Saturday, August 20, 2022
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க அத்வைதமும் அர்ஷத் மேத்தாவும்!

அத்வைதமும் அர்ஷத் மேத்தாவும்!

-

ட விருட்சத்தின் நிழலில்
வேதங்களின் மறைபொருளை
விரல் நுனியில் காட்டியபடி
வீற்றிருந்தான் சங்கரன்-
ஆதி சங்கரன்ஆதி சங்கரர்

பிறவிப் பெருங்கடல் நீந்தி
பிறவாமைப் பேறுபெற,
சத்தியம் உணர்ந்து
முக்தி நிலை பெற- முனைந்த
சீடன் கேட்டான்:

“ஸ்வாமி…!
நான் யார்? அது எது?”
மோனம் கலைந்த
முனிவன் சொன்னான்;

“இரண்டில்லை,
அ-த்வைதம்”

“அர்த்தமாகவில்லை ஸ்வாமி”

மோகனச் சிரிப்புடன்
சங்கரன் தொடர்ந்தான்:
“அகம் பிரம்மாஸ்மி
நானே அதுவாக இருக்கிறேன்
நான் உருவமில்லாதவன்
நான் எங்குமிருப்பவன்
நான் சுதந்திரமானவன்
நானே பிரம்மம்
நானே சத்யம்”

நானே பங்கு மார்க்கெட்!

*

“அதென்ன சார்
பங்கு மார்க்கெட் ஊழல்?”

தம்பி…
ஊழலே பங்குச் சந்தை
பங்குச் சந்தையே ஊழல்.

“புரியலியே”

புரியாது.
உனக்குப் புரிவதற்காக
உண்டாக்கப்பட்டதல்ல
பங்குச் சந்தை.

கதைகேட்டு கதைகேட்டு
கனவில் வளர்ந்த \ அழிந்த தேசமே
நானும் ஒரு கதை சொல்வேன்-
கேள்!

ஒரு ஊரில்
ஒரு கணவன்.
மனைவியையும் கூட்டிக்கொடுக்கும்
கணவன்
ஒருநாள்
வாடிக்கைக் காரனொருவன்
அந்தப் பெண்ணோடு இருப்பதைப்
பண்பாடில்லாத
ஒரு வழிப்போக்கன்
பார்த்துவிட்டான்…

“அப்புறம்”

அநியாயம்…. அநியாயம் – என்று
கத்தினான்.
“புத்திசாலி” புருசன்காரனும்
அவன் கூடவே சேர்ந்து கத்தினான்.
சிக்கிக் கொண்ட வாடிக்கையாளன்
ஹர்ஷத் மேத்தா.

“புருசன்காரன்?”

ஒரு பெயராயிருந்தால்
சொல்வது சுலபம்
அவனுக்கு ஆயிரம் நாமங்கள்
கிருஷ்ணமூர்த்தி, சிதம்பரம்,
வெங்கடரமணன், சீதாராமன்,
கீதகிருஷ்ணன்…

“சரி, வுடுங்க சார்….
ஏதோ ஊழல்…
ஒண்ணும் புரியல
நமக்கு சம்பந்தமில்லை”

சம்பந்தமில்லை!
கோடிக்கு எத்தனை பூச்சியம்
என்று புரியாத
அறுபது கோடியே,
உனக்கு சம்பந்தமில்லை.
திருடனுக்கு
ஊதுபத்தி கொளுத்தவும்
வேசைக்கு மகுடம் சூட்டவும்
புரிந்த
ஓட்டு வங்கியே,
உனக்கு சம்பந்தமில்லை.

சிந்திக்காதபோது
புரிந்து கொள்ளும் தேசம்,
புரியாதபோது
சிந்திக்கச் சுணங்கும் தேசம்.

ஆதிசங்கரனே!
இதோ…
நீ காண விரும்பிய தேசம்.
தம்மின் மெலியாரை
(மெலியாரை மட்டுமே)
தாம் நோக்கித்
தம் நிலைமை
அம்மா பெரிதென்று
அகமகிழும் தேசம்-
கர்மயோகிகளின் தேசம்.
ஊண் இழந்தும்
உடுக்கை அவிழ்ந்தும்
உறக்கம் கலையாத தேசம்-
ஞான யோகிகளின் தேசம்.
இந்தப்
பண்பாடற்ற விதண்டாவாதி
வழிப்போக்கனை மட்டும்
ஒழித்து விட்டால்…

*

என்னே விதியின் விளையாட்டு!
அல்லாடி
ஆச்சாரியார்
சர்.சி.பி.ராமசாமி அய்யர்
ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரி..
என்று நெஞ்சை விடைத்த
அக்கிரகாரமே,

அய்யர், அய்யங்கார்
ஆச்சாரியார்
முதலியார்
செட்டியார் – என்று
கம்பீரமாக
வாலை அசைத்த கூட்டமே
எங்கே இப்போது
வாலைக் காணோம்?

ரிசர்வ் வங்கி கவர்னர்
வெங்கட ரமணன் (அய்யர்)
நிதித்துறைச் செயலர்
கீத கிருஷ்ணன் (அய்யர்)
அட்டர்னி ஜெனரல்
ராமசாமி (அய்யர்)
யூ.கோ.வங்கித் தலைவர்
மார்க்க பந்து (முதலியார்)
திட்டக்குழு உறுப்பினர்
கிருஷ்ணமூர்த்தி (அய்யர்)
அமைச்சர்
ப. சிதம்பரம் (செட்டியார்)
ஸ்டேட் வங்கி
சீதாராமன் (அய்யர்)

வாலறுத்த நரிகளே
இதென்ன அஞ்ஞாதவாசம்?
காலதேச வர்த்தமானம்
சரியில்லையோ?
இட ஒதுக்கீட்டு ராகுவை
விழுங்கிய உங்கள்
அனல் கக்கும் நிலவுகள் எங்கே?

இட ஒதுக்கீட்டை
குழாய்த் தண்ணீரில் மூழ்கடித்த
சுஜாதா அவர்களே (1),
உழைப்பால் உயர்ந்த உத்தமர்
கிருஷ்ணமூர்த்தி அய்யரைப் பற்றி
‘கணையாழி’யின்
கடைசிப் பக்கத்திலாவது
நாலு ‘நறுக்’கெழுத்து
எழுதக் கூடாதா?

முதலியார் கண்ணீர் வடித்த
சிந்தனை சந்தர்,
சினா தானா
தென்னை மரமேறிய கதையை
நாலு ரீல் சுற்றலாமே!

ஏன் இந்த மயான அமைதி?
நேற்று முன்தினம் வரை
‘திறமை’யான ஜனாதிபதிக்காக
வாதாடிய உங்கள்
தர்க்கசாஸ்திர சிரோன்மணிகள்
எங்கே?

மண்டலாசுரனை வீழ்த்திய
பிரம்மாஸ்திரம்
பூமராங்காய்த் திரும்பிப் பாய்கிறதோ!

புரிகிறது.
தர்க்க சாத்திரத்தில்
தோல்வி கண்டவர்கள்
தர்ம சாத்திரத்தில்
தஞ்சம் புகுந்து விட்டீர்கள்.
இதுவல்லவோ
சங்கரன் வகுத்த வழி!

சட்டப் பிரிவு -8 உட்பிரிவு -9ன் படி(2)
ஒழுக்க சீலர்களை
விசாரிக்கும் அதிகாரம்
ஒழுக்க சீலர்களுக்கு மட்டுமே
உரியது.

கிருஷ்ணமூர்த்தி அய்யரை
மணிசங்கர் அய்யர்
விசாரிக்கட்டும்

வெங்கட ரமணய்யரின்
தவறுகளை
ஜானகி ராமய்யர் ஆராயட்டும்

ஜானகி ராமய்யரின்
நடத்தைக்கு
நரசிம்மராவ்
(சந்தேகம் வேண்டாம் – நம்மவர்தான்)
உத்திரவாத மளிக்கட்டும்.

நரசிம்மராவின் யோக்யதைக்கு
எல்லாம் வல்ல இறைவன்
(அல்லது ஜார்ஜ் புஷ்)
சான்று பகரட்டும்!

