privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅத்வைதமும் அர்ஷத் மேத்தாவும்!

அத்வைதமும் அர்ஷத் மேத்தாவும்!

-

ட விருட்சத்தின் நிழலில்
வேதங்களின் மறைபொருளை
விரல் நுனியில் காட்டியபடி
வீற்றிருந்தான் சங்கரன்-
ஆதி சங்கரன்ஆதி சங்கரர்

பிறவிப் பெருங்கடல் நீந்தி
பிறவாமைப் பேறுபெற,
சத்தியம் உணர்ந்து
முக்தி நிலை பெற- முனைந்த
சீடன் கேட்டான்:

“ஸ்வாமி…!
நான் யார்? அது எது?”
மோனம் கலைந்த
முனிவன் சொன்னான்;

“இரண்டில்லை,
அ-த்வைதம்”

“அர்த்தமாகவில்லை ஸ்வாமி”

மோகனச் சிரிப்புடன்
சங்கரன் தொடர்ந்தான்:
“அகம் பிரம்மாஸ்மி
நானே அதுவாக இருக்கிறேன்
நான் உருவமில்லாதவன்
நான் எங்குமிருப்பவன்
நான் சுதந்திரமானவன்
நானே பிரம்மம்
நானே சத்யம்”

நானே பங்கு மார்க்கெட்!

*

“அதென்ன சார்
பங்கு மார்க்கெட் ஊழல்?”

தம்பி…
ஊழலே பங்குச் சந்தை
பங்குச் சந்தையே ஊழல்.

“புரியலியே”

புரியாது.
உனக்குப் புரிவதற்காக
உண்டாக்கப்பட்டதல்ல
பங்குச் சந்தை.

கதைகேட்டு கதைகேட்டு
கனவில் வளர்ந்த \ அழிந்த தேசமே
நானும் ஒரு கதை சொல்வேன்-
கேள்!

ஒரு ஊரில்
ஒரு கணவன்.
மனைவியையும் கூட்டிக்கொடுக்கும்
கணவன்
ஒருநாள்
வாடிக்கைக் காரனொருவன்
அந்தப் பெண்ணோடு இருப்பதைப்
பண்பாடில்லாத
ஒரு வழிப்போக்கன்
பார்த்துவிட்டான்…

“அப்புறம்”

அநியாயம்…. அநியாயம் – என்று
கத்தினான்.
“புத்திசாலி” புருசன்காரனும்
அவன் கூடவே சேர்ந்து கத்தினான்.
சிக்கிக் கொண்ட வாடிக்கையாளன்
ஹர்ஷத் மேத்தா.

“புருசன்காரன்?”

ஒரு பெயராயிருந்தால்
சொல்வது சுலபம்
அவனுக்கு ஆயிரம் நாமங்கள்
கிருஷ்ணமூர்த்தி, சிதம்பரம்,
வெங்கடரமணன், சீதாராமன்,
கீதகிருஷ்ணன்…

“சரி, வுடுங்க சார்….
ஏதோ ஊழல்…
ஒண்ணும் புரியல
நமக்கு சம்பந்தமில்லை”

சம்பந்தமில்லை!
கோடிக்கு எத்தனை பூச்சியம்
என்று புரியாத
அறுபது கோடியே,
உனக்கு சம்பந்தமில்லை.
திருடனுக்கு
ஊதுபத்தி கொளுத்தவும்
வேசைக்கு மகுடம் சூட்டவும்
புரிந்த
ஓட்டு வங்கியே,
உனக்கு சம்பந்தமில்லை.

சிந்திக்காதபோது
புரிந்து கொள்ளும் தேசம்,
புரியாதபோது
சிந்திக்கச் சுணங்கும் தேசம்.

