privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்ஒரு பெண் ஒரு பொறுக்கியை எதிர்க்க முடியுமா ?

ஒரு பெண் ஒரு பொறுக்கியை எதிர்க்க முடியுமா ?

-

பெண்களுக்கு எதிரான பாலியல் அச்சுறுத்தல்களுக்கும் வன்முறைக்கும் கடுமையான சட்டங்கள்தான் தீர்வு என்று அரசாங்கம் முன் வைக்கிறது. ‘சட்டத்தை கடுமையாக்கணும், போலீசுக்கு அதிக அதிகாரம் வேணும், நல்லவங்க அரசியலுக்கு வரணும், ஊடகங்கள் சுதந்திரமா செயல்பட்டா பிரச்சனை தீரும்’ என அப்பாவியாய் நம்புபவர்கள் பலர் உள்ளனர்.

ஆணாதிக்க பிற்போக்கு கலாச்சாரத்தோடு  புழங்கும் பொது இடங்களில் பெண்கள் மீது வசை பொழிவது, பாலியல் ரீதியாக திட்டுவது போன்ற நடத்தைகள் சகஜமாகியுள்ளன. அனைவரும் தினமும் சந்திக்கும் இந்த நிகழ்வுகளை பெண்கள் ‘வேறு வழியில்லாமல்’ சகித்துக் கொண்டு போக வேண்டியிருக்கிறது.

சட்டங்களை செயல்படுத்த வேண்டிய காவல் துறை, சமூகத்தின் ஒட்டு மொத்த ஆணாதிக்க மனப்போக்கைத்தான் பிரதிபலிக்கிறது. இந்தச் சூழலில் ஒரு பெண் தனக்கு நேர்ந்த அச்சுறுத்தல்கள் குறித்து புகார் செய்ய காவல் நிலையத்தை அணுகுவதோ, வழக்கு பதிவு செய்வதோ நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கிறது.

கடந்த 2 வாரங்களில் பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பான வழக்குகளை போலீஸ் நிலையத்தில் பதிவு செய்வதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களைப் பற்றிய இரண்டு சம்பவங்களை பார்க்கலாம். பெண்கள் மீதான அச்சுறுத்தல்களுக்கு எதிராக பெண்கள் அமைப்பாக ஒன்றிணைந்து போராடுவதுதான் ஒரே தீர்வு.

திருச்சியைச் சேர்ந்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழுவினர் பிப்ரவரி 1ம் தேதி அனுப்பிய சம்பவம்

திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி, பள்ளிக்குச் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். 30 வயதுடைய ஆண் ஒருவர் ஹீரோ ஹோண்டாவில் வேகமாக வந்து, அந்த மாணவியின் தோளை அமுக்கி, பின்பக்கம் தட்டிவிட்டு சென்றுள்ளான்.

சிறிதும் தயங்காத அந்த மாணவி வேகமாக பின்னாலேயே ஓடிப்போய், அவனை வழிமறித்து, வண்டியை நிறுத்தி, வண்டிசாவியை பறித்து கொண்டு நடுரோட்டில் வைத்து கடுமையாக திட்டி உள்ளார். அவன் வேறுவழியின்றி “என்னை மன்னித்துவிடு , வண்டி சாவியை கொடு” எனக் கேட்டுள்ளான்.

அந்த மாணவி சாவியை தரமறுத்து, அருகில் உள்ள மகளிர் காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்து விட்டு, அவர்கள் வருவதற்க்குள் வேகமாக அந்த ‘பொறுக்கி’ இருக்கும் இடத்திற்கு வந்து மீண்டும் திட்டியுள்ளார். கூட்டம் கூடவும் ஆண் ட்ராபிக் போலீஸ் வந்து… “ஏம்மா இதப் போயி பெரிய பிரச்சனையா ஆக்குற, போம்மா” என்று அந்த மாணவியை திட்டியுள்ளார். அதற்குள் கூடியிருந்த மக்களில் ஒருவர், அந்த ‘பொறுக்கியை’ கையை ஓங்கிக் கொண்டு அடிக்கப் போயுள்ளார். ட்ராபிக் போலிஸ் உடனே “சரி…சரி விடுங்க, பிரச்சனைய பெரிசாக்காதீங்க“ என்றிருக்கிறார்.