*

“சட்டத்தின் ஓட்டைகளை
ஹர்ஷத் மேத்தா
திறமையாகப்
பயன்படுத்திக் கொண்டார்
அவ்வளவுதான்” –
ராம் ஜேத்மலானி

ஓட்டை…!
பெருச்சாளிகளும்
பன்றிகளும் மட்டுமே
தப்பவியலும்
பிரம்மாண்டமான ஓட்டை.

ஆனால்
எலிகள் எலிகள் மட்டும்
என்றுமே தப்பவியலாத ஓட்டை.

பௌதீக விதிகளை மறுக்கும்
இந்த தெய்வீக ஓட்டைகளை
சிருஷ்டித்தவன் யார்?

மயனா
பிரம்மனா
பரந்தாமனா
அல்லாடியா அல்லது
ஆனந்த பவனத்துக்
குற்றப் பரம்பரையா?

கன்னம் வைப்பதும்
திறமையென்றால்…
நீங்கள் திறமைசாலிகளே.

சட்டப் பிரிவு 10 உட்பிரிவு 84-ன் படி(3)
இரும்பினால் செய்த
கலப்பையைத்தான்
பிராமணன் தொடக் கூடாது
கன்னக் கோலுக்கு
தோஷமில்லை.

மிருச்சகடிகத்தின்
பார்ப்பனத் திருடன் கூறியது போல(4)
பூணூலும்
கன்னக்கோல் சுற்றும்
ஓர் ஆயுதமே.

எது திறமை
எது திருட்டு
என்ன வேறுபாடு?

அ-த்வைதம்!

துவாபர யுகத்தின் திருட்டு
கலியுகத்தில் திறமை

துவாபர யுகத்திலேயே
சகுனியின் நயவஞ்சகம்-
கண்ணனுக்கு லீலாவிநோதம்

துச்சாதனனின் துகிலுரிதல்-
துவாரகா பாலனின் ராசலீலை.

ஆனந்த விகடனின்
கேலிச்சித்திரத் திருடர்கள்
கிருஷ்ணமூர்த்தி அய்யரை
ஒத்திருந்ததுண்டா?

கேடி கந்தன்
பிளேடு பக்கிரி
பத்மவிபூஷன் கிருஷ்ணமூர்த்தி

ஆதி சங்கரனிடம்
நீதி கேட்டுப் பார்ப்போம்.

சாமி!
எது திறமை? எது திருட்டு?

“அத்வைதம்-
கயிற்றரவம்.”
விளங்கலையே சாமி.

“மூடனே கேள்
பகலில் கயிறு
இரவிலே பாம்பு
உன் பார்வையில்தான் பேதம்”

ஆதி சங்கரன்
குழப்புகிறான்
மணி சங்கரனை (ஐயர்)
கேட்போம்.

“கிருஷ்ணமூர்த்தி என் நண்பர்
அவர் குற்றவாளி அல்லர்
குற்றம் சாட்டப்பட்டவர்
அவ்வளவுதான். நண்பனும் நானே
நீதிபதியும் நானே”
பகலில் நீதிபதி
இரவில் நண்பன்
அத்வைதம்!

*

திறமையே திருட்டு
திருட்டே திறமை
அத்வைதம்!

அற்புதம்!
யுக யுகாந்திரங்களாய்
பாரதத்தை இணைத்து நிற்கும்
அந்தப் பண்பாட்டு இழையை,

பாரத மக்களின்
கழுத்தைச் சுற்றிப் பின்னியிருக்கும்
ஹிந்து தர்மம் எனும்
சுருக்குக் கயிற்றை
(மீண்டும் அத்வைதம்)
கண்டு கொண்டோம்.

என்ன ஒற்றுமை!
தத்துவ சாத்திரம்
தவிடு பொடியானவுடன்
தரும (மனு) சாத்திரத்தில்
சரண் புகுந்தான்
அந்த சங்கரன்

“நண்பனே நீதிபதியா?” என்று
ஒழுக்க மரபுகளைச்
சுட்டிக் காட்டினால்
குற்றவியல் சட்டத்தில்
ஒளிகிறான்
இந்த சங்கரன்.

ஒழுக்க சாரதிகளே,
முகத்தில் உதித்த
முதல் வருணத்தோரே,
என்னே உங்கள் அவலம்!

சமூகத்தின்
முகத்தில் விழிக்க அஞ்சி
சட்டத்தின்
பிட்டத்திற்குப் பின்னே
பதுங்குகிறான் உங்கள் சங்கரன்

குற்றவுணர்வுக்குப் பதில்
சட்ட உணர்வு.

சட்டம்!
நீங்கள் வகுத்த சட்டம்.
ஒழுக்கம் ஓரடி பாயுமுன்
பாதாளம் நோக்கி
பதினாறடி பாயும் சட்டம்.

சீரழிவுத் தொடர் ஓட்டத்தில்
ஒழுக்கத்தின் கையிலிருந்து
கட்டையைப் பறித்துக் கொண்டு
பாய்ந்தோடக்
கால் துடிக்கும் சட்டம்.

“குற்றம் சாட்டுபவன்தான்
நிரூபிக்க வேண்டும்-
குற்றம் சாட்டப்பட்டவன்
தன்னை நிரபராதியென
நிரூபித்துக் கொள்ள வேண்டுமென்றால்
அது பாசிசம்”-
மணிசங்கர் அய்யர்.

ஆகா!
அப்பழுக்கற்று ஜொலிக்கும்
இந்த
தூய ஜனநாயகத்தின் ஒளி,
பகல்பூரிலும், வாரணாசியிலும்
காஷ்மீரிலும், பஞ்சாபிலும்
அஸ்ஸாமிலும், தமிழகத்திலும்
…அண்ணாமலை நகரிலும்
படாமல் போனது ஏன்
சாத்தானே?
மன்னிக்கவும்.
தேவரே! பூதேவரே!

சட்டத்தின் முன்
அனைவரும் சமம்
கிருஷ்ணமூர்த்தி அய்யர்
கொஞ்சம் அதிகமாக சமம்.

சம்புகனுக்கு சிரச்சேதம்
அஜமிலனுக்கு சொர்க்கம்(5)

தென்னை மரத்தில்
புல் பிடுங்க ஏறிய
சிதம்பரம் செட்டியார்
இறங்கி விட்டார்.
வெற்றி…! வெற்றி…!
நல்லொழுக்கத்திற்கு வெற்றி!

“என்னுடைய மந்திரிகளை
யாரேனும்
தென்னை மரத்தின் உச்சியில்
கண்டால் சொல்லுமய்யா
இறக்கி விட்டு விடுகிறேன்”-
கர்ஜிக்கிறார் நரசிம்மராவ்

“அபாரம்! என்ன துணிச்சல்!
என்ன கண்டிப்பு!”
புல் அரிக்கிறது தினமணிக்கு.

ஏறிய குற்றத்திற்கு
இறங்குவதே தண்டனை!

எப்படியும் நாம்
சட்டப் பிரிவு – 8 உட்பிரிவு-380 ஐ
மீற இயலாது.(6)

*

ஹர்ஷத் மேத்தா“யார் செய்யவில்லை?
நான் மட்டுமென்ன
பலிகடாவா?”-
ஹர்ஷத் மேத்தா

அப்படிப் போடு!
யார் செய்யவில்லை?

ஆட்டுப் பாலை
பிர்லா மாளிகையில் அமர்ந்து
பருக நேரிட்டதையும்,

வேர்க்கடலையை
பஜாஜ் வீட்டிலிருந்தபடி
(மாட்டுக் கொட்டிலாகத்தான் இருக்கட்டுமே)
கொறிக்க நேர்ந்ததையும் பற்றி

மகாத்மாவை
யாரேனும்
கேள்விக்குள்ளாக்கியதுண்டா?

அவரது
பிரம்மச்சரிய சோதனை பற்றி
குறைந்த பட்சம்
குமுதம் ‘லைட்ஸ் ஆன்’ பகுதியில்
ஒரு வரி
கிசுகிசு செய்தியாவது உண்டா?

தாத்தாவுக்கு ஒரு நீதி
பேரன்
மேத்தாவுக்கு ஒரு நீதியா?

