privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்மகாபாரதத்தின் மூலம் இந்து ராஷ்டிரம் !

மகாபாரதத்தின் மூலம் இந்து ராஷ்டிரம் !

-

(1990-ம் ஆண்டு வெளியானது)

வ்வொரு நாட்டுக்கும் ஏடறிந்த வரலாறு உண்டு. ஏடறிந்த கலாச்சாரம் உண்டு. ஆனால, அந்த வரலாறுகள் ஆளும் வர்க்கங்கள் தங்கள் விருப்பத்துக்கேற்ப திரித்துப் புரட்டி எழுதிக் கொண்ட வரலாறுகளாகவே இருக்கின்றன. இந்தப் புரட்டல்களைத்தான் வரலாறு என்று பள்ளிக்கூடத்தில் படிக்கிறோம். 1857 ‘முதல் இந்திய சுதந்திர’ப் போராட்டத்தை, கடற்படை எழுச்சியை ‘சிப்பாய் கலகம்’ என்றும், இந்து-முஸ்லீம் வகுப்புக் கலவரம் என்றும் அவதூறு செய்கிறார்கள்; கேரள மாப்பிளா எழுச்சியையும் அவ்வாறுதான் கொச்சைப் படுத்துகிறார்கள்; மிகச் சமீபத்தில் நடந்து வருகிற ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமைப் போரைப் பற்றிக் கூட சிதைத்து, திரித்துத்தான் செய்திகளை வெளியிடுகின்றன ஆளும் வர்க்க குழலூதிகளான செய்தி ஏடுகள். அடுத்த தலைமுறைக்கு இது தான் வரலாறு என்று சொல்லப்படும்.

இன்றைய இந்தியச் சமூகம் எப்படி இருக்கிறது? சகித்துக் கொள்ள முடியாதபடி நாறிக் கொண்டிருக்கிறது. ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் நாடு பணயம் வைக்கப்படுகிறது. ஏகாதிபத்திய அந்நியக் கூட்டு பங்குப் பெருகியுள்ள கலாச்சாரத்துறை ஆடம்பர, ஐந்து நட்சத்திரக் கலாச்சாரத்தின் சுமையால் திணறுகிறது. அரசியலில், காஷ்மீர் வடகிழக்கு மாநிலங்களில் தேசிய இனங்கள் சுய நிர்ணய உரிமைக்கான ஆயுதப் போரை விடாது நடத்துகின்றன. ஆள்பவர்களோ இந்திய தேசீயத்தை நிரூபிக்க முடியாது முழிக்கிறார்கள்.

இப்படிச் சுற்றிலும் எரிந்து கொண்டிருக்கும் பிரச்சனைகள் பற்றி ஏதாவது தீர்வு சொல்ல வேண்டியிருக்கிறது. அரசு அடக்குமுறைக்கு அஞ்சுபவர்கள் வலுவான ஆயுதத்தைக் களத்திலே இறக்கி விட்டிருக்கிறார்கள்.

தொலைக்காட்சிமேல்நாட்டு உபதேசம் தான் அதற்கும் காரணம். மார்ஷல் மக்ளூகன் என்ற அமெரிக்கர், ஏகாதிபத்திய விசுவாசி சொன்னார்: “மக்கள் தொடர்புச் சாதனமே இந்த யுகத்தின் செய்தி!” அவர்களின் அடியைப் பின்பற்றி டி.வி. (T.V)-ஐ இங்கே அவிழ்த்துவிட்டார்கள்.

ஞாயிற்றுக் கிழமைகளில் நகரங்களில் தெருக்களைப் பார்த்தால் உண்மை புரியும், போர் முற்றுகை நடந்திருப்பது போலவே காட்சியளிக்கும். முற்றுகையை வீடுகளுக்குள்ளே டி.வி. தான் நடத்துகிறது.

“7 மணிக்கு ரங்கோலியோடு எழுந்திருங்கள்; 8 மணிக்கு விளம்பரதாரர் நிகழ்ச்சி பார்த்துக் கொண்டே சிற்றுண்டி தயாரியுங்கள். 9 மணிக்கு பஞ்சபாண்டவர், கௌரவர், திரௌபதியோடு அமர்ந்து சிற்றுண்டி சாப்பிடுங்கள்….” இரவுவரை நிகழ்ச்சிகளுக்குப் பஞ்சமில்லை. கண்களுக்கு சுயிங்கம் போல டி.வி. ஞாயிற்றுக் கிழமைகளில் நீங்கள் துணியைச் சலவைசெய்ய, உங்கள் மூளைச்சலவைக்கோ மகாபாரதம்.

