privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய் ! மே தினப் பேரணி, முற்றுகை போராட்டம் ! !

ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய் ! மே தினப் பேரணி, முற்றுகை போராட்டம் ! !

-

‘சிறப்பு அகதி முகாம்’ எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்!
அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்கு!!

என்ற முழக்கத்துடன்

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

ஆகிய புரட்சிகர அமைப்புகள் மே நாள் அன்று சென்னையில் பேரணி மற்றும் போலீசு டிஜிபி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தின. இந்த பேரணி-முற்றுகை போராட்டத்தில் தமிழகம் முழுவதிலுமிருந்து தோழர்கள், மக்கள், மாணவர்கள் சுமார் 5000 பேர் கலந்து கொண்டனர்.

காலை 10 மணிக்கு பூக்கடை போலீஸ் ஸ்டேஷன் முன்பு மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர்.

“வைகோ, நெடுமா, சீமா கெளம்பிட்டாங்க டீமா”,  “இருட்டு, கும்மிருட்டு”, “ஏன் என்ற கேள்வியைக் கேள்”, “காங்கிரசு என்றொரு கட்சி” ஆகிய பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

உயர்நீதிமன்றத்திலிருந்து கடற்கரை சாலையில் உள்ள டிஜிபி அலுவலகம் நோக்கி பேரணி போய் டிஜிபி அலுவலகத்தை முற்றுகை இடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், போலீஸ் அதற்கு அனுமதி மறுத்தது. பூக்கடை போலீஸ் ஸ்டேஷனில் ஆரம்பித்து மெமோரியல் ஹால் நோக்கி பேரணி நடத்த மட்டும்தான் அனுமதி வழங்கினார்கள். மெமோரியல் ஹால் தாண்டி போலீஸ் தடையரணை மீறி அண்ணா சாலை வழியாக டிஜிபி அலுவலகம் போவதாக முடிவு செய்யப்பட்டது.

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்)

பேரணிக்கு தலைமை தாங்கிய புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில தலைவர் தோழர் முகுந்தன் தமிழக அகதி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் விடுதலைக்காக கடந்த ஒரு மாதமாக நடத்தப்பட்ட மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கம் பற்றி விளக்கி, அதன் ஒரு பகுதியாக இன்று சென்னையில் டிஜிபி அலுவலகம் முற்றுகை நடைபெறவுள்ளது என்று தெரிவித்தார்.

அடுத்து பெண்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் அஜிதா பேசினார்:

“கடந்த இரு மாதங்களாக ஈழத் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடத்திய இலங்கை அதிபர் ராஜபக்சேவை தண்டிக்க கோரி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் வீதிகளில் இறங்கி போராடினார்கள். அந்த போராட்டங்கள் தொய்வடையாமல் உந்தித் தள்ளக் கூடிய சக்தியாக இருந்தவை நம்முடைய அமைப்புகள். அந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக, ராஜபக்சே உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை தண்டிப்பது என்கிற கோரிக்கையோடு, ‘தமிழகத்தில் சிறப்பு அகதி முகாம் என்ற பெயரில் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களை விடுதலை செய்!’, ‘அனைத்து ஈழத் தமிழ் மக்களுக்கும் இரட்டை குடியுரிமை வழங்கு’ என்ற முழக்கங்களோடு கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது.”

“இலங்கையில் நடந்த போரால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் பல்வேறு நாடுகளுக்கும் அகதிகளாக போயிருக்கிறார்கள், இந்தியாவுக்கும் வந்திருக்கிறார்கள். கை, கால்களை இழந்து, உறவுகளை இழந்து, நாட்டை இழந்து வந்திருக்கிறவர்களின் உண்மையான நிலை என்ன?” என்று கேட்டு சிறப்பு முகாம்கள் என்பவை சித்திரவதை கூடாரங்களாக இருக்கின்றன என்பதை விளக்கும் சம்பவங்களை குறிப்பிட்டார்.