அல்லது
பிரம்ம சூத்திரத்திற்கு
பாஷ்யம் எழுதிய
திருக்கரத்தால்
சௌந்தரிய லஹரியும்
கனகதாரா ஸ்தோத்திரமும்(7)
எழுதியதற்காக
ஆதி சங்கரனைக்
குற்றம் சொல்வார்தான் உண்டா?

அன்று முதல்
இன்று வரை
சத்திய சோதனையில்
விஞ்சி நிற்பது
வியவகாரிக சத்யம்தானே!(8)

“இது நம்
அமைப்பு முறையின் தோல்வி
நாம் எல்லோருமே பொறுப்பு”
–மன்மோகன் சிங்

எதிர்மறைகளின்
ஒற்றுமை குறித்த
இயங்கியல் விளக்கத்தை
இதை விடத் துல்லியமாக
யாரால் விளக்க முடியும்?

பறிகொடுத்தவனின் குற்றம்-
அஜாக்கிரதை

பறித்தெடுத்தவனின் குற்றம்-
திருட்டு

இருவருமே தவறிழைத்துள்ளனர்.
மொத்தத்தில் இது
நம் அனைவரின் தவறு.

“திருப்பதி உண்டியலில்
திருடன்
காணிக்கை செலுத்தினால்
அதற்கு
திருவேங்கடத்தானைக்
குற்றம் சொல்ல முடியுமா?”
என்கிறார்
கல்கி – ராஜேந்திரய்யா(9)

முடியாது.
மன்மதக் கலையைக்
கற்றுத் தேற
மாற்றான் மனையைப்
புணர்ந்ததற்காக
அந்த மகானை-
ஆதிசங்கரனை
நாம் எங்ஙனம்
குற்றம் கூறவியலும்?

உவமானங்கள்
உருவகங்கள்
நீதிக் கதைகள்…

கனவான்களே,
இடியாக முழங்கும்
உங்கள் வாதங்கள்
எங்களை
ஒழுக்க செவிடர்களாக்குகின்றன.

வானவில்லாய் ஒளிரும்
உங்கள் அறிவோ
எம்மை
வண்ணக் குருடர்களாக்குகிறது.

என்ன இருந்தாலும்
நீங்கள் படித்தவர்கள்
தர்ப்பைப் புல் முதல்
சூப்பர் கம்ப்யூட்டர் வரை
உங்கள்
மடி சஞ்சியில் அடக்கம்.

நீங்கள்
அறிவாளிகள்
எனவே
திறமை சாலிகள்
எனவே
ஒழுக்க சீலர்கள்

‘சட்டப்படி’
ஒழுக்க சீலர்கள்.

மூடர்களும், தற்குறிகளும்
நிரம்பிய இந்த தேசத்தைப்
பரிபாலிக்க
நீங்கள் சகித்துக் கொண்ட
இன்னல்கள்தான் எத்தனை?
எங்களுடைய கைம்மாறை,
தட்சிணையை,
நீங்கள்
ஏற்றுத்தான் தீர வேண்டும்.

அதற்கு முன்,
அத்வைதிகளே
ஒரே ஒரு ஐயம்!

உங்கள் பட்டங்கள்
வேசியின் அலங்காரத்தை
ஒத்திருப்பதை
நீங்கள் கவனிக்கவில்லையா?

வேதம், புராணம்,
இதிகாசம், உபநிடதம்,
எம்.ஏ, எம்,பி.ஏ,
மின்னணு அறிவியல்
இன்ன பிற… இன்ன பிற…

எதற்கு?
உங்களை விற்றுக்கொள்வதற்கு.

என்றாலும்
தரும சாத்திரத்திலிருந்து
நீங்கள் வழுவுவதில்லை.

தான் கற்ற கல்வியைத்தான்
பார்ப்பனன் – காசுக்கு-
விற்கக் கூடாது.
தன்னையே விற்றுக்கொள்ள
தடையேதுமில்லை.

எங்கள்
கண்ணீரைக் குடித்து,
பெருமூச்சை சுவாசித்து,
பெருங்குடலைத் தின்று
எம் குழந்தைகளின்
அரிச்சுவடியைத் திருடிய,

உங்கள் திறமையின்
கால் தடங்கள்
எப்போது
சொர்க்கத்திலேயே முடிந்தன
இப்போது
அமெரிக்காவில் முடிகின்றன.

உங்கள்
புத்திரர்களும்
பௌத்திரர்களும் (பேரன்கள்)
அமெரிக்காவில்.

உங்கள
வானப் பிரஸ்தமோ(10)
மிலேச்சனின்
உலக வங்கியில்.

நீங்கள்
வெளிநாட்டில் குடியேறிய
இந்தியர்கள்.
நாங்கள்
சுதேசி அகதிகள்.

உங்கள் ஈசானம் டெல்லி
எங்கள் ஈசானம் சுடுகாடு.
உங்கள் மேற்திசை நியூயார்க்
எங்கள் மேற்திசை கட்டுமரம்.

திறமைசாலிகளே,
எங்கள் பாதங்களில்தான்
சீழ் வடிகிறது
உங்களுக்கோ
ஆன்மாவில் சீழ் வடிகிறது.

அதை
அத்தர் புனுகு சவ்வாது என்று
நாங்கள் பூசித்திரிந்த காலம்
முடிந்தது.
முடிந்தது.

தேசத்துரோகிகளே!
மனிதப் பதர்களே!!

“பழிக்குப் பழி என்று முழங்கி
நாங்கள்
வீதிகளில் சீறி வரும்போது

உங்கள்
கருணை மனுக்கள்
மழுப்பலான சமாதானங்கள்
எல்லாம் ஒதுக்கித் தள்ளப்படும்.

பிரமுகர்கள், பிரபலங்களின்
சிபாரிசுகள் செல்லுபடியாகாது.

தண்டனையும் பரிசும்
தெருவிலேயே தீர்மானிக்கப்படும்

சொர்க்கமா நரகமா
அங்கேயே முடிவாகி விடும்.

இறுதித் தீர்ப்பின் நாள்
இன்றே, இப்பொழுதே, இக்கணமே!”(11)

கயிறு அல்லது அரவம்.

திறமைசாலிகளே
தெரிவு செய்து கொள்ளுங்கள்!

என்ன துரதிருஷ்டம்!
இரண்டுமே
வியவகாரிக சத்யம்!!