ஆதிசங்கரனே!
இதோ…
நீ காண விரும்பிய தேசம்.
தம்மின் மெலியாரை
(மெலியாரை மட்டுமே)
தாம் நோக்கித்
தம் நிலைமை
அம்மா பெரிதென்று
அகமகிழும் தேசம்-
கர்மயோகிகளின் தேசம்.
ஊண் இழந்தும்
உடுக்கை அவிழ்ந்தும்
உறக்கம் கலையாத தேசம்-
ஞான யோகிகளின் தேசம்.
இந்தப்
பண்பாடற்ற விதண்டாவாதி
வழிப்போக்கனை மட்டும்
ஒழித்து விட்டால்…

*

என்னே விதியின் விளையாட்டு!
அல்லாடி
ஆச்சாரியார்
சர்.சி.பி.ராமசாமி அய்யர்
ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரி..
என்று நெஞ்சை விடைத்த
அக்கிரகாரமே,

அய்யர், அய்யங்கார்
ஆச்சாரியார்
முதலியார்
செட்டியார் – என்று
கம்பீரமாக
வாலை அசைத்த கூட்டமே
எங்கே இப்போது
வாலைக் காணோம்?

ரிசர்வ் வங்கி கவர்னர்
வெங்கட ரமணன் (அய்யர்)
நிதித்துறைச் செயலர்
கீத கிருஷ்ணன் (அய்யர்)
அட்டர்னி ஜெனரல்
ராமசாமி (அய்யர்)
யூ.கோ.வங்கித் தலைவர்
மார்க்க பந்து (முதலியார்)
திட்டக்குழு உறுப்பினர்
கிருஷ்ணமூர்த்தி (அய்யர்)
அமைச்சர்
ப. சிதம்பரம் (செட்டியார்)
ஸ்டேட் வங்கி
சீதாராமன் (அய்யர்)

வாலறுத்த நரிகளே
இதென்ன அஞ்ஞாதவாசம்?
காலதேச வர்த்தமானம்
சரியில்லையோ?
இட ஒதுக்கீட்டு ராகுவை
விழுங்கிய உங்கள்
அனல் கக்கும் நிலவுகள் எங்கே?

இட ஒதுக்கீட்டை
குழாய்த் தண்ணீரில் மூழ்கடித்த
சுஜாதா அவர்களே (1),
உழைப்பால் உயர்ந்த உத்தமர்
கிருஷ்ணமூர்த்தி அய்யரைப் பற்றி
‘கணையாழி’யின்
கடைசிப் பக்கத்திலாவது
நாலு ‘நறுக்’கெழுத்து
எழுதக் கூடாதா?

முதலியார் கண்ணீர் வடித்த
சிந்தனை சந்தர்,
சினா தானா
தென்னை மரமேறிய கதையை
நாலு ரீல் சுற்றலாமே!

ஏன் இந்த மயான அமைதி?
நேற்று முன்தினம் வரை
‘திறமை’யான ஜனாதிபதிக்காக
வாதாடிய உங்கள்
தர்க்கசாஸ்திர சிரோன்மணிகள்
எங்கே?

மண்டலாசுரனை வீழ்த்திய
பிரம்மாஸ்திரம்
பூமராங்காய்த் திரும்பிப் பாய்கிறதோ!

புரிகிறது.
தர்க்க சாத்திரத்தில்
தோல்வி கண்டவர்கள்
தர்ம சாத்திரத்தில்
தஞ்சம் புகுந்து விட்டீர்கள்.
இதுவல்லவோ
சங்கரன் வகுத்த வழி!

சட்டப் பிரிவு -8 உட்பிரிவு -9ன் படி(2)
ஒழுக்க சீலர்களை
விசாரிக்கும் அதிகாரம்
ஒழுக்க சீலர்களுக்கு மட்டுமே
உரியது.

கிருஷ்ணமூர்த்தி அய்யரை
மணிசங்கர் அய்யர்
விசாரிக்கட்டும்

வெங்கட ரமணய்யரின்
தவறுகளை
ஜானகி ராமய்யர் ஆராயட்டும்

ஜானகி ராமய்யரின்
நடத்தைக்கு
நரசிம்மராவ்
(சந்தேகம் வேண்டாம் – நம்மவர்தான்)
உத்திரவாத மளிக்கட்டும்.