ஏறக்குறைய 2 வருடம் ஓடி முடிந்த இராமாயணம், மகாபாரதம் மக்களிடம் அதிவேகமாகப் பிரமிப்பை ஊட்டி விட்டது காட்சிப் பிரமிப்புகள் மட்டுமல்ல; கருத்து ரீதியிலும் அவை மோசமான விளைவை விளைவித்து விட்டன. ஒவ்வொரு சம்பவத்திலும் சூளுரைகள். துரியோதனன் துகிலுரித்தான்; “அவனைக் கொன்று ரத்தத்தை எடுத்துப் பூசாமல் கூந்தலை முடிய மாட்டேன்” என்று சபதம் போடுகிறாள் திரௌபதி. அபிமன்யு போர்க்களத்தில் கொல்லப்படுகிறான்; “அந்தப் பதர்கள் கவுரவர்களைப் பூண்டோடு ஒழிக்காமல் விடப் போவதில்ல” என்ற சூளுரைக்கிறான் அர்ச்சுனன். “மன்னிக்க மாட்டேன்” “பழிக்குப் பழி வாங்குவேன்” என்ற சூளுரைகள் அப்படியே ரீங்கரிக்கின்றன.

நடப்பு அரசியலுடன் பொருத்தினால் இந்தச் சூளுரைகள் முஸ்லீம்களுக்கெதிராக இந்து மதவாதத்தைத் தூண்ட ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு கிடைத்த மந்திர ஆயுதங்கள்.

இதுநாள் வரை ராமாயண, மகாபாரதக் கதைகள் இருந்தனவே அவை பாதிப்பு ஏற்படுத்தி இருக்க வேண்டுமே என்ற கேட்கலாம். பத்திரிக்கை, ரேடியோ, காவியப் பகுதிகளைக் கொண்ட சில சினிமாப் படங்கள். தெருக் கூத்துக்கள் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்கின்றன., என்றாலும் டி.வி-யில் முழு அளவில் காவியங்களைக் காட்டுவது, காட்சி உருவத்தில் நேருக்கு நேர் பார்த்து அனுபவிப்பது அதிகமான பாதிப்பையே கொடுக்கும்.

இராமயணம், மகாபாரதத்தையே பலர் பலவிதமாக எழுதப்பட்ட நூல் வடிவத்தை மட்டும் இப்படிக் குறிப்பிடுகிறோம். எழுதப்படாமல் செவி வழியாக பல வடிவங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிம் கூத்து வடிவங்கள், பயிலாட்டங்கள் உண்டு. ஒன்றுக்கொன்று அவை கதையளவில் கூட ஒத்துப் போவதே கடையாது.

ஆனால் இந்த டி.வி., மகாபாரதமோ இதுவரை வழங்கிய வடிவங்கள் அனைத்தினும் விரிவானது; காட்சிகள், பின்னணி இசை, துல்லியமாகக் கேட்கும் வசனங்கள் ஆகியவை தொலைக்காட்சிக்கே உரிய வலிமை. எல்லா வகை மகாபாரதக் கதைகளையும் ஒரே தட்டில் தகர்த்து விட்டு நாடு முழுவதற்கும் சோப்ரா மகாபாரதமே அங்கீகரிக்கப்பட்ட இறுதி வடிவமாகிவிட்டது.

இராமாயணத்தை எடுத்துக் கொண்டால் வால்மீகி இராமாயணம், கம்பராமயணம் பலவிதங்களில் வேறுபடுகிறது. இராவணன் சீதையை இழுத்துச் சென்று விமானத்தில் ஏற்றினான் என்கிறது வால்மீகி, ஆனால் அது ‘தமிழ்ப் பண்பாட்டுக்கு இழுக்கு என்று சொல்லி சீதை நின்ற பூமியோடு துண்டாக்கி எடுத்துச் சென்றான் இராவணன் என்று கம்பர் பாடுகிறார். சரியாகச் சொன்னால், இதுவே வால்மீகியைச் சிதைப்பதுதான். இன்று ராமானந்த சாகர், சோப்ரா போன்றவர்கள் பல இடங்களில் சிதைத்து உருட்டிப் புதிதாக ஒரு கதையை உருவாக்கிய பிறகு வால்மீகி, வியாசர் மற்றும் பிற நாட்டுப்புற வெளிப்பாடுகள் காலாவதியாகி விட்டன. இப்போது ராமானந்த சாகர் தான் வால்மீகி; சோப்ராதான் வியாசர்.

