Thursday, May 1, 2025
முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்லாக்-அப் கொலை: கானல் நீராக நீதி!

லாக்-அப் கொலை: கானல் நீராக நீதி!

-

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகில் உள்ள கோமங்கலம் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் கடைக்கு சாமான் வாங்க விருத்தாச்சலம் செல்கிறார். பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அவரை சந்தேகப்பட்டு விசாரணைக்கு அழைத்து சென்ற குற்றப் பிரிவு போலீசார், காவல் நிலையத்தில் அவரை அடித்து சித்ரவதை செய்ததால் மூக்கிலும் வாயிலும் ரத்தம் வழிந்து விருத்தாசலம் காவல் நிலையத்திலேயே 8-11-2004 காலை மரணம் அடைந்தார்.

குற்றவாளி போலீசாருக்கு தண்டனை கிடைக்கவும், அண்ணாதுரை குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும் மனித உரிமை பாதுகாப்பு மையம் மக்கள் மத்தியிலும், நீதிமன்றத்திலும் இன்று வரை தொடர்ந்து போராடி வருகிறது.

  • இழப்பீடு கோரி அவரது மனைவி செல்வி பெயரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2005 ல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஏப்ரல் 2, 2013 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் இழப்பீடாக ரூபாய் 5,90,000 தமிழக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
  • இதற்கு முன்பாக 2007-ல் குற்றவாளி போலீசாருக்கு எதிராக நாங்கள் நடத்திய மாநில மனித உரிமை ஆணைய வழக்கில் துணை ஆய்வாளர், பாபு குற்றம் செய்திருக்கிறார் என்பதை உறுதி செய்து ரூபாய் 1,50,000 இழப்பீடு வழங்கி உத்திரவிட்டிருந்தார். அதனை கழித்து கொண்டு ரூ.4,40,000 இரண்டு மாதத்தில் இறந்து போன அண்ணாதுரையின் குடும்பத்திற்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
  • குற்றம் இழைத்த துணை ஆய்வாளர் பாபு மீது கடலூர் நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கும் நிலுவையில் உள்ளது.

மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்திய போராட்டங்களை திரும்பி பார்ப்பது குற்றவாளி போலீசாரை தண்டிப்பது எவ்வளவு கடினமானது, அனைவருக்கும் இது சாத்தியமானதா? என்பதை புரிந்து கொள்ள முடியும்.

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட அண்ணாதுரையின் உடலை ஊர் மக்கள் வாங்க மறுத்து சாலை மறியல் செய்கின்றனர். அவர்களுடன் மனித உரிமை பாதுகாப்பு மையமும் குற்றவாளி போலீசாரை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறுதியாக மக்களைத் திரட்டிப் போராடியது. குற்றப் பிரிவு எஸ்.ஐ.பாபு மற்றும் 3 காவலர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அன்றைய கடலூர் மாவட்ட எஸ்.பி.யாக இருந்தது பிரேம் குமார். இவர்  சங்கராச்சாரி கைதில் புகழ் அடைந்தவர், நல்லகாமன் வழக்கில் பணிநீக்கம் செய்யப்பட்டவர். இவரை நல்லகாமனுடன் இணைந்து நாங்கள் தான் போராடி பணி நீக்கம் செய்தோம்.

மேலும் கோட்டாட்சியர் இங்கேயே விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி சாட்சிகளை ஒழுங்கமைத்து அண்ணாதுரை மரணம் தொடர்பாக நடந்த உண்மைகளை பிரேதம் வாங்கும் முன்பாகவே மருத்துவமனை வளாகத்திலேயே பதிவு செய்ய வைத்தோம்.

இறந்து போன அண்ணாதுரைக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் இருந்தனர். சொந்தமாக இருந்த 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து குடும்பம் நடத்தியவர். குடிப்பழக்கம் காரணமாக தன்னுடைய பழைய மோட்டாரை இரும்புக் கடையில் விற்று விட்டு குடித்துள்ளார். ஊருக்கு போவதற்காக பேருந்து நிலையத்தில் நின்றிருந்த அண்ணாதுரையை பார்த்தவுடன் போலீசாருக்கு சந்தேகம் வந்து விட்டது. போலீசார் ஆளாளுக்கு ரெண்டு தட்டு தட்டி மடக்கி மடக்கி கேள்வி கேட்டவுடன் பயந்து கொண்டு அண்ணாதுரை குடி போதையில் முன்னுக்குபின் முரணாக பேசியுள்ளார்.

