privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஈழம் : திருச்சியில் பு.மா.இ.மு. போராட்டங்கள்!

ஈழம் : திருச்சியில் பு.மா.இ.மு. போராட்டங்கள்!

-

ழத்தமிழின மக்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட….
இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சேவை தண்டிக்க….
மீண்டும் தமிழகத்தில் மக்கள் எழுச்சியை வெடிக்கச் செய்வோம்!

இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு சிங்கள இனவெறி அரசால் ஈழத் தமிழ் மக்களின் மீது தொடுக்கப்பட்ட இன அழிப்புப் போருக்கு எதிராக தமிழகம் அன்று கொதித்தெழுந்தது. ஆனால், இந்திய அரசோ அந்த இனப் படுகொலை யுத்தத்தை வழிகாட்டி இயக்கியது. இந்திய அரசின் இந்த அணுகுமுறையை எதிர்த்து தமிழக மாணவர்கள் அன்று போராட்டக் களத்தில் முன்னணியில் நின்றனர்.

இன்று ஈழ இன அழிப்பு யுத்தம் தொடர்பான ஆவணங்கள் நாளுக்கொன்றாய் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மீண்டும் தமிழகம் ஒரு மாணவர் எழுச்சியைக் காண தயாராகிறது என்பதை சமீப நாட்களாக நடந்து வரும் போராட்டங்கள் எடுத்துக் காட்டுவதாய் உள்ளன. இனப் படுகொலை தொடர்பாக ராஜபக்சே மீது ராஜபக்சேவையே விசாரணை நடத்தச் சொல்லும் ஐ.நா.சபையின் கபட நாடகத்துக்கு இனப்படுகொலையை வழிநடத்திய மன்மோகன் அரசிடமே ஜெனீவாவில் தீர்மானம் கொண்டுவரக் கோருவது ஏமாற்று வேலையே. உலக பயங்கரவாதி அமெரிக்காவையும் அதன் எடுபிடி நாடுகளையம் ‘சர்வதேச சமூகம்’ என்று கொண்டாடுவதும் அவர்களிடமே இனப்படுகொலைக்கு நீதி கேட்பதும் கேலிக் கூத்தாகும். பிரபாகரனின் மகன் மட்டுமல்ல பிரபாகரனும் சிங்கள ராணுவத்தால் அநீதியான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழர் உரிமைக்காக குரல் கொடுக்கும் சிலர் பிரபாகரனின் பிம்பத்தை பாதுகாப்பதற்காக அவர் கொல்லப்பட்டதை மறைக்க முயல்கின்றனர். இது சிங்கள இனவெறி அரசு மற்றும் ராஜபக்சேவை போர்க் குற்றத்திலிருந்து தப்பிக்கவே வழிவகுக்கும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

போர்க் குற்றவாளி ராஜபக்சேவை தண்டிக்க இந்திய அரசை ஒத்துழைக்கக் கோருவது ‘கொக்கு தலையில் வெண்ணெய் வைக்கும் கதை’யாகவே முடியும். எனவே ஈழத்தின் துயரத்தை விலை பேசும் காங்கிரசு, பாரதீய ஜனதா, வலது-இடது போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட தேசியக் கட்சிகள் முதல் டெசோ அமைப்பைத் தொடங்கி நாடகமாடும் கருணாநிதி, திடீர் ஈழத்தாயாக அவதாரமெடுத்திருக்கும் ஜெயலலிதா வரை அனைவரும் ஈழ விடுதலையின் எதிரிகளே! இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சே கும்பலை தண்டிக்க சிங்கள குடியேற்றம்-இராணுவ ஆக்கிரமிப்பு உள்ளிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை முறியடிக்க ஈழத்தமிழின மக்களின் சுய நிர்ணய உரிமையை நிலைநாட்ட குறுக்குவழி தீர்வு எதுவும் இல்லை.

  • ஈழத்தமிழன படுகொலைக்கு நீதிகேட்டு ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும் பங்காளி அய்.நா-வுக்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்!
  • நூரம்பர்க் போர்க் குற்ற விசாரணையைப் போன்றதொரு விசாரணையைத் தவிர வேறு எதையும் ஏற்க மறுப்போம்!
  • தமிழகத்தின் வீதிகளில் மீண்டும் மக்கள் எழுச்சியை தோற்றுவிப்போம்!.

