privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்மாணவர்களின் புரட்சிக் கனவைத் தகர்த்த திகார் சிறை !

மாணவர்களின் புரட்சிக் கனவைத் தகர்த்த திகார் சிறை !

-

(இந்து நாளிதழில் வெளியான “I found my place in Tihar Jail” என்ற கட்டுரையை தழுவி எழுதப்பட்டது)

1983-ம் ஆண்டு. டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் முற்போக்கு அரசியலின் மையமாக திகழ்ந்தது. 1970-களில் இந்திரா காந்தி கொண்டு வந்த அவசர நிலை சட்டத்தை எதிர்த்து ஜெயபிரகாஷ் நாராயணனின் தலைமையில் மாணவர்கள் போராடியது, 1977-ல் ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது, அஸ்ஸாமில் மாணவர் போராட்டம் போன்றவை மாணவர்கள் மத்தியில் பெரும் மனக் கிளர்ச்சியை உருவாக்கியிருந்தன. மாணவர்களும், பேராசிரியர்களும் ஜனநாயக வழியில், அகிம்சை முறையில், கூட்டு முயற்சி மூலம் உலகை மாற்றி அமைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்

இந்திரா காந்தி 1980-ல் மீண்டும் ஆட்சியைப் பிடித்து விட்டிருந்தாலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் மாணவர் அமைப்புகள் வலுவாக இருந்தன. டீக்கடை பெஞ்சுகளில் காரல் மார்க்சின் சிந்தனை எப்படி இயங்கியது, இந்திய இடதுசாரிகளில் மார்க்சியத்தை சரியாக புரிந்து கொண்டது யார், கட்டுடைப்பு உண்மையிலேயே கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதுதானா என்று மாணவர்களிடையே பல சூடான விவாதங்கள் நடந்தன. ‘கருத்துக்களும் மக்கள் சக்தியும் அரசியலை மாற்றி அமைத்து விட முடியும். நமது வாழ்க்கையை அரசியல் பாதிக்குமானால், அரசியலை நாம் மாற்றி அமைக்க வேண்டும்’ என்று மாணவர்கள் வீராவேசமாக சபதம் எடுத்துக் கொண்டார்கள்.

சமூக ஏகாதிபத்தியமான சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்தது. பல்கலைக் கழகத்தின் சுவர்களில், “அமெரிக்க ஏகாதிபத்தியம் வீழ்க” போன்ற கோஷங்கள் எழுதப்பட்டிருந்தன.

டெல்லி மாநகரின் மையத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் விரிந்திருந்த ஆரவல்லி மலைக் காடுகளின் ஒரு பகுதியான பல்கலைக் கழக வளாகத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த சில ஆயிரம் மாணவர்கள் படித்து வந்தார்கள். காங்கிரசின் மாணவர் அமைப்பும் (NSUI), பாரதீய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பும் (ABVP) பெரிதாக வளர்ந்திருக்கவில்லை. போலி கம்யூனிஸ்டுகளின் SFI, AISF ஆகிய மாணவர்கள் அமைப்புகளின் செல்வாக்கை முறியடித்து 1982-ம் ஆண்டு தேர்தலில் லோகியா சோஷலிஸ்டுகளின் மாணவர் அமைப்பும் ஃப்ரீ திங்கர்ஸ் அமைப்பும் வெற்றி பெற்றிருந்தன.

மாணவர்களின் கருத்துக்களை சோதிக்கும் போராட்டத்துக்கான நாளும் வந்தது. மாணவர் ஒருவரை முறையான விசாரணை இல்லாமல் தங்கும் விடுதியிலிருந்து நீக்கியது பல்கலைக் கழக நிர்வாகம். அதை போர்க் குணத்துடன் எதிர்த்த மாணவர்கள் நிர்வாகம் போட்ட பூட்டை உடைத்து, அந்த மாணவருக்கு அறையை மீட்டுக் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, பல்கலைக் கழக துணை வேந்தரும், விடுதிகளின் தலைவரும் முற்றுகை இடப்பட்டு அச்சுறுத்தப்பட்டனர்.

