நிலக்கரி வயல் ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறையின் சமீபத்திய முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பவர்கள்
• முன்னாள் ஹரியானா அமைச்சர் மற்றும் தொழிலதிபர் காலம் சென்ற ஓ பி ஜிண்டாலின் மகனும் குருட்சேத்திரா தொகுதியின் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான நவீன் ஜிண்டால்
• தெலுங்கு திரைப்படத் துறையைச் சேர்ந்த, 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி, 250-க்கும் மேற்பட்ட படங்களில் வசனகர்த்தா, பாடலாசிரியராக பணி புரிந்தவரும் முன்னாள் மத்திய நிலக்கரி அமைச்சருமான தாசரி நாராயண ராவ்
• முன்னாள் நிலக்கரித் துறை செயலரும் இப்போது மத்திய போட்டி ஆணையத்தின் தலைவருமான எச் சி குப்தா

ஜார்கண்ட் மாநிலத்தின் அமர்கொண்டா முர்காதாங்கல் நிலக்கரி வயல் ஒதுக்கீடு தொடர்பாக நவீன் ஜிண்டால் மீதும், தாசரி நாராயண ராவ் மீதும் மத்திய புலனாய்வுத் துறை முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 2004 முதல் 2008 வரை மத்திய நிலக்கரித் துறை அமைச்சராக இருந்த தாசரி நாராயண ராவின் பதவிக் காலத்தில் 154 நிலக்கரி வயல் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீடுகளில் அதிக ஆதாயம் அடைந்தவை நவீன் ஜிண்டாலின் கம்பெனிகள். ஜார்கண்ட் நிலக்கரி வயல் ஒதுக்கீடை பெற்ற ஒரு ஆண்டுக்குள், தாசரி நாராயண ராவின் சவுபாக்யா மீடியா நிறுவனத்தில் ரூ 2.25 கோடி முதலீடு செய்துள்ளார் நவீன் ஜிண்டால்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தர்தாவுக்கு சொந்தமான ஏஎம்ஆர் அயர்ன் அண்ட் ஸ்டீல் நிறுவனத்துக்கு நிலக்கரி வயல் ஒதுக்கீடு செய்தது தொடர்பாகவும் தாசரி நாராயண ராவ் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
நிலக்கரி வயல் ஒதுக்கீட்டு முறைகேடுகள் வெளிவர ஆரம்பித்ததிலிருந்து நவீன் ஜிண்டால் குடும்பத்தின் சொத்து மதிப்பு 58 சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. சிபிஐ முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன் எச் சி குப்தா மத்திய போட்டி ஆணையத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார். சோனியா காந்திக்கு நெருக்கமானவராக கருதப்படும் தாசரி நாராயண ராவோ குற்றச்சாட்டுகளை மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டு விட்டு தனது புதிய படத்துக்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்.
1990-களில் நரசிம்மராவும் மன்மோகன் சிங்கும் ஆரம்பித்து வைத்த தனியார் மய, தாராள மய கொள்கைகள் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், வர்த்தக நிறுவனங்களை கிரிமினல்கள் ஆக்குவதில் வெற்றி பெற்றிருக்கின்றன.
உலகிலேயே 5-வது பெரிய நிலக்கரி வளத்தைக் கொண்டுள்ள இந்தியாவின் எரிசக்தி தேவைகள் பெருமளவு நிலக்கரியை சார்ந்துள்ளன. நிலக்கரியை வெட்டி எடுப்பதற்குத் தேவையான முதலீடுகளை பொதுத்துறைதான் செய்ய முடியும் என்ற சூழலில், இந்தியாவின் நிலக்கரி வளங்கள் 1973-ம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டன. இந்தியாவில் இரும்பு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தமக்குத் தேவையான நிலக்கரி வயல்களை ஒதுக்கீடு மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்ற கொள்கை இருந்தது.
1980-களில் உலகெங்கிலும் பரப்பப்பட்டு இந்தியாவையும் மூழ்கடித்த தனியார் மயமாக்க அலை அரசுத் துறை, பொதுத் துறை நிறுவனங்களை பட்டினி போட்டு நோஞ்சான்களாக்கி அவற்றை உள் நாட்டு, வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்று விடும் கொள்கைகளை ஆரம்பித்து வைத்தது.
1993-ல் சிமென்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும், மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் தமக்குச் சொந்தமாக நிலக்கரி வயல் குத்தகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று கொள்கை மாற்றப்பட்டது. தனியார் முதலாளிகளுக்கு அந்த கஷ்டம் எதற்கு என்று கசிந்துருகிய மன்மோகன் சிங் 2006-ம் ஆண்டு முதல் ‘இரும்பு ஆலை, மின் உற்பத்தி நிலையம், சிமென்ட் தொழிற்சாலை போன்றவற்றுக்கு நிலக்கரி விற்கப் போகிறோம்’ என்று சொல்லும் தனியார் நிறுவனங்களுக்கும் நிலக்கரி வயல்களை ஒதுக்க தீர்மானித்தார்.