– மருதையன்

அடிக்குறிப்பு

 1. கல்கியில் மத்தியமர் என்ற தொடரில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக சுஜாதா எழுதிய சிறுகதை. அதிகாரியின் மகளான நவநாகரீக தாழ்த்தப்பட்ட மங்கைக்கு தகுதியில்லாமலேயே வேலை கிடைக்க, தகுதியுள்ள முற்பட்ட சாதி இளைஞன் வாய்ப்பை இழந்து துவண்டு, காசில்லாததால் குழாய்த் தண்ணீரைக் குடித்து விட்டுச் செல்வதாக மேல்சாதி அவலத்தைச் சொல்லும் சிறுகதை.
 2. மனு நீதி நூல்: கொடுங்குற்றம் செய்திருந்தாலும் ஒரு பார்ப்பனனை அரசன் அல்லது வேறு ஒரு படித்த பார்ப்பனன் மட்டுமே விசாரிக்க முடியும்.
 3. மனுநீதி நூல் : எத்தனை வறுமைக்கு உள்ளானாலும் பார்ப்பனன் விவசாயத்தில் ஈடுபடக் கூடாது எனும் விதி.
 4. கி.பி.6-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வடமொழி நாடகம் மிருச்சகடிகம், அதாவது பொம்மை வண்டி. இந்த நாடகத்தில் திருடச் செல்லும் பார்ப்பனன் ஒருவன் கன்னக்கோலின் ஒரு முனையில் முடிந்து சுவற்றில் வட்டமிடுவதற்குத் தேவையான கயிறை எடுத்துச்செல்ல மறந்து விடுவான். கயிறுக்குப் பதிலாகப் பூணூலைப் பயன்படுத்துவான். அப்போது அவன் கூறும் வசனம் ”பார்ப்பனனுக்குத்தான் பூணூல் எவ்வளவு விதங்களில் பயனுள்ளதாக இருக்கிறது! முதுகு சொறிய, கன்னம் வைக்க…”
 5. சம்புகன்: சூத்திரனுக்கு தவம் செய்யும் உரிமையில்லை என்ற சநாதன தருமத்தை மீறி இறைவனைத் துதித்ததற்காக ராமனால் கொல்லப்பட்ட சூத்திர வருணத்தவன்.
  அஜமிலன்: பார்ப்பன குலத்தில் பிறந்து, சூத்திரப் பெண்ணை மணந்ததால் சாதி நீங்கம் செய்யப்பட்டவன். சாகும் தருவாயில் தனது மகன் நாராயணனை அழைக்க ”நாராயணா” என்று கூப்பிட்ட ஒரே காரணத்தினால் மோட்சம் பெற்றவன்.
 6. மனுநீதி: மிக மோசமான பாவம் செய்திருந்தாலும் அவன் திருடிய சொத்துக்களுடன் பார்ப்பனனை காயமின்றி நாடு கடத்த மட்டுமே முடியும்.
 7. சௌந்தரிய லஹரி: தேவியின் மீது ஆதிசங்கரன் எழுதிய தோத்திரம். தாயான தேவியை வருணிக்கும் வரிகள் காமசூத்திரத்தை விஞ்சக் கூடியவை.
  கனகதாரா ஸ்தோத்திரம்: கூரையைப் பிய்த்துக் கொண்டு தங்கம் கொட்டுவதற்காக ஆதிசங்கரன் எழுதிய பாடல்கள்.
 8. வியவகாரிக சத்யம்: ”உலகமே மாயை (பொய்) என்றால் உனக்கு சோறும், துணியும், பொன்னும், பொருளும் எதற்கடா?” என்று ஆதிசங்கரனை அன்றைய பொருள்முதல்வாதிகள் கேட்டபோது, ஆதிசங்கரன் சொன்னான்: ”இவையெல்லாம் வியவகாரிக சத்யம் (நடைமுறையில் உள்ள தற்காலிக உண்மைகள்) மட்டுமே; இறுதி ஆய்வில் பிரம்மமே சத்யம்; இவையெல்லாம் மாயை” என்றான்.
 9. ராஜீவ் நினைவு அறக்கட்டளைக்கு ஹர்சத் மேத்தா 25 லட்ச ரூபாய் நன்கொடை அளித்துள்ளான். அதை (சோனியா) வாங்கியது எங்ஙனம் சரி என்ற கேள்விக்கு கல்கியின் பதில்.
 10. வானப் பிரஸ்தம்: இல்லற வாழ்க்கையின் இறுதியில் (பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்) பிராமண, சத்திரிய, வைசிய குலத்தவர்கள் காட்டுக்குச் சென்று தவம் செய்ய வேண்டும் என்கிறது சநாதன தருமம். இந்தக் கட்டத்திற்குப் பெயர் வானப் பிரஸ்தம்.
 11. ஃபெய்ஸ் அகமது பெய்ஸ் கவிதையிலிருந்து.

___________________________________________________
புதிய கலாச்சாரம் அக்கடோபர் 1992
____________________________________________________

 1. பின்னூட்டப்பெட்டி தவறுதலாக மூடப்பட்டிருந்தது, திறக்கப்பட்டு விட்டது. சிரமத்திற்கு வருந்துகிறோம்.

   • Ambi,

    but i agree with that poem.

    But those are still some words,secondly i want to know why he expects substance from Crazy Mohan/Sv Shekar,they are just comedians.

   • அம்பி.பதிவின் சுட்டியை கொடுத்து அதில் ஒரு பின்னூட்டம் என்று சொன்னால் தேடுவது கடினம்.பின்னூட்டங்களுக்கும் சுட்டி உண்டு.பின்னூட்டங்களின் வலது மூலையில் மூக்கு கண்ணாடி வடிவில் ஒரு பொம்மை இருக்கும்.அதை சொடுக்கினால் மேலே முகவரி பெட்டியில் அந்த பின்னூட்டத்திற்கான சுட்டி தோன்றும்.

    • முன்பு அந்த கண்ணி என் உலவியில் தெரிந்து கொண்டிருந்தது.. இப்போது ஏதோ ஜாவா ச்கிரிப்ட் பிரச்சினை.. தெரிவதில்லை.. புதிய பதிவுகளும், பின்னூட்டங்களும் கூட தாமதமாகத்தான் (அடிக்கடி ரெஃப்ரச் செய்தாலும் கூட) தெரிகிறது.. நன்றி..

    • ஹர்ஷா போக்லே இப்படி ஒரு ஆங்கிலக் கவிதை எழுதியிருந்தால் பெண்கள் செருப்பால் அடிப்பார்கள்..

      • I see.. if your comment on that thread was not a poem then it is a random rant, showing your male chauvinistic attitude towards women, as your substance.. Not only on women, you are shovering insults on muslims also in other threads.. You are no better than a Tamil brahmin..

      • the way it is written says it is a poem,is it prose then,if not a poem or any other form,

       whats the point now AAR?

       You correctly recognized tam brahms as something,why dont you say which community you belong to?

 2. “அகம் பிரம்மாஸ்மி
  நானே அதுவாக இருக்கிறேன்
  நான் உருவமில்லாதவன்
  நான் எங்குமிருப்பவன்
  நான் சுதந்திரமானவன்
  நானே பிரம்மம்
  நானே சத்யம்”

  அரசியல், பங்குச் சந்தை இவற்றிற்கு அப்பால் ஒரு சில கருத்துகள்..

  ”அகம் பிரம்மாஸ்மி” என்ற மகா வாக்கியம் சங்கரரால் திரிக்கப்பட்டதா அல்லது அவருக்குப் பின் வந்த கிங்கரர்களால் திரிக்கப்பட்டதா என்ற வரலாற்று ஆராய்சியில் ஈடுபடாமல், உண்மையில் அதன் பொருள் என்ன என்று சிந்தித்தால் ஒரு பிரபஞ்ச சமத்துவக் கொள்கையின் கரு இருப்பதை உணர முடியும்..

  தன் முனைப்பான ”நானே அதுவாக இருக்கிறேன்” என்ற திரிபின் நீட்சி :

  நானே அது ; எனக்குப் பசித்தால் பிரம்மத்துக்குப் பசித்த மாதிரி; உன் வாயிலிருந்து பிடுங்கித் தின்றாவது நான் (பிரம்மம்) பசியாறலாம்; எனக்காக நான் எதுவும் செய்யலாம் – என்ற சிந்தனைக்கு வழி வகுக்கும்..

  மாறாக,

  “நானாக இருப்பதுவும் அதுவே” என்ற உணர்வின் நீட்சி :

  நீயாக இருப்பதுவும் அதுவே; அந்தக் குருவியாக இருப்பதுவும் அதுவே; ப்ரம்மமே எல்லாமாக இருக்கிறது என்ற உணர்வு பரந்து, சுயநலம் மறுக்கும், இயல்பான சமத்துவத்துடன் பேதமில்லாமல் பிரபஞ்சத்துடன் முழுமையாக ஒன்றிணையும் விரிந்த உள்ளம் கொள்ள வழி வகுக்கும்..

  ஆகவே அத்வைதிகளே, நானே அது ; உன் பணம் என் (ப்ரம்மத்தின்) பணம் என்று ஆட்டையைப் போடாதீர்கள்.. சத்தியம் எதுவென்று தெளிந்து உணருங்கள்..

 3. பார்ப்பனர்கள் உண்மையிலேயே அறிவாளிகள் / திறமைசாலிகள் – உழைக்காமல் ஊரை ஏமாற்றி பிழைப்பு நடத்துவதில்!

 4. செந்தில் – அண்ணே மொட்டைத் தலைக்கும் முருங்கை மரத்திற்கும் முடிச்சுப் போடுவது என்றால் என்ன அண்ணே?

  கவுண்டமணி – டேய், பேரிக்காய் தலையா, அத்வைதத்திற்கும் அர்ஷத் மேத்தாவுக்கும் முடிச்சுப் போடுறதுதாண்டா,அது.

 5. ஐயா வினவு,

  டெல்லில ஊழல் செஞ்சா அதுக்கு இந்து மதம் காரணம்.

  சென்னையில இருக்கிற கருணாநிதி ஊழல் செஞ்சா அது கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரின் நாத்திகம் செய்த ஊழல் என்று எடுத்துக் கொள்ளலாமா?

