privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்முசுலீம்களை தண்டிக்கும் நீதி இந்துமதவெறியர்களை தண்டிக்காதது ஏன்?

முசுலீம்களை தண்டிக்கும் நீதி இந்துமதவெறியர்களை தண்டிக்காதது ஏன்?

-

20 ஆண்டுகளுக்குப் பிறகும், கசக்கும் உண்மை!

பழைய காயங்களை கிளற வேண்டாம் என்று சொல்லி 1993 மும்பை கலவரங்களில் பாதிக்கப்பட்ட ஆதரவற்றவர்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது.

மும்பை கலவரம்மும்பையை பூகம்பம் போல் குலுக்கிய இரண்டு நிகழ்வுகள் நடந்து 20 ஆண்டுகள் ஆகி விட்டன. 900 பேரை பலி வாங்கிய, முஸ்லீம்களுக்கு எதிரான சிவசேனா கும்பலின் இரண்டு மாத வெறியாட்டங்களுக்கு நீதி வழங்குவது குறித்து பேசினால் ‘பழைய காயங்களை கிளறக் கூடாது’ என்று வாயை அடைக்கிறார்கள். ஆனால், மார்ச் 12, 1993 அன்று நடந்த தொடர் குண்டு வெடிப்புகள், அப்பாவி உயிர்களை பலி கொண்ட பயங்கரவாத நடவடிக்கையாக சித்தரிக்கப்படுகிறது; புலன் விசாரணை, நீதிமன்ற விசாரணை, உயர்நீதிமன்றத் தீர்ப்பு, உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்று அரசு எந்திரத்தின் நகர்வுகள் நீதியின் நிரூபணங்களாக போற்றப்படுகின்றன.

இந்த இரண்டு நிகழ்வுகளை கையாள்வதில் அரசு தெளிவான பாரபட்சத்தை காட்டியது. சிவசேனாவின் மத வெறியாட்டங்களை விசாரிப்பதற்கு ஒரு விசாரணை கமிஷனை நியமித்தது. குண்டு வெடிப்புகள் தொடர்பான வழக்குகளை நடத்துவதற்கு தடா சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது. நீதிபதியின் தலைமையில் இருந்தாலும் விசாரணை கமிஷனின் பரிந்துரைகள் அரசாங்கத்தை கட்டுப்படுத்த மாட்டா; தடா சிறப்பு நீதிமன்றத்துக்கோ அனைத்து விதமான சட்ட அங்கீகாரங்களும் உண்டு.

பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மும்பையில் சிவசேனா-பாஜக குண்டர்களால் நடத்தப்பட்ட வெறியாட்டம் ஓரளவு தணிந்த பிறகு அப்போதைய பிரதம மந்திரி பி.வி.நரசிம்ம ராவ் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான விசாரணை கமிஷனை நியமித்தார். கமிஷன் விசாரணைகளை நடத்திக் கொண்டிருக்கும் போது சிவசேனா-பாஜகவின் காவி கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றியது. புதிய அரசாங்கம் ‘தொடர் குண்டு வெடிப்புகள் நடப்பதற்கான சூழல்களையும் உடனடி காரணங்களையும் ஆய்வு செய்யுமாறு’ ஸ்ரீகிருஷ்ணா கமிஷனின் விசாரணை வரையறையை விரிவுபடுத்தியது.

ஆனால், ‘கமிஷன் நீண்ட காலம் எடுத்துக் கொள்வதாகவும், மதக்கலவரங்கள் பற்றிய பற்றிய விசாரணை பழைய காயங்களை கிளறி விடும்’ என்றும் சொல்லி 1996 ஜனவரி 26ம் தேதி மாநில அரசாங்கம் விசாரணை கமிஷனை கலைத்து விட்டது. அப்போதைய பிரதம மந்திரி அடல் பிஹாரி வாஜ்பாயி குறுக்கிட்டு மே 1996ல் கமிஷனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார். கமிஷன் 2,125 பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்தது; 502 வாக்குமூலங்களை பதிவு செய்தது; 9,655 பக்கங்களுக்கான சாட்சியங்களையும் 2,903 ஆவணங்களையும் திரட்டியது; கமிஷனின் விசாரணை 26 காவல் நிலையங்களை தழுவியிருந்தது. ஆனால் இறுதியில் அதன் அறிக்கை ஒரு சார்பாக இருப்பதாகச் சொல்லி மாநில அரசாங்கம் அதை நிராகரித்தது.

