privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்சன் டிவி: சிக்கிய ராஜாவை வைத்து சிக்காத ராஜாக்களைப் பிடிப்போம்!

சன் டிவி: சிக்கிய ராஜாவை வைத்து சிக்காத ராஜாக்களைப் பிடிப்போம்!

-

சன் டிவி ராஜா
சன் நியூஸ் புள்ளி ராஜா. படம்: சவுக்கு

சன் நியூஸ் தொலைகாட்சியின் ஆசிரியர் ராஜா வாசுதேவன், ஒரு பாலியல் குற்றச்சாட்டில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறார். அந்த டி.வி.யின் செய்தி வாசிப்பாளர் அகிலா என்ற பெண் கொடுத்த புகாரில் இந்த கைது நடந்திருக்கிறது. இது பத்தோடு பதினொன்றாக வந்து செல்லும் பாலியல் குற்றச்சாட்டு அல்ல. ஊருக்கெல்லாம் உபதேசிக்கும் ஊடகங்களின் யோக்கியதையை அப்பட்டமாக வெளியே கொண்டு வந்திருக்கிறது இந்தப் புகார்.

இதில் சிக்கி அம்பலப்பட்டிருக்கும் ராஜாவை தாங்கிப் பிடிக்கவும், காப்பாற்றவும் ஏராளமானோர் முயல்கின்றனர். ஆனால் எந்தவித பின்னணியும் இல்லாமல் தன் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் அத்துமீறலுக்கு எதிராக மாபெரும் ஊடக சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்து தன்னந்தனியாக போராடிக் கொண்டிருக்கிறார் அகிலா. இந்த நிலையில் இந்தப் பிரச்னையின் பன்முகப் பரிமாணங்களையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

சன் நியூஸ் தொலைகாட்சிதான் தமிழ்நாட்டின் முதல் 24 மணி நேர செய்தி சேனல். ஆரம்ப காலத்தில் இருந்து இதற்கு ஆசிரியராக செயல்பட்டு வரும் ராஜா வாசுதேவன் குறித்து தமிழ் ஊடகங்களில் இயங்கும் யாரும் அறிந்திராமல் இருக்க முடியாது. ராஜா என்ற பெயர் ஊடகவியலாளர்கள் மத்தியில் பிரபலம். தன்னிடம் வேலை பார்க்கும் நிருபர்களை, உதவி ஆசிரியர்களை, ஒளிப்பதிவாளர்களை எல்லோருக்கும் மத்தியில் கேவலமாக திட்டுவதிலும், அசிங்கப்படுத்துவதிலும் ராஜா கை தேர்ந்தவர். அதை தனது ஸ்டைலாகவே நிலைநாட்டிக் கொண்டவர். தன்னுடைய தகுதிக் குறைபாடுகளை மறைப்பதற்காகவே அவர் இவ்வாறு நடந்துகொள்கிறார் என்பது பலருக்கு புரிந்தாலும் அவரை எதிர்த்துப் பேச அங்கு ஆள் இல்லை. அவரது செல்வாக்கு அப்படி.

சன் டிவிக்கு முன் “பூமாலை” வீடியோ இதழ் நடத்தி வந்த காலத்தில் இருந்தே மாறன் சகோதரர்களுடன் இருக்கும் ராஜா நினைத்தால் யாரையும் வேலைக்கு வைத்திருக்க முடியும், தூக்கியெறிய முடியும். இவரது மனிதத் தன்மையற்ற செயல்களால் வேலை இழந்தவர்கள் ஏராளம். இது ராஜா என்ற தனிநபரின் குணாதிசயம் மட்டுமல்ல. சன் டிவி நிறுவனமே ஊழியர்களை கொத்தடிமைகளாக நடத்தும் “நாட்டாமை” நிறுவனம்தான்.

வெளித்தோற்றத்துக்கு பல்லடுக்கு கார்ப்பரேட் அலுவலம் போலத் தோற்றமளிக்கும் சன் டி.வி., நெட்டுக்குத்தாக நிற்கும் ஒரு  டீ எஸ்டேட். அங்கே பணியாற்றுபவர்களின் உடை நவ நாகரீகமாக இருந்தாலும்,  உத்தியோகம் கங்காணி வேலை அல்லது அடிமைப் பணிதான்.  ஆணோ பெண்ணோ நீங்கள் யாராக இருந்தாலும், தலைமையில் உள்ளவரை காக்கா பிடித்தால்தான் வேலையில் பிரச்னை இல்லாமல் தொடர முடியும். தனிநபர்களின் விருப்பங்களும், செல்வாக்குமே அந்த தொலைகாட்சியை இயக்குகின்றன. மேல் அதிகாரி, தனக்கும் கீழ் உள்ளவரை கைநீட்டி அடிப்பது எல்லாம் கூட அவ்வப்போது நடக்கும். சம்பளத்தை பொருத்தவரை மிக, மிக குறைவான ஊதியம்தான். இந்த சென்னை நகரில் 7 ஆயிரம் மாதச் சம்பளம் வாங்குபவர்கள் அங்கு உண்டு. 20 ஆயிரம் ரூபாய் என்பது சன் டி.வி.யில் மிகப்பெரிய சம்பளம்.

வெளியே கார்ப்பரேட்தனம்; உள்ளே பண்ணையார்தனம்’ என்ற இந்த சிஸ்டம் பல கோடிகளை மிச்சம் பிடித்துத் தருவதால் கலாநிதிமாறன் விரும்பியே இதை அனுமதித்திருக்கிறார். இந்த வேலையை அவருக்கு சரியாக செய்து தரும் பொருட்டு, சன் நெட்வொர்க்கின் ஒவ்வொரு சேனலுக்கும் ஒரு கங்காணி இருக்கிறார். அந்த வகையில் சன் நியூஸ் சேனலின் கங்காணிதான் இந்த ராஜா.

ராஜா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் ஒரு வதந்தி போல அவ்வப்போது வந்து செல்வதுண்டு. அவை புகாராகவோ, வழக்காகவோ இதுவரை மாறியதில்லை. செய்தி வாசிப்பாளர் அகிலா இந்த திருட்டுப் பூனைக்கு மணி கட்டியிருக்கிறார்.