 6. ஆமாம் இந்தியாவில நடக்கிற ஊழல்களுக்கு

  சட்டத்துல ஓட்டையை வைத்து எழுதினாரே அந்த அம்பேத்கர் அவருக்கும், அவர் தழுவிய மதத்திற்கும் சம்பந்தம் இல்லையா, அதாங்க புத்த மதம்? இலங்கை போற்றும் புத்தமதம்.

 7. ஐயா வினவு,

  அதெப்படி பின்னூட்டம் தவறுதலாக மூடும். அந்த பின்னூட்டத்துக்கு தாழ்ப்பாள் இல்லையா?

  உங்களுக்குப் பிடிக்கலனா மூடிருவீங்க. வேணும்னா திறந்து விடுவீங்க. இதுல தவறுதலா மூடிருச்சுனு வேற பில்டப்.

  நடத்துங்க நடத்துங்க. தலித் ராஜாங்கம் நல்லாத்தான் இருக்கு.

 8. அத்வைதம், சங்கரன், பார்ப்பனீயம், பார்ப்பனர்கள், முதலாளித்வம், ஊழல் என பல சரடுகளை ஒன்று சேர்க்கப் பார்க்கும் கவிதை. ஒரு குறிப்பிட்ட விஷயம் பற்றிய என் கருத்து. இந்த ஊழல் பற்றி கணையாழியின் கடைசி பக்கங்களில் சுஜாதா ஏன் பேசவில்லை என்றொரு கேள்வி.

  சமீபத்தில் தான் இத்தொடரின் முழுத்தொகுப்பையும் படித்தேன் என்ற வகையில் அவர் தீவிர சமூக பிரச்சனைகள் எதை பற்றியும் இத்தொடரில் பேசவில்லை என்பதே என் உணர்வு. இலக்கியம் நகைச்சுவை, துணுக்குகள், சொந்த கதை என்றே ஜல்லி அடித்துக்கொண்டிருந்தார். இந்த உணர்வு சரியானது தானா எனப் பார்க்க இக்கவிதை எழுதப்பட்ட காலத்தை சுற்றி 1988 முதல் 1995 வரை என்ன எழுதினார் என புரட்டிப் பார்த்தேன் (முழுதும் படிக்கவில்லை). என் கணிப்புப்படியே சமூக பிரச்சனைகளை பற்றி ஒன்றும் என் கண்ணில் படவில்லை. உதாரணமாக மூன்று விஷயங்கள் கூறுகிறேன். மண்டல் கமிஷனுக்கு எதிராக 1990 இல் போராட்டம் (?) நடந்த காலத்தில் இதை பற்றி அவர் எதுவும் எழுதவில்லை. 1994 இல் தமிழக அரசு 69% இட ஒதுக்கீடு சட்டத்தை ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்தது பற்றியும் எதுவும் பேசவில்லை (கவிதை இடஒதுக்கீட்டை பற்றி குறிப்பிட்டதால் இந்த உதாரணங்கள்). மே 1991 இல் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் (அல்லது செத்துப் போனார்). இதற்கடுத்த ஜூன் 1991 இதழில் ராஜீவ் காந்தி பற்றி ஒரு சிறு பத்தி காணப்படுகிறது. இதில் அவர் ராஜீவை மூன்று முறை சந்தித்த அனுபவங்கள் பற்றி எழுதுகிறார் (குறிப்பிடும் படி ஏதும் இல்லை). இதை முடிக்கும் போது ராஜீவ் மரணம் பற்றி ஒற்றை வரி: “அவர் என்ன தப்பு பண்ணியிருந்தாலும் தண்டனை ஸ்ரீபெரும்புதூர் அல்ல. அநியாயம்.”

  இப்படி முக்கிய சமூக நிகழ்வுகள் பற்றி அவர் ஏதும் இத்தொடரில் பேசாதபோது ஏன் ஹர்ஷத் மேஹ்தா ஊழல் பற்றியும், அதில் சம்பந்தப்பட்ட பார்ப்பனர்கள் பற்றியும் பேசவில்லை என்பது சரி அல்ல.

  இத்தொடருக்கு வெளியே நான் சுஜாதா எழுத்துக்கள் அதிகம் படித்ததில்லை. எனவே வேறு இடங்களில் அவர் கூறிய கருத்துகள் பற்றி எனக்கு தெரியாது.

 9. நான் மேலே சொன்னது போல அத்வைதம், சங்கரன், பார்ப்பனீயம், பார்ப்பனர்கள், முதலாளித்வம், ஊழல் என பல சரடுகளை ஒன்று சேர்க்கப் பார்க்கும் கவிதை. இவற்றை தனித்தனியாக திட்டி இருக்கலாம். ஒன்றாக சேர்த்து திட்டியதில் இழைகள் ஒட்டவில்லை என்பது கருத்து.

  ஆனால், வினவு கட்டுரைகளை தொடர்ச்சியாக படித்து வருவதன் காரணமாக கவிதையின் ஒரு மையக்கருத்தை ஏற்கும் திசையில் முன்னேறிக் கொண்டிருக்கிறேன். அக்கருத்து அத்வைதத்தையும், முதலாளித்துவத்தின் ஒரு கூறையும் இணைக்கும் இவ்வரிகள்:

  // எது திறமை
  எது திருட்டு
  என்ன வேறுபாடு?
  அ-த்வைதம்! //

  அத்வைதம் கூறும் கயிற்றரவு போல மாயையே சத்தியமென தோன்றுவது போல — திறமையும், திருட்டும் ஒன்றென தோற்றமளிக்கும் நிலை முதலாளித்துவத்தில் உண்டு என்பதை கூறும் அருமையான வரிகள். ரஜத் குப்தா பற்றிய கட்டுரை நினைவுக்கு வருகிறது.

  கவிதையின் மற்ற சில கருத்துகளை நான் ஏற்கவில்லை. அவற்றை பற்றி பிறகு எழுத திட்டம்.

 10. அத்வைதத்தையும், ஹர்ஷத் மேத்தாவையும் இணைக்கும் கவிதையின் மற்றொரு கருத்தும் அருமை.

  //புரிகிறது.
  தர்க்க சாத்திரத்தில்
  தோல்வி கண்டவர்கள்
  தர்ம சாத்திரத்தில்
  தஞ்சம் புகுந்து விட்டீர்கள்.
  இதுவல்லவோ
  சங்கரன் வகுத்த வழி! //

  // சட்டத்தின் ஓட்டைகளை
  ஹர்ஷத் மேத்தா
  திறமையாகப்
  பயன்படுத்திக் கொண்டார்
  அவ்வளவுதான்” –
  ராம் ஜேத்மலானி //

  பிரம்மமென்றும், மாயை என்றும் தனது அத்வைத கொள்கையை கட்டைமைத்த சங்கரன் இதை தர்க்க ரீதியாக நிலைநாட்ட முயன்று அடிபடும் இடங்களில் “சுருதியே பிரமாணம்” என்று சாத்திரத்தில் அடைக்கலம் ஆகிறான். அது போல ஹர்ஷத் மேத்தா செய்தது சரியா, குற்றமா என தர்ம நியாயப் படி (moral grounds) பேசாமல், சட்டப்படி சரியே என்று விவாதிக்கிறார்கள்!

  இங்கே வழக்கம் போல் ஒரு disclaimer போட்டே ஆக வேண்டும். சங்கரன் இயற்றிய முக்கிய நூலான பிரம்மசூத்திர சங்கர பாஷ்யம் நான் படித்ததில்லை. ஆனால், பிரம்ம சூத்திரத்துக்கு சுஜாதா எழுதிய ஒரு “எளிய உரை” மற்றும், சுகவனேஸ்வரன் என்பவர் எழுதிய ஒரு எளிய விளக்கப் புத்தகமும் படித்திருக்கிறேன். இதில் முன்னது ராமானுஜரை பின்பற்றியும், பின்னது சங்கரனை பின்பற்றியும் எழுதப்பட்டவை (சுஜாதா ஒரு ஐயங்கார் என்று அறிக!). இவற்றை படித்ததில் இருந்து கிடைத்த புரிதல் அடிப்படையில் “கருத்துக்கள்” எடுத்து விட்டுக் கொண்டிருக்கிறேன்.