நரசிம்மராவின் யோக்யதைக்கு
எல்லாம் வல்ல இறைவன்
(அல்லது ஜார்ஜ் புஷ்)
சான்று பகரட்டும்!

*

“சட்டத்தின் ஓட்டைகளை
ஹர்ஷத் மேத்தா
திறமையாகப்
பயன்படுத்திக் கொண்டார்
அவ்வளவுதான்” –
ராம் ஜேத்மலானி

ஓட்டை…!
பெருச்சாளிகளும்
பன்றிகளும் மட்டுமே
தப்பவியலும்
பிரம்மாண்டமான ஓட்டை.

ஆனால்
எலிகள் எலிகள் மட்டும்
என்றுமே தப்பவியலாத ஓட்டை.

பௌதீக விதிகளை மறுக்கும்
இந்த தெய்வீக ஓட்டைகளை
சிருஷ்டித்தவன் யார்?

மயனா
பிரம்மனா
பரந்தாமனா
அல்லாடியா அல்லது
ஆனந்த பவனத்துக்
குற்றப் பரம்பரையா?

கன்னம் வைப்பதும்
திறமையென்றால்…
நீங்கள் திறமைசாலிகளே.

சட்டப் பிரிவு 10 உட்பிரிவு 84-ன் படி(3)
இரும்பினால் செய்த
கலப்பையைத்தான்
பிராமணன் தொடக் கூடாது
கன்னக் கோலுக்கு
தோஷமில்லை.

மிருச்சகடிகத்தின்
பார்ப்பனத் திருடன் கூறியது போல(4)
பூணூலும்
கன்னக்கோல் சுற்றும்
ஓர் ஆயுதமே.

எது திறமை
எது திருட்டு
என்ன வேறுபாடு?

அ-த்வைதம்!

துவாபர யுகத்தின் திருட்டு
கலியுகத்தில் திறமை

துவாபர யுகத்திலேயே
சகுனியின் நயவஞ்சகம்-
கண்ணனுக்கு லீலாவிநோதம்

துச்சாதனனின் துகிலுரிதல்-
துவாரகா பாலனின் ராசலீலை.

ஆனந்த விகடனின்
கேலிச்சித்திரத் திருடர்கள்
கிருஷ்ணமூர்த்தி அய்யரை
ஒத்திருந்ததுண்டா?

கேடி கந்தன்
பிளேடு பக்கிரி
பத்மவிபூஷன் கிருஷ்ணமூர்த்தி

ஆதி சங்கரனிடம்
நீதி கேட்டுப் பார்ப்போம்.

சாமி!
எது திறமை? எது திருட்டு?

“அத்வைதம்-
கயிற்றரவம்.”
விளங்கலையே சாமி.

“மூடனே கேள்
பகலில் கயிறு
இரவிலே பாம்பு
உன் பார்வையில்தான் பேதம்”

ஆதி சங்கரன்
குழப்புகிறான்
மணி சங்கரனை (ஐயர்)
கேட்போம்.

“கிருஷ்ணமூர்த்தி என் நண்பர்
அவர் குற்றவாளி அல்லர்
குற்றம் சாட்டப்பட்டவர்
அவ்வளவுதான். நண்பனும் நானே
நீதிபதியும் நானே”
பகலில் நீதிபதி
இரவில் நண்பன்
அத்வைதம்!

*

திறமையே திருட்டு
திருட்டே திறமை
அத்வைதம்!

அற்புதம்!
யுக யுகாந்திரங்களாய்
பாரதத்தை இணைத்து நிற்கும்
அந்தப் பண்பாட்டு இழையை,

பாரத மக்களின்
கழுத்தைச் சுற்றிப் பின்னியிருக்கும்
ஹிந்து தர்மம் எனும்
சுருக்குக் கயிற்றை
(மீண்டும் அத்வைதம்)
கண்டு கொண்டோம்.