கீழ் நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தை சேர்ந்த ஏழைப் பெண்ணான அகிலா, சன் நியூஸ் தொலைகாட்சியில் வேலைக்குச் சேர்ந்து ஏறக்குறைய ஓர் ஆண்டுகாலம் ஆகிறது. மணவிலக்கு வழக்கு நிலுவையில் உள்ள,  ஓர் ஆண் குழந்தையை வைத்திருக்கும் அகிலாவின் குடும்ப சூழலை நேர்முகத்தேர்வின் போதே தெளிவாக கேட்டுத் தெரிந்துகொண்ட ராஜா, அதன்பிறகு பொருத்தமான சந்தர்ப்பம் பார்த்து வக்கிரத்திற்கு நூல் விடுகிறார். எல்லோரிடமும் இஞ்சி தின்ற குரங்கு போல காரணமே இல்லாமல் சிடுசிடுக்கும் அவர், அகிலாவிடம் ஒரு விடலைப் பையனைப் போல வழிகிறார். இவை அனைத்தும் அந்தப் பெண்ணால் ஒலிப்பதிவு செய்யப்பட்டு புகாருடன் கொடுக்கப்பட்டுள்ளன. (சவுக்கு இணையதளத்தில் இதன் ஆடியோ பதிவை கேட்க முடியும்).

இந்தப் புகாரின் உண்மைத் தன்மை என்ன என்பதை போலீஸ் விசாரிக்கிறது. அது ஒரு பக்கம் நடக்கட்டும். ஆனால் ஒரு சாதாரண பாலியல் புகார் என்றாலே முந்திக்கொண்டு பரபரப்பை கிளப்பும் தமிழ்நாட்டு ஊடகங்கள் மிகப்பெரிய அதிகாரத்தில் இருக்கும் ஒரு நபர் மீதான ஆதாரப்பூர்வமான புகாரைப் பற்றி கண்டுகொள்ளவே இல்லை. குமுதம் ரிப்போர்ட்டர், தமிழக அரசியல், தினமலரின் திருச்சி பதிப்பு,           தி இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆகிய அச்சிதழ்கள் மட்டுமே இந்த செய்தியை வெளியிட்டன. அவர்களும் கூட பெண்ணின் நியாயத்தில் இருந்து அல்லாமல், ‘ராஜாவை அசிங்கப்படுத்த இது ஒரு வாய்ப்பு’ என்ற தங்களது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் கோணத்தில் இருந்து மட்டுமே செய்தியை வெளியிட்டார்கள். மாறன் சகோதரர்கள் மீதுள்ள கோபமும் இதை வெளியிடுவதற்கான முக்கியக் காரணம். ஒரே ஒருமுறை ஜெயா ப்ளஸ் தொலைகாட்சியில் இந்த செய்தி வெளியானது. அத்தோடு சரி.

மற்றபடி ‘தமிழ்நாட்டின் நாடித்துடிப்பு’ என்று பஞ்ச் டயலாக் பேசும் ஜூனியர் விகடன் உள்ளிட்ட விகடன் குழும இதழ்கள் ஒரு வார்த்தை கூட இதைப்பற்றி எழுதவில்லை. விகடன் டெலிவிஸ்டாஸின் சார்பாக சன் குழுமத்தில் வந்துகொண்டிருக்கும் சீரியல்கள், ஒவ்வொரு நாளும் லட்சங்களை அள்ளிக் கொட்டும்போது அவர்கள் நாடி எப்படித் துடிக்கும்?
சரி… இவர்களுக்கு நேரடி வர்த்தக நலன் இருக்கிறது, அதனால் எழுதவில்லை.

தினந்தந்தி, தினமணி, தினமலர், தி. ஹிண்டு, டைம்ஸ் ஆஃப் இண்டியா, நக்கீரன், டெக்கான் கிரானிக்கல் என வேறு யாரும் எழுதவில்லையே ஏன்? சன் நியூஸ் தொலைகாட்சியின் நேரடிப் போட்டியாளரான புதிய தலைமுறை தொலைகாட்சிக் கூட இந்த உண்மையை உலகுக்கு உரக்கச் சொல்லவில்லையே எதனால்? சன் குழுமத்தை அசிங்கப்படுத்த இது ஒரு நல்வாய்ப்பு என்றபோதிலும் ஜெயா டி.வி. அடக்கி வாசிப்பதற்கு என்ன காரணம்?

ஏனெனில் இவர்கள் கூட்டுக்களவாணிகள். “இன்று ராஜாவை பற்றி நாம் செய்தி வெளியிட்டால், நாளை நம் மீது ஒரு குற்றச்சாட்டு வரும்போது அவர்கள் செய்தி வெளியிடுவார்கள்”  என இவர்களின் ‘கூட்டு மனசாட்சி’ நினைக்கிறது. இதை, ‘ஒரு மீடியா பத்தி இன்னொரு மீடியாவுல நியூஸ் போடக்கூடாது. இது ஒரு எத்திக்ஸ்’ என்று அறம் பேசுகிறார்கள்.

“ஒரு திருடன் சக திருடனை காட்டிக் கொடுக்கக்கூடாது’ என்ற கட்டுப்பாடுதான் இவர்கள் கூறும் அறம். இன்று ராஜா சிக்கிக்கொண்டார். ஆனால் ஒவ்வொரு ஊடகத்திலும் சிக்காத ராஜாக்கள் பலபேர் இருக்கிறார்கள். அவர்களிடம் சிக்கி, பணியிடத்தில் கடும் தொந்தரவுகளுக்கு உள்ளாகி, அடுப்பங்கரைக்கே துரத்தப்பட்ட பெண்கள் எத்தனையோ பேர்.

ஊடகங்களின் மௌனத்தை மட்டுமல்ல… ஊடக கருத்து சொல்லிகளின் மௌனத்தையும் இங்கு நாம் அம்பலப்படுத்த வேண்டும். அ முதல் ஃ வரை அனைத்து பிரச்னைகளின் மீதும் ஆவேசமாக அறவுணர்ச்சிப் பொங்க கருத்து சொல்லும் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் ஒரு ஏழைப் பெண்ணுக்கு மிகப்பெரிய அதிகாரத்தினால் இழைக்கப்படும் அநீதி குறித்து எந்தக் கருத்தையும் சொல்லவில்லையே ஏன்? ‘நேர்படப்பேசு’ முதல் ‘விவாத மேடை’ வரை எல்லா இடங்களிலும் அவர் பேசும் கருத்துக்கு அவர் நேர்மையாக இருப்பாரேயானால் இந்த பாலியல் அத்துமீறல் குறித்து எழுதியிருக்க, பேசியிருக்க வேண்டும். இப்போதேனும் அதை செய்ய வேண்டும். மாணவர் போராட்டங்கள் குறித்து சன் நியூஸ் நேரலையில் பல மணி நேரம் உட்கார்ந்து கருத்து சொன்ன அ.மார்க்ஸ், அதே சன் நியூஸில் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்திருக்கும் அத்துமீறல் குறித்து ஒரு வார்த்தையும் எழுதவில்லை. இவர்கள் இருவர் மட்டுமல்ல… இவர்களைப் போன்ற பல நிலைய வித்வான்களும், வித்வான் வாய்ப்புக்கு காத்திருக்கும் அறிவு சீவிகளும் வாய் திறக்கவில்லை.

