privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் - 07/05/2013

ஒரு வரிச் செய்திகள் – 07/05/2013

-

செய்தி: “கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும்” என, தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி: பலான பாரதிய ஜனதா அள்ளிக் கொடுத்த இந்த வெற்றிக்கு பாழாய்ப் போன காங்கிரசுக் கட்சியின் நன்றிக் கடன் என்ன?

______

செய்தி: சாரதா சிட்பண்ட் மோசடி விவகாரத்தில் அந்நிறுவனத்திற்கு சட்ட ஆலோசனை வழங்க, சென்னையை சேர்ந்த பிரபல பெண் வழக்கறிஞர் 1 கோடி ரூபாய் பெற்றது குறித்து, திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

நீதி: மோசடி நிறுவனத்திற்கு சட்ட ‘ஆலோசனை’ தருவது எவ்வளவு சிரமமானது? அதற்காக நளினி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட 1 கோடி குறைவு என்பது ‘அநீதி’ இல்லையா?

______

செய்தி: திருப்பதி ஏழுமலையானை வழிபட தர்ம தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

நீதி: ரேசன் கடைகளிலும், அம்மா உணவகத்திலும் காத்திருக்கும் ஏழைகளுக்கு திருப்பதி வெங்கட் மட்டும் விதிவிலக்கா என்ன?

_____

செய்தி: அணு மின் நிலையங்கள் அமைப்பது வாழ்வுரிமையைப் பறிப்பதற்காக அல்ல; வாழும் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காகவே எனக் கூறிய உச்சநீதிமன்றம் கூடங்குளம் அணு மின் நிலையத்தை செயல்படுத்த அனுமதி அளித்தது.

நீதி: இறப்பு இல்லாமல் வாழ்க்கை இல்லை எனும் தத்துவத்திற்கேற்ப சாகும் உரிமையைத்தான் வாழும் உரிமை என்று கூறுகிறது உச்சநீதிமன்றம்!

______

செய்தி: தமிழகத்தில் திங்கள்கிழமை எட்டு நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்தது. அதிக பட்சமாக திருச்சி மற்றும் வேலூரில் 103 டிகிரி வெயில் பதிவானது.

நீதி: சென்னை வானிலை ஆய்வு மையம் இப்படியான செய்திகளை தினசரி வெளியிட்டு ஐயா, சின்னைய்யா மற்றும் அடிமைகளை வெறுப்பேற்றுவது கடும் கண்டனத்திற்குரியது.

_______

செய்தி: தமிழகத்தில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க ரூ.984.70 கோடியில் புதிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை அறிவித்தார்.

நீதி: திட்ட ஒதுக்கீட்டில் பத்து சதவீத கமிஷன் 98 கோடி. முப்பது சதவீத கமிஷன் 294 கோடி. யார் யாருக்கு எத்தனை கோடியோ, அம்மாடி!

_______

செய்தி: நிலக்கரி ஒதுக்கீடு தொடர்பான விசாரணை அறிக்கையில் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வினி குமார், நிலக்கரி ஒதுக்கீடு வரைபடங்கள் தொடர்பான விவரங்களை நீக்கியதோடு மேலும் சில திருத்தங்களை மேற்கொண்டார் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா கூறியுள்ளார்.

நீதி: சிபிஐ அறிக்கையை அமைச்சர் திருத்தியது வெளிவந்துள்ளது போல அமைச்சரை அம்பானி திருத்தியது மட்டும் வெளிவராது.

______

செய்தி: தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் கரிகால் சோழனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல்லை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை நாட்டினார்.

நீதி: இது கரிகால் சோழனது மணி மண்டபமா இல்லை நீர் வராத காவிரியின் நினைவு மண்டபமா?

______

செய்தி: ஹிந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக இந்திய கேப்டன் தோனி மீது பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நீதி: ஹிந்து கடவுள்களை தொட்டு பூஜை செய்வதற்கு சூத்திரர், பஞ்சமர் மற்றும் பெண்களுக்கு அனுமதியில்லை என்ற அவமதிப்பை எதிர்த்து எந்த கோர்ட்டு விசாரிக்கும்?