நிலக்கரி படிமங்கள் பல கோடி ஆண்டுகளாக பூமியின் அடியில் புதையுண்ட மரங்களின் கரிமப் பகுதி அழுத்தத்தாலும் வெப்பத்தாலும் இறுகி உருவானவை. தொழிற் புரட்சிக்குப் பிறகு எரிசக்திக்காக நிலக்கரியை பயன்படுத்துவது அதிகமானது. மின்சாரம் வேண்டும், அதை உருவாக்க நிலக்கரி வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மின்சாரம் யாருக்காக உற்பத்தி செய்யப்பட வேண்டும், நிலக்கரி வெட்டி வழங்குவதில் யாருக்கு ஆதாயம் கிடைக்க வேண்டும் என்பதில்தான் சிக்கல்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி காற்று, குடிநீர் போல மின்சாரம் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை. நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பாகுபாடின்றி மின்சார சேவை கிடைக்க வேண்டும் என்பதுதான் அதன் பொருள். ‘காசு உள்ளவன் வீடு முழுவதும் கழிப்பறை வரை குளிரூட்டிக் கொண்டு, கடும் கோடையிலும் அபிராமி மாலில் ஐஸ் இல்லத்தில் விளையாட மின்சாரம் வழங்கப்பட வேண்டும், காசு இல்லாதவன் ஒரு நாளைக்கு 8 மணி நேர மின்வெட்டில் மூழ்க வேண்டும்’ என்பதல்ல பொருளாதார வளர்ச்சி. சமூகத்தில் அனைவருக்கும் அடிப்படை தேவைக்கான மின்சாரம் நியாயமான விலையில் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் பொருளாதார வளர்ச்சி.

ஆனால், மின்சாரத்தை நுகர்வதற்கு காசு உள்ளவர்களுக்குத்தான் உரிமை என்பது முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் அறம். தனியார் மயம் தாராள மயமாக்கலுக்குப் பிறகு அந்த அறத்தை செயல்படுத்துவதற்காக மின் கட்டணம் தொடர்ந்து ஏற்றப்பட்டு வருவதோடு எதிர்காலத்திலும் தொடர்ந்து உயர்த்துவதற்கான ஒழுங்குமுறை ஆணையங்களை ஏற்படுத்தப்பட்டுளன. லாபத்தின் அடிப்படையில் மின்சாரம் வினியோகிக்கப்படும் போது லாபத்தின் அடிப்படையில் மின் உற்பத்தியும் தேவையாகிறது. மின்சார உற்பத்தி தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இதன் நீட்சியாக லாபத்தின் அடிப்படையில் நிலக்கரி வளங்களை பயன்படுத்துவதும் அனுமதிக்கப்படுகிறது.
ஆனால், நாட்டின் நிலக்கரி வளங்கள் மக்கள் அனைவருக்கும் சொந்தமானவை. அவற்றை நமது எரிசக்தி தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் அல்லது, அவற்றை வெளிநாடுகளுக்கு விற்று வரும் காசில் வேறு தேவைகளை நிறைவு செய்து கொள்ள வேண்டும். உலகில் மொத்தம் 94,800 கோடி டன் நிலக்கரி படிமங்கள் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டு சுமார் 700 கோடி டன் நிலக்கரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கணக்கின் படி பார்த்தால் உலகின் நிலக்கரி கையிருப்பு சுமார் 150 ஆண்டுகள் வரை நீடிக்கும். இந்தியாவில் சுமார் 6,000 கோடி டன் நிலக்கரி படிமங்கள் உள்ளன. ஒரு ஆண்டுக்கு சுமார் 60 கோடி டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. கூடுதல் தேவையான சுமார் 5 கோடி முதல் 10 கோடி டன் நிலக்கரி இறக்குமதி ஆகிறது.
தனியார் நிறுவனங்களுக்கு லாப வேட்டைக்காக நிலக்கரி வயல் உரிமங்கள் வழங்கப்படும் போது, எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாக நிலக்கரியை தோண்டி, சந்தையில் வெகு வேகமாக நிலக்கரி நுகரப்படும் சூழல்களை உருவாக்கி (விளம்பரங்கள், தேவை உருவாக்க நடவடிக்கைகள்), அதிக விலைக்கு எரிசக்தி வளங்களை விற்று, அதிகபட்ச லாபம் ஈட்டுவதுதான் தனியார் நிறுவனங்களின் தொழில் அறம். லஞ்சம் கொடுத்தோ, ஆள் பிடித்தோ, தெரிந்தவர்கள் மூலமோ, பெருமளவிலான நிலக்கரி வயல்களை தமக்கு ஒதுக்கிக் கொள்வது ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவக் கூடிய வணிக நடவடிக்கை.
அதைத் திறமையாக செய்தவர் தனது நிறுவனங்களுக்கு நிலக்கரி வயல் ஒதுக்கீடுகளை பெற்றுக் கொண்ட நவீன் ஜிண்டால், அதற்கு வசதி செய்து கொடுத்தவர் அப்போதைய நிலக்கரி அமைச்சர் தாசரி நாராயண ராவ், அதற்கு அறிவுரை வழங்கியவர் அப்போதைய நிலக்கரி அமைச்சக செயலர் குப்தா. நாட்டின் பிரதமரும், அமைச்சரவையும் வகுத்தளித்த கொள்கையை நடைமுறைப்படுத்தியதற்காக இந்த கர்மவீரர்கள் தண்டிக்கப்படுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இவர்களை எல்லாம் கிரிமினல்கள் ஆக்கிய மன்மோகன் சிங் இன்றும் பிரதமராக நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார்.
– அப்துல்
மேலும் படிக்க