தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கும்பகோணம், பாபநாசம், நீடாமங்கலம், மன்னார்குடி உள்ளிட்ட எட்டு வட்டங்களில் 667 சதுர கி.மீட்டர் பரப்பளவில் பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் மீத்தேன் வாயுவை எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்துள்ளது, மைய அரசு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே அதன் ஒப்புதலோடு இத்திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் முடிவாகி, மீத்தேனை எடுக்கும் உரிமம் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் என்ற கார்ப்பரேட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கும் மக்களுக்கும் தெரிவிக்காமல், அவர்களின் கருத்தையும் கேட்காமல், மிகவும் கமுக்கமாக வைக்கப்பட்டிருந்த இந்தத் திட்டம், தற்பொழுது மீத்தேனை எடுப்பதற்காக 50 இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு வருவதையடுத்து அம்பலத்திற்கு வந்துவிட்டது.
வளர்ச்சி என்ற பெயரில் கொண்டுவரப்படும் இத்திட்டத்தைத் தமிழக நெற்களஞ்சியத்தின் மீது வீசப்படும் அணுகுண்டு என்றே கூறலாம். ஏனென்றால், இத்திட்டத்தைச் செயல்படுத்த தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஏறத்தாழ 1,66,210 ஏக்கர் பூமி விவசாயிகளிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் அபகரிக்கப்படும். மீத்தேனை எடுத்துச் செல்லும் குழாய்களும் விளைநிலங்களில்தான் பதிக்கப்படும். கண்ணுக்குத் துலக்கமாகத் தெரியும் இந்த நேரடிப் பாதிப்பை விட, இத்திட்டத்தால் ஏற்படும் மற்ற பாதிப்புகள் காவிரிப் படுகை விவசாய பூமியை அழித்துவிடும் அபாயம் நிறைந்தவையாகும்.
பூமியில் புதையுண்டு கிடக்கும் மீத்தேன் வாயுவை எடுக்க வேண்டுமெனில், முதலில் அப்பூமிக்கடியில் உள்ள நிலத்தடி நீரை, ஒரு சொட்டுக்கூட விடாமல் ஆழ்குழாய்கள் மூலம் உறிஞ்சி வெளியேற்ற வேண்டும். 500 முதல் 1,500 அடி வரை ஆழ்குழாய்களை இறக்கி நிலத்தடி நீர் உறிஞ்சப்படும்பொழுது, தஞ்சை, திருவாரூர் மாவட்டத்திலுள்ள நிலத்தடி நீர் தொகுப்புகள் அனைத்தும் வறண்டு போகும். காவிரி நீர்ச் சிக்கலால் நிலத்தடி நீரை நம்பி விவசாயம் செய்ய வேண்டிய நிலைக்கு டெல்டா பகுதி விவசாயிகள் தள்ளப்பட்டுவரும் நிலையில், நிலத்தடி நீரும் வறண்டு போகும் சூழ்நிலையும் உருவானால், அவர்கள் விவசாயத்தை அறவே கைவிட்டு வெளியேற வேண்டியதுதான்.
இதுவொருபுறமிருக்க, 1,500 அடி ஆழத்திலுள்ள நிலத்தடி நீர் உறிஞ்சப்படும்பொழுது, அங்கு ஏற்படும் வெற்றிடத்தில் கடல் நீர் உள்ளே புகும். இதனால் முப்போகம் விளையக்கூடிய வளம் நிறைந்த டெல்டா பகுதி விளைநிலங்கள், விவசாயத்திற்கு லாயக்கற்ற உவர் நிலமாக மாறும். மேலும், 1,500 அடி வரை தோண்டி உறிஞ்சப்படும் நிலத்தடி நீர் பலவிதமான இரசாயன உப்புகள் கலந்த மாசடைந்த நீராக இருக்கும். இந்த மாசடைந்த நீரை, காவிரி நீரைக் கொண்டு வரும் வாய்க்கால்கள் வழியாக வெளியேற்றும்பொழுது, அது வயல்வெளிகள், கிணறுகள் உள்ளிட்டு அனைத்தையும் மாசுபடுத்திவிடும்.
“இத்திட்டத்தால் டெல்டா பகுதி விவசாயம் மட்டுமல்ல, சென்னை, இராமநாதபுரம், திண்டுக்கல், திருப்பூர் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் பாதிக்கப்படும்; பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு ஆதாரமாக விளங்கும் காவிரி சமவெளிப் படுகை நாசமாகி உயிர்ச்சங்கிலி அறுந்துபோகும்” என எச்சரிக்கிறார், காவிரி சமவெளி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த சிவராமன்.
இந்த மீத்தேன் வாயு மிஞ்சிப்போனால் ஒரு ஐம்பது, அறுபது ஆண்டுகள் வரை கிடைக்கலாம். அதற்காக, ஈராயிரம் ஆண்டுகளாக நடந்துவரும், பல இலட்சம் பேருக்கு வாழ்வாதாரமாக இருந்துவரும் தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைக் காவு கொடுப்பதை அனுமதிக்க முடியுமா? என்பதுதான் நம் முன் எழுந்துள்ள கேள்வி. “புற்றுநோயைத் தொடக்கத்திலேயே அழித்துவிடுவதுதான் எளிதானது, புத்திசாலித்தனமானது” என்பது தமிழக மக்கள் அறியாத விசயமல்லவே!
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
________________________________________________________________________________
All political parties are anti-agriculture.