கிருஷ்ணன்இன்றைய நிலைமைகளுக்குப் பொருந்தி வரும்படி சோப்ரா வசனங்கள் சேர்த்து காட்சி அமைப்புகளை உருவாக்கியிருக்கிறார். ஏற்கனவே மகாபாரதத்தை முழுக்க ஆக்கிரமித்து விட்ட கிருஷ்ணன் பற்றியும், சோப்ரா செய்த தில்லுமுல்லுகள், சிதைப்புகள் பற்றியும் விரிவாகப் பார்த்தால்தான் எந்த அளவுக்கு மக்கள் ஏமாறப் பட்டிருக்கிறார்கள் என்பது புரியும்.

மகாபாரதத்தில் மையமாக முக்கியப் பாத்திரமாற்றுபவராக கிருஷ்ணன் வருகிறார். மகாபாரதத்தை டி.வி. தொடராகத் தயாரித்த சோப்ரா, வழங்கப்படும் கதையை விட ஒருபடி மேலே போகிறார். பாகவத புராணக்கதையில் சொல்லப்படும் கிருஷ்ணரின் கதைகளை எடுத்து மகாபாரதத்திலேயே சேர்த்து விடுகிறார். கிருஷ்ணாவதாரத்தின் முக்கியத்துவம் வரவேண்டாமா என்று திருப்பிக் கேட்கிறார் சோப்ரா.

ஆனால் அகழ்வாராய்ச்சியாளர்களும், டி.டி.கோசாம்பி போன்ற வரலாற்றாசிரியர்களும் நடத்திய ஆய்வின்படி “பகவான் கிருஷ்ணனே பாரதக் கதைக்குப் புதியவர்; அப்போர் நடந்து பல நூற்றாண்டுகள் கழிந்தும் அந்த பகவானின் உயர்ந்த தெய்வீகத் தலைமை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பகவத்கீதையில் வழங்கும் சமஸ்கிருதம் கிட்டத்தட்ட கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குரியது…” என்று தெரிகிறது. மகாபாரதப் போர் கி.மு. 850-ல் நடைபெற்றிருக்க வேண்டும் என்கிறார் கோசாம்பி. எனவே கிருஷ்ணாவதாரத்தை மகாபாரதத்தில் நுழைத்ததே ஒரு பெரிய மோசடி.

மகாபாரதத்தில் இது ஒன்றுமட்டும் சேர்க்கையல்ல. கி.மு. 2 முதல் கி.பி 3-க்குள் இடைப்பட்ட 500 ஆண்டுகளில் செய்த சேர்க்கைகள் ஏராளம். பழைய உருவத்தில் 24,000 பத்திகளே இருந்தன. 76,000 பாடல்களும், சில உரைநடைத் தொகுப்புகளும் பின்னால் சேர்க்கப்பட்டன. இதைச் செய்தவர்கள் பார்ப்பனச் சாதியினரே. அவர்கள் மட்டுமே அன்று நூல்களை ஆக்குவதற்கு உரிமை படைத்தவர்கள். நாட்டுப் பாடல்கள், பூர்வகுடி தெய்வீகக் கதைகளை, யாதவ குலத்தோற்றத்தை ஒட்டிய கதைகள் ஆகிய மூன்று வகைகளிலிருந்தும் பலதரப்பட்ட புராணங்கள், தெய்வீகக் கதைகளிலிருந்து ஏறக்குறைய பொருந்தக் கூடிய பகுதிகளை எல்லாம் சேர்த்து விட்டனர். பாரதத்தை விரிவாக்கம் செய்த முறை 19 ஆம் நூற்றாண்டு வரை கூடத் தொடர்ந்தது எனகிறார் கோசாம்பி.