டாடாவுக்கு ‘கவிதை’ எழுதிய லீனா மணிமேகலையின் ‘கருத்து சுதந்திரத்திற்காக’ டாஸ்மாக் கடைகள் முதல் எல்லோ பேஜஸ் டைரக்டரி வரையிலான சகல இடங்களிலும் படைப்பாளிகளைச் சல்லடை போட்டு சலித்து கூட்டம் சேர்த்த கருத்துரிமைக் காவலர்கள்; ஜனநாயகம், மனித உரிமை, பெண்ணுரிமை உள்ளிட்ட சகலவிதமான உரிமைகளின் ஆசான்களும் அத்தாரிட்டிகளுமாகிய பீஷ்ம பிதாமகர்கள், துரோணாச்சாரிகள் .. எங்கே? அவர்களுடைய மவுனத்திற்கு காரணம் என்ன?

அதற்கு காரணம் அவர்களுடைய சுயநலமோ அடுத்த “படத்தில்” நமக்கு சான்ஸ் கிடைக்காமல் போய், தமிழகத்தின் முதல் பத்து அறிவுஜீவிகளில் ஒருவராக இல்லாமல் தொலைந்து போய்விடுவோமோ என்ற கவலையோ அல்ல. அவர்களுடைய மவுனத்துக்கு ஆழ்ந்த பொருள் இருக்கிறது. Greater common cause! அகிலா என்ற ஒரே ஒரு பெண்ணின் நியாயத்துக்காக அவசரப்பட்டு குரல் கொடுப்பதன் மூலம், ஈழத்தின் ஆயிரக்கணக்கான பெண்களுக்காகவும், அங்கே கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்காகவும் குரல் கொடுக்கும் வாய்ப்பை இழந்துவிடுவோமே என்ற கவலையின் காரணமாகத்தான் அவர்களால் தொண்டைக்குள்ளிருந்து வார்த்தையைத் துப்ப முடியவில்லை. ஒன்று பெரிதா ஆயிரம் பெரிதா என்று தீவிரமான ஆராய்ச்சியில் கடந்த சில நாட்களாகவே மூழ்கி, கடைசியில் ஆயிரம்தான் பெரிது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

இந்த இலட்சணத்தில் அரசியல்வாதிகள் மட்டமானவர்களாம். அறிவுசீவிகள் உத்தமர்களாம். பத்திரிகைகள், தொலைக்காட்சிகளின் தயவை நம்பி, அறிக்கை விட்டும், தொலைக்காட்சியில் மூஞ்சியைக் காட்டியும் தான் உயிரோடு இருப்பதை அன்றாடம் உறுதி செய்து கொள்ளவேண்டிய நிலையில் இருக்கும் எல்லா அரசியல்வாதிகளும் “ஊடகங்களின் மீதும் பத்திரிகை சுதந்திரத்தின் மீதும் பெருமதிப்பு வைத்திருப்பது” இதற்காகத்தான். தற்போது சன் டிவி புள்ளிராஜாவின் சுதந்திரமும் பத்திரிகை சுதந்திரத்திற்குள் வந்து விட்டது போலும்! எனவேதான் அறிவுஜீவிகள், இனமானக் காவலர்கள், புரட்சிப்புயல், உலகத்தமிழர் தலைவர்கள், தமிழ் மானத்தின் மொத்த குத்தகைதாரர்கள் மற்றும் உள் குத்தகைக்காரர்கள் உள்ளிட்ட யாரும் பேசவில்லை.

அமெரிக்கா முதல் ஆண்டிப்பட்டி வரை அநீதிகளை எதிர்த்து நாகரீகமாக அறிக்கை விடும் போலிக் கம்யூனிஸ்டுகள் எங்கே போனார்கள்? சிதம்பரம், வாச்சாத்தியில் உரிமைக்கு குரல் கொடுத்த வரலாறே நாங்கள்தான் என்று பொங்குபவர்கள் என்ன செய்கிறார்கள்? சன் டிவி என்றால் அத்தனை பயமா? இல்லை செய்தி அரங்கத்தில் நம்மையும் மதித்து முகம் காட்டுகிறார்களே என்ற நன்றி விசுவாசமா? ஆமென்றால் உங்கள் ஜனநாயக மாதர் சங்கத்தையும், சம்மேளனத்தையும் கலைத்து விடுங்கள்!

பத்திரிகையாளர்கள் சங்கம் என்ன செய்கிறது என்று தெரியவில்லை. பெண் பத்திரிகையாளர்களுக்கு வேறு தனி சங்கம் இருக்கிறதாம். இவர்கள் யாரும் ஏன் பேசவில்லை. பேசினாலே தங்கள் நிறுவனத்தில் தன்னை கட்டம் கட்டி விடுவார்கள் என்ற பயமா? அகிலாவும் இப்படி பயந்து பணிந்துவிடுவார் என்பதுதான் ராஜாவின் கணக்காக இருந்திருக்கிறது. தற்போது பத்திரிகையாளர் உலகில் நிலவும் மவுனத்தைப் பார்க்கும்போது, ராஜாவின் கணக்கில் தப்பில்லை என்றுதான் தோன்றுகிறது. அகிலாவின் விசயத்தில் மட்டும் ராஜாவின் கணக்கு பிசகிவிட்டது.

ஒருவேளை, ‘அந்தப் பெண் புகார் கொடுத்திருக்கிறார். அது உண்மையா, பொய்யா என்று தெரியாமல் எப்படி எழுதுவது?’ என கேட்கலாம். எனில், புகாரின் உண்மைத்தன்மை குறித்து யாரிடமேனும் விசாரித்தீர்களா? குறைந்தப்பட்சம் அந்தப் பெண்ணிடம் பேச முயன்றீர்களா? யாரும் எதையும் செய்யவில்லை. டெல்லியில் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமைக்காக இங்கே எழுந்த குரல்களில் ஒன்றை கூட இப்போது காணவில்லை. அரசு சலுகைகள் வாங்குவதற்கு மட்டுமே இயங்கும் பத்திரிகையாளர் சங்கங்கள், அகிலாவுக்கு ஆதரவாக சிறு முயற்சியையும் எடுக்கவில்லை.