தொடர்ந்து, “இந்தியா முழுவதும் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனை கொடூரமானது. இந்த நாட்டின் சுதந்திரமான குடிமக்களாக வாழும் அவர்கள் 2 வயது குழந்தை முதல் முதியோர் வரை பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். மக்களை பாதுகாக்க வேண்டிய போலீஸ்காரர்கள்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் முக்கிய குற்றவாளிகளாக இருக்கிறார்கள்.  இந்த நிலையில், போலீஸ்காரன் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று சூழலில் சிறப்பு முகாம்களில் வாழும் ஆதரவற்ற அகதிகளின் நிலைமை மிகவும் கொடூரமானதாக உள்ளது.  முகாம்களில் வசிக்கும் பெண்கள் எந்த நேரத்திலும் போலீசால் வேட்டையாடக் கூடிய நிலையில் அடிமைகளைப் போல இருக்கிறார்கள். அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் போலீசாரின் கொடுமைகளை பார்க்கும் போது சிங்கள இராணுவமே பரவாயில்லை என்று தோன்றுவதாக சொல்கிறார்கள்.”

“ஈழத் தமிழருக்காக உயிரைக் கொடுப்பேன் என்று பேசக் கூடிய தமிழ் இன வாத அமைப்புகள், ‘ஜெயலலிதா ஈழம் வாங்கித் தருவார், இலை மலர்ந்தால் ஈழம் மலரும், ஜெயலலிதா ஈழத் தாய், சட்ட மன்ற தீர்மானம்’ என்று பேசும் தமிழின வாதிகள் யாரும் இந்த பிரச்சனைக்காக ஏன் போராடவில்லை? ஜெயலலிதா ஒரே கையெழுத்தால் அகதி முகாம்களை இழுத்து மூட முடியும். தமிழினவாதிகள் பிழைப்பு வாதிகளாக இருக்கிறார்கள். மகஇக உள்ளிட்ட நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள்தான் கடந்த 30 ஆண்டுகளாக ஈழத் தமிழர்களின் அரசியல் சுய நிர்ணய உரிமைக்காக தொடர்ந்து போராடி வருகின்றன.”

“அந்த வகையில் அகதி முகாம்களை இழுத்து மூடி, அவற்றில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை விடுதலை செய்வதற்கு புரட்சிகர அமைப்புகள் சர்வேதேச பாட்டாளி வர்க்கம் என்ற முறையில் எப்போதும் துணை நிற்கும்.”

என்று பேசினார்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர் ஓவியா:

“உலகம் முழுவதும் பல நாடுகளில் அகதிகள் இருக்கிறார்கள். ஈழத் தமிழர்களும் பல நாடுகளுக்கு அகதிகளாக போயிருக்கிறார்கள். எந்த நாட்டிலும் அவர்கள் தமிழ்நாட்டில் நடத்தப்படுவதைப் போல நடத்தப்படுவதில்லை. பல நாடுகளில் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் அரசு ஏன் இப்படி நடத்துகிறது என்றால்,  என்றுமே தமிழக அரசும் இந்திய அரசும் ஈழத் தமிழருக்கு எதிரானதுதான். இதே இந்தியாவில் பங்களாதேஷ், பர்மா போன்ற நாடுகளில் இருந்து வந்த அகதிகள் சுதந்திரமாக இருக்கிறார்கள். அவர்கள் இது போல முள்வேலி முகாம்களில் இல்லை.”

“ஈழத் தமிழர்கள் அனைவருமே புலிகள், பயங்கவாதிகள் என்று முத்திரை குத்தி என்று அப்பாவி மக்களை இந்த அரசு சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது. தொப்புள் கொடி உறவு என்று பல தமிழின வாதிகள் பேசுகிறார்கள். நெடுமாறன், வைகோ, சீமான் போன்றவர்கள் ஈழத் தமிழர்களுக்காகவே பிறப்பெடுத்தது போல பேசுகிறார்கள். நீங்க அமெரிக்காவிடம் போக வேண்டாம், இந்திய அரசிடம் வேண்டாம். தமிழக அரசிடம் ஏன் இப்படி ஒரு கோரிக்கை வைத்து போராட முடியவில்லை. ஜெயலலிதாவால் செய்ய முடிகிற இந்த தீர்வுக்காக ஏன் போராடவில்லை. ”

“இந்த பிரச்சனைக்காக நக்சல்பாரி அமைப்புகளாகிய நாங்கள் தொடர்ந்து போராடுவோம். ஈழத் தமிழ் மக்களுக்கு துணை நிற்போம். சர்வேதேச பாட்டாளி வர்க்கம் என்ற முறையில் ஒடுக்கு முறைகளுக்கு எதிராக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம்.”