இச்சேர்க்கைகள், கிளைக் கதைகள் எதனால் ஏற்பட்டன? இந்துமதம் எனப்படும் பார்ப்பன மதம் சாதாரண மக்கள் மத்தியில் வேர்விடவில்லை. புத்த மதம் பார்ப்பன மதத்திற்குச் சவாலாகத் தோன்றியது. புத்தபிக்குகளைக் கொல்வது, மடாலயங்களைத் தகர்ப்பது போன்ற முறைகள் மூலம் புத்த மதத்தை ஒடுக்கினர். மக்களைத் தம் பக்கம் இழுத்துக் கொள்ள இரண்டு முறைகளைக் கையாண்டனர். பார்ப்பன மதக் கடவுளர்களை சாதாரண மக்களும் வழிபட அனுமதித்ததுடன் வழிபாட்டு முறையை எளிமையாக்க கடவுளை அண்ணனக, தம்பியாக, கணவனாக, காதலனாக எப்படி வேண்டுமானாலும் வரித்துக் கொண்டு பக்தி செலுத்தலாம் என்ற புதிய முறையைப் பரவவிட்டனர். ஏற்கெனவே அவர்கள் வழிபட்டு வரும் கிராம தேவதைகளை, குல தெய்வங்களை பார்ப்பனக் கடவுள்களுடன் உறவு கற்பித்து அதன் மூலம் அனைவரையும் பார்ப்பன மதத்தின் பிடியில் அதிகாரபூர்வமாகக் கொண்டு வந்தனர். தத்துவத் துறையில் அத்வைதம், நடைமுறையில் இந்தத் தில்லுமுல்லு. இதுதான் ஆதிசங்கரரின் திருப்பணி.

மகாபாரதத்தில் ஒன்றோடொன்று சம்பந்தமில்லாத கதைகள், பாத்திரங்கள் வந்து போவதும், அந்தரத்தில் தொங்கி ஊசலாடுவதும் இதனால்தான். கடவுள் ராமாயணத்தில் ராமராக, பாரதத்தில் கிருஷ்ணனாக அவதரித்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் ராமாயணத்தில் பரசுராமனும் வருகிறார்; அவரே மகாபாரதத்திலும் வருகிறார். ராமாயணத்தில் வரும் அனுமான் பாரதத்திலும் பீமனைச் சந்திக்கிறார். மகாபாரதத்தில் ஆரம்ப அத்தியாயத்தில் நாகர்களின் வம்சாவளியும், தெய்வீகக் கதைகளும் உயர்ந்த இடத்தைப் பெறுகின்றன. இது அப்போது வாழ்ந்த நாகர்கள் என்ற பூர்வகுடிகள் பற்றியது. சர்ப்ப அரக்கர்களுடன் போர் செய்து வெல்வதற்காகவே மூன்றாம் ஜனமேஜயன் சர்ப்பயாகம் நடத்தியதாக ஒரு கதை உண்டு. இந்தப் போரைப் பற்றிய விவரங்கள் மூடி மறைக்கப்பட்டு யாகச் சடங்குகள் மட்டும் நிரம்பிய பகுதி மகாபாரதத்தில் இடம்பெறுகிறது. கிருஷ்ணன் பாம்போடு சண்டை போடுகிறார். கிருஷ்ணராக அவதரித்த திருமாலின் – விஷ்ணுவின் மலர்ப்படுக்கையாக நாகம் மாறும்போது சண்டை தீர்ந்து அடக்கப்பட்டு விட்டதாகவும் தெரிகிறது. அப்படியானால், இத்தனை அவதாரங்களையும் சந்திக்கும் நாகர்கள் வென்றார்களா? தோற்றார்களா? அவர்கள் யார்? ஒரே நேரத்தில் சந்திக்கும் இரு அவதாரங்களுக்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறார்கள்?

கீதாஉபதேசம்ஆக, பண்டைய இனக் குழுக்களுக்குள் நடந்த ஒரு சண்டையைப் பற்றி அன்று பாடுவதைத் தொழிலாகக் கொண்ட பாணர்கள் பாடல் இயற்றியிருக்கின்றனர். அவற்றில் தங்களது தேவைக்கு ஏற்ப வெட்டியும் சேர்த்தும் பார்ப்பனர்கள் மகாபாரதத்தை உருவாக்கினார்கள்.

குறுக்குக் கேள்விகள் போட்டால் முழுமையாகப் பதில் சொன்னவர்களோ, மகாபாரத் இடைச் செருகல்களை மறுப்பவர்களோ ‘பார்ப்பனீய தரும’த்தை தூக்கிப் பிடிப்பவர்களில் யாரும் கிடையாது.

19-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இப்போது 20-ஆம் நூற்றாண்டில் சோப்ரா எல்லா செருகல்களுக்கும் மேலே தன் பங்குக்குக் கொசுறு வேலை செய்து இறுதிப் பக்குவம் கொடுத்திருக்கிறார்.