அகிலா, என்ன தைரியத்தில் இப்போது புகார் கொடுத்திருக்கிறார்? அவருக்கு என்ன பின்னணி? எதுவுமில்லை. தன்னை துன்புறுத்தியவன் தண்டனை பெற வேண்டும் என்ற நியாயமான கோபம். தன்மான உணர்ச்சி. இதே கோபம் சக பத்திரிகையாளர்களாளுக்கும் வர வேண்டும். தமிழ் ஊடக உலகில் நிலவும் இந்த மோசமான மௌனம் கலைக்கப்பட்டாக வேண்டும். இப்படிப்பட்ட அச்சம் மிகுந்த மௌனமும், உதிரிகளாக பிரிந்துகிடக்கும் அவலமும்தான் ராஜா போன்ற ஊடகப் பொறுக்கிகளின் பலம். இதுதான் பத்திரிகை முதலாளிகளின் பலமும்.

இப்போது அகிலா தனித்துவிடப்பட்டிருக்கிறார். அவரது ஒழுக்கத்தை பற்றிய அவதூறுகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. ‘நான் எந்த தவறும் செய்யவில்லை. தவறிழைத்த பொறுக்கியின் மீது புகார் கொடுத்தேன். இதற்காக நான் ஏன் வேலைக்கு வராமல் இருக்க வேண்டும்?’ என்ற நியாயமான கோபத்துடன் மறுபடியும் வேலைக்குச் செல்லத் துவங்கியிருக்கிறார் அகிலா. ஆனால் முன்பே திட்டமிடப்பட்ட செய்தி வாசிப்பு அட்டவணையில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டிருக்கிறது. இப்போது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்துப் போடும் வகையில் நிபந்தனை ஜாமீன் பெற்றிருக்கும் ராஜா, இனிமேல் பழைய மாதிரி சன் நியூஸ் ஆசிரியராக செயல்படுவாரா, இல்லையா என்பது தெரியவில்லை. அது கலாநிதிமாறனின் ‘கருணயை’ப் பொருத்தது. ஒருவேளை ராஜா அலுவலகம் வந்தால் அப்போது என்னவும் நடக்கலாம். நிர்வாக ரீதியாக அகிலா வேறு ஊருக்கு பந்தாடப்படலாம் அல்லது மேலும் பல இன்னல்களுக்கு ஆளாகலாம்.

இது பொதுவாகப் பேசுவதற்கான தருணம் அல்ல. குறிப்பாக செயல்பட வேண்டிய தருணம். ராஜா என்ற நபரின் பாலியல் குற்றமாக மட்டும் இதனைப் பார்க்க கூடாது. இது தமிழகத்தின் ஊடக முதலாளித்துவ உலகம் நிலைநாட்டியிருக்கும் கொடுங்கோன்மையின் ஒரு வெளிப்பாடு. எங்கே தொழிற்சங்க உரிமைகளும், ஜனநாயக உரிமைகளும் உத்திரவாதம் செய்யப்பட்டிருக்கின்றனவோ அங்கே இத்தகைய தவறுகள் நடப்பதற்கான வாய்ப்பு வெகு வெகு குறைவு. எங்கே பத்திரிகையாளர்கள் உண்மையான பத்திரிகையாளர்களாக நடந்து கொள்கிறார்களோ அங்கே இத்தகைய இழிபிறவிகள் நடமாடுவதற்கான வாய்ப்பே அரிது.

பிழைப்புவாதம், காரியவாதம், தொழில் நேர்மையற்ற அடிமைத்தனம், அறிவையும் மனச்சான்றையும் சொந்த ஆதாயத்துக்காக எவ்வித தடுமாற்றமும் இன்றி அடகு வைக்கும் பண்பு, நிர்வாகத்தின் உத்தரவுக்கு ஏற்ப உண்மையை மாற்றி பொய் எழுதக் கூசாத கைகள், பத்திரிகை முதலாளியை வசனகர்த்தாவாகவும், பத்திரிகையாளனாகிய தன்னை வாயசைக்கும் நடிகனாகவும் கருதிக்கொள்வதற்கு சம்மதிக்கும் மனோபாவம் இவை எந்த அளவுக்கு பத்திரிகை உலகில் பண்பாட்டில் ஊடுறுவியிருக்கின்றதோ அந்த அளவுக்கு புள்ளி ராஜாக்களும் ஊடுறுவுவார்கள்.

அகிலா என்ற பெண் தொடங்கியிருக்கும் இந்தப்போராட்டத்தை தமிழகப் பத்திரிகையாளர்கள் உடனே பற்றிக் கொள்ளவேண்டும் என்று கோருகிறோம். ஒரு பெண்ணின் கவுரவப் பிரச்சினை என்ற எல்லையைத் தாண்டி பத்திரிகையாளர்கள் அனைவரின் கவுரவம், பணி சார்ந்த உரிமைகள் ஆகியவற்றை நிலைநாட்டிக் கொள்வதற்கான போராட்டமாக இதனை விரித்துச் சொல்ல முடியும்.

மற்றவர்களுக்காக காத்திருக்க வேண்டாம். பத்திரிகையாளர்களே கிளர்ந்தெழுங்கள்.

மேலும் படிக்க:

சவுக்கு கட்டுரை: குட்டி ஆடுகளும் குள்ளநரிகளும்.

 

  1. நீங்கள் இந்த பிரச்சனையில் கையில் எடுத்துக் கொண்டு,,,, சிறு பொறியை கொண்டு ஏன் போரட்டத்தை நடத்தக்கூடாது,,

    • ஆமா இவங்களுக்குத்தான் எந்த வேலையும் இல்லையே…இதுக்கு தமிழகம் முழுவதும் ஒரு எழுச்சிப்போராட்டம் நடத்தீட்டாப்போச்சு…போங்க சார் செளம்மா காமிடி பண்ணாம்ம…