அங்கு வந்த மகளிர் காவல் நிலைய பெண் போலிஸ் ட்ராபிக் போலிஸிடம் “சார், இதுக்கும் உங்களுக்கும் சம்மந்தமில்லை. அந்த பெண்ணை தோளை பிடித்து அமுக்கி இருக்கான், சாதாரணமா விட்டுடுங்கன்னு சொல்லுறீங்க… இது எங்க(பெண்கள்) பிரச்சினை.. நாங்க பார்த்துக்குறோம். நீங்க உங்க ட்யூட்டிய பாருங்க“ என்று சொல்லி அந்தப் ‘பொறுக்கியை’ அழைத்துக் கொண்டு காவல்நிலையத்திற்கு சென்றார்.

திருச்சியைச் சேர்ந்த பெண்கள் விடுதலை முன்னணி பிப்ரவரி 14ம் தேதி அனுப்பிய செய்தி

திருச்சி பாலக்கரையில் இருந்து சுப்பிரமணியபுரம் செல்வதற்காக தனியார் நகர பேருந்தில் பெண்கள் விடுதலை முன்னணி தோழர் ஒருவர் பயணம் செய்தார். பேருந்தில் கால் வைக்க முடியாத அளவிற்கு கூட்டம் தொங்கி கொண்டும், தள்ளாடிக் கொண்டுமிருந்தது.

பேருந்தின் நடத்துனர் ஒவ்வொரு ஸ்டாப்பிலும் இடமே இல்லையென்றாலும் பயணிகளை ஏற்றிக் கொண்டேயிருந்தார். அவ்வப்போது ‘உள்ளே போ, உள்ளே போ’ என சத்தம் போட்டு கொண்டேயிருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் நடத்துனர் டிக்கெட் போடவே முடியாதபடி இட நெருக்கடி ஏற்ப்பட்டது.

நிலைமையை உணர்ந்த நடத்துனர் பயணிகளை பார்த்து ஆத்திரத்துடன் வா, போ என்றும் பெண்களிடம் “ஏய் சொன்னா கேட்கமாட்டியா போன்னு சொல்றேன் அப்படியே நிக்கிற” என தன் மனைவியை ஆணாதிக்கத்துடன் அதட்டுவது போல அடிக்காத குறையாக உறுமினார்.

பெண் தோழர் “ஏங்க மரியாதை இல்லாம பேசுறீங்க, இவ்வளவு கூட்டத்தில் எப்படி இன்னும் உள்ளே போக முடியும், எல்லாத்தையும் சகட்டு மேனிக்கு பேசுறீங்க தனி ஒரு முதலாளி லாபத்துக்காக இவ்வளவு மக்களையும் கொடுமை படுத்துறீங்க” என சத்தம் போட்டு கண்டித்தார்.

உடனே டிரைவர் ஆவேசமாக “ஏய் என்ன திமிறா பேசுற, கண்டக்டர் வயசு என்ன? உன் வயசு என்ன? மரியாதையா பேசு” என சீறினார்.

“ஏங்க மரியாதை இல்லாம எல்லா பெண்களையும் ஒருமையில் பேசுறதும் என்ன நியாயம்? பயணிகள் எல்லாம் இவருக்கு என்ன பொண்டாட்டியா? (மனைவியையே அப்படி பேசுவது தவறு என்பது வேறு)” என கேட்டதும் நக்கலாக

“பொண்டாட்டி இல்ல வப்பாட்டி” என கேலி செய்தான் டிரைவர்.

“மரியாதையா பேசல செருப்பால அடிப்பேன்” என பெண் தோழர் பதில் சொல்ல,

டிரைவர் வண்டியை நடுரோட்டில் நிறுத்தி விட்டு “நீ என்னடி அடிக்கிறது நானும் செருப்பால அடிப்பேன்” என செருப்பை தூக்கி காட்டி போடி, வாடி என்று ரவுடித்தனமாக நடந்து கொண்டிருக்கிறான்.

பெண் தோழர் விடாமல் அவனிடம் சண்டை போட்டுள்ளார், உடனே பயணிகள் மத்தியில் இருந்த ஆண்கள் சிலர் “ஏம்மா டிரைவர் தான் பேசுறார்னா நீயும் சரிக்கு சரியா பேசுற, பேசாம அமைதியாய் போம்மா” என பஞ்சாயத்து செய்தனர்.

“நாகரீகமே  இல்லாமல் இவ்வளவு கேவலமா பேசுறான் என்னை அடங்கி போக சொல்றீங்க, இதே உங்க வீட்டு பொம்பளைங்களை இவன் இப்படி பேசுனா வேடிக்கை பார்ப்பீங்களா? என்ன உங்க நியாயம்” என அவர்களிடமும் வாதம் செய்து கொண்டே பெண் தோழர் உறுதியாக நின்றார். இடையில் 3 இடங்களில் டிரைவர் வண்டியை நடுரோட்டில் நிறுத்தி ஆபாசமாக திட்டுவதும், செருப்பை தூக்கி அடிக்க வருவதும் நடந்தது.