  • கிருஷ்ணனை பார்ப்பனர்கள் பாரதத்திற்குள் நுழைத்தார்கள். சோப்ராவோ கிருஷ்ணனையே பிரதான பாத்திரமாக்கிவிட்டார்.
    ராஹி மஸும் ராசா என்ற ஒரு முஸ்லீம் மகாபாரதத்திற்கு வசனம் எழுதுவதா என்று பாய்ந்தது ஆர்.எஸ்.எஸ். இந்த காரணத்தாலேயே துரியோதனன் பற்றி இப்படியெல்லாம் எழுதி பார்ப்பனீய இந்துமதத்துக்குத் தன் அதிக விசுவாசத்தைத் தெரிவித்து விட்டாரோ ராஹி மஸும் ராசா?
  • சினிமா பாணியில் கதாநாயகன் – கதாநாயகி – வில்லன்களை உருவாக்கியிருக்கிறார். பஞ்சபாண்டவர் – கதாநாயகர்கள்; திரௌபதி – கதாநாயகி; துரியோதனன் – வில்லன் (இத்தொடரைக் கொண்டாடும் பார்ப்பனீயச் ‘சோ’வுக்கே இப்படிக் கதாநாயகன் – வில்லன் என்று பிரிப்பது பிடிக்கவில்லை; அவ்வாறு பிரிப்பது தவறு என்கிறார்: நல்ல – கெட்ட குணங்கள் அனைவரிடமும் உள்ளதாகச் சொல்லும் ‘சோ’ கிருஷ்ணனைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் கடப்பாரை விழுங்கியவர் போல முழிக்கிறார்)
  • கர்ண பரம்பரைக் கதைகளை வைத்துப் பார்த்தால் கூட துரியோதனனிடம் பல சிறந்த குணங்கள் இருந்திருக்கின்றன. சூத்திரன் என்று மற்றவர்கள் ஒதுக்கியவனை – கர்ணனை சத்திரியனாக்கி அங்க தேசத்துக்கு அதிபதி ஆக்கினான் – அவனது சாவு வரை நட்பைக் காப்பாற்றினான். சோப்ரா தொடரின்படி பார்த்தாலும் சாவுக்குப் பிறகு அவனுக்கு, தான் கொள்ளி போட வேண்டும் என்று உரிமை கோருகிறான் சிறந்த நட்புக்கு இலக்கணமாக வாழ்ந்த துரியோதனன்.
    ஒரு சம்பவம்: பாண்டவர்களுக்கு தூதனாக வருகின்ற கிருஷ்ணனைக் கைது செய்ய முனைகிறான் துரியோதனன். கிருஷ்ணன் தனது ‘விஸ்வரூபத்தை’க் (பிரம்மாண்டமான பெரிய உருவம்) காட்டி தான் கடவுள் என்று சொல்கிறான். அதற்கெல்லாம் அயரவில்லை துரியோதனன். கிருஷ்ணனுக்கு ஒரு பதில் சேதி அனுப்பினான்: ”உன் மாயாஜால வித்தைகளுக்கெல்லாம் அடங்கிவிட மாட்டேன். கம்சனின் வேலையாளாக இருந்த நீ திடீரென்று புகழ்பெற்று விட்டாய், கிருஷ்ணா! அரச தகுதி படைத்தவனான நான் உன்னோடு சண்டை போட விரும்பவில்லை”.
    துரியோதனனை அருச்சுனனோட ஒப்பிட்டுப் பாருங்கள். கிருஷ்ணனின் ‘விஸ்வரூபத்துக்கு’ அருச்சுனன் சரணாகதி அடைகிறான்; துரியோதனன் சவால் விடுகிறான்.
  • கர்ணன்அடுத்து – கர்ணனின் ஜாதி விவகாரம், குந்தி சூரியனுக்குப் பெற்றெடுத்தவனே கர்ணன். எடுத்து வளர்த்தவன் தேரோட்டி. துரியோதனனோடு நட்பு பாராட்டி எள்ளளவும் நட்பு குறையாமல் சாகும் வரையில் ஒன்றாக வளருகிறான். ஆனால் அவனை சூத்திரன் என்று திரௌபதி இகழ்ந்து பேசுகிறாள்; வில்வித்தை கற்றுத்தர மறுக்கிறார் துரோணன்; தான் தலைமை தாங்கிப் போரிடக் கூடாது என்கிறார் பீஷ்மர்; அருச்சுனனுக்கு எதிராகப் போரிடும்போது பூமியில் தேர்ச் சக்கரம் சிக்கிக்கொள்ள, இறங்கி அதை மீட்க தேரோட்டும் சத்திரியனான சல்லியன் ‘சூத்திரனுக்கு நான் சேவை செய்வதா, முடியாது’ என்று மறுத்துவிடுகிறான். தற்காலத்திய மற்ற விவகாரங்கள் பற்றி மூக்கை நுழைக்கிற சோப்ரா இந்தச் சாதிய அடக்குமுறை பற்றி வாயே திறக்கவில்லை, அது ஏன்?
  • அதேபோல, பீமனுக்கும், அரக்கிக்கும் பிறந்த கடோத்கஜன் இறந்ததற்குச் சற்றும் கவலைப்படாத மற்ற பாண்டவர்கள் அபிமன்யு இறந்ததற்கு இரக்கம் காட்டி உருகிப் போகிறார்கள். சோப்ரா இந்த ஜாதி பாரபட்சத்தைக் கண்டுகொள்ளாமல் போனதேன்? சமகால விஷயத்தைக் காவியத்தில் நுழைத்து 2000 வருடங்களுக்கு முன்னேயே எல்லாம் சொல்லி விட்டார்கள் என்ற கருத்தை உருவாக்கி தகுதியைத் தேடிக் கொள்கிற சோப்ரா இன்று வரை சமூகத்தைச் சீரழிக்கும் சாதியத்தைத் தொடாமல் ஒதுங்கிக் கொள்வதேன்?
  • பாரதக் கதைப்படி 40 லட்சம் பேர் 18 நாள் போரில் இறந்திருக்கிறார்கள். நவீன ஆயுதம், போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் வளர்ச்சி அடைந்திருந்த இரண்டாம் உலகப் போரிலேயே கூட இவ்வளவு குறுகிய நாட்களில் இத்தனை பேர் சாகவில்லை. ஒரு நொடிக்கு ஒரு ஆள் செத்ததாக வைத்துக் கொண்டாலும், ஒரு நாளைக்கு 12 மணி நேரம் சண்டை நடந்ததாக வைத்தாலும் 18 நாள் பாரதப் போரில் 7,77,600 பேர்தான் இறந்திருக்க முடியும்.
  • கதக் நாட்டியத்தை அறிமுகப்படுத்தும் சோப்ராவுக்கு குருட்டுத் துணிச்சல் இருக்க வேண்டும். பார்ப்பவர்களில் யார் மூளையை உபயோகிக்கப் போகிறார்கள் என்று நினைத்துவிட்டார் போலும். அந்தக் காலகட்டத்தில் ஏதய்யா கதக்?

