privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்பட்ஜெட் 2013: மக்களை ஒடுக்க 2.60 இலட்சம் கோடி ரூபாய்!

பட்ஜெட் 2013: மக்களை ஒடுக்க 2.60 இலட்சம் கோடி ரூபாய்!

-

த்திய அரசின் 2013-ம் ஆண்டின் வரவு செலவு நிதிநிலை அறிக்கையில் பாதுகாப்புத் துறைக்கு மட்டும் ரூ. 2,03,672 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது மொத்த செலவினத்தில் சுமார் பத்து சதவீதம். சென்ற ஆண்டு திருத்திய மதிப்பீட்டின் படி ரூ. 1,93,407 கோடி ஒதுக்கப்பட்டது. நாட்டின் பாதுகாப்பை உத்தேசித்து கூடுதல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதே போல உள்துறை அமைச்சகத்துக்கு ரூ. 59,241 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் என்றால் ஏதோ சிவில் நிர்வாக வேலைகள் என்று நினைத்து விடாதீர்கள். இது முழுக்க முழுக்க துணை இராணுவ படைகளை நிர்வகிக்க மற்றும் மேம்படுத்த செலவிடப்படும் தொகையாகும்.

உள்துறைக்கு சென்ற ஆண்டை விட தற்போது 8% கூடுதலாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன் உள் ஒதுக்கீட்டை பார்ப்போம்.

  • படைவீரர்களின் குடியிருப்புகளுக்காக ரூ. 1,527 கோடி
  • மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு ரூ 10,496 கோடி
  • எல்லைப் பாதுகாப்புப் படைக்கு ரூ 9,811 கோடி
  • தேசிய புலனாய்வு அமைப்புக்கு ரூ 1,196 கோடி
  • உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தில்லி போலீசுக்கு ரூ 4,067 கோடி
  • இந்திய-திபெத்திய எல்லைப்படைக்கு ரூ 2,276 கோடி
  • அசாம் ரைஃபிள் படையினருக்கு ரூ 3,297 கோடி
    என பிரித்து ஒதுக்கப்பட்டிருக்கிறது.

காஷ்மீரில் ராணுவம்இப்படி சுமார் ரூ 60,000 கோடி மத்திய அரசின் துணை இராணுவ படைகளுக்கு ஒதுக்கப்பட்டு என்ன பயன்? காஷ்மீர், வடகிழக்கு, தண்டகாரண்யா என்று போராடும் மக்களை ஒடுக்கவே இந்தப்படைகள் இவ்வளவு செலவழித்து பராமரிக்கப்படுகின்றன. கல்வி, சுகாதாரம், விவசாயம், மானியங்களுக்கு ஒதுக்கீட்டை குறைக்கும் மத்திய அரசு இராணுவம், துணை இராணுவத்திற்கு மட்டும் மக்கள் பணத்தை அள்ளிக் கொடுக்கிறது. இந்த ஒதுக்கீடு ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

மாவோயிஸ்டுகள் மற்றும் மத்திய இந்தியாவின் பழங்குடி மக்களை ஒடுக்கவே மத்திய ரிசர்வ் போலிஸ் படை பயன்படுகிறது. இப்படி சொந்த நாட்டின் மக்களை ஒழித்து அங்கிருக்கும் கனிம வளத்தை பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் பணிக்கு நமது பணம் தண்ணீராய் செலவழிக்கப்படுகிறது. வடகிழக்கு மக்களை ஒடுக்கவே அசாம் ரைஃபிள் படை பயன்படுகிறது. தில்லியில் உள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள், வி.ஐ.பிக்களை பாதுகாப்பதுதான் தில்லி போலீசின் முக்கியமான பணி.

நாட்டில் வெடிக்கும் குண்டு வெடிப்புகளை வைத்து அப்பாவி முசுலீம் மக்களை ஒடுக்கத்தான் தேசிய புலனாய்வு அமைப்பு செயல்படுகிறது. இப்படி ஒட்டு மொத்தமாக உள்நாட்டு மக்களை ஒடுக்க நவீன படை, நவீன கருவிகள், பயிற்சி என்று பல ஆயிரம் கோடி ரூபாய் வீணடிக்கப்படுகிறது.

இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையில் ரூ 86, 741 கோடி மூலதனச் செலவு என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதன்படி ஹெலிகாப்டர் துவங்கி சவப்பெட்டி வரை வெளிநாடுகளில் வாங்குவார்கள். அதில் கணிசமான தொகை கமிஷனாக அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு சென்று விடும். இந்தியா இறக்குமதி செய்யும் இராணுவத் தளவாடங்களை வைத்தே மேற்கத்திய நாடுகளின் பல ஆயுதத் தொழிற்சாலைகள் சக்கை போடு போடுகின்றன.

துணை இராணுவப் படைகள் போக இராணுவமும் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் மக்கள் போராட்டத்தை ஒடுக்க இறக்கி விடப்பட்டுள்ளது. இவர்கள் அங்கே பாலியல் வன்புணர்ச்சி செய்தாலும்  கேள்வி கேட்க முடியாது, எவ்வளவு பணம் செலவழிக்கிறார்கள் என்பதையும் கணக்கு பார்க்க முடியாது.

ஆக, இந்த ஆண்டு இந்திய மக்களின் பணம் இரண்டு இலட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய் பாசிச அரசாக மாறிவரும் இந்திய அரசின் ஒடுக்குமுறைக்கு மொய் எழுதி தரப்பட்டிருக்கின்றது.