என்ற முழக்கத்தின் அடிப்படையில் திருச்சியில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பில் மார்ச் 13, 2013 அன்று போராட்டங்கள் நடைபெற்றன.

பெரியார் ஈ.வெ.ரா.கல்லூரியில் காலை உள்ளிருப்பு போராட்டம் நடத்த புமாஇமு தோழர்கள் தப்படித்து, வகுப்புவாரியாக சென்று அணி திரட்டினர். இதையறிந்த கல்லூரி நிர்வாகம், ‘கல்லூரியில் நிகழ்ச்சி நடத்த இருக்கிறோம். அதனால் 3 நாட்கள் வரை எந்த போராட்டமும் வேண்டாம் நிறுத்திவிடுங்கள் என்று கோரியது’. ஆனால், தோழர்கள் அதை ஏற்கவில்லை. இரண்டு மணி நேரம் மட்டும்தான் நடத்திக் கொள்கிறோம் எனக் கூறியும் நிர்வாகம் அனுமதி தரவில்லை. உடனே பு.மா.இ.மு. கிளைத் தோழர்கள் 10பேர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைப் பார்த்த மாணவர்கள் 20பேர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். அதன்பிறகு போராட்டம் மாலை வரை தொடர்ந்து நடைபெற்றது.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலை சட்டக்கல்லூரி மாணவர்கள் டோல்கேட் பகுதியில் ராஜபக்சே, மன்மோகன் கொடும்பாவியை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். சுமார் 60பேர் கலந்து கொண்ட இப்போராட்டத்தில் சட்டக்கல்லூரி பு.மா.இ.மு கிளை இணைச்செயலர் சாருவாகன் உட்பட முன்னணியாளர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதன்பிறகு இன்று மதியம் சுமார் 3.30 மணியளவில் கைது செய்யப்பட்ட 8பேரை விடுவிக்கக் கோரியும் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தியும் அதே டோல்கேட் பகுதியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 150பேர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். நகரின் முக்கியமான 4 வழி சாலையை மறித்து மாணவர்கள் போராடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட 8பேரை இதே இடத்தில் கொண்டு வந்து விடவேண்டும் என மாணவர்கள் கூறியதையடுத்து அடுத்த அரை மணி நேரத்தில் தோழர்கள் 8பேர் விடுவிக்கப்பட்டனர். இதன்பிறகும் போராட்டத்தை முடிக்காமல் தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி மறியலை நடத்தினர்.உளவுப்பிரிவை சேர்ந்த போலீசார்கள் மாணவர்கள் போராட்டத்தை திசைதிருப்பவும், நீர்த்துப்போகச் செய்யவும் மேற்கொண்ட முயற்சிகளை மாணவர்களே முறியடித்து வெற்றிகரமாக நடத்தினர். மாணவர்களின் உற்சாகத்தையும், போர்க் குணத்தையும் தூண்டும் வகையில் புமாஇமு தோழர் தப்படித்தது மாணவர்களை மேலும் உணர்வூட்டியது. போராட்டத்தை வீரியமடைய வைத்தது. கற்களையும், சாலை தடுப்பரண்களையும் வைத்து சாலையை மறித்து, மாணவர்களே போராட்டத்தை தங்களுக்குள் ஒற்றுமையுடன் ஒருங்கிணைத்து சிறப்பான விஷயமாகும். கூடிநின்ற பொதுமக்கள் மத்தியில் கோரிக்கையை விளக்கியும், போராட்டத்தை விளக்கியும் சட்டக்கல்லூரி கிளைத் தோழர்கள் பேசினர். இதற்கு பொதுமக்களும் நல்ல ஆதரவு தெரிவித்தனர். சிலிண்டர் போடும் ஒருவரும் கூட்டத்தில் மாணவர்களுடன் சேர்ந்து முழக்கமிட்டார். மாணவர்களின் இப்போராட்டம் வீரியமாக சென்றதை ஒட்டி சன் டி.வி, புதிய தலைமுறை போன்ற சேனல்கள் போராட்டத்தை நேரடியாக ஒளிபரப்பி பேட்டியெடுத்தனர்.  போலீசார் பலர் குவிக்கபட்டிருந்தும்ர மாணவர்களின் போராட்டத்தை தடுக்க முடியவில்லை. அனைவரும் கைகட்டி நின்று வேடிக்கை பார்க்கும் அளவுக்கு போராட்டத்தின் வீரியம் இருந்தது. இந்த போராட்டம் சுமார் 2மணிநேரம் நடைபெற்றது.