இவ்வளவும் சோப்ரா சேர்த்த கட்டுக் கதைகள். ஆனால் அதிகாரபூர்வமான மகாபாரதப்படியே பார்த்தாலும் சத்தியத்தின் உறைவிடமான கிருஷ்ணன் செய்த அட்டூழியங்கள் ஓகோவென்று பாராட்டப்படுகின்றன. ஏனெனில் அவை கடவுளின் கட்டளையால் நடப்பவை. அவற்றைக் கொஞ்சம் பார்ப்போமா?

  • கூட்டம்துரோணரின் மகன் அசுவத்தாமன் யுத்தகளத்தில் செத்துவிட்டதாக பொய் அறிவிப்பு கொடுத்து துரோணர் யுத்தகளத்திலிருந்து விலகுவதற்கு ஏற்பாடு செய்வது.
  • பீமன் போர்முறை மீறி துரியோதனன் தொடையில் கதாயுதத்தால் அடித்து வீழ்த்துகிறான்.
  • சிகண்டியின் பின்னால் இருந்து அருச்சுனன் பீஷ்மரைத் தாக்குகிறான். சிகண்டி ஓர் அலி. அலியைத் தாக்கக் கூடாது. சாகடிக்கக் கூடாது என்பது போர்விதி. பீஷ்மர் அந்த விதியை மீறமாட்டார் என்பது அருச்சுனனுக்குத் தெரியும்.
  • தேர்க்காலை எடுக்க அனுமதி கோரும் கர்ணனுக்கு நேரம் கொடுக்காமல் அருச்சுனன் அம்பெய்து கர்ணனைக் கொல்கிறான்.

இவ்வளவும் கிருஷ்ணர் பஞ்சபாண்டவர்களுகுச் சொல்லித் தந்த தந்திரங்கள். இப்படிப்பட்ட நேர்மையற்றவர் தான் உலக ஒழுக்கம் பற்றி கீதையில் போதிக்கிறார். பாரதத்தின் தொடக்கத்திலிருந்து கடைசிவரை கடவுளென்று போற்றப்படுகிறார். அவர் வரும் போதெல்லாம் இசை மாறுகிறது. சுற்றிலும் நிற்கும் பாத்திரங்கள் ஒரு பயம் கலந்த பக்தியிலும், மரியாதையிலும் நிற்கிறார்கள். அயோக்கியத்தனங்கள் செய்தவனுக்கு எப்படி மரியாதைப் பட்டம்?

