தாழ்த்தப்பட்ட மக்கள் வாழப்பொறுக்காத வன்னிய சாதிவெறியர்களின் வன்மம் தான் இந்தத் தாக்குதலுக்கு காரணம் என்று அனைவரும் கூறுகின்றனர். தாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களோ நக்சல்பாரி தோழர்கள் இருந்திருந்தால், இப்படியெல்லாம் நடந்திருக்காது என்கிறார்கள். ஆனால், வன்னியரசு மட்டும் இதற்கு வேறு ஒரு காரணத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்.

சேரி மக்கள் நக்சல்பாரிகளை ஆதரித்ததற்கான தண்டனையைத்தான் இப்போது அனுபவித்து வருகிறார்களாம். இப்படி வன்னியரசு ஏன் புளுக வேண்டும்? அதற்கு பல காரணங்கள் உண்டு எனினும், ’நக்சல்பாரி கட்சிக்குப் போகாதீர்கள்’ என்பது முதல் காரணம். இரண்டாவது தாழ்த்தப்பட்ட மக்களின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துபவர்களை ம.க.இ.க. தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறது. அவர்களின் நடைமுறையை மட்டுமின்றி, இந்த அரசமைப்புக்குள்ளேயே சீர்திருத்தம் மூலம் சாதியை ஒழித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்குகின்ற அம்பேத்கரியத்தையும் அரசியல் ரீதியில் விமர்சிக்கிறது. எனவேதான் வன்னியர் சங்கத்தை விட, ம.க.இ.க. மீது வன்னி அரசு கொலைவெறியோடு பாய்கிறார்.

caption

தருமபுரி தாக்குதலைக் கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் படைப்பாளிகள் நடத்திய கூட்டத்தில், இவர்களுடைய முகத்துக்கு நேரே பூணூலை உருவிக்காட்டும் காங்கிரசு பார்ப்பானுக்கு கைதட்டுகிறார்கள். குச்சு கொளுத்தி ராமதாசுடன் நல்லிணக்கம் காண விரும்புகிறார்கள்.

ராமதாசுக்கு அம்பேத்கர் சுடர் பட்டமளித்தது யார் ? மதுரை விமான நிலையத்திற்கு தேவர் சாதிவெறியனின் பெயரை வைக்கச் சொன்னது யார் ? சேதுராமனுடன் கைகோர்த்துக்கொண்டு போஸ் கொடுத்தது யார் ? மூப்பனார் வீட்டுக்குப் போனது யார்? நாலு சீட்டுக்காக பாசிச பாப்பாத்தியிடம் நின்றது யார் ? கண்ணகி-முருகேசன் கொலையில் கட்டப்பஞ்சாயத்து செய்தது யார்?

ரியல் எஸ்டேட் மாஃபியா மடிப்பாக்கம் வேலாயுதத்தை வேட்பாளராக்கிச் சந்தி சிரித்தவர்கள், ஊரறிந்த கட்டப் பஞ்சாயத்து பேர்வழியும், கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவருமான செல்வப்பெருந்தகையை இணைப் பொதுச்செயலாளராக்கி அழகு பார்த்தவர்கள், கட்டப்பஞ்சாயத்தையே அன்றாட கட்சிப்பணியாக்கி, அதற்காக கூச்சநாச்சமின்றி சாதிவெறியர்களோடு ஒட்டிக்கொண்டும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் துரோகம் செய்கின்ற பிழைப்புவாதிகள்தான் புரட்சிகர அமைப்புகள் மீது அவதூறு செய்கிறார்கள்.

தனது முதல் கட்டுரையில் புரட்சியாளர்களை அவதூறு செய்யும் வன்னியரசு, இரண்டாவது கட்டுரையில் மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகளைப் பார்த்துப் புல்லரித்துப் போய் “அவங்க ரொம்ப நல்லவங்க; தியாகம் எல்லாம் பண்றாங்கன்னு சர்டிபிகேட் கொடுக்கிறார்!” அய்யாவுக்கு கொடுத்த அம்பேத்கர் சுடர் விருதை மாவோயிஸ்டுகளுக்குக் கொடுக்காமல் இருந்தால் சரி. வன்னி அரசு போன்றவர்களால் அவதூறு செய்யப்படுவதே அதைவிடக் கவுரவமானது.

________________________________________________
– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2013
__________________________________________________