குற்றவாளியை கைது செய்த பெருமையுடன், அவர் நிலத்தில் வேலை செய்யும் பழனிவேல் என்ற அப்பாவியையும் கையில் விலங்கிட்டு, விருத்தாசலம் காவல் நிலையத்தில் ஜட்டியுடன் அடைத்து வைத்தனர் போலீசார். ஊர் முக்கியஸ்தர்கள் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து அண்ணாதுரையை பற்றி நல்லவிதமாக சொல்லி நாளைக்கு பகலில் விசாரணைக்கு அழைத்து வருகிறோம் என மன்றாடியும் குற்றப்பிரிவு போலீசார் விட மறுத்து விட்டனர். இதற்கு மேல் இங்கே நின்றால் உங்கள் மீதும் திருட்டு கேசு போட்டு விடுவேன் என மிரட்டியதும் ஊர் முக்கியஸ்தர்கள் திரும்பி சென்று விட்டனர். இரவு முழுவதும் அடித்து மிதித்து, ஊர் உலகத்தில் நடந்த திருட்டை பற்றி எல்லாம் விசாரித்த போலீசாரால் எந்த தகவலும் அண்ணாதுரையிடமிருந்து பெற முடியவில்லை. அதிகாலை இரத்தம் வழிய காவல் நிலையத்தில் சீரியசான நிலைமையில் இருந்த போது கூட போலீசார் ’அவன் நல்லா நடிப்பான்,பேசமா இரு’ என உடன் இருந்த பழனிவேலிடம் அலட்சியமாக பேசியுள்ளனர். இவை அனைத்தையும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் விசாரணை நடத்தி உறுதி செய்து கொண்டோம்.

மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றவுடன் இறந்து விட்டார். ஆளுங்கட்சி பிரமுகர் மூலம் தகவல் சொல்லி “இழுப்பு வந்துவிட்டது, இறந்துவிட்டார்” என காவல்துறை மூடிமறைக்கப் பார்த்தது. அப்போதைய டி.எஸ்.பி.பழனிவேலு உரிமைகளை மயிருக்குச் சமமாக மதிக்கும் குணம் உடையவர். நாங்கள் போலீசாரை கண்டித்து பிரசுரம் வினியோகித்து, ஆர்ப்பாட்டம் நடத்தினோம். பல கட்சி நிர்வாகிகளை அழைத்து “சுமூகமாக முடியுங்கள், பணம் ஏதேனும் கொடுத்து விடலாம்” என போலீசார் முயன்றனர். மக்களோடு நாங்கள் நின்று உறுதியாக போராடியதால் போலீசாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அண்ணாதுரை மரணம் தொடர்பாக போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய உயர் காவல் துறை அதிகாரிகளுக்கு மனைவி செல்வி மூலம் புகார் மனு பிறகு அனுப்பினோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டோம். குற்றவாளி போலீசார் துணை ஆய்வாளர் பாபு கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்துவிட்டோம். அது அண்ணாதுரை மீது உள்ள சந்தேக வழக்கு ஆகும். எனவே ஒரு சம்பவத்திற்கு இரு முதல் தகவல் அறிக்கை போட முடியாது என நமது வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பிறகு மாநில மனித உரிமை ஆணையத்திற்கு மனவி செல்வி மூலம் புகார் அனுப்பினோம். அங்கிருந்து ஆய்வாளர் ஒருவர் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்க வந்தார். கோட்டாட்சியர் போல அவரிடமும் அனைத்து சாட்சிகளையும் நடந்த சம்பவங்களை தொகுத்துச் சொல்லுங்கள் என அழைத்து சென்றோம்.