வேதத்தின் சாரம் உபநிஷத் உபநிஷத்தின் சாரம் பகவத்கீதை, பகவத் கீதையிலிருந்து மனுநீதி, மனுநீதியிலிருந்து அர்த்த சாஸ்திரம். எல்லா அயோக்கியத்தனங்களுக்கும் கிருஷ்ணபகவானின் ஒப்புதல்!

“தருமத்தை அடைவதற்கு அதர்மத்தை ஆயுதமாகப் பயன்படுத்தலாம்” “கடமையைச் செய்: பலனை எதிர்பாராதே” – கீதையின் புகழ்பெற்ற உபதேசங்கள் இவை. ஒன்றுக்கு ஒன்று முரணான இந்த உபதேசங்களின் தத்துவ நிழலில் தான் ஆளும் வர்க்கங்கள் ஒண்டிக் கொள்கின்றன. அவர்களுடைய நலனை தர்ம்மாகத் தீர்மானித்துக் கொள்கிறார்கள். அதை எட்டுவதற்கு வசதியான முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். அத்தகைய அநீதியான முறைகளை அம்பலப்படுத்தும் போது “நான் கடமையச் செய்தேன் – கருமயோகி – பலனை பகவானிடம் விட்டுவிட்டேன்” என்று கீதோபதேசம் செய்கிறார்கள். கேள்வி கேட்காதே, சிந்திக்காதே, கடமையைச் செய், பலனை எதிர்பாராதே – இது தான் ஆண்டைகளின் கீதை அடிமைகளுக்குச் சொல்லும் தருமம்.

கடவுள் அவதாரங்களின் பொருள் இதுவே என்பதை வாசகர்கள் நன்றாகக் கவனிக்க வேண்டும். இதைச் சுற்றி எந்த வரலாற்று விஷயம் சொல்லப்பட்டாலும் அதைச் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்க முடியும்: பார்க்க வேண்டும். மகாபாரதத் தொடர் நமக்குக் கொடுக்கின்ற பாடம் இது.

***

பீஷ்மர், துரோணர்மகாபாரதத் தொடர் பொய்களை விற்று ஓய்ந்திருக்கிறது – ‘படம் எப்படி இருந்தது’ என்று எத்தனையோ ஏடுகளில் செய்திகள், மக்களின் பேட்டிகள் வெளியிடப்பட்டிருக்கிறன்றன. கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் டி.வி. தொடர் பார்த்ததையே பெரிய புனிதக் கடமையாகச் சொல்லுகிறார்கள்.

இந்தப் புனிதக் கடமையிலிருந்து தென்னக மக்கள் தவறிவிடப் போகிறார்களே என்ற ‘அக்கறை’யுடன் ‘துக்ளக்’கும் ‘தினமலரு’ம் வசனத்தை இந்தியிலிருது தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு தங்கள் இந்தி விசுவாசத்தை தெளிவாகக் காட்டிக் கொண்டனர். எதிர்ப்புகளின்றி இந்தியைத் திணிப்பதற்கு ஒரு பெரிய வாய்ப்பாக இந்தி ஆதிக்க வெறியர்கள் இதனைப் பச்சையாகப் பயன்படுத்தினார்கள்.

அரைகுறை எழுத்தறிவு உள்ளவர்கள், எழுத்தறிவே இல்லாதவர்கள், படித்தும் அறிவற்றவர்களான மத்தியதர வர்க்கம் ஆகிய மூன்று பகுதியினருமே டி.வி.-யே கதியென்று கிடக்கிறார்கள். அது சொல்லித் தருவதைக் ‘கடவுளின் கட்டளை’களாக ஏற்றுக் கொள்கிறார்கள். மகாபாரதத்தின் மூலம் பார்ப்பனீய இந்து மதவெறி பரப்பப்பட்டிருப்பதால், நாளை ‘ராமஜென்ம பூமி, கிருஷ்ண ஜென்மபூமியை மீட்கவா!’ என்று அழைப்பு வந்தால், ஏற்கனவே தயாரிக்கப் பட்டுவிட்டவர்கள் உடனே கலந்து கொள்வார்கள்.