  2. ஐயா ரொம்ப வருஷத்துக்கு முன்னமே நீங்க செஞ்சிருக்க வேண்டிய விஷயம்… ரொம்ப லேட்டா வந்திருந்தாலும் உங்ககிட்டேயிருந்து ஆதரவு தர்றது என்னைய மாதிரி ஒடுக்கப்பட்ட, ஆதரவற்ற ஊடகப் பெண்களுக்கு அவசியம்தாங்க. நான் இப்போ ஊடகத்துல இல்லீங்க. ஆனா நீங்க கட்டுரையில சொல்ற சாருங்களால பாதிக்கப்பட்டு மீடியாவை விட்டே ஓடிப்போன பல பெண்கள் நானும் ஒருத்தி. ‘பராசக்தி’ல கலைஞர் ஐயா எழுதின ஒரு ஃபேமஸான வசனம்தான் ஞாபகத்துக்கு வருது. ‘ஓடினாள், ஓடினாள்… வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்’னு வருமே… அந்த வசனம் எங்களைப் போல நேர்மையா, உண்மையா இருக்கணும்னு நினைக்கிற ஊடகப் பெண்களுக்கு ரொம்பவே பொருந்தும். சிறுபத்திரிகை, பெரும் பத்திரிகை, டிவி.ன்னு எல்லா விதமான மீடியாக்கள்லேயும் எங்களைத் தொறத்தறதுக்கு இவிங்க காத்திருக்காய்ங்க. எஸ்எம்எஸ் அனுப்பணும், நேரங்காலம் தெரியாம போன்ல கூப்ட நேரத்துக்கு பேசணும், பாத்ரூம் போறதுக்குக்கூட சாருங்ககிட்ட பர்மிஷன் வாங்கிட்டு போகணும், இதெல்லாம் ஸ்டெப்ஸ் எல்லாம் தாண்டி வந்தா வேலை ரீதியாகவும் அடுத்த கட்டத்துக்கு போகலாம். வேற ரீதியாகவும் அடுத்த கட்டத்துக்கு போகலாம். எழுதத்தெரியுமா? பத்திரிகை அறம் தெரியுமா? சரிப்பா…உனக்கு ஒரு பேட்டி எடுக்கத் தெரியுமான்னு சாருங்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது. சாருங்க வெச்ச டெஸ்ட் எல்லாம் பாஸ் பண்ணா நீங்க அடுத்தடுத்து போய்கிட்டே இருக்கலாம்.
    ஐயா எங்க குடும்பத்துல நான்தான் முதல்ல காலேஜ் வரைக்கும் படிச்ச பொண்ணு. பெரிய சாதியோ, அதிகாரம் உள்ள சாதியோ கிடையாது. பணமா? வாழ்க்கை ஃபுல்லா கடனாளிங்கதான். கடன் வாங்கித்தான் படிச்சேன். நல்ல எழுதறேன்னு தான் பத்திரிகைல வேலை கிடைச்சது. பத்திரிகைகாரி ஆகணும்னு எனக்கு எந்த லட்சியமும் கிடையாது. 15 வயசு வரைக்கும் பத்திரிகையே படிக்காத குடும்பத்திலிருந்த வர்றங்களுக்கு அந்த லட்சியம் எல்லாம் வராதுங்க. ஆனா நான் செய்ற வேலை எப்படிப்பட்டதுங்கற தெளிவு எனக்கு இருந்துச்சு. நேர்மையா இருந்தேன், எனக்கு வாய்ப்பு கிடைச்சவரைக்கும் ஒரு பொண்ணு எதையெல்லாம் எழுதமுடியாதுன்னு சொல்வாங்களோ அதையெல்லாம் எழுதினேன். ஆனா சாருங்களுக்கு அதெல்லாம் தேவையில்லாத விஷயம். சாருங்களுக்கு இணங்கி நடக்கலைன்னு பல சோதனைகள், பல வேதனைகள். எல்லாமே மறைமுகமான தாக்குதல்கள்தான். மனரீதியாக ஒடுக்கி, அடக்க நினைக்கிறது சாருங்களுக்கு கைவந்த கலை. இதுல புள்ளி ராஜா சாரு பண்ணதுதாங்க என்னைய மீடியாவைவிட்டே தொறத்தி விட்டது. என்னை ஆறு மாசம் சும்மாவே ஒக்காத்தி வெச்சு சம்பளம் கொடுத்த மவராசன் அவரு. ஏதோ போகட்டும்னு கொடுத்த வேலையிலேயும் எழுத்துப் பிழை, ஒற்றுப் பிழையெல்லாம் கண்டுபிடிச்சு கேப்பாரு பாருங்க அடுக்கடுக்கான கேள்வி… ஆத்தாடி! சாருக்கு ஒரு தப்புகூட வந்துடக்கூடாது அவ்வளவு தமிழ் பற்று. அதனாலதான் திராவிடப்பற்று உள்ள மற்ற பத்திரிகைகாரங்க அவரை காப்பாத்தி விடறாங்க போலிருக்கு. (ஈழப்பிரச்னைக்கு ஆதரவு கொடுத்த சாருங்க பத்து பொண்ணுங்க வாழ்க்கையை நாசம் பண்ணியிருந்தாலும் நாங்க தோள்கொடுத்து காப்போம்னு பல பத்திரிகை தோழர்கள் காப்பாத்துவாங்க. ஐயா தோழர் மாரே நாங்களும் தமிழச்சிங்கதான். அங்க சிங்களவன் எங்களைத் தொறத்தரான்னா, இங்க சாரு மாறு தொரத்தராங்க. அங்கேயும் நாங்க நாசமாப் போறோம், இங்கேயும் போறோம். எங்களுக்காகவும் கொஞ்சம் கருணைக் காட்டுங்க. உங்க கண்ணு, மனசு எல்லாத்தையும் கொஞ்சம் தொறந்து வையுங்க.)
    ஐயா எனக்கு அடிமேல் அடிபட்டு ஒரு கட்டத்துல சாதி, பணம், அதிகாரம் எந்த பின்னணியும் இல்லாத நாமா பத்திரிக்காரியா இருக்கவே முடியாதுன்னு முடிவு பண்ணிட்டு, சும்மா வேலைக்குன்னு போயிட்டு வந்துக்கிட்டிருந்தேன். சாருங்க நீ போய் மாடு மேய்ன்னு திட்டினாக்கூட சிரிச்சிக்கினேதான் நிப்பேன். சாருங்களைப் பார்த்து பல்லை இளிக்கறதுன்னு இதுக்கு அர்த்தம் எடுத்துக்காதீங்க. நீ எதுக்காக என்னை திட்டறேன்னு தெரியும்டாங்கிற திமிருதான். இந்த திமிருதாங்க என்னை பலப் பல ஊடக சாருங்கக்கிட்டேயிருந்து காப்பாத்துச்சு. ஆனா அப்பாவி பொண்ணுங்க என்ன பாடுபட்டாங்க தெரியுமா? எல்லார் முன்னாடியும் கதறி கதறி அழுவாங்க. அவமானத்தால கூனிக்குறுகி போவாங்க. சில மாதத்துல பெரிசா கூம்பிடு போட்டுட்டு போயிடுவாங்க. அந்த வெறுப்புலதான் நானும் விலகிட்டேன்.
    ஆனா இப்போ எனக்கிருக்கிற கேள்வியெல்லாம்… சுதந்திரமா ஒரு பொண்ணு மீடியாவுல வேலைப்பார்க்கவே முடியாதா? தன் சொந்த திறமையில முன்னுக்கு வரவே முடியாதா? மீடியாவுக்கு பெண்கள் வர்றது வேலைப்பார்க்கறதுக்கா, இல்லை விபச்சாரம் பண்றதுக்கா? சாறுங்களுக்கு என்னதான் வேணும்? ஐயா வினவுக்காரங்களே கேட்டு சொல்றீங்களா? ஐயா என் எழுத்தை சாருங்கள்லாம் சேர்ந்து தற்கொலை பண்ணவெச்சுட்டாங்க. அதனால கொஞ்சம் கோபமா எழுதிட்டேன். மத்தபடி ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட, துரத்தப்பட்ட என்னையமாதிரி பொண்ணுங்களால வேற எதையும் செய்ய முடியாதுங்க.