என்று பேசினார்.

(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்)

தைத் தொடர்ந்து மெமோரியல் ஹால் நோக்கி. விண்ணதிரும் முழக்கங்கள் எழுப்பிய படி நூற்றுக்கணக்கான குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், முதியவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் எல்லா பிரிவினரும் என 5000 பேர் பேரணியாக சென்றனர். இருபுறமும் நின்ற மக்களும் கடைக்காரர்களும் பேரணியின் முன்பு கொண்டு செல்லப்பட்ட அகதிகள் முகாமின் உருவரை மாதிரியினால் கவரப்பட்டார்கள்.

சுமார் 11.30 மணி அளவில் மெமோரியல் ஹால் அருகில் வந்து சேர்ந்த பேரணியை போலீசார் தடுப்பரண் அமைத்து தடுத்து நிறுத்தினார்கள்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் மருதையன் கண்டன உரை ஆற்றினார்.

சிறப்பு அகதிகள் முகாம் என்பது எப்படிப்பட்ட சித்திரவதைக் கூடமாக செயல்படுகிறது என்பதை பல சம்பவங்கள் மூலம் விளக்கினார். சிறப்பு அகதி முகாமில் போலீஸ், கியூ பிராஞ்ச் துறைகளை சேர்ந்தவர்களின் கொட்டம், ஆதிக்கம், வெறியாட்டம் இவற்றை அம்பலப்படுத்தினார்.

“பல நூற்றுக்கணக்கான ஈழத் தமிழ் பெண்களை அவர்கள் சீரழித்திருக்கின்றனர். ‘ஒன் பொண்டாட்டிய அனுப்பு’ என்றால் அனுப்பணும். இல்லை என்றால், அவரை புலி என்று முத்திரை குத்தி சிறப்பு முகாமுக்கு அனுப்புகிறார்கள். சிறப்பு முகாமுக்கு போய் விட்டால் அவரது நிலைமை அவ்வளவுதான்.”

“இந்த நிலைமைகளை சகிக்க முடியாமல் பலர் ஆஸ்திரேலியாவுக்கு போக முயற்சிக்கின்றனர். 7,000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆஸ்திரேலியாவுக்கு படகில் போக முடியாது, ஆனாலும் போகிறார்கள். ஏன்? இந்த கேள்வியை காவல் துறையைச் சேர்ந்த சைலேந்திர பாபு கேட்டார். ” ‘ஆபத்து என்று தெரியாமலா போகிறோம். ஆனால் எப்படியாவது கியூ பிராஞ்சிடமிருந்தும் போலீசிடமிருந்தும் தப்பி விடத்தான் போகிறோம். இவர்களுக்கு ராஜபக்சேவே பரவாயில்லை’ என்று ஈழத் தமிழர்கள் காரி துப்புகிறார்கள்.”

“1987லிருந்து தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அகதி முகாம்கள் 8X8 அளவிலான தகரக் கொட்டாய்கள்தான். பகல் நேரத்தில் கரண்ட் கிடையாது. இரவில் ஒரே ஒரு குண்டு பல்புக்கு மட்டும் கரண்ட் கிடைக்கும். 6 மணிக்குள் வந்து அடைந்து விட வேண்டும். வேறு முகாமில் இருக்கும் உறவினர் யாராவது, அப்பா செத்துப் போய் விட்டால் கூட உடனேயே போக முடியாது. ஆர்டிஓ கையெழுத்து வேண்டும். ஆர்டிஓ கையெழுத்து வாங்குவது சாதாரண விஷயம் கிடையாது.”