Already rice is selling at 50 rupees/kg. What will people eat if all farm land are taken away?
//..பூமியில் புதையுண்டு கிடக்கும் மீத்தேன் வாயுவை எடுக்க வேண்டுமெனில், முதலில் அப்பூமிக்கடியில் உள்ள நிலத்தடி நீரை, ஒரு சொட்டுக்கூட விடாமல் ஆழ்குழாய்கள் மூலம் உறிஞ்சி வெளியேற்ற வேண்டும். 500 முதல் 1,500 அடி வரை ஆழ்குழாய்களை இறக்கி நிலத்தடி நீர் உறிஞ்சப்படும்பொழுது,
இதுவொருபுறமிருக்க, 1,500 அடி ஆழத்திலுள்ள நிலத்தடி நீர் உறிஞ்சப்படும்பொழுது, அங்கு ஏற்படும் வெற்றிடத்தில் கடல் நீர் உள்ளே புகும். ..///
நிலத்தடி நீரை எடுக்க எடுக்க கடல் நீர் உடனே வருமே.. அது எப்படி ஒரு சொட்டு விடாமல் எடுக்க முடியும் ?
காவிரி நீர் மேற்கிலிருந்து கிழக்குக்கு போகிறது ..
// …இத்திட்டத்தால் டெல்டா பகுதி விவசாயம் மட்டுமல்ல, சென்னை, இராமநாதபுரம், திண்டுக்கல், திருப்பூர் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் பாதிக்கப்படும்; பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு ஆதாரமாக விளங்கும் காவிரி சமவெளிப் படுகை நாசமாகி உயிர்ச்சங்கிலி அறுந்துபோகும்” என எச்சரிக்கிறார், காவிரி சமவெளி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த சிவராமன்…//
தஞ்சையில் நீரை எடுத்தால் எப்படி கூட்டு குடிநீர் திட்டம் பாதிக்கபடும் ? கர்நாடகாவில் எடுத்தால் அதன் பின் தண்ணீர் வராது என்பது புரிகிறது.. இது எப்படி…
தொழில் நுட்ப தவறுகள் இருக்கலாம் என நினைக்கிறேன்.. தயவு செய்து சரிபார்க்கவும்..
நன்றி..
வினோத்.
There are lot of uneducated Degree Certificate holders.
Without a single drop is a way of speaking. Not the actual scenario. Even with half the water level reduced, high chances of seepages.
Cauvery flows from karnataka to Tamilnadu. Statement is valid.
இத்திட்டத்தை பற்றிய வெள்ளை அறிக்கையை அரசு சமர்ப்பிக்கவேண்டும்!
அருமையான பதிவு.நம்மாழ்வார் ஒரு விளக்க கூட்டம் நடத்தினார். ஒரு மாததிற்கு முன்பு இந்த கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த கட்டூரையில் இருக்கும் அனைத்து செய்திகளும் வந்திருந்த விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. அங்கு அப்படியா என வாய்பிளந்தவர்கள் அதிகம். இவ்வாரான செய்திகளை அடித்தட்டு மக்கள் வரை எடுத்து செல்லும் அப்பெரியவரை கூட்டம் அதிகமாக இருந்ததால் என் மனதிற்குள்ளேயெ பாராட்டிக்கொண்டேன்.
இருக்கிற வளத்தையெல்லாம் சுரண்டிட்டு எங்கே போய் வாழ்வாங்க என்று தெரியல அதுக்குதான் இந்த corporate மூதேவிங்க மற்றும் அரசாங்கம் செவ்வாய் கிரகத்திலே இடத்தை தேடுதுங்க. company இலாபம் மட்டும் பார்க்கிறான். எல்லாமே நாம வாழ்வதற்கு என்பதை பார்க்கிறதே இல்லை.
பல ஆண்டுகளாக பட்டா இல்லாமல் நிறைய ஏழைமக்கள் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். இப்போது தான் அவர்கள் வீடு வாசல் என்று நல்ல படியாக இருக்கிறார்கள். இந்த நாச கார திட்டத்தினால் அவர்கள் இடம் பிடுங்கப்படும். அவர்கள் குடிநீர் ஆதாரம் மற்றும் எல்லா அடிப்படை வசதிகளும் அழிக்கப்பட்டு அவர்களாகவே ஊரைவிட்டு ஓடும் நிலை ஏற்படும்.
கடந்த வாரம் ஊருக்கு சென்றபோது கிராமத்துக்கு (லெட்சுமாங்குடி – வடபாதிமங்கலம்) செல்லும் ரோட்டை பார்த்து ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்தேன். ஏனென்றால் இன்னொரு மடங்கு அகலமாக்கப்பட்டிருந்தது. எனக்கொரு உண்மை புரிந்து விட்டது. மீத்தேன் எமனுக்கு கனரக வாகனங்களும் தளவாடங்களும் எடுத்து செல்லதான் இந்த அகல சாலை. சத்தமில்லாமல் காரியங்களை செய்துவரும் இவர்களை எப்படி தடுப்பது மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. நல்ல ரோடு என்று மகிழ்ச்சி மட்டும் அடைகிறார்கள். மக்கள் கவனமில்லையெறால் அவர்கள் பாட்டுக்கு காரியங்களை நடத்தி கொண்டிருப்பார்கள் நாம் விழிக்கும் நேரத்தில் பாலைவனம் தான் பாக்கியிருக்கும்.