privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்நாவல் அறிமுகம்: சடையன்குளம்

நாவல் அறிமுகம்: சடையன்குளம்

-

டையன்குளம்– தமிழகத்தின் தென்பகுதி கிராமம் ஒன்றில் தலித் மக்களின் வாழ்வையும், உரிமைக்கான போராட்டத்தையும், உயர்வுக்கான விழைவையும், அது குரூரமாக சாதிவெறியர்களால் நசுக்கப்படுவதையும் ஆவணப்படுத்தியிருக்கும் ஒரு புனைவு [நாவல்]. நகரத்தின் வண்ண ஒளிச்சிதறல்களில் வாழ்க்கையை கழிப்பவர்களுக்கும், தேசிய நெடுஞ்சாலைகளிலும், பிரதான சாலைகளிலும் மட்டுமே பயணிப்போருக்கும் சடையன்குளம், நாயக்கன்கொட்டாய் போன்ற தமிழகத்தின் எதார்த்தங்கள் புலப்படாது. இந்த நாவல் சுழலும் கிராமம், கடந்த நூற்றாண்டின் காலச்சக்கரத்தில் கடந்துவிட்ட ஒரு வாழ்க்கையின் பதிவு அல்ல என்பது நாயக்கன்கொட்டாய் தாக்குதலை கவனித்தவர்களுக்குப் புரியும்.

சடையன்குளம், கீழத்தெருவில் வசிக்கும் சாம்பார் [பறையர்] மக்கள், சற்று தள்ளி மிகச்சிறிய எண்ணிக்கையில் வாழும் சக்கிலிய மக்கள் மீது அடக்குமுறை செலுத்துவதில் தேவர், நாயக்கர், செட்டியார், மற்றும் கோனார் சாதியினர் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். ஆதிக்க சாதியினரில் பிறந்த ஆண்கள், பெண்கள். வயதானவர்கள், இளைஞர்கள் அனைவரும் பால் வேறுபாடின்றி சாதி வெறி மனநோய்க்கு ஆட்பட்டுக் கிடக்கின்றனர். கீழத்தெருவில் வசிக்கும் நல்லையா குடும்பம் சந்திக்கும் சவால்களை சடையன்குளம் முதன்மையாக பேசுகிறது.சடையன்குளம்

தம்மீது நிறுவனமாகியுள்ள தொடர் தாக்குதல் குறித்த ஓர்மையோடே தமது வாழ்க்கையை கடத்துகிறார்கள் கீழத்தெரு மக்கள். எனினும் அச்சத்திலும், பீதியிலும் அவர்கள் உறைந்து போய்விடவில்லை. கீழத்தெருவை சார்ந்த முத்துமரியான் தேவர்சாதிப் பெண்ணை காதலிக்கிறான். நல்லையா குடும்பம் செங்கல் சூளைக்கு சென்று உழைத்து பிறகு சொந்தமாக ஒரு செங்கல் சூளையை ஆரம்பிக்கிறார்கள். முத்துமரியான் காதலித்த பெண்ணை அவரிடமிருந்து பிரிக்கிறார்கள். கரசேவை போன்ற ஒரு நடவடிக்கையில் நல்லையாவின் செங்கல் சூளையை துவம்சம் செய்கிறார்கள், தேவர் சாதியினர். அரசாங்கம் மூலம் கிடைத்த ஐந்து செண்ட் நிலத்தில் பயிர்வித்த பருத்தி, அறுவடைக்கு நெருங்கும் போது, அதனை சாதிவெறியர்களிடமிருந்து காப்பாற்றும் முயற்சியில் ஊர்க்காத்தானும், நல்லையாவும் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். எனினும், கலைக்க கலைக்க மணல்வீட்டை கட்டும் சிறுகுழந்தையின் பிரயத்தனமாக வாழ்க்கையை ஆடிப்பார்க்கிறார்கள்; ரசிக்கிறார்கள்; காதல்வசப்படுகிறார்கள், கீழத்தெரு மக்கள். உழைப்பின் மீது மட்டும் நம்பிக்கை வைத்த அவர்களை மனித வாழ்வின் அடிப்படை விழைவு உந்தி செலுத்திக் கொண்டே இருக்கிறது.