“ஜெயலலிதா ஆரம்பத்தில் இருந்து ஈழத் தமிழர்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். அவரால்  ஒரே கையெழுத்தில் இந்த அகதி முகாம்களை கலைக்க முடியும். 2009ல் கருணாநிதி ஈழ அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று சொன்ன போது அதை எதிர்த்தவர்தான் ஜெயலலிதா. இவரைத்தான் ஈழத்தாய், ஈழம் வாங்கித் தருவார் என்று தமிழின வாதிகள் சொல்கிறார்கள்.”

“அகதி முகாமிலிருந்து ஒருத்தன் வெளிநாட்டிற்கு போனா உனக்கென்ன? பிடித்து வைக்க என்ன உரிமை இருக்கிறது. ஏன் தடுக்கிறீர்கள்?

“மே நாள் என்பது பாட்டாளி வர்க்கம் தன் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதோடு, தன்னைப் போலவே ஒடுக்கப்படுகிற பிற பிரிவினருக்காகவும் போராடும் நாள். அந்த வகையில் அகதி முகாம்களில் ஈழத் தமிழர்கள் விடுதலை, இரட்டை குடியுரிமை என்றும் நம்முடைய கோரிக்கை வைத்திருக்கிறோம்.”

“அகதிகள் தம் நாட்டில் விட்டு வந்த இடங்கள் எல்லாம் ராஜபக்சே அரசால் இந்திய தரகு முதலாளிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்திய அரசு ஈழத் தமிழருக்கு எதிரானது, என்று வலியுறுத்துகிறோம். சுயநிர்ணய உரிமைக்காகவும், ஒடுக்குமுறைக்கு எதிராகவும் இந்தியாவிலுள்ள புரட்சிகர சக்திகளாகிய நாம் தொடர்ந்து போராடுவோம்.”

பேரணி போலீசார் அமைத்திருந்த தடையரணை மீறி முன்னேறி செல்லும் போது போலீசார் தோழர்களை கைது செய்து அழைத்து சென்றனர். கைது செய்யப்பட்ட தோழர்கள் அனைவரும் சென்னை ராயபுரத்தில் உள்ள 5 திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அனைத்து மண்டபங்களிலும் கருத்தரங்கம், பொதுக்கூட்டம் போல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.


(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்)
தகவல் : மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

  1. மே தினம் வாழ்க வாழ்க
    ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய். போராட்டம் வெல்க,வெல்க.

  2. நாங்கள் பார்த்தவரை 5000 முதல் 6000 பேர் வரை பேரணியில் இருந்திருப்பார்கள்…ஆனால் உங்கள் செய்தியில் வெறும் 3000 என்று போட்டிருக்கிறீர்கள். இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு தன்னடக்கம் கூடாது.

    • எங்களுக்கு தகவல் தெரிவித்த தோழர்கள் தவறாக தெரிவித்து விட்டார்கள். தற்போது பிழை திருத்தியிருக்கிறோம்.

  3. உள்ளூர் பத்திரிக்கை தவிர வெளியூர் பத்திரிக்கைகள் மூச்சே விடவில்லை. டிவிக்காரன் போகிற போக்கில் ஐநூறு பேர்ன்னு சொல்றான்ஃ எப்படி இருக்காங்கப்பா….

  4. மே தினத்திற்கு பெருமை சேர்த்த பேரணி என்று தான் சொல்ல வேண்டும். ஏழு, எட்டு வருடங்களுக்கு முன் சென்னை பாடியில் நடந்த மே தின பேரணியில் அதிகபட்சம் ஆயிரம் பேர் மட்டுமே பங்கெடுத்தனர். நேற்றைய பேரணி சாரைசாரையாக அனுமார் வால் போன்று நீண்டு கொண்டே இருந்தது. ஒருவர் பின் ஒருவராக ஒரு வரிசையை மட்டும் கொண்டிருந்தால் டி.ஜி.பி அலுவலகத்தை உயர்நீதிமன்றத்தில் இருந்தே தொட்டிருக்கலாம்.

