Sunday, May 4, 2025
முகப்புகட்சிகள்தி.மு.கநெற்களஞ்சியத்தைக் கவ்வவரும் பேரபாயம் ! பேரழிவு !!

நெற்களஞ்சியத்தைக் கவ்வவரும் பேரபாயம் ! பேரழிவு !!

-

15-delta-1ஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கும்பகோணம், பாபநாசம், நீடாமங்கலம், மன்னார்குடி உள்ளிட்ட எட்டு வட்டங்களில் 667 சதுர கி.மீட்டர் பரப்பளவில் பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் மீத்தேன் வாயுவை எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்துள்ளது, மைய அரசு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே அதன் ஒப்புதலோடு இத்திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் முடிவாகி, மீத்தேனை எடுக்கும் உரிமம் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் என்ற கார்ப்பரேட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கும் மக்களுக்கும் தெரிவிக்காமல், அவர்களின் கருத்தையும் கேட்காமல், மிகவும் கமுக்கமாக வைக்கப்பட்டிருந்த இந்தத் திட்டம், தற்பொழுது மீத்தேனை எடுப்பதற்காக 50 இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு வருவதையடுத்து அம்பலத்திற்கு வந்துவிட்டது.

வளர்ச்சி என்ற பெயரில் கொண்டுவரப்படும் இத்திட்டத்தைத் தமிழக நெற்களஞ்சியத்தின் மீது வீசப்படும் அணுகுண்டு என்றே கூறலாம். ஏனென்றால், இத்திட்டத்தைச் செயல்படுத்த தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஏறத்தாழ 1,66,210 ஏக்கர் பூமி விவசாயிகளிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் அபகரிக்கப்படும். மீத்தேனை எடுத்துச் செல்லும் குழாய்களும் விளைநிலங்களில்தான் பதிக்கப்படும். கண்ணுக்குத் துலக்கமாகத் தெரியும் இந்த நேரடிப் பாதிப்பை விட, இத்திட்டத்தால் ஏற்படும் மற்ற பாதிப்புகள் காவிரிப் படுகை விவசாய பூமியை அழித்துவிடும் அபாயம் நிறைந்தவையாகும்.

15-delta-2பூமியில் புதையுண்டு கிடக்கும் மீத்தேன் வாயுவை எடுக்க வேண்டுமெனில், முதலில் அப்பூமிக்கடியில் உள்ள நிலத்தடி நீரை, ஒரு சொட்டுக்கூட விடாமல் ஆழ்குழாய்கள் மூலம் உறிஞ்சி வெளியேற்ற வேண்டும். 500 முதல் 1,500 அடி வரை ஆழ்குழாய்களை இறக்கி நிலத்தடி நீர் உறிஞ்சப்படும்பொழுது, தஞ்சை, திருவாரூர் மாவட்டத்திலுள்ள நிலத்தடி நீர் தொகுப்புகள் அனைத்தும் வறண்டு போகும். காவிரி நீர்ச் சிக்கலால் நிலத்தடி நீரை நம்பி விவசாயம் செய்ய வேண்டிய நிலைக்கு டெல்டா பகுதி விவசாயிகள் தள்ளப்பட்டுவரும் நிலையில், நிலத்தடி நீரும் வறண்டு போகும் சூழ்நிலையும் உருவானால், அவர்கள் விவசாயத்தை அறவே கைவிட்டு வெளியேற வேண்டியதுதான்.

இதுவொருபுறமிருக்க, 1,500 அடி ஆழத்திலுள்ள நிலத்தடி நீர் உறிஞ்சப்படும்பொழுது, அங்கு ஏற்படும் வெற்றிடத்தில் கடல் நீர் உள்ளே புகும். இதனால் முப்போகம் விளையக்கூடிய வளம் நிறைந்த டெல்டா பகுதி விளைநிலங்கள், விவசாயத்திற்கு லாயக்கற்ற உவர் நிலமாக மாறும். மேலும், 1,500 அடி வரை தோண்டி உறிஞ்சப்படும் நிலத்தடி நீர் பலவிதமான இரசாயன உப்புகள் கலந்த மாசடைந்த நீராக இருக்கும். இந்த மாசடைந்த நீரை, காவிரி நீரைக் கொண்டு வரும் வாய்க்கால்கள் வழியாக வெளியேற்றும்பொழுது, அது வயல்வெளிகள், கிணறுகள் உள்ளிட்டு அனைத்தையும் மாசுபடுத்திவிடும்.

“இத்திட்டத்தால் டெல்டா பகுதி விவசாயம் மட்டுமல்ல, சென்னை, இராமநாதபுரம், திண்டுக்கல், திருப்பூர் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் பாதிக்கப்படும்; பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு ஆதாரமாக விளங்கும் காவிரி சமவெளிப் படுகை நாசமாகி உயிர்ச்சங்கிலி அறுந்துபோகும்” என எச்சரிக்கிறார், காவிரி சமவெளி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த சிவராமன்.

இந்த மீத்தேன் வாயு மிஞ்சிப்போனால் ஒரு ஐம்பது, அறுபது ஆண்டுகள் வரை கிடைக்கலாம். அதற்காக, ஈராயிரம் ஆண்டுகளாக நடந்துவரும், பல இலட்சம் பேருக்கு வாழ்வாதாரமாக இருந்துவரும் தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைக் காவு கொடுப்பதை அனுமதிக்க முடியுமா? என்பதுதான் நம் முன் எழுந்துள்ள கேள்வி. “புற்றுநோயைத் தொடக்கத்திலேயே அழித்துவிடுவதுதான் எளிதானது, புத்திசாலித்தனமானது” என்பது தமிழக மக்கள் அறியாத விசயமல்லவே!
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
________________________________________________________________________________