Saturday, May 10, 2025
முகப்புசெய்திதுணிகளின் மதிப்பு தொழிலாளிகளுக்கு இல்லை!

துணிகளின் மதிப்பு தொழிலாளிகளுக்கு இல்லை!

-

காராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தின் இச்சால்கரஞ்சியைச் சேர்ந்த விசைத் தறி தொழிலாளர்கள் 37 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்குப் பிறகு மாதம் ரூ 5,500 முதல் ரூ 6,000 வரை சம்பளமும், 8 மணி நேர ஷிப்டில் வேலை செய்யும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர்.

மகாராஷ்டிராவின் மான்செஸ்டர் எனப்படும் இச்சால்கரஞ்சியில் செயல்படும் 5,000 தொழிலகங்களில் 1.2 லட்சம் விசைத் தறிகள் உள்ளன. சுமார் 30,000 தொழிலாளர்கள் வேலை செய்யும் இந்த பகுதியில் ஒரு நாளைக்கு சுமார் ரூ 50 கோடி மதிப்புள்ள 1 கோடி மீட்டர் இழை (அதாவது ஒரு மீட்டருக்கு சராசரி விலை ரூ 50) உற்பத்தியாகிறது.

விசைத்தறி தொழிலாளர்
கோப்பு படம், நன்றி: பிசினஸ் லைன்

ஒரு தொழிலாளர் 12 மணி நேரம் வேலை செய்து ஒரு விசைத் தறியில் 40-43 மீட்டர் நீளமுள்ள இழையை உற்பத்தி செய்கிறார். அவ்வாறாக தினமும் 8 விசைத் தறிகளில் 12 மணி நேரம் வேலை செய்தால் மாதத்துக்கு ரூ 4,500 முதல் ரூ 5,000 வரை ஊதியம் கிடைத்து வந்தது. (40மீட்டர் x 8 விசைத்தறிகள் x 25 நாட்கள் = 8,000 மீட்டர் x ரூ 0.58= ரூ 4,640). உற்பத்தி அளவு குறைந்தாலோ, விடுமுறை எடுத்தாலோ வருமானமும் குறைந்து விடும்.

அனைத்து தொழிலாளர்களும் 12 மணி நேர ஷிப்டுகளில் வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். பெயரளவில் இருக்கும் தொழிலாளர் நலச் சட்டங்கள் எதையும் மதிக்காமல் இந்த தொழிலாளர்கள் சுரண்டப்பட்டிருக்கின்னறர்.

தினமும் 12 மணி நேர வேலை, ஒரே நேரத்தில் 8 விசைத் தறிகளை இயக்குதல், வேலை செய்த களைப்பு தீர்ந்து உடல் மீள்வதற்குள் மீண்டும் அடுத்த நாள் வேலை, உழைப்புக்கு தேவையான உணவுக்கு கூட போதாத வருமானம். இதற்கு நடுவில் குடும்பம், குழந்தைகள் வளர்ப்பு, கல்வி, மருத்துவம் என்று அனைத்து தேவைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பொறுத்து பொறுத்து முடியாத நிலையில் நிலையில் ஜனவரி 21 முதல் 30,000 தொழிலாளர்களும் அவர்களைச் சார்ந்திருக்கும் 15,000 குடும்பத்தினரும் அதிக கூலியும் முறைப்படுத்தப்பட்ட வேலைச் சூழலையும் கோரி வேலை நிறுத்தத்தை ஆரம்பித்தனர். துவக்கத்தில் இடதுசாரி யூனியன்கள் மட்டும் ஆதரித்த வேலை நிறுத்தம் பின்னர் அனைத்துக் கட்சி தொழிற்சங்கங்களின் ஆதரவையும் பெற்றது.

ஒரு மாதத்துக்கும் மேல் போராடிய பிறகு விசைத்தறி முதலாளிகள் 48.71 சதவீதம் கூலி உயர்வும், 28 ஆண்டுகளுக்குப் பிறகு 8 மணி நேர ஷிப்டுகளில் வேலை செய்யும் வாய்ப்பையும் கொடுப்பதாக ஒத்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது இனிமேல் 1 மீட்டர் இழைக்கு ரூ 0.87 கூலி கொடுக்கப்படும். தொடர்ந்து 12 மணி நேரம் வேலை செய்தால் மாதம் ரூ 8,000 முதல் ரூ 9,000 வரை சம்பாதிக்கலாம், 8 மணி நேரம்தான் வேலை செய்வேன் என்று யாராவது தீர்மானித்தால் அவருக்கு ரூ 5,500 முதல் ரூ 6,000 வரை மட்டுமே வருமானம் வரும்.

உடலையும் உயிரையும் சேர்த்துப் பிடித்து வைத்துக் கொள்வதற்கு தேவையான அடிப்படை சம்பளத்துக்கு கூட 37 நாட்கள் வேலை நிறுத்தம் செய்து போராட வேண்டியிருக்கிறது. 8 மணி நேர வேலை என்ற சட்டத்தில் இருக்கும் உரிமை 28 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நடைமுறையில் இந்த பற்றாக்குறை கூலியின் போதாமையால் அனைத்து தொழிலாளர்களும் மீண்டும் 12 மணி நேர வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

சம்பள உயர்வுகள், சலுகைகள், நலச் சட்டங்கள் எதுவும் உழைக்கும் மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு அளிக்கப் போவதில்லை. அவர்களது உடலையும், உழைப்பையும், உயிரையும் சுரண்டி கொழுக்கும் இந்த அமைப்பை தூக்கி எறிந்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் ஒரே வழி.

மேலும் படிக்க
Textile mill owners yield to striking workers demands

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க