privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஅசல் ரூ.20,000 - வட்டி ரூ 1,20,000 !

அசல் ரூ.20,000 – வட்டி ரூ 1,20,000 !

-

துரை அலங்காநல்லூர் காந்தி கிராமம் காலனியைச் சேர்ந்தவர் விவசாயக் கூலி தொழிலாளி சின்னான். அவருடைய மனைவியின் பெயர் பழனியம்மாள். இவர்களுக்கு தங்கப் பாண்டி, முத்துப்பாண்டி, பாண்டி ஆகிய 3 மகன்களும் முத்துலட்சுமி என்ற மகளும் உள்ளனர். வறுமை காரணமாக அவருடைய மூன்று மகன்களும் முறுக்கு கம்பெனியில் வேலை செய்ய ஆந்திரா போயிருக்கின்றனர். முத்துலட்சுமி புதுப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு சின்னான் உசிலம்பட்டி தாலுகாவிலுள்ள இ.நடுப்பட்டி காலனியில் ஒரு வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்துள்ளார். மூத்த மகன் தங்க பாண்டியின் திருமணத்திற்காக அதே பகுதியில் இருக்கும் கருத்தம்மாளிடம் ரூபாய்க்கு 5 பைசா வட்டி வீதத்தில் ரூ.20 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அதற்கு வட்டியாக மாதா மாதம் ரூ 1,000 கட்டி வந்துள்ளார்.

உசிலம்பட்டியில் வேலை வாய்ப்புகள் குறையவே, மீண்டும் குடும்பத்துடன்  அலங்கா நல்லூருக்கே வந்து விட்டார். ஊரை விட்டு வந்து விட்டாலும், தொடர்ந்து மாத வட்டி ரூ.1,000த்துடன் கடன் வசூலிக்க வருபவரின் போக்குவரத்து செலவாக ரூ 200ம் கொடுத்து வந்திருக்கின்றனர். கருத்தம்மாளின் உறவினர் “நோட்டு” செல்வம் தான் ஊருக்கு வந்து வசூல்செய்து விட்டு செல்வது வழக்கமாம்.

கடந்த 4 மாதமாக வருமானம் மிகவும் குறைந்து விட வட்டி கட்ட முடியாமல் போய் உள்ளது. வட்டிப் பணத்தைக் கேட்டு சின்னான் குடும்பத்தை மிரட்டி வந்துள்ளனர் கடன்காரர்கள். பிப்ரவரி 9 ஆம் தேதி நிலக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சின்னானும் பழனியம்மாளும் 7ம் வகுப்பு படிக்கும் மகள் முத்துலட்சுமியுடன் சென்றுள்ளனர். அங்கு வந்து வட்டிப் பணத்தை கேட்டு மிரட்டிய கருத்தம்மாளும், நோட்டு செல்வமும் பணம் கிடைக்காத காரணத்தால் பெற்றோரின் கண் முன்னரே முத்துலட்சுமியை கடத்தி சென்றிருக்கின்றனர். இதைப் பற்றி போலீசில் புகார் தந்தால், மகளை கொன்று விடுவதாகவும் எச்சரித்துள்ளனர்.

எந்த ஆதரவும் இல்லாத சின்னானும் அவர் மனைவியும், மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று புகார் பதிவு செய்துள்ளனர். உசிலம்பட்டி போலீசார் பிப்ரவரி 12ம் தேதி உத்தப்பநாயக்கனூரில் உள்ள கருத்தமாள் வீட்டுக்கு முத்துலட்சுமியை மீட்டு கருத்தம்மாளை கைது செய்துள்ளனர்.

ரூ. 20,000 கடனுக்கு 10 ஆண்டுகளில் ரூ 1 லட்சத்துக்கும் அதிகமான தொகை ஒரு ஏழைக் குடும்பத்திடமிருந்து சூறையாடப்பட்டுள்ளது. மற்ற வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு விட்ட நிலையில் குடும்பத்தின் மூன்று ஆண் மகன்களும் கடன் தொல்லையை சமாளிக்க போக்க பக்கத்து மாநிலத்திற்கு சென்று செக்கு மாடுகளைப் போல் அடிமைகளாக உழைக்கின்றனர். ஒவ்வொரு நாளும் எண்ணெய் புகையிலும், நெருப்பு அனலிலும் உடலையும் உள்ளத்தையும் வாட்டிக் கொண்டு உழைக்கின்றனர்.