என்ன ஒற்றுமை!
தத்துவ சாத்திரம்
தவிடு பொடியானவுடன்
தரும (மனு) சாத்திரத்தில்
சரண் புகுந்தான்
அந்த சங்கரன்

“நண்பனே நீதிபதியா?” என்று
ஒழுக்க மரபுகளைச்
சுட்டிக் காட்டினால்
குற்றவியல் சட்டத்தில்
ஒளிகிறான்
இந்த சங்கரன்.

ஒழுக்க சாரதிகளே,
முகத்தில் உதித்த
முதல் வருணத்தோரே,
என்னே உங்கள் அவலம்!

சமூகத்தின்
முகத்தில் விழிக்க அஞ்சி
சட்டத்தின்
பிட்டத்திற்குப் பின்னே
பதுங்குகிறான் உங்கள் சங்கரன்

குற்றவுணர்வுக்குப் பதில்
சட்ட உணர்வு.

சட்டம்!
நீங்கள் வகுத்த சட்டம்.
ஒழுக்கம் ஓரடி பாயுமுன்
பாதாளம் நோக்கி
பதினாறடி பாயும் சட்டம்.

சீரழிவுத் தொடர் ஓட்டத்தில்
ஒழுக்கத்தின் கையிலிருந்து
கட்டையைப் பறித்துக் கொண்டு
பாய்ந்தோடக்
கால் துடிக்கும் சட்டம்.

“குற்றம் சாட்டுபவன்தான்
நிரூபிக்க வேண்டும்-
குற்றம் சாட்டப்பட்டவன்
தன்னை நிரபராதியென
நிரூபித்துக் கொள்ள வேண்டுமென்றால்
அது பாசிசம்”-
மணிசங்கர் அய்யர்.

ஆகா!
அப்பழுக்கற்று ஜொலிக்கும்
இந்த
தூய ஜனநாயகத்தின் ஒளி,
பகல்பூரிலும், வாரணாசியிலும்
காஷ்மீரிலும், பஞ்சாபிலும்
அஸ்ஸாமிலும், தமிழகத்திலும்
…அண்ணாமலை நகரிலும்
படாமல் போனது ஏன்
சாத்தானே?
மன்னிக்கவும்.
தேவரே! பூதேவரே!

சட்டத்தின் முன்
அனைவரும் சமம்
கிருஷ்ணமூர்த்தி அய்யர்
கொஞ்சம் அதிகமாக சமம்.

சம்புகனுக்கு சிரச்சேதம்
அஜமிலனுக்கு சொர்க்கம்(5)

தென்னை மரத்தில்
புல் பிடுங்க ஏறிய
சிதம்பரம் செட்டியார்
இறங்கி விட்டார்.
வெற்றி…! வெற்றி…!
நல்லொழுக்கத்திற்கு வெற்றி!

“என்னுடைய மந்திரிகளை
யாரேனும்
தென்னை மரத்தின் உச்சியில்
கண்டால் சொல்லுமய்யா
இறக்கி விட்டு விடுகிறேன்”-
கர்ஜிக்கிறார் நரசிம்மராவ்

“அபாரம்! என்ன துணிச்சல்!
என்ன கண்டிப்பு!”
புல் அரிக்கிறது தினமணிக்கு.

ஏறிய குற்றத்திற்கு
இறங்குவதே தண்டனை!

எப்படியும் நாம்
சட்டப் பிரிவு – 8 உட்பிரிவு-380 ஐ
மீற இயலாது.(6)

*

ஹர்ஷத் மேத்தா“யார் செய்யவில்லை?
நான் மட்டுமென்ன
பலிகடாவா?”-
ஹர்ஷத் மேத்தா

அப்படிப் போடு!
யார் செய்யவில்லை?

ஆட்டுப் பாலை
பிர்லா மாளிகையில் அமர்ந்து
பருக நேரிட்டதையும்,

வேர்க்கடலையை
பஜாஜ் வீட்டிலிருந்தபடி
(மாட்டுக் கொட்டிலாகத்தான் இருக்கட்டுமே)
கொறிக்க நேர்ந்ததையும் பற்றி

மகாத்மாவை
யாரேனும்
கேள்விக்குள்ளாக்கியதுண்டா?