கமிஷன் தனது இறுதி அறிக்கையில் கலவரங்கள் குண்டுவெடிப்புகளுக்கான ஒரு தூண்டுதலாக இருந்தன என்று கூறுகிறது. “டிசம்பர் 1992, ஜனவரி 1993 மாதங்களில் நடந்த கலவரங்களும் தொடர் குண்டு வெடிப்புகளும் ஒரே திட்டத்தின் பகுதிகள் என்பதை நிரூபிக்கும்படி எந்த ஆதாரங்களும் கமிஷனின் முன்பு சமர்ப்பிக்கப்படவில்லை. தொடர் குண்டு வெடிப்புகளைப் பற்றிய புலன்விசாரணையை நடத்தும் குழுவின் தலைவர் மகேஷ் நாராயண் சிங் இதை ஏற்றுக் கொள்கிறார். அயோத்தியிலும் மும்பையிலும் டிசம்பர் 1992, ஜனவரி 1993 மாதங்களில் நடந்தவற்றின் எதிர்வினைதான் தொடர் குண்டு வெடிப்புகள் என்று அவர் வலியுறுத்தியதை கமிஷன் ஏற்றுக் கொள்கிறது”

கமிஷனின் அறிக்கையை நிராகரித்த மாநில அரசாங்கம், கமிஷன் குண்டுவெடிப்புகள் குறித்து போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் மதக் கலவரங்களுக்கு 600க்கும் அதிகமான பக்கங்களை ஒதுக்கியிருக்கிறது என்றும் குற்றம் சாட்டியது. இத்தோடு கலவரங்களைப் பற்றிய நினைவுகளை அழித்து விட்டு அவற்றின் மீது தொடர் குண்டு வெடிப்பு நிகழ்வுகளை போர்த்தி மூட ஆரம்பித்தது சிவசேனா-பாஜக கூட்டணி.

சிவசேனா தலைவர் பால் தாக்கரேவை வழக்குகளிலிருந்து விடுவித்த உயர்நீதிமன்ற தீர்ப்பிலும் ‘காயங்களை கிளறக் கூடாது’ என்ற எண்ணப் போக்கு வெளியானது. திரு தாக்கரேவின் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்த கீழமை நீதிமன்றங்களின் தீர்ப்புகளை எதிர்த்த மேல் முறையீடுகளில் ‘ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு பழைய வழக்குகளை கிளறுவதால் எந்த பலனும் இல்லை’ என்றும் ‘இது மத உணர்வுகளை தூண்டி விடுவதில்தான் கொண்டு விடும்’ என்றும் கூறியது உயர் நீதிமன்றம். ‘காலம் கடந்து விட்டது. இந்தச் சூழலில் வழக்குகளை நடத்தத் தேவையில்லை என்ற கீழமை நீதிபதியின் உத்தரவில் பிழை எதுவும் இல்லை’ என்றது உயர்நீதிமன்றம்.

2007ம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்புகளோடு தொடர்புடைய 100 பேருக்கு சிறப்பு தடா நீதிமன்றம் தண்டனை வழங்கிய பிறகு மதக் கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தமக்கும் நீதி வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். நிலுவையிலிருந்த 253 வழக்குகளில் 16வழக்குகளை விசாரிப்பதற்கு 4 சிறப்பு நீதிமன்றங்களை மாநில அரசாங்கம் நியமித்தது. இந்த சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்ட போது அது பழைய காயங்களை கிளறுவதாக கூக்குரல்கள் எழுந்தன.