  3. கட்டு சோத்துக்குள் எலியை வச்சு கட்டின கதை தான் இந்த வெற்றி வேந்தனை, செய்தி வாசிப்பாளர்களுக்கு (அதிகம் பேர் பெண்கள்) ஒருங்கினைப்பாளராக நியமித்தது. ஐயோ இவர் அந்த தகுதியை வைத்துக்கொண்டு ஆடிய ஆட்டம் இருக்கிறதே? கேட்கவே வேண்டாம். வெற்றி வேந்தன் ஒருங்கினைப்பாளராக இருப்பது ராஜாவிற்கு (சன் செய்தி எடிட்டர்) வேறு வேலைகளுக்கும் வசதியாக இருக்கும் என்பதாலேயே வெற்றிவேந்தன் செய்தி வாசிப்பாளர்களுக்கு ஒருங்கினைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறான். வெற்றி வேந்தனும் அவனுடைய பணியை செவ்வனே செய்தான். பெண்கள் மேக்கப் அறைக்குள் அனுமதி இன்றி நுழைவது, அவருடன் மற்றும் ராஜாவுடன் அட்ஜஸ்ட் செய்தால் தான் செய்தி வாசிக்கும் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்பதும். இரட்டை அர்த்த வசனங்களில் பேசுவது. தன்னுடன் நின்று புகைபடங்கள் எடுக்க மறுப்பவர்களை வற்புறுத்தி புகைப்படம் எடுப்பதும் என்று அவர் செய்த அயோக்கியத்தனத்திற்கு ஒரு அளவே இல்லை.

    இவர் செய்த விடயங்கள் அனைத்துமே சொல்வதற்கே அருவருப்பு.

    வெற்றியின் ஃபேஸ்புக் பதிவில் //உங்களக்கு அக்கா , தங்கை இல்லையா…?// என்று கேட்கிறார். இந்த மாதிரி பெண்களை இழிவு படுத்தும் போது உங்கள் அம்மா, அக்காவெல்லாம் எங்கு சென்றிருந்தார்கள்.

    பெண்கள் வேலைக்கு செல்லும் எல்லா இடங்களிலும் அட்ஜெஸ்மென்ட், அட்ஜெஸ்மென்ட். என்ன கொடுமை இது? இவர்களைப் போல் ஆண்களால் பெண்கள் மீண்டும் அடுப்பறைக்குள்ளே திரும்பவும் சென்று அடங்கிவிடுவார்கள்.

    // நீங்கள் உண்மையில் மனித பிறவி தானா…? ஈனப்பிறவிகளே…….!!! // அதே ஃபேஸ்புக் பதிவில் வெற்றி கேட்கிறார்.

    அதனையே திருப்பி நாங்கள் கேட்டால்?? எங்கள் அப்பாவும், அம்மாவும் பெற்று, சீராட்டி, வளர்த்து படிக்க வைத்து வேலைக்கு அனுப்புவது உங்கள் இச்சையை பூர்த்தி செய்வதற்காக தானா?

    அவர் செய்த கேவலங்களில் நான் சொன்னது மிகவும் சிலதே,

    இவை அனைத்தும் புகைபடங்களுடன் புகாராக போன பிறகும் வெற்றி வேந்தன் மீது ராஜா தக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

    கிருத்திகா என்பரை (இவர் ஒரு பெண் வெற்றி வேந்தன்) செய்தி வாசிப்பாளர்களின் ஒருங்கினைப்பாளராக நியமித்தார் அவ்வளவே தான். (டவுட்டு: பார்த்தவுடனயே pimpகளை கண்டறிவது அவரது நிர்வாகத் திறமையின் ஒரு அங்கம்??)

    இவை அனைத்தும் அங்குள்ள மற்றவர்களுக்கும் தெரியும். ஆனால் யாரும் எதிர்த்து குரல் கொடுக்க முன்வரவில்லை. பல விடயங்களை அலசி ஆராயும் விவாத மேடை பேச்சாளர்கள் கூட தான் உண்டு தன் வேலை உண்டு என்ற அளவில் இருந்தனர்.

    தான் இவ்வாறு பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்படுவதை பற்றி ராஜாவின் மகள் அவரிடம் சொல்லியிருந்துருந்தால் இப்படி தான் கண்டும் காணாமல் இருந்திருப்பாரா??
    ஆடியோ பதிவிற்கு வருவோம்.. ”சரியான மக்காக இருக்கியே” என்று வழிகிறார். கம்பீரமாக அனைவரையும் ”இங்கு கூறமுடியாத வார்த்தைகளால் அலுவலகத்தில் இருக்கும் அனைவரையும் காரணமின்றி திட்டி தீர்க்கும் ராஜா” இப்படி அசடு வழிவதற்கான காரணம் என்ன?? அந்த அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் இந்த ஆடீயோ பதிவை கேட்டவுடன் அறிந்துக்கொள்ள முடியும் ராஜா, அகிலாவிடம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் என்று.

    ஆனாலும் ராம செல்வராஜ், நெல்சன் சேவியர், ஆதவன், கருப்பசாமி (இன்னொரு pimp) கிருத்திகா, மற்றும் அவரது தோழி மகாலட்சுமி இன்னும் பல பேர் தொடர்ந்து ”ராஜா” வை காப்பாற்ற துடிக்கின்றனர். ராஜா என்ற தனி மனிதன் காப்பாற்ற படுவதில்லை பிரச்சனை. அவர் காப்பாற்ற படும் போது பெண் இனமே தோற்கடிக்கப்படுகிறது என்பதே நிதர்சனமான உண்மை.

  4. சன் செய்தி எடிட்டர் ராஜாவை மற்றும் அவருடைய உதவியாளன் வெற்றியை இன்று காப்பாற்ற துடிக்கும் அனைவரும் “பெண்கள்” நேரடியாக வெற்றி வேந்தனால் பாலியல் கொடுமைகளுக்கு ஆளான போது எங்கு சென்றிருந்தீர்கள்??

    “வேலையை காப்பாற்ற வேண்டுமே” என்ன செய்வது? என்பது தான் உங்கள் பதில் என்றால்.