  இப்படி துண்டு துண்டாக மறுமொழி எழுதுவதற்கு மன்னிக்கவும். நல்ல கவிதை. மீண்டும் மீண்டும் படிக்கும் போது தோன்றுவதை எழுதி வருகிறேன். முழுதும் தொகுத்து ஒரே மறுமொழியாக எழுத பொறுமை இல்லை

  • // பிரம்மமென்றும், மாயை என்றும் தனது அத்வைத கொள்கையை கட்டைமைத்த சங்கரன் இதை தர்க்க ரீதியாக நிலைநாட்ட முயன்று அடிபடும் இடங்களில் “சுருதியே பிரமாணம்” என்று சாத்திரத்தில் அடைக்கலம் ஆகிறான். //

   சுருதி சாத்திரமா, வேதங்களா..?! எல்லா தர்க்கங்களும் சில அடிப்படைகளின் (Premises) மீதுதானே நடைபெறமுடியும்.. சார்வாகம் புலன்களுக்கும், நிரூபண அறிவுக்கும் எட்டுவனவற்றையே தன் தர்க்கங்களின் அடிப்படைகளாகக் கொண்டிருந்தது.. பௌத்தமும்,சமணமும் கூட, வேதாந்தம் அளவிற்கு இல்லாவிட்டாலும், அடிப்படை நம்பிக்கைகள் மேல்தான் தர்க்கங்களை கட்டமைத்தன.. தர்க்கங்கள் பிற அடிப்படைகளையே கேள்விக்குள்ளாக்கும் போது, ஒவ்வொருவரும் தங்கள் அடிப்படைகளை விட்டுக் கொடுக்காமல் அதில் சரணாகதி அடைகிறார்கள்..

   • அம்பி,
    ஸ்ருதி உபநிடதங்களை உள்ளடக்கிய வேதம் மட்டுமே. அடுக்கு மொழியில் எழுதப் போய் “சாத்திரம்” என்று தவறுதலாக எழுதிவிட்டேன்.

    நீங்கள் சொல்வது உண்மைதான். எல்லா தர்க்கங்களுக்கும் சில premises (அல்லது axioms) தேவை. அவற்றை அடிப்படையாக கொண்டுதான் மேலே கோட்பாடுகளை கட்டமைக்க முடியும். பௌத்தம், சமணம், சார்வாகம் மட்டுமல்ல, அறிவியலும் அப்படித்தானே. உதாரணமாக, Gravitational Constant என்பது உண்மையில் ஒரு கான்ஸ்டன்ட் தானா? இங்கே இருக்கும் value தான் Andromeda galaxy இலும் உள்ளது என்று நிச்சயம் தெரியுமா? இப்போது உள்ள value தான் மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கும் முன்பு இருந்தது என்று நிச்சயித்து சொல்ல முடியுமா? இது வரை இந்த விதிக்கு எதிர் ஆதாரம் ஏதும் கிடைக்காததாலும், இந்த விதியை அடிப்படையாக கொண்டு இதுநாள் வரை செய்யப்பட்ட predictions சரியாய் இருந்து வந்திருப்பதாலும், இதை ஒரு “law” அல்லது premise ஆக கொண்டுள்ளனர். அறிவியல் இந்த premise மீது கட்டமைக்கும் மற்ற கோட்பாடுகளை கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால் அறிவியல் இந்த premise இடம் அடைக்கலம் ஆகிவிடும். பொதுவாக “போதிய ஆதாரங்கள் இருந்து, போதிய அளவு சரியான predictions செய்ய முடிந்த எந்த விதியையும் law அல்லது premise” என ஏற்றுக்கொள்கின்றனர். ஒரு விதத்தில் இந்த principle கூட ஒரு preimise தான்! இந்த principle ஐ கணிதம் ஏற்காது என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்! ஆனால் ஒன்று. எந்த premise க்கும் எதிர் ஆதாரம் கிடைக்கும் போது அதை தூக்கி எறிய அறிவியல் தயங்குவதில்லை.

    அம்பி, எனது முந்தைய மறுமொழி அத்வைதத்திற்கு எதிர் விவாதம் செய்யும் நோக்கில் எழுதப்பட்டதல்ல. கவிதையில் அத்வைதத்திற்கும் இந்த ஊழல் சமாச்சாரதிற்கும் போட்ட ஒரு முடிச்சு பிடித்திருந்தது. அதை சுட்டி காட்டி இரண்டு வரி எழுதினேன். அவ்வளவே. அத்வைதக் கோட்பாடுகளில் எனக்கு பிடித்த விஷயங்களை வேறொரு மறுமொழியில் எழுத திட்டம்.

    • // இந்த principle ஐ கணிதம் ஏற்காது என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்! //

     மிகச் சரி..!

 11. இந்த ஊழல் பற்றி கணையாழியின் கடைசி பக்கங்களில் சுஜாதா ஏன் பேசவில்லை என்றொரு கேள்வி.///…

  வினவு ஒரு அப்சல் குரு தூக்கில் தொங்கி உயிர் போனது பற்றி பேசும்போது ஞானேஸ்வரி ரயில் வெடித்து இறந்த நூறு உயிர்கள் பற்றி ஏன் பேசவில்லை??? மட்டறுக்காமல் பதில் அளிக்க முடியுமா?

 12. இந்து ய அரசியலமைப்பை தோலுரிக்குm அருமையான கவிதை. எழுதியவர் ஒரு முன்னாள் பார்ப்பனர் என்று கருதுகிறேன். அருமையாக ஒப்பீடு செய்து இருக்கிறார்.

  • இந்நாளில் பூணுலை அறுத்தெறிந்த கம்யூனிஸ்டாக இருக்கலாம்.

 13. இந்து மதத்தை சாடும் தலித்களுக்கு இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம் போன்ற மதங்கள் வெல்லமாக இனிப்பதுதான் ஆச்சரியம்.

  • ஐயா,
   தலித் தலித்தானதற்கு இந்து மதம் காரணமாதலால் சாடுகிறார்கள்…
   இது கசப்பான உண்மை…

   மற்ற நாடுகளிலும் இத்தகைய பழக்கங்கள் இருந்திருக்கிறது…ஆனால் நம் நாட்டினர் தாம் வாழும் சமூகத்திலுள்ள அநீதிகளையே சாட முடியும்…

 14. “இந்து மதத்தை சாடும் தலித்களுக்கு இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம் போன்ற மதங்கள் வெல்லமாக இனிப்பதுதான் ஆச்சரியம்.”

  அய்யா அ. சுடரே, ஆச்சரியப்படுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், அதை ஆராய்ச்சி செய்து பாருங்கள். எங்களுக்கும் சொல்லுங்கள்.

 15. என்ன சொன்னாலும் சரி…
  வெறும் வாயில் வடை சுடும் செயல் தான் இந்த சாஸ்திர பம்மாத்து…

  ஓசியில் சோறு கிடைத்தால் நன்றாக சுடலாம்…

  தோழர் மருதையன் கவிதை அருமை…இது கூறுவது கசப்பான உண்மை…

 16. //அய்யா அ. சுடரே, ஆச்சரியப்படுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், அதை ஆராய்ச்சி செய்து பாருங்கள். எங்களுக்கும் சொல்லுங்கள்.//

  ஐயா, அறிவுக்கடலே, நீங்களே அதை ஒப்பிட்டுப் பார்த்துச் சொல்லுங்கள்.

  • ஆரம்பக் காலங்களில் இருந்து மனிதன் ஒவ்வொன்றையும் பார்த்து ஆச்சரியப்பட்டு, வியந்து, பின் ஆராய்ந்து தெளிவுபட்டு, ஒவ்வொன்றாக கண்டுபிடித்தான். அறிவுள்ள மனிதன் அவ்வாறுதான் செய்வான். ஆச்சரியப்பட்டவர் நீங்கள். நீங்கள் தான் அதை ஆராய்ந்து பார்த்து தெளிவடைந்து விளக்க வேண்டும். வெறுதே குறை குடம் போல் தளும்பிக் கொண்டு கமெண்ட் இடாதீர்கள். புத்திசாலித்தனம் என்று எண்ணிக்கொண்டு சும்மாவாவது எல்லாவற்றிற்கும் கமெண்ட் இடுகிறேன் பேர்வழி என்று கிறுக்கிக் கொண்டிருக்காதீர்கள். நான் சொன்னது போல் அறிவுள்ள மனிதன் ஆச்சரியப்படுவதோடு நிறுத்திக்கொள்ளமாட்டான். நீங்கள் எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. (வர வர கொசு தொல்லை அதிகமாகிவிட்டதல்லவா அய்யா பெருமாள் தேவனே???)