    வெயிலின் உக்கிரத்தை மட்டுப்படுத்த நடமாடும் தண்ணீர் ஏற்பாடு மிகவும் கைகொடுத்தது. ஒலிபெருக்கியில் சிறு குறை இருந்தது. தோழர் மருதையனின் உரை சரியாக காதில் விழவில்லை. போலீஸ்காரர்கள் பாடல்களை மிகவும் ரசித்துக் கொண்டிருந்தனர். இந்த வெயிலில் நம்மையும் துன்பப்படுததுகிறார்களே என்ற மனக்குறையின்றி அவர்கள் முகபாவம் இருந்தது. தோழர் முகுந்தன் சிறப்பு அகதிகள் முகாம் கொடுமைகளை விவரித்துக் கொண்டிருந்த போது, ‘அவர் பெயர் என்ன ?’ என்று கேட்டார், ஒரு போலீஸ்காரர்.

    தமிழ்நாட்டில் ஈழ அகதிகள் நிலைமையை பற்றி விரிவாக ஊடகங்களில் விவாதித்து அரசின் கவனத்தை ஈர்க்க ஊடகத் துறையில் பணிபுரியும் நண்பர்கள் முன்வர வேண்டும். அட்ட கத்தி வீரர்கள் நிரம்பிய ஊடக விவாத சபைகளில், மக்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்டோருக்கும் சிறிது இடத்தை வழங்கட்டும்.

  5. பேரணீயில் தண்ணீர் கொடுத்த தோழர்களுக்கு மிகவும் நண்றி !!!

  6. //அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக் குடியுரிமை//

    இன்றைய உலக சூழலில் தமிழக மக்களால் நிச்சயம் வென்றெடுக்கக்கூடிய சாத்தியமான கோரிக்கை. மாணவர் போராட்டங்களில் முதன்மையான கோரிக்கையாக இது இடம் பெற வேண்டுமென எதிர்பார்க்கிறேன். மாணவர்கள், பல்வேறு இயக்கங்கள் மற்றும் தமிழுணர்வாளர்கள் என எல்லோரும் ஒருமித்த குரலில் கோரிக்கை வைத்து போராட்டங்கள் செய்தால் நிச்சயம் இதை அடையலாம்.

  7. குறிப்பு

    மே தின பேரணி, முற்றுகை – ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனுபவத்தை எழுதியுள்ளேன். தற்போது எங்களது வீட்டில் நெட் வசதி இல்லை. நண்பர் வீட்டில் தங்கும் வேளையில் எழுதியது. வினவில் வந்த கட்டுரையும் படித்தேன். இது, கைதான எங்கள் குடும்ப நபர்களிடம் கேட்டு தொகுத்தது. மறுமொழி நீண்டுவிட்டது சுருக்க தெரியவில்லை.

    மே தினப் போராட்ட அனுபவம்!

    சென்னை பூக்கடை தபால்நிலையம் முன்பு, மூன்று வயது குழந்தைகள் முதல் என்பது வயது முதியோர்கள் வரை மே தின பேரணி – டிஜிபி அலுவலகம் முற்றுகை ஆர்ப்பாட்டத்திற்கு ஆயிரக்கணக்கில் திரண்டு இருந்தது, சித்திரையின் கத்திரி வெய்யிலையே தகிக்க வைத்தது.

    காலை 9 மணி முதலே சென்னை பூக்கடை, பிராட்வே பேருந்து நிலையம், மற்றும் சென்னை உயர்நீதி மன்றம் என தோழர்கள் சிவப்பு உடையில் பெருமளவில் திரண்டு இருந்தனர். தியாகிகளின் இரத்தத்தில் சிவந்து இருந்த செங்கொடி அவர்கள் கையில் உயிர் பெற்றது போல் பிரகாசித்தது.

    மார்க்சிய ஆசான்கள் படங்கள், பதாகைகள், காட்சி விளக்கங்கள், பாடல்கள், மற்றும் உரைகள் பார்ப்போரை ஈர்த்தது.