ஆய்வாளரின் விசாரணை அறிக்கைக்கு பிறகு மனித உரிமை ஆணையம் வழக்கை ஏற்றுக் கொண்டு விசாரித்தது. நாங்கள் மரணம் அடைந்த அண்ணாதுரையின் மனைவி மற்றும் மகன், உறவினர்கள் என அனைவரையும் சென்னைக்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் கொடுக்கச் செய்தோம். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, 2007-ல் மாநில மனித உரிமை ஆணையம் துணை ஆய்வாளருக்கு எதிராக ஆணை பிறப்பித்தது. அதில் “போலீசார் பேருந்து நிலையித்திலும், காவல் நிலையத்திலும் வைத்து அண்ணாதுரையை கடுமையாகத் தாக்கியுள்ளனர். அதன் மூலம் உடலில் பல காயங்கள் ஏற்பட்டதுடன் அதன் விளைவாகத் தான் அண்ணாதுரை மரணம் அடைந்துள்ளார். இது போலீசரால் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல் குற்றம் ஆகும். குற்றவாளி போலீசார் இந்த ஆணையத்தையும், உயர் அதிகாரிகளையும் வேண்டுமென்றே தவறான தகவல் அளித்து திசை திருப்பியுள்ளனர். எனவே ஒரு லட்ச ரூபாய் இழப்பீடாக அண்ணாதுரை குடும்பத்திற்கு துணை ஆய்வாளர் சம்பளத்திலிருந்து பிடித்துத் தர வேண்டும். மேலும் தமிழக அரசு 50,000 ரூபாய் அண்ணாதுரை வாரிசுகளுக்கு மனிதாபிமான முறையில் கொடுக்க வேண்டும்” என உத்தரவிட்டது.

‘இந்த உத்தரவு கிடைத்த ஒரு மாதத்தில் இழப்பீடு கொடுக்க வேண்டும்’ என சொல்லப்பட்டது. ஆனால் ஆறு மாதம் ஆகியும் அரசு கண்டு கொள்ளவில்லை. எனவே மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டோம். 4 வாய்தா போன பிறகு கொடுத்து விடுகிறோம் என அரசு கூறியதை கேட்டு நீதிபதி வழக்கை முடித்து வைத்தார். ஏன் இது வரை கொடுக்கவில்லை என சத்தமாகக் கூட கேட்கவில்லை. கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனைவி செல்விக்கு ரூ 1,50,000 பணத்தை மனித உரிமை பாது காப்பு மையம் முன் நின்று வாங்கிக் கொடுத்தது.

பிறகு கோட்டாட்சியர் விசாரணை அறிக்கையையும், அதன் முடிவுகளையும் பாதிக்கப்பட்ட மனைவிக்கு தர வேண்டும் என மனு கொடுத்தோம். ‘நாங்கள் அரசுக்கு அனுப்பி விடுவோம் உங்களுக்கு தரமுடியாது. போலீசார் மீது நடவடிக்கை எடுப்பதும், எடுக்காததும் அரசின் விருப்பம். நான் எதுவும் செய்ய முடியாது’ என கோட்டாட்சியர் கையை விரித்துவிட்டார்.

மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அண்ணாதுரை மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை அறிக்கையையும் அதன் பரிந்துரைகளையும் எங்களுக்குத் தர வேண்டும் என கேட்டோம். பல முறை வாய்தா ஆனது. பிறகு நீதிபதி “ஏன் கொடுக்கக் கூடாது, பாதிக்கப்பட்டவருக்கு கொடுங்கள்” என அரசுக்கு உத்தரவிட்டார். “இப்போது தகவல் அறியும் சட்டம் எல்லாம் வந்த பிறகு ஏன் மறுக்கிறீர்கள்” என செல்லமாக கடிந்து கொண்டார்.

கோட்டாட்சியரிடம் ஒரு வழியாக விசாரணை அறிக்கையை வாங்கினோம். அதில் “அண்ணாதுரையை போலீசார் அடித்து துன்புறுத்தியது உண்மை, ஆனால் அண்ணாதுரை போலீசு அடித்ததால் சாகவில்லை. எனவே துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கின்றேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

பிறகு 2008-ல் மீண்டும் உயர்நீதிமன்றம் சென்றோம். குற்றவாளி போலீசாரை சக போலீசே எப்படி விசாரிக்க முடியும் எனவே சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்திரவிட வேண்டும் என வழக்கு தாக்கல் செய்தோம். சில வாய்தா போனது. இறுதியில் நீதிபதி கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அண்ணாதுரை மரணம் அடைந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி உத்திரவிட்டார்.

ஒருவழியாக சி.பி.சி.ஐ.டி துணை கண்காணிப்பாளர் விசாரணைக்கு வந்தார். சாட்சிகள் அனைவரையும் விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு வரச் சொன்னார். நாம் தலையிட்டு “காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கக் கூடாது, ஊருக்கே சென்று விசாரியுங்கள், அப்போது தான் மக்கள் அச்சம் இல்லாமல் சொல்லுவார்கள். மேலும் சம்பவம் நடந்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. பாதி பேர் நமக்கு ஏன் வம்பு என ஒதுங்க கூடும், எனவே கவனமாக விசாரிக்க வேண்டும்” என துணை கண்காணிப்பாளரிடம் சொன்னோம், அதன்படி விசாரணை நடந்தது.

