Saturday, May 3, 2025
முகப்புஉலகம்ஈழம்ஈழம் : இந்தியாவைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்!

ஈழம் : இந்தியாவைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்!

-

1. சென்னை பச்சையப்பா கல்லூரி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அனுப்பிய செய்தி

லயோலா மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து பச்சையப்பா கல்லூரி மாணவர்களும் ஈழப் பிரச்சனையில் போராட்டத்தை முன்னெடுக்க முடிவு செய்தார்கள.

பச்சையப்பா கல்லூரிமார்ச் 12ம் தேதி வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல் செய்வதாக அறிவித்திருந்தார்கள். அதை அறிந்த கல்லூரி நிர்வாகம் தேர்வு நடைபெற இருந்த இரண்டாம் ஆண்டு மாணவர்களை தவிர மற்றவர்களுக்கு விடுமுறை அறிவித்து விட்டார்கள். காலையில் கல்லூரிக்கு வந்த மாணவர்களின் அடையாள அட்டைகளை சோதித்து 2ம் ஆண்டு மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்களை உள்ளே வர அனுமதிக்கவில்லை.

மாணவர்கள் வேறு வழிகளில் கல்லூரிக்குள் வந்து கூடினார்கள். சுமார் 11.15 மணிக்கு 300-400 மாணவர்கள் கல்லூரியிலிருந்து சாலையை நோக்கி முழக்கங்கள் எழுப்பியபடி வந்தார்கள்.

  • ஈழத்தமிழரின் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால் ஐ.நா. சபை தீர்வல்ல, மத்திய அரசும் தீர்வல்ல
    மாணவர்களாக ஒன்றிணைவோம், வீதியில் இறங்கி போராடுவோம்
  • இனவெறியன் ராஜபக்சேவைத் தண்டிக்க வக்கில்லாத ஜெனீவா தீர்மானத்தை நிராகரிப்போம்,
  • ஈழத் தமிழருக்கு எதிரான காங்கிரசு, பிஜேபி தேசிய கட்சிகளை விரட்டியடிப்போம்
  • ராஜபக்சே கும்பலை தண்டிக்க, இன அழிப்பு நடவடிக்கைகளை முறியடிக்க, ஈழத் தமிழின மக்களின் சுய நிர்ணய உரிமைகளை நிலைநாட்ட வீதியில் இறங்கி போராடுவோம்.
  • ஈழத்தின் துயரத்தை விலை பேசும் ஓட்டுக் கட்சிகளை புறக்கணிப்போம்.

காவல் துறை உதவி ஆணையர் உட்பட 15-20 போலீஸ் கல்லூரிக்குள் அழைக்கப்பட்டிருந்தார்கள். 5-6 டாடா சுமோ, 3 வஜ்ரா வண்டி, தடுப்பு அரண்களை வைத்துக் கொண்டு சுற்றி நிற்பது என்று மாணவர்கள் அச்சுறுத்த முயற்சித்தார்கள். கூடவே, சிலையை தாண்டி வெளியில் போக முடியாமல் கேட்டை மூடி விட்டார்கள். மாணவர்கள் பச்சையப்பன் சிலை அருகில் உட்கார்ந்தார்கள்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் ராஜா மாணவர்களிடம் உரை நிகழ்த்தினார். ஈழத் தமிழர் படுகொலை எப்படி நடந்தது என்பதை விளக்கியும், இந்திய அரசும் ஐ.நா. சபையும் மக்கள் மத்தியில் மோசடி கருத்துக்களை பரப்பி வருவதையும் அம்பலப்படுத்தி பேசினார். ‘இந்தி எதிர்ப்பு போராட்டம், தமிழீழ மக்களுக்கு ஆதரவான போராட்டங்கள், முத்துக் குமார் இறந்த போது சாலை மறியல் என்று அரசியல் பாரம்பரியமிக்க பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இப்போது போராட வேண்டும். ஜெனீவா தீர்மானம் என்பதே ஏமாற்று வேலை. இந்திய அரசும் வோட்டுக் கட்சிகளும் நாடகமாடுகிறார்கள். இனப் படுகொலையை நடத்தியதில் இந்திய அரசுக்கும் ராணுவத்துக்கும் பங்கு இருக்கிறது. ஆனால், இப்போது நல்லவர்கள் போல நடிக்கிறார்கள். இதை நம்பக் கூடாது’ என்று சொன்னார்.

தோழர் பேசும் போது உளவுத் துறை போலீசின் தூண்டுதலின் பேரில் கல்லூரி முதல்வர்  நடு நடுவே இடைமறித்தார். “இன்றைக்கு பந்த் அறிவிச்சிருக்காங்க, ஏன் தேவையில்லாம பிரச்சனை பண்றீங்க” என்று தோழர்களை மிரட்டினார்.

2. திருச்சி சட்டக் கல்லூரி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அனுப்பிய செய்தி

தனி ஈழ கோரிக்கையை முன்வைத்து லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் போலீஸ் அவர்களை கைது செய்ததைக் கண்டித்தும், அமெரிக்கா, இந்தியா, இலங்கை போலித்தனத்தை அம்பலப்படுத்தியும் தனிஈழம் அமைய வேண்டும் என்றும் திருச்சி ஈ.வெ.ரா. கலை & அறிவிய்ல கல்லூரி மற்றும் திருச்சி சட்டக் கல்லூரியில் புமாஇமு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.