தனக்கென்று வந்தால் சொல் அளவில் இருக்கும் லட்சியம் போதும்; எதிராளிக்கு என்றால் அவர்களின் நடைமுறைச் செயல்கள் உடனே பரிசீலிக்கப்பட வேண்டும் – இப்படி தனக்கொன்று, பிறருக்கொன்றாக இருக்கும் இரட்டை அளவுகோல்களை மகாபாரதம் அங்கீகரிக்கிறது; அதற்கு மிகபெரிய எடுத்துக்காட்டு மோசடிக்காரன் கிருஷ்ணன். அதற்கு அத்தாட்சி அவரே படைக்கும் ‘பகவத்கீதை’

இதற்கு வசதியாக மக்களிடம் பரம்பரை பரம்பரையாக நிலவிவரும் பாரதக் கதையும், அதில் சொல்லப்படும் ‘ஒழுக்கங்களும்’ ஆளும் வர்க்கங்களுக்குத் துணையாக இருக்கின்றன. பாண்டவர்கள் நல்லவர்கள்; கௌரவர்கள் தீயவர்கள. நீதி அநீதிக்கெதிராக குருக்ஷேத்திரத்தில் தர்மயுத்தம் நடத்தியது – இந்த வரிசைப்படி ஒரு கதை மக்கள் மனத்தில் விழுந்திருக்கிறது.

கௌரவர்இதையே காந்தி – திலகர் – பாரதி – கண்ணதாசன் – கோடம்பாக்கத்து கவிஞன்வரை; கட்சித்தாவல்கள் – காங்கிரஸ் உட்பூசல் – ஜனதாதள வி.பி.சிங் – தேவிலால் சண்டைகள் வரை இவர்கள் எல்லோரும் எல்லா விஷயங்களையும் குருக்ஷேத்திரம் என்று வருணிக்கிறார்கள். ஒவ்வொருவரும் தன்னை தர்மயுத்தம் நடத்துபவனாகச் சித்தரித்துக் கொள்கிறார்கள். நீ எப்படிப்பட்டவன், உன்பக்கம் என்ன நியாயம் இருக்கிறது என்று யாரும் கேட்க முடியாது; கேட்க அனுமதிப்பதில்லை.

காந்தி பிரிட்டிஷாருக்கு எதிராகவும் கட்சிக்குள்ளேயும் தர்மத்துக்காக ஓயாது போராடுவதாகச் சொல்லிக் கொண்டார். பிரச்சனை வந்த போதெல்லாம் தன் கருத்தை ஏற்கவில்லையானால் விலகி விடுவதாக மிரட்டி வந்தார். கேள்வி கேட்காமல் கீழ்படியக் கோரும் கீதையின் தத்துவம் அச்சாக காந்திக்குப் பொருந்துவதைப் பாருங்கள்! எனவே உபதேசங்கள் மட்டுமல்ல, உபதேசிகளையும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். எல்லாக் காலத்திலும் போற்றப்படும் கீதை மக்களை அடிமைப்படுத்தவும் தத்துவரீதியாக விளக்கம் கொடுப்பதற்காகவே ஏற்பட்டது. இப்போது காஷ்மீரி தேசீய இன மக்களை அரசு அடக்குகிறதே என்று கேட்டால் தேசீய ஒருமைப்பாட்டைப் பலி கொடுப்பதா என்று கேட்கிறார்கள்; இந்தியா எங்கும் சிறுபான்மை முஸ்லீம்களைக் கொன்று குவிக்கிறார்களே என்றால் ‘நாம் இந்துக்கள் என்ற அடையாளத்தை இழக்க முடியாது. அதற்குக் குறுக்கே எதுவந்தாலும் அழிப்போம். அதில் தவறு கிடையாது’ என்கிறது ஆர்.எஸ்.எஸ். ‘நம் இளைய தலைமுறைக்கு அடையாளம் இல்லாமல் போய்விட்டது. அதையே மகாபாரதம் ஏற்படுத்தி கொடுக்கிறது.’ என்கிறார் சோப்ராவின் மகன் ரவிசோப்ரா. ஆர்.எஸ்.எஸ்ஸின் குரல் சோப்ராவில் கேட்கவில்லையா?

எது தர்மம் யாருக்கான தர்மம், எது பாதை ஏன் இந்தப் பாதை என்ற கேள்விகள் கீதைக்கெதிரான கேள்விகள் மட்டுமல்ல; ஆளும் வர்க்கத்தின் அடித்தளத்தை உலுக்கும் கேள்விகள். நாடெங்கும் இக்கேள்விகள் எழுந்து எதிரொலிக்கும் போது இந்து மகாராஷ்டிரக் கனவுகள் நொறுங்கும் – மக்கள் ஜனநாயகச் சூரியன் உதிக்கும்!
_____________________________________________
புதிய கலாச்சாரம், அக்டோபர் 1990
_____________________________________________