அவரது
பிரம்மச்சரிய சோதனை பற்றி
குறைந்த பட்சம்
குமுதம் ‘லைட்ஸ் ஆன்’ பகுதியில்
ஒரு வரி
கிசுகிசு செய்தியாவது உண்டா?

தாத்தாவுக்கு ஒரு நீதி
பேரன்
மேத்தாவுக்கு ஒரு நீதியா?

அல்லது
பிரம்ம சூத்திரத்திற்கு
பாஷ்யம் எழுதிய
திருக்கரத்தால்
சௌந்தரிய லஹரியும்
கனகதாரா ஸ்தோத்திரமும்(7)
எழுதியதற்காக
ஆதி சங்கரனைக்
குற்றம் சொல்வார்தான் உண்டா?

அன்று முதல்
இன்று வரை
சத்திய சோதனையில்
விஞ்சி நிற்பது
வியவகாரிக சத்யம்தானே!(8)

“இது நம்
அமைப்பு முறையின் தோல்வி
நாம் எல்லோருமே பொறுப்பு”
–மன்மோகன் சிங்

எதிர்மறைகளின்
ஒற்றுமை குறித்த
இயங்கியல் விளக்கத்தை
இதை விடத் துல்லியமாக
யாரால் விளக்க முடியும்?

பறிகொடுத்தவனின் குற்றம்-
அஜாக்கிரதை

பறித்தெடுத்தவனின் குற்றம்-
திருட்டு

இருவருமே தவறிழைத்துள்ளனர்.
மொத்தத்தில் இது
நம் அனைவரின் தவறு.

“திருப்பதி உண்டியலில்
திருடன்
காணிக்கை செலுத்தினால்
அதற்கு
திருவேங்கடத்தானைக்
குற்றம் சொல்ல முடியுமா?”
என்கிறார்
கல்கி – ராஜேந்திரய்யா(9)

முடியாது.
மன்மதக் கலையைக்
கற்றுத் தேற
மாற்றான் மனையைப்
புணர்ந்ததற்காக
அந்த மகானை-
ஆதிசங்கரனை
நாம் எங்ஙனம்
குற்றம் கூறவியலும்?

உவமானங்கள்
உருவகங்கள்
நீதிக் கதைகள்…

கனவான்களே,
இடியாக முழங்கும்
உங்கள் வாதங்கள்
எங்களை
ஒழுக்க செவிடர்களாக்குகின்றன.

வானவில்லாய் ஒளிரும்
உங்கள் அறிவோ
எம்மை
வண்ணக் குருடர்களாக்குகிறது.

என்ன இருந்தாலும்
நீங்கள் படித்தவர்கள்
தர்ப்பைப் புல் முதல்
சூப்பர் கம்ப்யூட்டர் வரை
உங்கள்
மடி சஞ்சியில் அடக்கம்.

நீங்கள்
அறிவாளிகள்
எனவே
திறமை சாலிகள்
எனவே
ஒழுக்க சீலர்கள்

‘சட்டப்படி’
ஒழுக்க சீலர்கள்.

மூடர்களும், தற்குறிகளும்
நிரம்பிய இந்த தேசத்தைப்
பரிபாலிக்க
நீங்கள் சகித்துக் கொண்ட
இன்னல்கள்தான் எத்தனை?
எங்களுடைய கைம்மாறை,
தட்சிணையை,
நீங்கள்
ஏற்றுத்தான் தீர வேண்டும்.

அதற்கு முன்,
அத்வைதிகளே
ஒரே ஒரு ஐயம்!

உங்கள் பட்டங்கள்
வேசியின் அலங்காரத்தை
ஒத்திருப்பதை
நீங்கள் கவனிக்கவில்லையா?