மாணவர் சிறை
படம் நன்றி : தி ஹிந்து

போலீஸ் பல்கலைக் கழகத்துக்குள் அழைக்கப்பட்டது. ‘நியாயத்துக்காகவும், நீதிக்காகவும் போராடினோம்’ என்ற பெருமிதத்துடன் நூற்றுக் கணக்கான மாணவர்கள் வீரத்துடன் கைதானார்கள். மண்டபத்தில் வைத்து விட்டு மாலையில் விடுவிப்பார்கள் என்று நினைத்திருந்ததற்கு மாறாக, கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீது கொலை செய்ய முயற்சி, கலவரம் போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய்யப்பட்டு அவர்கள் திகார் சிறைக்கு அனுப்பப்பட்டனர். பல்கலைக் கழக வளாகத்திலிருந்து இந்த லட்சியவாத புரட்சியாளர்களை அகற்றுவதாக முடிவு செய்திருந்தது டெல்லி நிர்வாகம்.

மாணவர்களின் புரட்சிகரக் கனவுகள் கலைக்கப்பட்டு விட்டன. சிறையில் அடைக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் சோர்வுடன் இருந்தவர்கள், அடுத்தடுத்த நாட்களில் நிலைமையை பரிசீலனை செய்து கொண்டார்கள். லட்சியவாதத்தின் மலட்டுத்தனம், தமது வீரத்தின் வரம்பு, அரசு அடக்குமுறையின் வீச்சு இவற்றை உணர்ந்து கொண்டார்கள்.

10 நாட்களுக்குப் பிறகு பிணையில் எடுக்கப்பட்டு வெளியில் வந்து படிப்பை தொடர்ந்தார்கள். ஒரு சில ஆண்டுகள் அலைக்கழித்த பிறகு வழக்குகள் கைவிடப்பட்டன.

போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்குப் போய் வெளியில் வந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் தமது நடுத்தர வர்க்க வாழ்க்கையின் பாதுகாப்புக்குள் அடைக்கலம் புகுந்தார்கள். இன்று பல்வேறு நாடுகளில் வெளிநாட்டு தூதுவர்களாக, பேராசிரியர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, விஞ்ஞானிகளாக, பத்திரிகை ஆசிரியர்களாக பணி புரிகிறார்கள். எந்த அரசியல் அமைப்பை தூக்கி எறிந்து மக்களை விடுதலை செய்வதாக கனவு கண்டார்களோ அந்த அமைப்புக்கே சேவை செய்கிறார்கள்.

பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டம்
பாலியல் வன்முறைக்கு எதிராக ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டம்

1960-களில் பிரான்சில் ஏகாதிபத்திய, முதலாளித்துவ அமைப்பு ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடிகளை எதிர்த்து தன்னெழுச்சியாக நடந்த மாணவர் போராட்டங்கள் அரசு அடக்கு முறை மூலம் முறியடிக்கப்பட்டன. அந்த போராட்டங்களில் பங்கேற்ற மாணவ போராளிகள் இன்று பல்வேறு அரசியல் கட்சிகளில் சேர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயல்படுகிறார்கள். ஒரு சிலர் அமைச்சர்களாக கூட இன்று வலம் வருகின்றனர்.

1980-களில் அஸ்ஸாம் மாணவர்கள் இந்திய ஆளும் வர்க்கத்துக்கு எதிராக நடத்திய போராட்டங்கள், அசாம் கன பரிஷத் தேர்தல் அரசியலை ஏற்று ஆட்சிக்கு வந்ததும் பரிதாபமாக சீரழிந்து போயின. அதன் பின்னடைவுகளிலிருந்து அசாம் மக்கள் இன்னும் மீட்கப்படவில்லை.

‘மாணவர்கள் போராட்டத்தில் அரசியல் இருக்கக் கூடாது. எந்த அரசியல் கட்சியும் மாணவர்கள் போராட்டத்தில் தலையிடக் கூடாது. மாணவர்கள் தன்னெழுச்சியாக போராடுவார்கள்’ என்ற அறிவுஜீவிகளின் முழக்கங்கள் அனைத்தும் மாணவர் போராட்டத்தை மழுங்கடித்து உண்மையான மாற்றத்தை தவிர்ப்பதற்கானதே ஆகும். மார்க்சிய கோட்பாடுகளின் அடிப்படையில் உறுதியாக கட்டமைக்கப்பட்ட ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டலில் அரசியல் படுத்தப்பட்ட மாணவர் போராட்டங்கள் மட்டுமே ஆளும் வர்க்கங்களை வீழ்த்தி சமூகத்தை விடுவிக்கும் மாற்றங்களை சாதிக்க முடியும்.

மேலும் படிக்க