ஒரு சில வழக்குகளில் தண்டனைகள் வழங்கப்பட்டாலும் பல முக்கியமான வழக்குகள் விசாரிக்கப்படவில்லை. காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கையை அமல் படுத்துவதாக தமது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தாலும் அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால், மார்ச் 21ம் தேதி உச்சநீதிமன்றம் தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளிகளின் மேல் முறையீட்டு மனு மீது தீர்ப்பு சொன்ன போது, ‘பழைய காயங்களை கிளறுவதைப் பற்றி’ கவலைப்படாமல் நீதி தேவதையின் மாண்பை அனைவரும் கொண்டாடினார்கள்.

சஞ்சய் தத்‘சஞ்சய் தத் மீண்டும் சிறைக்குப் போக வேண்டும்’ என்பதைக் கேட்டு பாலிவுட் அதிர்ச்சியடைந்தது. ‘சஞ்சய் தத் மன்னிக்கப்பட வேண்டும்’ அனைவரும் ஒரே குரலில் என்று கோரினார்கள். ‘அவர் தன் திரைப்படங்களின் மூலம் மகாத்மா காந்தியின் கொள்கைகளை பரப்பவில்லையா என்ன? அவருக்கு ஏன் தண்டனை?’ என்று உணர்ச்சி பூர்வமான வாதங்களை முன் வைத்தார்கள்.

சஞ்சய் தத்தின் ஆயுதங்களை பாதுகாத்து வைத்திருந்ததற்காகவும், அவற்றை தள்ளி விட்டதற்காகவும் தண்டனை பெற்ற பிரபலமற்ற நபர்களுக்கு அது போன்ற ஆதரவு எதுவும் கிடைக்கவில்லை. அவர்கள் ‘பயங்கரவாத செயலுக்காக’ தண்டிக்கப்பட்டார்கள். ஆனால் சஞ்சய் தத் மீது பயங்கரவாதி முத்திரை குத்தப்படாமல் ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மட்டும் வழங்கப்பட்டது.

‘அவரது சிறைத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அவருடைய சக குற்றம் சாட்டப்பட்டவர்களின் பழைய காயங்களை கிளறும்’ என்று யாரும் ஆத்திரப்படவில்லை. முன்னாள் காங்கிரஸ் தலைவரான சஞ்சய் தத்தின் தந்தை சுனில் தத், சஞ்சய் சிறையில் சில காலம் இருந்த பிறகு நீதிமன்றங்கள் அவருக்கு பெயில் வழங்குவதற்காக பால் தாக்கரேவை வேண்டிக் கொண்டதை பலர் நெகிழ்வுடன் நினைவு கூர்கிறார்கள்.

இன்னொரு பக்கம் மதக் கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தமது காயங்களுக்கு நீதி கிடைக்காமல் தொடர்ந்து ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். குற்றமிழைத்தவர்களில் பலர் போலீஸ்காரர்களாக இருப்பதால் அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்வது கூட சாத்தியமில்லை. கலவரங்களுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு பிரிவு, புதிதாக பதிவு செய்த வழக்குகளை விட ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒரு சில வழக்குகளையும் மூடுவதிலேயே மும்முரமாக இருந்தது. பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ விசாரணை கோரியும் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யக் கோரியும் உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டியிருந்தது.

தேசத்தின் கூட்டு மனசாட்சி தொடர் குண்டுவெடிப்புடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முடிகிறது. அதிலும் பிரபலமானவராக, பணக்காரராக, அதிகார மையங்களுக்கு நெருக்கமாக இருப்பவருக்கு ஒரு நியாயம், மற்ற குற்றவாளிகளுக்கு இன்னொரு நியாயம். ஆனால், பாப்ரி மசூதியை இடித்த பாஜக கிரிமினல்களும், மும்பையில் முஸ்லீம்களுக்கு எதிராக மதவெறியாட்டம் நடத்திய சிவசேனா குண்டர்களும் இன்று ‘தேச பக்தர்’களாக மதிப்பான அரசியல் தலைவர்களாக உலாவுகிறார்கள்.

(கீழ்க்கண்ட “தி இந்து” நாளிதழ் கட்டுரையில் சில சேர்க்கை, திருத்தம், சுருக்கத்துடன் எழுதப்பட்டது.)

மேலும் படிக்க
Two decades on, the inconvenient truth