“யேய் போடி என்ன வேணாலும் செய்டி ஒன்னும் புடுங்க முடியாது. இதோ போலீஸ் ஸ்டேஷன் இங்கதான் இருக்கு போய் என்ன வேணாலும் செய்!” என இறக்கிவிட்டு பேருந்து கிளம்பியது. பேருந்தில் இருந்து இறங்கிய தோழருடன் சில இளம்பெண்களும், இரண்டு இளைஞர்களும் அந்த ஸ்டாப்பில் இறங்கினர்.

நடந்த சம்பவங்களை கவனித்தவர்கள் “இவனுக்கு இதே வேலதாம்மா, தினமும் இவனோட வேற வழி இல்லாமல் இந்த பேச்சை கேட்க வேண்டி உள்ளது. இதுக்கு ஏதாவது முடிவு கட்டணும்” என தைரியமூட்டினர். உடன் இறங்கிய இரண்டு இளைஞர்கள் “வாங்க நாங்களும் புகார் செய்றோம்” என தோழருடன் ஏர்போர்ட் போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் தெரிவிக்க சென்றனர்.

சம்பவங்களை கேட்டறிந்த காவல்துறை அதிகாரிகள் ரொம்ப நிதானமாக, “சம்பவம் நடந்தது கே கே நகர் எல்லையில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் வருது. நாங்க அதில் தலையிட முடியாது, இது ஏர்ப்போர்ட் எல்லையில் வராது. நீங்க கே கே  நகர் போலீஸ் ஸ்டேஷன் போங்க” என திசை காட்டினர். சலிப்படையாமல் கே கே நகர் காவல் நிலையம் சென்று புகார் அளிக்க பெண் தோழர் சென்றார். மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மனித உரிமை பாதுகாப்பு மையம் தோழர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தோழர்கள் உதவியுடன் புகார் அளிக்கப்பட்டது.

சம்மந்தப்பட்ட டிரைவர், நடத்துனர் காவல் நிலையத்திற்குள் வந்து சேர்ந்ததும் “நடத்துனரை பார்த்தா வயதான அப்பாவிபோல தெரியுது, இவர் அப்படி பேச மாட்டாரே!” என அதிகாரிகள், பெண் தோழர் பொய் புகார் அளித்ததை போல கேள்வி கேட்டு துளைத்தனர். தோழரின் உறுதியை பார்த்து பின்வாங்கினார்.

அடுத்து தனியார் பேருந்தின் மேனேஜர், “ஏம்மா நடந்த சம்பவத்திற்கு நான் மன்னிப்பு கேக்குறேன் புகார் எல்லாம் வேண்டாம், இன்னும் 15 நாளில் டிரைவருக்கு திருமணம் நடக்க போவுது. அதுவும் உன்னை போல ஒரு பெண் தான், அது வாழ்க்கையை கெடுக்கலாமா?” என உருகினார்.

“இப்படிப்பட்ட காலிப் பயலுக்கு எதுக்கு வக்காலத்து வாங்குறீங்க, உங்க வீட்டு பொண்ணு கிட்ட இப்படி நடத்துகிட்டா நீங்க என்ன செய்வீங்க?” என்றதும் மேனேஜர் உதட்டை பிதுக்கியாவாறே சென்று விட்டார்.

மாலை நேரம் கடந்து இருட்ட தொடங்கியது. தீர விசாரித்ததாக கூறிய காவல்துறை ஆய்வாளர், “வழக்கு போட சொல்லி உள்ளேன், எனக்கு முக்கிய வேலை இருக்கு, சார் பார்த்துக்குவார்” என உதவி ஆய்வாளரை கைகாட்டி விட்டு எஸ்கேப் ஆனார். கடைசி வரை திரும்ப வரவே இல்லை.

அடுத்து உதவி ஆய்வாளர் தீர விசாரித்த வகையில் நடந்த குற்றத்திற்காக ரூ.1,000 அபராதம் கட்ட போதுமான அளவிற்கு வழக்கு என்று தீர்ப்பு எழுதுவது போல பேசினார். “என்ன சார் நியாயம்? நாகரீகமே இல்லாமல் பொது மக்கள் மத்தியில் எந்த வித கூச்சநாச்சம் இல்லாமல் இவ்வளவு கேவலமாக நடந்துள்ளனர். மொய் எழுதுவதை போல அபராதம் போடுவது என்ன நியாயம்?” என சத்தம் போட்டனர்.