தேங்கிக் கிடந்த கீழத்தெரு மக்களின் வாழ்க்கையில் தொடிச்சியின் வருகை ஒரு சலனத்தை ஏற்படுத்துகிறது. தொடிச்சி, நல்லையாவின் மனைவி. முதன் முதலில் அவள் அத்தெருவில் ரவிக்கை அணிகிறாள். கிணற்றில் தண்ணீர் பிடிக்கும்பொழுது மேலத்தெரு நாயக்கர் பெண்களுடன் உரசுகிறாள்.அவர்கள் தண்ணீர் பிடித்த வாளியை அவர்கள் செய்ததை போன்று இவளும் அலசிவிட்டு நீர் எடுக்கிறாள். நல்லையாவை அழைத்து நாயக்கர் ஆண்கள் மிரட்டும் போது வேறு வழியில்லாமல் மனைவியை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். நல்லையாவுக்கு செங்கல் சூளை ஒன்று சொந்தமாக ஆரம்பிக்கும் எண்ணம் வந்த போது தைரியம் அளிக்கிறாள், தொடிச்சி. நல்லையா கொலை செய்யப்பட்ட பிறகு வாழ்க்கையை துணிவுடன் எதிர்கொள்கிறாள். வாழ்க்கை குறித்து திட்டவட்டமான பார்வை அவளிடம் இருக்கிறது. சக்கிலியர் குடியிருப்புக்குள் முதன்முதலில் நுழைகிறாள். சக்கிலியர் மக்களுடன் பறையர் மக்கள் இணைவதை விரும்புகிறாள்.

தொடிச்சி கீழத்தெருவை சேர்ந்தவள் அல்ல. விளாத்திகுளத்திலிருந்து இங்கு திருமணமாகி வந்தவள். திருமணமான புதிதில் தன்னை கட்டுப்படுத்த முனைந்த ஊர்காத்தானை நகைத்தாள். தேவர் சாதியினரின் மிரட்டலுக்கு ‘இதுவே எங்கள் ஊர் என்றால் நிலைமை வேறாக இருக்கும்’ என்று எகிறினாள். பிற்பாடு கீழத்தெரு பெண்கள் தொடிச்சியை பின்பற்றுகிறார்கள்.ஆண்கள் அவளிடமிருந்து தைரியத்தை பெறுகிறார்கள். தொடிச்சி கீழத்தெருவை சேந்தவள் அல்ல என்பது மட்டுமல்ல; அவளுடைய கடந்தகாலம் மிகப்பிற்பாடு இந்நாவலில் இலைமறை காய்மறைவாக வெளிப்படுகிறது. நகரத்தில் நாயக்கர் வீட்டில் வேலை செய்யும் தனது கணவரின் சித்தி மகளை பார்த்து விட்டு வீடு திரும்பும் போது ராமையா என்பவரை பார்க்கிறாள். அவரை தோழர் என்று அழைக்கிறாள். அவரும் நலம் விசாரிக்கிறார். அப்படியே, தனது கணவனுக்கு அரசு கொடுத்த நிலத்தில் மாட்டைப் பூட்டி உழுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சாதிவெறியர்கள் குறித்து கூறுகிறாள். அவர் அடுத்த நாளே தமது தோழர்களுடன் மாட்டோடு வந்து உழுகிறார். எதிர்த்து வந்த தேவர் சாதி வெறியர்களை அந்த விவசாயத் தோழர்கள் அடித்து விரட்டுகிறார்கள்.

தொடிச்சி ராமையாவை சந்தித்து உதவி கேட்டது அவளுக்கு முன்பு கம்யூனிசம் அறிமுகம் ஆகியிருப்பதையும் அவளுடைய உந்துதலுக்கு கம்யூனிச வீரம் அடிப்படையாக உள்ளதையும் இந்த நாவல் கூர்மையான அவதானிப்பில் அறியத் தருகிறது. நாயக்கர் மற்றும் கோனார்களிடம், வீட்டு வேலைகளில் கட்டுண்டு கிடந்த மக்களிடம் இருந்தல்ல; தொடிச்சியின் மூலமே விடுதலை உணர்வு அம்மக்களிடம் அரும்பியது என்பதையும் இங்கு நாம் கவனிக்க வேண்டும். ‘தலித் மக்கள் பிரச்சினையை தலித்துகள் மட்டுமே பேசட்டும்; தலித் மக்களின் விடுதலை தேர்வை; பாதையை தலித் மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும்; கம்யூனிஸ்ட்கள், மற்றவர்கள் ஒதுங்கிக் கொள்ளட்டும்’ என்ற வகை தலித்திய வாதத்தை தொடிச்சி கதாபாத்திரம் வலுவிழக்க செய்கிறது.