    அயோக்கியத்தனத்தை கண்டிக்க முடியவில்லை சரி, அயோக்கியனும் அவனது அயோக்கியத்தனமும் பிடிப்பட்ட பிறகும் அவனை புறக்கணிக்காமல், கூடவே நிற்பது என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். இந்த அளவுக்கு சுயநலத்திற்கான காரணம் என்ன?? பிழைப்பிற்காக எதையும் செய்யத்துணியும் கேடு கெட்ட சமுதாயத்திலா நாம் இருக்கிறோம்.

    அயோக்கியத்தனத்தை வெளிக்கொண்டு வர முடியவில்லை சரி. அயோக்கியத்தனத்தை வெளிக்கொண்டு வந்த பிறகு சாட்சி சொல்ல தேவையில்லை முடிந்தவரை கயவனை காப்பாற்றாமல் தள்ளி நிற்கலாம் இல்லையா?? ராஜா காப்பாற்றப்படுவது என்பது பெண்கள் மீதான பாலியல் வல்லுணர்வு என்பது தொடரவே வழிவகுக்கும் என்று ஒரு நொடியேனும் உங்களுக்கு தோன்றவில்லையா?

    இன்றும் நீங்கள் ராஜா என்ற தனிமனிதனை காப்பாற்ற தோள் கொடுக்கவில்லை. சன் செய்தி எடிட்டர் என்ற அதிகாரம் படைத்த‌ ராஜாவையே காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள். ஒரு வேலை அவர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டால் நாளடைவில் அவருடைய தொலைபேசி எண் கூட உங்களிடம் இல்லாமல் போய்விடும் என்பதே உண்மை.

    ஆனால் உங்கள் பிழைப்புவாதத்தை முன்வைக்கும் முன் “பெண்” என்பவள் யாரோ ஒருவர் இல்லை. உங்கள் தாய், தங்கை, அக்கா, மனைவி, மகள்.உங்களுடைய இரத்த சொந்தங்களுக்கு இந்த பாலியல் பிரச்சனை வரலாம், வரும். யாரும் இதில் இருந்து தப்பிக்க முடியாது.

    முக்கிய‌ காரணம் ராஜா, வெற்றி போன்றவர்களை காப்பாற்ற நீங்கள் எடுத்து வைக்கும் அடியே (step) பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுகள் மேலும், மேலும் வளர வழிவகுக்கும். அந்த வகையில் பாலியல் வல்லுணர்வு தொடர்வதற்கு அவரை காப்பாற்ற துடிக்கும் உங்கள் ஒவ்வொருவருக்குமே பங்கு உண்டு.

  5. இன்றைக்கு அரசியல்வாதிகளுக்கு அடுத்த கட்ட ஃபிராடுகள் யாரென்றால் பத்திரிகையாளர்கள் என்பவர்கள்தான். ஒலக மகா புத்திசாலிகளும் இவர்களே. தன் வேலையை ஒழுங்கா செய்றவங்கனு பார்த்தா 100-ல ஒண்ணு ரெண்டு தேரலாம். மற்றபடி எல்லாரும் பிழைப்புவாத, சந்தர்ப்பவாத, அடிமைக் கைக்கூலிகள்தான்.

    ஒரு உண்மையான செய்தியை ஒரு பத்திரிகையாளரிடம் கொடுத்துப் பார்த்தால் அவர் எந்தவிதமான பத்திரிகையாளர் என்பது நிச்சயமாகிவிடும்.

    பரிசுக் கவர் இல்லாமல் எந்த செய்தியும் செய்தி ஆக முடியாது. இல்லாது போனால் அவர்களால் தவிர்க்க முடியாத செய்தியாக இருக்க வேண்டும்.

    வாழ்க நான்காவது தூண்களின் செங்கற்கள்.

  6. அந்தப் பெண் பத்திரிகையாளர் யாராக இருந்தாலும் அவருக்கு வாழ்த்துக்கள். ஹாட்ஸ் ஆப் அகிலா, ஆணையர் ஜார்ஜ், துணை ஆணையர் லட்சுமி. என்னால் செய்ய முடியாததை அந்த ஆளை கையை, காலை உடைக்க வேண்டும் என்று குமுறி திட்டமிட்டிருந்த நேரத்தில், பல பேரை புழலுக்கு அனுப்பக் காரணமாக இருந்தவரை – ஒரு வாரமாகிலும் புழலைச் சென்று பார்க்க வைத்து விட்டதற்கு மனமார்ந்த பாராட்டுகள். இனிமேல் பிரதமர் உள்பட யார் கூட வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் போகட்டும். புழல் தந்த அனுபவம் வேறு எங்கும் கிடைக்காது. அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, எனக்கு தெய்வ்த்தின் மீதான நம்பிக்கு அதிகரித்து விட்டது. நன்றி தொடரட்டும் உங்கள் சமுக அக்கறை.

  7. Akhila should be congratulated for protesting against one kama kaliyattan raja and more importantly the media empire. he has come out on bail but the lady has been dismissed. A kind of justice you can find only in this wretched shit country.Sex like corruption is a great leveller. it transcends caste, colour region, religion, race and umpteen other things. When the union govt is legislating anti-rape bill such incidents happen thro’ out india. Infact all organisations are supposed to have a cell looking into sexual harassment cases. Whether the sun management has really looked into it. Why she was removed from work when she lodged complaint. Should she not been given an opportunity to explain her position. if raja is really a sex addict, why can’t he spend money and time with sex workers. Because he is afraid of contracting AIDS or he can’t exercise his power. But in this wretched rotten shit country, girls like akhila will continue to suffer. There will be a few protests, but it will not help her in practical sense. and if she goes for justice it will take years. People like me may write letters of protest. But at the end of the day it matters nothing-K.S.Sundaram