திருச்சி காட்டூர் உருமு தனலெட்சுமி கல்லூரியில் இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர். சுமார் 200பேர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் திருச்சி புமா.இமு அமைப்பு கமிட்டி உறுப்பினர் மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து பேசியதோடு, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், இப்பிரச்சினையில் நமது அரசியல் நிலைப்பாட்டையும் விளக்கி பேசினார். வேறு எந்த அரசியல் கட்சிகளையம் மாணவர் அமைப்புகளையும் கல்லூரிக்குள் அனுமதிக்காத நிலையில் நம்மை மட்டும் அனுமதித்து மாணவர்களிடையே போராட்டக் களத்தில் பேச அனுமதித்தனர்.

பு.மா.இ.மு. சார்பாக தொடர்ந்து தொடர் போராட்டங்களை மேற்கொள்ள இருக்கிறோம். பாரதிதாசன் பல்கலைக் கழகத்திலும் போராட்டத்தை முன்னின்று நடத்த, மாணவர்களை சந்தித்து பேச அழைப்பு விடுத்துள்ளனர்.

  1. // நூரம்பர்க் போர்க் குற்ற விசாரணையைப் போன்றதொரு விசாரணையைத் தவிர வேறு எதையும் ஏற்க மறுப்போம்! //

    இது போன்ற சர்வதேச குற்ற விசாரணைதான் நீதியை பெற்றுத் தரும்..

    கூடவே தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்புக்காகவும் தோழர்கள் போராடவேண்டும்..
    பெரும்பாலான சிங்கள ஜனநாயக சக்திகள் இலங்கையின் யதார்த்தத்தை உணர்ந்து தமிழீழத்தை ஆதரிக்கிறார்களே.. நடுநிலையான தமிழீழம், சிங்கள உழைக்கும் மக்களுக்கு ஆதரவான ஒன்றாகவே இருக்கும்..

    • //நடுநிலையான தமிழீழம், சிங்கள உழைக்கும் மக்களுக்கு ஆதரவான ஒன்றாகவே இருக்கும்..//

      தமிழீழத்தில் இருக்கும் உயர் வகுப்புனர்கள் சிங்களக் காடையர்களுடன் இணைய விடுவார்களா

      • ஜனநாயகத் தமிழீழம், ‘ஜனநாயக’ இலங்கையைவிடவா தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கப் போகிறது..?!