இந்நாவலில் வரும் கிளமன்ட் பாதர், பெர்டின் சிஸ்டர் போன்றோர் மிகை கதாபாத்திரங்கள். தலித் மக்களின் ஊனோடும், உயிரோடும் கலந்தவர்களாக அவர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். கீழத்தெரு பெண்களை கேலி வம்பு செய்யும் நாயக்கர் ஆம்பிளைகளை எதிர்த்து நின்ற தொடிச்சியை துரத்தி வந்த ஆண்களை நோக்கி பெர்டின் சிஸ்டர் துப்பாக்கியை காட்டி பின்வாங்க செய்கிறார். இது கொஞ்சம் மிகையாக தோன்றுகிறது. இதனை கிறிஸ்தவம் செல்வாக்கு செலுத்தும் குமரிமாவட்டத்தை வைத்து பரிசீலித்து சொல்ல முடியும். திருவிதாங்கூர் பகுதியில் நாடார்களை தீண்டத்தகாதவர்களாக நடத்திய நாயர்களை எதிர்த்து நின்றது நேசமணி திரட்டிய இளைஞர் படையும், கம்யூனிஸ்ட்களுமே. நாயர்கள் கைப்பற்றியிருந்த 90 சதவீத நிலங்களை மீட்டுக் கொடுத்தது இவர்கள் தான். கிறிஸ்தவம் கல்வி, மருத்துவம் போன்ற ‘நேர்மறையான’ பணிகளை மட்டுமே ஆற்றியது. அடிக்கப்படுகிற நேரத்தில் கிறிஸ்தவம் பாதிக்கப்படும் மக்களோடு உடன் நின்றதற்கான சான்றுகளுக்கு சரித்திரத்தில் நாம் அபூர்வத் தகவல்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். ”துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் ; அவர்கள் ஆறுதல் அடைவார்கள்”, ”துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்ஜியம் அவர்களுடையது” [ மத் : 5 ] என்பன போன்ற பைபிள் வாக்கியங்கள் என்ன செயலூக்கத்தை ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களுக்கு வழங்க முடியும் ? பாமாவின் கருக்கு கிறிஸ்தவத்தை விசாரணைக்கு உட்படுத்திய எதார்த்த நாவல். ”கடவுளை [கர்த்தர்/இயேசு ] கற்றுத் தந்தவர்கள் எங்களுக்கு கடவுளை அன்பானவர், கருணையுள்ளம் கொண்டவர், பாவம் புரிபவர்களை மன்னிப்பவர், பொறுமையும், பணிவும், சாந்தமும் கொண்டவர் என்றே முன்நிறுத்தினர். கடவுள் நேர்மைத்திறம் கொண்டவர், அநீதிகளை கண்டு கொதிப்பவர், பொய்மையை வெறுப்பவர், அசமத்துவத்துக்கு எதிரானவர் என்று எந்த பாதிரியும் சொன்னதில்லை. ……… பொருளற்ற முறையில் பணிவையும் அடக்கத்தையும், பொறுமையையும், செயலின்மையையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதிரிமார்கள் போதித்தார்கள்” [ கருக்கு பக். 90 ] கருக்கு விவாதத்துக்கிடமான கிறிஸ்தவ சமயஉணர்ச்சியை [argumentative faith ] வெளிப்படுத்துகிறது. சடையன்குளம் கிறிஸ்தவம் மீது கேள்விக்கிடமற்ற விசுவாசத்தை [ absolute faith ] கொண்டிருக்கிறது. கிளமன்ட் பாதரும், பெர்டின் சிஸ்டரும் மாற்றலாகி போவது இந்த நாவல் கிறிஸ்தவத்திற்கு காணிக்கையாகின்ற ஆபத்திலிருந்து தப்புகிறது.