வேதம், புராணம்,
இதிகாசம், உபநிடதம்,
எம்.ஏ, எம்,பி.ஏ,
மின்னணு அறிவியல்
இன்ன பிற… இன்ன பிற…

எதற்கு?
உங்களை விற்றுக்கொள்வதற்கு.

என்றாலும்
தரும சாத்திரத்திலிருந்து
நீங்கள் வழுவுவதில்லை.

தான் கற்ற கல்வியைத்தான்
பார்ப்பனன் – காசுக்கு-
விற்கக் கூடாது.
தன்னையே விற்றுக்கொள்ள
தடையேதுமில்லை.

எங்கள்
கண்ணீரைக் குடித்து,
பெருமூச்சை சுவாசித்து,
பெருங்குடலைத் தின்று
எம் குழந்தைகளின்
அரிச்சுவடியைத் திருடிய,

உங்கள் திறமையின்
கால் தடங்கள்
எப்போது
சொர்க்கத்திலேயே முடிந்தன
இப்போது
அமெரிக்காவில் முடிகின்றன.

உங்கள்
புத்திரர்களும்
பௌத்திரர்களும் (பேரன்கள்)
அமெரிக்காவில்.

உங்கள
வானப் பிரஸ்தமோ(10)
மிலேச்சனின்
உலக வங்கியில்.

நீங்கள்
வெளிநாட்டில் குடியேறிய
இந்தியர்கள்.
நாங்கள்
சுதேசி அகதிகள்.

உங்கள் ஈசானம் டெல்லி
எங்கள் ஈசானம் சுடுகாடு.
உங்கள் மேற்திசை நியூயார்க்
எங்கள் மேற்திசை கட்டுமரம்.

திறமைசாலிகளே,
எங்கள் பாதங்களில்தான்
சீழ் வடிகிறது
உங்களுக்கோ
ஆன்மாவில் சீழ் வடிகிறது.

அதை
அத்தர் புனுகு சவ்வாது என்று
நாங்கள் பூசித்திரிந்த காலம்
முடிந்தது.
முடிந்தது.

தேசத்துரோகிகளே!
மனிதப் பதர்களே!!

“பழிக்குப் பழி என்று முழங்கி
நாங்கள்
வீதிகளில் சீறி வரும்போது

உங்கள்
கருணை மனுக்கள்
மழுப்பலான சமாதானங்கள்
எல்லாம் ஒதுக்கித் தள்ளப்படும்.

பிரமுகர்கள், பிரபலங்களின்
சிபாரிசுகள் செல்லுபடியாகாது.

தண்டனையும் பரிசும்
தெருவிலேயே தீர்மானிக்கப்படும்

சொர்க்கமா நரகமா
அங்கேயே முடிவாகி விடும்.

இறுதித் தீர்ப்பின் நாள்
இன்றே, இப்பொழுதே, இக்கணமே!”(11)

கயிறு அல்லது அரவம்.

திறமைசாலிகளே
தெரிவு செய்து கொள்ளுங்கள்!

என்ன துரதிருஷ்டம்!
இரண்டுமே
வியவகாரிக சத்யம்!!