 17. சஙகரனின் அத்வைத குழப்பம் பற்றிய தாத்தாசாரியாரின் கருத்தை படித்தீர்கலா வெஙகடேசன்?

  • Ajathasatru,
   சுட்டிக்கு நன்றி.

   நீங்கள் குறிப்பிட்ட பதிவு 13 இல் இருந்து 20 வரை படித்தேன். மடங்களின் மீது எனக்கு பெரிய நாட்டமேதும் இல்லாததால் மேலே சொன்ன பதிவுகளில் இரண்டாம் பகுதி பற்றி கருத்து ஏதுமில்லை. இம்மடங்கள் சங்கரன் சொன்ன வழியில் செல்லவில்லை என்பது உண்மையே. குறிப்பாக, இன்றைய காஞ்சி மடம் அத்வைதத்திற்கு பதிலாக எயிட்சை பரப்பும் திசையில் சென்று கொண்டு இருக்கிறதோ என்று எனக்கொரு சந்தேகம்! சங்கரன் 32 வயதில் காலமானான் என்பதும் அவன்தான் நான்கு மடங்களை ஸ்தாபித்தான் என்பதும் ஐதீகம். நியூட்டன் தலையில் ஆப்பிள் விழுந்தது போல. இதை ஒரு கதையாக பார்த்து விட்டு விடலாம். அல்லது விருப்பமுள்ளவர் வரலாற்று ஆராய்ச்சியில் இறங்கலாம். பதிவுகளின் முற்பகுதி எனக்கு ஆர்வமுள்ள ஒன்று. இந்த பகுதி எனது புரிதலை மேலும் அதிகப் படுத்தியது.

   மெத்தப் படித்தவரான தாதாசாரியார் கூறுவதை எதிர்கத் தயங்கினாலும் பதிவுகளின் சில கருத்துகள் எனக்கு ஏற்புடையவை அல்ல என்பதை கூற வேண்டும்.

   // ஒரு பொருளின் மீது ஆசைப்பட்டு அடைய முயற்சிகள் செய்து முயற்சியில் வெற்றிபெற்று ஆனந்தப்படுவது தான் அறிவு -என்கிறது உபநிஷது. //

   இதற்கு நேர்மாறான கூற்றை கட உபநிடதத்தில் காணமுடியும். நசிகேடனுடன் உரையாடும் யமதர்மன் இரண்டு வழிகளை காட்டுகிறான்: பெண், பொன், புகழ், சுவர்க்கம் போன்றவற்றை நோக்கமாக கொண்டது ஒரு வழி. ஆன்மா-பிரம்மம் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டது மற்றொரு வழி. வேறொரு உபநிடதத்தில் “வேதம், வேள்வி போன்றவற்றை பற்றிய அறிவு கீழானது, பிரம்மத்தை பற்றிய அறிவே மேலானது” என்று சொல்லப்படுகிறது (கையில் புத்தகங்கள் தற்சமயம் இல்லாததால் மேற்கோள் கட்டி சரியாக எழுத இயலவில்லை). ஆக வேத கர்மங்களை பவுத்தம், அத்வைதம் மட்டுமல்ல, வேதத்தின் ஒரு பகுதியாகிய சில உபநிடதங்களும் எதிர்கின்றன.

   அடுத்ததாக சங்கரன் பவுத்தில் இருந்தே தனது கொள்கையை வரித்தான் என்ற கூற்று. சங்கரனுக்கு அத்வைதத்தின் ஒரு பகுதி பவுத்தத்தில் இருந்து கிடைத்தாலும், அவன் தனது பாஷ்யம் முழுதும் உபநிஷதங்களில் இருந்தே மேற்கோள் காட்டுகிறான். “சர்வம் கல்விதம் பிரம்மம்” என்பது உபநிடத கூற்று.

   ஞானத்தை முன்னிறுத்தி பேசிய சங்கரன் “வேத கர்மங்கள் செய்தால் முக்தி” என்றொரு முரண்பாட்டை செய்கிறான் என்றொரு கருத்தை சொல்கிறார். இதை நான் வேறு விதமாக புரிந்து கொள்கிறேன். எந்த கர்மமாய் இருந்தாலும் தன்னலம் இன்றி செய்பவன் முக்தி அடைகிறான் என்பதாக. கொக்கு-முனிவன் கதையில் வரும் கசாப்பு கடைக்காரன் போல. இருப்பினும் இந்த முரண்பட்டு பற்றி எனக்கு போதிய புரிதல் இல்லை.

   வேதத்தின் பகுதிகள் பலராலும் எழுதப்பட்டதால் முரண்பாடுகளை தன்னகத்தே கொண்டது. ஒரு சீரான கோட்பாட்டை முன்வைப்பதில்லை. அதனால் தான் “குழந்தாய் பால் குடி” என்பது போன்ற கருத்துகள்; சூரியன், வருணன் என இயற்கை குறித்த பாடல்கள், வேண்டல்கள்; “மாத்ரு தேவோ பவ” என்ற அறிவுரைகள்; வேள்விகளும், பயன்களும் என எங்கெங்கோ சுற்றி “சர்வம் கல்விதம் ப்ரம்மம்” என்பது வரை எல்லாவற்றையும் பேசுகின்றன.

   பொதுவாகவே, இந்து மதம் என இப்போது அழைக்கப்படுவது ஒரு சந்தைக் கடை போல. பலதும் கிடைக்கும். உங்களுக்கு எது, எது விருப்பமோ எடுத்துக்கொள்ளலாம். இன்று தேர்ந்தெடுத்த பொருள்களில் சில பிடிக்காமல் போனால் தூர எரிந்து விட்டு வேறாவது எடுத்துக் கொள்ளலாம். இல்லையேல் எல்லாம் டுபாக்கூர் என விட்டு விடுவதும் அவரரவர் விருப்பம்.

   நல்ல பதிவுகள். சுட்டிக்கு நன்றி. அத்வைதம் பற்றி எனது புரிதலை இங்கே எழுத ஆசை. ஆனால், தகுந்த நேரம் கிடைக்கவில்லை

 18. // ஒரு பொருளின் மீது ஆசைப்பட்டு அடைய முயற்சிகள் செய்து முயற்சியில் வெற்றிபெற்று ஆனந்தப்படுவது தான் அறிவு -என்கிறது உபநிஷது. //

  தாத்தாச்சாரியாரின் வியாக்கியானங்கள் பலவற்றிலும் திரித்தல், கற்பனைகள் உண்டு.. இங்கே, பரம்பொருளை வெறும்பொருளாக்கி வியாக்கியானம் கொடுத்து வைத்திருக்கிறாரோ..?!

  தாத்தாச்சாரியாருக்கு வைணவ சுடராழி ஜோசப் அவர்களைத் தவிர பார்ப்பனர்கள் யாரும் பதிலடி கொடுத்ததைப் போல் தெரியவில்லை.. தட்சிணை வைத்தால்தான் பார்ப்பான் தன்னை திட்டுபவர்களுக்கு கூட பதிலடி கொடுப்பான் போலிருக்கிறது..!

  http://www.dajoseph.com/Essays.html

  • // இங்கே, பரம்பொருளை வெறும்பொருளாக்கி வியாக்கியானம் கொடுத்து வைத்திருக்கிறாரோ..?! //

   நல்ல கருத்து, அம்பி. நீங்கள் சொன்னபடி தாத்தாச்சாரியார் பரம்பொருள் குறித்து சொன்னதை அத்வைதப்படி எல்லாப் பொருள்களுக்கும் பொருத்தி இருக்கலாம்! அல்லது, 108 உபநிடதங்களில் எங்கேனும் தாத்தாச்சாரியார் சொன்ன பொருளில் இருக்கிறதோ என்னவோ! யாமறியோம் பராபரமே! ஜோசப் சுட்டிக்கு நன்றி.

