Friday, May 2, 2025
முகப்புஉலகம்அமெரிக்காஉலக நாடுகள் ஆதரவுடன் சிஐஏ சித்திரவதை !

உலக நாடுகள் ஆதரவுடன் சிஐஏ சித்திரவதை !

-

டந்த 10 ஆண்டுகளாக அமெரிக்க உளவு நிறுவனம் சி.ஐ.ஏ.  நடத்திய சட்ட விரோத, மனித குலத்துக்கு எதிரான நடவடிக்கைகளை குறித்த  ஆய்வறிக்கை வெளியாகியிருக்கிறது. ‘பயங்கரவாதத்தின் மீதான போர்’ என்ற பெயரில் சி.ஐ.ஏ.வால் சட்ட விரோதமாக கடத்தப்பட்ட நபர்களைப் பற்றிய விபரங்களும், சி.ஐ.ஏ.வுடன் ஒத்துழைத்து தம் நாட்டு குடிமக்களை அமெரிக்காவிடம் கையளித்த நாடுகளின் பட்டியலும் முதல் முறையாக தொகுக்கப்பட்டுள்ளன.

நியூயார்க்கைச் சேர்ந்த ஓப்பன் சொசைட்டி பவுண்டேசன் அமைப்பின் ஒரு பகுதியான ஓப்பன் சொசைட்டி ஜஸ்டிஸ் பவுண்டேசன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

’54 நாடுகள் தமது நாட்டு சட்டங்களுக்கும் பன்னாட்டு மனித உரிமை சட்டங்களுக்கும் விரோதமாக அமெரிக்க உளவுத் துறையின் சிறைப்படுத்தல், சித்திரவதை நடவடிக்கைகளில் பங்கேற்றன’ என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. பொதுவில் கிடைக்கும் ஆவணங்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட 136 நபர்களைப் பற்றிய விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.  ‘இந்த எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும்’ என்றும் ‘அமெரிக்க அரசும் பங்கேற்ற மற்ற அரசுகளும் தகவல்களை வெளியிடுவது வரை பாதிக்கப்பட்ட மற்றவர்களைப் பற்றிய விபரங்கள் மர்மமாகவே நீடிக்கும்’ என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

தனியார் மயம், தாராள மயம், உலக மயம் என்று அமெரிக்க அரசு போட்டுக் கொடுக்கும் பாதையில் நடைபோடும் உலக நாட்டு அரசுகள், அமெரிக்க அரசு ‘உம்’ என்று சொன்னால் தமது நாட்டின் சட்டங்களையும், நாட்டு மக்களின் நலன்களையும், பன்னாட்டு மனித உரிமை சட்டங்களையும் உதறி விட்டு அமெரிக்க ஆளும் வர்க்கங்களின் காலில் விழுந்து விடுகின்றன என்பதை இந்த அறிக்கை ஆதாரங்களுடன் நிறுவுகிறது.

‘உலகளாவிய இசுலாமிய பயங்கரவாதத்தால் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள்’ என்று சவுண்டு விட்டு உலகெங்கும் போர்களை நடத்தும் அமெரிக்க அரசுதான் மனித குலத்துக்கு எதிரான பயங்கரவாதி என்பதை இந்த அறிக்கையில் தரப்பட்டுள்ள விபரங்கள் தெளிவாக்குகின்றன.

  • 2004ம் ஆண்டு பாத்திமா பவுச்சர் என்ற சிரிய நாட்டுப் பெண் கோலாலம்பூர் விமான நிலையத்தில் பிடிக்கப்பட்டு விமான நிலையத்திலேயே உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு அறையில் அ மெரிக்க உளவுத் துறையினால் பல நாட்கள் சித்திரவதை செய்யப்பட்டார்.  நான்கரை மாத கர்ப்பமாக இருந்த பவுச்சரை சங்கிலியால் கட்டி வைத்து ஐந்து நாட்களுக்கு உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள்.
  • ஈரானில் பிடிக்கப்பட்ட வேசம் அல்துல்ரஹ்மான் அகமது அல்-தீமா ஆப்கானிஸ்தானில் அமெரிக்க உளவுத் துறையின் இருண்ட சிறையில் 77 நாட்கள் அடைக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு பாக்ரம் என்ற இடத்துக்கு கடத்தப்பட்டு தூங்க விடாமல் செய்வது, கூரையில் கட்டித் தொங்க விடுவது, நாய்களால் அச்சுறுத்துவது, சித்திரவதை வீடியோக்களை பார்க்க வைப்பது, எந்திரத்தால் அறுக்கும் சத்தத்தோடு வலியால் அலறும் சத்தத்தைகேட்க வைப்பது என்று 40 நாட்களுக்கு சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார்.
  • ‘அமெரிக்க மீதான விமான தாக்குதல்களை திட்டமிட்டவர்’ என்று குற்றம் சாட்டப்பட்டு குவான்டனாமோ பே சிறையில் விசாரிக்கப்பட்டு வரும் காலித் ஷேக் மொகமது பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டவர். சில நாட்களுக்குப் பிறகு அமெரிக்க உளவுத் துறையிடம் ஆப்கானிஸ்தானில் ரகசியமாக ஒப்படைக்கப்பட்டு, போலந்துக்கு கடத்தப்பட்டார். அங்கு அவர் 183 முறை தண்ணீர் சித்திரவதை செய்யப்பட்டார்.