  8. உலகளாவிய பிரச்சனைகள், அரசியல் விஷயங்கள் என்று எல்லாவற்றையும் குறித்து எழுதத்தான் ஆண் பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள். இல்லையா? ஒரு பெண் பத்திரிகையாளர் பாதிக்கப்பட்டால்மட்டும் ‘எங்கே போனீர்கள் பெண் பத்திரிகையாளர்களே?’ என்று கேட்பார்கள். ஆண் பத்திரிகையாளர்களெல்லாம் உலக நாட்டு நடப்புகள் குறித்து மட்டுமே பேச கடப்பாடு உடையவர்கள். அப்படித்தானே? அதாவது ‘உங்களுக்கு ஏதாவது பிரச்சனைன்னா நீங்கதான் பார்த்துக்கணும்’’ என்கிற தொனி தானே இது. ‘பெண்கள் அமைப்புகள்’ எங்கே போனீர்கள் என்று கேள்வி கேட்பார்கள். ஆண்கள் எல்லாம் கூடங்குளம், ஈழம், முல்லைப் பெரியாறு போன்ற பெரிய பெரிய விஷயங்களுக்கு மட்டுமே போராட கடமைப்பட்டவர்கள். இல்லையா? அப்புறம் கையில் ஒரு வலைப்பூ இருந்துவிட்டால் எல்லோரையும் கேள்வி கேட்பது ரொம்ப சுலபம். அவன் ஒன்றும் செய்யலை. இவன் ஒன்றும் செய்யலை. அந்த அமைப்பு செய்யலை. இந்த அமைப்பு செய்யலை. அந்த அமைப்புகளை கலைத்துவிடலாம். இப்படி குறை சொல்ல மட்டுமே பிறப்பெடுத்தவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லா பெண்கள் அமைப்புகளையும் கேள்வி கேட்பார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு பெண்கள் அமைப்பு இருக்கிறது. அவர்களை மட்டும் விட்டுவிடுவார்கள். ஆனால் இவர்கள் குறை கூறும் பெண்கள் அமைப்புகளும் பெண் பத்திரிகையாளர்களும்தான் உருப்படியாக முயற்சிகள் எடுத்தார்கள் என்பதுதான் உண்மை.//கவின்மலர் உங்களுக்கு முகநூலில் எழுதிய பதில்.

  9. ராய்ட்டர் பத்திரிகையாளர் சேதுராமன் ட்விட்டரில் தெரிவித்த கருத்து….

    வினவின் கேள்வியை அடுத்து எனது சொந்த அனுபவத்தை முன்வைக்கிறேன். தமிழின் மிக முக்கிய பத்திரிகையில் பயிற்சி நிருபர்களாக வேலைக்குச் சேர்ந்து சிரிது காலம் கழித்து என்னுடன் சக நிருபராக இருந்த ஒரு பெண் என்னைத் தொலை பேசியில் இரவு 11 மணிக்கு அழைத்து அந்தப் பத்திரிகையின் மூத்த ஆசிரியர் ஒருவர் சில நாட்களாக அவருக்கு குறுஞ்செய்தி வாயிலாக பாலியல் தொல்லைத் தருவதாக கூறினார். மறு நாள் அந்த குறுஞ்செய்திகளுடன் அந்த பெண்ணையும் அழைத்துக் கொண்டு பத்திரிகை அலுவலகத்திற்கு சென்றேன். அப்பொழுது இன்னொரு மூத்த ஆசிரியர் அந்த பெண்ணை அழைத்து விவரங்களை அறிந்துக் கொண்டு அந்தக் குறுஞ்செய்திகளை அழித்துவிடுமாறும் இனி அந்தப் பெண்ணிற்கு எந்த தொல்லையும் வராமல் பார்த்துக் கொள்வதாகவும் கூறினார். அங்கு வேலைப் பார்த்த சிலரோ இதெல்லம் அந்த இடத்தில் சகஜம் என கூறினர். அந்த கசப்பான அனுபத்திற்குப் பிறகு நாங்கள் அந்தப் பத்திரிகையின் தொடர்பையே துண்டித்தோம். இன்று அந்த சம்பந்தப் பட்ட ஆசிரியர் மேலும் உயரிய பதவியில் அமர்த்தப் பட்டு அழகுப் பார்க்கப் படுகிறார். இது நிர்வாகத்திற்கு தெரியாமலும் போயிருக்கலாம் அல்ல தெரிந்தும் மழுங்கடிக்கப் பட்டிருக்கலாம். பல ஆங்கிலப் பத்திரிகைகளிலும் இந்தப் பிரச்சனை இருப்பதாக நண்பர்கள் தெரிவிக்கின்றனர். இன்று போல பத்து வருடத்திற்கு முன்பு இதை எப்படிக் கையாள்வது என்ற புரிதல் இல்லை. எந்த ஆதாரமும் இல்லாமல் இப்படி ஒரு குறச்சாட்டை முன் வைப்பது என்னைப் போல ஒரு பத்திரிகையாளனுக்கு அழகு இல்லை என்பதனாலேயே அந்தப் பத்திரிகையின் பெயரையோ அந்த ஆசிரியரின் பெயரையோ இங்கு சொல்ல முடியாமல் போகிறது. மன்னிக்கவும்!

  10. பிரச்சினை பெரியது…..அகிலாவின் செயல் அனைவரின் ஆதரவையும் பெறத்தகுதி படைத்ததுதான்.

    அகிலா விஷயத்தில் ராஜா தப்பு செய்திருந்தாலும் பெரிய கேடி நடவடிக்கை எடுக்கலேன்னா காரணம் அவன் குடுமி இவன் கிட்டே இருக்கலாம். தான் பண்ணின மாமா வேலையை போட்டுக் குடுத்துடுவானோன்னு கூட வச்சிருக்கலாம்.

    இது அறம் செத்த பூமி. படித்தவர்கள் தவறு செய்யும் தேசம்.நாலு தூண்லே ரெண்டுலே கரையான். மத்த ரெண்டும்- நீதி, பத்திரிக்கை- அஸ்திவாரமே இல்லாமே இருக்கு. யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பற்ற பொறுப்பற்றவர்கள் நிறைந்த சபைகள் அவை.

    அகிலா ஏன் அவர்களிடம் வேலைக்கு சென்றாரோ?பயம் காரணம் இல்லை. சாக்கடைன்னு தெரிஞ்சும் யாராவது பன்னீர்னு தெளிச்சுக்குவாங்களா. பன்னி, புழு தான் அங்கே கிடக்கும் .

    நீதி குற்றுயிரும் குலையுயிருமா கிடக்கு.

    அவருக்கு நீதியும் நிம்மதியும் கிடைக்க என் நல்ல எண்ணங்கள் என்றும் அவருடன்.

    சேதுராமன் கழுகு போலே பூடகமா சொல்லிட்டார் — யார் அந்த பத்திரக்கை கூட்டம் என்பதை.

    எல்லாருமே ஒரே குட்டை மட்டைதான். கவர் வாங்காத கழுதையே கிடையாதே. இவனுங்க குடுக்கிற காசு போதாது. கவர் வாங்க மனசாட்சி ஒத்துக்காது. என்ன பண்ணலாம்னு யோசிச்சிக்கிட்டு இருக்கும்போது ஒருநாள் Hஇண்டு காரனே கவர் வாஙினதைப் பார்த்து அந்ததுறையே வேணாம்னு ஓடி வந்துட்டேன்.

Leave a Reply to Paiya பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க