– மருதையன்

அடிக்குறிப்பு

  1. கல்கியில் மத்தியமர் என்ற தொடரில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக சுஜாதா எழுதிய சிறுகதை. அதிகாரியின் மகளான நவநாகரீக தாழ்த்தப்பட்ட மங்கைக்கு தகுதியில்லாமலேயே வேலை கிடைக்க, தகுதியுள்ள முற்பட்ட சாதி இளைஞன் வாய்ப்பை இழந்து துவண்டு, காசில்லாததால் குழாய்த் தண்ணீரைக் குடித்து விட்டுச் செல்வதாக மேல்சாதி அவலத்தைச் சொல்லும் சிறுகதை.
  2. மனு நீதி நூல்: கொடுங்குற்றம் செய்திருந்தாலும் ஒரு பார்ப்பனனை அரசன் அல்லது வேறு ஒரு படித்த பார்ப்பனன் மட்டுமே விசாரிக்க முடியும்.
  3. மனுநீதி நூல் : எத்தனை வறுமைக்கு உள்ளானாலும் பார்ப்பனன் விவசாயத்தில் ஈடுபடக் கூடாது எனும் விதி.
  4. கி.பி.6-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வடமொழி நாடகம் மிருச்சகடிகம், அதாவது பொம்மை வண்டி. இந்த நாடகத்தில் திருடச் செல்லும் பார்ப்பனன் ஒருவன் கன்னக்கோலின் ஒரு முனையில் முடிந்து சுவற்றில் வட்டமிடுவதற்குத் தேவையான கயிறை எடுத்துச்செல்ல மறந்து விடுவான். கயிறுக்குப் பதிலாகப் பூணூலைப் பயன்படுத்துவான். அப்போது அவன் கூறும் வசனம் ”பார்ப்பனனுக்குத்தான் பூணூல் எவ்வளவு விதங்களில் பயனுள்ளதாக இருக்கிறது! முதுகு சொறிய, கன்னம் வைக்க…”
  5. சம்புகன்: சூத்திரனுக்கு தவம் செய்யும் உரிமையில்லை என்ற சநாதன தருமத்தை மீறி இறைவனைத் துதித்ததற்காக ராமனால் கொல்லப்பட்ட சூத்திர வருணத்தவன்.
    அஜமிலன்: பார்ப்பன குலத்தில் பிறந்து, சூத்திரப் பெண்ணை மணந்ததால் சாதி நீங்கம் செய்யப்பட்டவன். சாகும் தருவாயில் தனது மகன் நாராயணனை அழைக்க ”நாராயணா” என்று கூப்பிட்ட ஒரே காரணத்தினால் மோட்சம் பெற்றவன்.
  6. மனுநீதி: மிக மோசமான பாவம் செய்திருந்தாலும் அவன் திருடிய சொத்துக்களுடன் பார்ப்பனனை காயமின்றி நாடு கடத்த மட்டுமே முடியும்.
  7. சௌந்தரிய லஹரி: தேவியின் மீது ஆதிசங்கரன் எழுதிய தோத்திரம். தாயான தேவியை வருணிக்கும் வரிகள் காமசூத்திரத்தை விஞ்சக் கூடியவை.
    கனகதாரா ஸ்தோத்திரம்: கூரையைப் பிய்த்துக் கொண்டு தங்கம் கொட்டுவதற்காக ஆதிசங்கரன் எழுதிய பாடல்கள்.
  8. வியவகாரிக சத்யம்: ”உலகமே மாயை (பொய்) என்றால் உனக்கு சோறும், துணியும், பொன்னும், பொருளும் எதற்கடா?” என்று ஆதிசங்கரனை அன்றைய பொருள்முதல்வாதிகள் கேட்டபோது, ஆதிசங்கரன் சொன்னான்: ”இவையெல்லாம் வியவகாரிக சத்யம் (நடைமுறையில் உள்ள தற்காலிக உண்மைகள்) மட்டுமே; இறுதி ஆய்வில் பிரம்மமே சத்யம்; இவையெல்லாம் மாயை” என்றான்.
  9. ராஜீவ் நினைவு அறக்கட்டளைக்கு ஹர்சத் மேத்தா 25 லட்ச ரூபாய் நன்கொடை அளித்துள்ளான். அதை (சோனியா) வாங்கியது எங்ஙனம் சரி என்ற கேள்விக்கு கல்கியின் பதில்.
  10. வானப் பிரஸ்தம்: இல்லற வாழ்க்கையின் இறுதியில் (பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்) பிராமண, சத்திரிய, வைசிய குலத்தவர்கள் காட்டுக்குச் சென்று தவம் செய்ய வேண்டும் என்கிறது சநாதன தருமம். இந்தக் கட்டத்திற்குப் பெயர் வானப் பிரஸ்தம்.
  11. ஃபெய்ஸ் அகமது பெய்ஸ் கவிதையிலிருந்து.

___________________________________________________
புதிய கலாச்சாரம் அக்கடோபர் 1992
____________________________________________________