இசுலாத்தின் புனித பூமியான சவுதி அரேபியாவை ஆளும் மன்னர்களிலிருந்து பாகிஸ்தான், மலேசியா, சிரியா, லிபியா, ஜோர்டான், இந்தோனேஷியா போன்ற இசுலாமிய குடியரசுகளும்,  ஆப்கானிஸ்தான், எகிப்து,  ஜோர்டான், சிரியா, துருக்கி போன்ற அமெரிக்க கூட்டாளி அரசுகளும் அமெரிக்க உளவுத் துறையின் உள்ளூர் கிளைகள் போல செயல்பட்டிருக்கின்றன.

‘மனித உரிமைகளின் உன்னத காவலர்கள்’, ‘புனிதமான முதலாளித்துவத்தின் உறைவிடங்கள்’ என்று தூக்கிப் பிடிக்கப்படும் ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து போன்ற நாடுகளும், ஆஸ்திரேலியா,  கனடா போன்ற சுதந்திரத்தின் விளக்குகளும், ஆஸ்திரியா, பெல்ஜியம்,  ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல்,  ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற முன்னேறிய ஐரோப்பிய நாடுகளும் திரைமறைவில் சி.ஐ.ஏ.வுக்கு செய்து கொடுத்த கொடூரங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க உளவுத் துறைக்கு தம் நாட்டில் சிறைகளை ஏற்படுத்திக் கொடுத்தல், உளவுத் துறை பிடிக்க விரும்புபவர்களை பிடிக்கவும் கடத்தவும் உதவி செய்தல், ரகசிய விமானங்கள் தம் நாட்டுக்குள் வந்து போக அனுமதித்தல் என்று பல வகையில் அமெரிக்க உளவுத் துறைக்கு ஊழியம் புரிந்திருக்கின்றன இந்த நாடுகள்.

  • டிசம்பர் 2012ல் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம், ‘மாசிடோனிய அரசு அமெரிக்க உளவுத் துறையுடன் ஒத்துழைத்தது மூலம் காலித்-எல்-மஸ்ரியின் மனித உரிமைகளை மீறியது’ என்று தீர்ப்பளித்தது. அமெரிக்க உளவுத் துறை காலித்தை சித்திரவதை செய்ததையும் அது உறுதி செய்தது.
  • ‘எகிப்து நாட்டைச் சேர்ந்த அபு ஓமரை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் சட்ட விரோதமாக கடத்திச் சென்றனர்’ என்று இத்தாலிய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
  • இது போன்ற பல வழக்குகள் போலந்து, லித்துவேனியா, ரோமேனியா, இத்தாலி நாடுகளில் உள்ள ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்திலும், ஆப்பிரிக்க மனித உரிமைகள் கழகத்தின் முன்பும், எகிப்து, ஹாங்காங், இத்தாலி, இங்கிலாந்து நாட்டு உள்ளூர் நீதிமன்றங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன.

2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம், அமெரிக்காவின் மீதான விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், ‘அமெரிக்கா பயங்கரவாதத்துக்கு எதிராக போர் தொடுப்பதாக’ அறிவித்தார்.  ‘நீங்கள் எங்கள் பக்கம் இருக்க வேண்டும்’ இல்லை என்றால், ‘நீங்கள் எதிரிகளின் பக்கம் என்று எடுத்துக் கொள்வோம்’ என்று வெளிப்படையாக அனைத்து உலக நாடுகளையும் மிரட்டினார்.