  • ஜோசப் அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்த தாத்தாசாரியாரின் 71 ஆம் பதிவை பதிவை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். ராப்பத்து-பகல்பத்து உற்சவங்களில் திருவரங்கத்து மூலவர் தமிழ் கேட்கக்கூடாது என்பதற்காக உற்சவரை வெளி மண்டபத்துக்கு கொண்டு வந்து ப்ரபந்தம் பாடுகிறார்கள் என்கிறார். அபாண்டம்.

   திருவரங்கம் கோவில் பற்றி எனக்கு தெரியாது. காஞ்சீபுரத்தில் இருக்கும் நடைமுறையே அங்கும் இருக்கும் என்ற எண்ணத்தில் எழுதுகிறேன். காஞ்சி கோவிலில் வேதம் எங்கெல்லாம் ஓதப்படுகிறதோ அங்கெல்லாம் தமிழும் ஓதலாம். மேற் சொன்ன உற்சவத்தில் பெருமாளுக்கு இருபுறமும் ஆழ்வார்களும், ஆச்சாரியார்களும் இருத்தி வைத்து இருபது நாட்களுக்கு பிரபந்தம் ஓதுவர். சுமார் இருபது சிலைகளுக்கு கருவறையில் இடம் ஏது ஐயா? இந்த உற்சவமே பைந்தமிழால் பரமனைப் பாடிய ஆழ்வார்களை கொண்டாட ஏற்ப்படுத்தப் பட்டது. வேதம் படைத்த ரிஷிகளுக்கோ, அதை தொகுத்த வியாசனுக்கோ சிலை கிடையாது. ஆழ்வார்களுக்கே சிலைகள். பூஜைகள். எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. வீதி உலாவில் தமிழே முன் செல்லும். வேதம் பின் செல்லும். தமிழ் பாடுவார்க்கே முதலில் சடாரி மரியாதை. திருப்பதியில் சுப்ரபாதம் உண்டு, தமிழ் கிடையாதா என்கிறார். தினமும் விடியற்காலையில் திருப்பல்லாண்டும், திருப்பாவையும் கேட்கிறான் திருவேங்கமுடையான். நினைவில் சட்டென தோன்றிய சில பிரபந்த வரிகள். “தென்னன் தமிழை, வடமொழியை நாங்கூரில் மன்னு மணிமாடக்கொவில் மணாளனை” என்று திருமாலை பாடுகிறான் திருமங்கை மன்னன். “செந்தமிழும், வடகலையும் திகழ்ந்த நாவர்” என்று திருவழுந்தூர் அந்தணர்களை குறிப்பிடுவான். “கங்கையில் புனிதமாய காவிரி நடுவுபாட்டு” என்று அரங்கனை விளிப்பார் தொண்டரடிப்பொடிகள். வைணவத்தில் தமிழுக்கு மரியாதை இல்லை என்பது அபாண்டம்.

   இந்த விஷயத்தில் எனது வருத்தம் வேறு. வேத, பிரபந்த கோஷ்டிகளில் பார்ப்பனர் அல்லாதோரை சேர்ப்பதில்லை. மேலே சொன்ன திருப்பதி கோஷ்டியில் வேறொரு காமெடியும் உண்டு. இதில் ப்ரபந்தம் ஓதுவதில் ஆர்வம் உண்டோ இல்லையோ, பல மணி நேரம் காத்துக் கிடைக்காமல் எளிதாக தரிசனம் செய்ய இதை ஒரு வழியாக வைத்துள்ளனர் பார்ப்பனர்கள். இதில், குடுமி வைத்திருப்பவருக்கே மட்டுமே அனுமதி என்பது நிபந்தனை. இதற்காக குடுமி வளர்க்கவா முடியும்? அதற்கும் ஒரு குறுக்கு வழி. கிர்தா இல்லையேல் அது குடுமி என்று ஒரு புது விளக்கம் கொடுத்துள்ளனர். இதற்காக கிர்தாவை ஷேவ் செய்து விட்டு செல்வோர் உண்டு. கோபுர வாசலில் ஒரு அலுவலக அல்லக்கை ஒவ்வொருவராக கிர்தா இருக்கிறதா, இல்லையா என சோதித்து அனுப்புவார். இதெற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும். ஒழுங்காக குடுமி வைத்து, திருப்பாவை-திருப்பல்லாண்டு ஓதத் தெரிந்த எந்த சாதியினரும் அனுமதிக்கப்பட வேண்டும்.

   • // கோபுர வாசலில் ஒரு அலுவலக அல்லக்கை ஒவ்வொருவராக கிர்தா இருக்கிறதா, இல்லையா என சோதித்து அனுப்புவார். இதெற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும்.//

    போன வாரம், ஏழுமலையானை தரிசிக்கச் சென்ற லாரன்ஸ் ராகவேந்திராவின் தாயார், மனைவி என்று பெண்களைக் கூட முரட்டுத் தனமாக பிடித்து தள்ளியிருக்கிறார்கள்.. ராஜபக்சேவுக்கு ராஜ மரியாதை.. பக்தகோடிகளுக்கு அவமரியாதை..

    // ஒழுங்காக குடுமி வைத்து, திருப்பாவை-திருப்பல்லாண்டு ஓதத் தெரிந்த எந்த சாதியினரும் அனுமதிக்கப்பட வேண்டும். //

    குடுமி எதற்கு என்று எனக்கு இன்னும் சரியாக விளங்கவில்லை.. அந்தக் கால சீனாவில், குடுமியை சடையாகப் போட்டு சண்டை வந்தால் சுத்தி சுத்தி அடிப்பார்கள்.. ஆனால் இங்கே குடுமியின் பயன், தாத்பர்யம் என்ன..? பின்மண்டை மட்டும் பாதுகாப்பாய் இருந்தால் போதுமா..?! ஏதோ ஒரு ஸ்டைல் காலவெள்ளத்தைத் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறது போலிருக்கிறது..

    • அம்பி,
     1800 களில் கூட அனைத்து ஜாதி ஆண்களும் குடுமி வைத்திருந்தனர் என்பது என் நினைப்பு. இது சரிதானா?

     இப்போது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் போன்ற ஒரு சில கோவில்கள் தவிர, மற்ற கோவில்களில் குடுமி இல்லாத அர்ச்சகர்களை பார்க்கமுடிகிறது. காலப் போக்கில் இவ்வழக்கம் முழுதும் ஒழிந்து விடும் என நினைக்கிறேன். ஆனால் திருப்பதி கோவிலில் இப்படி ஒரு நிபந்தனை இன்றளவில் பின்பற்றப் படும்போது, “கிர்தா இல்லையேல் அது குடுமி” சொல்வது பித்தலாட்டமாக எனக்கு படுகிறது. ஒன்று குடுமி கட்டுப்பாடு நீக்கப்பட வேண்டும். அல்லது ஒழுங்காக கடைபிடிக்கப் பட வேண்டும் என்பது என் எண்ணம்.

     இப்படியே ஒவ்வொரு வழக்கமும் மறைந்து எதிர்காலத்தில், ராமதாஸ் பாணியில் சொன்னால், அர்ச்சகர்கள் ஜீன்ஸ், கூலிங்க்ளாஸ் போடும் நிலை வருமோ என்னவோ!

     • நித்தியானந்தாவைப் போன்ற மகான்கள் குடுமி அழிந்துவிடாமல் காப்பாற்றுவார்கள்..!!!!

      • அம்பி,
       நீர் என்ன சொல்ல வருகிறீர். குடுமி கொடியது என்றா ?! அல்லது திருப்பதியில் போய் குடிமியா, மொட்டை தான் சரி என்கிறீரா 🙂

       • கிருதாவை மழித்துவிட்டு மிச்சமிருப்பதுதான் குடுமி என்று பித்தலாட்டம் செய்வதைத் தடுக்கத்தான் அன்றே நம் முன்னோர்கள் “வெச்சாக் குடுமி, அடிச்சா மொட்டை” என்று தெளிவாக விளக்கிவிட்டுப் போயிருக்கிறார்கள்.. 🙂

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க