    தமிழக ஈழ அகதிகள் சிறப்பு முகாமை காட்சி விளக்கத்தில் நிகழ்த்தி காட்டியது, தமிழகத்தில் இப்படி ஒரு கொடுமையா? என பார்த்தோரை கவலைக் கொள்ள வைத்தது. அதில் பங்கேற்ற தோழர்கள் தமிழக சிறப்பு முகாமில் வாழும் ஈழ அகதிகள் குடும்பத்தின் அவலத்தையும், போலீசின் கண்காணிப்பு, மிரட்டலையும் கண்முன் நிறுத்தினர்.

    டிஜிபி அலுவலகம் முற்றுகைக்கு போலீசு தடை விதித்ததை எதிர்த்து, தோழர் மருதையன் ஆற்றிய கண்டன உரை, நடைபாதையில் சென்ற பொதுமக்களையும் கூட்டத்துடன் நிறுத்தியது. அவரது உரையில் ஜெயலலிதா, கருணாநிதி மாறி, மாறி ஆட்சி செய்த தமிழகத்தில் ஈழ அகதிகளையும், குழந்தைகளையும் கொடும் கிரிமினல்கள் போல் சட்டத்தின் முன் அசிங்கப்படுத்தபடுவதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார். தமிழ் ஈழ மக்களின் தொப்புள் கொடி உறவுகள் என சுற்றி வரும் தமிழ் இனவாதிகள் இதற்கு எதிராக போராடாததைத் தோலுரித்தார்.

    டிஜிபி அலுவலக முற்றுகைக்கு தடை மீறி முன்னேறிய தோழர்களை கைது செய்த போலீசு, பல்லாயிரம் பேர் திரண்டு இருந்தாலும், கைதாவதற்கு 100 பேர் கூட துணிய மாட்டார்கள் என தப்பு கணக்கு போட்டது.

    தனது போலீசு முற்றுகையை தளர்த்தி, விலகி வேடிக்கை பார்ப்பது போல் நின்றது. கலைந்து போவார்கள் என மனப்பால் குடித்தது. தோழர்கள் இம்மியும் கலையாமல் மேலும், மேலும் முற்றுகைக்கு முன்னேறியவுடன் ஆப்பசைத்த குரங்காக விழி பிதுங்கிய போலீசு, திடீரென போலீசு வாகனங்களைக் கொண்டு சுற்றி வளைத்தது. ஆயிர கணக்கில் கைதான தோழர்களை தண்டையார்பேட்டை, இராயபுரம் என பல மைல் தூரம் உள்ள மண்டபங்களில் அடைத்தது.

    கைது வாகனங்களில் அடைக்கப்பட்ட தோழர்களில் பலர் கொளுத்தும் வெயிலில் நாவறண்டு, சோர்ந்து மயக்கமுற்ற நிலையிலும் ஈழ ஆதரவு முழக்கங்களை வழி எங்கும் முழங்கினர்.

    தோழர்கள், முற்றுகை ஆர்ப்பாட்டத்தை தடைச் செய்த போலீசு வாகனத்தையே தொடர் முழக்க பேரணி வாகனமாக்கினார்கள். பகல் 12 மணிமுதல் நன்பகல் 3 மணிவரை இரண்டாம் கட்ட போராட்டம் எதிரியின் கோட்டைகுள்ளேயே எதிரொலித்தது.