இறுதியில் குற்றப்பத்திரிகை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது. குற்றப் பிரிவு துணை ஆய்வாளர் பாபு மட்டும் குற்றவாளி, அவர்அண்ணாதுரையை அடித்து காயப்படுத்தியுள்ளார் என்பது மட்டும்தான் குற்றச்சாட்டு. மருத்துவ காரணங்களால் மூச்சுத் திணறி இறந்து போனார் என்பதை முடிவாக்கப்பட்டு தற்போது கடலூர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

திடீரென்று ஒருநாள் சாட்சி விசாரணைக்கு அனைவரும் கடலூருக்கு வர வேண்டும் என 2013 ஆண்டில் செல்வி உட்பட அனைவருக்கும் சம்மன் வந்தது. அவர்களுக்கு எப்படி நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க வேண்டும் என ஒருமுறை கூட தற்போதைய அரசு வழக்கறிஞர் சொல்லவில்லை. வழக்கு விசாரணை தேதி குறித்து நடத்த நீதிமன்றமும் தயாராக உள்ளதை அறிந்த நாளில், நாம் தலையிட்டு நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஆவணங்களை எங்களுக்கு தர வேண்டும். போலீசுக்கு ஆதரவான அரசுத் தரப்பு வழக்கறிஞரே, எப்படி போலீசு குற்றவாளியாக உள்ள வழக்கில் வழக்கறிஞராக செயல்படமுடியும் என ஆட்சேபணை செய்து வழக்கு விசாரணையை நடக்காமல் ஒத்திவைக்க மனு போட்டோம். வழக்கும் ஒத்தி வைக்கப்பட்டது. பிறகு மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக அரசுக்கும் மனு அனுப்பினோம்.

காவல்நிலைய மரணம் தொடர்பான வழக்கு என்பதால் “எங்களுக்கு சிறப்பு வழக்கறிஞர் அரசு சார்பில் வைத்து கொடுக்க வேண்டும். என் கணவர் மரணத்திற்கு உண்டான வழக்குப் பிரிவுகள் சேர்க்கப்படவில்லை. அடிதடி வழக்குபோல் சாதாரண பிரிவே போடப்பட்டுள்ளது. இதை உரிய ஆதாரங்களுடன் வாதிட திறமையான வழக்கறிஞர் வைக்க ஆவன செய்ய வேண்டும்” என்று அனுப்பிய மனு அதே நிலையில் உள்ள நிலையில் மீண்டும் உயர்நீதிமன்றம் சென்று வழக்கு போட்டோம். பல வாய்தாக்களாக நடந்து வருகிறது.

இப்படி தொடர்ந்து சென்னைக்கு செல்வதும் உயர்நீதிமன்றத்தை நாடுவதும் அனைவருக்கும் சாத்தியமானது அல்ல. இந்த வழக்கில் ஆரம்பத்தில் வழக்கறிஞர் சிவஞானம் என்ற விருத்தாசலம் நண்பர் நடத்தினார். பிறகு இது தொடர்பாக அனைத்து வழக்குகளையும் வழக்கறிஞர் சத்தியசந்திரன் சளைக்காமல் இன்று வரை உறுதியாக நடத்தி வருகிறார்.

அண்ணாதுரை மரணத்திற்கு காரணமான காவல் துணை ஆய்வாளர் பாபு மீது உள்ள கிரிமினல் வழக்கில் தண்டனை வழங்கப்படும் போதுதான் முழுமையான நீதி கிடைத்ததாகும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வாங்கிக் கொடுக்க ஒன்பது ஆண்டுகள், போலீசை தண்டிக்க எத்தனை ஆண்டுகள். . .அரசை எதிர்த்து சமரசமின்றி உறுதியோடு போராடினால் சட்டத்தின் ஆட்சி சந்தி சிரிக்கும். பிறகு தான் நீதி கிடைக்கும்.?

காவல் நிலைய மரணத்தில் மட்டுமல்ல எடுத்து கொண்ட அனைத்து வழக்குகளிலும் மனித உரிமை பாதுகாப்பு மையம் நீதி கிடைக்க இறுதி வரை போராடி வருகிறது, போராடும்.

தகவல் : மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.