இந்நாவலில் வரும் போலீஸ், தமிழ் சினிமா ஹீரோக்கள் போலீஸாக நடிக்கும் படங்களில் வரும் போலீஸ் போன்று மிகவும் நல்லவர்களாக இருக்கிறார்கள். அனைத்துப் பிரச்சினைகளிலும் தலித் மக்கள் பக்கமே நிற்கிறார்கள். இறுதியில் காவல்துறை தலித்மக்கள் மீது பாய்வது கூட ராமசாமி நாயக்கரின் சதியே காரணமாக அமைகிறது. போலீசின் தனிப்பண்பு என்பது ஆளும்வர்க்க நலன், ஆதிக்கசாதி மனப்பான்மை, இந்துத்துவம், கம்யூனிச எதிர்ப்பு போன்றவற்றின் இயற்கூட்டில் உருவான ஓன்று என்பதற்கு எண்ணற்ற நடைமுறை உதாரணங்களை சுட்ட முடியும். தருமபுரியின் நாயக்கன்கொட்டாய் வன்முறையில் போலீஸ் துணை ஆய்வாளர் ஒருவரின் பங்கு இருந்ததை அனைத்து உண்மை அறியும் குழுக்களும் சுட்டிக்காட்டின. இப்போது ராமேஸ்வரத்தில் வெடித்துள்ள வன்முறையிலும் போலீஸ் டி எஸ் பி ஒருவர் தூண்டுதலாக இருந்ததை பெயர் குறிப்பிட்டு தெரிவிக்கின்றன, ஊடகங்கள். சடையன்குளம் போலீஸ் மீது ஒரு பலகீனமான நம்பிக்கையை வைக்கிறது. ”வர்க்கங்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்த அல்ல; இரு வர்க்கங்கள் இணக்கம் காண இயலாததன் விளைவே அரசு; போலீஸ்” என்றார் மார்க்சிய ஆசான் ஏங்கெல்ஸ். ஒடுக்கப்படும் மக்களிடம் போலீஸ் என்ற அரசின் உறுப்பு செயல்படும் தொழில்கூறு சடையன்குளத்தில் சரியாக உருவமைதி பெறவில்லை என்று தான் சொல்ல முடியும்.

கீழத்தெரு சக்கிலியத் தெருவில் வசிக்கும் முத்துவீரன், சிவன் கோனார் மகளை காதலிக்கிறார். அவளை தகப்பன் கட்டுப்பாட்டில் இருந்து மீட்க உதவி செய்வதற்கு கம்யூனிஸ்டாக அறிமுகம் செய்யப்பட்ட ராமையா தேவர் மறுக்கிறார். கட்சி இது போன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்காது என்று விலகிக் கொள்கிறார். எனினும் அவர்களின் காதல் ஓட்டம் திட்டம் கசிந்துவிடாமல் காப்பாற்றுகிறார். கீழத்தெருவின் கடற்கரை கம்யூனிச இயக்கத்தில் இருக்கிறார் என்ற தகவல் மிகப்பிற்பாடே வாசகர்கள் அறிந்து கொள்ள முடியும். தனது மனைவி கிறிஸ்தவத்திற்கு மாறுவதை எதிர்க்கும் தனது தாயை அவர் கடிகிறார். ஜனநாயகபூர்வமாக அந்த முடிவை ஆதரிக்கிறார். எனினும் நல்லையா குடும்ப உறுப்பினர்கள் பெற்ற முக்கியத்துவத்தை நாவலில் கடற்கரை பெறவில்லை. தலித் மக்கள் அதிகாரத்தை நெருங்க நெருங்க சாதி வெறியர்களுக்கு பித்துப் பிடிக்கிறது. பெரும் வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறார்கள். நாவல் சற்று நாடகீயமாக முடிக்கப்பட்டுள்ளது.

தனது எளிய கதை சொல்லல் முறையால் சிறீதர கணேசன் வியக்க வைக்கிறார்.  இந்த சமூகத்தின் மொத்த பாரத்தையும் தமது உழைப்பால் தாங்கும் எளிய மக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

– சம்புகன்

நாவல்: சடையன் குளம்
ஆசிரியர்: சிறீதர கணேசன்
வெளியீடு: கருப்புப் பிரதிகள்
பக்கங்கள்: 367
விலை: ரூ. 200

நூல் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002.
தொலைபேசி: 044-2841 2367