கிராமப் புறங்களில் விவசாயம் அழிக்கப்படுவதால் கோர வறுமையில் வீழ்ந்து உதிரி பாட்டாளிகளாக தூக்கி எறியப்பட்டுள்ள ஏழை விவசாயத் தொழிலாளிகள் இன்னொரு முனையில் கந்து வட்டி சுரண்டலை எதிர் கொள்கின்றனர்.

நிலையான வருமானம் இல்லாத நிலையில், அன்றாட உணவுக்கே போராட்டமான சூழலில் வீட்டு திருமணம், குழந்தைகளின் படிப்பு, திடீர் மருத்துவச் செலவு, இந்த தொல்லைகளிலிருந்தெல்லாம் விடுவிக்கும் என்ற நம்பிக்கையுடன் செய்யப்படும் வழிபாடுகளுக்கு கூட வட்டிக்கு கடன் வாங்கித்தான் செய்ய வேண்டியுள்ளது.

தேவையின் அடிப்படையில் வாங்கப்படும் இந்த கடன்களுக்கு ‘வட்டி எவ்வளவு, எப்படி திருப்பிக் கொடுக்கப் போகிறோம்., இன்னும் எவ்வளவு கஷ்டத்தில் மூழ்கப் போகிறோம்’ என்பதையெல்லாம் யோசிக்கும் நிலை அவர்களுக்கு இல்லை. பணம் கிடைத்தால் போதும், எப்படியும் உழைத்து கடனை அடைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் கடன் வாங்குகிறார்கள்.

வருமானம் நின்று விடும் போது எஞ்சியிருக்கும் மிச்ச சொச்ச நிலபுலன்கள், கையில் இருக்கும் உடைமைகளை விற்று, தேவைப்பட்டால் உடல் உறுப்புகளை விற்று, வாய்ப்பு கிடைத்தால் வாடகைத்தாயாக கர்ப்பப் பையை விற்று கடன்களை அடைக்க முயற்சிக்கின்றனர். குழந்தைகளை குழந்தை இல்லாதவர்களுக்கு தத்து கொடுத்தும், படிக்க வேண்டிய வயதில் வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு அனுப்பியும் சமாளிக்க முயற்சிக்கின்றனர். எல்லா முயற்சிகளும் தோற்றுப் போகும் போது குடும்பத்தோடு உயிரை போக்கிக் கொண்டு மானத்தை காக்க முயற்சிக்கிறார்கள்.

இதே நாட்டில்தான் பல ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் வைத்திருக்கும் மல்லையா போன்றவர்களிடம் கெஞ்சி கூத்தாடி கடனை அடைத்து விடும்படி கேட்டுக் கொள்கின்றன வங்கிகள்.

2003ல் கந்து வட்டி தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும் நாடெங்கும் கந்து வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீட் வட்டி, ரன் வட்டி என்ற கலர்கலராக மக்களை வாட்டும் கும்பல்கள் தடையின்றி இயங்கி கொண்டுதான் இருக்கின்றன. மக்களை சுரண்டி வதைத்து, கடனை வசூலிப்பதற்காக மிரட்டல், கடத்தல், சித்திரவதை போன்ற கிரிமினல் நடவடிக்கைகளிலும் இறங்கி தற்கொலைக்கு கூட தள்ளும் இந்த கும்பல்களை கட்டுப்படுத்த வக்கில்லாத அமைப்புதான் இந்த அரசு. கந்து வட்டி வாங்குவோருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ 30,000 அபராதம் என்றெல்லாம் எழுத்தில் இருந்தாலும் அதை துளியளவும் பொருட்படுத்தாமல் தமது தொழிலை செவ்வனே செய்து வருகின்றனர் பண முதலைகள். இவர்கள்தான் ஓட்டுக் கட்சிகளின் உள்ளூர் தளபதிகளாகவும் இருக்கிறார்கள்.

கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், அரசு வங்கிகள் மூலம் கிராமப் புற மக்களுக்கு கடன் அளிப்பது படிப்படியாக முடக்கப்பட்டு தனியார் மய தாராள மய கொள்கைகளே கொடிகட்டிப் பறக்கும் போது ஏழை மக்கள் தமது தேவைகளுக்கு தனிநபரிடம் கடன் வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், கடன் வாங்குவது தற்கொலைக்கு நிகரானது என்பதை இந்த செய்தி காட்டுகின்றது. நமது சமூக அமைப்பு ஏழைகளை இப்படித்தான் தற்கொலைக்கு தள்ளி வருகின்றது.

மேலும் படிக்க