‘பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தப் போர் தொடர்ந்து நடக்கும், பல வடிவங்களில் நடக்கும், சில வெளிப்படையான நடவடிக்கைகளாக நடக்கும், பல தாக்குதல்கள் பற்றிய விபரங்கள் வெளியில் வரவே போவதில்லை’ என்றும் அமெரிக்க மக்களிடமும் உலகத்தின் முன்னும் தாம் செய்யவிருக்கும் எல்லா சட்ட விரோத, மனித விரோத செயல்களுக்கும் முன் தேதியிட்ட ஒப்புதல் வாங்கியிருந்தார்.

அதைத் தொடர்ந்து உலகெங்கிலுமிருந்து அமெரிக்க நலன்களுக்கு எதிரானவர்களாக கருதப்பட்ட, அமெரிக்க விரிவாக்கத்தை எதிர்ப்பவர்களாக அடையாளம் காட்டப்பட்ட நூற்றுக் கணக்கான நபர்களை சட்ட விரோதமாக சிறை பிடிப்பது, உள்ளூரிலேயே அடைத்து வைத்து சித்திரவதை செய்வது, சட்டத்துக்கு புறம்பாக கடத்திச் செல்வது,  அமெரிக்காவுக்குச் சொந்தமான கியூபாவில் இருக்கும் குவான்டாமோ பே சித்திரவதை மையத்தில் குவித்து வைப்பது என்று பயங்கரவாத நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விட்டது அமெரிக்க உளவுத் துறை.

ஜார்ஜ் புஷ்ஷின் இரண்டு நான்காண்டு ஆட்சிக் காலங்கள் முடிந்து 2009ல் ஒபாமா ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் இது போன்ற கடத்தல் நடவடிக்கைகள் கைவிடப்படவில்லை. 2009ம் ஆண்டு உலக மக்களின் கருத்து தமக்கு எதிராக திரும்புவதை தவிர்ப்பதற்காக சித்திரவதையை சட்ட விரோதமாக்குவதாகவும், உளவுத் துறை நடத்தி வரும் சிறைகளை மூடுவதாகவும் ஒபாமா அறிவித்தாலும், உளவுத் துறையின் குறுகிய கால சிறைபிடித்தலையும் விசாரணைகளையும் அமெரிக்க அரசு தொடர்ந்து அனுமதிக்கிறது. சட்டவிரோதமான கடத்தல்கள் பற்றிய இப்போதைய அமெரிக்க அரசின் கொள்கை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

“அமெரிக்க அரசும் அதனுடன் சேர்ந்து செயல்பட்ட மற்ற நாட்டு அரசுகளும் தமது குற்றங்களை ஒத்துக் கொண்டு, உலகம் முழுவதும் அமெரிக்க உளவுத் துறை நடத்திய கொடுமைகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டிய நேரம் வந்திருக்கிறது. ரகசியம் என்ற திரைக்குள் மறைந்து கொண்டு தமது ஆட்களின் செயல்களுக்கு பொறுப்பேற்காதது வரை சித்திரவதை முதலான கொடுமைகளுக்கான குற்றச்சாட்டிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது“ என்கிறார் இந்த அறிக்கையின் ஆசிரியர் அம்ரித் சிங்.

“இந்த சட்ட விரோத செயல்களில் 54 நாடுகளை கூட்டாளிகளாக சேர்த்துக் கொண்டதன் மூலம் அமெரிக்கா நீண்ட நாட்களாக பின்பற்றப்படும் பன்னாட்டு மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டங்களை மீறியிருக்கிறது” என்கிறார் அம்ரித் சிங். இந்த அமெரிக்காவும் அதன் தலைமையிலான சர்வதேச சமூகமும் தான், ஈழப் போரில் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய மனித உரிமை மீறல்களைப் பற்றி விசாரித்து நியாயம் வாங்கித் தரும் என்று தமிழ் தேசிய வாதிகள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆய்வு அறிக்கைகளும் நீதிமன்ற வழக்குகளும் அமெரிக்காவின் விரிவாக்க நடவடிக்கைகள் மீது எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பது நிதர்சனம். இராணுவ மற்றும் அரசியல் வலிமைகளைப் பயன்படுத்தி உலக நாட்டு அரசாங்கங்களை மிரட்டி தனது நோக்கங்களுக்கு பணிந்து போக வைக்கும் அமெரிக்க அரசு ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் இது போன்ற மனித உரிமை மீறல்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது.
___________________________________________
அப்துல்
____________________________________________

மேலும் படிக்க