______

செய்தி: அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) கடந்த நிதி ஆண்டில் ரூ. 8.198 கோடி இழப்பை சந்தித்துள்ளது என தெரிவித்திருக்கிறது.

நீதி: தனியார் முதலாளிகளின் ஆதாயத்திற்காக பி.எஸ்.என்.எல்-ஐ இப்படி மெல்ல மெல்ல கொல்வதற்குப் பதில் ஒரேயடியாக ஒழித்து விடலாமே?

______

செய்தி: லஞ்ச விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ரயில்வே வாரிய உறுப்பினர் மகேஷ்குமாரை 3 நாள் சி.பி.ஐ காவலில் வைத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நீதி: 7 கோடி ரூபாய் மோசடி செய்த பவர் ஸ்டாரையே போலீஸ் காவலில் விசாரித்தும் பலனில்லை எனும் போது பதவி பெற 10 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற இந்த பெருச்சாளியை மட்டும் என்ன விசாரித்து விட முடியும்?  

_______

செய்தி: லடாக் எல்லைப் பகுதியில் இருந்து சீன மற்றும் இந்தியப் படைகள் திரும்பப் பெறப்பட்டன.

நீதி: இந்தியப் பகுதிக்குள்தான் சீனா ஊடுருவியிருக்கிறது எனும் போது சீனா வாபஸ் பெறுவதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்தியா தனது நிலப்பகுதியிலிருந்தே வாபஸ் பெறுகிறது என்றால் இது யாரை ஏமாற்றும் நாடகம்?

______

செய்தி: சீனாவை எப்போதும் இந்தியா நம்பக்கூடாது என சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் வலியுறுத்தி உள்ளார்.

நீதி: பெப்சி-கோக் ஏஜெண்டுகளுக்கு சைனீஸ் உணவு வகைகள் பிடிக்காதுதான்.

______

செய்தி: முறையான தகவல் இல்லாமல் கருப்புப் பண பரிவர்த்தனையில் 23 பொதுத்துறை மற்றும் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் ஈடுபட்டதாக ‘கோப்ரா போஸ்ட்’ இணைய தளம் புதிய குற்றச்சாட்டை எழுப்பியிருக்கிறது.

நீதி: அரசு வங்கிகளிடம் 3 லட்சம் கோடி ரூபாய் வராக்கடன் நாமம் போட்ட அதே முதலாளிகள்தான் கருப்பு பண ஊழலையும் செய்கின்றனர். அரசு நிறுவனங்கள் மக்களுக்கில்லை, முதலாளிகளுக்குத்தான்.

______

செய்தி: ஹொவிட்சர் வகையைச் சேர்ந்த 100 பீரங்கிகளை வாங்குவதற்காக 2 தனியார் நிறுவனங்கள் உட்பட 3 இந்திய நிறுவனங்களை தேர்வு செய்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

நீதி: போபார்ஸ் காலத்தில் ராஜீவ் காந்திக்கு போன கமிஷன் காசு இன்றைக்கு காங்கிரசு கவுன்சிலரின் பட்ஜட் என்பதால் ஹொவிட்சர் பீரங்கி கமிஷன் மருகமன் ராபர்ட் வதேராவுக்கு போகும் என்று யாரும் தப்புக் கணக்கு போடவேண்டாம்.

______

செய்தி: திருச்சி, தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி குறித்து மத்தியக் குழுவினர் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

நீதி: 2 நாட்களில் முக்கால் வாசி நேரம் கெஸ்ட் ஹவுசில் தங்கி, ஸ்டார் ஹோட்டல் சாப்பாடை ஹெலிகாப்டரில் எடுத்து வந்து சாப்பிட்டு, குலுங்காத ஆடம்பர காரில் பயணித்து, 5 நிமிடத்திற்கு ஒரு முறை இளநீர் குடித்து பத்து மாவட்டங்களில் வறட்சி குறித்து கண்டு பிடிப்பார்களாம்! இதற்கு வடிவேலுவின் காணாமல் போன கிணறு தேவலை!