  2. சாதாரண தமிழக மக்கள் மிகப்பலருக்கு ராஜபக்ச யார் என்று கூட தெரியாது. தமிழகத்தின் மெத்தப்படித்த அதிமேதாவிகளுக்கு கூட இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழருக்கும் அத்தீவின் வடகிழக்கில் பாரம்பரியமாக வாழும் ஈழத்தமிழருக்கும் உள்ள வேறுபாடு தெரியாது. இன்னொரு நாட்டுக்கு டீ எஸ்டேட்டில் வேலை செய்யப்போனவர்கள், பஞ்சம் பிழைக்கப்போனவர்கள் எப்படி தனி நாடு கேட்டு போராடலாம் என கேட்கிறார்கள். நான் உரையாடியவர்களில் மிகப்பெரும்பாலானோர் இம்மாதிரியான அறியாமையைத்தான் கொண்டிருக்கிறார்கள். ரொம்பவும் சலிப்பாக இருக்கிறது. இப்போது போராட்டத்தில் குதித்திருக்கும் கல்லூரி மாணவர்களும் (அனைவரும் அல்ல) இந்த விடயத்தில் இதே மாதிரியான தற்குறிகள் தான். (ஏதோ ஆர்வக்கோளாறில் போராட்டத்தில் இறங்கி விட்டார்கள்) இந்த அறியாமையை போக்கினால் ஒழிய ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக மக்களிடத்தில் மிகப்பெரிய மாற்றமும் விழிப்புணர்வும் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. புரட்சிகர அமைப்புக்கள், விவரம் தெரிந்த மாணவர்கள், தமிழ் அமைப்பினர் ஆகியோர் ஈழத்தமிழர் வரலாறு, அவர்களின் யாழ்ப்பாண ராச்சியம் குறித்த வரலாறு, ஈழத்தமிழருக்கும் இந்திய வம்சாவழி தமிழருக்கும் உள்ள வேறுபாடு, பிரச்சினைக்கான காரணங்கள் ஆகியவற்றை மற்றவர்களுக்கு விளக்கி பிரச்சாரம் செய்யவேண்டும். பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் குறிப்பாக பேருந்துகளில் கல்லூரி மாணவர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும். மற்ற மாணவர்களுக்கும் தெரியப்படுத்தலாம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேசுவது பொது மக்களிடம் நன்றாக எடுபடுவதை கண்டிருக்கிறேன். தமிழ் அமைப்பினர் ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ஒரு வீடு பாக்கியில்லாமல் பிரச்சாரம் செய்ய வேண்டும். அறிவியல் மிகவும் வளர்ந்துள்ள இக்காலத்தில் சாதனங்களை பயன்படுத்தி கருத்தரங்கம், கலந்துரையாடல், பிரச்சாரம் ஆகியவற்றை செய்யலாம். இப்போது போராடும் மாணவர்கள் பெரும்பாலும் சட்ட மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளையும் புலங்களையும் சேர்ந்தவர்களே. இது போதாது. சட்டக்கல்லூரி மாணவர்களை பற்றி பொது மக்களுக்கு நல்ல எண்ணம் இல்லை. எப்போதும் கல்லூரிக்குள் ரகளை செய்பவர்கள், சாதி மோதலில் ஈடுபடுபவர்கள் என்னும் எண்ணம் உள்ளது. இந்த போராட்டத்தில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் ஏன் பங்கெடுக்கவில்லை? அவர்கள் தமிழர்கள் இல்லையா? அவர்களையும் இழுத்து வரவேண்டும். தமிழகத்தை சேர்ந்த புத்திஜீவிகளிடம் (மெத்தப்படித்த அறிவாளிகள், அரசு அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், தொழில் அதிபர்கள், பண செல்வாக்கு கொண்டவர்கள், மருத்துவர்கள், பொறியியல் வல்லுனர்கள், உயர்கல்வி பயிலும் மாணவர்கள், தமிழ் நாட்டிலிருந்து வெளிநாட்டில் குடியேறிய தமிழர்கள் ஆகியோர்) பிரச்சாரம் செய்து ஆதரவை அணுகி பெறுவதும் இன்றிமையாதது. இலங்கை தமிழ்நாட்டை விட சிறிய நிலப்பரப்பு. ஆனால் அது இறையாண்மை கொண்ட தனி நாடு. அதனால் தான் வெறும் ஒன்றரை கோடி சிங்களர்களும் அவர்களின் அரசும் எட்டு கோடி எண்ணிக்கையில் உள்ள தமிழ் மக்களை துச்சமாக எண்ணி இன அழிப்பை மேற்கொள்ள முடிகிறது. இந்திய அரசும் தமிழ் நாட்டை உதாசீனப்படுத்தி விட்டு சிங்கள அரசை தாஜா செய்கிறது. தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே உலகம் கவனிக்கும். சம்பந்தப்பட்டவர்கள் இதை கவனிப்பார்களா என தெரியவில்லை.

  3. இங்கே சலனன் என்ற நண்பர் குறிப்பிட்டிருக்கும் விஷயம் உண்மை தான். மாணவர்களிலேயே கணிசமானவர்களுக்கு ஏன் பிற மாணவர்கள் போராடுகிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு இஞ்சினியரிங் கல்லூரி மாணவனிடம் உரையாடிய போது, ‘எதுக்கு சார் போராடறாங்க? லேப்டாப் இன்னும் கொடுக்கலையா?’ என்று அப்பாவித்தனமாக கேட்டார்.