“சரி, சரி உங்களுக்கும் வேணாம், எங்களுக்கும் வேணாம், 506\1 ஜாமீனில் வரும் செக்க்ஷனில் வழக்கு போடுகிறோம், போதுமா? இப்போது சந்தோஷம் தானே” என பேரம் பேசினார் உதவி ஆய்வாளர்.

கொடுத்த புகாருக்கு நடந்த சம்பவத்துக்கு பொருத்தமான செக்சனில் வழக்கு போடாமல் இழுத்தடித்தது நீடித்தது. இரவு மணி 10 வரை, வந்திருந்த தோழர்கள், பெண்கள், குழந்தைகள், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோர் உறுதியோடு காத்திருந்தனர். ‘சரி இவனுங்க சரிப்பட்டு வரமாட்டானுங்க, இரண்டு பொறுக்கிய உள்ள தள்ளனும்னா, நாம 10 பேர் சிறைக்கு போற போராட்டம் நடத்துறதை தவிர வேறு வழி இல்லை’ என முடிவு செய்து, ஸ்டேஷனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்தனர். பத்திரிக்கைகளுக்கு தகவல் தரப்பட்டது.

பலாப்பழத்தில் ஈ மொய்ப்பதை போல நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள் வாயில் மைக்கை திணிக்கும் மீடியா கும்பல் ஒன்றையும் காணோம். இறுதியாக தினத்தந்தி நிருபர் மட்டும் வந்து படம் எடுத்து சென்றார்.

ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

K K நகர் காவல்துறையே,
துணை போகாதே! துணை போகாதே!
பொறுக்கிகளுக்கு துணை போகாதே!

தினமும் இரண்டு கற்பழிப்பு,
கடத்தல், கொலைகள், தாலியறுக்க
வேடிக்கை பார்க்கும் காவல்துறையே!

பட்டப் பகலில் பஸ்ஸிலே
இரண்டு பொறுக்கிகள் துணிச்சலாக
திட்டுறான், மிரட்டுறான்,
பெண்ணை அடிக்க பாயுறான்!
வார்த்தையால கொல்லுறான்
பாதிக்கப்பட்டவர் புகார்கொடுக்க
நேரில் பார்த்த சாட்சியிருக்க
காவல் துறையே தயக்கமென்ன?

பாலியல் குற்றத்துக்கு
ஆண்மை நீக்க தண்டனை என்று
ஜம்பமிடும் ஜெயலலிதாவே!
பாரு, பாரு, யோக்கியதை பாரு,
உன் காவல் துறையின் யோக்கியதை பாரு.

பெண்கள் விடுதலை முன்னணி – வாழ்க!
மக்கள் கலை இலக்கியக் கழகம் – வாழ்க!
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி – வாழ்க!
மனித உரிமை பாதுகாப்பு மையம் – வாழ்க!

என முழக்கம் எதிரொலிக்க துவங்கியதும், கியூ பிரிவு போலீசு வெளியே வந்தார். “இந்தாம்மா ஏன் சத்தம் போடுறீங்க, FIR போட்டுக்கிட்டு இருக்கோம். சும்மா அமைதியா இருங்க” என்றார்.

பிறகு நமது மனித உரிமை பாதுகாப்பு மையம்  வழக்கறிஞர், மக்கள் கலை இலக்கிய கழகம் செயலாளர், பெண்கள் விடுதலை முன்னணி முன்னணியாளர்களை அழைத்து 294(B),506(1),352,354,பெண்களை தொல்லையில் இருந்து காக்கும் சட்டம் பிரிவு-4 ஆகிய செக்சன்களில் வழக்கு பதிவு செய்ததாக கூறி நகலை நம்மிடம் ஒப்படைத்தனர்.

இதற்கு முன் இரண்டு எப்.ஐ.ஆர் எழுதப்பட்டது. அது என்ன ஆனது கிழித்தெறியப்பட்டதா? அல்லது வேறு நபர்கள் மாட்டினால் அவர்களை வைத்து வழக்கு ஜோடிக்கப்படுமா? என நமக்கு தெரியவில்லை.

காலை 11 மணிக்கு நடந்த சம்பவம் இரவு 11 மணிக்கு முடிவிற்கு வந்தது. இது தான் நம்ம ஜனநாயகமும் சட்டமும் பெண்களுக்கு கொடுக்கும் பாதுகாப்பின் லட்சணம்.