    பகல் 3 மணிக்கு பல மண்டபங்களில் சிறை வைக்கப்பட்டு, மாலை 4 மணியாகியும் குழந்தைகளுக்கு கூட உணவு வழங்க மறுத்தது போலீசு, கொதிப்படைந்த தோழர்கள், பூட்டப்பட்ட மண்டப வாயிலின் பூட்டுடைக்கும் போராட்டத்தில் இறங்கினர். “போலீஸ் அராஜகம் ஒழிக!”, ”கைது செய்த குழந்தைகளுக்கு சோறு போட வக்கில்லாத போலீசே! விடுதலை செய்! விடுதலை செய்!” என்று முழக்கமிட்டனர். போராடியவர்களுக்கு ஆதரவாக, வழக்குரைஞர்கள், பார்வையாளர்கள் மண்டப வாயிலில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    நிலைமைக் கொதிநிலை அடைந்ததை கண்ட போலீசு தலைமை, மண்டபங்களை சுற்றி மீண்டும் போலீசு பட்டாளத்தை இறக்கி பீதியூட்டியது. கைதான தோழர்கள் அதற்கு அஞ்சாமல் மண்டபத்தின் முகப்பு ஜன்னல்களில் ஏறி “கீழே குதித்து வெளியேறுவோம் அல்லது பிணமாவோம்!” என்று முழக்கமிட்டனர். பீதியடைந்த போலீசு அதிகாரிகள், ‘போர்க்கால’ நடவடிக்கையில் இறங்கினர். பசியாறக்கூடிய உணவுகள் அனைத்தையும் பத்து நிமிடத்தில் மண்டபத்திற்குள் கொண்டு வந்தனர். பரோட்டா, க்ரீம்பிரெட், சில்லிசிக்கன், ப்ரைட் ரைஸ், தலப்பாக்கட்டு பிரியாணி, சாம்பார் சாதம், முழு சாப்பாடு மற்றும் பிஸ்கெட் என்று கையில் கிடைத்ததை வாரி வந்த போலீசு, முன்னின்று தோழர்களுக்கு விநியோகித்தது. அப்போது ஒரு போலீசு, “வரிசையில் வாங்க” என்று குரலெழுப்ப, இன்னொரு போலீசு, “எதுவும் சொல்லாதேய்யா….. அவர்கள் ஒழுங்கா வருவாங்க!” என்றார் கோபமாக.

    மாலை விடுதலை செய்யும் நேரத்தில் மண்டபத்திற்குள் பவ்யமாக வந்த உயர் அதிகார போலீசு கும்பல், “அனைவரும் ஒத்துழையுங்கள்…. கைது செய்த இடத்திலேயே உங்களை விட்டு விடுகிறோம், விடுதலை செய்கிறோம்” என்றனர்.

    நொடிப் பொழுதும் தளராத, தோழர்களின் போராட்ட குணமும், எஃகு போன்ற அமைப்பு உறுதியும் போலீசு கும்பலை கதிகலங்கடித்தது. கத்தரி வெய்யிலையும், மீறி அவர்களை நடுங்க வைத்தது.

    விடுதலைக்கு பிறகு, வீடு திரும்ப வெளியில் வந்தபோது…… இளம் போலீசுக்கள் அடங்கிய சிறு கும்பல் இரகசியமாக ஒதுங்கி சிரித்துக் கொண்டிருந்தனர். வழிப்போக்கரைப் போல் அவர்கள் பக்கத்தில் நின்றப்போது…..,

    போலீசு1: “டேய்! காவலுக்கு போனா, எப்பவாவது சாப்டியானு கேட்டிறுக்கானா இந்த எஸ்.ஐ.? இப்ப பாருடா, அவன் கையாலயே நம்மளுக்கு சோறு போட்றான்! பிரியாணி பொட்டலம் தராண்டா” என்று சொல்லி வயிறு முட்ட சிரித்தார்.

    போலீசு2: “ஆமாண்டா, ஆர்ப்பாட்டம், ஊர்வலம்னு போனா இந்த எஸ்.ஐ. தலையே காட்டமாட்டான். கவுன்சிலர், தலைவர்னு தனியா கூப்பிட்டு பேசிட்டு நம்பல நிக்கவச்சிட்டு ஓடிடுவான். இப்ப…. மாமுலுக்குக் கூட போவாத இங்கேயே தேவுடு காக்கிறான். அப்பவும் அவனுக்கு நல்ல பேர் வர்ல…. நல்ல ஆளுங்கப்பா இவங்க! (தோழர்கள்) என்று குபிரென சிரித்தனர். பின்பு எதுவும் நடக்காத மாதிரி முகத்தில் ஒரு அடக்கம்!.

    ‘சிரிப்பு போலீசு’ என்று நினைத்து, அங்கிருந்து வெளியேறினோம். தோழர்களிடம் பிரியா விடைப்பெற்றோம்.