    கல்லூரியில் விடுமுறை குறித்த அறிவிப்பை ஆசிரியர்களை அழைத்து கல்லூரி முதல்வர் வெளியிட்ட போது ஒரு வார்த்தை கூட எந்த பிரச்சினைக்காக இந்த போராட்டம் நடைபெறுகிறது என்று சொல்ல துணியவில்லை. இது கூட போகட்டும். இந்த விடுமுறை காலத்தில் ஆசிரியர்களுக்கான சுற்றுலா ஓன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் பங்கெடுக்க விரும்புவோர் பெயர் கொடுக்கலாம் என்றும் staff meeting –ல் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். டூர் ஒரு நாளாக இருக்க வேண்டாம்; குறைந்தது இரண்டு நாளாவது இருக்க வேண்டும் என்று ‘ஆசிரியப் பெருந்தகைகளிடமிருந்து’ எழுந்த கோரிக்கையை என்னென்பது. வெளியே உண்ணாமல், நீர் அருந்தாமல் மாணவக் கண்மணிகள் போராடிக் கொண்டிருப்பதை கொஞ்சம் மனக்கண்ணில் நிறுத்துங்கள்.

    தமிழாசிரியர்களிடம் ஈழப் போராட்ட நியாயம் சற்று இனவாத வடிவில் இருக்கிறது. மற்ற பெரும்பலோரிடத்தில் அது மரத்து உள்ளது. இதில் எந்த கொள்ளியை எடுத்து தலையை சொறிந்து கொள்வது? ஒரு பெண் ‘பேராசிரியர்’ ஏன், சார் ? அவ்ளோ பேர் செத்துப் போயிருக்காங்க! ஒரு பையனின் இறப்புக்கு மட்டும் இவ்ளோ பிரச்சினை, என்றாரே பார்க்கலாம். நான் 2008 இல் சி.பி.ஐ கட்சி, காந்தி பிறந்த நாளில் தொடங்கி வைத்த போராட்டம், முத்துக் குமார் தற்கொலை போராட்டம், அதனால் ஏற்பட்ட எழுச்சி, 2009 படுகொலைகள், தமிழ் நெஞ்செங்களில் கனன்று கொண்டிருந்த போராட்டக் கனல், எல்லாவற்ற்கும் மேலாக இந்த படம் விசேசமாக ஏற்படுத்திய பாதிப்பு என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, அவ்வப்போது ஓ, ஓ என்று சொல்ல மட்டும் வாய் திறந்தார்.

    ஆண்களில் பார்ப்பன பேராசிரியர்கள், மற்றவர்கள் கருணாநிதியை கரித்துக் கொட்டுவதை ரசித்துக் கொண்டிருந்தார்கள். ஈழத்திற்காக குரல் கொடுப்பவர்கள், காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய கோரிக்கைக்கு பெரும்பாலும் எதிராக இருப்பது அவர்களின் பிளவுபட்ட மனசாட்சியை காட்டுவதாக ஒரு சூடான விவாதத்தில் குறிப்பிட்டதற்காக ஒரு தமிழ்ப்பேராசிரியர் என்னிடம் கா விட்டுக் கொண்டார். சன் நியூசில் விவாத நேரத்தில் பேசும் மாணவர்கள் இவர்களை விட நியாயமாக பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

  4. உஙகள் கருத்து உண்மைதான் ஆசிரியன் அவர்களே ! பெரும்பாலான மாணவர்கள், ஏன் பொது மக்கள் கூட எந்த போராட்டத்தையும் கண்டு கொள்வதில்லை! விடுமுறையை சந்தோஷமாக டி வி கிரிகெட் என்று கொண்டாடி மகிழ்கிறார்கள்! இந்த பொருப்பற்ற தன்மையை, மாற்றவாவது மாண்வர் எழிச்சி பயன்படட்டும்! உண்மையை அறிந்து கொள்ள துடிக்கும் சாதாரண உந்துதல் கூட இல்லை! டெசொ அமைப்பை விமரிசனம் செய்தவர்களே, மாணவர் போராட்டத்தையும் எதிர்க்கிரார்கள்! இடையில் ஆதரிப்பது போல்நுழையும் குள்ளநரிகள் இதை வெறும் கருணானிதி எதிர்ப்புடன் முடித்துவிடலாம் என பால் குடிக்கிறார்கள்!

Leave a Reply to அம்பி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க