  8. தங்க வைக்கப்பட்ட மண்டபம் ஒன்றில் காவல்துறை சரிவர ஏற்பாடுகளைச் செய்யாமல் விட்டதால் சாலை மறியல்வரை செய்து அடிப்படை தேவைகளை நிறைவேற்றியுள்ளனர். இது குறித்த தகவல்களையும் தோழகள் இக்கட்டுரையில் இணைத்திருக்கலாம்.

    • கணக்கைக் குறைத்துச் சொல்லிவிட்டீர்கள், அதனால் உணவு ஏற்பாட்டிற்கு தாமதமாகிறது என அம்மாவைப் போன்ற தோற்றத்தில் அங்கிருந்த போலீஸ்காரம்மா சொன்னது. சரி, நம்மாளுக இப்படித்தான் என பசியோடே இருந்தேன். குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் மற்றும் முகவாட்டத்தோடு இருந்தவர்களுக்கும் ஒரு தோழர் நீளமான பிஸ்கட் பாக்கெட்டுகளை கொடுத்துக்கொண்டு வந்தார். எனக்கு அவர் கொடுக்கவில்லை. ஆனால் என்னுடன் இருந்த சில புதிய இளம்தோழர்களின் முகங்களைப் பார்த்ததும் அவர்களிடம் ஒரு பிஸ்கட் பாக்கெட்டை நீட்டினார். அதைப்பிரிக்கப்போகையில்தான் விரைவாக வந்த தோழர் மருதையன் உணவு ஏற்பாடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள், நாம் மண்டபத்தைவிட்டு வெளியேறுவோம் என்றார். உடனே கீழே விரைந்தோம். வெளியேறப்போகையில் கேட்டை அடைத்துவிட்டார்கள். சில தோழர்கள் மட்டுமே வெளியேற முடிந்தது.கேட்டின் உள்புறம் போலீசுகள் அடைத்துக்கொண்டு நின்றது.அவர்களுக்குப் பின்னால் நாங்கள் நின்றோம்.போலீசின் வக்கற்றதனத்தை முழக்கமிட்டோம். போலீசு கூனிக்குறுகி தலைகுனிந்து நின்றது. அந்தக்கேட்டும் போலீசும் நசுங்குவதற்குத் தயாராக இருந்தது. அப்போது எங்களுக்குத் தேவைப்பட்டது, உத்தரவு மட்டுமே! வெளியில் சென்றிருந்த தோழர்கள் சாலையை மறியல் செய்ய ஆரம்பித்தனர். மாடி சன்னல் வழியாக வெளியேறுங்கள் என தோழர் மருதையன் கூறினார். நானும் சிலதோழர்களும் மேலே ஓடினோம். நான் மாடி சன்னல் வழியாக வெளியேறி கீழே இறங்க வழி தேடினேன், ஆனால் கீழே மின்கம்பிகள் சென்றபடியால் இறங்க முடியவில்லை. அந்தக்கம்பிகள் மட்டும் இல்லாதிருந்தால் கணிசமான பேர் வெளியேறியிருப்போம். கீழிருந்த போலீசு மேலே எங்களைப் பார்த்தது. குதித்துவிடுவார்களோ என்கிற கலக்கமும் அவர்கள் முகத்தில் தெரிந்தது. நாங்கள் முழக்கமிட்டுக் கொண்டேயிருந்தோம். குதித்துவிடும் தோரணையிலேயே இருந்தோம். எனக்கு ஏதோ சிறுவயதில் விளையாடிக்கொண்டிருப்பதுபோல நினைவு. ஒரே குஷி. ஆனால் அதற்குள் போலீசு எங்கிருந்தோ பிரியாணிச் சட்டியைக் கொண்டு வந்துவிட்டது. சாலையிலிருந்த தோழர்கள் இறங்கச் சொன்னார்கள். சன்னலிலிருந்து நானும் கீழே இறங்கிவிட்டேன். ஆனாலும் அன்று எனக்குக் கிடைத்தது என்னவோ பன் மட்டும் தான்.

  9. //அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக் குடியுரிமை// இதுவே நமது ஈழ மக்களுக்கான மைய இலக்காக இருக்கவேண்டும்.

Leave a Reply to bhagat singh பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க